உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 2/1 பக். 4-7
  • தீங்கின் பிரதிநிதிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தீங்கின் பிரதிநிதிகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • முதல் கலகம்
  • மற்ற தூதர்கள் கலகம்செய்கின்றனர்
  • மனிதகுலத்தின் எதிரிகள்
  • இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவர்கள் பொறுத்துக்கொள்ளப்படுவர்?
  • ஆவி மண்டலத்தில் ஆட்சியாளர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • ஆவி உலகில் நமது மிகச்சிறந்த நண்பர் இருக்கிறார்
    விழித்தெழு!—1996
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • நித்திய வாழ்க்கைக்கு ஓர் எதிரி
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 2/1 பக். 4-7

தீங்கின் பிரதிநிதிகள்

மனித விவகாரங்களில் பேய்களின் பங்கைப் பற்றிய பைபிளின் விளக்கம், மற்றவகையில் விளக்கப்படமுடியாத தீங்கு சம்பந்தமான அடிப்படை கேள்விகளுக்கு விடையளிக்கிறது. உதாரணமாக, பால்கன்ஸில் நடந்துவரும் போர் தொடர்பாக இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன்-லிருந்து வந்த இந்த அறிவிப்பைக் கவனியுங்கள்: “அச்சுறுத்தவும், சோர்வூட்டவும், அவர்களுடைய வீடுகளைவிட்டு வெளியேறும்படி செய்யவும் வடிவமைக்கப்பட்ட கொடூரமான திட்டத்தின் ஒரு பாகமாக . . . கிட்டத்தட்ட 20,000 முஸ்லீம் ஸ்திரீகளையும் பெண்களையும் [படைவீரர்கள்] கற்பழித்தனர் என்று ஐரோப்பிய சமுதாயத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தீர்மானித்தது.”

டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை விளக்கந்தர கடுமுயற்சியில் ஈடுபட்டது: “சில சமயங்களில் போரில் ஈடுபடும் இளம் பையன்கள் தங்கள் மூத்தவர்களையும் தங்கள் அதிகாரிகளையும் சந்தோஷப்படுத்துவதற்காகக் கற்பழிப்பை ஒருவேளை செய்து, அப்பா-மகன் உறவுபோன்ற ஒன்றைச் சம்பாதிக்கலாம். கற்பழிப்பு செய்வது, படைத்தொகுதியின் மூர்க்கத்தனத்திற்கு உட்பட்டிருப்பதற்கு ஒரு சான்று. கொடூரமான காரியங்களைச் செய்ய விரும்பும் ஓர் இளைஞன், தொகுதியின் விட்டுக்கொடுக்காத குறிக்கோள்களுடன் ஒன்றிப்போகும்படி தன் தனிப்பட்ட மனசாட்சியைக் கீழ்ப்படித்தியிருக்கிறான். ஒரு மனிதன் அட்டூழியத்தில் தன் பற்றுமாறா தன்மையை உறுதிப்படுத்துகிறான்.”

ஆனால், “தொகுதியின் விட்டுக்கொடுக்காத குறிக்கோள்கள்” ஏன் அதன் அங்கத்தினர்களின் தனிப்பட்ட மனசாட்சிகளைவிட அதிக இழிவானதாக இருக்கின்றன? தனிப்பட்டவராக, கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் அயலகத்தாரோடு சமாதானத்தில் வாழ விரும்புகின்றனர். எனவே, போர் சமயங்களில் மக்கள் ஏன் கற்பழிக்கின்றனர், கொடுமைப்படுத்துகின்றனர், மேலும் ஒருவரையொருவர் கொலைசெய்கின்றனர்? முக்கிய காரணம் என்னவென்றால், பேய்ச் சக்திகள் செயல்படுகின்றன என்பதே.

பேய்களின் பங்கைப் புரிந்துகொள்வது, “இறையியலாளனின் பிரச்னை” என்று சிலர் சொல்லும் காரியத்திற்கும் ஒரு தீர்வைக் கொடுக்கிறது. பின்வரும் மூன்று வாசகங்களை ஒப்புரவாக்குவதே அந்தப் பிரச்னை: (1) கடவுள் சர்வ வல்லமையுள்ளவர்; (2) கடவுள் அன்புள்ளவர், நல்லவர்; மேலும் (3) பயங்கரமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த வாசகங்களில் ஏதேனும் இரண்டை ஒப்புரவாக்க முடியும், ஆனால் எல்லாம் ஒருபோதும் ஒப்புரவாக்கப்பட முடியாதென்பது சிலருடைய அபிப்பிராயம். கடவுளுடைய வார்த்தைத்தானே பதிலளிக்கிறது. அந்தப் பதில் காணக்கூடாத ஆவி ஆட்களை, தீங்கின் பிரதிநிதிகளை உட்படுத்துகிறது.

முதல் கலகம்

கடவுள்தாமே ஓர் ஆவி ஆளாயிருப்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது. (யோவான் 4:24) அவர் காலப்போக்கில், தேவதூத குமாரர்களாகிய லட்சக்கணக்கான மற்ற ஆவி ஆட்களுக்கும் சிருஷ்டிகரானார். தரிசனத்தில், கடவுளுடைய ஊழியக்காரனாகிய தானியேல் பத்து கோடி தேவதூதர்களைக் கண்டார். யெகோவா படைத்த ஆவி ஆட்கள் அனைவரும் நீதியுள்ளவர்களாயும் அவருடைய சித்தத்திற்கு இசைந்தவர்களாயும் இருந்தனர்.—தானியேல் 7:10; எபிரெயர் 1:7.

பின்பு, கடவுள் “பூமியை அஸ்திவாரப்படுத்தியபோது,” கடவுளின் இந்தத் தேவதூத குமாரர்கள் “சந்தோஷத்துடன் ஒன்றுகூடிப் பாடி,” “மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.” (யோபு 38:4-7, NW) ஆனால், அவர்களில் ஒருவன், சிருஷ்டிகருக்கே சரியாகக் கொடுக்கப்படவேண்டிய வணக்கத்தைத் தான் பற்றிக்கொள்வதற்கு ஓர் ஆசையை வளர்த்தான். கடவுளுக்கு எதிராக கலகம் செய்வதன்மூலம், இந்தத் தூதன் தன்னை ஒரு சாத்தானாகவும் (அர்த்தம் “எதிர்ப்பவன்”) ஒரு பிசாசாகவும் (அர்த்தம் “பழிதூற்றுபவன்”) ஆக்கிக்கொண்டான்.—எசேக்கியேல் 28:13-15-ஐ ஒப்பிடுங்கள்.

முதல் பெண்ணாகிய ஏவாளிடம் பேசுவதற்கு ஏதேனில் இருந்த ஒரு பாம்பைப் பயன்படுத்துவதன்மூலம், தோட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் என்ற கடவுளுடைய நேரடியான கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போகும்படி சாத்தான் அவளைத் தூண்டினான். பின்னர், அவளுடைய கணவன் அவள்பக்கம் சேர்ந்துகொண்டான். இப்படியாக, முதல் மனித தம்பதியினர் யெகோவாவுக்கு எதிராக கலகம்செய்வதில் அந்தத் தூதனுடன் சேர்ந்துகொண்டனர்.—ஆதியாகமம் 2:17; 3:1-6.

ஏதேனில் நடந்த நிகழ்ச்சிகள் கீழ்ப்படிதலுக்கு ஒரு தெளிவான பாடமாக ஒருவேளை தோன்றினாலும், அங்குச் சாத்தானால் இரண்டு முக்கியமான ஒழுக்கநெறி விவாதங்கள் எழுப்பப்பட்டன. முதலாவதாக, யெகோவாவுடைய சிருஷ்டிகளின்மீதான அவருடைய ஆட்சி, நீதியாகவும் அவர்களின் சிறந்த நன்மைகளுக்காகவும் செலுத்தப்படுகிறதா என்று சாத்தான் வாதாடினான். ஒருவேளை மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் வேலையைச் சிறப்பாகச் செய்யலாம். இரண்டாவதாக, கீழ்ப்படிதல் எந்தவித பொருள்சம்பந்தமான பலன்களையும் கொண்டுவரப் போவதில்லையென்று தோன்றும்போது, எந்தப் புத்தியுள்ள சிருஷ்டிகளும் கடவுளிடம் உண்மையோடும் பற்றுறுதியோடும் இருப்பார்களோ என்று சாத்தான் கேள்விகேட்டான்.a

ஏதேனில் எழுப்பப்பட்ட விவாதங்களின் ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதல், யெகோவாவின் குணங்களைப் பற்றிய அறிவோடு சேர்ந்து, “இறையியலாளனின் பிரச்னைக்”கான தீர்வை, அதாவது தீங்கு இருக்கிறது என்பதை, கடவுளின் குணங்களாகிய வல்லமை மற்றும் அன்போடு ஒப்புரவாக்குவதை நாம் புரிந்துகொள்ள உதவும். யெகோவா வரம்பற்ற வல்லமையை உடையவராகவும் அன்பே உருவாகவும் இருக்கிறார் என்பது உண்மையாக இருக்கிறபோதிலும், அவர் ஞானமுள்ளவராயும் நீதியுள்ளவராயும்கூட இருக்கிறார். அவர் இந்த நான்கு குணங்களையும் பரிபூரண சமநிலையில் செயல்படுத்துகிறார். இதனால், அவர் அந்த மூன்று கலகக்காரர்களை உடனே அழிப்பதற்குத் தம்முடைய எதிர்க்கப்படமுடியாத வல்லமையைப் பயன்படுத்தவில்லை. அது நீதியாய் இருந்திருக்கக்கூடும், ஆனால் ஞானமாயோ அன்பாயோ கட்டாயமாக இருந்திருக்காது. மேலும், அவர் வெறுமனே மன்னித்து மறக்கவில்லை. அன்பான தெரிவு என்று சிலர் உணரக்கூடிய நடவடிக்கையாக அது இருந்திருக்கலாம். அதைச் செய்திருப்பது, ஞானமாயும் இருந்திருக்காது, நீதியாயும் இருந்திருக்காது.

சாத்தான் எழுப்பின விவாதங்களைத் தீர்க்க காலம் தேவைப்பட்டது. கடவுள் ஆதரவின்றி மனிதர்கள் தங்களைத் தாங்களே நேர்த்தியாக ஆள முடியுமா என்பதை நிரூபிக்க காலம் எடுக்கும். அந்த மூன்று கலகக்காரர்களைத் தொடர்ந்து உயிர்வாழ அனுமதித்ததன்மூலம், சாத்தானின் சவாலைப் பொய் என்று நிரூபிப்பதில் சிருஷ்டிகளும்கூட பங்குகொள்ள முடியும்படி யெகோவா செய்தார். கஷ்டமான சூழ்நிலைகளின்கீழ் கடவுளை உண்மையோடு சேவிப்பதன்மூலம் அவர்கள் அவ்வாறு செய்தனர்.b

யெகோவா ஆதாம் ஏவாளிடம், விலக்கப்பட்ட கனியை அவர்கள் சாப்பிட்டார்களென்றால், சாவார்கள் என்று தெளிவாய் சொல்லியிருந்தார். சாத்தான் ஏவாளிடம் அவ்வாறு ஆகாது என்று உறுதியாகச் சொல்லியிருந்தபோதிலும், அவர்கள் செத்தார்கள். சாத்தானும் மரண தண்டனையின்கீழ் இருக்கிறான்; இடைப்பட்ட சமயத்தில் அவன் மனிதகுலத்தைத் தொடர்ந்து மோசம்போக்குகிறான். உண்மையில், பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’—1 யோவான் 5:19; ஆதியாகமம் 2:16, 17; 3:4; 5:5.

மற்ற தூதர்கள் கலகம்செய்கின்றனர்

ஏதேனில் நடந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் சீக்கிரத்திலேயே, மற்ற தூதர்கள் யெகோவாவின் பேரரசாட்சிக்கு எதிரான அந்தக் கலகத்தனத்தோடு சேர்ந்துகொண்டனர். பைபிள் சொல்கிறது: “மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” அதாவது, இந்தத் தூதர்கள் ‘[பரலோகத்திலிருந்த] தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு’ மனித உருவெடுத்து, பூமிக்கு வந்து, பெண்களோடு புலன் இன்பங்களை அனுபவித்தனர்.—ஆதியாகமம் 6:1, 2; யூதா 6.

ஆதியாகமம் 6:4-ல் பதிவு இவ்வாறு தொடர்கிறது: “அந்நாட்களிலே இராட்சதர் [நெஃபிலிம், NW] பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.” தூதர்களை அப்பாக்களாகக் கொண்டு பெண்களுக்குப் பிறந்த இந்தக் கலப்பின மகன்கள் மிதமிஞ்சிய அளவில் பலமிக்கவர்களாக, ‘பலவான்களாக’ இருந்தனர். அவர்கள் மூர்க்கமான ஆட்களாக இருந்தனர், அல்லது “மற்றவர்களைக் கீழே வீழ்த்துபவர்கள்,” என்று அர்த்தந்தரும் எபிரெய வார்த்தையாகிய நெஃபிலிம் ஆக இருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் பின்னர், பூர்வீக நாகரிகங்களின் புராணக் கதைகளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, 4,000 ஆண்டுப் பழைய பாபிலோனிய காப்பியம் ஒன்று கில்கமெஷின் மீமானிட வீரச்செயல்களைப் பற்றி விளக்குகிறது. இவன் பலமிக்க, கொடூரமான அரைத் தெய்வம்; “இவனுடைய கழிகாமம் எந்தக் கன்னியையும் அவளுடைய காதலனுக்கு [விட்டுவைக்கவில்லை].” மற்றொரு எடுத்துக்காட்டு, கிரேக்க புராணக் கதையிலிருந்து வந்த மீமானிடன் ஹெர்குலெஸ் (அல்லது ஹெராக்கிலஸ்). அல்க்மீனீ என்ற ஒரு மனுஷிக்குப் பிறந்து, ஸூயஸ் தெய்வத்தினை அப்பாவாகக் கொண்டிருந்த ஹெர்குலெஸ் மதிமயங்கிப்போய் தன் மனைவியையும் குழந்தைகளையும் கொலைசெய்துவிட்டு, தொடர்ச்சியான மூர்க்கமிக்க வீரச்செயல்களைச் சாதித்திருக்கிறான். அந்தக் கதைகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றொன்றிற்கு சொல்லப்படும்போது பேரளவில் திரித்துக் கூறப்பட்டாலும், நெஃபிலிம் மற்றும் அவர்களின் கலகத்தனமான தூதத் தகப்பன்மார்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதோ அதோடு அவை பொருந்துகின்றன.

பொல்லாத தூதர்கள் மற்றும் அவர்களின் மீமானிட குமாரர்களின் செல்வாக்கின் காரணமாக, பூமி அவ்வளவு வன்முறையினால் நிறைந்திருந்ததால், யெகோவா உலகத்தை ஜலப்பிரளயத்தின்மூலம் அழிக்கத் தீர்மானித்தார். எல்லா தேவபக்தியற்ற மனிதர்களோடும் நெஃபிலிம் அழிந்துபோனார்கள்; தப்பிப்பிழைத்த மனிதர்கள் நீதியான நோவாவும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே.—ஆதியாகமம் 6:11; 7:23.

எனினும், பொல்லாத தூதர்கள் சாகவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களுடைய மானிட உடலிலிருந்து மாறி, ஆவி பிரதேசத்திற்கு திரும்பிச் சென்றனர். அவர்களின் கீழ்ப்படியாமையினிமித்தம், அவர்கள் நீதியான தூதர்களுள்ள கடவுளுடைய குடும்பத்தினுள் மீண்டும் அனுமதிக்கப்படவில்லை; நோவாவின் நாளில் அவர்கள் செய்ததுபோல மனித உடல்களைத் தரித்துக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இருப்பினும், ‘பேய்களின் அதிபதியாகிய’ பிசாசாகிய சாத்தானின் அதிகாரத்தினால் அவர்கள் மனிதகுலத்தின் விவகாரங்களில் சீரழிக்கும் பாதிப்பைத் தொடர்ந்து செய்துவந்தனர்.—மத்தேயு 9:34, NW; 2 பேதுரு 2:4; யூதா 6.

மனிதகுலத்தின் எதிரிகள்

சாத்தானும் பேய்களும் எப்போதும் கொடுங்கொலைசெய்வோராயும் கொடுமையானோராயும் இருந்துவருகின்றனர். பலவழிகளில் யோபுவின் வீட்டுவிலங்குகளை ஒழித்துவிட்டு, அவருடைய ஊழியக்காரர்களில் பெரும்பாலோரையும் சாத்தான் கொன்றுபோட்டான். அடுத்ததாக, அவன் யோபுவின் பத்துப் பிள்ளைகள் இருந்த வீட்டை ‘பெருங்காற்றினாலே’ தகர்த்தழிப்பதன்மூலம் அவர்களைக் கொன்றுபோட்டான். அதற்குப் பின்பு, சாத்தான் “யோபின் உள்ளங்கால் தொடங்கி அவ[ர்] உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால்” அவரை வாதித்தான்.—யோபு 1:7-19; 2:3, 7.

பேய்கள் இப்படிப்பட்ட தீய மனச்சாய்வைக் காண்பிக்கிறார்கள். இயேசுவின் நாளில், அவர்கள் மக்களை ஊமையும் குருடரும் ஆக்கினார்கள். ஒரு மனிதன் கற்களினால் தன்னையே காயப்படுத்திக்கொள்ளும்படி அவர்கள் செய்தனர். ஒரு பையனைக் கீழே தள்ளி ‘தீவிரமாய் அலைக்கழித்தனர்.’—லூக்கா 9:42, NW; மத்தேயு 9:32, 33; 12:22; மாற்கு 5:5.

உலகமெங்குமிருந்து வரும் அறிக்கைகள், சாத்தானும் அந்தப் பேய்களும் எப்பொழுதும்போல் அதே அளவில் வன்மங்கொள்கின்றனர் என்று காண்பிக்கின்றன. சில மக்களை நோய்களினால் அவர்கள் தாக்குகின்றனர். மற்றவர்களை, தூக்கத்தைத் திருடுவதன்மூலம் அல்லது பயங்கரமான கனவுகளைத் தருவதன்மூலம் அல்லது அவர்களைப் பால்சம்பந்தமாகத் துர்ப்பிரயோகம் செய்வதன்மூலம் தொல்லைகொடுக்கின்றனர். இன்னும் மற்றவர்களைப் பைத்தியம்பிடிக்கச் செய்வது, கொலைசெய்வது, அல்லது தற்கொலைசெய்வது போன்ற செயல்களுக்குள்ளாகும்படி தூண்டுகின்றனர்.

இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவர்கள் பொறுத்துக்கொள்ளப்படுவர்?

சாத்தானும் அவனுடைய பேய்களும் என்றுமாகப் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். நல்ல காரணத்திற்காகவே, யெகோவா அவர்களை நம்முடைய நாள்வரை இருப்பதற்கு அனுமதித்திருக்கிறார். ஆனால் இப்போது அவர்களுடைய காலம் குறுகியதாக இருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், அவர்களின் செயலெல்லை கட்டுப்படுத்தப்படுவதற்கு ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளிப்படுத்துதல் புத்தகம் விளக்குகிறது: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் [உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து] அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே [சாத்தான்] யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:7-9.

விளைவு என்ன? அந்தப் பதிவு தொடர்கிறது: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்.” நேர்மையான தூதர்கள் சந்தோஷப்பட முடியும், ஏனென்றால் சாத்தானும் அவனுடைய பேய்களும் இனிமேலும் பரலோகத்தில் இல்லை. ஆனால் பூமியிலுள்ள மக்களைப் பற்றி என்ன? பைபிள் சொல்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.”—வெளிப்படுத்துதல் 12:12.

சாத்தானும் அவனுடைய கொத்தடிமைகளும் அவர்களின் கோபத்தின் காரணமாக, சீக்கிரத்தில் வரும் அவர்களின் அழிவுக்கு முன்பாக எவ்வளவு மோசம்செய்ய முடியுமோ அவ்வளவிற்கு செய்துமுடிப்பதற்கு எண்ணங்கொண்டிருக்கின்றனர். இந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களும், இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் 150-க்கு மேலான சிறு போர்களும் நடந்திருக்கின்றன. நம் சொற்கோவையில் இந்தச் சந்ததியின் வன்முறையைப் பிரதிபலிக்கும் சொற்றொடர்கள் வந்திருக்கின்றன: “நுண்கிருமி யுத்தம்,” “பெரும் படுகொலை,” “கொலைக்களங்கள்,” “கற்பழிப்பு முகாம்கள்,” “தொடர்கொலையாளிகள்,” “அணுகுண்டு.” போதை மருந்துகள், கொலை, குண்டுவெடிப்பு, தன்னின மாம்சம் உண்ணும் மனநோய்ப் பழக்கம், படுகொலைகள், பஞ்சம், சித்திரவதை போன்ற சம்பவங்களின் பதிவால் செய்தி நிறைந்திருக்கிறது.

நல்ல செய்தி என்னவென்றால், இவை தற்காலிகமானவை என்பதாகும். சமீப எதிர்காலத்தில், கடவுள் மறுபடியும் சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார். கடவுளிடமிருந்து வந்த தரிசனத்தை வர்ணிப்பவராக அப்போஸ்தலன் யோவான் சொன்னார்: “ஒரு தூதன் பாதாளத்தின் [அபிஸ்ஸின், NW] திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே [அபிஸ்ஸிலே, NW] தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.”—வெளிப்படுத்துதல் 20:1, 2.

அதற்குப் பின்பு, பிசாசும் அவனுடைய பேய்களும் “கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்,” பிறகு அவர்களனைவரும் நிரந்தரமாக அழிக்கப்படுவர். (வெளிப்படுத்துதல் 20:3, 10) அது எவ்வளவு அற்புதமான சமயமாக இருக்கும்! சாத்தானும் அவனுடைய பேய்களும் நிரந்தரமாக அழிக்கப்பட்டிருக்கையில், யெகோவா ‘சகலத்திலும் சகலமுமாயிருப்பார்.’ மேலும் ஒவ்வொருவரும் உண்மையான அர்த்தத்தில் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—1 கொரிந்தியர் 15:28; சங்கீதம் 37:11.

[அடிக்குறிப்புகள்]

a பின்னர் சாத்தான், கடவுளின் ஊழியக்காரனாகிய யோபுவிடம் பின்வருமாறு சொன்னபோது, இது தெளிவாக்கப்பட்டது: “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்.”—யோபு 2:4, 5.

b கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதிக்கிறார் என்பதைப் பற்றிய விரிவான விளக்கத்திற்கு தி உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைப் பாருங்கள்.

[பக்கம் 7-ன் படம்]

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பு மனிதன் மட்டும்தானா, அல்லது ஒரு கொடூரமான, கண்களுக்குத் தெரியாத சக்தி குற்றத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமா?

[படத்திற்கான நன்றி]

குவைத்தில் எண்ணெய்க் கிணறுகள் எரிகின்றன, 1991:

[பக்கம் -ன் படம்]

பேய்கள் இனி ஒருபோதும் மனிதகுலத்தை தொந்தரவுசெய்யாதிருக்கும் காலம் எவ்வளவு ரம்மியமாக இருக்கும்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்