ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
உயிரின் பரிசுத்தத் தன்மைக்கு மதிப்பு
இரத்தம் கடவுளுடைய பார்வையில் விலையுயர்ந்தது என்றும் அவர் அதன் துர்ப்பிரயோகத்தைக் கண்டனம் செய்கிறார் என்றும் பைபிள் காண்பிக்கிறது. (லேவியராகமம் 17:14; அப்போஸ்தலர் 15:19, 20, 28, 29) இந்தப் பைபிள் கட்டளைகளின் காரணமாக யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்றுதலை ஏற்பதில்லை.
இந்தக் காரியத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய மத நிலைநிற்கையைப் புரிந்துகொள்ளவும், சாட்சிகள் மாற்று சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்பதை மதித்துணரவும், மருத்துவர்களுக்கும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் உதவும்படியாக உவாட்ச் டவர் சொஸையிட்டி வெவ்வேறு தேசங்களில் மருத்துவமனை தொடர்பு குழுக்களை [Hospital Liaison Committees (HLC)] அமைத்திருக்கிறது. இந்தக் குழுக்களின் அங்கத்தினர் மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ ஊழியர் தொகுதியைச் சந்தித்துப் பேசுகின்றனர். சமீபத்தில், போலாந்திலுள்ள 12 நகரங்களில், 500-க்கும் மேற்பட்ட மருத்துவ டாக்டர்களை உட்படுத்தி 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன; இவர்கள் முக்கியமாக கிளினிக் அல்லது மருத்துவமனை வார்டுகளில் தலைமை வகிப்போராக இருந்தனர். அவ்விதமான ஒரு சந்திப்பில், பின்வரும் அனுபவம் நிகழ்ந்தது:
“ஸாப்ஸாவிலுள்ள இருதய அறுவை சிகிச்சை கிளினிக்கில் நடந்த கூட்டம் ஒன்று, ஒரு பெரும் வெற்றியாக இருந்தது. அந்தக் கிளினிக்கில் உள்ள மருத்துவ தொகுதி, 1986 முதற்கொண்டு நம்முடைய சகோதரர்களுக்கு இரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்து வந்திருக்கிறது. இன்றையவரையில், அத்தகைய 40 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. போலாந்தெங்கும் உள்ள நோயாளிகளையும், வெளிநாட்டிலுள்ளவர்களையும் ஏற்றுக்கொள்ள அந்தக் கிளினிக் தயாராக உள்ளது. ஒரு 50-நிமிட கலந்தாலோசிப்பிற்குப்பின், ஒரு மருத்துவமனை வார்டின் உதவி மேலாளர் HLC அங்கத்தினர்களை ஒரு நோயாளிகளின் தொகுதிக்கு அறிமுகப்படுத்திவிட்டு, சொன்னார்: ‘இவர்கள் யெகோவாவின் சாட்சிகள். இவர்கள் எங்கள் கிளினிக்குடன் ஒத்துழைக்கின்றனர், எங்களுக்கு உதவுகின்றனர். இவர்களுடைய உதவியால், இவர்களுடைய உடன் விசுவாசிகள் மட்டுமல்லாமல் மற்ற எல்லா நோயாளிகளும் பயனடைகிறார்கள். பெரிய இருதய அறுவை சிகிச்சைகள்கூட இரத்தமின்றி செய்யப்படலாம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம், யெகோவாவின் சாட்சிகளுக்கு நன்றி.
“‘உதாரணமாக, நாங்கள் இந்தப் பெண்ணுக்கு [தன்னுடைய நோயாளிகளில் ஒருவரைச் சுட்டிக்காண்பித்து] இரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்தோம்; அவள் திங்கள்கிழமை வீட்டிற்குச் செல்கிறாள். நாங்கள் முன்பைவிட வெகு குறைவாக இரத்தத்தைப் பயன்படுத்துகிறோம், ஏனென்றால் அது ஆபத்தானதாக இருக்கிறது. அது HIV, கல்லீரல் அழற்சி, மேலும் சுகமடைவதற்கு நீண்டகாலமெடுப்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
“‘நான் ஒரு கத்தோலிக்கன், ஆனால் எங்கள் வீட்டில் நாங்கள் எப்போதுமே மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு இடமளிப்பவர்களாகவே இருந்தோம். ஒரு நாள் நான் ஷ்லாஸ்கீ ஸ்டேடியம் வழியாக என்னுடைய பிள்ளைகளுடன் நடந்து சென்றேன். முன்பு, இந்த அரங்கம் கவனிக்கப்படாமல் இருந்தது, ஆனால் இப்போது அடையாளங்காணமுடியாதபடி மாறியிருப்பதை நாங்கள் கவனித்தோம். இது எப்படி மாறியது என்று அங்கிருந்த வேலையாட்களில் ஒருவரை விசாரித்தேன். அந்த நிர்வாகம் அரங்கத்தைச் சரிப்படுத்தும் நம்பிக்கையற்றிருந்தது; ஆனால் அது யெகோவாவின் சாட்சிகளுக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டது; அவர்கள் அதைப் புதுப்பித்தனர் என்று அவர் சொன்னார்.
“‘ஆக இந்த மக்களிடமிருந்து நாம் அநேக காரியங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த வார்டிலும் நாம் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு இடமளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.’ பின்னர், இன்னும் சில நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்த ஒரு சாட்சியைச் சுட்டிக்காண்பித்து, அவர் சொன்னார்: ‘இந்தப் பெண் ஒரு யெகோவாவின் சாட்சி; அவள் இரத்தமின்றி அறுவை சிகிச்சை அளிக்கப்படுவாள்.’”
யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்கள் மீது தங்கள் நம்பிக்கைகளைக் கட்டாயப்படுத்த முயலாமல் இருக்கையில், அவர்கள்தாமே அப்போஸ்தலருடைய உதாரணத்தைப் பின்பற்றி, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படி”கிறார்கள். (அப்போஸ்தலர் 5:29) இது இரத்தத்திற்கு மதிப்பு வைத்திருப்பதையும் உட்படுத்துகிறது. இந்தப் பொருளின்பேரில் அவர்களுடைய மனச்சாட்சிப்பூர்வமான மத உறுதிப்பாடுகளை மற்றவர்கள் மதிக்கும்போது அவர்கள் அதைப் போற்றுகின்றனர்.