வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவர் நோய்வாய்ப்பட்டு அல்லது பிரயாணப்பட்டுக் கொண்டிருப்பதால் நினைவுநாள் ஆசரிப்புக்கு ஆஜராக முடியவில்லை என்றால், ஒரு மாதத்திற்குப்பின் அவர் அதை ஆசரிக்க வேண்டுமா?
பண்டைய இஸ்ரவேலில், நிசான் (அல்லது, ஆபிப்) என்று பெயரிடப்பட்ட முதல் மாதத்தின் 14-ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் பஸ்கா ஆசரிக்கப்பட்டது. ஆனால் எண்ணாகமம் 9:10, 11-ல் நாம் ஒரு விசேஷ ஏற்பாட்டைக் காண்கிறோம்: “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும். அவர்கள் அதை இரண்டாம் மாதம் [ஈயார், அல்லது சீப் என்ற பெயர்கொண்ட] பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,” ஆசரிக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றனர்.
எந்த ஓர் இஸ்ரவேலன் அல்லது ஒரு குடும்பம், தங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கும் விதத்தில், பஸ்காவிற்கு இரண்டு மாற்று தேதிகளை (நிசான் 14 அல்லது சீப் 14) இது ஸ்தாபிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். இரண்டாம் மாதத்தில் பஸ்கா போஜனத்திற்கான ஏற்பாடு வரையறுக்கப்பட்டதாய் இருந்தது. நிசான் 14 அன்று ஆசாரமுறைப்படி அசுத்தமாக அல்லது வழக்கமாக ஆசரிப்பு செய்யப்படும் இடத்திலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் ஓர் இஸ்ரவேலனுக்கு இது விதிவிலக்காக இருந்தது.
புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் ஆசரிப்பை உண்மையுள்ள எசேக்கியா ராஜா புதுப்பித்த சமயம்தான் இது பரவலாக பயன்படுத்தப்பட்ட பதிவுசெய்யப்பட்ட ஒரே நிகழ்வாக இருக்கிறது. முதல் மாதத்தில் தயார் செய்வதற்குப் போதிய நேரம் இல்லாதிருந்தது (ஆசாரியர்களும் தயாராக இருக்கவில்லை, ஜனங்களும் கூடவில்லை); ஆகவே அது இரண்டாம் மாதம் 14-ஆம் தேதி அன்று ஆசரிக்கப்பட்டது.—2 நாளாகமம் 29:17; 30:1-5.
அத்தகைய விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, யூதர்கள் பஸ்காவைக் கடவுள் குறிப்பிட்ட தேதியிலே ஆசரித்தனர். (யாத்திராகமம் 12:17-20, 41, 42; லேவியராகமம் 23:5) இயேசுவும் அவருடைய சீஷர்களும், இந்தத் தேதியை அற்பமான நிகழ்வாகக் கொள்ளாமல், நியாயப்பிரமாண சட்டம் தேவைப்படுத்தியபடியே ஆசரித்தனர். லூக்கா அறிவிக்கிறார்: “பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. அப்பொழுது [இயேசு] பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.”—லூக்கா 22:7, 8.
அந்தச் சமயத்தில், கிறிஸ்தவர்களால் கர்த்தருடைய இராப்போஜனம் என்றழைக்கப்படும் வருடாந்தர ஆசரிப்பை இயேசு நிறுவினார். கிறிஸ்தவர்கள் அதற்கு ஆஜராய் இருப்பதை எவ்வளவு அழுத்திக்காண்பித்தாலும் மிகையாகாது. யெகோவாவின் சாட்சிகளுக்கு, வருடத்தில் இதுவே மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கிறது. ஏன் என்று இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன; அவர் சொன்னார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (லூக்கா 22:19) இவ்வாறாக, ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் பல மாதங்களுக்கு முன்னதாகவே, அந்த ஆசரிப்புத் தினத்தன்று வேறு எந்த அலுவலும் இல்லாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய இராப்போஜனம் செவ்வாய் கிழமை, ஏப்ரல் 6, 1993 அன்று, உள்ளூரில் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் ஆசரிக்கப்பட்டது.
நோய் அல்லது பிரயாண சிக்கல்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளாலான அரிய சம்பவங்கள், ஒரு கிறிஸ்தவரை, அவன் அல்லது அவள் திட்டமிட்டப்படி அங்கு ஆஜராயிருப்பதிலிருந்து தடை செய்யக்கூடும். அவ்விதமான நிலைமையில் என்ன செய்யப்படவேண்டும்?
அந்த ஆசரிப்பின்போது, புளிப்பில்லாத ரொட்டியும் சிவந்த திராட்சரசமும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் சுற்றி அனுப்பப்படுகிறது; கடவுளுடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு பரலோக வாழ்க்கைக்காகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அதில் பங்கெடுக்கின்றனர். (மத்தேயு 26:26-29; லூக்கா 22:28-30) ஒவ்வொரு வருடமும் பங்கெடுத்துக்கொண்டிருந்த ஒருவர், இந்த வருடம் நோய்காரணமாக வீட்டிலோ ஒரு மருத்துவமனையிலோ படுத்தபடுக்கையிலேயே இருக்கிறார் என்றால், உள்ளூர் சபையின் மூப்பர்கள், அவர்களில் ஒருவர் அந்த நோயாளிக்கு கொஞ்சம் ரொட்டியையும் திராட்சரசத்தையும் எடுத்துச்சென்று, அந்தப் பொருளின்பேரிலுள்ள பொருத்தமான பைபிள் வசனங்களைக் கலந்தாலோசித்து, அந்தச் சின்னங்களைப் பரிமாறும்படி ஏற்பாடு செய்வார்கள். ஓர் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவன் தன்னுடைய சொந்த சபையிலிருந்து தொலைவில் இருந்தால், அந்தத் தேதியில் அவர் இருக்கும் பகுதியிலுள்ள சபைக்குச் செல்லும்படியாக அவர் ஏற்பாடு செய்யவேண்டும்.
இதன் காரணமாக, மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில்தானே, எண்ணாகமம் 9:10, 11-ன் கட்டளைப்படியும் 2 நாளாகமம் 30:1-3, 15-ன் உதாரணத்தின்படியும், ஓர் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர் கர்த்தருடைய இராப்போஜனத்தை 30 நாட்கள் கழித்து (ஒரு சந்திர மாதம்) ஆசரிக்கவேண்டியதிருக்கும்.
பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கைக் கொண்டிருக்கும் இயேசுவின் “வேறே ஆடுகள்” வகுப்பைச் சேர்ந்தவர்கள், அந்த ரொட்டி மற்றும் திராட்சரசத்தில் பங்கெடுக்கவேண்டிய கட்டளையின்கீழ் இல்லை. (யோவான் 10:16) வருடாந்தர ஆசரிப்புக்கு ஆஜராவது முக்கியமாக இருக்கிறது; ஆனால் அவர்கள் அந்தச் சின்னங்களில் பங்கெடுப்பதில்லை. எனவே ஒருவர் நோய்வாய்ப்பட்டு அல்லது பிரயாணப்பட்டுக்கொண்டிருப்பதால், அந்த மாலையில் எந்தச் சபையோடும் இல்லை என்றால், அவன் அல்லது அவள் தனிப்பட்ட முறையில் பொருத்தமான வசனங்களை வாசித்து (இயேசு அந்த ஆசரிப்பை நிறுவிய விவரப்பதிவு உட்பட), உலகம் முழுவதிலும் நிகழும் அந்த நிகழ்ச்சியின்மேல் யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், ஒரு கூட்டத்திற்காகக் கூடுதலான ஏற்பாட்டிற்கோ ஒரு மாதம் கழித்து ஒரு விசேஷ பைபிள் கலந்தாலோசிப்பிற்கோ எந்தத் தேவையுமில்லை.