உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 5/15 பக். 21-23
  • உங்களால் பொறுமையாயிருக்க முடியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களால் பொறுமையாயிருக்க முடியுமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்முடைய பொறுமையற்ற நவீன உலகம்
  • உங்களுடைய பொறுமையை யெகோவா பலப்படுத்த முடியும்
  • தன்னைப்பற்றியும் மற்றவர்களைப்பற்றியும் சரியான நோக்குநிலை
  • பொறுமை நிறைவான பலன்களைத் தரும்
  • எப்போதும் பொறுமையாக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் பொறுமையைக் கற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • யெகோவாவைப் போல் பொறுமை காண்பியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பொறுமை—நம்பிக்கையோடு சகித்திருப்பது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 5/15 பக். 21-23

உங்களால் பொறுமையாயிருக்க முடியுமா?

யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் தேசத்தை . . . விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்,” என்றார். (ஆதியாகமம் 12:1, 2) அப்போது ஆபிராம் 75 வயதுள்ளவராயிருந்தார். அவர் கீழ்ப்படிதலைக் காட்டி, ஞானமாக தன் மீதிவாழ்நாளெல்லாம் பொறுமையைக் கடைப்பிடித்து, யெகோவாவுக்காகக் காத்திருந்தார்.

கடைசியில், கடவுள் பொறுமையாயிருந்த ஆபிரகாமை (ஆபிராம்) நோக்கி: “நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்” என்ற வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். ‘அந்தப்படியே, அவர் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றார்’ என்று அப்போஸ்தலன் பவுல் கூடுதலாகச் சொன்னார்.—எபிரெயர் 6:13-15.

பொறுமை என்பது என்ன? “ஒரு காரியத்திற்காக அமைதியாகக் காத்துக்கொண்டிருக்கும்” திறன் அல்லது “ஆத்திரமூட்டப்படும்போதோ அழுத்தத்திலிருக்கும்போதோ தாங்கும் சக்தியை” வெளிக்காட்டுவதாகும் என்று அகராதிகள் அதற்கு விளக்கம் தருகின்றன. ஆக, ஒருவருக்காகவோ ஒரு காரியத்திற்காகவோ நீங்கள் காத்துக்கொண்டிருக்கையில், அல்லது ஆத்திரமூட்டப்படும்போதோ அழுத்தத்திலிருக்கும்போதோ உங்களுடைய பொறுமை சோதிக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலைமைகளில் பொறுமைசாலி நிதானத்தை இழக்காமல் இருப்பார்; பொறுமையில்லாதவரோ பரபரப்படைந்து எரிச்சலடைவார்.

நம்முடைய பொறுமையற்ற நவீன உலகம்

விசேஷமாகப் பல்வேறு நகர்ப்புறங்களில், பொறுமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வேகத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நெரிசலான நகரங்களில் வாழும் லட்சக்கணக்கான ஆட்களுக்கு, ஒவ்வொரு நாளும் காலை கடிகாரமணி அடிப்பதோடு துவங்குகிறது. அவ்வளவுதான், பரபரக்கத் துவங்குகிறார்கள். வெளியே போகவேண்டும், ஒருவரைப் பார்க்கப் போகவேண்டும், இதைச் செய்துமுடிக்கவேண்டும் என்று ஓடத் துவங்குகிறார்கள். இப்படியிருக்க, அநேகர் ஒன்றும் புரியாத நிலையிலிருப்பதும் பொறுமையற்றிருப்பதும் ஆச்சரியப்படவேண்டிய காரியமா?

மற்றவர்களுடைய குறைகளைக் காண்கையில் நீங்கள் நொந்துவிடுகிறீர்களா? “சொன்னபடி டாணென்று வரவில்லையென்றால் எனக்குப் பிடிக்காது” என்று ஆல்பர்ட் சொல்கிறார். ஓர் ஆள் சொன்ன நேரத்திற்குள் வரவில்லையென்றால், அவருக்காகக் காத்திருப்பது அழுத்தம் தருவதாக இருக்கும் என்பதை நம்மில் முக்கால்வாசிபேர் ஒத்துக்கொள்வோம். விசேஷமாகக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லவேண்டியதாக இருந்தால், அழுத்தத்திற்குள்ளாவோம். 18-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசியல்வாதியாக இருந்த நியூகாஸில் சீமானைக் (Duke of Newcastle) குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது: ‘காலையில் அவர் அரை மணிநேரத்தை இழந்துவிடுகிறார். அந்த நேரத்தைச் சமாளிக்க முடியாமலேயே, அந்நாளின் மீதிவேளையெல்லாம் அவர் ஓடிக்கொண்டிருக்கிறார்.’ ஒவ்வொரு நாளும் அப்பேர்ப்பட்ட நபரை நீங்கள் சார்ந்திருக்கவேண்டியதாயிருந்தால், நீங்கள் பொறுமையோடிருப்பீர்களா?

வாகனத்தை ஓட்டுகையில், நீங்கள் சீக்கிரத்தில் கோபாவேசப்பட்டு, காத்திருக்க பிடிக்காமல், அல்லது மிகவும் வேகமாக ஓட்டிச்செல்ல தூண்டுவிக்கப்படுகிறீர்களா? அத்தகைய சூழ்நிலைமைகளில், பொறுமையற்றிருப்பது அடிக்கடி நாசத்தையே குறிக்கும். 1989-ல், முன்பு மேற்கு ஜெர்மனியாக இருந்த நாட்டில், 4,00,000-ற்கும் மேலான நெடுஞ்சாலை விபத்துக்கள் காயமடைவதிலோ சாவதிலோ முடிவடைந்தது. இந்த விபத்துக்களில், 3-ல் ஒரு விபத்து, மிகவும் வேகமாக ஓட்டியதாலும், அல்லது முன்செல்லும் வாகனத்திற்கு மிகவும் அருகாமையில் ஓட்டியதாலும் ஏற்பட்டது. ஆகையால், ஓரளவாவது, 1,37,000-க்கும் மேலான ஆட்கள் காயமடைவதற்கோ சாவதற்கோ பொறுமையற்றிருந்ததே காரணமாயிருந்தது. பொறுமையின்மைக்கு, என்னே ஓர் கிரயம்!

“ஓயாது ஒருவர் குறுக்கிட்டாலோ ஜம்பமாக பேசினாலோ என்னால் பொறுத்திருப்பது கஷ்டம்,” என்று ஆன் குறைகூறுகிறாள். “பெரியவர்களுக்கு மட்டுமரியாதையே இல்லாத வாலிபரால்” என்னுடைய பொறுமை சவால்விடப்படுகிறது என்று கார்ல்-ஹெர்மான் ஒத்துக்கொள்கிறார்.

இத்தகைய சூழ்நிலைமைகளும் வேறுபல சூழ்நிலைமைகளும் உங்களைப் பொறுமையிழக்க செய்யலாம். அப்படியென்றால், நீங்கள் எவ்வாறு அதிக பொறுமையை வளர்த்துக்கொள்ளலாம்?

உங்களுடைய பொறுமையை யெகோவா பலப்படுத்த முடியும்

பொறுமை மனவுறுதியின்மையையோ பலவீனத்தையோ குறிக்கும் என்று அநேகர் நினைக்கிறார்கள். யெகோவாவுக்கோ அது பலத்தைக் குறித்துக்காட்டுகிறது. அவர்தாமே “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, . . . பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:9) ஆகையால், உங்களுடைய சொந்த தாங்கும் சக்தியைப் பலப்படுத்த, யெகோவாவோடு நெருங்கியிருந்து, இருதயப்பூர்வமாக அவர்பேரில் சார்ந்திருங்கள். பொறுத்திருக்கிற சுபாவத்தை வளர்த்துக்கொள்வதற்கு, கடவுளோடு உங்களுடைய பந்தத்தை பலப்படுத்துவதுதானே தனிப்பட்ட அதிமுக்கியமான படியாயிருக்கிறது.

பூமிக்கும் மனிதவர்க்கத்திற்குமான யெகோவாவின் நோக்கங்களை அறிந்திருப்பதும் அத்தியாவசியமானது. ‘தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு [கடவுளுடைய ராஜ்யத்துக்கு] ஆபிரகாம் காத்திருந்தார்.’ (எபிரெயர் 11:10) அதேவிதமாக, கடவுளுடைய வாக்குத்தத்தங்களைக் குறித்து ஒரு தெளிவான நோக்கைக் கொண்டிருந்து, யெகோவாவுக்காகக் காத்திருப்பதில் மனரம்மியமாயிருப்பது பயனுள்ளது. அப்போதுதான், பொறுமையானது தயக்கத்தைக் குறிக்காமல், உண்மையில் மெய்யான வணக்கத்தினிடம் மக்களைக் கவர்ந்திழுக்கிறது என்பதை அறிந்துகொள்வீர்கள். ஆகவே, ‘நம்முடைய கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்.’—2 பேதுரு 3:15.

உங்களுடைய சொந்த தனிப்பட்ட சூழ்நிலைமைகள் ஏறத்தாழ தாங்கக்கூடாத வகையில் உங்களுடைய பொறுமையை சோதித்ததென்றால், அப்போது என்ன? அவிசுவாசிகள் சலிப்புத்தட்டும் அளவுக்கு அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறார்களா? மாளாது நாள்பட நீடித்திருப்பதாகத் தோன்றும் அளவுக்கு நீங்கள் சுகவீனமாயிருக்கிறீர்களா? அப்படியென்றால், சீஷனாகிய யாக்கோபு எழுதியதை மனதில் ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுமையைக் காட்டுவதில் தீர்க்கதரிசிகள் வைத்த முன்மாதிரியைக் குறிப்பிட்ட பிறகு, கடுமையான அழுத்தத்தின் மத்தியிலும் அமைதியாக நிலைத்திருப்பதன் இரகசியத்தை அவர் எடுத்துக்காட்டுகிறார். “உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்” என்று யாக்கோபு சொன்னார்.—யாக்கோபு 5:10, 13.

உங்களுடைய பொறுமையைப் பலப்படுத்தவும், சோதிக்கப்படும்போது உங்களுடைய கோபாவேசத்தை அடக்கவும் ஜெபத்தில் கடவுளிடம் ஊக்கமாகக் கேளுங்கள். அடிக்கடி யெகோவாவிடம் திரும்புங்கள். அப்போது சூழ்நிலைமைகளையோ உங்களுடைய நிதானத்திற்கு விசேஷமாக அச்சுறுத்தலாயிருக்கும் மற்றவர்களுடைய பழக்கவழக்கங்களையோ கண்டுணர அவர் உங்களுக்கு உதவிசெய்வார். சோதனைக்கு உட்பட வைக்கும் சூழ்நிலைமைகளுக்காக முன்கூட்டியே ஜெபிப்பது அமைதலாக இருக்க உங்களுக்கு உதவும்.

தன்னைப்பற்றியும் மற்றவர்களைப்பற்றியும் சரியான நோக்குநிலை

ஓர் அமைதலான மனக்கட்டை காத்துக்கொள்வதற்கு, நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் சரியான விதத்தில் நோக்கவேண்டும். பைபிளைப் படிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும். ஏனென்றால் சுதந்தரிக்கப்பட்ட குறைபாடுகள் இருப்பதன் காரணமாக அவரவருக்கு பலவீனங்கள் இருக்கின்றன என்பதை அது எடுத்துக்காட்டும். கூடுதலாக, பைபிள் சார்ந்த அறிவு அன்பில் பெருகும்படி உங்களுக்கு உதவும். மற்றவர்களிடம் பொறுமையைக் காட்ட இந்தக் குணாதிசயம் அத்தியாவசியம்.—யோவான் 13:34, 35; ரோமர் 5:12; பிலிப்பியர் 1:9.

அன்பும் மன்னிப்பதற்கான ஆவலும் கோபாவேசப்படும்போது உங்களை சாந்தமடையச் செய்யும். ஒருவருடைய பழக்கங்கள் உங்களை வெடுக்கென்று கோபப்படவைக்கும்போது, அந்த நபரை அல்ல, அந்தப் பழக்கங்களே உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அன்பு ஞாபகப்படுத்தும். உங்களுடைய சொந்த பலவீனங்கள்தாமே எத்தனை தரம் கடவுளுடைய பொறுமையை சோதித்து, மற்றவர்களுக்கு கோபமூட்டக்கூடும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

உங்களைப்பற்றிய சரியான நோக்குநிலையுங்கூட பொறுமையோடு காத்திருக்க உதவும். உதாரணமாக, யெகோவாவின் சேவையில் சிலாக்கியங்களுக்காக நாடும்போது, ஏமாற்றத்தைத்தான் காண்கிறீர்களா? பொறுமைக்கும் எல்லை உண்டு என்று உணருமளவிற்கு பொறுமையிழக்க நேரிடுகிறதா? அப்படியென்றால், மிகவும் பொறுமையற்றிருப்பது பெருமையிலேயே ஊன்றியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். “பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்” என்று சாலொமோன் சொன்னார். (பிரசங்கி 7:8) நிச்சயமாகவே, பொறுமையை வளர்த்துக்கொள்வதற்கு பெருமையே ஒரு பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. மனத்தாழ்மையுள்ள நபர் அமைதலோடு காத்திருப்பதை சுலபமாகக் காண்கிறார் என்பது வாஸ்தவந்தானல்லவா? ஆகவே, மனத்தாழ்மையைக் கடைப்பிடியுங்கள். அப்போது மன அமைதியோடு தாமதிப்பை நீங்கள் அனுசரித்து நடக்கக்கூடும்.—நீதிமொழிகள் 15:33.

பொறுமை நிறைவான பலன்களைத் தரும்

ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்திற்காக விசேஷமாக அறியப்பட்டிருந்தார். (ரோமர் 4:11) எனினும், அவருடைய விசுவாசத்தைப் பொறுமை திடமாயிருக்கச் செய்தது. யெகோவாவுக்காகக் காத்திருந்ததினால் அவருக்குக் கிடைத்த பலன் என்ன?

ஆபிரகாம், யெகோவாவின் மிகுதியான நம்பிக்கைக்குரியவரானார். இதனால் ஆபிரகாமின் பெயர் பிரஸ்தாபமாகி, அவருடைய சந்ததியார் பலத்த தேசத்தாரானார்கள். அவருடைய வித்தின் மூலம் பூமியிலுள்ள சகல தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக் கொள்ளக்கூடும். ஆபிரகாம் கடவுள் சார்பாகப் பேசுபவராகவும் ஒருவிதத்தில் சிருஷ்டிகராகவும் இருந்தார். ஆபிரகாமுடைய விசுவாசத்திற்கும் பொறுமைக்கும் இதைவிட வேறு ஏதாவது மகத்தான பலனும் கிடைத்திருக்கக்கூடுமா?

பொறுமையோடு சோதனைகளை சகிக்கும் கிறிஸ்தவர்களுக்கு ‘கர்த்தர் மிகுந்த உருக்கமுள்ளவராயிருக்கிறார்.’ (யாக்கோபு 5:10, 11) அவருடைய சித்தத்தை செய்வதன் மூலம் அப்பேர்ப்பட்ட ஆட்கள் சுத்தமான மனச்சாட்சியை அனுபவிக்கிறார்கள். அப்படியானால், உங்களுடைய விஷயத்தில் பார்க்கும்போது, நீங்கள் யெகோவாவுக்காகக் காத்திருந்து, பொறுமையோடே சோதனைகளை சகித்திருந்தால், உங்களுடைய தாங்கும்சக்தி யெகோவாவுடைய அங்கீகாரத்திலும் ஆசீர்வாதத்திலும் பலனடையும்.

பொறுமை கடவுளின் மக்களுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நன்கு துணைபுரிகிறது. யெகோவாவின் ஊழியர்களில் இருவராகிய கிறிஸ்டியானும் ஆக்நெஸும் கல்யாண நிச்சயம் செய்துகொள்ள தீர்மானித்தபோது இதைக் கண்டுணர்ந்தார்கள். கிறிஸ்டியானுடைய பெற்றோருக்கு ஆக்நெஸை அறிந்துகொள்ள காலம் தேவைப்பட்டது. அவர்களுக்கு மரியாதை காட்டுபவர்களாக கல்யாண நிச்சயத்தைத் தள்ளிப்போட்டார்கள். அவர்கள் செய்த இந்தக் காரியம் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?

“நாங்கள் பொறுமையாயிருந்தது, என்னுடைய பெற்றோருக்கு எதைக் குறித்தது என்பதை பின்னர்தான் உணர்ந்தோம். பொறுமையாகக் காத்திருந்தது, என்னுடைய மனைவிக்கும் எனக்கும் உள்ள உறவை முறித்துப்போடவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோரோடு உள்ள உறவை வளர்ப்பதற்கு அதுவே முதல் படியாக இருந்தது,” என்று கிறிஸ்டியான் விவரிக்கிறார். நிச்சயமாகவே, பொறுமை நிறைவான பிரதிபலன்களைத் தரும்.

பொறுமை சமாதானத்தையும் கட்டுவிக்கும். குடும்பத்தினரும் நண்பர்களும் இழைக்கும் ஒவ்வொரு தவறையும் நீங்கள் பெரிதுபடுத்தாதிருந்தால், அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். மற்ற ஆட்கள் தப்பிதங்கள் இழைக்கையில், நீங்கள் அமைதலாகவும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையோடும் இருந்தால், தர்மசங்கடமான காரியங்கள் நடைபெறாது. ஒரு சீன பழமொழி சொல்கிறது: “கணநேர கோபத்தின்போது பொறுமையாயிருப்பது நூறுநாள் மனவேதனையிலிருந்து உங்களைக் காக்கும்.”

பொறுமை உங்களுடைய ஆளுமையை மிகைப்படுத்துகிறது; இப்படியாக மற்ற அருங்குணங்கள் நிலைத்திருக்க மெருகூட்டுகிறது. உங்கள் விசுவாசத்தை அது திடமாக்கி, சமாதானத்தை நீடித்திருக்கச் செய்து, அன்பை அசைக்க முடியாததாக்குகிறது. பொறுமையாயிருப்பது தயவு, நற்குணம், சாந்தம் ஆகியவற்றை அப்பியாசிக்க வைப்பதோடு சந்தோஷமாக இருக்கவும் உங்களுக்கு உதவும். நீடிய பொறுமையையும் இச்சையடக்கத்தையும் வளர்ப்பதற்கு அத்தியாவசியமாயிருக்கும் பலத்தை பொறுமை கட்டியெழுப்புகிறது.

அப்படியானால், யெகோவாவின் வாக்குத்தத்தங்கள் நிறைவேற பொறுமையோடு காத்திருங்கள். அப்போது ஓர் அதிசயமான எதிர்காலம் கட்டாயம் உங்களுடையதாயிருக்கும். ஆபிரகாமைப்போல, ‘வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்வீர்களாக.’—எபிரெயர் 6:11.

[பக்கம் 23-ன் படம்]

ஆபிரகாமைப்போல, யெகோவாவோடு ஒரு நெருங்கிய உறவை வைத்திருப்பது பொறுமையைக் காட்டுவதற்கு உங்களுக்கு உதவும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்