வியாதியஸ்தரையும் வயதானவர்களையும் யெகோவா நினைவுகூருகிறார்
“ஆபத்து காலத்”தை எதிர்ப்படுவது மிகக் கடினமாக இருக்கக்கூடும். (சங்கீதம் 37:18, 19) இத்தகைய சமயம் வயதாகிக்கொண்டுவருதல் மற்றும் அதோடு வரக்கூடிய பலவீனங்களின் உருவில் வரக்கூடும். சிலர் மோசமான, நீடித்தகாலம் நிலைத்திருக்கும் உடல்நலக்கேட்டினால் துன்புறுகையில் ஆபத்தான ஒரு காலத்திற்குள் செல்லுகிறார்கள். நோய் தங்களுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி, தங்களுடைய அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆட்கொண்டுவருவதுபோல் அவர்கள் உணரக்கூடும்.
என்றபோதிலும், யெகோவா தம்முடைய ஊழியர்கள் அனைவரையும் நோக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவுகூருவது மறு நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது. அவருடைய பற்றுறுதியுள்ள ஊழியர்கள் வயோதிபம், வியாதி, அல்லது மற்ற கடினமான சூழ்நிலைமைகளின் மத்தியிலும் தொடர்ந்து பற்றுறுதியையும் ஞானத்தையும் வெளிப்படுத்தும்போது, அது அவருடைய இருதயத்தை களிகூரச்செய்கிறது. (2 நாளாகமம் 16:9அ; நீதிமொழிகள் 27:11) தாவீது ராஜா நமக்கு இவ்விதமாய் உறுதியளிக்கிறார்: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். . . . அவர்களுடைய உதவிக்கான கூப்பிடுதலை அவர் கேட்கிறார்.” ஆம், அவர்களுடைய போராட்டத்தை அவர் அறிந்திருக்கிறார்; தம்முடைய ஆவியைக்கொண்டு அவர்களை பலப்படுத்துகிறார். “அவர் அவர்களை இரட்சிக்கிறார்.” (சங்கீதம் 145:18, 19) ஆனால் நம்மைப்பற்றி என்ன? நாம் யெகோவாவைப்போல், வியாதியஸ்தரையும் வயதானவர்களையும் நினைவுகூருகிறோமா?
வியாதி அல்லது வயோதிபத்தின் காரணமான பலவீனங்கள் இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையில் வாழ்க்கையின் மெய்ம்மைகளாக இருக்கின்றன. இந்தப் பூமிக்காகவும் மனிதவர்க்கத்திற்காகவும் யெகோவா கொண்டுள்ள அவருடைய நோக்கங்களை நிறைவேற்றத்துக்குக் கொண்டுவரும் வரையாக நாம் அவற்றோடு போராடவேண்டும் என்பது உண்மைகளாக இருக்கின்றன. இன்று, அதிகமதிகமான மக்கள் முற்றிலும் வயதான காலத்தில் வாழ்கிறார்கள்; ஆகவே பெரும்பாலான எண்ணிக்கையானோர் இத்தகைய பலவீனங்களுடன் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அதோடுகூட, இளமையாய் இருக்கும்போதே, உயிரை அச்சுறுத்தக்கூடிய அல்லது முடமாக்கும் விபத்துக்கள் அல்லது நோய்களினால் அநேகர் தாக்கப்படுகிறார்கள். இந்தப் பழைய உலகம் ஒழிந்துபோகும் வரையில், வியாதியும் வயோதிபமும் பெரிய சவால்களாகத் தொடர்ந்திருக்கும்.
“துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும்” முன்மாதிரிகளாகத் தொடர்ந்திருக்கிற நம்முடைய வியாதியஸ்தர்களையும் வயதானவர்களையும் நாம் எவ்வளவாகப் போற்றுகிறோம்! ஆம், “பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே.” (யாக்கோபு 5:10, 11) இப்பொழுது தங்களுடைய பலமெல்லாம் குறைக்கப்பட்டிருக்கிற வயதானவர்கள் பலர், இப்பொழுது சபையில் முன்நின்று வழிநடத்துகிறவர்களைப் போதிப்பதிலும், பயிற்சியளிப்பதிலும், உருப்படுத்தியமைப்பதிலும் பல பத்தாண்டுகளாகப் பங்குகொண்டிருக்கின்றனர். பெரும்பாலான வயதானவர்கள், தங்களுடைய பிள்ளைகள் முழு நேர ஊழியத்தில் பங்குகொண்டிருக்கிறதைக் காண்பதிலும் களிகூருகிறார்கள்.—சங்கீதம் 71:17, 18; 3 யோவான் 4.
அதே விதமாகவே, நம் மத்தியில் மோசமாக வியாதிப்பட்டு, தங்களுடைய துன்பங்களின் மத்தியிலும், தங்களுடைய உண்மைத்தன்மையின் மூலம் நம்மை இன்னமும் உற்சாகப்படுத்துகிறவர்களை நாம் போற்றுகிறோம். இவர்கள் அசைவில்லாமல் தங்களுடைய நம்பிக்கையின் அத்தாட்சியை அளிக்கும்போது, விளைவானது அதிகமாகத் தூண்டுவிப்பதாகவும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாகவும் இருக்கிறது. அவர்களுடைய மன சமாதானமும் திருப்தியும், உண்மையில் பின்பற்றுவதற்குத் தகுதியாக இருக்கிற விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது.
ஒருவர் புற்றுநோய், வலிப்பு நோய், அல்லது ஒருவருடைய வாழ்க்கையை முழுவதும் மாற்றுகிற வேறுசில நிலைமையினால் திடீரெனத் தாக்கப்படுவது ஓர் அதிர்ச்சியாய் இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் வியாதிப்படுவதை அல்லது ஒரு விபத்தின் விளைவாகத் துன்பப்படுவதைக் காண்பது கடினமான சோதனையாகவும் இருக்கிறது. உதவிசெய்வதற்கு மற்றவர்கள் என்ன செய்யலாம்? இத்தகைய எந்த ஓர் ஆபத்தும் முழு கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கும் பரீட்சையாய் இருக்கிறது. ‘ஓர் உண்மையான சிநேகிதன் இடுக்கன் இருக்கும்போது உதவிசெய்ய பிறந்திருக்கிற சகோதரன்’ என்பதைக் காட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. (நீதிமொழிகள் 17:17, NW) இயல்பாகவே, எல்லா வியாதியஸ்தர்களும் வயதானவர்களும் சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரிடமிருந்து தனிப்பட்ட உதவியை எதிர்பார்க்கமுடியாது. யெகோவா தம்முடைய ஆவியின்மூலம் பலவிதமான வழிகளில் உதவிசெய்வதற்கு அநேகர் உந்தப்பட்டவர்களாய் உணரும்படி பார்த்துக்கொள்வார். மேலும் ஒருவரும் அசட்டைசெய்யப்படவில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள மூப்பர்கள் விழிப்போடு இருக்கலாம்.—யாத்திராகமம் 18:17, 18-ஐ பாருங்கள்.
புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்
எவருக்காவது உதவிசெய்ய முயற்சிசெய்கையில், நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்வது முக்கியம், மேலும் அது நேரத்தையும் பொறுமையையும் ஒற்றுணர்வையும் தேவைப்படுத்துகிறது. ஓர் உதவிசெய்பவராக, இயல்பாகவே நீங்கள் ‘வார்த்தைகளினால் பலப்படுத்த’ ஆசைப்படுகிறீர்கள்; ஆனால் நீங்கள் பேசுவதற்கோ செயல்படுவதற்கோ முன்பாகக் கவனமாய் செவிகொடுத்துக்கேளுங்கள், அல்லது நீங்கள் ஒரு ‘தொல்லைதருகிற தேற்றரவாள’ராவதில் முடிவடையக்கூடும்.—யோபு 16:2, 5, NW.
சிலசமயங்களில் வியாதியஸ்தரும் வயதானவர்களும் தங்களுடைய ஏமாற்றத்தை மறைப்பதைக் கடினமாய் காண்பார்கள். அநேகர் மகா உபத்திரவத்தைத் தப்பிப்பிழைத்து உயிர்வாழும் தங்களுடைய நம்பிக்கையில் அகமகிழ்ந்திருக்கிறார்கள், இப்பொழுது அவர்கள் கால வரம்புக்குட்பட்ட ஓர் ஓட்டத்தில் ஈடுபட்டிருப்பதை உணர்ந்து, மகா உபத்திரவத்திற்கு முன்பாகத் தங்களுக்கு மரணம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகின்றனர். மேலும், அவர்களுடைய நிலைமையும் அடிக்கடி அவர்களைச் சோர்வடைந்தவர்களாகவும் கவலையுள்ளவர்களாகவும் ஆக்குகிறது. விசுவாசத்தை உயிருள்ளதாகவும் பலமுள்ளதாகவும் வைத்துக்கொள்வது ஒரு போராட்டமாக இருக்கிறது, விசேஷமாக கிறிஸ்தவ ஊழியத்தில் ஒரு முழுப் பங்கைக் கொண்டிருக்கும் உள்ளத்தின் ஆசையை ஒருவர் இனிமேலும் தொடரமுடியாதபோது ஒரு போராட்டமாக இருக்கிறது. ஒரு கிறிஸ்தவ மூப்பர் ஒரு வயதான சகோதரியை சந்தித்தார்; அவளோடு ஜெபிக்கும்போது, யெகோவா எங்களுடைய பாவங்களை மன்னியும் என்று கேட்டார். ஜெபத்திற்குப் பிறகு அந்தச் சகோதரி அழுதுகொண்டிருப்பதை அவர் கவனித்தார். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இனிமேலும் பங்குகொள்ள முடியாமலிருப்பதற்காக யெகோவாவின் விசேஷித்த மன்னிப்புத் தேவைப்படுவதாக அவள் உணருவதை விளக்கினாள். ஆம், திறமையின்மை அல்லது தகுதியின்மை என்ற உணர்ச்சி அடிக்கடி ஆதாரமற்றதாக இருந்தபோதிலும், ஓர் ஆளை இருதயத்தில் அதிக சோர்வடைந்தவராக்கலாம்.
ஜாக்கிரதையாய் இருங்கள், கவலையும் சோர்வும் மனதின் சமநிலையைப் பாதிக்கக்கூடும். வயோதிபத்தின் பலவீனங்கள் அல்லது சோர்வுறச்செய்யும் வியாதியின் அழுத்தம் காரணமாக, யெகோவாவினால் கைவிடப்பட்டவராக ஓர் ஆள் உணரக்கூடும். ஒருவேளை இவ்விதமாகச் சொல்லக்கூடும்: “நான் என்ன செய்துவிட்டேன்? நான் ஏன் துன்பப்படவேண்டும்?” நீதிமொழிகள் 12:25-ன் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” ஆறுதலளிக்கும் நல்வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்யுங்கள். வேதனையிலிருக்கிற வயதானவர்கள், யோபுவைப் போல, மரிக்க விரும்புவதையுங்கூட தெரிவிக்கக்கூடும். இது அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கவேண்டியதில்லை; புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள். இத்தகைய குறைகூறுதல்கள் அவசியமாகவே விசுவாசமோ நம்பிக்கையோ இல்லாமையின் அத்தாட்சியாய் இல்லை. ‘ஷியோலில் மறைத்துக்கொள்ளும்’படி யோபு ஜெபித்தார், இருப்பினும் இதற்குப் பிறகு அவர் சொன்ன வார்த்தைகள், யெகோவா தன்னை பின்பு உயிர்த்தெழுப்புவார் என்ற அவருடைய பலமான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. பலமான விசுவாசமானது, வேதனை மற்றும் மனச்சோர்வின் காலங்களைக் கடந்துசென்று இன்னும் யெகோவாவோடு நெருங்கியிருப்பதைக் கூடியகாரியமாக்குகிறது.—யோபு 14:13-15, NW.
வியாதியஸ்தருக்கும் வயதானவர்களுக்கும் மரியாதை காட்டுதல்
வியாதியஸ்தரையும் வயதானவர்களையும் மரியாதையோடும் மதிப்போடும் நடத்துவது மிக முக்கியமாய் இருக்கிறது. (ரோமர் 12:10) முன்புபோல் அவர்கள் உடனடியாகப் பிரதிபலிக்கவில்லை அல்லது அதிகமாகச் செய்யமுடியவில்லையென்றால், உங்களுடைய பொறுமையை இழந்துவிடாதீர்கள். குறுக்கிட்டு அவர்களுக்காகத் தீர்மானங்களைச் செய்ய அவசரப்படாதேயுங்கள். நாம் எவ்வளவு நல்லெண்ணம் உள்ளவர்களாய் இருந்தாலுஞ்சரி, நாம் அடக்குமுறைசெய்கிறவர்களாக அல்லது அதிகாரம்பெற்ற முறையில் நடந்துகொள்வோமாகில், இது எப்போதும் மற்ற ஆளின் சுய-மரியாதையை இழக்கச்செய்கிறது. ஆண்டு 1988-ல் பிரசுரிக்கப்பட்ட மருத்துவர்களுக்குரிய ஓர் ஆய்வுக் கட்டுரையில், 85 வயதானவர்களின் ஒரு தொகுதியினர் தாமே தங்களுடைய வாழ்க்கைப் பண்பாக மிக முக்கியமாய் எதைக் கருதினர் என்பதை ஜெட்டி இங்கர்ஸ்லெவ் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் இவ்வாறு விளக்கினார்: “அவர்கள் மூன்று அம்சங்களுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்தார்கள்: உறவினர்களோடு இருத்தல்; நல்ல ஆரோக்கியம்; கடைசியாகக் குறிப்பிடப்பட்டாலும் முக்கியமானது, தங்களுடைய சொந்தத் தீர்மானங்களைச் செய்யக்கூடியவர்களாய் இருத்தல்.” கோத்திரப்பிதாவாகிய யாக்கோபு முதிர்வயதாயிருந்தபோது, தன்னுடைய குமாரர்களால் கருணைகாட்டுகிற விதமாக நடத்தப்படவில்லை என்பதைக் கவனியுங்கள்; அவருடைய ஆசைகள் மதிக்கப்பட்டன.—ஆதியாகமம் 47:29, 30; 48:17-20.
உடல்நலமில்லாதவர்களையுங்கூட மதிப்போடு நடத்தவேண்டும். ஓர் அறுவைசிகிச்சையின்போது செய்யப்பட்ட தவற்றின் காரணமாக, ஒரு மூப்பர் பேசுகின்ற, வாசிக்கின்ற, மற்றும் எழுதுகின்ற திறமையை இழந்துவிட்டார். இது ஒரு கடுமையான தாக்குதலாய் இருந்தது; ஆனால் அவருடைய உடன் மூப்பர்கள், அவர் உபயோகமற்றவர் என்று உணருவதைத் தடுப்பதற்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தீர்மானித்தார்கள். அவர்கள் இப்பொழுது சபை சம்பந்தப்பட்ட அனைத்து கடிதத் தொடர்புகளையும் அவருக்கு வாசித்துக்காட்டுகிறார்கள், மேலும் சபைக்குரிய மற்ற விஷயங்களைத் திட்டமிடுவதில் அவரைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மூப்பர்களுக்கான கூட்டங்களில், அவருடைய அபிப்பிராயம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அவர்கள் முயற்சிசெய்கிறார்கள். அவரை இன்னமும் ஓர் உடன் மூப்பராகக் கருதி, அவர் ஆஜராயிருப்பதை போற்றுகிறார்கள் என்பதை அவர் அறிந்துகொள்ளச் செய்கிறார்கள். கிறிஸ்தவ சபையில், வியாதியஸ்தரும் வயதானவர்களும் ‘தள்ளிவிடப் பட்டவர்’களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் உணராதபடிக்கு, நாம் அனைவரும் முயற்சியெடுக்கலாம்.—சங்கீதம் 71:9.
ஆவிக்குரிய பலத்தைப் பெறுவதற்கு உதவி
நம்முடைய விசுவாசத்தை உயிருள்ளதாகவும் பலமுள்ளதாகவும் வைத்திருப்பதற்கு நம் அனைவருக்கும் ஆவிக்குரிய உணவு அவசியம். அதன் காரணமாகவே நாம் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் அனுதினமும் வாசிப்பதற்கும் கிறிஸ்தவக் கூட்டங்களிலும் பிரசங்க நடவடிக்கைகளிலும் வைராக்கியமாகப் பங்குகொள்வதற்கும் உற்சாகப்படுத்தப்படுகிறோம். இதை நிறைவேற்றுவதற்கு வியாதியஸ்தருக்கும் வயதானவர்களுக்கும் அடிக்கடி உதவி தேவைப்படுகிறது; மேலும் அவர்களுடைய தனிப்பட்ட காரியத்தில் நடைமுறையானதைச் செய்வது முக்கியமாய் இருக்கிறது. மகிழ்ச்சிக்குரிய விதமாகவே, ராஜ்ய மன்றத்தில் போக்குவரத்து வசதியும் சிறு உதவியும் அளிக்கப்பட்டால், இன்னும் அநேகர் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும். அவர்கள் இப்படிப்பட்ட கூட்டங்களில் கலந்துகொள்வது சபைக்கு அதிக உற்சாகத்தை அளிக்கிறது. அவர்களுடைய சகிப்புத்தன்மை ஊக்கப்படுத்துவதாகவும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாகவும் இருக்கிறது.
அநேக காரியங்களில், வியாதியஸ்தரும் வயதானவர்களும் கிறிஸ்தவ ஊழியத்தில் ஓர் அர்த்தமுடைய பங்கையும் கொண்டிருக்க முடியும். சாட்சிகொடுப்பதற்காக சிலரை கார் தொகுதியில் சேர்த்துக்கொள்ளலாம், ஒருசில சந்திப்புகளைச் செய்யக்கூடியவர்களாய் இருப்பதன்மூலம் சந்தேகமில்லாமல் அவர்கள் புத்துணர்ச்சியடைந்தவர்களாய் உணருவர்கள். இது இனிமேலும் கூடியகாரியமாக இல்லாதபோது, அவர்கள் சந்திக்கிற தனிப்பட்ட ஆட்களுக்குச் சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதில் சந்தோஷத்தைக் கண்டடையலாம். புற்றுநோயினால் தாக்கப்பட்ட ஒரு சகோதரி, நற்செய்தியை முன்னேற்றுவிப்பதற்கு தன்னுடைய வாழ்க்கையில் மீதமுள்ளவை என்னவாக இருந்தாலுஞ்சரி ஒரு விசேஷித்த முயற்சியில் செலவழிக்கத் தீர்மானித்தாள். அவளுடைய தைரியமான பிரசங்கிப்பு எல்லாருக்கும் உற்சாகத்தையளிப்பதாய் இருந்தது. விசுவாசமில்லாத உறவினர்கள், உடன் வேலையாட்கள், அயலகத்தார் ஆகியோருக்கு ஒரு நல்ல சாட்சிகொடுக்கப்படும் பொருட்டு, அவள் தன்னுடைய சொந்த சவ அடக்க ஆராதனையையுங்கூட திட்டமிட்டாள். அவளுடைய துயரமிக்க சூழ்நிலைமைகள் “சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று,” மேலும் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் தெரியப்படுத்துவதற்கு அவளுடைய தீர்மானம், அவளுடைய முடிவான நாட்களுக்கு விசேஷித்த அர்த்தத்தைக் கொடுத்தது.—பிலிப்பியர் 1:12-14.
ஆவிக்குரிய விதமாகப் பலப்படுத்தப்படுவதற்கு வியாதியஸ்தருக்கும் வயதானவர்களுக்கும் உதவிசெய்வது நல்லது. குடும்ப அங்கத்தினர்கள் அவர்களைத் தங்களுடைய மாலைநேர குடும்பக் கூட்டுறவுகளில் பங்குகொள்வதற்கு அழைக்கலாம், அல்லது சில சந்தர்ப்பங்களில் தங்களுடைய குடும்பப் படிப்பின் பாகத்தை வெளியே போகமுடியாத ஒருவரின் வீட்டிற்கு மாற்றலாம். ஒரு தாய், தன்னுடைய இரண்டு கடைசி சிறிய பிள்ளைகள் என்னுடைய பைபிள் கதைப் புத்தகத்தை (My Book of Bible Stories) வாசிக்கும்படிக்கு, அவர்களை மூத்த சகோதரி ஒருவரின் வீட்டுக்குக் அழைத்துவந்தார்; இது, அந்த வயதான சகோதரியை மகிழ்ச்சியடையச்செய்தது, அவள் அவர்களுக்குக் கொடுத்த கவனிப்பையும் அந்தப் பிள்ளைகள் மகிழ்ந்து அனுபவித்தார்கள்.
என்றபோதிலும், பலவீனமான நபரை அதிகமாகத் தொந்தரவு செய்யக்கூடாத சமயங்களும் இருக்கின்றன, அப்போது சில சந்தர்ப்பங்களில் மட்டுமே ஏதாவது தகவலை அவர்களுக்குச் சப்தமாக வாசிப்பது மிகச் சிறந்ததாக இருக்கக்கூடும். சம்பாஷணையில் கலந்துகொள்வதற்கு இயலாத அளவுக்கு அதிக பலவீனமாக யாராவது இருந்தபோதிலுங்கூட, இப்படிப்பட்டவருக்கு ஆவிக்குரிய கூட்டுறவு இன்னும் தேவைப்படக்கூடும் அல்லது விரும்பக்கூடும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நாம் இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்யலாம், அவர்களுக்கு வாசித்துக் காண்பிக்கலாம், அல்லது அனுபவங்களைச் சொல்லலாம்; ஆனால் அவர்கள் கையாள முடியாத அளவுக்கு அவர்களோடு நீடித்த நேரம் தங்காமலிருப்பதற்கு நாம் கவனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
பெரும்பாலான வியாதியஸ்தரும் வயதானவர்களும் இன்னமும் செய்யக்கூடிய ஒரு பரிசுத்த சேவை இருக்கிறது: மற்றவர்களுக்காக செய்யும் ஜெபம். இந்த ஊழியத்திற்கு ஆரம்பகால சீஷர்கள் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், அப்போஸ்தலர்கள் ஜெபத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடிய ஒரு முறையில் சபையிலுள்ள வேலை சுமையைப் பகிர்ந்தளித்தார்கள். உண்மையுள்ள எப்பாப்பிரா ‘மற்றவர்களுக்காக தன்னுடைய ஜெபங்களில் போராடு’வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். (கொலோசெயர் 4:12, NW; அப்போஸ்தலர் 6:4) இப்படிப்பட்ட ஜெபம் அதிக முக்கியமாயும் பிரயோஜனமாயும் இருக்கிறது.—லூக்கா 2:36-38; யாக்கோபு 5:16.
யெகோவா வியாதியஸ்தரையும் வயதானவர்களையும் நினைவுகூருகிறார், மேலும் ஆபத்துக் காலத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்கிறார். நாமுங்கூட அவர்களுக்கு உதவிசெய்யவும் ஆதரிக்கவும் என்ன செய்யலாம் என்பதைச் சிந்தித்துப்பார்ப்பதை அவர் சரியாகவே எதிர்பார்க்கிறார். நாம் காட்டுகிற அக்கறை, நம்முடைய சொந்த உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கு நம்முடைய தீர்மானத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும் தாவீது ராஜாவின் வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்: “உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்திரம் என்றென்றைக்கும் இருக்கும்.”—சங்கீதம் 37:18.
[பக்கம் 28, 29-ன் பெட்டி]
நடைமுறையான உதவியளித்தல் புரிந்துகொள்ளுதலோடு
வியாதியஸ்தரையும் வயதானவர்களையும் எவ்வாறு கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதுபற்றிய அடிப்படையான ஆனால் சரியான அறிவை நண்பர்களும் உறவினர்களும் பெற்றிருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையினிடமாக ஒரு நம்பிக்கையான மனநிலையைக்கொண்டிருப்பதற்கு, தேவைப்படுகிறவர்களாகவும் போற்றப்படுகிறவர்களாகவும் உணருவதற்கு, சுய-மதிப்பின் உணர்ச்சியைக் கொண்டிருப்பதற்கு அவர்களை உற்சாகப்படுத்தலாம். இவ்விதமாக, அவர்களுடைய வலிகள் மற்றும் வேதனைகளின் மத்தியிலும், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் யெகோவாவில் உற்சாகத்தைக் காத்துக்கொள்ளுகிற நிலையிலிருக்கும். அநேக யெகோவாவின் சாட்சிகள் நன்கு வயதான காலத்தில் வாழ்கின்றனர் என்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சக்திவாய்ந்த பலன்தருகிற அம்சமானது, சந்தேகமில்லாமல் முன்னாலிருக்கிற நம்பிக்கையில், அவர்களுடைய உயிருள்ள அக்கறையிலும் அவர்களுடைய பிரகாசமான மனநிலையிலும், முடிந்தளவுக்கு ராஜ்ய நடவடிக்கைகளில் அவர்களுடைய பங்கெடுப்பிலும் இருக்கிறது. ஓர் உற்சாகமான பலன்தரத்தக்க வாழ்க்கைக்குப் பிறகு தன்னுடைய 100-வது ஆண்டில் சமாதானத்துடன் மரித்த உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவராகிய காலஞ்சென்ற ஃபிரெட்டிரிக் W. ஃபிரான்ஸ், இதற்கு ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியாய் இருந்தார்.—1 நாளாகமம் 29:28-ஐ ஒத்துப்பாருங்கள்.
பொதுவாக, அனுதினம் கவனிக்கிற அடிப்படைக் காரியங்களுக்குக் கவனஞ்செலுத்துவது அதிகத்தை அர்த்தப்படுத்தலாம்: நல்ல சுகாதாரம், தகுந்த போஷாக்கு, போதுமான நீர் ஆகாரம் மற்றும் உப்பு, சமநிலையான உடற்பயிற்சி, சுத்தமான காற்று, மென்மையான தசைத்தேய்ப்பு, ஆர்வத்தைத் தூண்டும் சம்பாஷணை. தகுந்த போஷாக்கானது நன்றாகக் கேட்பதற்கு, கண்பார்வைக்கு, மன இயக்கத்திற்கு, சரீர சுகநலத்திற்கு, அதோடுகூட அதிகமாக நோய் தடுப்பாற்றலுக்கு உதவிசெய்யலாம். வயதானவர்களுக்குச் சிறிய காரியமாகிய தகுந்த போஷாக்கும் அதிகமான நீர் ஆகாரமும் நல்ல நிலைமைக்கும் முதுமைக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் குறிக்கக்கூடும். தனிப்பட்ட ஆளுக்குப் பொருந்தக்கூடிய ஒரு வகையான சரீர உடற்பயிற்சியைக் கண்டுபிடிப்பது சிறிது யோசனையைத் தேவைப்படுத்தக்கூடும். வயதான, ஏறக்குறைய பார்வையிழந்த ஒரு சகோதரிக்கு வாசித்துக் காண்பிக்க வருகிற சகோதரி ஒருவர், ஒவ்வொரு வார சந்திப்பையும் அந்தச் சகோதரியோடு அறையைச் சுற்றி மென்மையாக நடனமாடுவதோடு ஆரம்பித்து முடிக்கிறார். டேப் ரெக்கார்டர் எப்பொழுதும் தெரிந்தெடுக்கப்பட்ட இசையோடு தயாராக இருக்கிறது, மேலும் இருவரும் இந்த “முன்னேற்றுவிக்கும் உடற்பயிற்சியை” அனுபவித்து மகிழுகிறார்கள்.
அநேக நாடுகளில், உதவியளிக்கும் அமைப்புகள் மதிப்புவாய்ந்த நடைமுறையான உதவியளித்து, குறிப்பிட்ட நிலைமைகளையும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதுபற்றியும் தகவலையும் ஆலோசனையையும் அளிக்கக்கூடும். (நிச்சயமாகவே, நம்முடைய உண்மையான கிறிஸ்தவ ஊழியத்திலிருந்து கவனத்தைத் திருப்புகிற நடவடிக்கைகளுக்குள் திசை திருப்பப்படாதபடிக்கு எப்பொழுதும் ஒரு கிறிஸ்தவன் கவனஞ்செலுத்தவேண்டும்.) சிலசமயங்களில் உதவிகள் மருத்துவமனை படுக்கை, நடைவண்டி, இடுப்புக் காலுறை தளைப்பட்டைகள், சக்கர நாற்காலி, காது கேட்க உதவும் கருவி மற்றும் இதுபோன்றவை கடனுதவி வடிவில் கொடுக்கப்படுகின்றன; வயதானவர்கள் அநேகர் தங்களுக்கு எதுவும் வேண்டாம் அல்லது இத்தகைய புதிய காரியங்களை வாங்குவது உபயோகமாய் இருக்காது என்று உணருவதன் காரணமாக, உறவினர்கள் அடிக்கடி நல்ல புத்திமதியை அளிக்கவேண்டும் அல்லது இணங்குவித்தலையுங்கூட பயன்படுத்தவேண்டும். குளியலறை கதவிற்கு ஒரு பிரயோஜனமான கைப்பிடி, ஒரு பூச்செண்டைவிட உண்மையான அதிக சந்தோஷத்தை உண்டாக்கலாம்.
வயதானவர்களைக் கவனிப்பது, விசேஷமாக அந்த நபர் முதுமைத் தளர்ச்சியுற்றவராக இருப்பாராகில், அதிக மன அழுத்தத்தைத் தூண்டலாம். அடிக்கடி முதுமை தந்திரமாக நெருங்குகிறது. தேவையில்லாமல் செயலற்ற விதமாக நோயாளி இருப்பதை தடைசெய்வதன்மூலம் அதை ஒருவர் முறியடிக்க முயற்சிசெய்யலாம். ஒரு முதுமையான ஆள், வழக்கமாக தன்மீது நன்கு பிரியமாயிருக்கிற எவரிடமாவது திடீரென நிலைகுலைந்தவராக ஆகக்கூடும். வயதாகிக்கொண்டிருக்கிற ஓர் ஆள் சத்தியத்தோடு சம்பந்தமான அனைத்தையும் மறந்துவிடக்கூடும்—சரீர நிலைகுலைவின் ஒரு துயரமான விளைவு, விசுவாசத்தை இழப்பதன் அத்தாட்சி அல்ல என்பதை உறவினர்கள் உணரவேண்டும்.
நோயாளி ஒரு மருத்துவமனையில் அல்லது மருத்துவ இல்லத்தில் இருப்பாராகில், அதிகாரிகளோடு ந தொடர்புவைத்துக்கொள்வது அவசியம். இதனால் பிறந்த நாட்கள், கிறிஸ்மஸ், அல்லது மற்ற உலகப்பிரகாரமான விடுமுறை நாட்கள் போன்றவை சம்பந்தமாக என்ன செய்யவேண்டும் என்பதைப் பணி ஆட்கள் அறிந்துகொள்வர்கள். ஓர் அறுவைசிகிச்சை தேவைப்படுமாகில், இரத்தமேற்றுதல் சம்பந்தமாக நோயாளி கொண்டிருக்கிற நோக்குநிலைகளை உறவினர்கள் விளக்கவும் ஆதாரத்தின்மூலம் காண்பிக்கவும் செய்யலாம்.