யெகோவாவிடம் நெருங்கி இருங்கள்
“ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.”—ரோமர் 12:12.
1. ஜெபத்தைப் பற்றியதில் யெகோவாவின் விருப்பம் என்ன? ஜெபிப்பதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் என்ன ஊக்குவிப்பைக் கொடுத்தார்?
யெகோவா, தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் “நம்பிக்கையின் தேவனா”யிருக்கிறார். “ஜெபத்தை கேட்கிற”வராக, அவர் அவர்களுக்கு முன்னால் வைக்கும் சந்தோஷமுள்ள நம்பிக்கையை பெறுவதற்காக அவர்கள் செய்யும் வேண்டுதல்களுக்கு செவிசாய்க்கிறார். (ரோமர் 15:13; சங்கீதம் 65:2) அவருடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமாக தம்முடைய ஊழியர்கள் அனைவரையும் அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தம்மிடமாக வரும்படியாக உற்சாகப்படுத்துகிறார். அவர் அவர்களுடைய உள்ளான கவலைகளை ஏற்றுக்கொள்ள வாஞ்சையுள்ளவராக எப்பொழுதும் அங்கிருக்கிறார். உண்மையில் அவர் அவர்களை, “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” என்றும் “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்”a என்றும் உற்சாகப்படுத்துகிறார். (ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17) எல்லா கிறிஸ்தவர்களும் ஜெபத்தில் இடைவிடாமல் அவரை வேண்டிக்கொண்டு, தங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றவும் அதை அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்யவும் வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்.—யோவான் 14:6, 13, 14.
2, 3. (எ) கடவுள் ஏன் “ஜெபத்தில் தரித்திருக்கும்”படியாக நமக்கு அறிவுரை கூறினார்? (பி) நாம் ஜெபிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புவதற்கு என்ன உறுதி நமக்கிருக்கிறது?
2 கடவுள் நமக்கு ஏன் இந்த அறிவுரையைத் தருகிறார்? ஏனென்றால் வாழ்க்கைப் பிரச்னைகளும் உத்தரவாதங்களும் நம்மை அவ்வளவாக அழுத்துவதன் காரணமாக நாம் ஜெபிக்க மறந்து போகக்கூடும். அல்லது பிரச்னைகள் நம்மைத் திணறடித்துவிட, இது நாம் நம்பிக்கையில் களிகூருவதை நிறுத்திவிடவும் ஜெபம் செய்வதை விட்டுவிடவும் செய்விக்கக்கூடும். இந்தக் காரியங்களை முன்னிட்டுப் பார்க்கையில், ஜெபிக்கவும், உதவி மற்றும் ஆறுதலின் ஊற்றுமூலராகிய நம்முடைய கடவுளாகிய யெகோவாவிடம் அதிகமாக நெருங்கி வரவும் நம்மை உற்சாகப்படுத்தக்கூடிய நினைப்பூட்டுதல்கள் தேவையாக உள்ளது.
3 சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” (யாக்கோபு 4:8) ஆம், நம்முடைய அபூரண மனித நிலையின் மத்தியிலும் நாம் அவருக்கு ஏறெடுக்கும் வார்த்தைகளைக் கேட்பதற்கு, அவர் மிகவும் இறுமாப்புள்ளவரோ அல்லது தொலைதூரம் விலகிச் சென்றவரோ இல்லை. (அப்போஸ்தலர் 17:27) மேலுமாக அவர் மெத்தனமானவராக அல்லது அக்கறையற்றவராக இல்லை. சங்கீதக்காரன் சொல்கிறார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.”—சங்கீதம் 34:15; 1 பேதுரு 3:12.
4. ஜெபத்திற்கு யெகோவாவின் கவனம் எவ்விதம் விளக்கப்படலாம்?
4 யெகோவா ஜெபத்தை வரவேற்கிறார். இதை அநேக ஆட்கள் ஒன்றாகச் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்துக்கு நாம் ஒப்பிடலாம். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். உங்களுடைய பாகம் ஒரு பார்வையாளருடையதாகும். ஆனால் அப்போது எவரோ ஒருவர் உங்களிடம் திரும்பி, உங்கள் பெயர் சொல்லி, உங்களிடமாக பேசுகிறார். இது உங்கள் கவனத்தை விசேஷித்த வகையில் கவர்ந்துவிடுகிறது. அதேவிதமாகவே, தம்முடைய மக்கள் எங்கிருப்பினும் கடவுள் எப்பொழுதும் அவர்களைக் கவனித்துக் கேட்கிறார். (2 நாளாகமம் 16:9; நீதிமொழிகள் 15:3) ஆகவே அவர் நம்முடைய வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிறார், பாதுகாக்கும் நோக்குடனும், அக்கறையுடனும் அதை கவனிக்கிறார். நாம் ஜெபத்தில் கடவுளுடைய பெயரை நோக்கி கூப்பிடும் போது, அவருடைய கவனம் கவரப்பட்டு அவர் திட்டவட்டமான வகையில் நம்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார். தம்முடைய வல்லமையின் மூலமாக, யெகோவாவினால் மனிதனுடைய இருதயம் மற்றும் மனதின் மறைவான உள்ளிடத்திற்குள் அவன் செய்யும் பேசப்பட்டிராத மன்றாட்டையும்கூட கண்டுபிடித்து அவரால் அறிந்து கொள்ள முடியும். கடவுள் அவருடைய பெயரை நோக்கி உண்மை மனதுடன் கூப்பிட்டு, அவரிடம் நெருங்கியிருக்க நாடும் அனைவருக்கும் சமீபமாயிருப்பார் என்று நமக்கு உறுதியளிக்கிறார்.—சங்கீதம் 145:18.
கடவுளுடைய நோக்கத்தின்படி பிரதிபலிப்பு
5. (எ) “ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருங்கள்” என்ற புத்திமதி ஜெபங்களின் சம்பந்தமாக எதைக் காண்பிக்கிறது? (பி) கடவுள் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?
5 ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருக்கும்படியான புத்திமதி, யெகோவாவின் பதில் எளிதில் உணரப்படுவதற்கு முன்னால் ஒரு விஷயத்தைக் குறித்து சிறிது காலம் நாம் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும்படியாக அவர் அனுமதிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. மிகுதியாக தேவைப்படுவதாகவும் ஆனால் நீண்ட காலமாக காலம் தாழ்த்தப்பட்டிருப்பதுமாக தோன்றும் ஓர் உதவிக்காக அல்லது அன்புள்ள தயவுக்காக மன்றாடுவதில் நாம் சலிப்படைந்தும்கூட விடலாம். ஆகவே இப்படிப்பட்ட ஒரு மனச்சாய்வுக்கு இணங்கி போகாமல், தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கும்படியாக அவர் கேட்டுக் கொள்கிறார். அவர் நம்முடைய ஜெபங்களை மதிக்கிறார், நாம் முடிவு செய்திருக்கக்கூடியது அல்ல, ஆனால் நம்முடைய உண்மையான தேவையை அவர் நிறைவு செய்வார் என்ற நம்பிக்கையோடும் நம்முடைய கவலைகளைக் குறித்து நாம் தொடர்ந்து அவரிடமாக விண்ணப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். யெகோவா தேவன் நம்முடைய விண்ணப்பங்களை அவருடைய நோக்கத்திற்கிசைவாக சமநிலைப்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக நம்முடைய வேண்டுதலால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒரு சைக்கிளுக்காக கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு மகனின் தகப்பனுடைய காரியத்திற்கு இதை நாம் ஒப்பிடலாம். அந்த மகனுக்கு அவர் ஒரு சைக்கிளை வாங்குவாரேயானால், அவருடைய மற்றொரு மகனும் ஒன்றைக் கேட்பான் என்பதை அறிந்திருக்கிறார். ஒரு மகன் சைக்கிள் ஓட்டுவதற்கு மிகவும் இளைஞனாக இருக்கக் கூடுமாதலால் தகப்பன் அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் ஒரு சைக்கிளையும்கூட வாங்காமல் இருந்துவிட தீர்மானிக்கக்கூடும். அதேவிதமாவே, அவருடைய நோக்கம் மற்றும் காலத்திட்டத்தின் வெளிச்சத்தில் நம்முடைய பரலோக தகப்பன் நமக்கும் மற்றவர்களுக்கும் உண்மையில் எது மிகச் சிறந்தது என்பதை தீர்மானஞ் செய்கிறார்.—சங்கீதம் 84:8, 11; ஆபகூக் 2:3 ஒப்பிடவும்.
6. ஜெபத்தின் சம்பந்தமாக இயேசு என்ன உவமையைக் கொடுத்தார்? ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பது எதைக் காண்பிக்கிறது?
6 தம்முடைய சீஷர்கள் “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண” வேண்டிய அவசியத்தைக் குறித்து இயேசு கொடுத்த உவமை குறிப்பிடத்தக்கதாகும். நியாயம் கிடைக்கப் பெறாத ஒரு விதவை, கடைசியில் நியாயம் பெறும் வரையில் ஒரு மனித நியாயாதிபதியிடம் வேண்டிக் கொள்வதில் உறுதியாய்த் தரித்திருந்தாள். மேலுமாக இயேசு சொன்னார்: “தேவன் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் . . . நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?” (லூக்கா 18:1-7) ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பது, நம்முடைய விசுவாசத்தை, நாம் யெகோவாவின் மேல் சார்ந்திருப்பதை, விளைவை அவருடைய கரங்களுக்கு விட்டுவிட்டு அவரிடம் நெருங்கியிருக்கவும், நம்முடைய வேண்டுதல்களைச் செய்யவும் நாம் மனமுள்ளவர்களாயிருப்பதை காண்பிக்கிறது.—எபிரெயர் 11:6.
யெகோவாவிடம் நெருக்கமாக இருந்தவர்களுடைய முன்மாதிரிகள்
7. யெகோவாவிடம் நெருங்கி இருப்பதில் நாம் எவ்வாறு ஆபேலின் விசுவாசத்தைப் பின்பற்றலாம்?
7 பைபிளில், கடவுளுடைய ஊழியர்கள் செய்த ஜெபங்களைப் பற்றிய பதிவு ஏராளமாக உள்ளது. இவை, “வேதவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) யெகோவாவிடம் நெருக்கமாக இருந்தவர்களுடைய ஒரு சில உதாரணங்களை நாம் சிந்திப்பதன் மூலம் நம்முடைய நம்பிக்கை பலப்படுகிறது. ஆபேல் கடவுளுக்கு ஏற்கத்தகுந்த ஒரு பலியை செலுத்தினார், எந்த ஜெபமும் அங்கு அறிவிக்கப்பட்டில்லாத போதிலும், தன்னுடைய பலியை ஏற்றுக்கொள்ளும்படி அவர் ஜெபத்தில் யெகோவாவிடம் வேண்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. எபிரெயர் 11:4 இவ்வாறு சொல்கிறது: “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்.” ஆதியாகமம் 3:15-லுள்ள கடவுளுடைய வாக்குத்தத்தத்தை ஆபேல் அறிந்திருந்தார், ஆனால் நமக்கு இப்பொழுது தெரிந்திருப்பதோடு ஒப்பிட அவர் மிகச் சிறிதே அறிந்திருந்தார். என்றபோதிலும், ஆபேல் தனக்கிருந்த அறிவின் பேரில் செயல்பட்டார். அதேவிதமாகவே இன்று, கடவுளுடைய சத்தியத்தில் புதிதாய் அக்கறை காட்டும் சிலர், இன்னும் அதிகமான அறிவைக் கொண்டில்லை. ஆனால் ஆபேல் செய்தது போல அவர்கள் ஜெபித்து தங்களுக்கிருக்கும் அறிவை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆம், விசுவாசத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள்.
8. ஆபிரகாம் யெகோவாவிடம் நெருங்கியிருந்தான் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்? என்ன கேள்வியை நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும்?
8 மற்றொரு கடவுளுடைய உண்மையுள்ள ஊழியன், “விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பனாக” இருந்த ஆபிரகாமாகும். (ரோமர் 4:11) இன்று எக்காலத்திலும் இருந்ததைவிட, நமக்கு பலமான விசுவாசம் தேவையாக இருக்கிறது, ஆபிரகாம் செய்தது போல நாம் விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். ஆதியாகமம் 12:8, [NW] அவர் “யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்” என்று சொல்கிறது. ஆபிரகாம், கடவுளுடைய பெயரை அறிந்திருந்தார், ஜெபத்தில் அதை பயன்படுத்தினார். மறுபடியும் மறுபடியுமாக, அவர் ஜெபத்தில் உண்மை மனதுடன் உறுதியாய்த் தரித்திருந்து, “சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.” (ஆதியாகமம் 13:4; 21:33) ஆபிரகாம் விசுவாசத்தில் கடவுளைத் தொழுதுகொண்டார், இதற்காக அவர் பேர்பெற்றவருமானார். (எபிரெயர் 11:17-19) ராஜ்ய நம்பிக்கையில் தொடர்ந்து வெகுவாக சந்தோஷமாயிருக்க ஜெபம் ஆபிரகாமுக்கு உதவி செய்தது. ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பதில் நாம் ஆபிரகாமின் முன்மாதிரியை பின்பற்றுகிறோமா?
9. (எ) தாவீதின் ஜெபங்கள் இன்று ஏன் கடவுளுடைய மக்களுக்கு அதிக பிரயோஜனமாயிருக்கிறது? (பி) யெகோவாவிடம் நெருங்கியிருப்பதற்காக தாவீது செய்தது போல நாம் ஜெபித்தால் என்ன விளையும்?
9 ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பதில் தாவீது குறிப்பிடத்தக்கவராக இருந்தார். அவருடைய சங்கீதங்கள் ஜெபங்கள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றன. உதாரணமாக கடவுளுடைய ஊழியர்கள் சரியாகவே, இரட்சிப்பு அல்லது மீட்பு (3:7, 8; 60:5), வழிநடத்துதல் (25:4, 5), பாதுகாப்பு (17:8), பாவ மன்னிப்பு (25:7, 11, 18), சுத்தமான இருதயம் (51:10) போன்ற காரியங்களுக்காக ஜெபிக்கலாம். தாவீது துயரப்பட்டவராக உணர்ந்த போது அவர் இவ்வாறு ஜெபித்தார்: “உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்.” (86:4) அதேவிதமாகவே நம்முடைய நம்பிக்கையில் நாம் சந்தோஷமாயிருப்பதை யெகோவா விரும்புவதை அறிந்தவர்களாய், மன மகிழ்ச்சிக்காக நாம் ஜெபிக்கலாம். தாவீது யெகோவாவிடம் நெருங்கியிருந்து இவ்வாறு ஜெபித்தார்: “என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.” (63:8) தாவீதைப் போல நாம் யெகோவாவிடம் நெருங்கியிருப்போமா? நாம் அவ்விதம் இருந்தால், அவர் நம்மையும்கூட தாங்குவார்.
10. ஒரு சமயம் ஆசாப் என்ன தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தார்? ஆனால் அவர் எதை உணர்ந்து கொண்டார்?
10 நாம் யெகோவாவிடம் நெருங்கி இருக்க வேண்டுமானால், துன்மார்க்கரின் கவலையில்லாத மற்றும் பொருள்பற்றுள்ள வாழ்க்கைக்காக அவர்கள் மீது பொறாமைக் கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும். சங்கீதக்காரனாகிய ஆசாப், துன்மார்க்கர், “சுகஜீவிகளாய்” இருப்பதன் காரணமாக, யெகோவாவை சேவிப்பதில் எந்த பயனும் இல்லை என்பதாக ஒரு சமயம் நினைத்தார். அப்படியிருந்தாலும், துன்மார்க்கர் “சறுக்கலான இடங்களில்” இருப்பதால் தன்னுடைய விவாதம் தவறு என்பதை அவன் அறிந்து கொண்டான். யெகோவாவிடம் நெருங்கி இருப்பதைக் காட்டிலும் வேறு எதுவும் மேலானது இல்லை என்பதை உணர்ந்து கடவுளிடம் இவ்விதமாகச் சொன்னான்: “ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப் போகிறவர்கள் நாசமடைவார்கள்; . . . எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர் மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.” (சங்கீதம் 73:12, 13, 18, 23, 27, 28) நம்பிக்கை இல்லாத ஜனமாகிய துன்மார்க்கரின் கவலையற்ற வாழ்க்கையைக் குறித்து பொறாமைக் கொள்வதற்குப் பதிலாக, யெகோவாவிடம் நெருங்கி இருப்பதில் ஆசாபை பின்பற்றுவோமாக.
11. யெகோவாவிடம் நெருங்கியிருப்பதில் ஏன் தானியேல் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்? நாம் எவ்வாறு அவரைப் பின்பற்றலாம்?
11 ஜெபத்தின் மீது போடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வமான தடைகளை புறக்கணிப்பதன் காரணமாக சிங்கங்களின் கெபியிலே போடப்படும் அபாயம் இருந்தபோதிலும்கூட தானியேல் பின்வாங்காமல் ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார். ஆனால் யெகோவா “தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப் போட்டு” தானியேலை காப்பாற்றினார். (தானியேல் 6:7-10, 22, 27) ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்தமைக்காக தானியேல் வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்டார். நாமும்கூட, விசேஷமாக, நம்முடைய ராஜ்ய பிரசங்கிப்புக்கு எதிர்ப்பை சந்திக்கும் போது ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருக்கிறோமா?
இயேசு, நம்முடைய முன்மாதிரி
12. (எ) ஊழியத்தின் ஆரம்பத்தில் ஜெபத்தின் சம்பந்தமாக இயேசு என்ன மாதிரியை வைத்தார்? இது கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கக்கூடும்? (பி) ஜெபத்தைப் பற்றி இயேசுவின் மாதிரி ஜெபம் வெளிப்படுத்துவது என்ன?
12 இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் ஆரம்பம் முதற்கொண்டே ஜெபித்துக் கொண்டிருப்பவராக காணப்படுகிறார். முழுக்காட்டப்படும் சமயத்தில் அவருடைய ஜெபசிந்தையான மனநிலை, நவீன காலங்களில் தண்ணீர் முழுக்காட்டுதல் எடுப்பவர்களுக்கு சிறந்த ஒரு முன்மாதிரியை வைக்கிறது. (லூக்கா 3:21, 22) தண்ணீர் முழுக்காட்டுதல் அடையாளப்படுத்துகின்ற அந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்கு கடவுளுடைய உதவிக்காக ஒருவர் ஜெபிக்கக்கூடும். இயேசு, ஜெபத்தில் யெகோவாவை அணுகுவதற்கும்கூட மற்றவர்களுக்கு உதவி செய்தார். இயேசு ஓர் இடத்தில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்த சமயத்தில், அவருடைய சீஷர்களில் ஒருவர் அதற்குப் பிற்பாடு, “ஆண்டவரே, ஜெபம் பண்ண எங்களுக்குப் போதிக்க வேண்டும்,” என்று அவரிடம் சொன்னார். இயேசு அப்போது பொதுவாக மாதிரி ஜெபம் என்று அறியப்பட்டிருப்பதை விவரித்தார். இதில், விஷயங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது, கடவுளுடைய நாமமும் நோக்கமும் முதலிடம் பெற வேண்டும் என்பதைக் காட்டுகிறது. (லூக்கா 11:1-4) இதன் காரணமாக நம்முடைய ஜெபங்களில், “அதிமுக்கியமான காரியங்களை” அசட்டை செய்துவிடாமல், சரியான தொடர்பில் காரியங்களை நோக்கும் திறமையையும் சமநிலையையும் காத்துக் கொள்வது அவசியமாகும். (பிலிப்பியர் 1:9, 10, NW) நிச்சயமாகவே, விசேஷித்த தேவைகளுள்ள அல்லது கவனிக்கப்பட வேண்டிய திட்டவட்டமான பிரச்னைகளுள்ள காலங்கள் இருக்கின்றன. இயேசுவை போல, கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட ஒரு வேலை நியமனத்தை நிறைவேற்ற அல்லது குறிப்பிட்ட சோதனைகள் அல்லது ஆபத்துகளை எதிர்ப்படுவதற்கு பெலத்துக்காக கடவுளிடம் ஜெபத்தில் செல்ல முடியும். (மத்தேயு 26:36-44) உண்மையில், தனிப்பட்ட ஜெபங்கள் உண்மையாக வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உட்படுத்தக்கூடும்.
13 மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதனுடைய முக்கியத்துவத்தைத் தம்முடைய நேர்த்தியான முன்மாதிரி மூலம் இயேசு காண்பித்தார். இயேசு தமக்கு நேரிட்டது போலவே தம்முடைய சீஷர்களும் பகைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார். (யோவான் 15:18-20; 1 பேதுரு 5:9) ஆகவே அவர் “அவர்களைப் பொல்லாங்கனிடமிருந்து காக்க” வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். (யோவான் 17:9, 11, 15, 20) பேதுருவுக்கு முன்னாலிருந்த விசேஷமான சோதனையை அறிந்தவராய் அவர் பேதுருவிடம் சொன்னார்: “நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்.” (லூக்கா 22:32) நாமும்கூட வெறுமென நம்முடைய சொந்தப் பிரச்னைகளையும் அக்கறைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டில்லாமல் மற்றவர்களைப் பற்றி சிந்தித்து நம்முடைய சகோதரர்களுக்காக ஜெபிப்பதில் உறுதியாய்த் தரித்திருப்போமானால் அது எத்தனைப் பிரயோஜனமாயிருக்கும்!—பிலிப்பியர் 2:4; கொலோசெயர் 1:9, 10.
14. இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியக் காலம் முழுவதிலுமாக யெகோவாவிடம் மிகவும் நெருங்கியிருந்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? நாம் எவ்வாறு அவரை பின்பற்றலாம்?
14 இயேசு தம்முடைய ஊழியக்காலம் முழுவதிலுமாக, ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்து யெகோவாவிடம் நெருங்கி இருந்தார். (எபிரெயர் 5:7-10) அப்போஸ்தலனாகிய பேதுரு, அப்போஸ்தலர் 2:25-28-ல், சங்கீதம் 16:8-ஐ மேற்கோள் காண்பித்து அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்துகிறார்: “அவரைக் குறித்துத் தாவீது: கர்த்தரை [யெகோவாவை, NW] எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக் கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறார்.” நாமும் அவ்விதமாகவே செய்யலாம். நம்மிடம் நெருங்கியிருக்கும்படியாக நாம் கடவுளிடம் ஜெபிக்கலாம், யெகோவாவை எப்பொழுதும் மனதில் நமக்கு முன்பாக நிறுத்துவதன் மூலம், யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை நாம் காண்பிக்கலாம். (சங்கீதம் 110:5; ஏசாயா 41:10, 13 ஒப்பிடவும்.) அப்பொழுது நாம் எல்லாவிதமான தொந்தரவுகளையும் தவிர்த்துவிடுவோம், ஏனென்றால் யெகோவா நம்மைத் தாங்குவார், நாம் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டோம்.
15. (எ) எதன் சம்பந்தமாக, நாம் ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருக்க ஒருபோதும் தவறிவிடக்கூடாது? (பி) நம்முடைய நன்றியுணர்வைக் குறித்து என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது?
15 நம்மிடமாக யெகோவாவின் நற்குணத்துக்கு, ஆம், நம்முடைய பாவங்களுக்காக ஒரு மீட்பின் பலியாக அவருடைய குமாரனை ஈவாக கொடுத்ததையும் உட்படுத்தும் “மிகவும் விசேஷித்த கிருபை”க்கு, அவருக்கு நன்றியை வெளிப்படுத்த ஒருபோதும் நாம் தவறிவிடாதிருப்போமாக. (2 கொரிந்தியர் 9:14, 15; மாற்கு 10:45; யோவான் 3:16; ரோமர் 8:32; 1 யோவான் 4:9, 10) ஆம், இயேசுவின் நாமத்தில், “எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்துக்” கொண்டிருங்கள். (எபேசியர் 5:19, 20; கொலோசெயர் 4:2; 1 தெசலோனிக்கேயர் 5:18) நம்மிடம் இல்லாதவற்றில் அல்லது நம்முடைய சொந்த பிரச்னைகளில் நாம் அவ்வளவு முழுவதுமாக ஆழ்ந்துவிடுவதன் காரணமாக, நமக்கிருப்பவற்றிற்காக நம்முடைய நன்றியுணர்வு கெடுக்கப்படுவதை அனுமதியாதபடி நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
யெகோவாவின் மீது நம்முடைய பாரத்தை வைத்துவிடுதல்
16. ஏதாவது ஒரு பாரம் நம்மை தொந்தரவு செய்கையில், நாம் என்ன செய்ய வேண்டும்?
16 ஜெபத்தில் உறுதியாக இருப்பது, நம்முடைய பக்தியின் ஆழத்தைக் காண்பிக்கிறது. நாம் கடவுளை நோக்கி கூப்பிடும் போது, அவரிடமிருந்து ஒரு பதில் வருவதற்கு முன்பாகவேகூட நம் மீது அதனுடைய பாதிப்பு நல்லதாகவே இருக்கிறது. ஏதாவது ஒரு பாரம் நம்முடைய மனதை தொந்தரவு செய்து கொண்டிருந்தால் நாம் பின்வரும் புத்திமதியை பின்பற்றுவதன் மூலம் யெகோவாவிடம் நெருங்கி இருக்கலாம்: “கர்த்தர் மேல் [யெகோவா, NW] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” (சங்கீதம் 55:22) அவரில் முழு விசுவாசத்தோடு நம்முடைய எல்லா பாரங்களையும்—ஏக்கங்கள், கவலைகள், ஏமாற்றங்கள், பயங்கள் போன்றவற்றை—அவர் மீது வைத்துவிடுவதன் மூலம், நாம் அமைதியான இருதயத்தை, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தைப்” பெற்றுக்கொள்கிறோம்.—பிலிப்பியர் 4:4, 7; சங்கீதம் 68:19; மாற்கு 11:24; 1 பேதுரு 5:7.
17. தேவ சமாதானத்தை நாம் எவ்வாறு அடைய முடியும்?
17 இந்தத் தேவசமாதானம் உடனடியாக வந்துவிடுகிறதா? உடனடியாக கொஞ்சம் நிம்மதியை நாம் பெற்றுக்கொள்ள முடிந்தாலும், இயேசு பரிசுத்த ஆவிக்காக ஜெபிப்பதைப் பற்றி சொன்ன விஷயம் இங்கும்கூட பொருந்துகிறது: “கேட்டுக் கொண்டேயிருங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக் கொண்டேயிருங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டிக் கொண்டேயிருங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” (லூக்கா 11:9-13) பரிசுத்த ஆவியின் மூலமாகத்தானே நாம் நம்முடைய கவலைகளை தள்ளிவிடுவதன் காரணமாக, தேவ சமாதானத்துக்காகவும், நம்முடைய பாரங்களின் சம்பந்தமாக அவருடைய உதவிக்காகவும் கேட்பதில் உறுதியாய்த் தரித்திருப்பது அவசியமாகும். ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பதன் மூலம், நாம் விரும்பும் உதவியையும் இருதய சாந்தியையும் பெற்றுக்கொள்வோம்.
18. குறிப்பிட்ட ஒரு நிலைமையில் சரியாக எதற்காக ஜெபிப்பது என்பதை நாம் அறியாதவர்களாயிருந்தால், யெகோவா நமக்காக என்ன செய்கிறார்?
18 ஆனால் சரியாக எதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியாதிருந்தால் அப்போது என்ன? இருதயத்தின் ஆழத்திலுள்ள துயரங்கள் அநேகமாக வெளிப்படுத்தப்படாமலே இருக்கின்றன, ஏனென்றால் நாம் நம்முடைய நிலைமையை முழுவதுமாக புரிந்துகொள்வதில்லை அல்லது யெகோவாவிடம் எதை சமர்ப்பிப்பது என்பதை அறியாத குழப்ப நிலையில் நாம் இருக்கிறோம். இங்குதானே பரிசுத்த ஆவி நமக்காக பரிந்து பேச முடியும். பவுல் எழுதினார்: “நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.” (ரோமர் 8:26) எவ்விதமாக? கடவுளுடைய வார்த்தையில், நம்முடைய நிலைமையோடு சம்பந்தப்பட்ட ஆவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்களும் ஜெபங்களும் இருக்கின்றன. இவை நமக்காக பரிந்து பேசும்படியாக அவர் அனுமதிக்கிறார். நம்முடைய விஷயத்தில் அவைகளுடைய அர்த்தத்தை நாம் அறிந்தவர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் செய்யக்கூடிய ஜெபங்களாக இவைகளை ஏற்றுக்கொண்டு அதற்கிசைவாக அவர் அவைகளை நிறைவேற்றுகிறார்.
ஜெபமும் நம்பிக்கையும் தொடர்ந்திருக்கும்
19. ஜெபமும் நம்பிக்கையும் ஏன் என்றுமாக தொடர்ந்திருக்கும்?
19 நம்முடைய பரம தகப்பனிடமாக ஜெபிப்பது, விசேஷமாக புதிய உலகிற்காகவும் அதனுடைய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி தெரிவிப்பதன் சம்பந்தமாக ஜெபிப்பது என்றுமாகத் தொடர்ந்திருக்கும். (ஏசாயா 65:24; வெளிப்படுத்துதல் 21:5) நாம் தொடர்ந்து நம்பிக்கையிலும் சந்தோஷமாயிருப்போம், ஏனென்றால், ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை என்றுமாக நிலைத்திருக்கும். (1 கொரிந்தியர் 13:13 ஒப்பிடவும்.) பூமியைப் பொறுத்ததில் யெகோவா தாமாகவே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இளைப்பாறுகிற ஓய்வுநாளின் கீழ் இனிமேலும் இல்லாத போது, அவர் என்ன புதிய காரியங்களை உண்டாக்குவார் என்பதை நாம் கற்பனையும்கூட செய்து பார்க்க முடியாது. (ஆதியாகமம் 2:2, 3) எல்லா நித்தியத்துக்குமாக, அவர் தம்முடைய மக்களுக்கு முன்னால் விரும்பத்தக்க ஆச்சரியங்களைக் கொண்டிருப்பார், அவருடைய சித்தத்தைச் செய்யும் வகையில் எதிர்காலம் அவருடைய மக்களுக்கு மகத்தான காரியங்களைக் கொண்டிருக்கிறது.
20. நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்? ஏன்?
20 இப்படிப்பட்ட கிளர்ச்சியூட்டும் நம்பிக்கை நம் முன்னாலிருக்க, ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பதன் மூலம் நாம் அனைவரும் யெகோவாவிடம் நெருங்கியிருப்போமாக. நம்முடைய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும், நம்முடைய பரம தகப்பனுக்கு நன்றி செலுத்துவதை ஒருபோதும் நிறுத்திவிடாதிருப்போமாக. குறித்த காலத்தில், நம்முடைய எதிர்பார்ப்புகள் நாம் கற்பனை செய்திருக்கக்கூடியதற்கும் மேலாக நிறைவேறும். ஏனென்றால், யெகோவா “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமை”யுடையவராக இருக்கிறார். (எபேசியர் 3:20) அப்படியென்றால், இதை முன்னிட்டு, “ஜெபத்தைக் கேட்கிற”வராகிய நம்முடைய கடவுளாகிய யெகோவாவுக்கு எல்லா துதியையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் எல்லாக் காலத்துக்குமாக நாம் கொடுப்போமாக! (w91 12/15)
[அடிக்குறிப்புகள்]
a ஒரு பொருட் பன்மொழியின் வெப்ஸ்டரின் புதிய அகராதி-படி, “உறுதியாய்த் தரித்திருப்பது” எப்போதுமே, ஒரு மெச்சத்தக்கப் பண்பைக் குறிக்கிறது; தோல்வி, சந்தேகங்கள் அல்லது துன்பங்களால் சோர்வடைந்து போக மறுப்பதையும், ஒரு நோக்கத்தை அல்லது ஏற்றுக்கொண்ட ஒரு பணியை உறுதியாக அல்லது விடாது தொடர்வதையும் குறிப்பிடுகிறது.”
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻நாம் ஜெபத்தில் ஏன் உறுதியாய்த் தரித்திருப்பது அவசியம்?
◻கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் செய்யப்பட்ட ஜெபத்தின் முன்மாதிரிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ஜெபத்தைப் பற்றி இயேசுவின் முன்மாதிரி நமக்கு என்ன கற்பிக்கிறது?
◻நாம் எவ்வாறு யெகோவாவின் மேல் நம்முடைய பாரத்தை வைத்துவிட முடியும்? என்ன விளைவோடு?
13. மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதனுடைய முக்கியத்துவத்தை இயேசு எவ்வாறு காட்டினார்?
[பக்கம் 17-ன் படம்]
தானியேல் சிங்கங்களின் கெபியில் எறியப்படும் ஆபத்தின் மத்தியிலும்கூட ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார்