மூப்பர்களே—பொறுப்புகளை ஒப்படையுங்கள்!
அவர் ஒரு பொறுமையான, தாழ்மையான மனிதர். தன் வாழ்க்கையின் அனுபவங்களால் பக்குவப்படுத்தப்பட்ட கூர்ந்த நியாய உணர்வு உள்ளவர். இப்படியாக, முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் புத்திமதிக்காக நம்பிக்கையோடு அவரை நோக்கினர். அவர்களை ஏமாற்றமடையச் செய்யக்கூடாது என்று அவர் முயற்சி செய்தார். காலையிலிருந்து மாலை வரை அவர் அவர்களுடைய பிரச்னைகளை செவிகொடுத்துக் கேட்டார். கடவுளுடைய சட்டம் அவர்களுடைய சூழ்நிலைக்கு எவ்வாறு பொருந்தியது என்பதைக் காண அவர்களுக்கு பொறுமையோடு உதவி செய்தார். ஆம், 3,500 வருடங்களுக்கு முன்பு, இஸ்ரவேல் ஜனங்களின் 12 கோத்திரங்களை ஒரே மனிதனாகிய மோசே ஒரு குறுகிய காலப்பகுதி வரையாக தனியே நியாயந்தீர்த்தார்.
மோசேயின் மாமனாகிய எத்திரோ கவலைப்பட்டார். இப்படிப்பட்ட பாரத்தை எவ்வாறு மோசே தொடர்ந்து தாங்கி வரமுடியும்? ஆகையால் எத்திரோ அறிவித்தார்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்து போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவரால் அதைச் செய்ய உம்மாலே கூடாது.” (யாத்திராகமம் 18:17, 18) அதற்குத் தீர்வு? மோசே தன் உத்தரவாதங்களில் சிலவற்றை மற்றவர்களிடம் ஒப்படைக்கும்படி எத்திரோ ஆலோசனை கூறினார். (யாத்திராகமம் 18:19-23) நல்ல ஆலோசனை!
கிறிஸ்தவ சபைக்குள் இன்று மோசேயைப் போல் அநேக மூப்பர்கள் தாங்கள் தனியாக செய்துமுடிப்பதற்கு மேல் கூடுதலான காரியங்களை கவனித்துக்கொள்ள முயற்சிசெய்கின்றனர். அவர்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள். அதற்காக அவர்கள் தயாரித்து, பின்னர் நிகழ்ச்சிநிரல் பகுதிகளை ஒழுங்காகவும், திறம்பட்டவிதத்திலும் அளிக்கின்றனர். (1 கொரிந்தியர் 14:26, 33, 40; 1 தீமோத்தேயு 4:13) சபையில் இருக்கும் தனிப்பட்ட அங்கத்தினர்களின் தேவைகளையும்கூட மூப்பர்கள் கவனித்துக் கொள்கின்றனர். (கலாத்தியர் 6:1; 1 தெசலோனிக்கேயர் 5:14; யாக்கோபு 5:14) ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டிய அதிமுக்கியமான வேலையில் அவர்கள் தலைமை தாங்குகின்றனர். (மத்தேயு 24:14; எபிரெயர் 13:7) பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக சபைக்கு பிரசுரங்கள் கிடைக்கச்செய்யவும்கூட அவர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
கூடுதலாக, சில மூப்பர்கள் வட்டார மாநாடுகள், மாவட்ட மாநாடுகளில் நிகழ்ச்சிநிரல் பகுதிகளைக் கையாளுவதற்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மாநாட்டு ஒழுங்கமைப்பிலும், மருத்துவமனை தொடர்பு குழுக்களிலும் சேவை செய்கின்றனர். சிலர் ராஜ்யமன்ற கட்டிட வேலையில் உதவிசெய்கின்றனர். தங்கள் குடும்ப உத்தரவாதங்களோடும், தங்களை ஆவிக்குரியபிரகாரமாய் போஷித்துக்கொள்ள வேண்டிய தேவைகளோடும்கூட இவையனைத்தையும் சேர்த்து செய்கின்றனர். (ஒப்பிடுக: யோசுவா 1:8; சங்கீதம் 110:3; 1 தீமோத்தேயு 3:4, 5; 4:15, 16.) இவையனைத்தையும் இப்படிப்பட்ட கிறிஸ்தவ ஆண்கள் எவ்வாறு செய்து முடிக்கின்றனர்? மோசேயைப் போன்று அவர்களுக்கு உதவி கட்டாயம் தேவை. அவர்கள் உத்தரவாதங்களை ஒப்படைக்க கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில், உத்தரவாதங்களை ஒப்படைக்காத ஒரு நபர் ஒழுங்கமைப்பதில் குறைவுபடுபவராய் இருக்கிறார்.
மற்றவர்களை பயிற்றுவிப்பதன் மதிப்பு
உத்தரவாதத்தை ஒப்படைப்பதற்கு கூடுதலான காரணங்கள் இருக்கின்றன. தாலந்துகளைப் பற்றிய இயேசுவின் உவமையில் எஜமான் தான் நீண்ட பிரயாணமாய் புறப்பட்டு போவதற்கு முன்பு, தன் ஊழியக்காரர்களை அழைத்து வித்தியாசமான அளவுகளையுடைய உத்தரவாதத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். (மத்தேயு 25:14, 15) அவ்வாறு செய்வதன் மூலம், அந்த எஜமான் அநேக காரியங்களை சாதித்தார். முதலாவது, அவர் புறத்தேசத்துக்குப் போயிருந்தபோது, அவருடைய ஊழியர்கள் அவருடைய ஸ்தானத்தில் வேலை செய்தனர். அவர் சென்றிருந்த சமயம் அவசியமான வேலைகள் செய்யப்படாமல் மெதுவாக நின்றுவிடவில்லை. இரண்டாவது, சொற்களைக் காட்டிலும் செயல்கள் அதிக சப்தமாக பேசுவதால், எஜமான் தன் ஊழியக்காரரின் திறமைகளையும், அவர்களின் உண்மைத்தன்மைகளையும் கவனிக்க முடிந்தது. மூன்றாவது, அதிகமாக தேவைப்படும் அனுபவத்தை பெறுவதற்கு எஜமான் தன் ஊழியக்காரருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தார்.
இந்த உவமை இன்று நமக்கு அர்த்தமுடையதாய் இருக்கிறது. இயேசு பூமியை விட்டுச் சென்றபோது, அவர் தம் அபிஷேகம்பண்ணப்பட்ட சீஷர்களிடம் உத்தரவாதத்தை ஒப்படைத்தார். இப்படிப்பட்டவர்களில் மீந்திருப்பவர்கள் உலகளாவிய ராஜ்ய அக்கறைகளுக்கு இன்னும் உத்தரவாதமுள்ளவர்களாய் இருக்கின்றனர். (லூக்கா 12:42) அபிஷேகம்பண்ணப்பட்டவர்களின் நவீன-நாளைய கண்காணிப்பின் கீழ், யெகோவாவின் ஆசீர்வாதம் அவருடைய அமைப்பின் மீது தெளிவாக இருக்கிறது. இதன் விளைவாக, இது ஆச்சரியப்படும்விதத்தில் அதிகரித்திருக்கிறது. ஏன், கடந்த ஐந்து வருடங்களில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட புதியவர்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்திக் காட்டியிருக்கின்றனர்! இதன் விளைவாக ஆயிரக்கணக்கான புதிய சபைகளும், நூற்றுக்கணக்கான புதிய வட்டாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
இயேசு கிறிஸ்து “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார”னுக்கு உத்தரவாதங்களை ஒப்படைத்தது போல, அவர்கள் சபை உத்தரவாதங்களை “வேறே ஆடுகளில்” இருக்கும் மூப்பர்களிடமும், உதவி ஊழியர்களிடமும் நியமித்திருக்கின்றனர். (மத்தேயு 24:45-47; யோவான் 10:16) இருப்பினும், மிகப்பெரிய வளர்ச்சியை கவனித்துக்கொள்வதற்கு கூடுதலான ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆண்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் எங்கேயிருந்து வருவர்? மூப்பர்கள் அவர்களை பயிற்றுவிக்க வேண்டும். ஆனால் தகுதிவாய்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டும் தனிப்பட்ட நபர்களிடம் மூப்பர்கள் பொருத்தமான உத்தரவாதங்களை ஒப்படைக்காவிட்டால், அவர்கள் எவ்வாறு அப்படிப்பட்ட ஆண்களை பயிற்றுவிக்க முடியும்? இளம் ஆண்களின் தகுதிகளையும், உண்மைத்தன்மைகளையும் கவனிக்க மூப்பர்களுக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கும்?
ஒப்படைத்தல் என்றால் என்ன?
“ஒப்படைத்தல்” என்பது பாரத்தை அகற்றுதல், தவிர்த்தல், புறக்கணித்தல் அல்லது தங்கள் உத்தரவாதங்களை விட்டுவிடுதல் என்று சிலருக்கு பொருள்படுகிறது. எனினும், “ஒப்படைத்தல்” சரியாக செய்யப்படும்போது, அது உண்மையிலேயே உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்குரிய ஒரு வழியாக இருக்கிறது. “டெலிகேட்” என்ற ஆங்கில வினைச்சொல், “மற்றொருவரிடம் ஒப்படைப்பது; ஒருவருடைய பிரதிநிதியாக நியமிப்பது; உத்தரவாதத்தை அல்லது அதிகாரத்தை நியமிப்பது,” என்று விளக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், உத்தரவாதத்தை ஒப்படைப்பவர் இறுதியில் என்ன செய்யப்பட்டது என்பதற்கு உத்தரவாதமுள்ளவராய் இருக்கிறார்.
கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என பயந்து சிலர் உத்தரவாதங்களை ஒப்படைப்பதை தவிர்க்கின்றனர். எனினும், ஒப்படைத்தல் என்பது கட்டுப்பாட்டை இழந்துவிடுவதை குறிப்பதில்லை. இயேசு கிறிஸ்து காணக்கூடாதவராகவும், பரலோகத்திலிருந்து ஆட்சிசெய்பவராகவும் இருந்தாலும்கூட, கிறிஸ்தவ சபையை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அனுபவமிக்க ஆண்கள் கவனித்துக்கொள்ளும்படி அவர் சபையை அவர்களிடம் ஒப்படைக்கிறார்.—எபேசியர் 5:23-27; கொலோசெயர் 1:13.
மற்றவர்கள், தாங்களே அந்த வேலையை விரைவாக முடித்துவிடலாம் என்று எண்ணுவதால், உத்தரவாதங்களை ஒப்படைக்க மனமில்லாதவர்களாக இருக்கலாம். இருந்தாலும், மற்றவர்களை பயிற்றுவிக்க வேண்டியதன் மதிப்பை இயேசு கண்டார். இப்பூமியில் வேறு எவரும் இயேசுவைக் காட்டிலும் அதிக திறம்பட்டவிதமாக போதிக்கவில்லை. (யோவான் 7:46) தம் சீஷர்களில் 70 பேருக்கு கட்டளைகள் கொடுத்த பின்பு, அவர் அவர்களை பிரசங்க வேலைக்கு அனுப்பினார். போதிக்கும் திறமையில் இயேசுவைப் போன்றே அவர்கள் செய்யமுடியவில்லையென்றாலும், அவர்கள் அடைந்த வெற்றிகளைக் குறித்து சந்தோஷத்தோடே திரும்பி வந்தனர். இயேசு அவர்களோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார். அவர் அவர்களை பாராட்டினார். அவர் சென்ற பின்பும் நீண்டகாலம் அவர்கள் அந்த வேலையை தொடர்ந்து செய்வார்கள் என்பதையும், அவர் தனிமையாக வேலை செய்தபோது சாதித்ததைவிட இன்னுமதிகமாக நிறைவேற்றுவார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.—லூக்கா 10:1-24; யோவான் 14:12.
அவசியமான விவரங்களை செய்துமுடிக்க உதவியை பெற்றுக்கொள்வதையும்கூட ஒப்படைத்தல் என்பது பொருள்படுகிறது. இயேசு தாம் மரிப்பதற்கு முந்தின நாள் தம் கடைசி பஸ்கா போஜனத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி பேதுருவையும் யோவானையும் நியமித்தார். (லூக்கா 22:7-13) ஆட்டுக்குட்டி, திராட்சரசம், புளிப்பில்லா அப்பம், கசப்பான கீரை ஆகியவற்றை வாங்க இயேசு கவலைப்படவேண்டிய அவசியமில்லை; பாத்திரங்கள், விறகு, அதோடு சம்பந்தப்பட்ட மற்ற பொருட்களை சேர்க்கவேண்டிய அவசியமில்லை. அந்த விவரங்களை பேதுருவும் யோவானும் கவனித்துக்கொண்டனர்.
இன்றுள்ள மூப்பர்கள் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றினால், அதே போன்ற நன்மைகளை அனுபவிக்கலாம். உதாரணமாக, பிரசுரங்களை கவனித்துக்கொள்பவரை வரப்போகும் பிரசுர அளிப்புக்கு தேவையான பிரசுரங்களை தருவிக்கும்படி கேட்டுக்கொள்ளலாம். கடந்தகால பிரசுர அளிப்புகளின்போது எவ்வாறு அதைப் போன்ற பிரசுரங்கள் உபயோகப்படுத்தப்பட்டது என்பதை நிர்ணயிக்க தன் பதிவுகளை ஆராய்ந்து பார்க்கும்படி அவரிடம் சொல்லலாம். பொருத்தமான ஆர்டர் நமுனாவை தயாரிப்பதற்கு முன்பு, சபை பிராந்தியத்தின் குறிப்பிடத்தக்க தன்மைகளை அவர் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். அதற்குப் பிறகு அவர் அந்த நமுனாவை சபை காரியதரிசியிடம் சரிபார்ப்பதற்காக சமர்ப்பிப்பார். பிரசுர ஊழியர் தன் வேலையை கற்றுக்கொண்ட பிறகு, ஆர்டர் நமுனாவில் மொத்த எண்ணிக்கை ஓரளவு சரியாக இருக்குமேயானால் கடந்தகால பதிவுகளை மறுபடியும் இருமுறை சரிபார்க்க வேண்டிய தேவை காரியதரிசிக்கு இருக்காது. பிரசுர ஆர்டரை அனுப்புவதற்கு உத்தரவாதத்தை ஒப்படைக்கும் இந்த எளிய செயல், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேலைகளை சுலபமாகவும், எளிதாகவும் ஆக்கும்.
இப்படிப்பட்ட நிகழக்கூடிய பயன்கள் இருப்பதால், ஒருவர் எவ்வாறு திறம்பட்டவிதமாக உத்தரவாதங்களை ஒப்படைக்கலாம்?
எவ்வாறு ஒப்படைப்பது
வேலையை விளக்குங்கள். முதலாவது, என்ன விளைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை தெளிவாக்குங்கள். இயேசுவின் ராத்தலைப் பற்றிய உவமையில் “நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள்” என்று “பிரபுவாகிய ஒருவன்” தன் பத்து ஊழியக்காரரிடம் சொன்னான். (லூக்கா 19:12, 13) ஊழியக்காரர் எஜமானின் ராத்தலைக்கொண்டு ஆதாயம் கிடைக்கும்படி வியாபாரம் பண்ணவேண்டும் என்றும் பின்னர் தான் திரும்பி வரும்போது தங்களுக்குக் கிடைத்த இலாபத்தை சொல்ல வேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். நவீன நாளைய ராஜ்யமன்ற வேலைக்கு இந்த நியமம் எவ்வாறு பொருந்தும்? உதாரணமாக, கூரையை பழுதுபார்ப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரரிடம் என்ன பொருட்களை உபயோகப்படுத்தவேண்டும், அவற்றை எங்கே கண்டுபிடிக்கலாம், வேலையை எப்போது ஆரம்பிப்பது, வேலைசெய்வதற்கு தட்பவெப்பநிலை அனுமதிக்குமா போன்ற விஷயங்களை சொல்லவேண்டும். இப்படிப்பட்ட திட்டவட்டமான குறிப்புகள் நன்கு ஒழுங்கமைப்பதில் விளைவடைகிறது.
ஒரு வேலை எதை உட்படுத்தும் என்பதை மட்டுமல்லாமல், என்ன தீர்மானங்களை ஒரு நபர் எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார், என்ன விஷயங்களை மற்றவரோடு விசாரித்து செய்யவேண்டும் என்பதையும்கூட விளக்குவது முக்கியமானது. சிறிய வழக்குகளை தான் நியமித்தவர்கள் நியாயந்தீர்க்கவேண்டும் என்றும், கடினமான வழக்குகள் தன்னிடம் வரவேண்டும் என்றும் மோசே சொன்னார்.—யாத்திராகமம் 18:22.
உத்தரவாதங்களை நியமிக்கையில், ஒரே வேலையை இரண்டு நபர்களிடம் கொடுப்பதை தவிர்க்க கவனமாயிருங்கள். ஒரே வேலையை செய்வதற்கு ஒரு நபருக்கு மேல் அதிகமானவர்களை நியமித்தால் அது குழப்பத்தில் விளைவடையும். யெகோவாவின் சாட்சிகளின் பெரிய மாநாட்டில், உணவு வைக்கும் மேடையை சுத்தம் செய்யும் உத்தரவாதத்தை சுத்தம் செய்யும் இலாகாவுக்கும், உணவு இலாகாவுக்கும் கொடுத்தால், அல்லது முழுக்காட்டுதலின்போது பார்வையாளர்களுக்கு வழிகாட்டும்படி அட்டென்டென்ட் இலாகாவும், முழுக்காட்டுதல் இலாகாவும் நியமிக்கப்பட்டால் என்ன நேரிடும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
தகுதிவாய்ந்த ஆண்களை தேர்ந்தெடுங்கள். எத்திரோ மோசேக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை . . . அதிபதிகளாக ஏற்படுத்தும்.” (யாத்திராகமம் 18:21, தி நியூ இங்லிஷ் பைபிள்) ஒரு மனிதன் முதலில் ஆவிக்குரிய தகுதிகளை பூர்த்தி செய்யவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. கையில் இருக்கும் வேலையை செய்வதற்கு ஒருவர் “தகுதியுள்ளவரா” என்பதை நிர்ணயிப்பதற்கு, ஆள்தன்மை பண்புகள், அனுபவம், பயிற்சி, தனித்திறமைகள் போன்ற காரணக்கூறுகளை சிந்தித்துப் பார்க்கவேண்டும். அன்பான, இனிமையான, உதவிசெய்யும் மனநிலையை உடைய ஒரு கிறிஸ்தவர் பத்திரிகை முகப்பிலோ அல்லது ஓர் அட்டென்டென்டாகவோ நன்றாக வேலை செய்வார். அதே போன்று, சபை காரியதரிசிக்கு உதவி செய்ய ஒருவரை தேர்ந்தெடுக்கும்போது, அவர் எவ்வளவு ஒழுங்குடன் காரியங்களை செய்கிறவர் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். அவர் நுட்ப விவரங்கள் பேரில் கவனம் செலுத்துகிறவரா, நம்பத்தக்கவரா, இரகசியத்தை அவர் வைத்துக்கொள்ள முடியுமா? (லூக்கா 16:10) தேவையான ஆவிக்குரிய தகுதிகளோடு இப்படிப்பட்ட காரணக்கூறுகளை சிந்திப்பது, அவ்வேலையைச் செய்வதற்கு சரியான நபரை தேர்ந்தெடுக்க உதவி செய்யும்.
போதுமான உதவி ஆதாரங்களை ஒதுக்குங்கள். நியமிக்கப்பட்ட வேலையை செய்துமுடிப்பதற்கு சேவைசெய்யும் நபர் சில உதவி ஆதாரங்களை கொண்டிருக்கவேண்டும். அவருக்கு ஒருவேளை சாதனங்கள், பணம் அல்லது உதவி தேவைப்படலாம். போதுமான உதவி ஆதாரங்களை ஒதுக்கி வையுங்கள். உதாரணமாக, ராஜ்ய மன்றத்தில் அவசியமான சில பழுதுபார்க்கும் வேலைகளை செய்யும்படி ஒரு சகோதரர் கேட்டுக்கொள்ளப்படலாம். என்ன செய்யப்படவேண்டும் என்பதை அவருக்குச் சொல்லவேண்டும். சில்லறையான பொருட்கள் வாங்குவதற்கு அவருக்கு பணமும்கூட தேவைப்படலாம். ஒருவேளை அவருக்கு உதவி தேவைப்படலாம். ஆகையால் அவருக்கு உதவி செய்வதற்கு மற்றவர்களை மூப்பர்கள் கேட்கலாம் அல்லது சபைக்கு பின்வரும் அறிவிப்பை செய்யலாம்: ‘இந்த குறிப்பிட்ட சகோதரர் இன்னின்ன வேலைகளை ராஜ்ய மன்றத்தில் செய்வார். உதவியை பெற்றுக்கொள்வதற்காக உங்களில் சிலரை அவர் அணுகுவார்.’ இப்படிப்பட்ட முன்யோசனை, போதுமான உதவி ஆதாரங்களை கொடுக்காமல் ஒரு வேலையை நியமிப்பதிலிருந்து ஒருவரை தடுத்து வைக்கும். “ஒப்படைப்பதை அரைகுறையாக செய்யாதீர்கள்” என்று அதை ஓர் அலுவல்துறை அறிவுரையாளர் சொல்கிறார்.
உத்தரவாதங்களை நியமிக்கையில், அந்த நபர் உங்களுக்கு பதிலாக செயல்படுகிறார் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுடைய ஸ்தானத்தில் செயல்படுவதற்கான அதிகாரமும்கூட ஓர் உதவி ஆதாரமாக இருக்கிறது. “சபையனைத்திற்கும் முன்பாக” யோசுவா இஸ்ரவேலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். “உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு” என்று மோசேக்கு சொல்லப்பட்டது. (எண்ணாகமம் 27:18-23) சபையில், வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் ஒன்றை தகவல் அறிவிப்புப் பலகையில் வெறுமென ஒட்டுவதன் மூலம் இது நிறைவேற்றப்படலாம்.
அவர்களுடைய தீர்மானங்களுக்கு ஆதரவு கொடுங்கள். இப்போது வேலை செய்யும்படி நியமிக்கப்பட்டிருப்பவர் தன் வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அவர்கள் எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தால், நீங்கள் அவருக்கு உண்மையிலேயே உற்சாகத்தின் ஓர் ஊற்றுமூலமாக இருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள். உதாரணமாக, ராஜ்ய மன்ற மேடையின் மீது ஒலிவாங்கிகளையும், மேஜை, நாற்காலிகளையும் எந்த இடத்தில் வைப்பது என்பதைக் குறித்து ஒரு மூப்பராக உங்களுக்கு உங்களுடைய சொந்த விருப்பம் இருக்கலாம். அது ஒருவேளை அதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர் செய்வதைவிட வித்தியாசமாக இருக்கலாம். மேடையை கவனித்துக்கொள்ளும் சகோதரருக்கு அவருடைய வேலையில் சிறிது சுதந்திரம் கொடுக்கப்பட்டால், அவர் நம்பிக்கையும் அனுபவமும் பெற்றுக்கொள்வார். அதுமட்டுமல்லாமல், அவர் காரியங்களை மேம்படுத்தவும்கூட செய்யலாம். வியாபாரத்துறை அறிவுரையாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “வேலையை ஒப்படைத்து விடுங்கள், அதை எவ்வாறு செய்வது என்ற தீர்மானத்தையும் ஒப்படைத்து விடுங்கள் . . . இதனால் பயனளிக்கக்கூடிய திறமைகள் வெளிப்படும்.”
கூடுதலாக, அவ்வேலையைச் செய்யும் சகோதரர் அக்குறிப்பிட்ட சூழ்நிலைக்கு அதிக நெருக்கமாக இருப்பதன் காரணமாக, அதோடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அவர் நன்றாக புரிந்துகொள்வார். உண்மையில் பலன்தரக்கூடிய தீர்வுகளோடு, எழும்பக்கூடிய பிரச்னைகளுக்கு அவர் ஒருவேளை பிரதிபலிக்கக்கூடும். பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளிப்படையாக தெரியாத காரணக்கூறுகளையும்கூட அவர் கையாளலாம். ஆகையால், ஒரு கிறிஸ்தவ கண்காணி அவருக்கு உதவியாக இருந்த அனுபவமிக்க சகோதரரைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “பிரச்னைகள் சில இருப்பதாக அவர் சொன்னால், அவர் சொல்வதை நான் நம்புகிறேன்.”
ஆம், கிறிஸ்தவ மூப்பர்களுக்கு கிடைக்கக்கூடிய அதிக மதிப்புவாய்ந்த உதவி என்னவென்றால், சொல்லப்பட்டபடி உதவி செய்வதற்கு விருப்பமுள்ள, தகுதிவாய்ந்த ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் ஆவர். மூப்பர்களே, இந்த மிகச்சிறந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்! பொறுப்புகளை ஒப்படைப்பது தன்னடக்கத்துக்கு ஓர் அடையாளமாக இருக்கிறது. அது அழுத்தத்தையும் அதிருப்தியையும் முடிந்த அளவுக்கு குறைக்கும். நீங்கள் அதிகத்தைச் செய்ய அது உங்களுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், மற்றவர்கள் தேவையான அனுபவத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பீர்கள்.