ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
பைபிள் சத்தியம் ஒரு குடும்பத்தை ஒன்றுபடுத்துகிறது
இன்று, உலகின் பல பாகங்களில், குடும்ப ஒற்றுமை என்பது பெரும்பாலும் ஒரு கடந்தகால காரியமாக இருக்கிறது. என்றபோதிலும், குடும்ப ஒற்றுமையின் இரகசியத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது. இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.” (மத்தேயு 7:24) இந்த வார்த்தைகளைப் பொருத்தி பிரயோகிப்பதன்மூலமும் ஒரு நெருங்கியிணைக்கப்பட்ட குடும்பத்தைக் கட்டியமைக்க பைபிளை அஸ்திவாரமாக பயன்படுத்துவதன்மூலமும் யெகோவாவின் சாட்சிகளுக்குள் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒற்றுமையை அடைந்திருக்கின்றன. பின்வரும் அனுபவம் காண்பிப்பதுபோல மற்றவர்களும் அப்படிப்பட்ட ஒற்றுமையை அடைகின்றனர்.
பிரான்ஸிலுள்ள ஒரு படையில் டானியல் சேவைசெய்துகொண்டிருந்தபோது, ஒரு படை மதகுரு டானியலிடம் ஒரு பைபிளை வாங்கும்படி ஆலோசனை கூறினார்; அவர் அதை வாங்கினார், ஒழுங்காக அதை வாசிக்கவும் ஆரம்பித்தார். கடைசியில் அவர் டஹிடிக்கு மாற்றப்பட்டார். டானியலின் உடன் படைவீரர்களில் சிலர் அட்வென்டிஸ்டுகளாகவும், மற்றவர்கள் மார்மன்களாகவும் இருந்தனர். அவர்களுடைய உரையாடல்கள் அடிக்கடி மதத்தைப்பற்றிய பொருளின்பேரில் திரும்பின. ஒருநாள் ஒரு படைத்தலைவர், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்த தன்னுடைய மனைவியிடம் டானியலை அறிமுகப்படுத்தினார். அவர்கள் ஒரு முழு மதியத்தையும் டானியலின் பல கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் செலவிட்டு, டஹிடியிலுள்ள உள்ளூர் சபைகளில் ஒன்றுடன் அவருக்குத் தொடர்பை ஏற்படுத்தினார்கள். விரைவில் அவர் ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பைத் தொடங்கினார்.
பிரான்ஸிலிருந்த டானியலின் பெற்றோர் மிகப் பற்றுள்ள கத்தோலிக்கர்களாய் இருந்தனர். அவருடைய தந்தை ஒரு கத்தோலிக்க பள்ளியில் பள்ளி ஆலோசகராகவும், மத போதனைக்குப் பொறுப்பாளராகவும் இருந்தார். தான் கற்றுக்கொண்டிருந்த ஆவிக்குரிய மணிக்கற்களில் சிலவற்றை தன் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள விரும்பியவராய், டானியல் ஒருசில பைபிள் கருத்துக்களை தான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களில் மெதுவாக உட்படுத்த ஆரம்பித்தார்.
முதலில் டானியலின் தாயார் சந்தோஷப்பட்டார்கள்; ஆனால் தன்னுடைய மகனின் கடிதங்கள் ஒன்றில் யெகோவா என்ற பெயரைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒருசில நாட்கள் கழித்து, யெகோவாவின் சாட்சிகளை ஓர் “அபாயகரமான மதப்பிரிவு” என்று சொன்ன ஒரு வானொலி நிகழ்ச்சியை அவர்கள் கேட்டார்கள். சாட்சிகளோடு கொண்டுள்ள எல்லா தொடர்புகளையும் உடனடியாக விட்டுவிடவேண்டும் என்று கூறி டானியலுக்கு எழுதினார்கள். இருந்தபோதிலும், டானியல் பைபிளைப் படிப்பதில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தார்; சீக்கிரத்தில் படையைவிட்டு வெளியேறி பிரான்ஸுக்கு திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
வீட்டிற்குச் சென்றதும், டானியல் ஒவ்வொரு மாலைவேளையையும்—சில சமயங்களில் பிந்திய இரவு வரையாக—தன் தாயாரோடு பைபிளைப்பற்றிய நீண்ட கலந்தாலோசிப்புகளில் செலவிட்டார். கடைசியாக அவர்கள் டானியலுடன் ராஜ்ய மன்றத்திற்குச் செல்வதற்கு ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் முதல் கூட்டத்திற்குச் சென்றபோது, அந்த அளவிற்குக் கவரப்பட்டதால், தானும் சொந்தமாக ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பைக் கொண்டிருக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் விரைவாக முன்னேற்றமடைந்து சீக்கிரத்தில் முழுக்காட்டப்பட்டார்கள்.
டானியலின் தந்தை சகித்துக்கொள்ளும் இயல்புடைய ஒரு மனிதர்; ஆனால் தன் தொழில் மற்றும் மதச்சார்பான நடவடிக்கைகளில் மிகவும் ஈடுபாடுடையவராய் இருந்தார். இருப்பினும், ஒரு மாவட்ட மாநாட்டிற்கு தன் மனைவியையும் டானியலையும் அவர் கூட்டிக்கொண்டுச் சென்றார். அது ஜூலை 14-ம் தேதியாக இருந்தது; அன்று பாஸ்டில் தினத்தின் அணிவகுப்புக் காட்சியை நகரில் காணலாம் என்ற எண்ணத்துடன் அவர் இருந்தார். காத்துக்கொண்டிருந்தபோது, என்னதான் நடக்கிறதென பார்க்கும் ஆர்வத்துடன், மாநாட்டு மன்றத்திற்குள் எட்டிப்பார்ப்பதற்குத் தீர்மானித்தார். யெகோவாவின் மக்களிடையே பார்த்த ஒழுங்கும் சமாதானமும் அவரைக் கவர்ந்தன; மேலும் அவர் மாநாட்டின் பல்வேறு துறைகளின் வழியாக நடந்துசென்றபோது, எல்லாரும் அவரை “சகோதரர்” என்று அழைத்தனர். பாஸ்டில் தின அணிவகுப்புக் காட்சியைப் பற்றி அவர் முற்றிலுமாக மறந்துவிட்டார்; மாநாட்டின் முடிவு வரையாக அங்கிருந்தார். அவர் ஒரு பைபிள் படிப்பிற்காகக் கேட்டு, சத்தியத்தைப் படிப்பதில் விரைவான முன்னேற்றத்தைச் செய்தார். இருந்தாலும், அவர் எவ்வளவு அதிகம் படித்தாரோ, அவ்வளவாக தன்னுடைய அப்போதைய வேலையைக் குறித்துச் சங்கடமாக உணர்ந்தார்; ஆகையால் 58 வயதில் தன்னுடைய வேலையை விட்டுவிட்டார். இப்போது, அந்தக் குடும்பத்திலுள்ள மூன்று பேரும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, முழுக்காட்டப்பட்டு, ஒன்றுசேர்ந்து யெகோவாவை ஒற்றுமையுடன் சேவிக்கின்றனர்.
டானியலின் குடும்பத்தை ஒன்றுபடுத்தியது பைபிள் சத்தியமே. மற்ற குடும்பங்களும் அதை முழு இருதயத்துடன் படித்து பொருத்திப் பிரயோகித்தால், அவர்களையும் அது ஒன்றுபடுத்த முடியும்.