நாம் ஏன் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்?
“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:17, 18.
1, 2. ஜெபிக்கும் பாக்கியத்தை தானியேல் உயர்வாக மதித்ததை எவ்வாறு காண்பித்தார், கடவுளுடன் அவர் கொண்டிருந்த உறவை அது எவ்வாறு பாதித்தது?
ஒரு நாளைக்கு மூன்று தடவை கடவுளிடம் ஜெபம் செய்யும் பழக்கத்தை தானியேல் தீர்க்கதரிசி கடைப்பிடித்து வந்தார். எருசலேம் நகரை நோக்கியவாறு இருந்த தனது மேலறையின் ஜன்னல் அருகே முழங்கால் படியிட்டு விண்ணப்பம் செய்து வந்தார். (1 இராஜாக்கள் 8:46-49; தானியேல் 6:10) மேதிய அரசனாகிய தரியுவைத் தவிர வேறு யாரிடமும் விண்ணப்பம் செய்யக் கூடாது என அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தபோதிலும், தானியேல் தனது தீர்மானத்திலிருந்து துளிகூட மாறவில்லை. தன் உயிருக்கு ஆபத்து வந்தபோதிலும், ஜெபிக்கும் பழக்கமுடைய அவர் இடைவிடாமல் யெகோவாவை நோக்கி மன்றாடினார்.
2 தானியேலை கடவுள் எவ்வாறு கருதினார்? தானியேலுடைய ஒரு ஜெபத்திற்கு பதிலளிக்க வந்த காபிரியேல் தூதன், அவரை “மிகவும் பிரியமானவன்” அல்லது “மிகுதியான அன்புக்கு உரியவன்” என வர்ணித்தார். (தானியேல் 9:20-23; பொது மொழிபெயர்ப்பு) எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில், தானியேலை நீதிமான் என யெகோவா குறிப்பிட்டார். (எசேக்கியேல் 14:14, 20) காலம் செல்லச் செல்ல, தானியேலின் ஜெபங்கள் கடவுளுடன் நெருங்கிய உறவுக்குள் அவரை கொண்டுவந்தன, இந்த உண்மையை தரியுவும் அங்கீகரித்தார்.—தானியேல் 6:16.
3. மிஷனரி ஒருவருடைய அனுபவத்தின்படி, உத்தமத்தைக் காத்துக்கொள்ள ஜெபம் எவ்வாறு நமக்கு உதவும்?
3 நாம் தவறாமல் ஜெபிப்பது கடும் சோதனைகளை எதிர்கொள்வதற்கு உதவும். உதாரணமாக, சீனாவில் மிஷனரியாக சேவை செய்துவந்த ஹேரால்டு கிங் என்பவருடைய விஷயத்தை கவனியுங்கள்; அவர் ஐந்தாண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். சகோதரர் கிங் தனது அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “சக மனிதரிடமிருந்து என்னைப் பிரித்து வைக்கலாம், ஆனால் கடவுளிடமிருந்து ஒருவரும் என்னைப் பிரித்து வைக்க முடியாது. . . . ஆகவே, பைபிளில் சொல்லப்பட்டுள்ள தானியேலை மனதில் வைத்து, சிறையில் என்னுடைய அறையை கடந்துசெல்கிற அனைவருடைய பார்வையிலும் படுகிற விதமாக, நான் முழங்காற்படியிட்டு மூன்று முறை கடவுளை நோக்கி சத்தமாக ஜெபம் செய்தேன். . . . இப்படிப்பட்ட சமயங்களில், கடவுளுடைய ஆவி மிகவும் பயனுள்ள விஷயங்களுக்கு என் மனதை வழிநடத்தியது, எனக்கு மன நிம்மதியையும் தந்தது. ஜெபம் எனக்கு எப்பேர்ப்பட்ட ஆன்மீக பலத்தையும் ஆறுதலையும் அளித்தது!”
4. இந்தக் கட்டுரையில் ஜெபம் சம்பந்தமாக என்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?
4 பைபிள் இவ்வாறு கூறுகிறது: “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:17, 18) இந்த அறிவுரையின்படி, பின்வரும் கேள்விகளை நாம் சிந்தித்துப் பார்ப்போமாக: நம்முடைய ஜெபங்களுக்கு ஏன் நாம் கவனம் செலுத்த வேண்டும்? யெகோவாவை நாம் இடைவிடாமல் அண்டிச் செல்வதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன? நம்முடைய குறைபாடுகளின் நிமித்தம் அவரிடம் ஜெபம் செய்வதற்குத் தகுதியற்றவர்களாய் உணர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
ஜெபத்தின் மூலம் நட்பை வளருங்கள்
5. எப்படிப்பட்ட ஒப்பற்ற நட்பை அனுபவித்து மகிழ ஜெபம் நமக்கு உதவுகிறது?
5 யெகோவா உங்களை தமது நண்பராக நினைக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா? முற்பிதாவாகிய ஆபிரகாமை தமது நண்பன் என்று அவர் அழைத்தார். (ஏசாயா 41:8; யாக்கோபு 2:23) அப்படிப்பட்ட உறவை நாமும் அவருடன் வளர்த்துக்கொள்ளும்படி யெகோவா விரும்புகிறார். சொல்லப்போனால், தம்மிடம் நெருங்கி வரும்படி நம்மை அழைக்கிறார். (யாக்கோபு 4:8) ஜெபம் என்ற ஒப்பற்ற ஏற்பாட்டைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு இந்த அழைப்பு நம்மை தூண்ட வேண்டும் அல்லவா? முக்கியமான அரசாங்க அதிகாரியிடம் பேசுவதற்கு ‘அப்பாய்ன்ட்மெண்ட்’ வாங்குவதே எவ்வளவு கடினம்! அப்படியானால், அவருடைய நண்பராவதைப் பற்றி சொல்லவா வேண்டும்? ஆனால் இந்த அண்டத்தின் படைப்பாளரோ நாம் விரும்புகிற போதெல்லாம் அல்லது நமக்கு தேவைப்படுகிற போதெல்லாம் தம்மை ஜெபத்தில் தாராளமாக அணுகும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறார். (சங்கீதம் 37:5) நாம் இடைவிடாமல் ஜெபம் செய்வது யெகோவாவுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும்.
6. ‘இடைவிடாமல் ஜெபிப்பதன்’ அவசியத்தைப் பற்றி இயேசுவின் முன்மாதிரி நமக்கு எதை கற்பிக்கிறது?
6 ஆனால் ஜெபிப்பதை புறக்கணித்துவிடுவது எவ்வளவு சுலபம்! அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் போராடும்போது நாம் கடவுளிடம் பேச முயற்சி செய்யாமல் இருந்துவிடும் அளவுக்கு அதிலேயே மூழ்கிவிடலாம். “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று சொல்லி இயேசு தமது சீஷர்களை உற்சாகப்படுத்தினார், அவரே அதில் முன்மாதிரி வைத்தார். (மத்தேயு 26:41, NW) காலை முதல் மாலை வரை எப்பொழுதும் அதிக வேலையாக இருந்தபோதிலும், தமது பரலோக தகப்பனுடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கினார். சிலசமயங்களில் இயேசு ஜெபிப்பதற்காக ‘அதிகாலையில், இருட்டோடே எழுந்தார்.’ (மாற்கு 1:35) மற்ற சந்தர்ப்பங்களில், யெகோவாவிடம் ஜெபிப்பதற்காக பொழுது சாய்ந்த நேரத்தில் தனிமையான ஓரிடத்திற்குச் சென்றார். (மத்தேயு 14:23) ஜெபிப்பதற்கு இயேசு எப்பொழுதும் நேரத்தை ஒதுக்கினார், நாமும் அதுபோல செய்ய வேண்டும்.—1 பேதுரு 2:21.
7. நமது பரலோக தகப்பனிடம் அன்றாடம் பேசுவதற்கு எத்தகைய சூழ்நிலைகள் நம்மை உந்துவிக்க வேண்டும்?
7 அன்றாடம் பிரச்சினைகளை எதிர்ப்படும்போதும், சபலங்கள் ஏற்படும்போதும், தீர்மானங்கள் எடுக்கும்போதும், தனிமையில் ஜெபம் செய்வதற்கு தகுந்த சந்தர்ப்பங்கள் பல கிடைக்கின்றன. (எபேசியர் 6:18) நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கடவுளுடைய வழிநடத்துதலை நாடும்போது அவருடன் நமது நட்பு நிச்சயம் வளரும். இரண்டு நண்பர்கள் ஒன்று சேர்ந்து பிரச்சினைகளை கையாண்டால், அவர்களுக்கு இடையே நட்பு எனும் பந்தம் பலப்படும் அல்லவா? (நீதிமொழிகள் 17:17) அவ்வாறே, யெகோவா மீது சார்ந்திருந்து அவருடைய உதவியை அனுபவிக்கும்போதும் நடக்கிறது.—2 நாளாகமம் 14:11.
8. நெகேமியா, இயேசு, அன்னாள் ஆகியோருடைய உதாரணங்களிலிருந்து நமது தனிப்பட்ட ஜெபங்களின் நீளத்தைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 ஜெபத்தில் தம்மிடம் எவ்வளவு நேரம் பேசுவது, எவ்வளவு அடிக்கடி பேசுவது என்று யெகோவா நமக்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை என்பது மனதிற்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அளிக்கிறது! பெர்சிய அரசனிடம் நெகேமியா விண்ணப்பம் செய்வதற்கு முன் உடனடியாக மௌனமாய் ஜெபித்தார். (நெகேமியா 2:4, 5) இயேசுவும் லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு வல்லமை கேட்டு யெகோவாவிடம் சுருக்கமாக ஜெபம் செய்தார். (யோவான் 11:41, 42) மறுபட்சத்தில், அன்னாளோ தன் இருதயத்திலுள்ளதை கொட்டியபோது “கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம் பண்”ணினாள். (1 சாமுவேல் 1:12, 15, 16) ஆகவே, தேவைக்கேற்பவும் சூழ்நிலைக்கேற்பவும் நமது தனிப்பட்ட ஜெபங்கள் சுருக்கமாகவோ நீளமாகவோ இருக்கலாம்.
9. யெகோவா செய்கிற அனைத்திற்கும் துதியையும் நன்றியையும் நம்முடைய ஜெபங்களில் ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
9 பைபிளில் உள்ள அநேக ஜெபங்கள் யெகோவாவின் உன்னத ஸ்தானத்தையும் அவருடைய மகத்தான படைப்புகளையும் பற்றி இருதயப்பூர்வ போற்றுதலை வெளிப்படுத்துகின்றன. (யாத்திராகமம் 15:1-19; 1 நாளாகமம் 16:7-36; சங்கீதம் 145) ஒரு தரிசனத்தில், 24 மூப்பர்கள்—பரலோக ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் முழுமையான எண்ணிக்கையானோர்—“கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது” என்று துதிப்பதை அப்போஸ்தலன் யோவான் பார்க்கிறார். (வெளிப்படுத்துதல் 4:10, 11) படைப்பாளரை தவறாமல் துதிப்பதற்கு நமக்கும் காரணம் இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுக்கு செய்த காரியங்களுக்கு பிள்ளைகள் இருதயப்பூர்வமாக நன்றி சொல்லும்போது அவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள்! யெகோவா செய்திருக்கும் தயவான காரியங்களை மதித்துணர்வுடன் நினைத்துப் பார்ப்பதும் அவற்றிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதும் நம்முடைய ஜெபங்களின் தரத்தை முன்னேற்றுவிப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும்.
“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்”—ஏன்?
10. நமது விசுவாசத்தைப் பலப்படுத்துவதில் ஜெபம் வகிக்கும் பாகம் என்ன?
10 தவறாமல் ஜெபிப்பது நம்முடைய விசுவாசத்திற்கு அவசியம். ‘சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டியதன்’ அவசியத்தை உவமையுடன் இயேசு எடுத்துக்காட்டிய பிறகு, “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ”? என கேட்டார். (லூக்கா 18:1-8) அர்த்தமுள்ள, இருதயப்பூர்வமான ஜெபங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. முற்பிதாவாகிய ஆபிரகாம் வயதாகி பிள்ளைகளின்றி இருந்தபோது இந்த விஷயத்தைப் பற்றி கடவுளிடம் பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, வானத்தை ஏறெடுத்து, முடிந்தால் அங்குள்ள நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும்படி அவரிடம் யெகோவா முதலில் சொன்னார். அதற்குப் பிறகு ஆபிரகாமிடம் கடவுள் இவ்வாறு உறுதியளித்தார்: “உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்.” விளைவு? ஆபிரகாம் ‘யெகோவாவை விசுவாசித்தார், அதை அவர் அவருக்கு நீதியாக எண்ணினார்.’ (ஆதியாகமம் 15:5, 6) ஜெபத்தில் யெகோவாவிடம் மனந்திறந்து பேசி, பைபிளின் வாயிலாக அவர் தரும் நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர் நமது விசுவாசத்தைப் பலப்படுத்துவார்.
11. பிரச்சினைகளை சமாளிப்பதற்கு ஜெபம் எவ்வாறு உதவி செய்யும்?
11 பிரச்சினைகளை கையாளுவதற்கும் ஜெபம் நமக்கு உதவி செய்யும். நமது வாழ்க்கை பாரமாகவும் நாம் எதிர்ப்படும் சூழ்நிலைமைகள் கஷ்டமாகவும் இருக்கிறதா? பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22) கடினமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும்போது நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம். தமது 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இராமுழுதும் தனிமையில் ஜெபித்தார். (லூக்கா 6:12-16) தாம் இறப்பதற்கு முந்தைய இரவில், இயேசு ஊக்கமாய் மன்றாடியதால் “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.” (லூக்கா 22:44) விளைவு என்ன? ‘அவருக்கு உண்டான பயபக்தியினிமித்தம் அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது.’ (எபிரெயர் 5:7) இடைவிடாமல் ஊக்கமாக செய்யும் நமது ஜெபங்கள் வேதனைமிக்க சூழ்நிலைமைகளையும் கடினமான சோதனைகளையும் சமாளிப்பதற்கு உதவி செய்யும்.
12. யெகோவாவுக்கு நம்மீது தனிப்பட்ட அக்கறை இருப்பதை ஜெபம் எவ்வாறு காட்டுகிறது?
12 யெகோவாவிடம் ஜெபத்தில் அணுகுவதற்கு மற்றொரு காரணம், நாம் அவரிடம் நெருங்கி வரும்போது அவரும் நம்மிடம் நெருங்கி வருகிறார் என்பதே. (யாக்கோபு 4:8) ஜெபத்தில் யெகோவாவிடம் மனந்திறந்து பேசும்போது, அவர் நம்முடைய தேவைகளைக் குறித்து அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதையும் நம்மை கனிவாக கவனித்துக்கொள்கிறார் என்பதையும் நாம் உணருகிறோம் அல்லவா? கடவுளுடைய அன்பை மிகவும் தனிப்பட்ட விதமாக அனுபவிக்கிறோம். தமது ஊழியர்கள் ஏறெடுக்கும் ஒவ்வொரு ஜெபத்தையும் செவிகொடுத்துக் கேட்கும் பொறுப்பை நம் பரலோகப் பிதாவாகிய யெகோவா வேறு யாரிடமும் ஒப்படைக்கவில்லை. (சங்கீதம் 66:19, 20; லூக்கா 11:2) ‘அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால், நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடும்படி’ நம்மை அழைக்கிறார்.—1 பேதுரு 5:6, 7.
13, 14. இடைவிடாமல் ஜெபிப்பதற்கு நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
13 ஜெபம் வெளி ஊழியத்தில் ஈடுபடுவதற்கு மிகுந்த வைராக்கியத்தை நமக்குக் கொடுக்கிறது; ஜனங்கள் செவிகொடுத்துக் கேட்காதபோது அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும்போது ஊழியத்தை விட்டுவிடாமலிருக்க நம்மை பலப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 4:23-31) ‘பிசாசினுடைய தந்திரங்களை’ எதிர்த்து நிற்பதற்கும் ஜெபம் நம்மை பலப்படுத்துகிறது. (எபேசியர் 6:11, 17, 18) அன்றாடம் வாழ்க்கையில் எதிர்ப்படும் சோதனைகளை சமாளிப்பதற்கு போராடிக் கொண்டிருக்கும்போது, நம்மை பலப்படுத்தும்படி நாம் தொடர்ந்து கடவுளிடம் மன்றாடலாம். பிசாசாகிய சாத்தான் என்ற ‘தீயோனிடமிருந்து நம்மை காப்பதற்கு’ யெகோவாவிடம் ஜெபிப்பதும் இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி ஜெபத்தில் உட்பட்டுள்ளது.—மத்தேயு 6:13, NW.
14 நமது பாவ சிந்தைகளை கட்டுப்படுத்துவதற்காக உதவி கேட்டு தொடர்ந்து ஜெபிக்கும்போது யெகோவாவின் உதவிக் கரத்தை நாம் உணருவோம். நமக்கு பின்வரும் உறுதி இருக்கிறது: “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13) பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போஸ்தலன் பவுல்கூட யெகோவாவின் பலப்படுத்தும் உதவியை அனுபவப்பூர்வமாக கண்டார். “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என்று கூறினார்.—பிலிப்பியர் 4:13, பொ.மொ.; 2 கொரிந்தியர் 11:23-29.
குறைபாடுகளின் மத்தியிலும் ஜெபத்தில் உறுதியாயிருங்கள்
15. நம்முடைய நடத்தை கடவுளுடைய தராதரங்களிலிருந்து குறைவுபடுமாகில் என்ன நேரிடலாம்?
15 நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதற்கு, கடவுளுடைய வார்த்தையில் உள்ள அறிவுரையை நாம் புறக்கணித்து விடக்கூடாது. “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 3:22) ஆனால் நம்முடைய நடத்தை கடவுளுடைய தராதரங்களிலிருந்து குறைவுபடுமாகில் என்ன நேரிடலாம்? ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு ஒளிந்து கொண்டார்கள். ஒருவேளை நாமும் ‘யெகோவாவின் முகத்திலிருந்து’ நம்மை மறைத்துக்கொள்ள நினைத்து, ஜெபிப்பதை நிறுத்திவிடக்கூடும். (ஆதியாகமம் 3:8, NW) “யெகோவாவிடமிருந்தும் அவருடைய அமைப்பினிடமிருந்தும் விலகிப்போகிறவர்களில் கிட்டத்தட்ட எல்லாரும் எடுக்கும் தவறான முதல் படி ஜெபிப்பதை நிறுத்திவிடுவதாகும்” என அனுபவமிக்க பயணக் கண்காணியான கிளாஸ் கூறுகிறார். (எபிரெயர் 2:1) இதுவே ஹோசே ஆன்கேல் என்பவருடைய விஷயத்திலும் நிகழ்ந்தது. அவர் இவ்வாறு கூறுகிறார்: “சுமார் எட்டு வருடங்களாக, நான் யெகோவாவிடம் ஜெபிப்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டேன். அவரை என் பரலோக தந்தையாகவே நான் தொடர்ந்து கருதிவந்தபோதிலும் அவரிடம் பேசுவதற்கு அருகதையற்றவனாக உணர்ந்தேன்.”
16, 17. ஆன்மீக பலவீனத்தை மேற்கொள்ள தவறாமல் ஜெபம் செய்வது எப்படி உதவும் என்பதற்கு உதாரணங்கள் தருக.
16 ஆன்மீக பலவீனத்தினாலோ அல்லது தவறான காரியத்தில் ஈடுபட்டதாலோ ஜெபிப்பதற்கு தகுதியற்றவர்களாய் சிலர் உணரலாம். ஆனால் ஜெபம் என்ற இந்த சிலாக்கியத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சரியான சந்தர்ப்பம் இதுதான். யோனா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைவிட்டு ஓடிப்போனார். ஆனால் ‘நெருக்கத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்; அவர் உத்தரவு அருளினார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டார், யெகோவா அவருடைய சத்தத்தைக் கேட்டார்.’ (யோனா 2:2) யோனா ஜெபம் செய்தார், யெகோவா அவருடைய ஜெபத்திற்கு பதிலளித்தார், ஆன்மீக ரீதியில் யோனா குணமடைந்தார்.
17 உதவிக்காக ஹோசே ஆன்கேலும் ஊக்கமாக ஜெபித்தார். அவர் கூறுகிறார்: “என்னுடைய இருதயத்திலுள்ளதைக் கொட்டி கடவுளிடம் மன்னிப்பு கேட்டு அவரிடம் மன்றாடினேன். அவர் உண்மையிலேயே எனக்கு உதவி செய்தார். நான் மட்டும் ஜெபம் செய்யாமல் இருந்திருந்தால் திரும்பவும் சத்தியத்திற்கு வந்திருக்கவே மாட்டேன். இப்பொழுது ஒவ்வொரு நாளும் தவறாமல் ஜெபித்து வருகிறேன், ஜெபிக்கும் சந்தர்ப்பங்களுக்காக நான் எதிர்பார்த்திருக்கிறேன்.” நம்முடைய தவறுகளைப் பற்றி கடவுளிடம் மனந்திறந்து தாராளமாக பேச வேண்டும், அவரிடம் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்க வேண்டும். தாவீது ராஜா தனது மீறுதல்களை அறிக்கையிட்டபோது, அவருடைய பாவங்களை யெகோவா மன்னித்தார். (சங்கீதம் 32:3-5) நமக்கு உதவி செய்யவே யெகோவா விரும்புகிறார், நம்மை கண்டனம் செய்வதற்கு அல்ல. (1 யோவான் 3:19, 20) சபையிலுள்ள முதிர்ச்சியுள்ளவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள் ஆன்மீக ரீதியில் உதவி செய்யும், ஏனென்றால் அத்தகைய ஜெபம் “மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”—யாக்கோபு 5:13-16.
18. கடவுளுடைய ஊழியர்கள் எவ்வளவு தூரம் வழிவிலகிச் சென்றிருந்தாலும் என்ன நம்பிக்கையோடிருக்கலாம்?
18 தப்பு செய்த பிறகு உதவியும் அறிவுரையும் பெறுவதற்குத் தாழ்மையுடன் தன் தகப்பனிடம் வருகிற மகனை எந்தத் தகப்பனாவது ஒதுக்கித் தள்ளுவாரா? நாம் எவ்வளவு தூரம் வழிவிலகிச் சென்றிருந்தாலும் நம் பரம தகப்பனிடம் திரும்பி வரும்போது அவர் மனம் மகிழ்கிறார் என்பதை கெட்ட குமாரனைப் பற்றிய உவமை காட்டுகிறது. (லூக்கா 15:21, 22, 32) தப்பு செய்தவர்கள் அனைவரும் தம்மை நோக்கி கூப்பிடும்படி யெகோவா அழைக்கிறார், ஏனென்றால் “அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.” (ஏசாயா 55:6, 7) தாவீது அடுத்தடுத்து பெரும் பாவங்களைச் செய்தபோதிலும், அவர் யெகோவாவை நோக்கி கூப்பிட்டார்; “தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்” என ஜெபித்தார். “அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன்; அவர் [யெகோவா] என் சத்தத்தைக் கேட்பார்” என்றும் அவர் கூறினார். (சங்கீதம் 55:1, 17) எவ்வளவாய் நம்பிக்கையூட்டுகிறது!
19. பதிலளிக்கப்படாதது போல தோன்றுகிற ஜெபங்கள் கடவுளுடைய அங்கீகாரம் இல்லாததற்கு அத்தாட்சி என்ற முடிவுக்கு நாம் ஏன் வரக்கூடாது?
19 நம்முடைய விண்ணப்பத்திற்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? அப்படியானால், நம்முடைய ஜெபம் யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாகவும் இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (யோவான் 16:23; 1 யோவான் 5:14) கிறிஸ்தவர்கள் சிலர் ‘தவறான நோக்கத்திற்காக விண்ணப்பம் செய்தபடியால்’ அவர்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படவில்லை என சீஷனாகிய யாக்கோபு குறிப்பிட்டார். (யாக்கோபு 4:3, NW) மறுபட்சத்தில், நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படாதது போல தோன்றினால், கடவுளுடைய அங்கீகாரம் இல்லாததற்கு அது ஒரு அத்தாட்சி என்ற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக் கூடாது. அவருடைய பதில் நமக்குத் தெளிவாக தெரிவதற்கு முன்பு, ஒரு விஷயத்திற்காக கொஞ்ச காலத்திற்கு நாம் தொடர்ந்து ஜெபிப்பதை கடவுள் சிலசமயங்களில் அனுமதிக்கலாம். “[தொடர்ந்து,” NW] கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என இயேசு கூறினார். (மத்தேயு 7:7) ஆகவே, நாம் “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திரு”ப்பது அவசியம்.—ரோமர் 12:12.
தவறாமல் ஜெபம் பண்ணுங்கள்
20, 21. (அ) இந்தக் ‘கடைசி நாட்களில்’ நாம் ஏன் இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும்? (ஆ) நாம் அன்றாடம் யெகோவாவின் கிருபாசனத்தண்டையில் சேரும்போது எதைப் பெற்றுக்கொள்வோம்?
20 ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களாகிய கடைசி நாட்களில்’ அழுத்தங்களும் பிரச்சினைகளும் பெருகிக்கொண்டே வருகின்றன. (2 தீமோத்தேயு 3:1, NW) சோதனைகள் சுலபமாக நம்முடைய மனதை ஆக்கிரமித்துவிடலாம். ஆனால் பிரச்சினைகளும் சபலங்களும் மனச்சோர்வுகளும் சதா நம்மை தாக்கிக்கொண்டிருந்தாலும், நாம் இடைவிடாமல் ஜெபிப்பது நமது வாழ்க்கையை ஆன்மீக பாதையில் செலுத்த உதவி செய்யும். அன்றாடம் ஜெபம் பண்ணுவது நமக்குத் தேவைப்படும் இன்றியமையாத உதவியை அளிக்கும்.
21 ‘ஜெபத்தைக் கேட்கிறவராகிய’ யெகோவா நம் ஜெபங்களுக்கு செவிசாய்க்க நேரமில்லாத அளவுக்கு அதிக வேலையாக ஒருபோதும் இல்லை. (சங்கீதம் 65:2) அதைப்போல, நாமும் அவரிடம் பேசுவதற்கு நேரமில்லாத அளவுக்கு அதிக வேலையாக இருந்துவிடாதிருப்போமாக. கடவுளுடன் கொண்டுள்ள நட்புதான் நம் உடைமைகளிலேயே மிக அருமையான உடைமையாகும். அதை நாம் ஒருபோதும் ஏனோதானோவென எடுத்துக் கொள்ளாதிருப்போமாக. “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”—எபிரெயர் 4:16.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• ஜெபத்தின் மதிப்பைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
• யெகோவாவுடன் நமது நட்பை எவ்வாறு பலப்படுத்தலாம்?
• நாம் ஏன் இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும்?
• லாயக்கற்றவர்கள் என்ற உணர்வு யெகோவாவிடம் ஜெபிப்பதிலிருந்து நம்மை தடைசெய்ய ஏன் அனுமதிக்கக் கூடாது?
[பக்கம் 16-ன் படம்]
அரசனிடம் பேசுவதற்கு முன்பு நெகேமியா மௌனமாக சுருக்கமான ஜெபம் செய்தார்
[பக்கம் 17-ன் படம்]
அன்னாள் “கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம் பண்”ணினாள்
[பக்கம் 18-ன் படங்கள்]
இயேசு தமது 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இரா முழுவதும் ஜெபித்தார்
[பக்கம் 20-ன் படங்கள்]
ஜெபிப்பதற்கான வாய்ப்புகள் நாள்முழுதும் கிடைக்கின்றன