முக்கியமான ஒருவர் அழைக்கையில், நீங்கள் பதிலளிக்கிறீர்களா?
ஷின்னேஷி டோகரா சொன்னபடி
என்னுடைய வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில், நான் கடவுளை நோக்கிக் கூப்பிடவோ அல்லது அவரிடமிருந்து வழிநடத்துதலை எதிர்ப்பார்த்திருக்கவோ இல்லை. என்னுடைய பாட்டனும் பாட்டியும் ஜப்பானிலிருந்து ஹவாயில் குடியேறியிருந்தார்கள், என்னுடைய பெற்றோர் புத்தமதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தார்கள். அவர்கள் தங்கள் விசுவாசத்தில் அதிக சுறுசுறுப்பாய் இல்லை, ஆகவே நான் வளர்ந்துவருகையில் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.
பின்னர் நான் பரிணாமம் பற்றி கற்றேன், அப்போது கடவுளில் நம்புவது எத்தனை முட்டாள்த்தனம் என்பதாக நினைத்தேன். இருப்பினும், நான் முறைப்படியாக கல்விபயின்று வருகையில், அறிவியல் வகுப்புகள் வானியலுக்கும், இயற்பியலுக்கும் உயிரியலுக்கும் என்னை அறிமுகம் செய்துவைத்தது. இரவு நேரத்தில் நான் வானை உற்றுநோக்கி அந்த நட்சத்திரங்கள் எவ்வாறு அங்கு வந்தன என்று யோசிப்பேன். எனக்குள் ஒரு மங்கலான குரல் பின்வருமாறு கேட்க ஆரம்பித்தது: ‘இந்த எல்லாக் காரியங்களையும் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு கடவுள் இருக்கக்கூடுமா?’ அங்கே முக்கியமான ஒருவர் இருக்கவேண்டும் என்று நான் உணரஆரம்பித்தேன். என்னுடைய இருதயம், ‘யார் இந்தக் கடவுள்?’ என்று கூப்பிட ஆரம்பித்தது.
உயர்நிலைப்பள்ளியிலிருந்து பட்டம்பெற்ற பின்பு, ஒரு தோப்பி வடிப்பாலையில் கம்மியராக என்னுடைய வேலையின் காரணமாக என்னுடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது, எனக்குக் கடவுளைப் பற்றிய கேள்வியைக் குறித்து தியானிக்க நேரம் இருக்கவில்லை. விரைவில் மஸாக்கோவை நான் சந்தித்தேன், அவள் 1937-ல் என்னுடைய மனைவியானாள். இறுதியில் மூன்று பிள்ளைகளால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம். என்னே ஓர் உண்மையுள்ள துணையாகவும் கடினமாக உழைக்கும் தாயாகவும் மாஸாக்கோ தன்னை நிரூபித்திருக்கிறாள்!
இப்பொழுது எனக்கு ஒரு குடும்பமிருக்க, நான் எங்கள் எதிர்காலத்தைப்பற்றி ஆழ்ந்து யோசித்தேன். மறுபடியுமாக நான் வெளியே சென்று நட்சத்திரங்களை உற்றுநோக்க ஆரம்பித்தேன். கடவுள் ஒருவர் இருக்கவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டானது. அந்தக் கடவுள் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எப்படியும் அவரை நோக்கி நான் கூப்பிட ஆரம்பித்தேன். மறுபடியும் மறுடியுமாக நான் இவ்வாறு மன்றாடினேன்: ‘அங்கே எங்காவது நீர் இருந்தால், மகிழ்ச்சியாக நடப்பதற்கு ஒரு வழியைக் காண தயவுசெய்து எங்கள் குடும்பத்துக்கு உதவிசெய்வீராக.’
என்னுடைய வேண்டுதலுக்கு கடைசியாக பதில் கிடைத்தது
எங்களுக்குத் திருமணம் ஆனதுமுதற்கொண்டு நாங்கள் என் பெற்றோருடன் வசித்துவந்தோம், ஆனால் 1941-ல் நாங்கள் ஹவாயிலுள்ள ஹல்லோவில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தோம். எங்கள் புதிய வீட்டில் நாங்கள் குடிபுகுந்த பிறகு உடனே, 1941-ல் டிசம்பர் 7-ம் தேதி ஜப்பானியர்கள் பேர்ல் துறைமுகத்தை தாக்கினார்கள். பதற்றமான ஒரு காலமாக அது இருந்தது, அனைவரும் எதிர்காலத்தைப் பற்றி கவலையோடிருந்தனர்.
பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு ஒரு மாதம் கழித்து, நான் என் காரை பாலீஷ் செய்துகொண்டிருந்தபோது, ஒரு மனிதன் என்னை அணுகி பிள்ளைகள் என்ற தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகத்தை அளித்தார். அவர் ரால்ப் கரோட், யெகோவாவின் சாட்சிகளின் ஓர் ஊழியர் என்பதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை, ஆனால் நான் கடவுளில் அக்கறையுள்ளவனாக இருந்தேன், ஆகவே புத்தகத்தை ஏற்றுக்கொண்டேன். அடுத்த வாரம் ரால்ப் திரும்பிவந்து ஒரு வீட்டு பைபிள்படிப்பை எனக்கு நடத்துவதாகச் சொன்னார். பைபிளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்த போதிலும், அப்போதுதானே உண்மையில் நான் பைபிளை முதல்முறையாக பார்த்தேன். நான் பைபிள் படிப்புக்கு சம்மதித்தேன், என்னுடைய மனைவியும் அவளுடைய தங்கையும் அதில் சேர்ந்துகொண்டார்கள்.
பைபிள் கடவுளுடைய வார்த்தை என்ற உண்மை உண்மையில் எனக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. (2 தீமோத்தேயு 3:16, 17) மேலும் யெகோவா ஒரு நோக்கமுடையவராக இருந்தார் என்பது இன்னும் அதிக அதிசயமானதாக இருந்தது. நான் தேடிக்கொண்டிருந்த சிருஷ்டிகர் அவரே! (ஏசாயா 45:18) இழக்கப்பட்டுபோன முதல் பரதீஸ் பூமியில் இங்கே திரும்ப நிலைநாட்டப்படப்போகிறது என்பதையும் நாம் அதில் ஒரு பாகமாக இருக்கமுடியும் என்பதையும் கற்றுக்கொண்டபோது நாங்கள் கிளர்ச்சியடைந்தோம். (வெளிப்படுத்துதல் 21:1-4) கடவுளை நோக்கி நான் கூப்பிட்டதற்கு இதோ பதில் கிடைத்துவிட்டது!
புதிதாகதெரிந்துகொண்ட சத்தியங்களைப் பற்றி நாங்கள் அனைவரிடமும் பேசினோம். எங்களுக்குப் பித்துபிடித்துவிட்டது என்பதாக என் பெற்றோர் நினைத்தனர், ஆனால் அது எங்களை உற்சாகமிழந்துபோகச் செய்யவில்லை. மூன்று மாதங்களாக பைபிளை ஆழ்ந்து படித்தபின்னர், 1942, ஏப்ரல் 19-ல் எங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எங்களுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக என் மனைவியும் நானும் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டோம். அதற்குள் எங்கள் பைபிள் படிப்பில் சேர்ந்துகொண்ட மாஸாக்கோவின் தங்கை யோஷியும் அவளுடைய கணவர் ஜெரியும் எங்களோடுகூட முழுக்காட்டப்பட்டார்கள். பரிசுத்த வேதாகமத்தைப் பற்றி எங்களுக்கு ஓரளவு அறிவு மாத்திரமே இருந்தது, ஆனால் கடவுளை சேவிக்க விரும்புவதற்கு எங்களைத் தூண்ட அது போதுமானதாக இருந்தது.
இரண்டாம் உலகப் போர் இன்னும் நடந்துகொண்டிருக்க, இந்த ஒழுங்கின் முடிவு வெகு அருகாமையில் இருக்கவேண்டும் என்று ஊகித்து, இதைக்குறித்து ஜனங்களை எச்சரிக்கவேண்டும் என்று என் மனைவியும் நானும் உணர்ந்தோம். இந்த விஷயத்தில் கரோட் தம்பதியர் எங்களுக்கு முன்மாதிரியாக இருந்தார்கள். ரால்ப்-ம் அவருடைய மனைவியும் பயனியர்களாக, யெகோவாவின் சாட்சிகளின் முழு-நேர ஊழியர்களாக சேவித்துவந்தார்கள். நான் என் நிலைமையை ரால்ப்-ன் நிலையோடு ஒப்பிட்டு பார்த்தேன். அவருக்கு ஒரு மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருந்தார்கள். எனக்கு ஒரு மனைவியும் மூன்று பிள்ளைகள் மாத்திரமே இருந்தார்கள். அவரால் செய்ய முடியுமென்றால், நானும்கூட அதை செய்ய முடியவேண்டும். ஆகவே எங்கள் முழுக்காட்டுதலைத் தொடர்ந்து வந்த மாதத்தில், நாங்கள் பயனியர் சேவைக்காக விண்ணப்பித்தோம்.
ஒரு பயனியராக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பேகூட, என்னுடைய ஹவாயன் கிட்டார், சாக்ஸோபோன் மற்றும் வயலின் உட்பட எல்லா அவசியமற்ற காரியங்களையும் விற்றுவிட்டேன். நான் இசையில் மிகவும் ஆர்வமுள்ளவனாக இருந்திருக்கிறேன், ஆனால் என்னுடைய சிறிய ஹார்மோனிக்காவைத் தவிர எல்லாவற்றையும் நான் ஒதுக்கிவிட்டேன். மேலுமாக தோப்பி வடிப்பாலையில் என்னுடைய வேலை இனிமேலும் எனக்கு கவர்ச்சியாக இல்லை. (பிலிப்பியர் 3:8) ஊர்தி மனை ஒன்றை நான் உருவாக்கி, உபயோகிக்கப்படுவதற்கு நான் செய்த வேண்டுதலுக்கு யெகோவா பதிலளிப்பாரா என்பதைக் காண காத்துக்கொண்டிருந்தேன். நான் நீண்ட காலம் காத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கவில்லை. நாங்கள் 1942, ஜூன் 1 முதல் பயனியர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டோம். நாங்கள் உடனடியாக யெகோவாவை முழு-நேரமாக சேவிக்க சென்றோம், அந்தத் தீர்மானத்தைக் குறித்து ஒருபோதும் மனஸ்தாபப்பட்டதில்லை.
ஹவாயில் பயனியர் செய்வது
கரோட் தம்பதியரோடு சேர்ந்து ஹவாய், காப்பிக்கு பிரபலமான பகுதியான கோனா உட்பட பிக் தீவு மற்றும் காவ் முழுவதிலும் வேலைசெய்தோம். அந்நாட்களில் நாங்கள் ஒலிப்பதிவு கருவியை கொண்டு வேலைசெய்தோம். அது அதிக கனமாக இருந்தது, ஆனால் நாங்கள் இள வயதினராகவும் பலமுள்ளவர்களாகவும் இருந்தோம். ஆகவே, ஒரு கையில் ஒலிப்பதிவுக் கருவியோடும் அடுத்த கையில் புத்தகங்கள்கொண்ட ஒரு பையோடும், காப்பித் தோட்டங்களில், தோப்புகளில், வேறு இடங்களில் செவிகொடுத்துக்கேட்கும் ஆட்களிடம் எங்களைக் கொண்டுசெல்லக்கூடிய கால்தடயங்களை நாங்கள் தொடர்ந்துசெல்வோம். பின்னர், முழுத்தீவிலும் வேலைசெய்து முடித்தபிறகு, பிக் தீவில் கோஹலாவுக்கு நாங்கள் நியமிப்பு கொடுக்கப்பட்டோம். கோஹலா ஒரு சிறிய கரும்புத்தோப்பாக இருந்தது. இங்கே இந்தோ-ஐரோப்பியரும், பிலிப்பைன்ஸ் நாட்டவரும், சீனர்களும், ஹவாய் நாட்டவரும், ஜப்பானியரும், போர்ச்சுகல் நாட்டவரும் குடியிருந்தனர். ஒவ்வொரு தொகுதியும் அதன் சொந்த பழக்கங்களையும், கருத்துக்களையும், ரசனைகளையும் மதங்களையும் கொண்டிருந்தன.
பயனியர் செய்ய ஆரம்பித்தப்பின் நான் உலகப்பிரகாரமான வேலையை மறுபடியும் செய்யவில்லை. நான் சேமித்துவைத்திருந்த பணத்தில் கொஞ்ச நாட்கள் வாழ்ந்தோம், தேவை எழுந்தபோது, மீன்கொத்தும் ஈட்டி கொண்டு நான் மீன்பிடித்தேன். நான் எப்போதும் மீன்களோடு வீடு திரும்பியது ஆச்சரியமாயிருந்தது. நாங்கள் சாலையோரம் வளர்ந்த காட்டு காய்கறிகளையும் மூலிகைகளையும் பறித்தோம், இவை இரவு சாப்பாட்டு நேரங்களில் எங்கள் தட்டுகளை அலங்கரித்தன. துத்தநாகம் பூசப்பட்ட தகரத்தில் சூட்டடுப்பு ஒன்றை நான் உருவாக்கினேன். மஸாக்கோ ரொட்டி சுட கற்றுக்கொண்டாள். நான் இதுவரை சாப்பிட்டிருப்பதிலேயே மிகச் சிறந்த ரொட்டியாக அது இருந்தது.
நாங்கள் ஒரு கிறிஸ்தவ மாநாட்டிற்காக 1943-ல் ஹானலுலுவுக்குச் சென்றிருந்தபோது, அப்போது ஹவாய் கிளை கண்காணியாக இருந்த டோனால்ட் ஹாஸ்லெட், அங்கே குடிவந்து, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் மோட்டார் வண்டிக்கொட்டிலின் மீது கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய தனி அறையில் தங்கும்படி எங்களை அழைத்தார். கிளையின் சொத்துக்களுக்கு வாயிற்காவலனாக நான் நியமிக்கப்பட்டேன், அடுத்த ஐந்து ஆண்டுகள் அங்கிருந்துகொண்டு நான் பயனியர் சேவையை அனுபவித்தேன்.
எதிர்பாராத ஓர் அழைப்பு
அயல்நாட்டில் சேவைக்காக மிஷனரிகளைப் பயிற்றுவிக்க சங்கம் ஒரு பள்ளியை ஆரம்பித்திருப்பதைக் குறித்து 1943-ல் நாங்கள் கேள்விப்பட்டோம். அதற்குச் செல்ல நாங்கள் எவ்வளவு விரும்பியிருப்போம்! ஆனால் பிள்ளைகளையுடைய குடும்பங்கள் அழைக்கப்படவில்லை, ஆகவே நாங்கள் அதைக் குறித்து அதற்குமேலும் யோசிக்கவில்லை. இருப்பினும், 1947-ல், சகோதரர் ஹாஸ்லெட், ஜப்பானில் அயல்நாட்டு சேவைக்காக ஹவாய் நாட்டைச் சேர்ந்தவர்கள் எவராவது விருப்பமுள்ளவர்களாக இருப்பார்களா என்பதை சங்கம் அறிந்துகொள்ள விரும்புவதாக எங்களிடம் சொன்னார். நாங்கள் என்ன நினைத்தோம் என்று அவர் எங்களிடம் கேட்டார். நான் ஏசாயாவைப் போன்று சொன்னேன்: “என்னை அனுப்பும்.” (ஏசாயா 6:8) என் மனைவியும் அதேபோல உணர்ந்தாள். யெகோவாவின் அழைப்புக்கு பதிலளிப்பது பற்றி எங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.
ஆகவே நாங்கள் மிஷனரிகளாக பயிற்றுவிக்கப்படுவதற்கு உவாட்ச்டவர் பைபிள் கிலியட்டு பள்ளிக்கு வர அழைக்கப்பட்டோம். அழைப்பு எங்கள் மூன்று இளம் பிள்ளைகளையும்கூட உட்படுத்தியது. டோனால்ட் மற்றும் மேபல் ஹாஸ்லெட், ஜெரி மற்றும் யோஷி டோமா மற்றும் எல்சி டனிகாவி ஆகிய மற்ற ஐந்துபேரும்கூட அழைக்கப்பட்டிருந்தனர். ஒன்றாகச் சேர்ந்து நாங்கள் 1948-ன் குளிர்காலத்தில் நியூ யார்க்-ஐ நோக்கி புறப்பட்டோம்.
நாங்கள் கண்டத்தை பேருந்தில் கடந்தோம். மூன்று நாட்கள் பேருந்தில் இருந்த பின்பு, நாங்கள் அனைவரும் களைப்பாயிருந்தோம், இடையில் ஓரிரவு ஹோட்டலில் தங்கிவிட்டு போகலாம் என சகோதரர் ஹாஸ்லெட் யோசனை தெரிவித்தார். பேருந்தைவிட்டு கீழே இறங்கியபோது, ஒரு மனிதன் எங்களை நெருங்கிவந்து கூச்சலிட்டான்: “ஜப்பானியர்கள்! இவர்களை சுட்டுத்தள்ள நான் துப்பாக்கி எடுத்துவர வீட்டுக்குச் செல்கிறேன்!”
“அவர்கள் ஜப்பானியர்கள் அல்ல,” என்றார் சகோதரர் ஹாஸ்லெட். “அவர்கள் ஹவாய் நாட்டவர். உங்களால் வித்தியாசத்தை சொல்லமுடியாதா?” அவருடைய வேகமான கூர்மதியுள்ள பேச்சினால் நாங்கள் தப்பினோம்.
நாங்கள் உண்மையில் 11-வது கிலியட் வகுப்பின் பாகமாக இருந்தோமா? அது அதிசயமான ஒரு கனவுபோல தோன்றியது. அது நிஜம் என்பது விரைவில் தெளிவானது. எங்கள் வகுப்பில், அப்போது உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவராக இருந்த நேதன் H. நார் ஜப்பானில் சாத்தியமான மிஷனரி சேவைக்காக பயிற்றுவிக்கப்பட தெரிந்துகொண்டிருந்த 25 மாணவர்கள் இருந்தனர். நான் ஜப்பானிய மரபுவழியில் வந்தவனாக இருந்ததாலும், கொஞ்சம் ஜப்பானிய மொழி பேசியதாலும், இந்தத் தொகுதி மாணவர்களுக்கு மொழியைக் கற்பிக்க நான் நியமிக்கப்பட்டேன். ஆனால் மொழியில் நான் வல்லுநராக இல்லாத காரணத்தால், இது எளிதாக இல்லை; ஆனால் எப்படியோ நாங்கள் அனைவரும் சமாளித்தோம்!
அந்தச் சமயத்தில் எங்கள் மகன் லாயிக்கு பத்து வயதும், எங்கள் மகள்கள் தெல்மாவுக்கும் சாலிக்கும் எட்டு மற்றும் ஆறு வயதுமாக இருந்தது. நாங்கள் பள்ளியில் இருக்கையில் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களும்கூட பள்ளிக்குச் சென்றார்கள்! பேருந்து ஒன்று காலையில் அவர்களை அழைத்துச்சென்று நாளின் முடிவில் அவர்களை வீட்டுக்கு கொண்டுவந்தது. பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது, லாய் சகோதரர்களோடு சங்கத்தின் பண்ணையில் வேலைசெய்தான், தெல்மாவும் சாலியும் சலவைப் பிரிவில் கைக்குட்டைகளை மடித்தனர்.
அறியப்படாததற்காக மனதை பக்குவப்படுத்துதல்
நாங்கள் 1948, ஆகஸ்ட் 1-ல் கிலியட்டிலிருந்து பட்டம்பெற்றபோது, நாங்கள் எங்கள் நியமிப்பு இடத்துக்குச் செல்ல ஆவலாயிருந்தோம். சகோதரர் ஹாஸ்லெட், மிஷனரிகள் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க எங்களுக்கு முன்னால் சென்றுவிட்டார். கடைசியாக, டோக்கியோவில் இரண்டு-அடுக்கு மாடி வீடு ஒன்றை கண்டுபிடித்தார். பின்னர் 1949, ஆகஸ்ட் 20-ல் எங்கள் குடும்பம் எங்கள் எதிர்கால வீடுநோக்கிப் புறப்பட்டது.
ஜப்பானில் வந்திறங்குவதற்கு முன்னால், நான் அடிக்கடி இந்தக் கிழக்கத்திய நாடு பற்றி யோசித்ததுண்டு. ஜப்பானிய மக்கள் தங்கள் மனித தலைவர்களிடமும் பேரரசனிடமும் அவர்கள் கொண்டிருந்த பற்றுறுதியைக் குறித்து நான் யோசித்துப்பார்த்தேன். அநேக ஜப்பானியர்கள் இந்த மனித ஆட்சியாளர்களுக்காக தங்கள் உயிரையே கொடுத்திருக்கின்றனர். இரண்டாவது உலகப்போரின்போது தற்கொலை படை விமானிகள் தங்கள் விமானத்தை விரோதி போர்க்கப்பலின் புகைப்போக்கிகளை நோக்கி குறிபார்த்து பேரரசனுக்காக உயிர்விட்டிருக்கின்றனர். ஜப்பானிய மக்கள் தங்கள் மனித தலைவர்களுக்கு இவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் உண்மையான ஆண்டவராகிய யெகோவாவை கண்டுபிடிப்பார்களேயானால் அவர்கள் என்ன செய்வார்கள்? என நான் யோசித்தது என் ஞாபகத்துக்கு வருகிறது.
ஜப்பானில் நாங்கள் வந்திறங்கியபோது, முழு தேசத்திலும் ஏழு மிஷனரிகளும் வெகுசில பிரஸ்தாபிகளுமே இருந்தனர். நாங்கள் அனைவரும் வேலைசெய்ய ஆரம்பித்தோம், நான் என்னுடைய மொழி அறிவை விருத்திசெய்துகொள்ள பாடுபட்டேன், தங்கள் இருதயங்களில் கடவுளைநோக்கி கூப்பிட்டுக்கொண்டிருந்த அநேகரோடு என்னால் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முடிந்தது. அந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர்களில் அநேகர் இன்று வரையாக உண்மையுள்ளவர்களாக தொடர்ந்து இருந்துவருகிறார்கள்.
எங்கள் பிள்ளைகளோடு மிஷனரி சேவை
மூன்று சிறு பிள்ளைகளை கவனித்துக்கொண்டு எங்களால் எவ்வாறு மிஷனரி சேவையை சமாளிக்க முடியும்? ஆம், அவை அனைத்துக்கும் பின்னால் யெகோவாவே பலமாக இருந்தார். சங்கத்திடமிருந்தது ஒரு சிறிய தொகை பணம் பெற்றுவந்தோம், மாஸாக்கோ பிள்ளைகளுக்குத் துணிகளைத் தைத்தாள். மேலுமாக என்னுடைய பெற்றோரும் சிறிதளவு எங்களுக்கு உதவிசெய்தார்கள்.
ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்த பிறகு, லாய் சிறிது காலம், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியின் ஜப்பான் கிளை அலுவலகத்தில் பணிபுரிந்தான். இருப்பினும், உடல்நல பிரச்னைகளின் காரணமாக, அவன் சிகிச்சைக்காக ஹவாய்க்குத் திரும்ப தீர்மானித்தான். அவனும் அவனுடைய மனைவியும் இப்பொழுது கலிபோர்னியாவில் யெகோவாவை உண்மையுடன் சேவித்துவருகிறார்கள். அவனுடைய திருமணம், நாங்கள் நான்கு உண்மையுள்ள பேரப்பிள்ளைகளால் ஆசீர்வதிக்கப்படுவதில் விளைவடைந்தது. அவர்கள் அனைவரும் முழுக்காட்டப்பட்டவர்கள், ஒருவர் தன் மனைவியோடு சேர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமைக்காரியாலயமாகிய புரூக்லின் பெத்தேலில் சேவைசெய்துவருகிறார்.
என்னுடைய மகள்கள் தெல்மாவும் சாலியும் வளர்ந்து பெரியவர்களானபோது மிஷனரி அந்தஸ்து அளிக்கப்பட்டார்கள். தெல்மா தற்போது டாய்மா நகரில் ஒரு மிஷனரியாக சேவித்துவருகிறாள். சாலி ஒரு மிஷனரி சகோதரர் ரான் ட்ராஸ்ட்-ஐ திருமணம்புரிந்து, அவர்கள் 25-க்கும் மேலான ஆண்டுகளாக பிரயாண வேலையில் மிஷனரிகளாக ஜப்பானில் சேவைசெய்துவருகிறார்கள்.
வடக்கிலிருந்து தெற்கு வரையாக
டோக்கியோவில் இரண்டு ஆண்டுகள் செலவழித்த பின்னர், நாங்கள் இரண்டாண்டுகள் ஓசாக்காவுக்கு அனுப்பப்பட்டோம். எங்கள் அடுத்த நியமிப்பு மேலே வடக்கே செண்டாயாக இருந்தது. இங்கே நாங்கள் சுமார் ஆறு ஆண்டுகள் சேவித்தோம். செண்டாயிலிருந்த அந்த வருடங்கள், ஜப்பானின் வடக்கோடி தீவான ஹொக்கைடோவில் நியமிப்புகளுக்கு எங்களைப் பக்குவப்படுத்திற்று. ஹொக்கைடோவில்தானே எங்கள் மகள்கள் மிஷனரி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டார்கள். அங்கேயும்கூட சிலசமயங்களில் பூஜியத்திற்கும் கீழ்சென்றுவிட்ட குளிர்க்கால தட்பவெப்பங்களுக்கு எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதாக இருந்தது. வெப்பமண்டல ஹாவாயில் இருந்தபின்னர் இது உண்மையான ஒரு மாற்றமாக இருந்தது!
பின்னர், ஒரு நாள் சங்கத்திலிருந்து வந்த ஒரு கடிதத்தின் வடிவில் புதிய ஓர் அழைப்பு எனக்கு வந்தது. அது இன்னும் ஐ.மா.-வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஓக்கின்னாவாவில் ஒரு கிளை அலுவலகத்தை திறக்கும்படி என்னை கேட்டுக்கொண்டது. ஜப்பானிலுள்ள குளிரான வடகோடி முனையிலிருந்து இப்போது ஜப்பானின் தென்கோடி எல்லையாக இருக்கிற இடத்துக்கு இடம்பெயர்ந்து வருதல் பெரிய சவாலாக இருந்தது. நான் என்ன செய்வேன்? நான் தகுதியற்றவனாக உணர்ந்தபோதிலும், எப்போதும் போலவே என்னுடைய உண்மையுள்ள மனைவியோடுகூட 1965 நவம்பரில் ஓக்கின்னாவா வந்து சேர்ந்தேன். ஓக்கின்னாவாவில் வாழ்க்கை ஜப்பானிலிருந்தது போலவே இருக்குமா? கலாச்சாரத்தைப் பற்றி என்ன? மக்கள் யெகோவாவுடைய இரட்சிப்பின் செய்திக்குப் பிரதிபலிப்பார்களா?
நாங்கள் வந்தபோது, ஒக்கின்னாவாவில் 200-க்கும் குறைவான பிரஸ்தாபிகளே இருந்தனர். இப்பொழுது அங்கே 2,000-க்கும் மேல் இருக்கிறார்கள். ஆரம்ப நாட்களில், நான் ஒரு பகுதிநேர வட்டார கண்காணியாகவும் பகுதிநேர கிளை கண்காணியாகவும் இருந்தேன். தீவுகள் முழுவதிலுமாக பிரயாணம்செய்வது, அங்கிருந்த சகோதரர்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்ள எனக்கு உதவியது, அவர்களுக்கு சேவை செய்ததை நான் ஒரு சிலாக்கியமாக கருதுகிறேன்.
பிரச்னைகள் இல்லாமா?
எங்கள் மிஷனரி வாழ்க்கைப்பணி ஒன்றும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஐக்கிய மாகாணங்களில் 1968-ல் விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தபோது, மாஸாக்கோ நோய்வாய்ப்பட்டாள், அவளுக்கு ஓர் அறுவைசிகிச்சை தேவைப்பட்டது. அவள் குடலிலிருந்து ஒரு கட்டி அகற்றப்பட்டது, பின்னர் அவள் குறிப்பிடத்தக்க வகையில் தேறிவந்தாள். மருத்துவ காப்பீடு எங்களுக்கு இருக்கவில்லை, ஆகவே ஒருவேளை எங்களால் எங்களுடைய நியமிப்பு இடத்துக்கு திரும்பிவரமுடியாதோ என்று எங்களுக்கு கவலையாக இருந்தது. இருப்பினும் விசுவாசத்திலிருந்த நண்பர்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
என்னைப் பொருத்தவரையில், நான் சர்க்கரைவியாதியுள்ளவர்களுக்கு பொதுவாய் இருக்கும் பிரச்னைகளோடு வாழ்ந்துவருகிறேன். குருடாக இல்லாவிட்டாலும் என் பார்வை மோசமாக மங்கிவிட்டது. ஆனால் யெகோவாவின் கிருபையின் மூலமாக, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் டேப் பதிவுகளைக் கேட்பதன் மூலம் ஒழுங்காக ஆவிக்குரிய போஷாக்கை நான் பெற்றுவருகிறேன். விசுவாசத்திலுள்ள சகோதர சகோதரிகளும்கூட பல்வேறு கட்டுரைகளை வாசித்துக்காண்பிப்பதன் மூலம் எனக்கு உதவியாக இருக்கிறார்கள்.
ஆனால் மங்கலான கண்பார்வையோடு என்னால் தொடர்ந்து பொதுப்பேச்சுகளைக் கொடுக்க முடியுமா? முதலில் நான் என்னுடைய பேச்சுக்களைப் பதிவுசெய்துவைத்துக்கொண்டு ஒலி அமைப்பின் மூலம் அதை இயக்கிவிட்டு நான் சைகைசெய்தேன். எனினும், என்னுடைய மகளின் ஆலோசனையின் பேரில் நான் இதை அபிவிருத்தி செய்தேன். இப்பொழுது நான் என்னுடைய பேச்சுக்களை ஒரு சிறிய ஒலிப்பதிவு கருவியில் பதிவுசெய்துகொண்டு, ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட என்னுடைய பேச்சை ஒலிவாங்கும் கருவியில் கேட்டுக்கொண்டே அவற்றை நான் கொடுத்தேன்.
நாங்கள் உண்மையான பிரச்னைகளை எதிர்ப்பட்டபோதெல்லாம், யெகோவாவை நோக்கி கூப்பிட ஒருபோதும் தவறவில்லை. கடைசியாக, யெகோவா பிரச்னைகளைத் தீர்ப்பதிலிருந்து வந்த ஆசீர்வாதங்கள் எப்போதுமே பிரச்னைகளாகத் தோன்றியவற்றைக் காட்டிலும் சிறப்பானவையாக இருந்தன. நம்முடைய நன்றியறிதலைக் காண்பிக்க ஒரே வழி, அவருடைய சேவையில் தொடர்ந்திருப்பதே ஆகும்.
ஒக்கின்னாவாவில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் ஜப்பானில் முதல்முதலாக அடியெடுத்து வைத்தபோது சேவைசெய்த அதே இடத்துக்கே மறுபடியுமாக நாங்கள் நியமிப்புபெற்றோம். சங்கத்தின் தலைமை அலுவலகமும் அதனுடைய மிகப்பெரிய மிஷனரி இல்லமும் அநேக ஆண்டுகளுக்கு முன்னால் டோக்கியோவில் சகோதரர் ஹாஸ்லெட் வாங்கியிருந்த இரண்டு-மாடி கட்டிடம் இருந்த அதே இடத்தில் அமைந்திருக்கிறது.
மாஸாக்கோவையும் என்னையும் தவிர, எங்கள் உறவினர்களில் 11 பேர் ஜப்பானில் இப்பொழுது மிஷனரிகளாக சேவித்துவருகிறார்கள். பிரதானமாக புத்த மற்றும் ஷின்டோ கலாச்சாரங்களையுடைய இந்தத் தேசத்துக்கு யெகோவா கொண்டுவந்திருக்கும் வளர்ச்சியைக் காண்பதை அனைவரும் மிகப் பெரிய ஒரு சிலாக்கியமாக கருதுகிறார்கள். ஜப்பானில் வேலை சிறிய ஆரம்பங்களையுடையதாக இருந்தது, ஆனால் யெகோவாவின் வல்லமை 1,67,000-க்கும் மேலான நற்செய்தியின் பிரஸ்தாபிகளைக்கொண்ட ஒரு “தேசமாக” இதை படிப்படியாக முன்னேறச்செய்திருக்கிறது.—ஏசாயா 60:22.
நான் கடவுளை நோக்கி கூப்பிட்டபோது, அவர் எனக்கு பதிலளித்தார். அவர் என்னை அழைத்தபோது நான் உடன்பாடாக பதிலளித்தேன். என் மனைவியும் நானும் நாங்கள் செய்யவேண்டியதை மாத்திரமே செய்திருப்பதாக உணருகிறோம். உங்களைப் பற்றி என்ன? உங்கள் சிருஷ்டிகர் அழைக்கையில் நீங்கள் பதிலளிக்கிறீர்களா? (w92 11/1)
[பக்கம் 28-ன் படம்]
டோகரா தம்பதியினர் 1942-ல் ஹவாயில் தங்கள் பயனியர் கூட்டாளிகளோடு
[பக்கம் 29-ன் படம்]
டோகரா பிள்ளைகள் 1948-ல் கிலியட்டில்
[பக்கம் 31-ன் படம்]
அழைப்புக்குப் பதிலளித்த சந்தோஷத்தோடு, ஷின்னேஷியும் மாஸாக்கோ டோகராவும் மிஷனரி சேவையில் 43 ஆண்டுகளைப் பூர்த்திசெய்திருக்கிறார்கள்