மஸோரெட்டிக் மூலவாக்கியம் என்றால் என்ன?
நீங்கள் எந்த மொழியில் பைபிளைப் படித்தாலும், புத்தகத்தின் பகுதியானது எபிரெய வேதாகமம் அல்லது “பழைய ஏற்பாடு” அடங்கிய மஸோரெட்டிக் மூலவாக்கியத்திலிருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும். உண்மையில் பார்க்கப்போனால், ஒன்றுக்கும் அதிகமான மஸோரெட்டிக் மூலவாக்கியங்கள் இருந்திருக்கின்றன. ஆகவே எது தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏன்? உண்மையில் மஸோரெட்டிக் மூலவாக்கியம் என்றால் என்ன, அது நம்பத்தகுந்தது என்று நமக்கெப்படி தெரியும்?
யெகோவாவின் வார்த்தை
பைபிளை எழுதுவது பொ.ச.மு. 1513-ல் சீனாய் மலையில் துவங்கியது. யாத்திராகமம் 24:3, 4 நமக்கு சொல்வதாவது: ‘மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்தார்.’
எபிரெய வேதாகமம், பொ.ச.மு. 1513-லிருந்து சுமார் பொ.ச.மு. 443 வரை, ஆயிர வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வந்தது. எழுத்தாளர்கள் கடவுளால் ஏவப்பட்டெழுதினார்கள் என்றால், தம்முடைய செய்திகள் உண்மைத்தன்மையோடு பாதுகாக்கப்படும்படி காரியங்களை அவர் வழிநடத்துவார் என்பது நியாயமானதே. (2 சாமுவேல் 23:2; ஏசாயா 40:8) ஆயினும், பிரதிகள் எடுக்கையில் ஒரு எழுத்துப்பிழையும் நிகழாமலிருக்க, மனிதனால் நேர்ந்த எல்லா பிழைகளையும் யெகோவா நீக்கிவிடுவார் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா?
மறைந்திருந்த பிழைகள் சற்று வெளிப்பட்டன
கடவுளின் வார்த்தையினிடமாக ஆழ்ந்த மரியாதையுடைய மனிதர்களே காலாகாலமாக பிரதிகளை எடுத்தபோதிலும், எப்படியோ, ஏதோ ஓர் அளவுக்கு மனித பிழைகளும் கையெழுத்துப் பிரதிகளினூடே நுழைந்துவிட்டன. பைபிள் எழுத்தாளர்கள் ஏவப்பட்டெழுதினார்கள், ஆனால் பிரதியெடுத்தவர்கள் தெய்வீக ஏவுதலின்கீழ் தங்கள் வேலையை செய்யவில்லை.
பொ.ச.மு. 537-ல் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த யூதர்கள், பாபிலோனில் கற்றுக்கொண்ட சதுர வடிவில் எழுதும் புதிய எழுத்து பாணியை உபயோகித்தனர். இந்தப் பெரும் மாற்றமானது அதனோடு தொடர்புடைய பிரச்சினையையும் உடையதாயிருந்தது. அதாவது தோற்றத்தில் ஒரே மாதிரியான எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டன. எபிரெய மொழி மெய்யெழுத்துக்களை சார்ந்துள்ளது, வாசிப்பவர் சூழமைவை தான் புரிந்துகொண்டதற்கு ஏற்ப, உயிர் எழுத்தின் ஓசைகளைச் சேர்த்துக்கொள்வார். அதனால் ஒரு மெய் எழுத்தின் மாற்றமானது ஒரு வார்த்தையின் அர்த்தத்தை எளிதில் மாற்றிவிடும். ஆயினும் அநேக சந்தர்ப்பங்களில் அத்தகைய பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, திருத்தப்பட்டுவிட்டன.
பாபிலோனின் வீழ்ச்சிக்குப்பின் பெருவாரியான யூதர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பவில்லை. இவ்விதமாக, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதிலும் இருந்த யூத சமூகத்தினருக்கு ஜெப ஆலயங்களே ஆவிக்குரிய மையங்களாகச் சேவித்தன.a ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் வேதாகம சுருள்களின் பிரதிகள் தேவைப்பட்டன. பிரதிகள் அதிகரிக்க அதிகரிக்க, பிரதி எடுக்கையில் ஏற்படக்கூடிய பிழைகளின் வாய்ப்புக்களும் அவ்வாறே அதிகரித்தன.
மறைந்திருந்த பிழைகளை நீக்க முயற்சிகள்
பொ.ச. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில், எருசலேமிலிருந்த வேதபாரகர்கள் ஒரு மூலவாக்கியத்தை நிறுவி, அதனைக் கொண்டு மற்ற எபிரெய வேதாகமச் சுருள்களைத் திருத்த முயன்றார்கள். இருப்பினும், அசல் மூலவாக்கியத்தையும் பிரதி எடுத்தோரின் பிழைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகளையும் வேறுபடுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட முறை ஒன்றும் இருக்கவில்லை. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே, எபிரெய வேதாகமத்தின் மெய்யெழுத்து மூலவாக்கியம் ஓரளவு நிர்ணயிக்கப்பட்டதாக தோன்றுகிறது, ஆயினும் அது அதிகாரப்பூர்வமாக இன்னமும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எபிரெய வேதாகம மேற்கோள்கள் காணப்படும் தல்மூடின் மூலமானது (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டவை) பின்னர் மஸோரெட்டிக் மூலவாக்கியம் என்று அறியப்பட்டதிலிருந்து வேறுபட்டிருப்பதை அநேக தடவை காட்டுகிறது.
“பாரம்பரியம்” என்னும் வார்த்தை எபிரெயுவில் மஸோரா அல்லது மஸோரெத் எனப்படுகிறது. பொ.ச. ஆறாம் நூற்றாண்டுக்குள், எபிரெய வேதாகமத்தைத் திருத்தமாகப் பிரதியெடுக்க வேண்டும் என்னும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்தவர்களே மஸோரெட்ஸ் என்று அறியப்பட்டனர். அவர்கள் எடுத்த பிரதிகள் மஸோரெட்டிக் மூலவாக்கியங்கள் என்று குறிப்பிடப்பட்டன. அவர்களுடைய இலக்கியப்படைப்பும் அவர்கள் தயாரித்த மூலவாக்கியங்களும் எந்த விதத்தில் விசேஷித்தவை?
வழக்காற்றிலுள்ள ஒரு தேசிய மொழியாக இருப்பதிலிருந்து எபிரெயு மறைந்து விட்டது மற்றும் பல யூதர்களால் அதைச் சரளமாகப் பேசக்கூடாமல் போயிற்று. இவ்வாறாக, மெய்யெழுத்து வேதாகம மூலவாக்கியத்தை உள்ளதை உள்ளவாறே புரிந்துகொள்ளுதல் ஆபத்துக்குள்ளானது. இதைப் பாதுகாக்க, புள்ளிகளாலும் கோடுகளாலும் அல்லது புள்ளி அடையாளங்கள் என்று அழைக்கப்பட்டவற்றாலும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட உயிர் எழுத்துக்களின் ஒரு முறையை மஸோரெட்ஸ் உருவாக்கினார்கள். அவை மெய்யெழுத்துக்களின் மேலும் கீழும் வைக்கப்பட்டன. மஸோரெட்ஸ் சிக்கலான குறியீடுகளின் முறையைக்கூட உருவாக்கினார்கள். அது நிறுத்தக் குறியீடாகவும் அதிக திருத்தமான நிறுத்தக் குறியீட்டிற்கு வழிகாட்டியாகவும் பயன்பட்டது.
முந்தைய வேதபாரகர்களின் தலைமுறையினரால் மூலவாக்கியத்தில் எங்கெல்லாம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அல்லது தவறாகப் பிரதி எடுக்கப்பட்டுள்ளதாக மஸோரெட்ஸ் உணர்ந்தார்களோ, அங்கு பக்க ஓரத்தில் குறிப்புகளை எழுதினார்கள். பழக்கப்பட்டிராத எழுத்துக்களின் வடிவங்கள், அவற்றின் கூட்டுச் சொற்கள், தனியொரு புத்தகத்திலோ முழு எபிரெய வேதாகமத்திலோ அடுத்தடுத்து எத்தனை முறை காணப்பட்டன என்பதையெல்லாம் குறித்து வைத்தார்கள். பிரதி எடுப்பவர்கள் குறுக்காக-சரிபார்த்துக்கொள்ள உதவுவதற்குக் கூடுதலான குறிப்புகளும் கொடுக்கப்பட்டன. இந்த விஷயங்களை மிகமிக சுருக்கமாகப் பதிவு செய்யும், சுருக்கப்பட்ட “தொகுப்புகள்” என்னும் முறையை உருவாக்கினார்கள். பக்க ஓரக் குறிப்பு எழுதப்பட்ட வசனங்களின் பகுதிகளுக்குத் தொடர்புடைய குறிப்புகள், மேல் மற்றும் கீழ் புறமிருக்கும் பக்க ஓரங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை ஒரு சிறிய சொல் தொகுதி விளக்கப்பட்டியலின் மாதிரியில் பட்டியலிடப்பட்டுள்ளன.
கலிலேயாக் கடலை அடுத்துள்ள, திபேரியுவில் இருந்த மஸோரெட்ஸ் என்பவர்களால் திருத்தப்பட்ட முறையே பெரும் புகழ்பெற்றதாகும். ஒருவேளை காராட்டிஸ், பொ.ச. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பென் ஆஷர், பென் நஃப்தலி, ஆகிய குடும்பத்தினர் குறிப்பாக பிரபலமாக ஆனார்கள்.b இந்த இரண்டு பொதுக் கொள்கைத் தொகுதியினரிடையே உச்சரிக்கும் முறைகளிலும், பக்க ஓரங்களில் எழுதிய குறிப்புகளிலும் வித்தியாசங்கள் இருந்தபோதிலும், எபிரெய வேதாகமம் முழுவதிலும் அவர்களுடைய மூலவாக்கியங்களின் மெய் எழுத்துக்களில் பத்துக்கும் குறைவான இடங்களிலேயே வித்தியாசப்படுகின்றன.
பென் ஆஷர் மற்றும் பென் நஃப்தலி ஆகிய இரண்டு பொதுக் கொள்கைத் தொகுதியினராகிய மஸோரெட்ஸ்களும், அவர்கள் காலத்திய உரைநடை புலமைக்குப் பெரும் பங்கை வகித்துள்ளனர். பென் ஆஷர் உரையை, மைமானடிஸ் (12-ம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க ஒரு தால்மூட்டிக் அறிஞர்) புகழ்ந்த பின்னர், மற்றவர்கள் அதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தார்கள். அந்தச் சமயத்தில், பென் நஃப்தலி கையெழுத்துப்பிரதி இல்லாதபோதிலும், அவ்வாறு செய்யப்பட்டது. மீதம் இருப்பதெல்லாம், இந்த இரண்டு தொகுதியினரிடையே நிலவிய வித்தியாசங்களின் பட்டியல்கள் தான். நகைப்பிற்குரியது என்னவென்றால், மைமானடிஸின் குறிப்புகள், எழுத்துப் பாணி ஆராய்வுடன் தொடர்புடையது, அதாவது பத்திகளுக்கிடையே இடம் விடுதல் போன்றவை. முக்கிய அம்சங்களான திருத்தமாக மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பதோடு தொடர்புடையதாக இல்லை.
“கலப்பற்ற” மஸோரெட்டிக் மூலவாக்கியத்தை கண்டடைய முடியுமா?
“கலப்பற்ற” பென் ஆஷர் உரை நமக்கு “உண்மையான” மஸோரெட்டிக் மூலவாக்கியத்தைக் கொடுத்துவிடுவதைப்போல் இன்றைக்குக் கிடைக்கக்கூடிய கையெழுத்துச் சுவடியில், அது எது என்பதில் அறிஞர்கள் இடையே அதிக சர்ச்சை நிலவுகிறது. உண்மையில் “கலப்பற்ற,” பிரத்தியேகமான, அதிகாரப்பூர்வமான மஸோரெட்டிக் மூலவாக்கியம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை. அதற்கு மாறாக, அநேக மஸோரெட்டிக் மூலவாக்கியங்கள், ஒன்றுக்கொன்று சற்றே வேறுபட்டு இருந்திருக்கின்றன. இருப்பிலுள்ள எல்லா கையெழுத்துச் சுவடிகளும் பென் ஆஷர் மற்றும் பென் நஃப்தலி ஆகிய இருவரின் விளக்க உரைகளும் கலந்த மூலவாக்கியங்களே உள்ளன.
இன்றைக்கு எபிரெய வேதாகமத்தை மொழிபெயர்க்கும் எந்த ஒரு மொழிபெயர்ப்பாளரும் எதிர்ப்படும் சவால் எதிர்த்து நிற்கமுடியாததாய் இருக்கிறது. அவர் எபிரெய உரையை மட்டுமே நன்கு தெரிந்திருந்தால் போதாது. ஆனால் நியாயமான தெரிவுகளுடன், மூலவாக்கியத்தில் நகல் எடுப்போரால் நேர்ந்த பிழையாலும் மற்றவிதத்திலும் எங்கெனும் திருத்தியமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதையுங்கூட தெரிந்திருக்கவேண்டும். பல்வேறு மஸோரெட்டிக் மூலவாக்கியங்கள் அடிப்படையாக சேவித்த போதிலும், அவர் மிகவும் பழமையான, ஒருவேளை இன்னும் திருத்தமான மெய்யெழுத்து மூலவாக்கியத்தின் மொழிபெயர்ப்புகளை, நியாயமானவிதத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் மற்ற நல்ல ஆதாரமுடைய மூலங்களையும் கலந்தாராய வேண்டியிருக்கிறது.
தி டெக்ஸ்ட் ஆஃப் தி ஓல்டு டெஸ்ட்மென்ட் என்ற தன்னுடைய புத்தகத்தின் முகவுரையில் யர்ன்ஸ்ட் விர்ஃபுட்வைன் விளக்குகிறார்: “சிக்கலான பகுதியை எதிர்ப்படுகையில், வெறுமனே பல்வேறு விளக்க உரைகளைச் சேகரித்துக் கொண்டு, ஒருசில சமயங்களில் எபிரெய உரையை நாடுவது, மற்ற சமயங்களில் செப்டூவஜன்டையும் இன்னும் வேறு சமயங்களில் அராமிக் டார்கம்மை நாடுதல் என்று எளிதாக தீர்வை அளிக்கக்கூடிய ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது. உரையின் ஆதாரங்களெல்லாம் ஒரேமாதிரியாக நம்பத்தகுந்தவை அல்ல. ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய பண்பும் பிரத்தியேக வரலாறும் உள்ளது. அரைகுறையான அல்லது தவறான தீர்வுகளைத் தவிர்க்க நினைப்போமாகில், இவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.”
யெகோவா தம்முடைய வார்த்தையைப் பாதுகாத்துள்ளார் என்று முழு நம்பிக்கை கொள்வதற்கான உறுதியான ஆதாரத்தை உடையவர்களாக உள்ளோம். பல நூற்றாண்டுகளுக்கும் மேல், நேர்மையான மனிதர்களின் கூட்டு முயற்சியால், பைபிள் செய்தியின் சாரம், பொருளடக்கம், விவரங்கள்கூட நமக்கு உடனே கிடைக்கின்றன. எழுத்திலோ வார்த்தையிலோ இருக்கும் சிறிய மாற்றம், வேதாகமத்தை நாம் புரிந்துகொள்ளும் விதத்தைப் பாதிப்பதில்லை. இப்பொழுது முக்கியமான கேள்வி என்னவென்றால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு இணங்க நாம் வாழ்வோமா?
[அடிக்குறிப்புகள்]
a இஸ்ரவேலுக்கு வெளியே இருந்த யூதர்கள் பலர், எபிரெய மொழியைச் சரளமாக வாசிப்பவர்களாக இல்லாமல்போகவே, எகிப்திலுள்ள அலெக்ஸாண்டிரியாவில் இருந்த அத்தகைய யூத சமூகத்தினரைப் போன்றோர், பைபிளை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய தேவையை விரைவிலேயே கண்டுகொண்டனர். இந்தத் தேவையை நிறைவு செய்ய, பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க செப்டூவஜன்ட் பதிப்பு தயாரிக்கப்பட்டது. பின் இந்தப் பதிப்பு மூலவாக்கியத்தை நிலைநாட்ட ஒரு மூலமாக ஆகியிருக்கக்கூடும்.
b பொ.ச. 760-ல், அந்த வருடத்தில் காராட்டிஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு யூதத் தொகுதியினர், வேதாகமத்தை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ரபீக்களுடைய அதிகாரம், “வாய் மொழி பிரமாணங்கள்,” தல்மூட் ஆகியவற்றை நிராகரித்ததினால், பைபிளின் மூலவாக்கியத்தை கிரமமாக பேணிக்காப்பதற்கு மிகப் பெரிய காரணத்தைக் கொண்டிருந்தார்கள். இந்தத் தொகுதியிலிருந்த சில குடும்பத்தினர் கைதேர்ந்த மஸோரெட்டிக் பிரதி எடுப்பவர்களாக ஆனார்கள்.
[பக்கம் 26-ன் படம்]
அலேப்போ கையெழுத்துச் சுவடி மஸோரெட்டிக் மூலவாக்கியத்தை அடக்கியுள்ளது
[படத்திற்கான நன்றி]
Bibelmuseum, Münster