எடுத்துக்காட்டாக உள்ள ஓர் எபிரெய பைபிள் மூலப்பிரதி
சவக்கடல் சுருள்கள் 1947-ல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, முற்காலத்திய எபிரெய பைபிள் மூலப்பிரதிகள் என்று அறியப்பட்டிருந்தவை, சில கிழிந்த துண்டுகளைத் தவிர பொ.ச. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை இருந்த காலப்பகுதியிலிருந்து வந்தவை. அதாவது, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அப்படியென்றால், 1947-க்கு முன் பைபிளின் எபிரெய மூல உரைகள் நம்பமுடியாததாக இருந்ததா? மிகப்பழமையான எபிரெய மூலப்பிரதிகள் ஏன் வெகு சிலவே இருந்தன?
அக்கடைசி கேள்வியை முதலில் சிந்திக்கலாம். பண்டைய யூத ஒழுங்குமுறையின் கீழ் இனிமேலும் உபயோகிக்கமுடியாத நலிவுற்றவை என்று கருதப்பட்ட எபிரெய பைபிள் மூலப்பிரதிகள் ஜெபஆலயத்தில் இருந்த சேமிப்பறையில், கெனீஸாவில், பூட்டி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் சேமித்து வைக்கப்பட்டிருந்த நலிவுற்ற மூலப்பிரதிகளை வெளியே எடுத்து அவற்றைப் புதைத்தனர். தங்கள் வேதாகமங்கள் அவமதிக்கப்படாமல் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக யூதர்கள் இதைச் செய்தனர். ஏன்? ஏனென்றால் கடவுளின் பரிசுத்த பெயரை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கெழுத்துச் சொல் அவற்றில் இருந்ததால். இது ஆங்கிலத்தில் “ஜெஹோவா” என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.
“கிரீடம்”
ஆரம்ப காலங்களிலிருந்து பண்டைய எபிரெய மூல உரை உண்மையோடு பாதுகாத்து வரப்பட்டிருக்கிறது. உதாரணமாக, கீட்டர், “கிரீடம்,” என்றழைக்கப்பட்ட ஒரு முக்கியமான எபிரெய மூலப்பிரதி எல்லா எபிரெய வேதாகமங்களை அல்லது “பழைய ஏற்பாட்டை” முதலாவது கொண்டிருந்தது. சிரியாவில் உள்ள அலிப்போ என்ற இடத்தில் முகமதியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் பட்டணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பண்டைய காலத்திய சிறு சமுதாயங்களாக வாழ்ந்த யூதர்களின் மிகப்பழமையான ஜெப ஆலயத்தில் அது பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இந்த மூலப்பிரதி எருசலேமில் இருந்த கராட்டி யூத மதப்பிரிவினரிடம் விட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது 1099-ல் சிலுவைப் போர் வீரர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் இழக்கப்பட்ட அந்த மூலப்பிரதி மீண்டும் பெறப்பட்டு எகிப்தில் இருந்த பழைய கய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது 15-ஆம் நூற்றாண்டுக்குள் அலிப்போ என்ற இடத்தை சென்றடைந்தது. அதன் பின் அது அலிப்போ கோடெக்ஸ் என்று அறியப்படலாயிற்று. இந்த மூலப்பிரதி பொ.ச. 930-ஐ சார்ந்ததென கருதப்பட்டது. அதனுடைய பெயர் குறிப்பிடுகிறபடி மாசரோட்டிக் புலமைத்துவத்தின் கிரீடம் என அது கருதப்பட்டது. பைபிளின் மூல உரையை கவனமாக எழுதி வைத்தலுக்கு அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அது உண்மையிலேயே மாதிரியாக அமைந்த எபிரெய மூலப்பிரதியாக இருந்தது.
அதிநவீன காலங்களில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பிரதியின் பாதுகாப்பாளர்கள் தங்கள் புனிதமான பொருளின் தெய்வீகத் தன்மைக்கு அவமதிப்பு ஏற்படுமோ என்ற மூடநம்பிக்கையின் காரணமாக பயந்து, இலக்கிய மேதைகள் அதை ஆராய்ந்து பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. மேலும், ஒரே ஒரு தாள் மட்டுமே புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், ஒரு நேர் ஒத்த படிவத்தின் பதிப்பு ஆராய்ச்சிக்காக பிரசுரிக்கப்பட முடியவில்லை.
பலஸ்தீனாவிலிருந்து பிரிட்டன் நாட்டவர் 1948-ல் பின்வாங்கிச் சென்றபோது, அலிப்போவில் யூதர்களுக்கு எதிராக பெருங்கலகம் மூண்டது. அவர்களுடைய ஜெப ஆலயம் எரிக்கப்பட்டது; விலைமதிப்பு வாய்ந்த கோடெக்ஸ் மறைந்து போனது. அது அழிந்து போனது என்று எண்ணப்பட்டது. ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் முக்கால் பாகம் பாதுகாக்கப்பட்டு சிரியாவிலிருந்து எருசலேமுக்கு கடத்திச் செல்லப்பட்டதாக கேள்விப்பட்டபோது எவ்வளவு ஆச்சரியமாய் இருந்தது! இறுதியில் 1976-ல் ஒரு மிகச்சிறந்த நேர் ஒத்த பதிப்பு முழு வண்ணத்தில் 500 பிரதிகள் வெளியிடப்பட்டது.
கைத்தேர்ந்தவரின் வேலை
இந்த மூலப்பிரதி ஏன் அவ்வளவு முக்கியமானதாயிருக்கிறது? ஏனென்றால் இதன் முரண்பாடில்லாத மூல உரை பொ.ச. 930-ல் எபிரெய பைபிளை நகல் எடுத்து எழுதுவதில் பயிற்சி பெற்றிருந்த அதிக புகழ்வாய்ந்த இலக்கிய மேதைகளில் ஒருவரான ஏரன் பென் ஆஷர் என்பவரால் அது திருத்தப்பட்டு நிறுத்தக்குறிகளிடப்பட்டதன் காரணமாக. எனவே அது ஓர் எடுத்துக்காட்டாக அமைந்த கோடெக்ஸ் ஆக இருந்தது. திறமையில் குறைவுபட்ட எழுத்தர்கள் எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நகல்களுக்கு தராதரத்தை வைத்தது.
ஆரம்பத்தில் அது 380 காகிதத் தாள்களை (760 பக்கங்களை) உடையதாயிருந்தது. எழுதுவதற்காக செய்யப்பட்ட தோலின் மீது மூன்று பத்தியாய் அமைந்த விதத்தில் அது பொதுவாக எழுதப்பட்டது. அது இப்போது 294 காகிதத் தாள்களை உடையதாயிருக்கிறது. மோசே எழுதிய முதல் ஐந்து புத்தகங்கள், கடைசி பகுதியிலுள்ள புலம்பல், சாலொமோனின் உன்னதப்பாட்டு, தானியேல், எஸ்தர், எஸ்றா, நெகேமியா ஆகியவற்றின் பெரும் பகுதி அதில் இல்லை. நியூ உவோர்ல்ட் டிரான்ஸ்லேஷன் ஆப் தி ஹோலி ஸ்கிரிப்ச்சர்ஸ்—ரெபரன்ஸ் பைபிள்-ல் அது அது “அல்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (யோசுவா 21:37, அடிக்குறிப்பு) பொ.ச. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மோசஸ் மெய்மோனைட்ஸ் என்று இங்கு குறிப்பிடப்படுகிற நபர் இடைநிலைக் காலத்திய புகழ்பெற்ற யூத மேதை, அலிப்போ கோடெக்ஸ் தான் அவர் பார்த்ததிலேயே மிகச் சிறந்தது என கூறினார்.a
பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை கையினால் எழுதப்பட்ட எபிரெய மூலஉரை பென் ஆஷர், பென் நப்தலி என்ற இரண்டு பெரிய மாசரோட்டிக் உரை குடும்பங்களிலிருந்து எடுக்கப்பட்டு ஒன்று கலந்தவை. இந்த இரண்டு ஒன்றுகலந்த பாரம்பரியத்திலிருந்து எடுக்கப்பட்ட ஓர் அச்சடிக்கப்பட்ட எபிரெய பைபிளுக்கு 16-ஆம் நூற்றாண்டில் ஜேக்கப் பென் ஹேயம் மூலஉரை அளித்தார். அடுத்த 400 ஆண்டுகளுக்கு அச்சடிக்கப்பட்ட எல்லா எபிரெய பைபிள்களுக்கும் இவ்வுரை அடிப்படையாக ஆனது.
பிப்ளிக்கா ஹிப்ராய்கா (அச்சடிக்கப்பட்ட எபிரெய மூலஉரை)யின் மூன்றாம் பதிப்பு 1937-ல் வெளிவந்தபோது, பென் ஆஷர் பாரம்பரியம் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. லெனின்கிராட் B 19A என்று அழைக்கப்பட்ட ரஷ்யாவில் வைத்திருந்த ஒரு மூலப்பிரதியில் அது பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. லெனின்கிராட் B 19A பொ.ச. 1008 முதல் இருந்து வந்திருக்கிறது. எருசலேமில் இருக்கும் எபிரெய பல்கலைக்கழகம் அலிப்போ எபிரெய மூலஉரையை முழுவதுமாக ஒரு காலப்பகுதிக்குள் பிரசுரிக்கப் போவதாக திட்டமிட்டிருக்கிறது. சவக்கடல் சுருள்கள் உட்பட மற்ற எல்லா முக்கியமான மூலப்பிரதிகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளையும் அது அதோடு கொண்டிருக்கும்.
நாம் இன்று உபயோகிக்கும் பைபிளின் மூலஉரை நம்பத்தக்கது. அது தெய்வீக ஆற்றலால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. திறமையோடு விவரங்களை விடாமல் மிக உன்னிப்பாக வேலை செய்து நகல் எடுத்த எழுத்தர்களால் பல நூற்றாண்டுகளாக கடத்தப்பட்டது. சவக்கடல் அருகே 1947-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஏசாயா சுருளையும், மாசரோட்டிக் மூலஉரையையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த நகல் எடுத்தவர்கள் எடுத்துக்கொண்ட மிக அதிகப்படியான கவனத்தைக் காண்பிக்கிறது. சவக்கடல் சுருள், மிகப்பழைய மாசரோட்டிக் பைபிளை விட ஆயிரம் வருடங்கள் பழமையானதாக இருந்தாலும், அதில் வெகு சில வித்தியாசங்கள் தான் இருக்கிறது என்பது ஆச்சரியமாயிருக்கிறது. மேலும், இப்போது அலிப்போ கோடெக்ஸ் மேதைகளுக்கு கிடைக்கக்கூடியதாக இருப்பதனால், எபிரெய வேதாகமங்களின் மூலஉரை உண்மையானது என்று நம்புவதற்கு அது கூடுதலான காரணத்தை கொடுக்கும். உண்மையிலேயே, “நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”—ஏசாயா 40:8.
[அடிக்குறிப்புகள்]
a அலிப்போ கோடெக்ஸ் பென் ஆஷர் என்பவரால் நிறுத்தக்குறிகளிடப்பட்ட மூல உரை என்பதை பல வருடங்களாக சில மேதைகள் சந்தேகித்தனர். அந்தக் கோடெக்ஸ் இப்போது ஆராய்ச்சிக்காக கிடைக்கக்கூடியதாக இருப்பதனால், அது உண்மையிலேயே மெய்மோனைட்ஸ் என்பவர் குறிப்பிட்ட பென் ஆஷரின் மூலப்பிரதி என்பதற்கு அத்தாட்சி மிகுதியாக வந்துகொண்டிருக்கிறது.
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
Bibelmuseum, Münster
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
Jewish Division / The New York Public Library / Astor, Lenox, and Tilden Foundations