களைப்புற்றோருக்கு ஓர் அன்பார்ந்த அழைப்பு
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”—மத்தேயு 11:28.
1. இயேசு கலிலேயாவில் தம் மூன்றாவது பிரசங்கப் பயணத்தின்போது எதைக் கண்டார்?
சுமார் பொ.ச. 32-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இயேசு கலிலேயா மாகாணத்தில் தம் மூன்றாம் பிரசங்கப் பயணத்தில் ஈடுபட்டு இருந்தார். அந்த நகரங்கள் வழியாகவும் கிராமங்கள் வழியாகவும் அவர் பயணம் செய்து, “ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.” அவ்விதம் செய்துவருகையில், திரண்டுவந்த மக்களை அவர் கண்டு, “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி[னார்.]”—மத்தேயு 9:35, 36.
2. இயேசு மக்களுக்கு எவ்விதம் உதவினார்?
2 இருப்பினும், இயேசு வெறுமனே மனதுருகுவதைவிட அதிகம் செய்தார். “அறுப்புக்கு எஜமான்” யெகோவா தேவனிடம் ஜெபிக்கும்படி தன்னுடைய சீஷர்களுக்கு அறிவுரை கூறியபின், மக்களுக்கு உதவும்படி அவர் அவர்களை அனுப்பினார். (மத்தேயு 9:38; 10:1) பிறகு அவர் உண்மையான துயர்தீர்ப்புக்கும் ஆறுதலுக்கும் உள்ள வழியைக்குறித்து தன் சொந்த உறுதியளிக்கும் வார்த்தைகளை மக்களுக்குக் கொடுத்து, இருதயத்துக்குப் பரவசமூட்டும் இந்த அழைப்பை அவர்களுக்கு அளித்தார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”—மத்தேயு 11:28, 29.
3. இயேசுவின் அழைப்பு ஏன் இன்றும் அதே அளவிற்கு கவர்ச்சியுள்ளதாய் இருக்கிறது?
3 கனத்த பாரத்தால் அழுத்தப்பட்டதுபோன்று அநேகர் உணரும் ஒரு காலத்தில் இன்று நாம் வாழ்கிறோம். (ரோமர் 8:22; 2 தீமோத்தேயு 3:1) சிலருக்கு, வெறுமனே வாழ்க்கை நடத்துவதே அவர்களுடைய நேரத்தையும் சக்தியையும் அவ்வளவுக்கதிகமாக எடுத்துக்கொள்வதால் அவர்களுடைய குடும்பம், நண்பர்கள், அல்லது வேறு எதற்கென்றும் ஒதுக்க அவர்களிடம் எதுவுமே எஞ்சியில்லை. அநேகர் கடுமையான வியாதிகள், இன்னல்கள், மனச்சோர்வு, இன்னும் பிற உடல் சம்பந்தப்பட்ட மன சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்ற பாரங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றனர். பாரத்தின் அழுத்தத்தை உணர்ந்து, சிலர் தங்களை சிற்றின்ப நாட்டம், உணவு, மதுபானம் ஆகியவற்றிலும் போதைமருந்து துர்ப்பிரயோகத்திலும்கூட முற்றிலும் ஆழ்த்திக்கொள்வதன் மூலம் விடுதலை காண முயலுகின்றனர். இது நிச்சயமாகவே அவர்களை ஒரு விஷச்சுற்றுக்குள் வீழ்த்தி, மேலுமதிக பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் அவர்களுக்குக் கொண்டுவருகிறது. (ரோமர் 8:6) இயேசுவின் அன்பார்ந்த அழைப்பு அன்றிருந்த அளவு இன்றும் கவர்ச்சிகரமாக தொனிப்பது தெளிவாக இருக்கிறது.
4. இயேசுவின் அன்பார்ந்த அழைப்பிலிருந்து பயனடைய நாம் எந்தக் கேள்விகளைச் சிந்திக்க வேண்டும்?
4 ஆயினும், இயேசுவை மனதுருகச்செய்யும் அளவுக்கு “தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” தோன்ற அவருடைய நாட்களில் இருந்த மக்கள் எதற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்? அவர்கள் சுமக்கவேண்டியிருந்த பாரங்களும் சுமைகளும் யாவை, இயேசுவின் அழைப்பு எப்படி அவர்களுக்கு உதவும்? இக்கேள்விகளுக்குரிய பதில்கள் களைப்புற்றோருக்கு இயேசு கொடுக்கும் அன்பார்ந்த அழைப்பிலிருந்து பயனடைய நமக்கு வெகு அதிகமாக உதவக்கூடும்.
அக்காலத்தில் ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தவர்கள்’
5. இயேசுவின் ஊழியத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தை அப்போஸ்தலனாகிய மத்தேயு பதிவு செய்தது ஏன் பொருத்தமாயிருந்தது?
5 இயேசுவின் ஊழியத்தில் ஏற்பட்ட இந்நிகழ்ச்சியை மத்தேயு மட்டுமே அறிக்கை செய்திருப்பது ஆர்வத்துக்குரியது. லேவி எனவும் அறியப்பட்ட மத்தேயு வரிவசூலிப்பவராக இருந்தவரானதால், அம்மக்கள் சுமந்துகொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட பாரத்தை நன்கறிந்திருந்தார். (மத்தேயு 9:9; மாற்கு 2:14) இயேசுவின் காலத்தில் அனுதின வாழ்க்கை என்ற ஆங்கிலப் புத்தகம் சொல்கிறது: “[யூதர்கள்] பணமாகவும் பிற வகையிலும் செலுத்தவேண்டியிருந்த வரிகள் அளவுக்கதிகமாய் இருந்தன, இரண்டு வகையான வரிகள், அரசு வரிகளும் மத வரிகளும், ஒருங்கிணைந்து விதிக்கப்பட்டது அவற்றை மேலும் பாரமானவையாக்கிற்று. அவற்றுள் எந்த வரியும் இலேசானதாக இல்லை.”
6. (அ) இயேசுவின் காலத்தில் என்ன வரிவசூலிப்பு முறை இருந்தது? (ஆ) வரிவசூலிப்பவர்கள் ஏன் அத்தகைய அவகீர்த்தி பெற்றிருந்தனர்? (இ) பவுல் தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு எதைக் குறித்து நினைப்பூட்டுவதை அவசியமானதாகக் கண்டார்?
6 இவற்றையெல்லாம் அதிக பாரமானதாய் ஆக்கியது அக்காலத்தில் இருந்த வரிவசூலிப்பு முறையாகும். மாகாணங்களில் வரிவசூலிக்கும் உரிமையை ரோம அதிகாரிகள் ஏலத்தில் உயர்ந்த விலையைக் குறிப்பிடுபவர்களுக்கு குத்தகையில் விடுவார்கள். குத்தகை எடுப்பவர்கள் அந்தந்த சமுதாயங்களில் வரிவசூலை மேற்பார்வையிட ஆட்களை வேலைக்கு அமர்த்தினார்கள். இறுதியில் வரிசெலுத்தியவர்களை அழுத்திய அத்திட்டத்தில் உட்பட்டிருந்த ஒவ்வொருவனும் தன் கமிஷனை அல்லது பங்கை வரியுடன் கூட்ட சிறிதும் தயங்கவில்லை. உதாரணமாக, ‘ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷனைக்’ குறித்து லூக்கா விவரிக்கிறார். (லூக்கா 19:2) ‘ஆயக்காரருக்குத் தலைவனான’ சகேயுவும் அவனுடைய மேற்பார்வையின்கீழ் இருந்தவர்களும் மக்களைத் துயரப்படுத்தி செல்வந்தர்களாக ஆயினர் என்று தோன்றுகிறது. அத்தகையதோர் ஏற்பாடு உருவாக்கிய துர்ப்பிரயோகமும் ஊழலும் மக்கள் வரிவசூலிப்பவர்களை பாவிகளுக்கும் வேசிகளுக்கும் சமமாக மதிப்பிட வைத்தது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது தகுதியாயும் இருந்திருக்கக்கூடும். (மத்தேயு 9:10; 21:31, 32; மாற்கு 2:15; லூக்கா 7:34) மக்கள் இதை ஏறக்குறைய தாங்கமுடியாத பாரமாக உணர்ந்ததால், ரோம நுகத்தின்கீழ் எரிச்சலுடன் இருந்துகொண்டிராமல், “யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்கு தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்,” என அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய தேவையை உணர்ந்ததைக் குறித்து ஆச்சரியமில்லை.—ரோமர் 13:7அ; லூக்கா 23:2-ஐ ஒப்பிடுக.
7. ரோமர்களின் தண்டனையளிக்கும் சட்டங்கள் மக்களுக்கு பாரத்தை எவ்விதம் கூட்டின?
7 “எவனுக்குப் பயப்பட வேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம் பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்” எனவும் பவுல் கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டினார். (ரோமர் 13:7ஆ) கொடூரத்தையும் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டங்களையும் பயன்படுத்துவதில் ரோமர்கள் பேர்போனவர்கள். வாரினால் அடிப்பது, சவுக்கால் அடிப்பது, கடுமையான சிறைவாசங்கள், மரண தண்டனைகள் போன்றவை மக்களைக் கீழ்ப்படுத்தி வைக்க அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. (லூக்கா 23:32, 33; அப்போஸ்தலர் 22:24, 25) யூதத் தலைவர்களுக்குங்கூட அவர்களுக்குப் பொருத்தமாகத் தோன்றிய சமயங்களில் அத்தகைய தண்டனைகளை அளிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. (மத்தேயு 10:17; அப்போஸ்தலர் 5:40) நிச்சயமாக அத்தகைய ஒழுங்குமுறை அதன்கீழ் வாழ்ந்த எவரையும் ஒடுக்குவதாய் இல்லையென்றாலும், அடக்கியாளுவதாய் இருந்தது.
8. மதத் தலைவர்கள் எவ்விதம் மக்கள் மீது ஒரு பாரத்தைச் சுமத்தினர்?
8 ஆயினும், ரோமர்களுடைய வரிகளையும் சட்டங்களையும்விட மோசமாக இருந்தது பொது மக்கள்மீது அக்காலத்திலிருந்த மதத்தலைவர்களால் வைக்கப்பட்ட பாரமாகும். உண்மையில், ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்கள்’ என்று இயேசு மக்களை விவரித்தபோது அவருடைய பிரதான அக்கறை இதைக்குறித்தே இருந்ததாகத் தோன்றுகிறது. கொடுமைக்குட்படுத்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிப்பதற்கு மாறாக, அந்த மதத் தலைவர்கள் “சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்,” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 23:4; லூக்கா 11:46) அந்த மதத்தலைவர்கள்—விசேஷமாக சதுசேயர்களும் பரிசேயர்களும்—அகந்தையுள்ள, இரக்கமற்ற, மாய்மாலம் நிறைந்த தொகுதியினராய் தவறாய்ப் புரிந்துகொள்ள முடியாதவண்ணம் சுவிசேஷங்களில் விவரிக்கப்பட்டிருப்பதை ஒருவரால் கவனியாமல் இருக்கமுடியாது. பொதுமக்களை கல்வி அறிவில்லாதவர்கள் எனவும் அசுத்தமானவர்கள் எனவும் அவர்கள் இழிவாகக் கருதினர், தங்களிடையே வாழ்ந்த அயல்நாட்டவரை ஏளனமாய் வெறுத்தனர். அவர்களுடைய மனப்பான்மையைக் குறித்து ஒரு குறிப்புரை அகராதி கூறுகிறது: “ஒரு குதிரையின்மீது அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றும் மனிதன் சட்டப்பிரகாரம் இந்நாட்களில் தண்டிக்கப்படுகிறான். எவ்வித மதப் பயிற்றுவிப்பும் இல்லாத சாதாரண மக்கள் மீது 613 கட்டளைகளை ஏற்றி, பிறகு அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாது, அவர்களை தேவ பக்தியற்றவர்கள் என கண்டனம் செய்தவனைப்பற்றி என்ன?” நிச்சயமாக, மோசேயின் நியாயப்பிரமாணமல்ல, மக்கள்மீது சுமத்தப்பட்ட பெருந்திரளான பாரம்பரியங்களே உண்மையான பாரமாக இருந்தன.
இன்னலுக்கு உண்மையான காரணம்
9. இயேசுவின் காலத்திலிருந்த மக்களின் நிலைமைகள் அரசனாகிய சாலொமோனின் நாட்களிலிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் எப்படி இருந்தன?
9 சிலசமயங்களில் மக்கள்மீதிருந்த பொருளாதார சுமை அதிக பாரமானதாக இருந்ததால், வறுமை பரவியிருந்தது. இஸ்ரவேலர்கள் மோசேயின் நியாயப்பிரமாணம் நிர்ணயித்த நியாயமான வரிகளைச் செலுத்தவேண்டியிருந்தது. மேலும், சாலொமோனின் ஆட்சியின்போது, தேவாலயத்தையும் இன்னும் பிற மாபெரும் கட்டடங்களையும் கட்டும் அதிக செலவு உட்பட்ட தேசியத் திட்டங்களுக்கு மக்கள் பொருளுதவி அளித்தனர். (1 இராஜாக்கள் 7:1-8; 917-19) ஆயினும், மக்கள் “புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். . . . சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்,” என்று பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 4:20, 25) இந்த வித்தியாசத்திற்குக் காரணம் என்ன?
10. முதல் நூற்றாண்டுக்குள் இஸ்ரவேல் இருந்த நிலைக்குக் காரணம் என்ன?
10 அந்தத் தேசத்தார் மெய் வணக்கத்தின் சார்பாக உறுதியாக நிலைநின்றவரை, அவர்கள் யெகோவாவின் தயவை அனுபவித்து அந்த உயர்ந்த தேசிய செலவினம் இருந்தபோதிலும் பாதுகாப்பையும் செழுமையையும் பெற ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர். ஆயினும், யெகோவாவை விட்டுப் ‘பின்வாங்கி அவர்களுக்கு முன்வைத்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போனால்’ மோசமான எதிர்மாறான சீரழிவுகள் ஏற்படும் என்று யெகோவா எச்சரித்தார். உண்மையில், ‘இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் ஆவார்கள்.’ (1 இராஜாக்கள் 9:6, 7) சரியாக அவ்விதமே விவகாரங்கள் மாறின. இஸ்ரவேல் தேசம் அயல்நாட்டவரின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது, ஒருகாலத்தில் மகிமை பொருந்திய ராஜ்யமாக இருந்த அத்தேசம் வெறும் ஒரு குடியேற்ற பிரதேசமாகும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டது. தங்கள் ஆவிக்குரிய கடமைகளை அசட்டைசெய்ததால் எவ்வளவு மோசமான விளைவு!
11. மக்கள் “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருந்ததாக இயேசு ஏன் உணர்ந்தார்?
11 தாம் பார்த்த மக்கள் “தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருந்தனர் என்று இயேசு உணர்ந்தது ஏன் என்பதை நாம் புரிந்துகொள்ள இவையெல்லாம் நமக்கு உதவுகின்றன. பெரும்பாலும் கடவுளுடைய கட்டளைகளுக்கு இணங்க வாழவும் அங்கீகரிக்கப்படும் முறையில் தங்கள் வணக்கத்தை ஏறெடுக்கவும் முயன்றுகொண்டிருந்த அவர்கள் இஸ்ரவேலர்கள், யெகோவாவின் ஜனங்கள். இருப்பினும், அவர்கள் அந்த அரசியல் மற்றும் வணிக அதிகாரங்களினாலும் அவர்களிடையே இருந்த விசுவாசதுரோகம் செய்த மதத் தலைவர்களாலும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல” இருந்தனர், ஏனெனில் அவர்களை கவனிக்கவோ அவர்கள் சார்பாகப் பேசவோ எவருமில்லை. வாழ்க்கையின் கடுமையான மெய்ம்மைகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவி தேவையாயிருந்தது. இயேசுவின் அன்பான கனிவான அழைப்பு எந்தளவுக்கு அக்காலத்திற்கேற்றதாக இருந்தது!
இன்று இயேசுவின் அழைப்பு
12. கடவுளுடைய ஊழியர்களும் உண்மைமனதுள்ள பிற ஆட்களும் இன்று எத்தகைய அழுத்தங்களை உணருகின்றனர்?
12 இன்று அநேக வழிகளில் விஷயங்கள் அதைப்போன்றே இருக்கின்றன. நேர்மையாக வாழ முயலும் உண்மைமனதுள்ள ஆட்கள் இந்த ஊழல் மிகுந்த ஒழுங்குமுறையின் அழுத்தங்களும் தேவைகளும் தாங்குவதற்குக் கடினமாயிருப்பதாக உணருகின்றனர். யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்லர். தங்கள் உத்தரவாதங்களையெல்லாம் நிறைவேற்றவேண்டும் என்று நினைத்தாலும் அவ்வாறு செய்வது யெகோவாவின் ஊழியர்கள் சிலருக்கு வரவர கடினமாகிக் கொண்டு வருவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. அவர்கள் பாரஞ்சுமந்தவர்களாக, களைப்படைந்தவர்களாக, திறனிழந்தவர்களாக உணருகின்றனர். சிறிது நிம்மதியாய் சிந்திப்பதற்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்காவது ஓடிவிடலாம் என்றும்கூட சிலருக்குத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாவது அவ்விதம் உணர்ந்திருக்கிறீர்களா? உங்களுக்கு நெருக்கமாயுள்ள எவராவது அத்தகைய நிலையில் இருக்கிறார்களா? ஆம், இயேசுவின் அன்பார்ந்த அழைப்பு இன்று நமக்கு அதிக அர்த்தம் நிறைந்ததாய் இருக்கிறது.
13. ஆறுதலையும் இளைப்பாறுதலையும் நாம் கண்டடையும்படி இயேசுவினால் நமக்கு உதவமுடியும் என்று ஏன் நாம் நிச்சயமாயிருக்கலாம்?
13 இயேசு தம் அன்புள்ள அழைப்பைக் கொடுப்பதற்கு முன் சொன்னார்: “சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.” (மத்தேயு 11:27) இயேசுவுக்கும் அவருடைய பிதாவுக்கும் இடையே உள்ள இந்நெருங்கிய உறவின் காரணமாக, நாம் இயேசுவின் அழைப்பை ஏற்று அவருடைய சீஷர்களாக ஆவதன்மூலம் ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாகிய’ யெகோவாவுடன் ஒரு நெருங்கிய, தனிப்பட்ட உறவுக்குள் வர முடியும் என்று நமக்கு நிச்சயமளிக்கப்படுகிறது. (2 கொரிந்தியர் 1:3; யோவான் 14:6-ஐ ஒப்பிடுக.) அத்தோடு, ‘சகலமும் அவருக்கு ஒப்புவிக்கப்பட்டிருப்பதால்’ நம் பாரங்களை இலேசாக்குவதற்கு வல்லமையும் அதிகாரமும் இயேசுவுக்கு மட்டுமே உண்டு. எந்த பாரங்களை? ஊழல் நிறைந்த அரசியல், வணிக, மத ஒழுங்குமுறைகளாலும் நாம் சுதந்தரித்த பாவம், அபூரணம் ஆகியவற்றாலும் சுமத்தப்படும் பாரங்களை. ஆரம்பத்திலிருந்தே எவ்வளவு உற்சாகமும் உறுதியும் அளிக்கும் கருத்தாக இது இருக்கிறது!
14. எந்த வருத்தப்படுத்தும் வேலையிலிருந்து இயேசு இளைப்பாறுதல் கொடுக்க முடியும்?
14 “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என்று இயேசு தொடர்ந்து சொன்னார். (மத்தேயு 11:28) இயேசு நிச்சயமாகவே கடின உழைப்பை எதிர்த்து பேசிக்கொண்டிருக்கவில்லை, ஏனெனில் அவருடைய சீஷர்கள் தங்களுக்கிருந்த வேலையில் பிரயாசப்பட்டு உழைக்கவேண்டும் என்று அவர் அடிக்கடி ஆலோசனை கூறியிருந்தார். (லூக்கா 13:24) ஆனால், “வருத்தப்பட்டு” (கிங்டம் இன்டர்லீனியரில் “கஷ்டத்துடன் உழைத்தல்”) என்பது பெரும்பாலும் எவ்வித பிரயோஜனமுமின்றி செய்யப்படும் நீண்டகால, களைப்பூட்டும் உழைப்பைக் குறிக்கிறது. “பாரஞ்சுமக்கிறவர்களே” என்பது சாதாரண அளவுக்குமேல் கனமுள்ள பாரத்தைத் தாங்கியிருக்கும் கருத்தைக் கொடுக்கிறது. புதையலை எடுக்கத் தோண்டும் ஒரு மனிதனுக்கும் கைதிகள் முகாமில் குழிகள் தோண்டும் ஒருவனுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு இதை ஒப்பிடலாம். இருவரும் ஒரேவிதமான கடின வேலை செய்கின்றனர். ஒருவனுக்கு அது ஆர்வமுள்ளதாய் இருக்கிறது, ஆனால் மற்றவனுக்கோ அது முடிவற்ற வேண்டா வெறுப்புடன் செய்யப்படும் வேலையாய் இருக்கிறது. வேலையின் நோக்கமும், அல்லது நோக்கம் ஒன்று இல்லாதிருப்பதுமே வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது.
15. (அ) ஒரு பெரிய பாரத்தை நம் தோள்களின் மேல் சுமந்துகொண்டிருப்பதாக நாம் உணர்ந்தால் எந்தக் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும்? (ஆ) நம் பாரங்களின் ஊற்றுமூலத்தைக் குறித்து என்ன சொல்லப்படலாம்?
15 நீங்கள் “வருத்தப்பட்டுப் பாரஞ்சும”ப்பதாக, உங்கள் நேரத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்ள அளவுக்குமீறிய காரியங்கள் இருப்பதாக உணருகிறீர்களா? நீங்கள் சுமந்துகொண்டிருக்கும் பாரங்கள் அளவுக்குமேல் கனமானதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியானால், ‘எந்த நோக்கத்துக்காக நான் வருத்தப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கிறேன்? எவ்வித சுமையை நான் சுமந்துகொண்டிருக்கிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்வது பயனளிக்கக்கூடும். இதன் சம்பந்தமாக, பைபிள் விளக்கவுரையாளர் ஒருவர் சுமார் 80 வருடங்களுக்கு முன் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: “வாழ்க்கையின் பாரங்களை நாம் எடுத்துக்கொண்டால், அவை இரண்டு வகைகளில் அடங்கும்; நாமே உருவாக்கிக்கொள்பவை, தவிர்க்கமுடியாதவை என நாம் அவற்றை அழைக்கலாம்: நம் செயல்களின் விளைவாக ஏற்பட்டவை, பிற காரணங்களால் ஏற்பட்டவை.” அவர் மேலும் கூறினார்: “கண்டிப்பான சுயபரிசோதனைக்குப்பின், நம் பாரங்களில் எத்தனைப் பெரும்பகுதி நாமே உருவாக்கிக்கொண்டவற்றால் நிரம்பியுள்ளது என்பதைக் கண்டு நம்மில் அநேகர் திகைப்படைவோம்.”
16. எந்த பாரங்களை ஞானமற்ற வகையில் நாமே நம்மீது சுமத்திக்கொள்ளக்கூடும்?
16 நம் மீது நாமே சுமத்திக்கொள்ளும் சில பாரங்கள் யாவை? இன்று நாம் பொருளாசை மிகுந்த, சுகபோகத்தை விரும்பும், ஒழுக்கயீனமான உலகில் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) நவீன உடைபாணிகளுக்கும் வாழ்க்கைபாணிகளுக்கும் ஒத்துப்போவதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்மீதும் அழுத்தம் வருகிறது. ‘மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும்’ பற்றி யோவான் எழுதினார். (1 யோவான் 2:16) இந்த வல்லமைவாய்ந்த செல்வாக்குகள் நம்மை எளிதில் பாதிக்கக்கூடும். உலக சிற்றின்பங்களைக் கூடுதலாக அனுபவிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப்பாணியைக் காத்துவர சிலர் கடனில் ஆழ்ந்துவிடவும் தயாராக இருப்பது அறியப்பட்டிருக்கிறது. பிறகு, அந்தக் கடனை அடைப்பதற்கு பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் வேலையில் அளவுக்குமீறி நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்யவேண்டியிருக்கிறது.
17. எத்தகைய நிலைமை சுமையைச் சுமப்பதை மேலும் கடினமாக்கக்கூடும், இது எவ்விதம் நிவிர்த்தி செய்யப்படக்கூடும்?
17 மற்றவர்கள் வைத்திருப்பவற்றை நாமும் வைத்திருப்பதும் மற்றவர்கள் செய்யும் காரியங்களில் சிலவற்றை நாமும் செய்வதும் தவறில்லை என ஒரு நபர் சிந்திக்கக்கூடும் என்றாலும், அவர் அநாவசியமாக தன் பாரத்தைக் கூட்டிக் கொள்ளுகிறாரா என்பதை ஆராய்வது முக்கியமானது. (1 கொரிந்தியர் 10:23) ஒவ்வொருவரும் ஓரளவு சுமையே தூக்கமுடியும், ஆதலால் வேறொரு சுமையை ஏற்றிக்கொள்வதற்குமுன் ஏதோவொரு சுமை நீக்கப்படவேண்டியிருக்கிறது. பெரும்பாலான சமயங்களில், நம்முடைய ஆவிக்குரிய நலனுக்கு அத்தியாவசியமான தனிப்பட்ட படிப்பு, கூட்டங்களுக்குப் போவது, வெளி ஊழியம் போன்றவையே முதலில் நீக்கப்படுகின்றன. இதன் விளைவாக ஆவிக்குரிய பலம் இழக்கப்படுகிறது, இதனால் சுமையைத் தாங்கி நிற்பது மேலும் கடினமாகிவிடுகிறது. அந்த ஆபத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து பின்வருமாறு சொல்லி எச்சரித்தார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.” (லூக்கா 21:34, 35; எபிரெயர் 12:1) ஒருவர் பாரஞ்சுமந்துகொண்டு களைப்புற்றவராய் இருந்தால் ஒரு கண்ணியை கண்டுபிடிப்பதும் அதற்குத் தப்பிக்கொள்வதும் கடினம்.
விடுதலையும் இளைப்பாறுதலும்
18. தன்னிடம் வருவோருக்கு இயேசு எதை அளித்தார்?
18 இயேசு அன்பாக நிவாரணத்தை சொன்னார்: “என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11:28) இங்கும் வசனம் 29-லும் உள்ள “இளைப்பாறுதல்” என்ற வார்த்தை “ஓய்வுநாள்” அல்லது “ஒய்வுநாளைக் கடைப்பிடித்தல்” என்பதற்குரிய எபிரெய பதத்தை மொழிபெயர்க்க செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பு பயன்படுத்தும் பதத்திற்கு ஒப்பான கிரேக்க வார்த்தைகளிலிருந்து வருகிறது. (யாத்திராகமம் 16:23) இவ்வாறாக, இயேசு தன்னிடம் வந்தவர்களுக்கு இனிமேல் வேலையே இருக்காது என வாக்களிக்காமல், கடவுளுடைய நோக்கத்திற்கு இணங்க அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்ய ஏற்ற நிலையில் இருக்கும்படி அவர்களுக்குப் புத்துணர்ச்சியூட்டுவதாக வாக்களித்தார்.
19. எவ்விதம் ஒருவர் ‘இயேசுவிடம் வர’ முடியும்?
19 ஆயினும், எவ்வாறு ஒருவர் ‘இயேசுவிடம் வர’முடியும்? தம் சீஷர்களிடம் இயேசு சொன்னார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24) எனவே, இயேசுவிடம் வருவது என்பது, ஒருவர் தன் சுயசித்தத்தை கடவுளுடைய சித்தத்துக்கும் கிறிஸ்துவின் சித்தத்துக்கும் கீழப்படுத்தி, குறிப்பிட்ட உத்தரவாதமுள்ள ஒரு பாரத்தை ஏற்றுக்கொள்வதை, அவ்விதம் தொடர்ந்து செய்வதைக் குறிக்கிறது. இதெல்லாம் அளவுக்குமீறி வற்புறுத்துவதாய் இருக்கிறதா? இது நீங்கள் கொடுக்கமுடியாத விலையா? களைப்புற்றோருக்கு அன்பார்ந்த அழைப்பைக் கொடுத்தபின் இயேசு சொன்னவற்றை ஆலோசிப்போம்.
உங்களால் மறுபடியும் ஞாபகத்துக்குக் கொண்டுவரமுடியுமா?
◻ இயேசுவின் நாட்களிலிருந்த மக்கள் எவ்விதங்களில் பாரஞ்சுமத்தப்பட்டிருந்தனர்?
◻ அம்மக்களின் இன்னலுக்கு உண்மையான காரணம் என்ன?
◻ நாம் கனத்த பாரஞ்சுமந்திருப்பதாக உணர்ந்தால் நம்மையே நாம் எவ்விதம் ஆராயவேண்டும்?
◻ எந்த பாரங்களை ஞானமற்ற வகையில் நாமே நம்மீது சுமத்திக்கொள்ளக்கூடும்?
◻ இயேசு வாக்களித்த இளைப்பாறுதலை நாம் எவ்விதம் பெறலாம்?
[பக்கம் 15-ன் படம்]
நாமே நம்மீது சுமத்திக்கொள்ளக்கூடிய சில பாரங்கள் யாவை?
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Bahamas Ministry of Tourism