வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“காவற்கோபுர” பத்திரிகையில் விளக்கப்பட்டிருந்த தானியேல் தீர்க்கதரிசனங்களை நாங்கள் வாசித்து மகிழ்ந்தோம். ஆனால், வெளிப்படுத்துதல் 11:3-ல் உள்ள மூன்றரைக் காலங்களுக்கான தேதிகள் ஏன் “வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம்” புத்தகத்தில் குறிப்பிட்டதிலிருந்து வித்தியாசப்பட்டது?
ஆம், நவம்பர் 1, 1993 காவற்கோபுரம் வெளிப்படுத்துதல் 11:3-ன் நவீனநாளைய நிறைவேற்றம் சார்ந்த தேதியில் சிறு மாற்றத்தைச் செய்திருந்தது. ஏன்?
வெளிப்படுத்துதல் 11:2-ஐ நாம் முதலில் கவனிப்போம். அதன் கடைசி பாகம் ‘நாற்பத்திரண்டு மாதங்களை’ குறிப்பிடுகிறது. 3-ம் வசனத்தில் நாம் தொடர்ந்து வாசிப்பதாவது: “என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.” இது எப்பொழுது பொருந்துகிறது?
1914-ல் “தேசங்களுக்கு குறிக்கப்பட்ட காலங்கள்” (புறஜாதியாரின் காலங்கள்) முடிந்த பிறகு இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறினது என்று யெகோவாவின் சாட்சிகள் வெகு காலத்திற்கு முன்பு அறிந்திருக்கின்றனர். (லூக்கா 21:24, NW; 2 கொரிந்தியர் 1:21, 22) இதை விளக்குவதாய், வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்திருக்கிறது!a (1988) (Revelation—Its Grand Climax At Hand!) பக்கம் 164-ல் சொல்கிறது: “குறிக்கப்பட்ட காலப்பகுதியாகிய மூன்றரையாண்டுகள் இருந்தன, அப்போதுதானே இங்கு தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட சம்பவங்களோடு கடவுளுடைய ஜனங்கள் பட்ட கடினமான அனுபவங்களும் ஒத்திருந்தன—1914-ன் பிற்பகுதியில் நடந்த முதல் மகா உலக யுத்தத்தில் தொடங்கி 1918-ன் முற்பகுதி வரை நீடித்திருந்த சம்பவங்களே ஆகும்.”
குறிக்கப்பட்ட தேதியானது “1914-ன் பிற்பகுதியில் நடந்த முதல் மகா உலக யுத்தத்தில் தொடங்கி 1918-ன் முற்பகுதி [வரை]” இருந்தது என்பதைக் கவனியுங்கள். “கடவுளுடைய ரகசியம் அப்போது வெளிக்காட்டப்பட்டிருக்கும்” (“Then Is Finished the Mystery of God”) புத்தகத்தில், 261-4 பக்கங்களில் (1969)* கொடுக்கப்பட்டிருப்பதுபோல, இது அடிக்கடி குறிப்பிடப்படும் தேதியோடு ஒத்திருக்கிறது.
என்றாலும், காவற்கோபுரமானது தானியேலிலுள்ள தீர்க்கதரிசனங்களின்பேரில் கவனத்தை ஊன்றவைத்தது, இந்தப் புத்தகமானது வெளிப்படுத்துதலில் பின்னர் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு ஒப்பாக உள்ள ஒரு காலப்பகுதியை, அதாவது, 3 1/2 ஆண்டுகளை அல்லது 42 மாதங்களை இருமுறை குறிப்பிடுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால், கடவுளுடைய பரிசுத்தவான்கள் “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்” அல்லது 3 1/2 காலங்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று தானியேல் 7:25 சொல்கிறது. அடுத்து, தானியேல் 12:7-ஆனது (NW) ‘ஒரு குறிக்கப்பட்ட காலத்தையும், குறிக்கப்பட்ட காலங்களையும், அரைக்காலத்தையும்’ அல்லது 3 1/2 காலங்களை முன்னுரைக்கிறது, இது ‘பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறுவதோடு’ உச்சக்கட்டமடையும்.
ஆக தானியேல் 7:25, தானியேல் 12:7, மற்றும் வெளிப்படுத்துதல் 11:2, 3 மேலும் வெளிப்படுத்துதல் 13:5 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள ஒப்பான காலப்பகுதியைப் பற்றி சொல்லும் தீர்க்கதரிசனங்கள் நம்மிடம் உள்ளன. 1914-18 காலப்பகுதியில் இவை யாவுமே நிறைவேறின என்று நம்முடைய பிரசுரங்கள் காண்பித்திருக்கின்றன. ஆனால் இந்தத் தீர்க்கதரிசனங்களைத் தனித்தனியாக பார்க்கையில், தொடக்கத் தேதியும் முடிவு தேதியும் சற்று வித்தியாசப்பட்டது.
இருந்தாலும், நவம்பர் 1, 1993 காவற்கோபுரம் கேட்டது: “இந்த எல்லா இணை தீர்க்கதரிசனங்களும் எவ்வாறு நிறைவேறின?” ஆம், தானியேல் 7:25, தானியேல் 12:7 மற்றும் வெளிப்படுத்துதல் 11:3 ஆகிய வசனங்களில் குறிப்பிட்டுள்ள 3 1/2 காலங்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் ‘இணை தீர்க்கதரிசனங்களாக’ கருதப்பட்டன. ஆகையால், அவை அவற்றின் தொடக்கத்திலும் அவற்றின் முடிவிலும் ஒத்திருக்கும்.
முடிவைப் பற்றிப் பார்க்கையில், அந்தப் பத்திரிகையானது ஜூன் 1918-ல் கடவுளுடைய பரிசுத்தவான்களின் ஒடுக்குதல் எப்படி (தானியேல் 7:25) உச்சக்கட்டமடைந்தது என்பதை எடுத்துக்காட்டியது, அப்போது J. F. ரதர்ஃபோர்டும் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சங்கத்தின் மற்ற இயக்குநர்களும் “தவறான குற்றச்சாட்டுகளின்பேரில் ஒரு நெடுங்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.” நிச்சயமாகவே, அந்தச் சம்பவம் தானியேல் 12:7-ல் குறிப்பிட்டிருக்கிற பிரகாரம் “பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவு பெறு”வதாக இருந்தது.
ஜூன் 1918-லிருந்து பின்னால் எண்ணிக்கொண்டே போனால், 3 1/2 காலங்களின் துவக்கமாக, டிசம்பர் 1914-க்கு நம்மை கொண்டு வருகிறது. 1914-ல் முடிவடையும் அந்த மாதத்தில் பூமியிலுள்ள கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அடுத்த ஆண்டின் முக்கிய வசனத்தை கற்றுக்கொண்டனர்: “‘நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்க . . . கூடுமா?’—மத்தேயு 20:20-23 [கிங் ஜேம்ஸ் வர்ஷன்].” அதை அறிவித்த அந்தக் கட்டுரை எச்சரித்தது: “1915-ன்போது ஆட்டுக்குட்டியைப் பின்பற்றும் உண்மையான ஆட்களுக்கு ஏதாவது விசேஷ சோதனை, துன்புறுத்தல் அல்லது மானபங்க பாத்திரம் இருந்தாலுமிருக்கும், யாருக்குத் தெரியும்!” இந்த 3 1/2 காலங்களடங்கிய பகுதியில் தானியேல் 7:25 முன்னுரைத்த பிரகாரம், ‘ஒடுக்குதல் எழும்பி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்கு விரோதமாக தொடர்ந்தது.’ தேசங்கள் முதல் உலகப் போரில் ஈடுபட்டிருந்தது, நியாயமற்ற ஒடுக்குதலில் ஈடுபடுவதை சுலபமாக்கியது. முடிவானது: தானியேல் 7:25, 12:7, வெளிப்படுத்துதல் 11:3 ஆகிய இந்த மூன்று இணையான தீர்க்கதரிசனங்கள் யாவுமே டிசம்பர் 1914 முதல் ஜூன் 1918 வரை 3 1/2 ஆண்டுகளில் அல்லது 42 மாதங்களில் நிறைவேற்றமடைந்தது.
வெளிப்படுத்துதல் 11:3-ன் நிறைவேற்றத் தேதியில் லேசான கருத்துநுட்ப மாற்றத்தை இது விவரித்துக் காட்டுகிறது. வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தை நாம் எதிர்காலத்தில் படித்து உபயோகிக்கையில் இந்த மாற்றத்தை மனதில் வைத்துக்கொள்வோமாக.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்தது.