‘ஓரிடத்தைத் தொடர்ந்து மற்றொன்றில் கொள்ளைநோய்கள்’
ஈடிணையற்ற அளவுகளில் கொள்ளை நோய்கள் “[இயேசு கிறிஸ்துவின்] பிரசன்னத்துக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவு”க்குமான “அடையாளத்தின்” முன்னறிவிக்கப்பட்ட அம்சமாக இருந்தது. (மத்தேயு 24:3) மத்தேயு மற்றும் லூக்காவின் பதிவுகளில் சொல்லப்படாத இந்த விவரத்தை சுவிசேஷ எழுத்தாளனாகிய லூக்கா கூட்டியிருக்கிறார். (மத்தேயு, 24 மற்றும் 25 அதிகாரங்கள்; மாற்கு, அதிகாரம் 13) கடைசி நாட்களில், பெருவாரியாகப் பரவும் தொத்து நோயும் பாழாக்கும் நோய்களும் ‘ஓரிடத்தைத் தொடர்ந்து மற்றொன்றில்’ திடீரெனத் தோன்றும். (லூக்கா 1:3; 21:11) இப்படிப்பட்ட நோய்கள் எங்கிருந்து வரக்கூடும்?
“வெப்பமண்டலங்களில் உள்ளே மறைந்திருப்பதும்—விருத்திக்கு இயற்கை இடமளித்தால்—எய்ட்ஸ் கொள்ளைநோய் ஏற்படுத்தியதைவிட மிக அதிகமான உயிர் இழப்பை உண்டுபண்ணக்கூடியதுமான பல்வேறு நச்சுக்கிருமிகளை விஞ்ஞானிகள் அறிந்திருக்கிறார்கள்” என்பதாக சையன்ஸ் நியூஸ் பத்திரிகை அறிவிப்பு செய்கிறது. “உலகினுடைய நச்சுக்கிருமிகளின் பட்டியலில் மாறுதல் இல்லாதிருந்தாலும்கூட, பூமியின் மக்கள்தொகையில் பெரும் பகுதிகளைத் துடைத்தழிப்பதற்கு போதுமான ‘அழிக்கும்த சக்திக்கு’ வெப்பமண்டலங்கள் ஏற்கெனவே புகலிடமாக இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.”
வேகமாக வளர்ந்துவரும் மக்கள் தொகையும், ஜனநெருக்கடியான உலகின் மிகுதியான தேவைகளுமே நம்முடைய சகாப்தத்தை அதிகமாக தாக்கப்படுவதற்கு இடமளிக்கிற சகாப்தமாக ஆக்குகின்றது. “மனிதர்கள் புதிய நிலப்பகுதிகளுக்குள் இடம் பெயர்ந்து செல்கையில் அல்லது பட்டினத்து வாழ்க்கை நிலைமைகள், புதிய நச்சுக்கிருமிகளுக்கு ஆதாரமான விலங்கு அல்லது செடிகளை வரவழைக்கும் வகையில் படுமோசமாகும் போது, உடனடியாக உயிருக்கு ஆபத்தாக அமையும் நச்சுக்கிருமிகளின் திடீர்வெடிப்பு ஏற்படுவதை வரலாறு காண்பிக்கிறது” என்பதாக சையன்ஸ் நியூஸ் சொல்லுகிறது. மனிதர்கள் முன்னதாக புகமுடியாதிருந்த, நச்சுக்கிருமிகளால் பாதிக்கப்பட்ட நிலப்பகுதிகளுக்கு ஊடுருவிப் பரவுகையில் புதிய நச்சுக்கிருமி கொள்ளை நோய்கள் அநேகமாக பின்தொடருகின்றன. பூகோள சீதோஷண நிலை மாதிரி மாறும்போது பூச்சிகள் தங்கள் எல்லைகளை விரிவாக்குகையில் இதே காரியம் சம்பவிக்கிறது. “மேலுமாக இரத்தமேற்றுதல் மற்றும் மாற்று உறுப்பு பொருத்துதல் போன்ற நவீன மருத்துவ நுணுக்கங்கள் மனிதரிடையே இடம்பெயர்ந்து செல்ல, நச்சுக்கிருமிகளுக்கு புதிய சாதனங்களை அளித்திருக்கின்றன. பணக்காரர்களும் புகழ்பெற்றவர்களும் மேற்கொள்ளும் விரிவான பயணங்கள் மற்றும் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் போதை மருந்தைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தும் ஊசியைப் பகிர்ந்துகொள்வது போன்ற பல்வேறு சமுதாய மற்றும் நடத்தை சம்பந்தப்பட்ட மாற்றங்களும் அவ்விதமாகவே இருக்கின்றன.”
“அண்மைக்கால சரித்திரம், எதிர்காலத்தில் நச்சுக்கிருமிகளின் அதிக விரிவான திடீர்வெடிப்புகளை முன்குறித்துக் காட்டக்கூடிய, நச்சுக்கிருமி போர் ஒதுக்கமாயுள்ள இடங்களில் நிகழ்ந்து வருவதற்கு தெளிவான உதாரணங்களைத் தருகிறது” என்பதாக கட்டுரை மேலுமாகச் சொல்கிறது. உதாரணங்கள்: முற்காலங்களில் அறியப்படாத மார்பர்க் நச்சுக்கிருமி, 1960-களின் பிற்பகுதியில் விஞ்ஞானிகள் பலரை தாக்கிய ஓர் உயிரைப் போக்கவல்ல வெப்பமண்டல நச்சுக்கிருமி; 1977-ல் எகிப்தில் இலட்சக்கணக்கானோரை தாக்கி ஆயிரக்கணக்கானவரை உயிரிழக்கச் செய்த ரிஃப்ட் வேலி ஃபீவரை உண்டுபண்ணின நச்சுக்கிருமி; 1976-ல் சேயரிலும் சூடானிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் தாக்கி சுமார் 500 பேரை கொன்ற வெப்ப மண்டல எபலா நச்சுக்கிருமி; கொல்லப்பட்டவர்களில் அநேகர் இதற்குப் பலியானவர்களுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்களும் செவிலியரும்.
பாழாக்கும் நச்சுக்கிருமி தாக்குதல்கள் அபூர்வமாகவே முன்கூட்டியே முன்னறிவிக்கப்படுகின்றன. “உதாரணமாக 1918-ல் மனிதர்களைத் தாக்கும், மாறுதலடைவதால் தோன்றுகிற, குறிப்பாக நச்சுத்தன்மை மிக்க சளிக்காய்ச்சல் உலகெங்கும் பரவி 2 கோடி மக்களைக் கொன்றது” என்பதாக சையன்ஸ் நியூஸ் சொல்கிறது. “அதிக அண்மையில், ஒரு சமயம் ஆப்பிரிக்க குரங்குகளில் மாத்திரமே நிலைக்கொண்டிருந்த ஒரு நச்சுக்கிருமி மனிதர்களில் வெளிப்பட்டு தோன்றியது மறுபடியுமாக உலகை எதிர்பாராத நிலையில் சிக்க வைத்தது. உலக சுகாதார அமைப்பினுடைய மதிப்பீட்டின்படி, எய்ட்ஸ் நச்சுக்கிருமி இப்பொழுது 149 தேசங்களில் 50 லட்சம் முதல் 1 கோடி மக்களைத் தாக்கியிருக்கிறது. அதிக அண்மைக்கால இந்தக் கொள்ளைநோய் கவர்ந்திருக்கும் எல்லா கவனத்தின் மத்தியிலும் இன்னும் அதிக பயங்கரமான காரியங்கள் வர இருப்பதாக அநேக நச்சுக்கிருமி நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.”
அத்தனை துயரமுண்டாக்கும் இந்தக் கொள்ளைநோய்கள், மற்ற அம்சங்களாகிய போர்கள், பஞ்சங்கள், மகா பூமியதிர்ச்சிகளோடுகூட ராஜ்ய மகிமையில் இயேசுவின் பிரசன்னத்துக்குரிய கூட்டு அடையாளத்தின் பாகமாக இருக்கின்றன. (மாற்கு 13:8; லூக்கா 21:10, 11) அம்சங்கள் களிகூருவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன, ஏனென்றால் லூக்கா இயேசுவின் வார்த்தைகளை இவ்வாறு கூட்டுகின்றார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.”—லூக்கா 21:28. (w91 11/15)