வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஏவாளும், பின்னால் ஆதாமும், நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தபோது, அவர்கள் புசித்தது ஓர் ஆப்பிள் பழமா?
நமக்குத் தெரியாது. அநேக ஆட்கள் ‘விலக்கப்பட்ட கனி’ ஓர் ஆப்பிள் பழமாக இருந்தது என்று நினைத்திருக்கிறார்கள், நூற்றாண்டுகளினூடாக ஓவியர்கள் இப்படியாக அதை அடிக்கடி வரைந்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் விருட்சத்தை அல்லது அதன் கனியை பைபிள் பெயரிட்டு அழைப்பதில்லை. ஏவாள் வெறுமென அதை “தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனி” என்பதாக குறிப்பிட்டாள்.—ஆதியாகமம் 3:3.
இதன் சம்பந்தமாக வேதாகமங்களின் பேரில் உட்பார்வை புத்தகத்தில் காணப்படும் “ஆப்பிள்” என்ற கட்டுரை அக்கறைக்குரியதாக இருக்கிறது:
“எபிரெய வார்த்தை தப்புவாக் குறிக்கும் விருட்சம் மற்றும் கனியின் அடையாளம் பற்றி அதிகமாக கற்பனை செய்யப்படுகிறது. அந்த வார்த்தைதானே அதன் நறுமணம் அல்லது வாசனையினால் வேறுபடுத்திக் காண முடிகிற ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. அது ‘ஊது; மூச்சுவாங்கு; மூச்சுவிட போராடு’ என்று பொருள்படும் நாபாக் என்ற மூலச்சொல்லிலிருந்து வருகிறது. (ஆதி 2:7; யோபு 31:39; எரே 15:9) இதைக் குறித்து M. C. ஃபிஷர் இவ்வாறு எழுதினார்: ‘[நாபாக்கு] தொடர்பு முதல் நினைப்பில், மொழியின் சொற்பொருள் விதியை வலிந்து திரித்து பொருள் கொள்வது போல தோன்றுகிறது, ஆனால் “சுவாசி” மற்றும் “வாடையை வீசச்செய்” என்ற கருத்துக்கள் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. அதேப் பொருளை குறிக்கும் இணைச் சொல் பூவா என்பது “ஊது” (காற்று) மற்றும் “இன்பமான வாடையை வீசச்செய், நறுமணத்துடனிரு” என்பதாக பொருள்படுகிறது.—பழைய ஏற்பாட்டின் இறையியல் வார்த்தைப் புத்தகம், R. L. ஹாரிஸ் பதிப்பித்தது, 1980, புத். 2, பக். 586.
“ஆப்பிளுக்குப் பதிலாக ஆரஞ்சு, நாரத்தை, புளிப்பான திண்ணிய கனி, சீமை வாதுமைப் பழம் உட்பட பல்வேறு பழங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. . . . இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட அராபிய வார்த்தையான டுஃவாக் அடிப்படையில் ‘ஆப்பிள்’ என்பதை அர்த்தப்படுத்துகிறது, எபிரெய இடப்பெயர்களான தப்புவாவும் பெத்தப்புவாவும் (அவற்றின் சுற்றுப்புறத்தில் இந்தப் பழம் பரவலாகக் காணப்படுவதன் காரணமாக ஒருவேளை இவ்விதமாக பெயரிடப்பட்டிருக்கலாம்) இந்த வார்த்தையின் பயன்பாட்டின் மூலம் அவற்றின் அராபிய சரிமாற்றுச்சொல்லில் பாதுகாத்து வைக்கப்பட்டிப்பது கவனிக்கத்தக்கது. (யோசு 12:17; 15:34, 53; 16:8; 17:8) இந்த இடங்கள் பள்ளப்பகுதி நிலங்களில் இல்லாமல் தட்பவெப்ப நிலை பொதுவாக ஓரளவு மிதமாக இருக்கும் மலைத் தேசத்தில் இருந்தன. மேலுமாக, கடந்தக் காலத்தில் தட்ப வெப்ப நிலை மாறுபட்டிருக்கக்கூடிய சாத்தியத்தை முழுவதுமாக தள்ளிவிடுவதற்கில்லை. ஆப்பிள் மரங்கள் இன்று இஸ்ரேலில் வளருகின்றன, இதன்காரணமாக பைபிள் வருணனைக்கு திருப்திகரமாக பொருந்துகின்றன. கடந்த நூற்றாண்டில் சீரியாவிலும் பாலஸ்தீனாவிலும் அநேக வருடங்களைச் செலவழித்த வில்லியம் தாம்ஸன், பிலிஸ்தியா சமவெளியில் அஸ்கலோன் பகுதியில் ஆப்பிள் பழத்தோட்டங்களைக் கண்டதாகவும்கூட அறிவித்திருக்கிறார்.—தேசமும் புத்தகமும், J. கிராண்டி என்பவரால் திருத்தப்பட்டது, 1910, பக். 545, 546.
“ஆப்பிள் மரம் (Pyrus malus) முக்கியமாக சாலொமோனின் உன்னதப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, அங்கே சூலமித்தியாளின் மேய்ப்ப தோழனின் அன்பு வார்த்தைகள் ஆப்பிள் மரத்தின் சுகமான நிழலுக்கும் அதன் கனியின் மதுரத்துக்கும் ஒப்பிடப்பட்டிருக்கிறது. (உன் 2:3, 5, NW) முறையாக, அவன் அவளுடைய சுவாசத்தை ஆப்பிள்களின் வாசனைக்கு ஒப்பிடுகிறான். (உன் 7:8, NW; அதோடு 8:5-ஐயும் (NW) பார்க்கவும்.) நீதிமொழிகளில் (25:11) பொருத்தமான சமயத்திற்கேற்ற பேச்சு ‘வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு’ ஒப்பிடப்பட்டிருக்கிறது. வேறு இடத்தில் ஆப்பிளைப் பற்றிய ஒரே குறிப்பு யோவேல் 1:12-ல் (NW) காணப்படுகிறது. ஆப்பிள் பழம் ஏதேனில் விலக்கப்பட்ட கனியாக இருந்தது என்ற பொதுவான பாரம்பரியத்துக்கு எந்த வேத ஆதாரமும் இல்லை. அதேவிதமாகவே, “கண்மணி” என்ற சொற்றொடர் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது (சங் 17:8; நீதி 7:2; இன்னும் மற்ற வேதவசனங்கள்) ஆனால் அது எபிரெய சொற்றொடராக இல்லை, அதன் சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பு ‘[ஒருவரின்] கண்விழியின் கண்மணி’ ஆகும்.”—வேதாகமங்களின் பேரில் உட்பார்வை, புத்தகம் 1, பக்கங்கள் 131-2, 1988-ல் உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்தது.