தானியேலின் தீர்க்கதரிசன நாட்களும் நம்முடைய விசுவாசமும்
“ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான் [மகிழ்ச்சியுள்ளவன், NW].”—தானியேல் 12:12.
1. ஏன் அநேகர் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கத் தவறுகின்றனர், மேலும் உண்மையான மகிழ்ச்சி எதோடு தொடர்புடையதாய் இருக்கிறது?
எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றனர். என்றபோதிலும், இன்று வெகு சிலரே மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஏன்? அநேகர் தவறான இடத்தில் மகிழ்ச்சிக்காக நோக்குகின்றனர் என்பது இதற்கு ஓரளவு காரணமாய் இருக்கிறது. கல்வி, செல்வம், ஒரு வாழ்க்கை தொழில், அல்லது அதிகாரத்திற்காகப் பின்தொடர்தல் போன்ற காரியங்களில் மகிழ்ச்சி தேடப்படுகிறது. எனினும், இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தின் தொடக்கத்தில் ஒருவருடைய ஆவிக்குரிய தேவையை உணர்ந்திருத்தல், இரக்கம், இருதயத்தில் சுத்தம், ஆகியவற்றைப்போன்ற தன்மைகளுடன் மகிழ்ச்சியைத் தொடர்புபடுத்தினார். (மத்தேயு 5:3-10) இயேசு பேசிய வகையான மகிழ்ச்சி நிஜமும் நிரந்தரமுமானது.
2. தீர்க்கதரிசனத்தின்படி, முடிவு காலத்தில் எது மகிழ்ச்சிக்கு வழிநடத்தும், இதைக்குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?
2 முடிவு காலத்திலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருக்கு, மகிழ்ச்சி கூடுதலான ஏதோவொன்றுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. தானியேல் புத்தகத்தில், நாம் வாசிக்கிறோம்: “தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவு காலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான் [மகிழ்ச்சியுள்ளவன், NW].” (தானியேல் 12:9, 12) இந்த 1,335 நாட்கள் எந்தக் காலப்பகுதியை உள்ளடக்குகின்றன? அவற்றினூடே வாழ்ந்திருக்கிறவர்கள் ஏன் மகிழ்ச்சியுள்ளவர்கள்? இது இன்று நம் விசுவாசத்துடன் ஏதாவது தொடர்புடையதாய் இருக்கிறதா? பாபிலோன் சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலின் விடுவிப்பைத் தொடர்ந்து, பெர்சியா ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே, தானியேல் இந்த வார்த்தைகளை எழுதிய சமயத்தைப் பின்னோக்கிப் பார்த்தால், இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க நாம் உதவப்படுகிறோம்.—தானியேல் 10:1.
திரும்ப நிலைநாட்டப்படுதல் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது
3. கோரேசு அரசனின் எந்த செயல் பொ.ச.மு. 537-ல் உண்மையுள்ள யூதர்களுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொண்டு வந்தது, ஆனால் என்ன சிலாக்கியத்தை கோரேசு யூதர்களுக்குக் கொடுக்கவில்லை?
3 பாபிலோனிலிருந்து விடுவிப்பு, யூதர்களுக்கு ஓர் உண்மையான பெருமகிழ்ச்சிக்குரிய நேரமாக இருந்தது. யூதர்கள் ஏறக்குறைய 70 வருடங்கள் நாடுகடத்தப்பட்ட நிலையைச் சகித்தப்பின், யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்ட எருசலேமுக்கு வரும்படி மகா கோரேசு அவர்களை அழைத்தான். (எஸ்றா 1:1, 2) அதற்கேற்றபடி பிரதிபலித்தவர்கள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் புறப்பட்டனர்; பொ.ச.மு. 537-ல் தங்கள் தாய்நாட்டைச் சென்றடைந்தனர். எனினும், தாவீது அரசனின் வம்சவழியில் வந்த ஒருவரின்கீழ் ஒரு ராஜ்யத்தைத் திரும்ப ஸ்தாபிக்கும்படி கோரேசு அவர்களை அழைக்கவில்லை.
4, 5. (அ) தாவீதிய அரசுரிமை எப்போது கவிழ்க்கப்பட்டது? ஏன்? (ஆ) தாவீதிய அரசுரிமை திரும்ப நிலைநாட்டப்படுமென யெகோவா என்ன உறுதி அளித்தார்?
4 அது குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், யெகோவா தாவீதிடம் இவ்வாறு வாக்களித்திருந்தார்: “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” (2 சாமுவேல் 7:16) கவலைக்குரியவிதத்தில், தாவீதின் அரச வம்சவழியில் வந்த பெரும்பான்மையோர் எதிர்ப்பவர்களாக நிரூபித்தனர்; அந்த தேசத்தின் இரத்தப்பழி அவ்வளவு பெரிதானதால், பொ.ச.மு. 607-ல் தாவீதிய அரசுரிமை கவிழ்க்கப்படும்படி யெகோவா அனுமதித்தார். மக்கபியர்களின்கீழ் இருந்த ஒரு குறுகிய காலப்பகுதியைத் தவிர, அப்போதிலிருந்து பொ.ச. 70-ல் அதன் இரண்டாம் அழிவு வரை எருசலேம் அயல்நாட்டு ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. இவ்வாறு, பொ.ச.மு. 537-ல், தாவீதின் எந்தக் குமாரனும் அரசனாக ஆட்சிசெய்யாத “புறஜாதியாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” முன்னேற்றத்தில் இருந்தன.—லூக்கா 21:24, NW.
5 இருந்தாலும், தாவீதிடமான தம்முடைய வாக்குத்தத்தத்தை யெகோவா மறந்துவிடவில்லை. பாபிலோனால் உலக ஆதிக்கம் செலுத்தப்படும் காலம் முதற்கொண்டு தாவீதின் வழியில் வந்த ஓர் அரசன் யெகோவாவின் மக்களாலான ஒரு ராஜ்யத்தை மறுபடியும் ஆட்சி செய்யும் காலம் வரையாக நூற்றாண்டுகளினூடே சம்பவிக்கும் எதிர்கால உலக சம்பவங்களின் விவரங்களை, தரிசனங்கள் மற்றும் சொப்பனங்களின் ஒரு தொடர் மூலம் தம்முடைய தீர்க்கதரிசியாகிய தானியேலின் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார். தானியேல் 2, 7, 8 மற்றும் 10-12 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனங்கள், முடிவில், தாவீதின் சிங்காசனம் “என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” ஒன்றாக உண்மையில் ஆகிவிடும் என்று உண்மையுள்ள யூதர்களுக்கு உறுதி அளித்தது. நிச்சயமாக, அத்தகைய வெளிப்படுத்தப்பட்ட சத்தியம், பொ.ச.மு. 537-ல் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிய யூதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது!
6. தானியேலின் தீர்க்கதரிசனங்களில் சில நம்முடைய நாளில் நிறைவேற்றப்படும் என்று நமக்கு எப்படித் தெரியும்?
6 தானியேலின் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் அவற்றின் முழுமையில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்னரே நிறைவேறிவிட்டதாக பெரும்பாலான பைபிள் கருத்துரையாளர்கள் வாதாடுகின்றனர். ஆனால் தெளிவாகவே இது அவ்வாறில்லை. தானியேல் 12:4-ல் ஒரு தூதன் தானியேலிடம் சொல்கிறார்: “முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்.” தானியேல் புத்தகம் முடிவு காலத்தில்தானே முத்திரை உடைக்கப்படுவதாக—அதன் அர்த்தம் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதாக—இருந்தால், நிச்சயமாக குறைந்தபட்சம் சில தீர்க்கதரிசனங்களாவது அந்தக் காலப்பகுதிக்குப் பொருந்துவதாக இருக்க வேண்டும்.—பார்க்கவும் தானியேல் 2:28; 8:17; 10:14.
7. (அ) புறஜாதியாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள் எப்போது முடிவடைந்தன, மேலும் என்ன அவசரமான கேள்வி அப்போது பதிலளிக்கப்பட வேண்டியதாய் இருந்தது? (ஆ) யார் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார”னாக இருக்கவில்லை?
7 புறஜாதியாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள் 1914-ல் முடிவடைந்து, இந்த உலகின் முடிவுக்குரிய காலம் துவங்கியது. தாவீதிய ராஜ்யம், பூமிக்குரிய எருசலேமில் அல்ல, ஆனால் காணக்கூடாத வகையில் ‘வானத்து மேகங்களில்’ திரும்ப நிலைநாட்டப்பட்டது. (தானியேல் 7:13, 14) அந்தச் சமயத்தில், போலிக் கிறிஸ்தவத்தின் ‘களைகள்’ செழித்தோங்கியபடியால், மெய்க் கிறிஸ்தவத்தின் நிலைமை—மனித கண்களுக்காவது—தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ஒரு முக்கிய கேள்வி பதிலளிக்கப்படவேண்டியதாய் இருந்தது: “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?” (மத்தேயு 13:24-30; 24:45) திரும்ப நிலைநாட்டப்பட்ட தாவீதிய ராஜ்யத்தை பூமியில் பிரதிநிதித்துவம் செய்யப்போவது யார்? தானியேலின் மாம்சப்பிரகார சகோதரர்களான யூதர்கள் அல்ல. அவர்களின் விசுவாசக் குறைவாலும் மேசியாவின்பேரில் இடறியதற்காகவும் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருந்தனர். (ரோமர் 9:31-33) உண்மையுள்ள அடிமை எவ்விதத்திலும் கிறிஸ்தவமண்டல அமைப்புகளின் மத்தியில் காணப்படவில்லை! இயேசு அவர்களை அறியவில்லை என்பதை அவர்களுடைய பொல்லாத கிரியைகள் நிரூபித்தன. (மத்தேயு 7:21-23) அப்படியானால், அது யார்?
8. முடிவு காலத்தின்போது “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார”னாக நிரூபித்திருப்பது யார்? நமக்கு எப்படித் தெரியும்?
8 எவ்வித சந்தேகமுமின்றி, 1914-ல் பைபிள் மாணாக்கர் என்றும், ஆனால் 1931 முதல் யெகோவாவின் சாட்சிகள் என்றும் அடையாளங்காட்டப்பட்ட இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களாலான சிறிய குழுவாக அது இருந்தது. (ஏசாயா 43:10) அவர்கள் மட்டுமே தாவீதின் வழியில் வந்த திரும்ப நிலைநாட்டப்பட்ட ராஜ்யத்தைப் பிரசித்திப்பெறச் செய்திருக்கின்றனர். (மத்தேயு 24:14) அவர்கள் மட்டுமே உலகிலிருந்து பிரிந்திருந்து, யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தி இருக்கின்றனர். (யோவான் 17:6, 14) மேலும் கடைசி காலத்தில், கடவுளுடைய மக்களுடன் சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அவர்கள்மேல் மட்டுமே நிறைவேறி இருக்கின்றன. இந்தத் தீர்க்கதரிசனங்களுக்குள்தான், மகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடிய 1,335 நாட்கள் உட்பட, தானியேல் 12-ம் அதிகாரத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன காலப்பகுதிகளின் தொடரும் இருக்கிறது.
அந்த 1,260 நாட்கள்
9, 10. தானியேல் 7:25-ன் ‘காலம், காலங்கள் மற்றும் அரைக் காலத்தை’ சிறப்பித்துக்காட்டிய சம்பவங்கள் யாவை, மேலும் வேறு எந்த வேதவசனங்களில் ஓர் இணையான காலப்பகுதி குறிப்பிடப்பட்டிருக்கிறது?
9 தானியேல் 12:7-ல், முதல் தீர்க்கதரிசன காலப்பகுதியைப்பற்றி நாம் வாசிக்கிறோம்: ‘ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீரும்.”a இந்த அதே காலப்பகுதி வெளிப்படுத்துதல் 11:3-6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது; கடவுளுடைய சாட்சிகள் இரட்டு வஸ்திரத்துடன் மூன்றரை வருடங்கள் பிரசங்கித்து, பின்னர் கொல்லப்படுவர் என்று அது சொல்கிறது. மீண்டும், தானியேல் 7:25-ல் நாம் வாசிக்கிறோம்: “உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.”
10 இந்தப் பின்கூறப்பட்ட தீர்க்கதரிசனத்தில், “அவன்” என்பது பாபிலோனிலிருந்து கணக்கிடுகையில் ஐந்தாம் உலக வல்லரசாகும். அதுவே “சின்ன கொம்பு”; அதன் அதிகாரத்தின் சமயத்தில்தானே, மனுஷகுமாரன் ‘கர்த்தத்துவம், மகிமை, ராஜரிகம்’ ஆகியவற்றைப் பெறுகிறார். (தானியேல் 7:8, 14) இந்த அடையாளப்பூர்வ கொம்பு, முதலில் பிரிட்டன் பேரரசாக இருந்து, முதல் உலகப் போரின்போது ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை உலக வல்லரசாக வளர்ந்து, இப்போது ஐக்கிய மாகாணங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. மூன்றரை காலங்கள், அல்லது வருடங்களுக்கு, இந்த வல்லரசு பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைக்கும். முடிவில், பரிசுத்தவான்கள் அதன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 13:5, 7-ஐயும் பார்க்கவும்.
11, 12. அந்த 1,260 தீர்க்கதரிசன நாட்களின் தொடக்கத்திற்கு வழிநடத்திய சம்பவங்கள் யாவை?
11 இந்த எல்லா இணை தீர்க்கதரிசனங்களும் எவ்வாறு நிறைவேறின? முதல் உலகப் போருக்குப் பல வருடங்களுக்குமுன், 1914 புறஜாதியாருக்குக் குறிக்கப்பட்ட காலங்களின் முடிவைக் காணும் என்று இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் வெளிப்படையாக எச்சரித்தனர். போர் எழும்பியபோது, அந்த எச்சரிக்கை அசட்டைசெய்யப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி செய்யும் காலத்தைத் தள்ளிப்போடுவதற்கு, “காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற”ம் செய்வதற்கான ஒரு முயற்சியில், அப்போது பிரிட்டனின் பேரரசால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட உலக அரசியல் அமைப்பான அவனுடைய ‘மூர்க்க மிருகத்தை’ சாத்தான் பயன்படுத்தினான். (வெளிப்படுத்துதல் 13:1, 2) அவன் தோல்வி அடைந்தான். மனிதன் சென்றெட்ட முடியாத தொலைவில், பரலோகத்தில், கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது.—வெளிப்படுத்துதல் 12:1-3.
12 பைபிள் மாணாக்கர்களுக்கு, அந்தப் போர் ஒரு பரீட்சையின் காலமாக இருந்தது. ஜனவரி 1914 முதற்கொண்டு, அவர்கள் சிருஷ்டிப்பின் நிழற்பட நாடகக்கதையை (Photo-Drama of Creation) காண்பித்து வந்திருக்கின்றனர்; அது தானியேல் தீர்க்கதரிசனங்களுக்குக் கவனத்தை ஈர்த்த ஒரு பைபிள்பூர்வ அளிப்பாக இருந்தது. வடக்குப்பாதி கோளத்தில், அந்த வருட கோடைக்காலத்தில், போர் மூண்டது. அக்டோபரில், குறிக்கப்பட்ட காலங்கள் முடிவடைந்தன. அந்த வருட முடிவில், அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் துன்புறுத்தலை எதிர்நோக்கி இருந்தனர்; மத்தேயு 20:22-ஐ அடிப்படையாகக் கொண்டிருந்த, இயேசு தம்முடைய சீஷர்களிடம் கேட்ட கேள்வியாகிய “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்க . . . கூடுமா” என்பதை 1915-க்கு வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுத்த உண்மையிலிருந்து இது தெரிகிறது.
13 இதனால், டிசம்பர் 1914 முதல், சாட்சிகளின் இந்தச் சிறிய குழு யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கையில், தாழ்மையாகச் சகித்துக்கொண்டு ‘இரட்டு வஸ்திரத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தனர்.’ அநேகருக்கு ஓர் அதிர்ச்சியாக இருந்தது என்னவென்றால், 1916-ல், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் முதல் தலைவர், C. T. ரஸலின் மரணமாகும். போர் நடுக்கம் பரவிக் கொண்டிருந்ததால், அவர்கள் பேரளவான எதிர்ப்பை எதிர்ப்பட்டனர். சிலர் சிறையிலடைக்கப்பட்டனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிரான்க் ப்லாட், கனடாவைச் சேர்ந்த ராபர்ட் க்லெக் போன்றோர், கொடுமையில் பிரியமுள்ள அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டனர். முடிவாக, ஜூன் 21, 1918-ல், புதிய தலைவர், J. F. ரதர்ஃபோர்டும், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் இயக்குநர்களும் சேர்ந்து, தவறான குற்றச்சாட்டுகளின்பேரில் ஒரு நெடுங்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இவ்வாறு, அந்தத் தீர்க்கதரிசன காலப்பகுதியின் முடிவில், அந்த “சின்ன கொம்பு” ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்படையான பிரசங்க வேலையை கொன்றுபோட்டது.—தானியேல் 7:8.
14. அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானவர்களுக்கு 1919-லும் அதற்குப் பின்னரும் காரியங்கள் எவ்வாறு மாறின?
14 அடுத்து என்ன நடந்தது என்று வெளிப்படுத்துதல் புத்தகம் தீர்க்கதரிசனம் உரைக்கிறது. ஒரு சிறிது கால செயலற்றநிலைக்குப்பின்—இறந்து தெருவில் கிடப்பதாக முன்னறிவிக்கப்பட்ட மூன்றரை நாட்களுக்குப்பின்—அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் உயிரடைந்து மீண்டும் சுறுசுறுப்பானார்கள். (வெளிப்படுத்துதல் 11:11-13) மார்ச் 26, 1919 அன்று, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் தலைவரும் இயக்குநர்களும் விடுவிக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு எதிராக இருந்த தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து முழுமையாக குற்றமில்லையென தீர்க்கப்பட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட்டவுடனேயே, அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் மேலுமான நடவடிக்கைக்கு மீண்டும் ஒழுங்கமைக்கத் தொடங்கினர். இவ்வாறாக வெளிப்படுத்துதலின் முதல் ஆபத்தின் நிறைவேற்றமாக, அவர்கள் செயலற்ற நிலையான அபிஸிலிருந்து ஆவிக்குரிய வெட்டுக்கிளிகளைப்போல், பொய் மதத்திற்கு ஓர் இருண்ட எதிர்காலத்தை முன்குறிக்கும்விதத்தில் அடர்த்தியான புகையுடன் வெளிவந்தனர். (வெளிப்படுத்துதல் 9:1-11) அடுத்த சில வருடங்களில், அவர்கள் ஆவிக்குரியவிதத்தில் ஊட்டமளிக்கப்பட்டு, வரவிருப்பவற்றிற்காகத் தயாரிக்கப்பட்டனர். புதியவர்களும் பிள்ளைகளும் அடிப்படை பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள உதவும்படி திட்டமைக்கப்பட்ட தேவனின் சுரமண்டலம் (The Harp of God) என்ற புதிய புத்தகத்தை அவர்கள் 1921-ல் பிரசுரித்தனர். (வெளிப்படுத்துதல் 12:6, 14) இவை யாவும், மற்றொரு குறிப்பிடத்தக்க காலப்பகுதியில் சம்பவித்தன.
அந்த 1,290 நாட்கள்
15. அந்த 1,290 நாட்களின் தொடக்கத்தை நாம் எந்த வழியில் கணக்கிட முடியும்? இந்தக் காலப்பகுதி எப்போது முடிவடைந்தது?
15 அந்தத் தூதன் தானியேலிடம் சொன்னார்: “அன்றாடபலி [“நிலையான அம்சம்,” NW; “இடைவிடாத பலி,” NW அடிக்குறிப்பு] நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும்.” (தானியேல் 12:11) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ், எருசலேமில் ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் “இடைவிடாத பலி” எரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் தகனபலிகளைச் செலுத்துவதில்லை, ஆனால் அவர்கள் ஆவிக்குரியவிதத்தில் ஓர் இடைவிடாத பலியைச் செலுத்துகின்றனர். பவுல் பின்வருமாறு சொன்னபோது, இதைக் குறிப்பிட்டார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை . . . எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 13:15; ஒப்பிடவும் ஓசியா 14:2.) இந்த இடைவிடாத பலி, ஜூன் 1918-ல் நீக்கப்பட்டது. அப்படியென்றால்—நாம் நோக்கியிருக்கவேண்டிய இரண்டாம் அம்சமாகிய—அந்த “அருவருப்பு” என்ன? முதல் உலகப் போரின் முடிவில், வெற்றிசிறந்த வல்லரசுகளால் முன்னேற்றுவிக்கப்பட்ட சர்வதேச சங்கமாக அது இருந்தது.b அந்தச் சங்கமே, சமாதானத்திற்கான மனிதனின் ஒரே நம்பிக்கையைக் குறிப்பதாக, கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் அதைக் கடவுளுடைய ராஜ்யத்திற்குரிய இடத்தில் வைத்ததால், அது அருவருப்பாக இருந்தது. ஜனவரி 1919-ல் அந்தச் சங்கத்தை அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது. அந்தச் சமயத்திலிருந்து 1,290 நாட்களைக் கணக்கிடுவோமானால், (மூன்று வருடங்கள், ஏழு மாதங்கள்), நாம் செப்டம்பர் 1922-க்கு வருகிறோம்.
16. அந்த 1,290 நாட்களின் முடிவில், அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் செயலில் இறங்க தயாராக இருந்தனர் என்பது எப்படி தெளிவாகத் தெரிந்தது?
16 அப்போது என்ன நடந்தது? பைபிள் மாணாக்கர்கள் இப்போது புத்துணர்ச்சி அளிக்கப்பட்டவர்களாய், மகா பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாய், செயலில் இறங்க தயாராக இருந்தனர். (வெளிப்படுத்துதல் 18:4) அ.ஐ.மா.-ன், ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்டில் செப்டம்பர் 1922-ல் நடத்தப்பட்ட மாநாட்டில், அவர்கள் பயமின்றி கிறிஸ்தவமண்டலத்தின்மீதான கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கத் தொடங்கினர். (வெளிப்படுத்துதல் 8:7-12) வெட்டுக்கிளிகளின் கொடுக்குகள் உண்மையில் வேதனைதரத் தொடங்கின! அதற்கும் மேலானது என்னவென்றால், வெளிப்படுத்துதலின் இரண்டாம் ஆபத்துத் தொடங்கிவிட்டது. ஒரு கூட்டமான கிறிஸ்தவ குதிரைச்சேனை—முதலில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரால் ஆனதும் பின்னர் திரள் கூட்டத்தால் அதிகரிக்கப்பட்டதும்—பூமியினூடே பாய்ந்தன. (வெளிப்படுத்துதல் 7:9; 9:13-19) ஆம், அந்த 1,290 நாட்களின் முடிவு கடவுளுடைய மக்களுக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவந்தது.c ஆனால், இன்னும் அதிகம் இருந்தது.
அந்த 1,335 நாட்கள்
17. அந்த 1,335 நாட்கள் எப்போது தொடங்கி, முடிவடைந்தன?
17 தானியேல் 12:12 சொல்கிறது: “ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான் [மகிழ்ச்சியுள்ளவன், NW].” இந்த 1,335 நாட்கள், அல்லது மூன்று வருடங்களும் எட்டரை மாதங்களும், நமக்கிருக்கும் சான்றுகளின்படி, முந்தின காலப்பகுதியின் முடிவில் தொடங்கின. செப்டம்பர் 1922-லிருந்து கணக்கிடுகையில், இது 1926-ன் பிற்பட்ட இளவேனிலுக்கு (வடக்குப்பகுதி கோளத்தில்) நம்மைக் கொண்டு வருகிறது. அந்த 1,335 நாட்களின்போது என்ன நடந்தது?
18. அப்போது, 1922-ல், இன்னும் முன்னேற்றம் செய்யப்பட வேண்டியிருந்தது என்பதை எந்த உண்மைகள் குறிப்பிட்டுக் காண்பிக்கின்றன?
18 சான்றுகளின்படி, 1922-ல் நடந்த சம்பவங்கள் குறிப்பிடத்தக்க இயல்புடையவையாய் இருந்தபோதிலும், சிலர் இன்னும் கடந்தகாலத்தை விருப்பத்தோடு நோக்கிக்கொண்டிருந்தனர். C. T. ரஸலால் எழுதப்பட்ட வேதவசனங்களில் படிப்புகள் (Studies in the Scriptures) இன்னும் அடிப்படை படிப்புப் பொருளாக இருந்தன. மேலும், மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்டிருந்த இப்பொழுது வாழும் இலட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிப்பதில்லை (Millions Now Living Will Never Die) என்ற சிறு புத்தகம், பூமியைப் பரதீஸாகத் திரும்ப நிலைநாட்டுவதற்கான கடவுளுடைய நோக்கங்களும் பண்டைய உண்மையுள்ளவர்களை உயிர்த்தெழுப்புவதும் 1925-ல் நிறைவேறத் தொடங்கும் என்ற கருத்தை அளித்தது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் சகிப்பு முடிவை நெருங்குவதாகத் தோன்றிற்று. இருப்பினும், பைபிள் மாணாக்கருடன் தொடர்புடைய சிலர் மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள உந்துவிக்கப்பட்டவர்களாய் உணரவில்லை.
19, 20. (அ) அந்த 1,335 நாட்களின்போது, எப்படி கடவுளுடைய மக்களுக்கு அநேக காரியங்கள் மாறின? (ஆ) அந்த 1,335-நாள் காலப்பகுதியின் முடிவை எந்தச் சம்பவங்கள் குறித்துக்காட்டின, அவை யெகோவாவின் மக்களைப்பற்றி எதைச் சுட்டிக்காட்டின?
19 அந்த 1,335 நாட்கள் தொடர்கையில், இவை யாவும் மாறின. சகோதரர்களைப் பலப்படுத்துவதற்கு, தி உவாட்ச் டவரின் ஒழுங்கான தொகுதி படிப்புகள் அமைக்கப்பட்டன. வெளி ஊழியத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மே 1923-ல் துவங்கி, ஒவ்வொரு மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையும் ஒவ்வொருவரும் வெளி ஊழியத்தில் பங்கெடுக்கும்படி அழைக்கப்பட்டனர்; மேலும் வாரத்தின் மத்தியிலுள்ள சபை கூட்டத்தில் இந்த வேலைக்கு அவர்களை உற்சாகப்படுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 1923-ல், அ.ஐ.மா.-லுள்ள கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த அசெம்பிளி ஒன்றில், செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமை ஆயிரவருட ஆட்சிக்குமுன் நிறைவேற்றப்படும் என்பது காண்பிக்கப்பட்டது. (மத்தேயு 25:31-40) காற்றலைகள் வாயிலாக நற்செய்தியை ஒலிபரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட WBBR என்ற வானொலி நிலையத்தின் தொடக்கத்தை 1924-ம் வருடம் கண்டது. மார்ச் 1, 1925-ன் தி உவாட்ச் டவரின் “அந்த ஜாதியின் பிறப்பு” என்ற கட்டுரை வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தின் ஒரு திருத்தியமைக்கப்பட்ட புரிந்துகொள்ளுதலைக் கொடுத்தது. கடைசியாக, 1914-19-ன் குழப்பமிக்க சம்பவங்களை உண்மையுள்ள கிறிஸ்தவர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
20 வருடம் 1925, அதன் முடிவிற்கு வந்தது, ஆனால் முடிவு இன்னும் வரவில்லை! பைபிள் மாணாக்கர்கள், 1870-கள் முதற்கொண்டே ஒரு தேதியை மனதில் வைத்துக்கொண்டு சேவித்து வந்தனர்—முதலில் 1914, பின்னர் 1925. இப்போது, அவர்கள் யெகோவா விரும்பும் வரையாக சேவிக்க வேண்டும் என்று உணர்ந்தார்கள். ஜனவரி 1, 1926, தி உவாட்ச் டவர், கடவுளுடைய பெயரின் முக்கியத்துவத்தை முன்னொருபோதும் இராதவண்ணம் சிறப்பித்துக்காட்டும் “யார் யெகோவாவைக் கனம்பண்ணுவார்கள்?” என்ற திருப்புமுனை கட்டுரையைக் கொண்டிருந்தது. மேலும் கடைசியாக, மே 1926-ல், இங்கிலாந்திலுள்ள லண்டன் மாநாட்டில், “உலகத்தின் ஆட்சியாளர்களுக்கு ஓர் அத்தாட்சி” என்ற தலைப்பை உடைய ஒரு தீர்மானம் ஏற்கப்பட்டது. இது கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய சத்தியத்தையும் சாத்தானுடைய உலகிற்கு வரப்போகும் அழிவையும் நேரடியாக அறிவித்தது. அதே மாநாட்டில்தானே, விடுதலை (Deliverance) என்ற பலமாகத் தாக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது; வேதவசனங்களில் படிப்புகள் என்பவற்றை மாற்றீடு செய்யும் ஒரு தொடரில் முதலாவதாக இது ஆனது. கடவுளுடைய மக்கள் இப்போது பின்னோக்காமல், முன்னோக்கிக் கொண்டிருந்தனர். அந்த 1,335 நாட்கள் முடிவடைந்தன.
21. அப்போதிருந்த கடவுளுடைய மக்களுக்கு, 1,335-நாள் காலப்பகுதியினூடே சகித்து நிலைத்திருப்பது எதை அர்த்தப்படுத்தியது, இந்தக் காலப்பகுதியைக் குறித்த தீர்க்கதரிசன நிறைவேற்றம் நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
21 சிலர் இந்த முன்னேற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள மனமில்லாதவர்களாய் இருந்தனர்; ஆனால் சகித்து நிலைத்திருந்தவர்கள் உண்மையில் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருந்தனர். மேலுமாக, இந்தத் தீர்க்கதரிசன காலப்பகுதிகளின் நிறைவேற்றத்தை நாம் பின்னோக்கிப் பார்க்கையில் நாமும் மகிழ்ச்சி அடைகிறோம்; ஏனென்றால், அந்தக் காலங்களில் வாழ்ந்துவந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சிறிய குழு நிஜமாகவே உண்மையும் விவேகமுமுள்ள அடிமை என்பதால் நம்முடைய நம்பிக்கை பலப்படுத்தப்படுகிறது. அப்போது முதற்கொண்டு துவங்கிய வருடங்களில், யெகோவாவின் அமைப்பு பேரளவில் விரிவடைந்திருக்கிறது; ஆனால் இன்னும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையே அதன் மையத்திலிருந்து அதை வழிநடத்துகிறது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் வேறே ஆடுகளுக்கும் இன்னும் அதிக மகிழ்ச்சி காத்திருக்கிறது என்பதை அறிவது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது! தானியேலின் தீர்க்கதரிசனங்களில் மற்றொன்றை நாம் கருதும்போது இது காணப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தீர்க்கதரிசன காலப்பகுதிகளை எப்படி கணக்கிடுவது என்பதைப்பற்றிய கலந்தாலோசிப்புக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட வரப்போகும் நம் உலக அரசாங்கம்—கடவுளுடைய ராஜ்யம் (Our Incoming World Government—God’s Kingdom), அதிகாரம் 8-ஐப் பார்க்கவும்.
b ஏப்ரல் 1, 1986 காவற்கோபுரம் பக்கங்கள் 13-23-ஐப் பார்க்கவும்.
c ஏப்ரல் 1, 1991, காவற்கோபுரம், பக்கங்கள் 21, 22-ஐயும், 1975 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம் (1975 Yearbook of Jehovah’s Witnesses) பக்கம் 132-ஐயும் பார்க்கவும்.
உங்களால் விவரிக்க முடியுமா?
◻ தானியேலிலுள்ள சில தீர்க்கதரிசனங்கள் நம்முடைய காலத்தில் நிறைவேற்றப்படும் என்று நமக்கு எப்படித் தெரியும்?
◻ அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரே “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
◻ அந்த 1,260 நாட்கள் எப்போது தொடங்கி, முடிவடைந்தன?
◻ அந்த 1,290 நாட்கள் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருக்கு எவ்வித புத்துணர்ச்சியையும் திரும்ப நிலைநாட்டப்படுதலையும் கொண்டுவந்தன?
◻ அந்த 1,335 நாட்களின் முடிவு வரை சகித்து நிலைத்திருந்தவர்கள் ஏன் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருந்தனர்?
13. அந்த 1,260 நாட்களின்போது பைபிள் மாணாக்கர்கள் எப்படி இரட்டு வஸ்திரத்துடன் பிரசங்கித்தனர், அந்தக் காலப்பகுதியின் முடிவில் என்ன நடந்தது?
[பக்கம் 8-ன் படம்]
அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரே “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” என்பது 1919 முதல் தெளிவாக இருந்திருக்கிறது
[பக்கம் 10-ன் படம்]
ஜெனீவாவிலுள்ள சர்வதேச சங்கத்தின் தலைமை அலுவலகம், ஸ்விட்ஸர்லாந்து
[பக்கம் 11-ன் பெட்டி]
தானியேலின் தீர்க்கதரிசன காலப்பகுதிகள்
1,260 நாட்கள்:
டிசம்பர் 1914 முதல் ஜூன் 1918 வரை
1,290 நாட்கள்:
ஜனவரி 1919 முதல் செப்டம்பர் 1922 வரை
1,335 நாட்கள்:
செப்டம்பர் 1922 முதல் மே 1926 வரை