கர்த்தர் சொன்னவற்றைப் பேப்பியஸ் மதிப்புமிக்கதாகக் கருதினார்
“அதிகத்தைச் சொல்வதற்கு கொண்டிருந்தவர்களின் கூட்டுறவை நான் அனுபவிக்கவில்லை, ஆனால் எது உண்மை என்பதைக் கற்றுக்கொடுப்பவர்களின் கூட்டுறவை நான் அனுபவித்தேன்.” இவ்வாறு எழுதினார் பேப்பியஸ், நம்முடைய பொது சகாப்தத்தைச் சேர்ந்த இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவன் என்று உரிமைபாராட்டினவர்.
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர் மரித்தபின் உடனே பின்தொடர்ந்த காலப்பகுதியில் பேப்பியஸ் வாழ்ந்தார். அறிக்கை காட்டுகிறப்பிரகாரம் அப்போஸ்தலன் யோவானிடமிருந்து கற்றுக்கொண்ட பாலிகார்ப் என்பவரின் கூட்டாளியாக இவர் உண்மையில் இருந்தார். இந்த நம்பத்தக்க ஆதாரங்களும் பேப்பியஸின் அறிவைப்பெறும் முறையும் சேர்ந்து, அவர் நன்றாகக் கற்றவராக இருக்கவேண்டும் என்பதைச் சாத்தியமாக்குகிறது.
கவனமுள்ள முறை
கர்த்தர் சொன்னவற்றைப் பற்றிய பேப்பியஸின் ஐந்து புத்தகங்களிலிருந்து, சத்தியத்தின்மீது அவருக்கிருந்த தாகம் அவருடைய ஏக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. அவருடைய ஆரம்ப ஆண்டுகளில், பேப்பியஸ் கேள்விப்பட்ட சத்திய வார்த்தைகளில் அநேகத்தை ஞாபகத்தில் பதிய வைத்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. பின்னர், சிறிய ஆசியாவிலுள்ள ஹியராப்பாலிஸின் ஃபிர்ஜீயன் நகரத்தில் இருந்த அவருடைய வசிப்பிடத்திலிருந்து பேப்பியஸ் மூப்பர்களை விசாரித்து, அவர்கள் இயேசுவின் அப்போஸ்தலரை எப்போதாவது பார்த்திருக்கிறார்களா அல்லது அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறார்களா என்று விசாரித்தார். அவர் மும்முரமாக அவர்களிடம் கேள்விகளைக் கேட்டார்; அவர்கள் என்ன சொல்லயிருந்தார்களோ அவற்றைப் பதிவும் செய்தார்.
பேப்பியஸ் விளக்குகிறார்: “மூப்பர்களிடமிருந்து நான் எந்தச் சமயத்திலும் கவனமாகக் கற்றுக்கொண்ட அனைத்தையும், கவனமாக ஞாபகத்தில் வைத்திருந்தவற்றையும் எழுதி வைப்பதில் . . . நான் தயங்கப் போவதில்லை; அவற்றின் சத்தியத்தன்மையைப் பற்றி உங்களுக்கு உறுதிசொல்கிறேன். ஏனென்றால் பலர் செய்வதுபோல, அதிகத்தைச் சொல்வதற்கு கொண்டிருந்தவர்களின் கூட்டுறவை நான் அனுபவிக்கவில்லை, ஆனால் எது உண்மை என்பதைக் கற்றுக்கொடுப்பவர்களின் கூட்டுறவை நான் அனுபவித்தேன். மேலும் மற்றவர்களின் கட்டளைகளைக்குறித்து சொல்பவர்களை விரும்புவதில்லை, ஆனால் விசுவாசத்திற்காகவும், சத்தியத்திலிருந்துதானே வரும், கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை அறிவிப்பவர்களை விரும்புவேன். மூப்பரைப் பின்பற்றுபவனாய் இருந்த யாதொருவன் என் வழியில் குறுக்கே வந்தால், மூப்பர்கள்—அந்திரேயாவோ பேதுருவோ என்ன சொன்னார்கள், அல்லது பிலிப்போ ஸ்தேவானோ யாக்கோபோ, அல்லது யோவானோ மத்தேயுவோ என்ன சொன்னார்கள், அல்லது கர்த்தரின் மற்ற எந்தச் சீஷராவது—கொடுத்த பதிவின் ஆதாரத்திற்காக நான் கேட்பேன்.”
அவருடைய நூல்
சந்தேகமின்றி, நிறைய ஆவிக்குரிய அறிவு பேப்பியஸுக்குக் கிடைக்கக்கூடியதாய் இருந்தது. அவர், ஒவ்வொரு அப்போஸ்தலனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஊழியம் சம்பந்தமான நுணுக்க விவரங்களுக்கு எவ்வளவு உன்னிப்பாகச் செவிசாய்த்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனைசெய்து மட்டும்தான் பார்க்க முடியும். சுமார் பொ.ச. 135-ல் பேப்பியஸ் என்ன சொல்ல வேண்டியிருந்ததோ, அதைத் தன் சொந்த புத்தகத்தில் எழுதினார். வருந்தத்தக்கவிதமாக, இந்தப் புத்தகம் காணாமல் போய்விட்டது. பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் ஒரு கிறிஸ்தவனாக உரிமைபாராட்டின ஐரினியஸ் என்பவராலும் நான்காம் நூற்றாண்டின் சரித்திராசிரியர் யுசிபியஸ் என்பவராலும் அது மேற்கோள் காட்டப்பட்டது. உண்மையில், அது பொ.ச. 9-ம் நூற்றாண்டிலும் படிக்கப்பட்டு வந்திருந்தது; 14-ம் நூற்றாண்டு வரை அது இருந்திருக்கலாம்.
பேப்பியஸ் வரப்போகும் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியை நம்பினார். (வெளிப்படுத்துதல் 20:2-7) ஐரினியஸ் சொன்னப்பிரகாரம், “கர்த்தரின் சீஷராகிய யோவானைக் கண்ட மூப்பர்கள், அந்தக் காலங்களைப் பற்றி கர்த்தர் எப்படிக் கற்றுக் கொடுப்பார் என்று சொன்னதுபோலவே, சிருஷ்டிப்பு புதிப்பிக்கப்பட்டு விடுதலையாக்கப்படும்போது வானத்தின் பனித்துளிகளினாலும் பூமியின் செழிப்பினாலும் எல்லா வகை உணவை மிகுதியாக உற்பத்திசெய்யும்,” காலத்தைப் பற்றி அவர் எழுதினார். பேப்பியஸ் தொடர்ந்து எழுதினார்: “விசுவாசிகளுக்கு இவை நம்பக்கூடியவை. காட்டிக்கொடுத்தவனாகிய யூதாஸ் நம்புவதற்கு மறுத்து, இவ்வாறு கேட்டான், ‘கர்த்தரால் இப்படிப்பட்ட காரியம் எப்படி நிறைவேற்றப்படும்?’ கர்த்தர் சொன்னார், ‘அப்படிப்பட்ட காலங்களில் வசிப்பவர்கள் காண்பர்.’”
சமரச மறையியல் ஞானக்கோட்பாடு (Gnosticism) பரவியிருந்த காலத்தில்தான் பேப்பியஸ் எழுதினார். சமரச ஞானக்கோட்பாட்டுவாதிகள் (Gnostics) விசுவாசத் துரோக கிறிஸ்தவத்தோடு தத்துவம், கற்பனை, புறமத கட்டுக்கதை போன்றவற்றை ஒருங்கிணைத்தனர். உண்மையில் கர்த்தருடைய இறைவாக்குகள், அல்லது வார்த்தைகளைப் பற்றிய பேப்பியஸின் விளக்கம் சமரச மறையியல் ஞானக்கோட்பாடு பரவுதலைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சியாகும். இவருக்குப் பின், ஐரினியஸ் சமரச ஞானக்கோட்பாட்டாளர்களின் பொய்யான, கதை கட்டப்பட்ட ஆன்மீகத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார். சமரச மறையியல் ஞானக்கோட்பாட்டாளர்களின் இலக்கியங்கள் பல தொகுதிகளை உடையதாக இருந்திருக்கவேண்டும்; இது “அதிகத்தை சொல்வதற்கு கொண்டிருந்தவர்கள்” என்று மறைமுகமாக திட்டுவதற்கு பேப்பியஸைத் தூண்டியது. அவருடைய நோக்கம் தெளிவாக இருந்தது—பொய்யைச் சத்தியத்தினால் எதிர்த்துப்போராடுதல்.—1 தீமோத்தேயு 6:4; பிலிப்பியர் 4:5.
சுவிசேஷங்களைப் பற்றிய குறிப்புகள்
இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ள பேப்பியஸ் எழுத்துக்களின் பாகங்களில், மத்தேயு மற்றும் மாற்கு எழுதிய நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டிருப்பதை நாம் காண முடியும். உதாரணமாக, பேப்பியஸ் மாற்குவின் பதிவைப் பற்றி சொல்கிறார்: “பேதுருவின் மொழிபெயர்ப்பாளராக ஆகியிருந்த மாற்கு, அவர் ஞாபகத்தில் வைத்திருந்த அனைத்தையும் துல்லியமாக எழுதினார்.” இந்தச் சுவிசேஷத்தின் துல்லியத்தை இன்னுமதிகமாக ஆதரித்து, பேப்பியஸ் தொடர்கிறார்: “எனவே, மாற்கு நினைவில் வைத்திருந்த பிரகாரம் சில காரியங்களை எழுதினாலும், மாற்கு தவறு இழைக்கவில்லை; ஏனென்றால் அவர் தான் கேள்விப்பட்ட எதையும் நீக்கிப்போடாமல், அல்லது எந்தப் பொய் வாக்கியத்தையும் சேர்க்காமல் இருக்க தனிப்பட்ட அக்கறை காண்பித்தார்.”
மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை ஆரம்பத்தில் எபிரெய மொழியில் எழுதினார் என்பதற்கு புற சான்றை பேப்பியஸ் கொடுக்கிறார். பேப்பியஸ் சொல்கிறார்: “அவர் வாக்கியங்களை எபிரெய மொழியில் எழுதினார், ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவிற்கு நன்றாக விளக்கினர்.” லூக்கா, யோவான் ஆகியோரின் சுவிசேஷப் பதிவுகளையும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற எழுத்துக்களையும் பேப்பியஸ் மேற்கோள் காட்டியிருப்பது பொருத்தமானதே. அப்படியென்றால், அவற்றின் நம்பத்தக்க தன்மைக்கும் தெய்வீக ஏவுதலுக்கும் சான்றுகொடுக்கும் ஆரம்ப கால சாட்சிகளில் ஒருவராக அவர் இருப்பார். இருந்தபோதிலும், வருந்தத்தக்கவிதமாக, பேப்பியஸின் எழுத்துக்களில் வெறுமனே சிறியளவு பாகங்களே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.
அவருடைய ஆவிக்குரிய தேவையில் அக்கறையுள்ளவராய் இருத்தல்
ஹியராப்பாலிஸில் உள்ள சபையில் இருந்த ஒரு கண்காணியாக, பேப்பியஸ் ஒரு தளராத ஆராய்ச்சியாளர். இவர் கடினமாக உழைக்கும் ஆராய்ச்சியாளராக இருந்ததோடு, வேதாகமத்திற்கு ஆழ்ந்த போற்றுதலைக் காண்பித்தார். அவருடைய நாளில் இருந்த இலக்கியத்தில் காணப்பட்ட ஏறுக்குமாறான வாக்கியங்களை விளக்குவதைவிட, இயேசு கிறிஸ்துவின் அல்லது அவருடைய அப்போஸ்தலருடைய எந்தக் கோட்பாடு சம்பந்தமான வாக்கியமும் விளக்குவதற்கு அதிக மதிப்பு உடையதாய் இருக்கும் என்று சரியாகவே பேப்பியஸ் நிர்ணயித்தார்.—யூதா 17.
பெர்கமத்தில் பொ.ச. 161 அல்லது 165-ல் பேப்பியஸ் தியாக மரணமடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் போதகங்கள் எவ்வளவு ஆழமாகப் பேப்பியஸின் வாழ்க்கையையும், நடத்தையையும் உண்மையில் பாதித்தன என்பது நிச்சயமாய் சொல்லப்பட முடியாது. ஆனாலும், அவர் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ளவும், கலந்துபேசவும் அதிக ஆர்வமுடையவராய் இருந்தார். இவ்வாறே இன்றைய உண்மைக் கிறிஸ்தவர்களும், ஆவிக்குரிய தேவையைக் குறித்து அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். (மத்தேயு 5:3) மேலும் பேப்பியஸைப் போலவே இவர்களும் கர்த்தர் சொன்னதை மதிப்புமிக்கதாகக் கருதுகிறார்கள்.