அழியாதிருக்க ஸ்பானிய மொழி பைபிளின் போராட்டம்
அக்டோபரில் ஒரு நாள், 1559-ல் சுமார் 2,00,000 ஸ்பானிய கத்தோலிக்கர்கள் வட பகுதியிலிருந்த நகரமாகிய வல்லடோலிட்டுக்குத் திரண்டு வந்தனர். “இரண்டு பலியாட்கள் உயிரோடு எரிக்கப்படவும், பத்து பேர் குரல்வளை நெரிக்கப்படவும்” இருந்ததே கவர்ந்திழுத்த நிகழ்ச்சியாக இருந்தது. அவர்கள் “திருச்சபைக்கு முரணான கோட்பாடுடையவர்”களாக இருந்தனர்.
பிரபல இளம் அரசன் இரண்டாம் பிலிப்புதானே இந்நிகழ்ச்சிக்குத் தலைமைத்தாங்கினார். குற்றவாளி என முடிவு செய்யப்பட்டிருந்த ஒரு மனிதன் இரக்கத்துக்காக முறையிட்ட போது, அரசன் இவ்வாறு சொன்னான்: “என் சொந்த மகனே உன்னைப் போன்று ஒரு பாதகனாக இருந்தால், அவனை எரிக்க நானே விறகு கட்டைகளை சுமந்துவந்திருப்பேன்.” அந்தத் துர்அதிர்ஷ்டசாலியான பலியாள் செய்த குற்றம் என்ன? அவன் வெறுமென பைபிளை வாசித்துக்கொண்டிருந்தான்.
அந்தச் சமயத்தில், கத்தோலிக்க சமய தீர்ப்பு மன்றத்தின் அமைப்பு செவைலிலுள்ள அண்டலூஷியன் நகரில் சுறுசுறுப்பாய் இருந்தது. அங்கே, சான் இஸிட்ரோ டெல் கேம்போவில் துறவிமடத்தில் துறவிகளின் ஒரு குழு அப்போதுதானே ஸ்பானிய மொழியில் இரகசியமாக பைபிள்களை பெற்றுக்கொண்டிருந்தது. தகவல் தெரிந்தவர்கள் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார்களா? தங்கள் உயிர் ஆபத்திலிருப்பதை உணர்ந்த சிலர் நாட்டை விட்டே ஓடிவிட்டனர். ஆனால் அங்கேயே தங்கிவிட்டிருந்த 40 பேர் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக, கழுமரத்தில் எரிக்கப்பட்டனர். இவர்களில் அந்த நாட்டிற்குள் பைபிள்களைக் கடத்திக்கொண்டு வந்த மனிதனும் இருந்தார். பதினாறாவது நூற்றாண்டு ஸ்பெய்ன், பைபிள் வாசகர்களுக்கு மிக ஆபத்தான ஓரிடமாக இருந்தது—ஒரு சிலர் மாத்திரமே கத்தோலிக்க சமய தீர்ப்பு மன்றத்தின் இரக்கமற்ற பிடியில் மாட்டாமல் தப்பினர்.
கத்தோலிக்க சமய தீர்ப்பு மன்றத்திலிருந்து தப்பிய ஒரு சிலரில் ஒருவர் முன்னாள் துறவியான கஸியோடோரோ டி ரேனா (c. 1520-94). அவர் லண்டனுக்கு ஓடிப்போனார், ஆனால் அங்கும்கூட ஒரு பாதுகாப்பான இடத்தை அவரால் கண்டடைய முடியவில்லை. கத்தோலிக்க சமய தீர்ப்பு மன்றம், அவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு சன்மானம் கொடுக்க முன்வந்தது. இங்கிலாந்து நாட்டு நீதிமன்றத்துக்கு ஸ்பானிய தூதுவராக சேவித்தவர், எப்படியாவது ஸ்பானிய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிராந்தியத்திற்குள் அவரை வருவிக்க சதி ஆலோசனை செய்தார். விரைவில், அவர் மீது பொய்யாய் சுமத்தப்பட்ட வேசித்தனம் மற்றும் ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டுகள் இங்கிலாந்தைவிட்டு புறப்பட அவரை வற்புறுத்தியது.
தேவைக்குப் பற்றாத வள ஆதாரங்களோடு, வளர்ந்துகொண்டிருந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டியிருந்த காரணத்தால், அவர் முதலில் ஃபிராங்ஃபர்ட்டில் தஞ்சம் புகுந்தார். பின்னால், மதசம்பந்தமான புகலிடத்தை நாடியது அவரை ஃபிரான்சு, ஆலந்து மற்றும் கடைசியாக சுவிட்சர்லாந்துக்கு வழிநடத்தியது. என்றபோதிலும் இந்த எல்லா சமயங்களிலும் அவர் சுறுசுறுப்பாய் தன்னை வைத்துக்கொண்டார். ‘நோய்வாய்ப்பட்டிருந்தபோது அல்லது பயணப்பட்டுக்கொண்டிருந்த சமயங்களைத் தவிர, . . . என் வேலையை நான் நிறுத்திவிடவில்லை,’ என்று அவர் விளக்குகிறார். அவர் பைபிளை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்க பல வருடங்களை செலவிட்டார். ரேனாவின் 2,600 பைபிள் பிரதிகள் அச்சடிக்கப்படுவது கடைசியாக சுவிட்சர்லாந்தில் 1568-ல் ஆரம்பமாகி அது 1569-ல் முடிக்கப்பட்டது. ரேனாவின் மொழிபெயர்ப்பின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், கடவுளுடைய தனிப்பட்ட பெயரான நான்கு எபிரெய எழுத்துக்களான, திருநான்கெழுத்துக்கு செனர் என்பதற்கு பதிலாக ஈகோவா (ஜெகோவா) என்று அவர் பயன்படுத்தியிருப்பதாகும்.
ஸ்பானிய பைபிள் உருவாகிறது
அச்சாலையின் கண்டுபிடிப்பு காரணமாக ஐரோப்பாவில் பைபிள்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்த சமயத்தில், ஸ்பெய்னில் அது அரிதாக இருந்தது புரியா புதிராக இருந்தது. எப்போதும் அது இவ்வாறு இருந்தது கிடையாது. பல நூற்றாண்டுகளாக பைபிள் ஸ்பெய்னின் மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்ட புத்தகமாக இருந்தது. கையால் எழுதப்பட்ட பிரதிகள் லத்தீனிலும், சில நூற்றாண்டுகளாக அது கிழக்கு ஜெர்மானிய இனமொழியிலும்கூட கிடைப்பதாய் இருந்தது. வரலாற்றின் இடைநிலைக்காலத்தில், “ஜெர்மனியிலோ அல்லது இங்கிலாந்திலோ இருந்ததை விட, ஸ்பெய்னில் அகத்தூண்டுதலுக்கும் அதிகாரத்துக்கும் ஊற்றுமூலமாக, விசுவாசத்துக்கும் நடத்தைக்கும் ஒரு தராதரமாக பைபிள் முதன்மை வாய்ந்ததாக இருந்தது,” என்பதாக ஒரு சரித்திராசிரியர் விளக்கினார். பல்வேறு பைபிள் சரித்திரங்கள், சங்கீதங்கள், சொல்லகராதிகள், நன்னெறி கதைகள் மற்றும் இது போன்ற படைப்புகள் அக்காலத்தில் மிகச் சிறந்த விற்பனைக் கண்ட நூல்களாக இருந்தன. பயிற்சி பெற்ற நகல்எடுப்பவர்கள் மிக நேர்த்தியான பைபிள் கைப்பிரதிகளை மிக கவனமாக உருவாக்கினர். ஒரே ஒரு முதல்-தரமான கையெழுத்துப் பிரதியை உண்டுபண்ண 20 வேதபாரகருக்கு ஒரு வருட காலம் எடுத்த போதிலும், அநேக லத்தீன் பைபிள்களும் லத்தீன் பைபிள் பேரில் ஆயிரக்கணக்கான விளக்கவுரைகளும் 15-ம் நூற்றாண்டுக்குள் ஸ்பெய்னில் புழக்கத்தில் இருந்தன.
மேலுமாக, ஸ்பானிய மொழி வளர ஆரம்பித்த போது, பைபிளை பிராந்திய மொழியில் கொண்டிருப்பதற்கு அக்கறை ஏற்பட்டது. 12-ம் நூற்றாண்டிலேயே, பைபிள் பொது மக்கள் பேசிய பண்டைய ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
குறுகிய காலம் நீடித்த விழிப்புணர்வு
ஆனால் விழிப்புணர்வு நீடித்திருக்கவில்லை. கால்வின், வைக்கிளிப் மற்றும் ஜான் ஹஸ் போன்ற தீவிர சமய சீர்திருத்தவாதிகளைப் பின்பற்றியவர்கள் தங்கள் விசுவாசத்துக்கு விளக்கமளிக்க வேதாகமத்தைப் பயன்படுத்திய போது பிரதிபலிப்பு தாமதமின்றியும் கடுமையாகவும் இருந்தது. கத்தோலிக்க அதிகாரிகள், பைபிள் வாசிப்பை சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தனர், பொது மக்களின் மொழியில் புதிதாகத் தோன்றிய மொழிபெயர்ப்புகள் நேரடியாக கண்டனம் செய்யப்பட்டன.
டெளலோஸின் (ஃபிரான்சு) கத்தோலிக்க குழு, 1229-ல் கூடிய போது பின்வருமாறு அறிவித்தது: “பொதுமக்களின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பழைய அல்லது புதிய ஏற்பாடுகளை பாமர மக்கள் எவரும் வைத்திருப்பதை நாங்கள் தடைசெய்கிறோம். பக்தியுள்ள எவராவது விரும்பினால், அவர் சங்கீத புத்தகத்தை அல்லது பாடல்கள் மற்றும் ஜெபங்கள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொள்ளலாம். . . . ஆனால் எந்தச் சூழ்நிலைமையின் கீழும் அவர் மேல் சொல்லப்பட்ட புத்தகங்களின் பண்டைய ஸ்பானிய மொழிபெயர்ப்புகளை வைத்திருக்கக்கூடாது.” நான்கு வருடங்களுக்குப் பிறகு, அரகானின் ஒன்றாம் ஜேம்ஸ் (தீவகற்பத்தின் பெரும் பகுதியின் மீது ஆட்சி செய்த அரசர்) பைபிள்களை வைத்திருந்தவர்கள் அவை எரிக்கப்படுவதற்காக உள்ளூர் ஆயரிடம் அவைகளை ஒப்படைக்க எட்டே நாட்களை கொடுத்தார். அவ்விதமாகச் செய்ய தவறுகிறவர், பாதிரியாக இருந்தாலும் சரி அல்லது பாமரனாக இருந்தாலும் சரி, முரண் சமய கருத்தை ஆதரிப்பவராக சந்தேகிக்கப்படுவார்.
எப்பொழுதும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படாத இந்தத் தடைகளின் மத்தியிலும் வரலாற்றின் இடைநிலைக்காலப் பகுதியின் பிற்பகுதியில், ஸ்பானிய நாட்டவரில் சிலரால் பண்டைய ஸ்பானிய மொழியில் பைபிள் வைத்திருந்ததைக் குறித்து பெருமையடித்துக்கொள்ள முடிந்தது. இது இளவரசி இசபெல்லா மற்றும் அரசன் ஃபர்டினாண்டின் கீழ் 1478-ல் ஸ்பானிய கத்தோலிக்க சமய தீர்ப்பு மன்றம் நிறுவப்பட்ட போது எதிர்பாரா முடிவுக்கு வந்தது. 1492-ல் சல்மான்கா நகரில் மட்டுமே, 20 விலையேறப்பெற்ற பைபிள் கையெழுத்துப் பிரதிகள் எரிக்கப்பட்டன. பண்டைய ஸ்பானிய மொழி கையெழுத்துப் பிரதிகளில் அழியாது தப்பியவை அரசனின் சொந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருந்த ஒரு சில உயர்குடி மக்கள் வைத்திருந்ததுமே ஆகும்.
அடுத்த இருநூறு ஆண்டுகள், லத்தீன் வல்கேட் தவிர ஸ்பெய்னில் பிரசுரிக்கப்பட்ட ஒரே அதிகாரப்பூர்வமான கத்தோலிக்க பைபிள் கார்டினல் சிஸ்நரோஸ் பொறுப்பேற்றிருந்த முதல் பன்மொழி பைபிளான கம்ப்லூட்டென்சியன் பன்மொழி பைபிளாகும். அது நிச்சயமாகவே ஓர் இலக்கிய படைப்பாக இருந்தது, ஆனால் சராசரி மனிதனுக்குரியதாக இல்லை. 600 பிரதிகள் மாத்திரமே எடுக்கப்பட்டன, ஒரு சிலரே புரிந்துகொள்ள முடிந்தது, ஏனென்றால் அது பைபிள் வாசகத்தை எபிரெயு, அராமிக், கிரேக்கு மற்றும் லத்தீனில் கொண்டிருந்தது—ஸ்பானிய மொழியில் இல்லை. மேலுமாக விலை மிக அதிகமாக இருந்தது. (சாதாரணமான தொழிலாளியின் ஆறு மாத ஊதியத்துக்குச் சமமான விலையாக) அது மூன்று தங்க டூக்கட்களாக இருந்தது.
ஸ்பானிய பைபிள் தலைமறைவாகிறது
டின்டேலைப் போன்ற ஒரு ஸ்பானிய நாட்டவர் 16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றினார், அவருடைய பெயர் ஃபிரான்சிஸ்கோ டி என்சினாஸ். செல்வந்த ஸ்பானிய நிலக்கிழாரின் மகனான இவர், ஒரு மாணவனாக இருந்தபோதே கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். பின்னர், மொழிபெயர்ப்பை நெதர்லாந்தில் அச்சு செய்து, 1544-ல் ஸ்பெய்னில் அது விநியோகிக்கப்படுவதற்கு மன்னரின் அனுமதி பெற தளரா ஊக்கத்தோடு முயற்சி செய்தார். ஸ்பெய்னின் மன்னர் முதலாம் சார்லஸ் அந்தச் சமயம் ப்ரஸல்ஸ்-ல் இருந்தார், என்சினாஸ் இத்திட்டத்திற்கு மன்னர் ஒப்புதலைக் கோர இச்சந்தர்ப்பத்தை அனுகூலப்படுத்திக்கொண்டார்.
இரண்டு மனிதருக்குமிடையே நிகழ்ந்த சம்பாஷணை பின்வருமாறு இருந்ததாகச் சொல்லப்படுகிறது: “இது எப்படிப்பட்ட ஒரு புத்தகம்?” என்று மன்னர் கேட்டார். என்சினாஸ், “புதிய ஏற்பாடு என்றழைக்கப்படும் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதியாகும்,” என்று பதிலளித்தார். “இப்புத்தகத்தின் ஆசிரியர் யார்?” என்று அவர் கேட்கப்பட்டார். “பரிசுத்த ஆவி,” என்று அவர் பதிலளித்தார்.
மன்னர் பிரசுரத்துக்கு ஒரே ஒரு நிபந்தனையோடு உரிமை வழங்கினார்—மன்னரின் பாவ அறிக்கையை கேட்டு அவருக்கு ஆலோசனை வழங்கும் ஒரு ஸ்பானிய துறவி தன் ஒப்புதல் முத்திரையை தர வேண்டும். துர்அதிர்ஷ்டவசமாக என்சினாஸுக்கு இந்த ஒப்புதல் வருவதாக தெரியவில்லை, விரைவில் அவர் கத்தோலிக்க சமய தீர்ப்பு மன்றத்தினால் கைதுசெய்யப்பட்டார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தப்பிஓடினார்.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்பு, இந்த மொழிபெயர்ப்பின் திருத்திய பதிப்பு இத்தாலியிலுள்ள வெனீஸில் அச்சுசெய்யப்பட்டது. வேதாகமத்தின் இந்தப் பதிப்பைத்தானே ஜூலியன் ஹெர்னான்டஸ் ஸ்பெய்னிலுள்ள செவைலுக்கு இரகசியமாக எடுத்துச்சென்றார். ஆனால் அவர் பிடிபட்டார், இரண்டு ஆண்டு கால சித்திரவதைக்கும் சிறைவாசத்துக்கும் பிறகு, அவர் மற்ற உடன் பைபிள் மாணாக்கர்களோடு சேர்ந்து தூக்கிலிடப்பட்டார்.a
டிரண்ட் கவுன்சில் சபையில் (1545-63), கத்தோலிக்க சர்ச் பிராந்திய மொழிகளில் பைபிள் மொழிபெயர்ப்புகளை கண்டனம் செய்வதை வலியுறுத்திக் கூறியது. சர்ச்சின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டிருந்த அந்த எல்லா பைபிள் மொழிபெயர்ப்புகளும் உட்பட, அது தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் ஓர் அட்டவணையைப் பிரசுரித்தது. நடைமுறை வழக்கத்தில் அனைத்து ஸ்பானிய பிராந்திய மொழி பைபிள்களும் தடைசெய்யப்பட்டிருப்பதையும் ஒன்றை வைத்திருப்பதுதானே அந்த நபர் கொல்லப்படுவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்படுவதில் முடிவடையலாம் என்பதையும் அர்த்தப்படுத்தியது.
ரேனாவின் மொழிபெயர்ப்பு பிரசுரிக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகளான பின், செவைலில் கத்தோலிக்க சமய தீர்ப்பு மன்றத்தின் கோபத்திலிருந்து தப்பிய மற்றொரு முன்னாள் துறவி சிப்ரியானோ டி வேலரா அதை திருத்தினார். இந்த மொழிபெயர்ப்பு பொ.ச. 1602-ல் அம்ஸ்டர்டாமில் அச்சுசெய்யப்பட்டது, ஒரு சில பிரதிகள் ஸ்பெய்னுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அதன் மூல மற்றும் திருத்திய மொழிபெயர்ப்புகளில், ரேனா-வேலரா பைபிளே, ஸ்பானிய மொழி பேசும் புராட்டஸ்டன்டுகள் மத்தியில் அதிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பைபிளாகும்.
மதகுகள் திறக்கப்படுகின்றன
கடைசியாக, 1782-ல் கத்தோலிக்க சமய தீர்ப்பு மன்றத்தின் தீர்ப்பாயம் பைபிளானது சரித்திரம் மற்றும் சமயக் கொள்கை ஆகியவற்றின் பேரில் குறிப்புரைகளைக் கொண்டிருக்கும் வரையில் அது பிரசுரிக்கப்படலாம் என்று ஆணை பிறப்பித்தது. 1790-ல் செகோவியாவின் கத்தோலிக்க ஆயர் ஃபெலிப் சியோ டி சான் மைக்குவல், லத்தீன் வல்கேட்-ஐ பயன்படுத்தி பைபிளை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். துர்அதிர்ஷ்டவசமாக, அது மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தது—1,300 ரீல்ஸ், அந்தச் சமயத்தில் மிக அதிகமான ஒரு விலை—வார்த்தைகள் அவ்வளவு தெளிவில்லாமல் இருந்த காரணத்தால் ஸ்பானிய சரித்திராசிரியர் ஒருவர் அதை, “மிகவும் துர்அதிர்ஷ்டம்,” என்று விவரித்தார்.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பானிய மன்னர் ஏழாம் ஃபெர்னான்டோ அஸ்டோர்காவின் ஆயர் ஃபெலிக்ஸ் டாரஸ் அமாட்டை லத்தீன் வல்கேட்-ன் அடிப்படையில் ஒரு மேம்பட்ட மொழிபெயர்ப்பை செய்யுமாறு கட்டளையிட்டார். இந்த மொழிபெயர்ப்பு 1823-ல் வந்தது, சியோவின் மொழிபெயர்ப்பை விட இது அதிகமாக விநியோகம் பெற்றது. என்றபோதிலும், அது மூல எபிரெயு மற்றும் கிரேக்கின் அடிப்படையில் இல்லாத காரணத்தால், ஒரு மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பினுடைய பொதுவான குறைபாடுகளைக் கொண்டிருந்தது.
இந்த முன்னேற்றத்தின் மத்தியிலும், சர்ச்சும் தேசத்தின் மன்னர்களும், வேதாகமம் சாதாரண மக்களால் வாசிக்கப்பட வேண்டும் என்பதாக நம்பவில்லை. பிரிட்டிஷ் மற்றும் அயல்நாட்டு பைபிள் சங்கத்தின் ஒரு பிரதிநிதியான ஜார்ஜ் பாரோ ஸ்பானிய மொழியில் பைபிளை அச்சுசெய்ய 1830-ல் அனுமதி கேட்ட போது, அரசாங்க அமைச்சர் மென்டிஸபால் இவ்வாறு சொன்னார்: “என் நண்பரே, நமக்கு வேண்டியது பைபிள்கள் அல்ல, ஆனால் கலகக்காரரை அடக்க துப்பாக்கிகளும் வெடிமருந்துகளுமே, எல்லாவற்றுக்கும் மேலாக, படைப்பிரிவுகளுக்கு சம்பளம் கொடுக்க பணமே.” பாரோ லூக்கா சுவிசேஷத்தை ஸ்பானிய நாடோடிகளின் மொழியில் மொழிபெயர்த்தார், 1837-ல் அவருடைய முயற்சிகளுக்காக அவர் சிறையிலிடப்பட்டார்!
கடைசியாக, இனிமேலும் இதை கட்டுப்படுத்தமுடியவில்லை. 1944-ல் ஸ்பானிய சர்ச், மூல மொழிகளை ஆதாரமாகக் கொண்ட அதனுடைய முதல் மொழிபெயர்ப்பை அச்சுசெய்தது—கஸியோடோரோ டி ரேனாவின் மொழிபெயர்ப்புக்குப் பிறகு சுமார் 375 வருடங்களுக்குப் பின். இது கத்தோலிக்க பண்டிதர்களான நாகர் மற்றும் கோலுங்காவின் மொழிபெயர்ப்பாகும். 1947-ல் இதை போவர் மற்றும் கேன்டராவின் மொழிபெயர்ப்பு பின்தொடர்ந்தது. அப்போது முதற்கொண்டு ஸ்பானிய பைபிள் மொழிபெயர்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.
வெற்றி உறுதி
ஸ்பானிய பைபிள் அழியாதிருக்க பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருந்தாலும், போராட்டம் கடைசியாக வெற்றிபெற்றுவிட்டது. ரேனா போன்ற துணிச்சல்மிகுந்த மொழிபெயர்ப்பாளர்களின் தியாகங்கள் நிச்சயமாகவே வீணாகிவிடவில்லை. இன்று பைபிளை வாங்கச் செல்லும் எத்தனை பேர் பைபிளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டிருந்த காலத்தைப் பற்றி யோசிக்கிறார்கள்?
இன்று, ஸ்பெய்னிலும், ஸ்பானிய மொழி பேசும் தேசங்களிலும் பைபிள் மிகச்சிறந்த விற்பனைப் புத்தகமாக இருக்கிறது, அநேக மொழிபெயர்ப்புகளும் இருக்கின்றன. இவைகளில், கடவுளுடைய பெயரான ஜெஹோவா-ஐ மாறாமல் பயன்படுத்தும் வெர்ஷன் மார்டனா (நவீன மொழிபெயர்ப்பு, 1893); எபிரெய வேதாகமத்தில் யாவே என்ற பெயரை பயன்படுத்தும் பைபிளின் பாலீன் பதிப்பு (1964); துர்அதிர்ஷ்டவசமாக ஜெஹோவா-ஐ அல்லது யாவே-ஐ பயன்படுத்தாத நியுவா பிப்ளியா எஸ்பனோலா (புதிய ஸ்பானிய பைபிள், 1975); உவாட்ச் டவர் சங்கத்தால் வெளியிடப்பட்ட ஜெஹோவா என்ற பெயரை பயன்படுத்தும் ட்ராடுக்கன் டெல் நியுவோ முன்டோ (புதிய உலக மொழிபெயர்ப்பு, 1967); அடங்கும்.
யெகோவாவின் சாட்சிகள், மரிப்பதற்கு தகுதியுள்ளதாயும், அதன்படி வாழ்வது பிரயோஜனமாயிருப்பதாயும் காணும் அந்தப் பரிசுத்த வேதாகமத்தின் மதிப்பை இலட்சக்கணக்கான ஸ்பானிய மொழி பேசும் மக்கள் போற்றுவதற்கு அவர்களுக்கு உதவிசெய்ய ஒவ்வொரு வாரமும் அவர்களைச் சந்திக்கிறார்கள். உண்மையில், அழியாதிருக்க ஸ்பானிய மொழி பைபிளின் போராட்டம், “தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்,” என்பதற்கு மேலுமான ஓர் அத்தாட்சியாக இருக்கிறது.—ஏசாயா 40:8.
[அடிக்குறிப்புகள்]
a அந்தச் சமயத்தில் எந்த ஒரு புத்தகமுமே விசேஷித்த உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட முடியாது, புனித சமய தீர்ப்பு மன்றத்தின் அதிகாரப்பூர்வமான அனுமதியின்றி எந்தப் புத்தக சரக்கும் எந்த ஒரு நூலகராலும் திறக்கப்படக்கூடாது.
[பக்கம் 10-ன் படம்]
கம்ப்லூட்டென்சியன் பன்மொழி பைபிள் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது, ஆகவே அவை உடனடியாக ஆராயப்பட முடியும். (பக்கம் 8 பார்க்கவும்)
[படத்திற்கான நன்றி]
Courtesy of the Biblioteca Nacional, Madrid, Spain