விசுவாசத்திற்காக பகைக்கப்பட்டார்கள்
“என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.”—மத்தேயு 10:22.
1, 2. யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளை கடைப்பிடிப்பதால் சகித்திருக்கிற சில நிஜவாழ்க்கை அனுபவங்களை உங்களால் கூற முடியுமா?
கிரீட்தீவைச் சேர்ந்த நேர்மையான கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். ஒரு தடவை இரண்டு தடவை அல்ல, ஏகப்பட்ட தடவை. அடிக்கடி கிரேக்க நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார். மனைவியையும் ஐந்து பிள்ளைகளையும் பிரிந்து மொத்தமாக ஆறு வருஷங்களுக்குமேல் சிறையில் இருக்கிறார். ஜப்பானில் 17 வயது மாணவன் ஒருவன் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறான், ஆனால் நல்நடத்தை உள்ளவன், 42 மாணவர்களில் இவர்தான் வகுப்பிலேயே முதலிடம். பிரான்ஸில் டஜன்கணக்கானோர் எந்தவித முன்னறிவிப்புமின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர், ஆனால் இவர்கள் சுறுசுறுப்பானவர்கள், மனசாட்சியோடு வேலைபார்ப்பவர்கள் என நற்பெயர் பெற்றவர்கள். இந்த நிஜவாழ்க்கை அனுபவங்கள் எல்லாவற்றிலும் இழையோடும் ஒற்றுமை என்ன?
2 இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் செய்த “குற்றம்”? அடிப்படையில், தங்களுடைய மத நம்பிக்கைகளை கடைப்பிடித்ததே. இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து, மற்றவர்களிடம் தன்னுடைய மதத்தைப் பற்றி அந்தக் கடைக்காரர் பேசி வந்தார். (மத்தேயு 28:19, 20) மதம் மாற்றுவது பெருங்குற்றம் என்ற காலாவதியான கிரேக்க சட்டத்தின்படி அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார். அந்த மாணவன் கென்டோ (ஜப்பானிய வாள்வீச்சு கலை) பயிற்சிகளில் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி அதைச் செய்ய அனுமதிக்காததன் காரணமாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான். (ஏசாயா 2:4) பிரான்ஸில் வேலை செய்தவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற ஒரே காரணத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்டனர் என சொல்லப்பட்டது.
3. யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலானோருக்கு மற்றவர்களிடமிருந்து வரும் துன்பங்கள் ஏன் அரிதான ஒன்று?
3 சமீப காலத்தில், யெகோவாவின் சாட்சிகள் சில நாடுகளில் இத்தகைய கொடூரமான அனுபவங்களைத்தான் சகித்து வருகிறார்கள். ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலானோர் மற்றவர்களால் துன்புறுத்தப்படுவது அரிதாக நிகழ்வதே. யெகோவாவின் சாட்சிகளுக்கு தீங்கிழைக்க விரும்புகிறவர்களும்கூட எந்தக் குறையையும் காணமுடியாதளவுக்கு உலகமுழுவதிலும் சாட்சிகள் நல்நடத்தைக்கு பெயர்பெற்றவர்கள். (1 பேதுரு 2:11, 12) அவர்கள் சதி செய்வதுமில்லை, தீங்கிழைப்பதுமில்லை. (1 பேதுரு 4:15) மாறாக, முதலாவது கடவுளுக்கும் அதன்பின் அரசாங்கத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்ற பைபிள் அறிவுரையின்படி வாழ முயற்சி செய்கின்றனர். சட்டப்படி வரி செலுத்துகின்றனர், ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்க’ முயற்சி செய்கின்றனர். (ரோமர் 12:18; 13:6, 7; 1 பேதுரு 2:13-17) சட்டங்களுக்கும் குடும்ப தராதரங்களுக்கும் ஒழுக்கநெறிகளுக்கும் மரியாதை காண்பிக்கும்படியே பைபிள் கல்வி வேலையில் பிறரை உற்சாகப்படுத்துகின்றனர். சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் பிரஜைகள் என பல அரசாங்கங்கள் இவர்களை பாராட்டியிருக்கின்றன. (ரோமர் 13:3) ஆனாலும், முதல் பாராவில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, சில சமயங்களில் அவர்கள் எதிர்ப்புக்கு இலக்காகியிருக்கின்றனர்—சில நாடுகளில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கின்றனர். இது நமக்கு ஆச்சரியமளிக்க வேண்டுமா?
சீஷராவதற்கான ‘செலவு’
4. இயேசு சொன்னபடி, அவருடைய சீஷராகையில் ஒருவர் எதை எதிர்பார்க்கலாம்?
4 தம்முடைய சீஷராயிருப்பதில் என்ன உட்பட்டுள்ளது என்பதைக் குறித்ததில் இயேசு கிறிஸ்து எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை. “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல” என்று தம்முடைய சீஷர்களிடம் சொன்னார். “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்.” ‘காரணமில்லாமல்’ (பொ.மொ.) இயேசு பகைக்கப்பட்டார். (யோவான் 15:18-20, 25; சங்கீதம் 69:4; லூக்கா 23:22) அவருடைய சீஷர்களும் இதையே, அதாவது நியாயமான காரணமின்றி எதிர்க்கப்படுவதையே எதிர்பார்க்கலாம். “எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” என இயேசு பலதடவை அவர்களை எச்சரித்தார்.—மத்தேயு 10:22; 24:9.
5, 6. (அ) சீஷர்களாகப் போகிறவர்கள் ‘செல்லுஞ்செலவை கணக்குப் பார்க்கும்படி’ என்ன காரணத்திற்காக இயேசு உந்துவித்தார்? (ஆ) அப்படியானால், நாம் எதிர்ப்பை எதிர்ப்படுகையில் ஏன் தடுமாற்றம் அடைய வேண்டியதில்லை?
5 தம்முடைய சீஷர்களாகப் போகிறவர்களை, ‘செல்லுஞ்செலவை கணக்குப் பார்க்கும்படி’ இயேசு உந்துவித்தார். (லூக்கா 14:30) ஏன்? அவருடைய சீஷர்களாக வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு அல்ல, அதில் உட்பட்டுள்ளதை நிறைவேற்ற திடதீர்மானமாய் இருக்கும்படிக்கே. இந்த சிலாக்கியத்தோடு வரும் எந்த சோதனைகளையும் கஷ்டங்களையும் சகித்திருக்க நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். (லூக்கா 14:27) கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக யெகோவாவை சேவிப்பதற்கு நம்மை யாரும் வற்புறுத்தவில்லை. அது நாமாகவே எடுத்த தீர்மானம்; அது அறிவின் அடிப்படையிலான தீர்மானமும்கூட. கடவுளோடு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஓர் உறவுக்குள் வருவதால் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களோடுகூட, நாம் ‘பகைக்கப்படுவோம்’ என்பதையும் முன்னதாகவே அறிந்திருக்கிறோம். ஆகவே நாம் எதிர்ப்பை எதிர்ப்படுகையில் தடுமாற்றம் அடைவதில்லை. ‘செல்லும் செலவை கணக்குப் பார்த்திருக்கிறோம்,’ அதை செலுத்துவதற்கு நன்கு தயாராயும் இருக்கிறோம்.—1 பேதுரு 4:12-14.
6 சில அரசாங்க அதிகாரிகள் உட்பட, ஏன் சிலர் உண்மை கிறிஸ்தவர்களை துன்புறுத்த விரும்புகின்றனர்? பதிலுக்காக, பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த இரண்டு மதத் தொகுதியினரை ஆராய்வது பயனுள்ளதாய் இருக்கும். இருவருமே பகைக்கப்பட்டனர்—ஆனால் மிகவும் வித்தியாசமான காரணங்களுக்காக.
பகைக்கிறவர்களும் பகைக்கப்பட்டவர்களும்
7, 8. புறஜாதியாரை வெறுத்தொதுக்க வேண்டியதாய் தோன்றிய போதனைகள் யாவை, அதன் விளைவாக யூதர்கள் மத்தியில் என்ன மனநிலை வளர்ந்தது?
7 பொ.ச. முதல் நூற்றாண்டுக்குள், இஸ்ரவேல் ரோம ஆட்சியின்கீழ் வந்தது. பரிசேயர்கள், வேதபாரகர்கள் போன்ற தலைவர்களின் கோரப் பிடியில் யூத மதம் சிக்கியிருந்தது. (மத்தேயு 23:2-4) புறஜாதியாரிடமிருந்து பிரிந்திருப்பது சம்பந்தமாக மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தில் சொல்லப்பட்டவற்றை மதவெறிபிடித்த இந்தத் தலைவர்கள் திரித்துக்கூறி, யூதரல்லாதவர்களை இகழ்ச்சியாக நடத்தினர். இவ்வாறாக, யூத மதத்தினர் புறஜாதியாரை பகைக்கும் மதத்தை உருவாக்கினர், அதனால் புறஜாதியாரின் பகைமைக்கு ஆளாயினர்.
8 புறஜாதியாரை வெறுக்கும்படி பிரசங்கிப்பது யூத தலைவர்களுக்கு கடினமாய் இல்லை. ஏனெனில் அந்தச் சமயத்தில் வாழ்ந்த யூதர்கள், புறஜாதியாரை அருவருப்பான உயிரினங்களாக கருதினார்கள். புறஜாதியாரோடு ஒரு யூதப் பெண் ஒருபோதும் தனியாக இருக்கக் கூடாது என்று அந்த மதத் தலைவர்கள் போதித்தார்கள், ஏனென்றால் அவர்கள் “காமவெறிபிடித்த ஆட்களென சந்தேகிக்கப்பட்டார்கள்.” ஒரு யூத ஆண் “அவர்களுடன் தனியாக” இருக்கக்கூடாது, “ஏனென்றால் அவர்கள் இரத்தம் சிந்துபவர்களென சந்தேகிக்கப்பட்டார்கள்.” ஒரு புறஜாதியான் பால்கறக்கும்போது ஒரு யூதன் அங்கிருந்தால் தவிர, கறக்கப்பட்ட பாலை பயன்படுத்த முடியாது. தங்களுடைய தலைவர்களின் செல்வாக்கால், அந்த யூதர்கள் மற்றவர்களோடு எந்த ஈடுபாடும் வைத்துக்கொள்ளாமல் கண்டிப்புடன் விலகியிருக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டார்கள்.—யோவான் 4:9-ஐ ஒப்பிடுக.
9. யூதரல்லாதவர்களைப் பற்றிய யூத தலைவர்களுடைய போதனைகள் என்ன விளைவை ஏற்படுத்தின?
9 யூதரல்லாதவர்களைப் பற்றிய இப்படிப்பட்ட போதனைகள் யூதருக்கும் புறஜாதியாருக்கும் மத்தியில் நல்ல உறவை வளர்க்கவில்லை. யூதர்கள் எல்லா மனிதவர்க்கத்தினரையும் பகைப்பவர்கள் என புறஜாதியார் நினைக்க ஆரம்பித்தனர். “மற்ற மனிதகுலத்தவரை விரோதிகளைப் போல பகைத்தனர்” என யூதர்களைப் பற்றி ரோம சரித்திராசிரியர் டாஸிட்டஸ் (சுமார் பொ.ச. 56-ல் பிறந்தார்) சொன்னார். யூத மதத்திற்கு மாறிய புறஜாதியார் தங்களுடைய நாட்டை துறந்துவிடும்படியும் தங்களுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் மதிக்க வேண்டாம் எனவும் போதிக்கப்பட்டதாக டாஸிட்டஸ் சொன்னார். பொதுவாக, யூதர்களை ரோமர்கள் பொறுத்துக்கொண்டனர், ஏனென்றால், எதிர்த்துநிற்க முடியாதளவுக்கு அவர்கள் ஏராளமாயிருந்தனர். ஆனால் பொ.ச. 66-ல் யூதர்கள் கலகத்தில் ஈடுபட்டதால், ரோமர்கள் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தூண்டியது, அது பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு வழிநடத்தியது.
10, 11. (அ) அந்நிய நாட்டவரை எப்படி நடத்தும்படி மோசேயின் நியாயப்பிரமாணம் கூறியது? (ஆ) யூத மதத்திற்கு ஏற்பட்ட காரியத்திலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
10 அந்நிய நாட்டவரைப் பற்றிய இந்த நோக்கு, நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டுள்ள வணக்க முறையுடன் எவ்வாறு ஒத்திருந்தது? புறதேசத்தாரிடமிருந்து பிரிந்திருப்பதை நியாயப்பிரமாணம் ஊக்கப்படுத்தியது, ஆனால் இது இஸ்ரவேலரை, முக்கியமாக அவர்களுடைய தூய வணக்கத்தைப் பாதுகாப்பதற்கே. (யோசுவா 23:6-8) அப்படியிருந்தபோதிலும், அந்நிய ஜாதியார் இஸ்ரவேலரின் சட்டங்களுக்கு அப்பட்டமாக கீழ்ப்படியாமலிருந்தால் தவிர, அவர்களை நியாயமாயும் நேர்மையாயும் நடத்த வேண்டுமென்றும் அவர்களை அன்போடு உபசரிக்க வேண்டுமென்றும் நியாயப்பிரமாணம் கூறியது. (லேவியராகமம் 24:22) அந்நிய ஜாதியாரைப் பற்றிய தெளிவான சட்டங்களின் நியாயமான உட்கருத்தைவிட்டு விலகியதால், இயேசுவின் நாளைய யூத மதத் தலைவர்கள் பகைமையை தோற்றுவித்த ஒரு வணக்க முறையை உருவாக்கினார்கள், எனவே இந்த மதம் அந்நிய ஜாதியாரால் பகைக்கப்பட்டது. முடிவில், முதல் நூற்றாண்டு யூத தேசம் யெகோவாவின் தயவை இழந்தது.—மத்தேயு 23:38.
11 இதிலிருந்து நமக்கு ஏதாவது பாடம் இருக்கிறதா? ஆம், நிச்சயமாகவே இருக்கிறது. நம்முடைய மத நம்பிக்கைகளை பின்பற்றாதவர்களை தாழ்வாக கருதுகிற சுயநீதியும் செருக்குமிக்க மனப்பான்மை யெகோவாவின் தூய வணக்கத்தை சரியாக பிரதிநிதித்துவம் செய்வதில்லை, அது அவரைப் பிரியப்படுத்துவதும் இல்லை. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களை யோசித்துப் பாருங்கள். கிறிஸ்தவரல்லாதவர்களை அவர்கள் பகைக்கவுமில்லை, ரோமர்களுக்கு எதிராக கலகம் செய்யவுமில்லை. இருப்பினும், அவர்கள் ‘பகைக்கப்பட்டார்கள்.’ ஏன்? யாரால்?
பூர்வகால கிறிஸ்தவர்கள்—யாரால் பகைக்கப்பட்டார்கள்?
12. கிறிஸ்தவரல்லாதவர்களிடம் தம்முடைய சீஷர்கள் சமநிலையான நோக்கை கொண்டிருக்க இயேசு விரும்புகிறார் என்பது எவ்வாறு பைபிளிலிருந்து தெளிவாகிறது?
12 கிறிஸ்தவரல்லாதவர்களை சமநிலையுடன் நோக்கும்படியே இயேசு தம்முடைய சீஷர்களிடம் எதிர்பார்த்தார் என்பதை அவருடைய போதனைகள் தெளிவாக காட்டுகின்றன. ஒருபுறத்தில், தம்முடைய சீஷர்கள் உலகிலிருந்து பிரிந்திருப்பார்கள், அதாவது யெகோவாவின் நீதியான தராதரங்களோடு முரண்படுகிற மனப்பான்மைகளையும் நடத்தையையும் வெறுத்தொதுக்குவார்கள் என்று சொன்னார். போர் மற்றும் அரசியல் விஷயங்கள் சம்பந்தமாகவும் நடுநிலைமையுடன் இருப்பார்கள். (யோவான் 17:14, 16) மறுபட்சத்தில், கிறிஸ்தவரல்லாதவர்களை வெறுத்தொதுக்கும்படி பறைசாற்றுவதற்குப் பதிலாக, “சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்றே தம்முடைய சீஷர்களிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 5:44) கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு உந்துவித்தார்: “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு.” (ரோமர் 12:20) ‘யாவருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்றும் சொன்னார்.—கலாத்தியர் 6:10.
13. கிறிஸ்துவின் சீஷர்களை ஏன் யூத மதத் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர்?
13 ஆனாலும், கிறிஸ்துவின் சீஷர்கள் மூன்று தொகுதியினரால் ‘பகைக்கப்பட்டார்கள்.’ முதலாவது, யூத மதத் தலைவர்களால் பகைக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் சீக்கிரத்திலேயே அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தார்கள் என்பதில் ஆச்சரியமில்லை! கிறிஸ்தவர்கள் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடித்தனர், நாணயமிக்கவர்களாயும் இருந்தனர். நம்பிக்கையைத் தூண்டும் செய்தியை அனல் பறக்கும் ஆர்வத்துடன் பிரசங்கித்தார்கள். ஆயிரமாயிரமானோர் யூத மதத்தை விட்டுவிட்டு கிறிஸ்தவத்தை தழுவினார்கள். (அப்போஸ்தலர் 2:41; 4:4; 6:7) யூத மதத் தலைவர்களுடைய கண்களுக்கு இயேசுவின் யூத சீஷர்கள் விசுவாசதுரோகிகளாகவே தெரிந்தார்கள். (அப்போஸ்தலர் 13:45-ஐ ஒப்பிடுக.) சீறியெழுந்த இந்தத் தலைவர்கள் கிறிஸ்தவம் தங்களுடைய பாரம்பரியங்களை மதிப்பற்றதாக்கிவிட்டதென உணர்ந்தார்கள். ஏன், புறஜாதியாரை அவர்கள் நோக்கிய விதத்தையும்கூட கிறிஸ்தவம் கண்டனம் செய்ததே! இதனால் பொ.ச. 36 முதற்கொண்டு புறஜாதியாரும் கிறிஸ்தவர்களாய் ஆகமுடிந்தது, யூத கிறிஸ்தவர்களாக தங்களுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடன் ஒரே சிலாக்கியங்களை அனுபவித்தார்கள்.—அப்போஸ்தலர் 10:34, 35.
14, 15. (அ) கிறிஸ்தவர்கள் புறமத வணக்கத்தாருடைய பகைமையை சம்பாதித்தது ஏன்? உதாரணம் கொடுங்கள். (ஆ) பூர்வ கிறிஸ்தவர்களைப் ‘பகைத்த’ மூன்றாவது தொகுதி எது?
14 இரண்டாவதாக, கிறிஸ்தவர்கள் புறமத வணக்கத்தாருடைய பகைமைக்கு ஆளானார்கள். உதாரணமாக, பூர்வ எபேசுவில், அர்டமிஸ் தேவதைக்கு வெள்ளியில் சிறிய கோயில்கள் கட்டுவது இலாபகரமான தொழிலாக செழித்தோங்கியது. ஆனால் பவுல் அங்கே பிரசங்கித்தபோது, எபேசியர்கள் அநேகர் செவிகொடுத்துக் கேட்டார்கள், அதனால் அர்டமிஸ் வணக்கத்தை விட்டுவிட்டார்கள். தொழில் பாதிக்கப்பட்டதால், வெள்ளி தட்டான்கள் கலகம் செய்தார்கள். (அப்போஸ்தலர் 19:24-41) பித்தினியாவில் (இப்பொழுது வடமேற்கு துருக்கி) கிறிஸ்தவம் பரவிய பிறகு இதேபோன்ற ஒன்று சம்பவித்தது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முடிக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, புறமத கோயில்கள் கைவிடப்பட்டன, பலிக்குரிய மிருகங்களுக்கான தீவனங்களின் வியாபாரமும் பெருமளவில் சரிந்துவிட்டது என்று பித்தினியாவின் ஆளுநராகிய இளைய பிளைனி அறிவித்தார். கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டனர்—துன்புறுத்தவும்பட்டனர்—ஏனெனில் அவர்களுடைய வணக்கம் மிருக பலிகளையும் விக்கிரகங்களையும் அனுமதிக்கவில்லை. (எபிரெயர் 10:1-9; 1 யோவான் 5:21) கிறிஸ்தவம் பரவியதால் புறமத வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா காரியத்திற்கும் பாதிப்பு உண்டானது, தொழிலையும் பணத்தையும் இழந்தவர்கள் சீற்றங்கொண்டார்கள்.
15 மூன்றாவதாக, தேசியவாதிகளான ரோமர்களால் கிறிஸ்தவர்கள் ‘பகைக்கப்பட்டார்கள்.’ முதலில், ரோமர்களுக்கு கிறிஸ்தவர்கள் சிறு தொகுதியினராகவும் ஒருவேளை மதவெறிபிடித்த மதத் தொகுதியினராகவும் தோன்றியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில், ஒரு கிறிஸ்தவரென சொல்வதே மரண தண்டனைக்குரிய குற்றமானது. கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்தும் நேர்மையான பிரஜைகள் ஏன் துன்பத்திற்கும் மரணத்திற்கும் பலியாகிறார்கள்?
பூர்வ கிறிஸ்தவர்கள்—ஏன் ரோம உலகில் பகைக்கப்பட்டார்கள்?
16. என்ன வழிகளில் கிறிஸ்தவர்கள் இந்த உலகிலிருந்து பிரிந்திருக்கின்றனர், ரோம உலகில் இது ஏன் அவர்களை பிரபலமற்றவர்களாக்கியது?
16 முக்கியமாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளை பின்பற்றியதற்காக ரோம உலகில் பகைக்கப்பட்டார்கள். உதாரணமாக, உலகத்திலிருந்து தங்களை பிரித்து வைத்திருந்தார்கள். (யோவான் 15:19) அதனால் அவர்கள் அரசியலில் எந்தவித ஸ்தானத்தையும் வகிக்கவில்லை, இராணுவ சேவையையும் செய்ய மறுத்தார்கள். அதன் விளைவாக, “உலகத்தாருக்கு முன் செத்த மனுஷர்களாயும் வாழ்க்கையின் எந்த காரியத்தையும் செய்ய லாயக்கற்றவர்களாயும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டார்கள்” என்று சரித்திராசிரியர் அகஸ்டன் நியான்டர் சொல்கிறார். உலகத்தின் பாகமல்லாதவர்களாய் இருப்பது, சீர்கெட்ட ரோம உலகின் துன்மார்க்க வழிகளைத் தவிர்ப்பதையும் அர்த்தப்படுத்தியது. “கடவுள்பற்றும் ஒழுங்குமுடைய இந்தச் சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தினர் இன்ப வெறிபிடித்த புறமத உலகத்தாருக்கு தொல்லையாக இருந்தார்கள்” என்று சரித்திராசிரியர் உவில் டியூரன்ட் விளக்குகிறார். (1 பேதுரு 4:3, 4) கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதன் மூலமும் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலமும், தொல்லைமிக்க கிறிஸ்தவர்களை அடக்குவதற்கு ரோமர்கள் முயற்சி செய்திருக்கலாம்.
17. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுடைய பிரசங்கம் பலன்தரத்தக்கதாயிருந்தது என்பதை எது காட்டுகிறது?
17 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் விட்டுக்கொடுக்காமல் மிகவும் வைராக்கியத்துடன் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கித்தனர். (மத்தேயு 24:14) சுமார் பொ.ச. 60-ல், அந்த நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது” என்று பவுலால் சொல்ல முடிந்தது. (கொலோசெயர் 1:23) முதல் நூற்றாண்டின் முடிவிற்குள், இயேசுவின் சீஷர்கள் ரோம சாம்ராஜ்யம் முழுவதும், அதாவது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா முழுவதும் சீஷர்களை உண்டாக்கியிருந்தனர்! “இராயனுடைய அரமனையிலுள்ள” சிலரும்கூட கிறிஸ்தவர்களானார்கள். (பிலிப்பியர் 4:22) இந்த வைராக்கியமான பிரசங்க வேலை கோபத்தைக் கிளறியது. நியான்டர் இவ்வாறு சொல்கிறார்: “எல்லா வகுப்பினர் மத்தியிலும் கிறிஸ்தவம் படிப்படியாக முன்னேறி, தேசிய மதத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கியது.”
18. கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தி செலுத்தியது எவ்வாறு ரோம அரசாங்கத்துடன் முரண்பட்டவர்களாக அவர்களை காட்டியது?
18 இயேசுவின் சீஷர்கள் யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்தினர். (மத்தேயு 4:8-10) மற்றவற்றைவிட அவர்களுடைய வணக்கத்தின் இந்த அம்சம்தான் ஒருவேளை ரோமிலிருந்தவர்களுடன் இவர்களை வித்தியாசமானவர்களாய் காண்பித்தது. பேரரசரை வணங்குவதை பின்பற்றுகிற வரையில் ரோமர்கள் மற்ற மதங்களை சகித்துக்கொண்டனர். பூர்வ கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட வணக்கத்தில் கலந்துகொள்ள முடியாது. ரோம அதிகாரத்தைவிட மேலான ஒரு அதிகாரத்திற்கு, அதாவது யெகோவா தேவனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக தங்களைக் கருதினர். (அப்போஸ்தலர் 5:29) அதன் விளைவாக, ஒரு கிறிஸ்தவர் ஒரு பிரஜையாக வேறு அனைத்து அம்சங்களிலும் எவ்வளவு நல்லவராக இருந்தபோதிலும், அவர் அந்த நாட்டின் விரோதியாகவே கருதப்பட்டார்.
19, 20. (அ) உண்மையுள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி தீயநோக்குடன் அவதூறை பரப்பியதற்கு பெருமளவில் யார் பொறுப்பு? (ஆ) கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் யாவை?
19 ரோம உலகில் உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஏன் ‘பகைக்கப்பட்டார்கள்’ என்பதற்கு மற்றொரு காரணமும் இருந்தது: அவர்கள்மீது சுமத்தப்பட்ட தீயநோக்குடைய அவதூறை உடனடியாக நம்பிவிட்டார்கள், அதற்கு யூத மதத் தலைவர்களே பெருமளவில் பொறுப்பு. (அப்போஸ்தலர் 17:5-8) சுமார் பொ.ச. 60-ல் அல்லது 61-ல், பேரரசர் நீரோவால் விசாரிக்கப்படுவதற்கு பவுல் ரோமில் காத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் கிறிஸ்தவர்களைப் பற்றி செல்வாக்குமிக்க யூதர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கி[றோம்].” (அப்போஸ்தலர் 28:22) அவர்களைப் பற்றிய அவதூறான கதைகளை நீரோ கேட்டார் என்பதில் சந்தேகமில்லை. பொ.ச. 64-ல், ரோமை நாசப்படுத்திய தீயிக்கு நீரோ காரணமென குற்றம்சாட்டப்பட்டபோது, ஏற்கெனவே இழிவாக கருதப்படும் கிறிஸ்தவர்களை நீரோ பலிகடாக்களாக்கியதாக கூறப்படுகிறது. இது, கிறிஸ்தவர்களை பூண்டோடு அழிக்கும் எண்ணத்தோடு கொடூர துன்புறுத்துதல் என்ற அலையை வேகமாய் வீசச் செய்ததாக தெரிகிறது.
20 கிறிஸ்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அப்பட்டமான பொய்களாகவும் அவர்களுடைய நம்பிக்கைகளை திரித்துக் கூறிய கலவையாகவுமே இருந்தன. அவர்கள் ஒரே தெய்வத்தை வணங்குபவர்களாகவும் பேரரசரை வணங்காதவர்களாகவும் இருந்ததால் நாத்திகர்களென முத்திரை குத்தப்பட்டார்கள். கிறிஸ்தவரல்லாத குடும்ப அங்கத்தினர்கள் சிலர் தங்களுடைய கிறிஸ்தவ உறவினர்களை எதிர்த்ததால், கிறிஸ்தவர்கள் குடும்பங்களை பிரிப்பவர்கள் என குற்றம்சாட்டப்பட்டார்கள். (மத்தேயு 10:21) அவர்கள் நரமாம்சம் தின்பவர்களென முத்திரை குத்தப்பட்டார்கள், அந்தக் குற்றச்சாட்டு, கர்த்தருடைய இராப்போஜனத்தில் சொல்லப்பட்ட இயேசுவின் வார்த்தைகளைத் திரித்துக் கூறியதன் விளைவே என்று சில தகவல்மூலங்கள் குறிப்பிடுகின்றன.—மத்தேயு 26:26-28.
21. என்ன இரண்டு காரணங்களுக்காக கிறிஸ்தவர்கள் ‘பகைக்கப்பட்டார்கள்’?
21 ஆகையால், உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் இரண்டு அடிப்படை காரணங்களுக்காக ரோமர்களால் ‘பகைக்கப்பட்டார்கள்’: (1) அவர்களுடைய பைபிள் அடிப்படையிலான பழக்கங்கள், (2) அவர்களுக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுகள். காரணம் எதுவாயிருந்தாலும், கிறிஸ்தவத்தை ஒடுக்குவதே எதிரிகளுடைய நோக்கமாய் இருந்தது. சொல்லப்போனால், மீமானிட எதிரிகளாகிய காணக்கூடாத துன்மார்க்க ஆவி சேனைகளே கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதைத் தூண்டுபவர்கள்.—எபேசியர் 6:12.
22. (அ) யெகோவாவின் சாட்சிகள் ‘யாவருக்கும் நன்மை செய்வதற்கு’ முயலுகிறார்கள் என்பதை என்ன உதாரணம் காட்டுகிறது? (பக்கம் 11-ல் உள்ள பெட்டியைக் காண்க.) (ஆ) அடுத்த கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
22 ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போலவே, நவீன காலங்களில் யெகோவாவின் சாட்சிகள் பல்வேறு நாடுகளில் ‘பகைக்கப்பட்டிருக்கிறார்கள்.’ ஆனால் சாட்சிகள் அல்லாதவர்களை இவர்கள் பகைக்கவில்லை; அரசாங்கங்களுக்கு எதிராக கலகம் செய்வதற்கு ஒருபோதும் மூலகாரணராகவும் இருந்ததில்லை. மாறாக, சமூக, இன, மற்றும் மரபுத் தடைகளைக் கடந்து உண்மையான அன்பை கடைப்பிடிப்பவர்களென உலகமுழுவதும் அறியப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால், அவர்கள் ஏன் துன்புறுத்தப்பட்டார்கள்? எதிர்ப்புக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்? இந்தக் கேள்விகள் அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ தம்மை பின்பற்ற போகிறவர்கள் சீஷராவதால் ஆகும் செலவை கணக்குப் பார்க்கும்படி இயேசு ஏன் உந்துவித்தார்?
◻ யூதரல்லாதவர்களைப் பற்றிய பரவலான கருத்து யூத மதத்தின்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ உண்மையுள்ள பூர்வ கிறிஸ்தவர்கள் எந்த மூன்று தொகுதியினரால் எதிர்ப்பட்டனர்?
◻ என்ன அடிப்படை காரணங்களுக்காக பூர்வ கிறிஸ்தவர்கள் ரோமர்களால் ‘பகைக்கப்பட்டார்கள்’?
[பக்கம் 11-ன் பெட்டி]
‘யாவருக்கும் நன்மை செய்தல்’
‘யாவருக்கும் நன்மை செய்யும்படி’ கொடுக்கப்பட்ட பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் கடினமாய் முயற்சி செய்கின்றனர். (கலாத்தியர் 6:10) நெருக்கடியான காலங்களில், தங்களுடைய மத நோக்குநிலையை கொண்டிராதவர்களுக்கும் உதவும்படி அயலார் மீதான அன்பு அவர்களை உந்துவிக்கிறது. உதாரணமாக, 1994-ல் ருவாண்டாவிலிருந்த ஆபத்தான சூழ்நிலையில், ஐரோப்பாவிலிருந்து வந்த சாட்சிகள் நிவாரண நடவடிக்கைகளில் பங்குகொள்ள உதவுவதற்காக ஆப்பிரிக்காவுக்குச் செல்ல மனமுவந்தனர். உதவிசெய்ய நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முகாம்களும் நடமாடும் மருத்துவமனைகளும் விரைவில் ஏற்படுத்தப்பட்டன. உணவும், உடையும் போர்வைகளும் பெருமளவில் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. இந்த நிவாரண நடவடிக்கையிலிருந்து பயனடைந்த எண்ணற்ற அகதிகள் அந்தப் பகுதியிலிருந்த சாட்சிகளுடைய எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம்.
[பக்கம் 9-ன் படம்]
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் விட்டுக்கொடுக்காமல் மிகவும் வைராக்கியத்துடன் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கித்தனர்