வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எபிரெயர் 11:26-ல். மோசே “கிறிஸ்து”வாகப் பேசப்படுகிறாரா அல்லது அவர் இயேசு கிறிஸ்துவின் ஒரு மாதிரியாக இருந்தாரா?
மோசேயின் விசுவாசத்தைப்பற்றி கலந்தாலோசிக்கையில், மோசே “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்,” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 11:26) பவுல் ஏதோவொரு அர்த்தத்தில் மோசேயைக் “கிறிஸ்து” அல்லது அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகக் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.
மறுப்புக்கிடமின்றி, மோசே வரவிருந்த மேசியாவுக்கு பல வழிகளில் மாதிரியை வகுத்தார். மோசே தானே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தபோதிலும், ‘அவரைப் போல’ வருகிறவரான அவரைவிட பெரிய தீர்க்கதரிசியைப்பற்றி முன்னறிவித்தார். அவரைப் பின்பற்றியவர்கள் உறுதிசெய்தபடி, இயேசுதான் “தீர்க்கதரிசியானவர்” என்று யூதர்கள் உணர்ந்தனர். (உபாகமம் 18:15-19; யோவான் 1:21; 5:46; 6:14; 7:40; அப்போஸ்தலர் 3:22, 23; 7:37) மோசே நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும் இருந்தார்; ஆனால் இயேசு மகிமையான புது உடன்படிக்கையான “விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராய்” ஒரு “முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும்” பெற்றார். (எபிரெயர் 8:6; 9:15; 12:24; கலாத்தியர் 3:19; 1 தீமோத்தேயு 2:5) ஆகவே சில வழிகளில், மோசே வரபோகிறவரான மேசியாவின் ஒரு மாதிரியாக இருந்ததாகச் சொல்லப்படலாம்.
இருந்தாலும், அதுவே எபிரெயர் 11:26-ன் அடிப்படை அர்த்தமாக இருப்பதாகத் தோன்றவில்லை. மேசியாவுக்காக அல்லது அவருடைய பிரதிநிதியாக என்பதாக அறிந்து உணர்ந்து எகிப்தில் அவர் கடந்து சென்ற கட்டங்களை பாக்கியம் என்று நினைக்குமளவிற்கு மேசியாவைக்குறித்த விவரங்களை மோசே அறிந்திருந்தார் என்பதற்கு எவ்வித அறிகுறியுமில்லை.
எபிரெயர் 11:26-லுள்ள பவுலின் வார்த்தைகள், கிறிஸ்தவர்கள் ‘கிறிஸ்துவினுடைய பாடுகளை’ அனுபவித்தார்கள் என்ற அவருடைய குறிப்பைப்போன்ற ஒரு பொருளைக் கொண்டிருக்கிறது என்பதாகச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். (2 கொரிந்தியர் 1:5) இயேசு கிறிஸ்து பாடுபட்டிருக்கிறார் என்று அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தார்கள்; அவர்களும் ‘சேர்ந்து பாடுபட்டால் சேர்ந்து பரலோகத்தில் மகிமைப்படுவார்கள்’ என்றும் அறிவார்கள். ஆனால் வரவிருக்கும் மேசியா என்ன பாடுபடுவார் என்று மோசே அறிந்திருக்கவுமில்லை; மோசேக்கு பரலோக நம்பிக்கையும் இருக்கவில்லை.—ரோமர் 8:17; கொலோசெயர் 1:24.
எப்படி மோசே “பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்,” என்பதற்கு ஓர் எளிதான புரிந்துகொள்ளுதல் இருக்கிறது.
எபிரெயர் 11:26-ல் “கிறிஸ்து” என்று பவுல் எழுதியபோது, அவர் கிறிஸ்டெள என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார்; இது எபிரெய மஷியாக் அல்லது மேசியாவுக்கு சமமான வார்த்தையாகும். “மேசியா” மற்றும் “கிறிஸ்து” என்ற இருவார்த்தைகளும் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள்படும். ஆகவே பவுல், மோசே ‘அபிஷேகம் பண்ணப்பட்டவராக வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணியதைப்பற்றி’ எழுதினார். மோசே தானே “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று அழைக்கப்படலாமா?
ஆம். பைபிள் காலங்களில், ஓர் ஆள், அவருடைய தலையில் எண்ணெய் ஊற்றப்படுவதன்மூலமாக, ஒரு விசேஷித்த வேலைக்கு உறுதிசெய்யப்படுவார். “அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் [சவுலின்] தலையின்மேல் வார்த்”தான். “அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, [தாவீதை] அவன் சதோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் [ஆவி, NW] தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார் [இறங்கியிருந்தது, NW].” (1 சாமுவேல் 10:1; 16:13; ஒத்துப்பார்க்கவும் யாத்திராகமம் 30:25, 30; லேவியராகமம் 8:12; 2 சாமுவேல் 22:51; சங்கீதம் 133:2.) இருப்பினும், தீர்க்கதரிசியாகிய எலிசா மற்றும் சீரியா ராஜாவாகிய ஆசகேலைப்போன்ற சிலர்மேல், சொல்லர்த்தமான எண்ணெய் ஊற்றப்பட்டதாக எந்த அத்தாட்சியும் இல்லாவிட்டாலுங்கூட ‘அபிஷேகம் பண்ணப்பட்டதாக’ சொல்லப்படுகின்றனர். (1 இராஜாக்கள் 19:15, 16; சங்கீதம் 105:14, 15; ஏசாயா 45:1) எனவே, ஒரு நபர் தெரிந்துகொள்ளப்படுதல் அல்லது விசேஷவேலைக்காக நியமிக்கப்படுதல்மூலம் ‘அபிஷேகம் பண்ணப்படலாம்.’
இந்த அர்த்தத்தில் மோசே தானே கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவராக இருந்தார்; சில பைபிள் மொழிபெயர்ப்புகள் எபிரெயர் 11:26-ல் “கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவர்” அல்லது “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்பதாகக் குறிப்பிடுகின்றன. மோசே யெகோவாவின் பிரதிநிதியாகவும் இஸ்ரவேலை எகிப்திலிருந்து கொண்டுவரும்படியாக வழிநடத்துபவராகவும் நியமிக்கப்பட்டார். (யாத்திராகமம் 3:2-12, 15-17) மோசே எகிப்தின் செல்வம் மற்றும் மகிமையின் மத்தியில் வளர்க்கப்பட்டிருந்தாலும் அவர் இந்த வேலையை பெரும் பொக்கிஷமாகக் கருதி, அதை ஏற்று நிறைவேற்றினார். அதற்கிசைவாகவே, மோசே “எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்,” என்று பவுலால் எழுத முடிந்தது.