ஸ்பானிய பைபிள் ஒன்றிற்காக காஸியோடோரோ டி ரேனாவின் போராட்டம்
பதினோறாம் நூற்றாண்டில், பைபிளைப் படிப்பதற்கு ஸ்பெய்ன் ஓர் ஆபத்தான இடமாக இருந்தது. கத்தோலிக்க சர்ச், மிக லேசாக எரிகிற வைதீகமற்ற எந்தச் சுடரையும் அணைத்துவிடும்படி கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைக்கு போதித்திருந்தது. ஆனால் தென் ஸ்பெய்னில் இருந்த ஓர் இளைஞர், வேதாகமத்தைத் தான் வாசித்தது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு ஸ்பானியனும் வாசிப்பதற்காக அதைப் பிராந்தியமொழியில் மொழிபெயர்ப்பதாக உறுதி எடுத்தார். அவருடைய பெயர் காஸியோடோரோ டி ரேனா.
ஸ்பெய்னில் உள்ள செவைலின் எல்லைப்புறத்தில் இருக்கும் சான் இஸிட்ரோ டெல் கேம்போவின் துறவிமடத்தில் ரேனா செலவிட்ட வருடங்களின்போது பைபிளின் பேரிலுள்ள அவரது அக்கறை தூண்டப்பட்டது. 1550-களில், இந்த அசாதாரணமான துறவிமடத்திலிருந்த துறவிகளில் பெரும்பான்மையினர், திருச்சபை சட்டத்தைச் சார்ந்த தங்கள் கடமைகளைச் செய்வதைக்காட்டிலும் வேதாகமம் வாசிப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்டனர். பைபிளின் செய்தி அவர்களுடைய சிந்தனையை மாற்றியது. சொரூபங்களுடைய உபயோகத்தையும், உத்தரிக்கும் ஸ்தலத்தின் பேரிலுள்ள நம்பிக்கையையும் குறித்த கத்தோலிக்க கோட்பாட்டையும் அவர்கள் நிராகரித்தனர். தவிர்க்க முடியாதபடி, அவர்களுடைய கருத்துக்கள் அந்த வட்டாரத்தில் அறியப்படலாயிற்று, ஆகவே ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணையினால் கைது செய்யப்படுவதைக் குறித்து பயந்து, வெளிநாட்டிற்கு தப்பியோட அவர்கள் முடிவு செய்தனர். ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள ஜெனீவாவிற்கு தப்பிச்செல்வதில் வெற்றியடைந்த 12 பேரில் ரேனாவும் ஒருவர்.
மயிரிழையில் உயிர்தப்பிய பிறகு, அவர் ஓர் ஐரோப்பிய நகரத்திலிருந்து இன்னொன்றுக்கு பயணம் செய்தார், எப்படியோ தன்னைத் துன்புறுத்துகிறவர்களிடம் அகப்படாமல் எப்போதுமே தப்பித்துக்கொண்டு வந்தார். 1562-ல், ஏமாற்றமடைந்த ஒடுக்குமுறை விசாரணையாளர்கள் அவரது கொடும்பாவியை செவைலில் எரித்தனர், ஆனால் அந்தக் குரூரமான அச்சுறுத்தலும்கூட வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலையிலிருந்து ரேனாவை பின்வாங்கச் செய்யவில்லை. அவரைப் பிடித்துக்கொடுப்போருக்கு சன்மானம் அளிப்பதாக அவரைத் துன்புறுத்துகிறவர்கள் அறிவித்தபோதிலும், கைது செய்யப்படுவதைக் குறித்த பயத்தில் தொடர்ந்து வாழ்ந்துவந்த போதிலும், தன் ஸ்பானிய மொழிபெயர்ப்பிற்காக அவர் இடைவிடாமல் உழைத்தார். “நான் வியாதியாயிருந்த சமயங்களையோ பயணம் செய்த சமயங்களையோ தவிர, . . . மற்ற எந்தச் சமயத்திலும் பேனாவைக் கீழே வைக்கவேயில்லை,” என்பதாக அவர் விளக்கினார்.
பத்து வருடங்களுக்குள்ளாக ரேனா மொழிபெயர்ப்பை முடித்தார். 1569-ல், அவர் மொழிபெயர்த்த முழு பைபிளும் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள பாஸ்லேயில் பிரசுரிக்கப்பட்டது. இந்தத் தலைசிறந்த படைப்பு, மூல மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட முதல் முழு ஸ்பானிய மொழிபெயர்ப்பாகும். பல நூற்றாண்டுகளாக லத்தீன் பைபிள்கள் கிடைத்து வந்தன, ஆனால் லத்தீன் உயர்ந்தோரின் மொழியாக இருந்தது. பைபிள் எல்லாராலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதாக ரேனா நம்பினார், ஆகவே அந்த இலக்கின் முன்னேற்றத்திற்காக தன் உயிரைப் பணயம் வைத்தார்.
அவருடைய மொழிபெயர்ப்பின் முன்னுரையில், காரணங்களை விளக்கினார். “பரிசுத்த வேதாகமத்தைப் பொது மொழியில் தடைசெய்வது, கடவுளுக்கு மிகப் பெரிய அவமதிப்பையும், மனித நலவாழ்வுக்குத் தீங்கையும் நிச்சயமாகவே கொண்டுவருகிறது. இது சந்தேகமின்றி சாத்தானுடைய மற்றும் அவன் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்களுடைய வேலையாய் இருக்கிறது. . . . கடவுள் தம்முடைய வார்த்தையை மனிதர்களுக்குக் கொடுத்து, அது எல்லாராலும் புரிந்துகொள்ளப்படவும் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்கப்படவும் விரும்பினார் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, எந்த மொழியிலாவது அதைத் தடைசெய்யும் எவருக்கும் நல்ல உள்நோக்கம் இருக்க முடியாது.”
ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணையின் தடைசெய்யப்பட்ட புத்தகப்பட்டியல், “காஸ்டீல் மொழியிலோ [ஸ்பானிஷ்] அல்லது மற்ற ஏதாவது பிராந்திய மொழிகளிலோ உள்ள” பைபிளைக் குறிப்பாக தடைசெய்து வெறும் 18 வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூற்று பிரசுரிக்கப்பட்டதன் காரணமாக இது துணிவுள்ள ஒன்றாக இருந்தது. தெளிவாகவே, மனிதர்களின் பேரிலுள்ள பயம் சத்தியத்தின் பேரிலுள்ள தன் அன்பை அடக்கும்படி ரேனா அனுமதிக்கவில்லை.
ஸ்பானிய மொழி பேசும் எல்லா ஜனங்களும் பைபிளை அடையும்படி செய்வதற்கு ரேனா ஆழ்ந்த விருப்பமுள்ளவராய் இருந்தது மாத்திரமல்லாமல், கூடுமானவரை மிகத் திருத்தமான மொழிபெயர்ப்பைத் தயாரிக்கவும் விரும்பினார். மூல மொழிகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு செய்வதன் அனுகூலங்களை தன் முன்னுரையில் அவர் விவரித்தார். விவிலியத்தின் லத்தீன் மூல வாக்கியத்திற்குள் சில தவறுகள் மெல்ல புகுந்திருப்பதாக ரேனா விளக்கினார். இவற்றில் வேதனை தரும் விதத்தில் மிகப் பகிரங்கமாக இருக்கும் ஒன்று கடவுளுடைய பெயர் நீக்கப்பட்டிருப்பதாகும்.
ஸ்பானிய மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர்
கடவுளுடைய பெயராகிய யெகோவா, மூல வாக்கியங்களில் எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறே நேர்மையான எந்தப் பைபிள் மொழிபெயர்ப்பிலும் தோன்ற வேண்டும் என்பதாக ரேனா உணர்ந்தார். கடவுளுடைய பெயரை “தேவன்” அல்லது “கர்த்தர்” என்பதைப் போன்ற பட்டப்பெயர்களால் மாற்றீடு செய்யும் வழக்கத்தைப் பின்பற்ற அவர் மறுத்தார். தன் மொழிபெயர்ப்பின் முகவுரையில் காரணங்களை மிகத் தெளிவாக விளக்கினார்.
“மிக முக்கியமான காரணங்களைப் பெற்றிருந்ததன் காரணமாகத்தான் [ஈகோவா (Iehoua)] என்ற பெயரை நாங்கள் பாதுகாத்திருக்கிறோம். முதலாவதாக, எங்கள் மொழிபெயர்ப்பில் எங்கெல்லாம் அது காணப்படுமோ அங்கெல்லாம் எபிரெய வாக்கியங்களிலும் அது காணப்படுகிறது, மேலும் அதை ஒதுக்கித்தள்ளினாலோ அல்லது அதை மாற்றினாலோ, எதுவும் நீக்கப்படவோ அல்லது சேர்க்கப்படவோ கூடாது என்று கட்டளையிடும் கடவுளுடைய சட்டத்திற்கு உண்மையற்ற தன்மையையும் அவபக்தியையும் காண்பிப்போம் என்பதாக நாங்கள் கருதினோம். . . . பிசாசின் செயலான [பெயரை நீக்கிவிடுவதன்] வழக்கம் நவீன ரபீக்களின் ஒரு மூடநம்பிக்கையிலிருந்து ஆரம்பமானது. அவர்கள் அதைப் பயபக்தியுடன் நோக்குவதாக உரிமைபாராட்டினாலும், உண்மையில் அவருடைய பரிசுத்த நாமம் அறியப்படாதபடி அதை மறைத்து இவ்வாறு, எதன்மூலம் மற்ற எல்லா . . . கடவுட்களிலிருந்தும் வேறுபடுத்தப்பட்டவராய் இருக்க கடவுள் விரும்பினாரோ அந்தப் பெயரை கடவுளுடைய ஜனங்கள் மறந்துவிடும்படி செய்திருக்கின்றனர்.”
கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்த வேண்டுமென்ற ரேனாவின் மெச்சத்தக்க விருப்பம் பரந்த செயல் விளைவுகளைக் கொண்டிருந்தது. நம் நாள்வரையாக, பெரும்பான்மையான ஸ்பானிய மொழிபெயர்ப்புகள்—கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் மொழிபெயர்ப்புகளாகிய இரண்டுமே—இந்த முன்னோடியைப் பின்பற்றி, எல்லா இடங்களிலேயும் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன. பிரதானமாய் ரேனாவின் காரணமாக, கிட்டத்தட்ட எந்த விதமான ஸ்பானிய பைபிள் மொழிபெயர்ப்பையும் வாசிப்பவர்கள், மற்ற எல்லா கடவுட்களிலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் ஒரு தனிப்பட்ட பெயர் கடவுளுக்கு இருக்கிறது என்பதை உடனடியாக பகுத்துணர முடியும்.
ரேனாவின் பைபிளினுடைய அட்டைப் பக்கத்தில் யெகோவாவின் பெயர் எபிரெயுவில் தெளிவாகக் காணப்படுகிறது என்ற உண்மை குறிப்பிடத்தக்க ஒன்று. கடவுளுடைய வார்த்தையைப் பாதுகாத்தல் என்ற சிறப்பான காரணத்திற்காக ரேனா தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இவ்வாறு, கோடிக்கணக்கானோர் வாசிக்கும் ஒரு மொழியில் அதைக் கிடைக்கச் செய்திருக்கிறார்.