யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் பொறுமையைக் கற்றுக்கொள்ளுங்கள்
“நம் எஜமானருடைய பொறுமை நமக்கு மீட்பு என்று எண்ணுங்கள்.”—2 பே. 3:15.
1. உண்மை ஊழியர்கள் சிலர் எதைக் காண ஏங்குகிறார்கள்?
பல வருடங்களாக, பல விதமான கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சகித்துவந்த அருமை சகோதரி ஒருவர், “நான் கண்மூடுவதற்குள் முடிவு வந்துவிடாதா!” என்று ஏக்கத்துடன் கேட்டார். நீண்ட காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்துவரும் சிலர் இவரைப் போலவே கேட்கிறார்கள். கடவுள் நமக்கு இருக்கும் கஷ்டங்களையெல்லாம் நீக்கிவிட்டு எல்லாவற்றையும் புதிதாக்கும் நாளைக் காண நாமும் ஆவலோடு காத்திருக்கிறோம். (வெளி. 21:5) சாத்தானுடைய உலகத்திற்கு அழிவு மிகவும் நெருங்கிவிட்டது என்பதற்கு ஏகப்பட்ட அத்தாட்சிகள் இருக்கின்றன. என்றாலும், அந்த நாள் வரும்வரை பொறுமையாய்க் காத்திருப்பது சில சமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்.
2. பொறுமையைக் குறித்து என்ன கேள்விகளை இப்போது சிந்திக்கப் போகிறோம்?
2 ஆனால், நாம் பொறுமையோடு இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. முற்காலத்தில், கடவுளுடைய ஊழியர்கள் கடவுள்மீது அபார விசுவாசம் வைத்திருந்தார்கள். உரிய காலத்தில் அவர் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனப் பொறுமையாய்க் காத்திருந்தார்கள். அவர்களைப் போலவே நாம் விசுவாசமாகவும் பொறுமையாகவும் இருந்தால் கடவுள் நமக்கு வாக்குறுதி அளித்திருப்பதை நிச்சயம் பெறுவோம். (எபிரெயர் 6:11, 12-ஐ வாசியுங்கள்.) யெகோவாவும்கூட இத்தனை காலமாகப் பொறுமையாக இருந்து வந்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் இந்தப் பொல்லாத உலகிற்கு எப்போதோ முடிவுகட்டியிருக்கலாம், ஆனால் உரிய நேரம் வரும்வரை அவர் காத்திருக்கிறார். (ரோ. 9:20-24) அவர் ஏன் இவ்வளவு பொறுமையாய் இருக்கிறார்? இயேசு எப்படி யெகோவாவைப் போலவே பொறுமையாய் இருந்திருக்கிறார்? இந்த விஷயத்தில் அவர் நமக்கு எப்படி முன்மாதிரியாக இருக்கிறார்? யெகோவாவைப் போலவே நாம் பொறுமையை வளர்த்துக்கொண்டால் என்ன பலன்களைப் பெறுவோம்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொண்டால், யெகோவா தாமதிப்பதாக நமக்குத் தோன்றினாலும்கூட பொறுமையுடனும் அபார விசுவாசத்துடனும் இருப்போம்.
யெகோவா ஏன் பொறுமையாய் இருக்கிறார்?
3, 4. (அ) இந்தப் பூமிக்கான தமது நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா ஏன் பொறுமையாய் இருந்திருக்கிறார்? (ஆ) ஏதேன் தோட்டத்தில் பிரச்சினை எழுந்தபோது யெகோவா என்ன செய்தார்?
3 பொறுமையாய் இருக்க யெகோவாவுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. யுகாயுகங்களாய் இந்த அண்டத்தின் மீது அவருக்கு எல்லா அதிகாரமும் இருந்து வந்திருக்கிறது. என்றாலும், ஏதேன் தோட்டத்தில் வெடித்த பிரச்சினை சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அவை விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரையும் பாதிக்கிற கேள்விகள் என்பதால் யெகோவா அவற்றுக்குப் பதில் அளிக்க வேண்டியுள்ளது. ஆனால், அவற்றுக்குச் சரியான பதில் அளிக்க காலம் தேவை என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். அதனால்தான், இத்தனை காலமாகப் பொறுமையாய் இருந்திருக்கிறார். விண்ணிலும் மண்ணிலும் உள்ள ஒவ்வொருவருடைய செயலையும் சிந்தையையும் யெகோவா நன்றாக அறிந்திருக்கிறார். எனவே, எதைச் செய்தாலும் நிச்சயம் நம்முடைய நன்மைக்காகத்தான் செய்வார்.—எபி. 4:13.
4 ஆதாம் ஏவாளின் சந்ததியார் இந்தப் பூமியெங்கும் குடியிருக்க வேண்டும் என்பதே யெகோவாவின் நோக்கம். ஏவாளை சாத்தான் வஞ்சித்தபோதிலும், அதன்பின் ஆதாம் கீழ்ப்படியாமல் போனபோதிலும், யெகோவா தமது நோக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. நிலைகுலைந்து போகவும் இல்லை, அவசரப்பட்டு முடிவெடுக்கவும் இல்லை, உணர்ச்சிவசப்படவும் இல்லை, அவர்களை ஒரேயடியாகக் கைகழுவிவிடவும் இல்லை. அதற்குப் பதிலாக, மனிதர்களையும் பூமியையும் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்ற மாற்று ஏற்பாட்டைச் செய்தார். (ஏசா. 55:11) தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றவும், தம்முடைய ஆட்சிமுறையே சரியானது என்பதை நிரூபிக்கவும் யெகோவா அதிக சுயக்கட்டுப்பாட்டுடனும் அதிக பொறுமையுடனும் இருந்திருக்கிறார். தம்முடைய நோக்கத்தின் சில அம்சங்கள் கச்சிதமாய் நிறைவேறுவதற்காக ஆயிரக்கணக்கான வருடங்களாகக்கூட அவர் காத்திருக்கிறார்.
5. யெகோவா பொறுமையாய் இருப்பதால் நன்மை என்ன?
5 யெகோவா பொறுமையாய் இருப்பதற்கான இன்னொரு காரணம், இன்னும் நிறையப் பேர் முடிவில்லா வாழ்வைப் பெற வேண்டும் என்பதே. வரவிருக்கும் அழிவிலிருந்து ‘திரள் கூட்டமான மக்களை’ காப்பாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தற்போது அவர் செய்து வருகிறார். (வெளி. 7:9, 14; 14:6) பிரசங்க வேலை மூலமாக, தம்முடைய அரசாங்கத்தைப் பற்றியும் நீதியான நெறிமுறைகளைப் பற்றியும் மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியே மனிதகுலத்திற்கு மிகச் சிறந்த செய்தி, அது உண்மையிலேயே “நற்செய்தி”! (மத். 24:14) யெகோவா தம்மிடம் ஈர்த்துக்கொள்கிற நபர்கள் எல்லாரும் உலகளாவிய சபையின் பாகமாகிறார்கள். ஆம், நல்லதை நேசிக்கிற நண்பர் கூட்டத்தின் பாகமாகிறார்கள். (யோவா. 6:44-47) அவர்கள் அனைவரும் தமது அங்கீகாரத்தைப் பெற யெகோவா உதவி செய்கிறார். அதோடு, தம்முடைய பரலோக அரசாங்கத்தின் உறுப்பினர்களாய் இருப்பதற்கு மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார். தேவபக்திமிக்க இந்த நபர்கள் பரலோகத்தில் பொறுப்பேற்ற பின்பு, பூமியில் நல்மனம் படைத்தவர்கள் பரிபூரணத்தை அடையவும் முடிவில்லா வாழ்வைப் பெறவும் அவர்களுக்குத் துணைபுரிவார்கள். ஆக, பொறுமையாய்க் காத்திருக்கும் சமயத்திலும் யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்ற செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், அதுவும் நம்முடைய நன்மைக்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
6. (அ) நோவாவின் நாட்களில் யெகோவா எந்த விதத்தில் பொறுமையைக் காட்டினார்? (ஆ) நம்முடைய நாட்களில் யெகோவா எப்படிப் பொறுமையைக் காட்டுகிறார்?
6 மக்கள் யெகோவாவுக்கு மிகுந்த கோபமூட்டினாலும் அவர் பொறுமையாகவே இருக்கிறார். உதாரணத்திற்கு, பெருவெள்ளம் வரும் முன்பு பூமி சீர்கெட்டுப் போயிருந்தபோது அவர் என்ன செய்தார் என்று யோசித்துப் பாருங்கள். அந்தச் சமயத்தில், பூமியில் ஒழுக்கக்கேடும் வன்முறையும் கட்டுக்கடங்காமல் போயிருந்தன. மனிதர்களின் கேடுகெட்ட நடத்தையையும், கொடூரமான செயல்களையும் பார்த்து யெகோவா ‘விசனப்பட்டார்,’ வேதனைப்பட்டார். (ஆதி. 6:2-8) அநியாயங்களையும் அக்கிரமங்களையும் அவர் பொறுத்துக்கொண்டே இருக்கவில்லை. பொல்லாத பாவிகளை பெருவெள்ளத்தால் அழிக்க தீர்மானித்தார். யெகோவா “நீடிய பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தபோது” நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் காப்பாற்ற ஏற்பாடு செய்தார். (1 பே. 3:20) உரிய சமயம் வந்தபோது தம்முடைய தீர்மானத்தைப் பற்றி நோவாவுக்குத் தெரிவித்தார், ஒரு பேழையையும் கட்டச் சொன்னார். (ஆதி. 6:14-22) பேழை கட்டும் வேலையைச் செய்த நோவா ‘நீதியைப் பிரசங்கிக்கும்’ வேலையையும் செய்தார். வரவிருந்த அழிவைப் பற்றி மக்களை எச்சரித்தார். (2 பே. 2:5) நம்முடைய நாட்கள் நோவாவின் நாட்களைப் போல் இருக்கும் என்று இயேசு சொன்னார். இந்தப் பொல்லாத உலகை அழிப்பதற்கு யெகோவா நாள் குறித்துவிட்டார். ஆனால், “அந்த நாளும் அந்த நேரமும்” யாருக்குமே தெரியாது. (மத். 24:36) இந்தச் சமயத்தில் மக்களை எச்சரித்து அவர்கள் தப்பிப்பிழைப்பதற்கான வழியைச் சொல்லித் தரவேண்டிய பொறுப்பைக் கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.
7. கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற தாமதிக்கிறாரா? விளக்குங்கள்.
7 யெகோவா பொறுமையாய் இருப்பதைப் பார்த்து, அவர் ஒன்றும் செய்யாமல் காலத்தைக் கடத்துகிறார் என்று நாம் தவறாக நினைத்துவிடக் கூடாது. அதோடு, அவர் எதையும் கண்டுகொள்வதில்லை அல்லது அவருக்கு யார்மீதும் எதன்மீதும் அக்கறையில்லை என்றும் நினைத்துவிடக் கூடாது! என்றாலும், நமக்கு வயதாகும்போது அல்லது கஷ்டங்கள் வரும்போது அப்படி நினைக்கத் தோன்றலாம், சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடலாம், அல்லது கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற தாமதிக்கிறார் என்று நினைத்துவிடலாம். (எபி. 10:36) ஆனால், யெகோவா பொறுமையாய்க் காத்திருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்பதையும்... காத்திருக்கிற இந்தக் காலத்தை உண்மை ஊழியர்களான நம்முடைய நன்மைக்காகப் பயன்படுத்துகிறார் என்பதையும்... ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (2 பே. 2:3; 3:9) சரி, இயேசு எப்படி யெகோவாவைப் போல் பொறுமையாய் இருந்தார் என்பதை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
பொறுமையாய் இருப்பதில் இயேசு எப்படி சிறந்த உதாரணமாய்த் திகழ்கிறார்?
8. எந்தெந்த சந்தர்ப்பங்களில் இயேசு பொறுமையைக் காட்டினார்?
8 யுகாயுகங்களாக இயேசு தமது தகப்பனின் சித்தத்தை ஆவலாய்ச் செய்து வருகிறார். சாத்தான் கலகம் செய்தபோது, யெகோவா தம்முடைய ஒரேபேறான மகனை இந்தப் பூமிக்கு மேசியாவாக அனுப்பி வைக்க தீர்மானித்தார். ஆனால், பூமிக்கு வர இயேசு ஆயிரக்கணக்கான வருடங்கள் பொறுமையாய்க் காத்திருந்திருக்க வேண்டியிருந்தது. (கலாத்தியர் 4:4-ஐ வாசியுங்கள்.) அந்தச் சமயத்திலும், அவருடைய தகப்பன் கொடுத்த வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்துகொண்டிருந்தார். கடைசியில், பூமிக்கு வந்தபோது தம்மை சாத்தான் கொலை செய்வான் என்பதை அறிந்திருந்தார். (ஆதி. 3:15; மத். 16:21) பல விதமான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருந்தபோதிலும் யெகோவாவின் சித்தத்திற்கு அடிபணிந்தார். உண்மைத்தன்மைக்குப் பரிபூரண உதாரணமாய்த் திகழ்ந்தார். தம்மைப் பற்றியோ தமது ஸ்தானத்தைப் பற்றியோ அவர் யோசிக்கவில்லை. எனவே, நாம் அனைவருமே அவரைப் பின்பற்ற வேண்டும்.—எபி. 5:8, 9.
9, 10. (அ) யெகோவா நடவடிக்கை எடுக்க பொறுமையாய் காத்திருக்கும் இவ்வேளையில் இயேசு என்ன செய்துவருகிறார்? (ஆ) நாம் எப்படி இயேசுவின் மனப்பான்மையை வெளிக்காட்டலாம்?
9 உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவுக்குப் பரலோகத்திலும் பூமியிலும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. (மத். 28:18) யெகோவாவின் குறித்த காலத்தில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற இயேசு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். இயேசுவின் எதிரிகளை யெகோவா அவருக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை, அதாவது 1914 வரை, இயேசு அவருடைய வலது பக்கத்தில் பொறுமையாய்க் காத்திருந்தார். (சங். 110:1, 2; எபி. 10:12, 13) சீக்கிரத்தில் சாத்தானின் உலகிற்கு முடிவுகட்ட அவர் களமிறங்குவார். அதுவரை, யெகோவாவின் அங்கீகாரத்தை பெற மக்களுக்குப் பொறுமையாய் உதவி செய்துவருகிறார். “வாழ்வளிக்கும் நீரூற்றுகளிடம்” அவர்களை வழிநடத்துகிறார்.—வெளி. 7:17.
10 இயேசுவின் மனப்பான்மையை நீங்கள் எப்படி வெளிக்காட்டலாம்? தம்முடைய தகப்பன் என்ன சொன்னாலும் அதைச் செய்ய இயேசு ஆர்வமாய் இருந்தார். என்றாலும், குறித்த காலம் வரும்வரை காத்திருக்க அவர் தயாராய் இருந்தார். சாத்தானின் துஷ்ட உலகம் முடிவுக்கு வருவதற்காக நாம் காத்துக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நாம் அனைவருமே கடவுளைப் போல் பொறுமையாக இருக்க வேண்டும். கடவுளுடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்க வேண்டும், சோர்ந்துபோய் பொறுமை இழந்துவிடக் கூடாது. கடவுளைப் போல் பொறுமையாக இருக்க நாம் என்ன செய்யலாம்?
கடவுளைப் போல் நான் பொறுமையாய் இருப்பது எப்படி?
11. (அ) விசுவாசத்திற்கும் பொறுமைக்கும் என்ன சம்பந்தம்? (ஆ) விசுவாசத்தில் உறுதியாய் இருக்க நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
11 அபூரண மனிதர்களும்கூட பொறுமையாய் சகித்திருக்க முடியும் என்பதை இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பே தீர்க்கதரிசிகளும் உண்மையுள்ள ஊழியர்களும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய விசுவாசத்திற்கும் பொறுமைக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. (யாக்கோபு 5:10, 11-ஐ வாசியுங்கள்.) யெகோவா சொன்ன விஷயங்களை அவர்கள் விசுவாசிக்காமல் இருந்திருந்தால், அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காகப் பொறுமையாய்க் காத்திருந்திருப்பார்களா? விசுவாசம் இருந்ததால்தான் அடிக்கடி பயங்கரமான சோதனைகளை எதிர்ப்பட்டபோதிலும், கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுமென்று நம்பிக்கையாய் இருந்தார்கள். (எபி. 11:13, 35-40) இன்று நாம் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க அநேக காரணங்கள் இருக்கின்றன. இப்போது இயேசு நம்முடைய ‘விசுவாசத்தைப் பரிபூரணமாக்குபவராக’ இருக்கிறார். (எபி. 12:2) நிறையத் தீர்க்கதரிசனங்களை அவர் நிறைவேற்றியிருக்கிறார். கடவுளுடைய நோக்கங்களை நன்றாகப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறார்.
12. விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
12 விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள... பொறுமையை வளர்த்துக்கொள்ள... நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, கடவுளுடைய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். மத்தேயு 6:33-ல் உள்ள ஆலோசனையைப் பின்பற்ற உங்களால் கூடுதல் முயற்சி எடுக்க முடியுமா? அப்படியானால், ஊழியத்தில் நீங்கள் அதிக மணிநேரம் செலவிட வேண்டியிருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். இதுவரை நீங்கள் எடுத்திருக்கும் முயற்சிகளை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு புதிய பைபிள் படிப்பை ஆரம்பிக்க அவர் உங்களுக்கு உதவியிருக்கலாம் அல்லது ‘எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானத்தை’ பெற உதவியிருக்கலாம். (பிலிப்பியர் 4:7-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்ததால் கிடைக்கும் பலன்களை எண்ணிப் பார்த்தால் பொறுமையாய் இருப்பது எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.—சங். 34:8.
13. விசுவாசத்தையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்வதை எதற்கு ஒப்பிடலாம்?
13 உதாரணத்திற்கு, விவசாயத்தை எடுத்துக்கொள்ளலாம். விதை விதைப்பது, பயிர் செய்வது, கதிர் அறுப்பது என்று விவசாய உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதிக மகசூலைப் பெறும்போது அடுத்த போகத்திலும் விதைக்கலாம் என்று விவசாயி நம்பிக்கையுடன் இருப்பார். அறுப்புவரை அவர் பொறுமையாய்க் காத்திருக்க வேண்டுமே என்பதற்காக அவர் விதைக்காமல் இருந்துவிட மாட்டார். அடுத்த முறை இன்னும் அதிகமாகவே அவர் விதைப்பார். ஏனென்றால், அமோக விளைச்சல் கிடைக்கும் என்பதில் அவருக்கு நிறைய நம்பிக்கை இருக்கும். அதேபோல், ஒவ்வொரு முறையும் யெகோவாவின் அறிவுரைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றைப் பின்பற்றி, நல்ல பலன்களை அறுவடை செய்யும்போது யெகோவாமீது நமக்கு இருக்கிற நம்பிக்கையும் வளரும், விசுவாசமும் உறுதிப்படும். அதோடு, எதிர்கால ஆசீர்வாதங்களுக்காகப் பொறுமையாய்க் காத்திருப்பதும் சுலபமாக இருக்கும்.—யாக்கோபு 5:7, 8-ஐ வாசியுங்கள்.
14, 15. மனிதர்கள் படும் கஷ்டங்களை நாம் எப்படிக் கருத வேண்டும்?
14 பொறுமையை வளர்த்துக்கொள்ள அடுத்ததாக செய்ய வேண்டும்? இந்த உலகத்தையும் நம்முடைய சூழ்நிலைமையையும் யெகோவாவின் கண்ணோட்டத்தில் சிந்தித்துப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, மனிதர்கள் படும் கஷ்டத்தை அவர் எவ்வாறு கருதுகிறார் என்று யோசித்துப் பாருங்கள். மனிதர்கள் துன்பக் கடலில் விழுந்த நாள் முதற்கொண்டே தம் நெஞ்சில் வேதனையையும் வலியையும் சுமந்துகொண்டிருக்கிறார். இருந்தாலும், பயனுள்ள எந்தக் காரியத்தையும் செய்ய முடியாதளவு துக்கத்தில் அவர் மூழ்கிவிடவில்லை. “பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகவும்,” அவனால் மனிதகுலத்திற்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தையெல்லாம் நீக்குவதற்காகவும் தமது ஒரே மகனை அனுப்பி வைத்தார். (1 யோ. 3:8) நாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இந்தத் துயரக் கடலில் எதிர்நீச்சல் போடப்போகிறோம். கடவுள் நம்முடைய துயரங்களைத் துடைத்த பின்பு காலமெல்லாம் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்போம். எனவே, சாத்தானுடைய உலகில் மண்டிக்கிடக்கும் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் நினைத்து சோகத்தில் மூழ்கிவிடாமல் அல்லது முடிவு வராததை நினைத்து பொறுமையிழந்து போகாமல் காணப்படாதவையாய் உள்ள நிலையான காரியங்கள்மீது விசுவாசம் வைப்போமாக. யெகோவாவின் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. தீமையை ஒழித்துக்கட்ட அவர் தீர்மானித்திருக்கும் நாளில் அவர் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்.—ஏசா. 46:13; நாகூ. 1:9.
15 சமாளிப்பதற்குக் கடினமான இந்தக் கடைசி நாட்களில் நம்முடைய விசுவாசத்திற்குப் பயங்கரமான சோதனைகள் வரலாம். நாம் வன்முறைக்கு ஆளாகும்போது அல்லது நமக்குப் பிரியமானவர்கள் கஷ்டப்படும்போது கோபத்தில் கொதித்தெழுவதற்குப் பதிலாக நம் பாரத்தையெல்லாம் யெகோவாமீது போட்டுவிட வேண்டும். அப்படிச் செய்வது அபூரணர்களான நமக்கு அவ்வளவு சுலபமல்ல. ஆனால், இயேசு என்ன செய்தாரென்று மத்தேயு 26:39-ல் (வாசியுங்கள்.) சொல்லப்பட்டுள்ளதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
16. முடிவு வர காத்திருக்கும் இந்த வேளையில் நாம் என்ன செய்யக் கூடாது?
16 அழிவு நெருங்கிவிட்டதை நம்பாத ஒருவர் தவறான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிடலாம். ‘யெகோவா சொன்னதெல்லாம் நடக்காமல் போய்விட்டால் என்ன செய்வது’ என்று நினைத்து தன் எதிர்காலத்திற்காகத் திட்டங்களைப் போட ஆரம்பிக்கலாம். ‘யெகோவா சொன்னதெல்லாம் முதலில் நடக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ எனவும் நினைக்கலாம். இப்படிப்பட்ட தவறான சிந்தனை அவருடைய பொறுமையைக் குழிதோண்டி புதைத்துவிடலாம். இதன் விளைவாக, இந்த உலகில் பேரையும் புகழையும் சம்பாதிக்க, சொத்துசுகம் சேர்க்க அவர் முயற்சி செய்யலாம் அல்லது உயர்கல்வி கற்று கைநிறைய சம்பாதித்து சொகுசாய் வாழ திட்டமிடலாம், கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுக்காமல் போய்விடலாம். இப்படியெல்லாம் செய்தால் அவருக்கு விசுவாசம் இல்லை என்றுதானே அர்த்தம்? யெகோவா வாக்குறுதி அளித்திருப்பவற்றை “விசுவாசத்தினாலும் பொறுமையினாலும்” பெற்றுக்கொண்ட உண்மை ஊழியர்களின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி பவுல் நம்மை உற்சாகப்படுத்தியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். (எபி. 6:12) யெகோவா இந்தப் பொல்லாத உலகிற்கு வைத்திருக்கும் கெடுவை ஒரு நாள்கூட நீட்டிக்க மாட்டார், ஒரு நிமிடம்கூட நீட்டிக்க மாட்டார். (ஆப. 2:3) எனவே, காத்திருக்கும் இந்த வேளையில், ஏதோ பேருக்காக நாம் யெகோவாவுக்குச் சேவை செய்யக் கூடாது. மாறாக, விழிப்புடன் இருந்து நற்செய்தி அறிவிக்கும் வேலையைச் சுறுசுறுப்பாய்ச் செய்ய வேண்டும். இன்றைக்குப் பரம திருப்தி தரும் வேலை என்று சொன்னால் அது இந்த வேலைதான்.—லூக். 21:36.
பொறுமை பெற்றுத்தரும் ஆசீர்வாதங்கள்
17, 18. (அ) பொறுமையாய்க் காத்திருக்கும் இந்தச் சமயத்தில் எதை நிரூபிக்க யெகோவா நமக்கு வாய்ப்பு அளிக்கிறார்? (ஆ) இப்போது பொறுமையாய் இருந்தால் எதிர்காலத்தில் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
17 நாம் ஒருசில மாதங்களாகவோ பல வருடங்களாகவோ யெகோவாவுக்குச் சேவை செய்து வந்திருக்கலாம். ஆனால், அவருக்கு என்றென்றும் சேவை செய்யவே நாம் அனைவரும் விரும்புகிறோம். அழிவு வர இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சரி, பொறுமையை வளர்த்துக்கொண்டால் மீட்புப் பெறும்வரை சகித்திருப்போம். யெகோவா எடுத்திருக்கும் தீர்மானங்களில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை நிரூபிக்கவும்... அவருடைய பெயருக்காகத் துன்பங்களைக்கூட சகிப்போம் என்பதை நிரூபிக்கவும்... அவர் இப்போது நமக்கு வாய்ப்பு அளிக்கிறார். (1 பே. 4:13, 14) மீட்புக்குத் தேவையான பொறுமையை வளர்த்துக்கொள்ள நமக்குப் பயிற்சியும் அளிக்கிறார்.—1 பே. 5:10.
18 இயேசுவுக்குப் பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருப்பதால் நாமாக நழுவி வந்தால் தவிர அவருடைய பாதுகாப்பான கரங்களிலிருந்து யாரும் எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது. (யோவா. 10:28, 29) எதிர்காலத்தை நினைத்தோ, ஏன் மரணத்தை நினைத்தோகூட நாம் பயப்பட வேண்டியிருக்காது. முடிவுவரை பொறுமையாய்ச் சகித்திருந்தால் நிச்சயம் மீட்புக் கிடைக்கும். எனவே, இந்த வஞ்சக உலகம் அதன் வலையில் நம்மைச் சிக்க வைத்து யெகோவாமீதுள்ள நம் நம்பிக்கையைக் குலைத்துப்போட ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நம் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள தீர்மானமாய் இருக்க வேண்டும். அதோடு, கடவுள் பொறுமையாய் இருக்கிற இந்தச் சமயத்தை ஞானமாய்ப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.—மத். 24:13; 2 பேதுரு 3:17, 18-ஐ வாசியுங்கள்.