“என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது”
“என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.”—மத்தேயு 11:29.
1, 2. (அ) உங்கள் வாழ்க்கையில் எது உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பதாக அனுபவத்தில் கண்டிருக்கிறீர்கள்? (ஆ) இயேசு வாக்களித்த இளைப்பாறுதலைப் பெற ஒருவர் என்ன செய்யவேண்டும்?
சூடும் புழுக்கமும் மிகுந்த ஒரு நாளின் இறுதியில் குளிர்ந்த நீர்க்குளியல், அல்லது நீண்ட களைப்பூட்டும் பயணத்திற்குப் பின் நிம்மதியான தூக்கம்—ஓ, எவ்வளவு புத்துணர்ச்சியூட்டுகிறது! ஒரு கனத்த பாரம் நீக்கப்படும்போதும் அல்லது பாவங்களும் மீறுதல்களும் மன்னிக்கப்படும்போதும் அவ்விதமே இருக்கிறது. (நீதிமொழிகள் 25:25; அப்போஸ்தலர் 3:19, 20) இத்தகைய கிளர்ச்சியூட்டும் செயல்களால் விளையும் இளைப்பாறுதல் நமக்குப் புத்துணர்ச்சியூட்டுகிறது, இன்னும் அதிகமாய்ச் செயல்பட நமக்கு சக்தியூட்டுகிறது.
2 பாரஞ்சுமந்து களைப்புற்றிருப்பதாக உணரும் அனைவரும் இயேசுவிடம் வரலாம், ஏனெனில் அவர்களுக்கு அவர் வாக்களித்ததும் சரியாக அதுதான்—இளைப்பாறுதல். எனினும், அந்தளவுக்கு விரும்பத்தக்க அந்த இளைப்பாறுதலைப் பெற ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய விருப்பமுள்ளவராக இருக்கவேண்டும். “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்,” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 11:29) எது இந்த நுகம்? அது எவ்விதம் இளைப்பாறுதல் தருகிறது?
மெதுவான நுகம்
3. (அ) பைபிள் காலங்களில் எவ்வித நுகங்கள் பயன்படுத்தப்பட்டன? (ஆ) நுகத்தோடு எந்த அடையாள அர்த்தம் சம்பந்தப்பட்டிருக்கிறது?
3 விவசாய சமுதாயத்தில் வாழ்ந்ததால் இயேசுவும் அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களும் நுகத்தை நன்கு அறிந்திருந்தனர். பொதுவாக நுகம் என்பது, ஒரு கலப்பையையோ, வண்டியையோ அல்லது ஏதோவொரு சுமையையோ இழுப்பதற்கு இரு விலங்குகளை, பொதுவாக எருதுகளை, ஒருங்கிணைய சேணத்தில் பூட்ட அவற்றின் கழுத்தின்மீது பொருந்தும்விதத்தில் கீழ்ப்புறத்தில் இரு வளைவுகளையுடைய ஒரு நெடுங்கட்டையாகும். (1 சாமுவேல் 6:7) மனிதர்களுக்குங்கூட நுகங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை இருமுனைகளிலும் சுமை பிணைக்கப்பட்ட நீண்ட கட்டைகள் அல்லது கழிகள். அவற்றைக் கொண்டு தொழிலாளிகளால் கனமான சுமைகளைத் தூக்கிச் செல்லமுடிந்தது. (எரேமியா 27:2; 28:10, 13) பாரங்களோடும் கடினமான வேலைகளோடும் அதற்கிருந்த தொடர்பின் காரணமாக, நுகம் பைபிளில் அநேக சந்தர்ப்பங்களில் ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் குறிக்கும் அடையாளமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—உபாகமம் 28:48; 1 இராஜாக்கள் 12:4; அப்போஸ்தலர் 15:10.
4. தம்மிடம் வருபவர்களுக்கு இயேசு அளிக்கும் நுகம் எதை அடையாளப்படுத்துகிறது?
4 அப்படியானால், இளைப்பாறுதல் பெறுவதற்கு இயேசுவினால் அழைக்கப்பட்டவர்கள் தங்கள் மேல் ஏற்றுக்கொள்ளவேண்டிய நுகம் எது? “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்,” என்று அவர் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (மத்தேயு 11:29) கற்றுக்கொள்பவர் ஒரு சீஷனாக இருக்கிறார். எனவே, இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொள்வது அவருடைய சீஷனாக ஆவதைக் குறிக்கிறது. (பிலிப்பியர் 4:3) இருப்பினும், இது அவருடைய போதனைகளை மனதில் அறிந்துகொள்வதைவிட அதிகத்தை தேவைப்படுத்துகிறது. அவற்றுக்கு இணக்கமான செயல்களை—அவர் செய்த வேலையைச் செய்து அவர் வாழ்ந்த விதமாக வாழ்வதை—இது தேவைப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 11:1; 1 பேதுரு 2:21) அவருடைய அதிகாரத்துக்கும் அவர் யாருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறாரோ அவர்களுக்கும் மனமுவந்து கீழ்ப்படிவதை இது தேவைப்படுத்துகிறது. (எபேசியர் 5:21, NW; எபிரெயர் 13:17) ஒப்புக்கொடுத்தலோடு இணைந்துவரும் எல்லா சிலாக்கியங்களையும் உத்தரவாதங்களையும் ஏற்றுக்கொண்டு ஓர் ஒப்புக்கொடுக்கப்பட்ட, முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவராக ஆவதை அது அர்த்தப்படுத்துகிறது. ஆறுதலையும் இளைப்பாறுதலையும் பெற தன்னிடம் வரும் யாவருக்கும் இயேசு அளிக்கும் நுகம் இதுவே. இதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமா?—யோவான் 8:31, 32.
5. இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொள்வது ஏன் கடுமையான அனுபவமாக இருக்காது?
5 ஒரு நுகத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இளைப்பாறுதல் பெறுதல்—இது முரண்பாடான கருத்தாகத் தோன்றவில்லையா? உண்மையில் அவ்விதம் இல்லை, ஏனெனில் இயேசு அவருடைய நுகம் ‘மெதுவாய் [‘இரக்கமுள்ளதாய்,’ NW]’ இருக்கிறதெனச் சொன்னார். இவ்வார்த்தை தயவுள்ள, இனியபண்புள்ள, விரும்பத்தக்க என்ற அர்த்தமுடையதாக இருக்கிறது. (மத்தேயு 11:30; லூக்கா 5:39; ரோமர் 2:4; 1 பேதுரு 2:3) தச்சுவேலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த இயேசு கலப்பைகளையும் நுகங்களையும் செய்திருந்திருப்பார், கூடியவரை வசதியான வகையில் அதிகபட்ச வேலையைச் செய்துமுடிக்க ஒரு நுகத்தை எப்படி வடிவமைக்கவேண்டும் என்பதை அவர் அறிந்திருப்பார். ஒருவேளை அந்த நுகங்களின் கீழ்ப்புறத்தில் துணியையோ தோலையோ உள்பட்டையாகக் கொடுத்திருக்கலாம். அதிகமாய் கழுத்தைத் தேய்த்து புண்ணாக்காதபடி அநேக நுகங்கள் இவ்விதம் செய்யப்படுகின்றன. இவ்விதமே, இயேசு நமக்கு அளிக்கும் நுகமும் ‘மெதுவாய்’ இருக்கிறது. அவருடைய சீஷராக இருப்பது கடமைகளையும் உத்தரவாதங்களையும் உட்படுத்தினாலும், அது கடுமையானதோ அல்லது ஒடுக்கும் தன்மையுடையதோ அல்ல, இளைப்பாறுதல் அளிக்கும் ஓர் அனுபவம். அவருடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவாவின் கற்பனைகளும் பாரமானவைகளல்ல.—உபாகமம் 30:11; 1 யோவான் 5:3.
6. ‘என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று இயேசு சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தியிருக்கக்கூடும்?
6 இயேசுவின் நுகத்தை ‘மெதுவாய்,’ அல்லது எளிதில் சுமக்கக்கூடியதாய் ஆக்கும் மற்றொரு காரியமும் இருக்கிறது. “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு” என்று அவர் சொன்னபோது இரண்டு காரியங்களில் ஒன்றை அவர் அர்த்தப்படுத்தியிருந்திருக்கக்கூடும். இரண்டு மிருகங்கள் ஒன்றாய் சேர்ந்திழுக்கும் இரட்டை நுகத்தை அவர் தன் மனதில் கொண்டிருந்தாரென்றால், அவருடன் சேர்ந்து ஒரே நுகத்தின்கீழ் வரும்படி நம்மையும் அழைத்தார் என்பதாகும். இயேசு நம் பக்கத்தில் இருந்து நம்மோடு சேர்ந்து சுமையை இழுப்பது—அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாயிருக்கும்! மறுபட்சத்தில், ஒரு சாதாரண தொழிலாளியால் பயன்படுத்தப்பட்ட நுகத்தடியை இயேசு மனதில் எண்ணியிருந்தார் என்றால், நாம் சுமக்கவேண்டிய எந்தச் சுமையையும் இலகுவானதாயும் சுமக்கக்கூடியதாயும் நாம் ஆக்கிக்கொள்வதற்குத் தேவையான வழிவகையை நமக்கு அளிக்கிறார் எனப் பொருள்படும். எதுவாயிருப்பினும், அவருடைய நுகம் மெய்யான இளைப்பாறுதலைத் தரும், ஏனெனில் அவர் உறுதியளிப்பதாவது: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்.”
7, 8. அழுத்தத்தின்கீழ் இருப்பதாக உணருகையில் சிலர் என்ன தவறைச் செய்கின்றனர்?
7 நாம் சுமந்துகொண்டிருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை சகிக்கமுடியாததாய் ஆகிவருவதாகவும், நாம் தகர்ந்துவிடும் நிலைக்கு அழுத்தப்படுகிறோம் என்றும் உணர்ந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? அனுதின வாழ்க்கையின் கவலைகளே உண்மையில் அழுத்திக்கொண்டிருக்கையில், இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருக்கும் நுகம் அளவுக்கு அதிகமாக கடினமாய் அல்லது வற்புறுத்துவதாய் இருக்கிறதென சிலர் தவறாக உணரக்கூடும். அத்தகைய நிலையில் உள்ள சில நபர்கள், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருவதை அல்லது ஊழியத்தில் பங்குகொள்வதை நிறுத்திவிட்டால் சிறிது நிம்மதி கிடைக்கும் என எண்ணி நிறுத்திவிடுகின்றனர். ஆனால், இது ஒரு வினைமையான தவறாகும்.
8 இயேசு நமக்கு அளிக்கும் நுகம் ‘மெதுவாய்’ உள்ளதென்பதை நாம் மதித்துணருகிறோம். அதை நாம் சரியாகப் பொருத்திக்கொள்ளவில்லை என்றால் அது தேய்த்து புண்ணாக்கக்கூடும். அத்தகைய சந்தர்ப்பத்தில் நம் தோள்களின்மீதுள்ள நுகத்தை நெருங்கப் பார்வையிடவேண்டும். ஏதோ ஒரு காரணத்தால் நுகம் பழுதடைந்திருந்தால் அல்லது சரியாகப் பொருத்தப்படாதிருந்தால், அதை இழுக்க நாம் அதிக முயற்சி செய்யவேண்டியதுமட்டுமன்றி கொஞ்சம் வேதனையையும் அது விளைவிக்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவராஜ்ய வேலைகள் நமக்கு பாரமுள்ளவையாகத் தோன்றினால், நாம் அவற்றை சரியான வழியில் கையாண்டுவருகிறோமா என்பதைச் சோதித்துப் பார்க்கவேண்டும். நாம் செய்துவருபவற்றை எந்த நோக்கத்தோடு செய்கிறோம்? நாம் கூட்டங்களுக்குச் செல்கையில் போதிய தயாரிப்புடன் போகிறோமா? வெளி ஊழியத்தில் ஈடுபடுகையில் சரீரப் பிரகாரமாகவும் மனதின் பிரகாரமாகவும் தயாராய் இருக்கிறோமா? சபையிலுள்ளவர்களோடு நெருங்கிய நல்ல உறவை அனுபவிக்கிறோமா? எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவா தேவனோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் நம்முடைய தனிப்பட்ட உறவு எப்படி இருக்கிறது?
9. கிறிஸ்தவ நுகம் ஏன் தாங்கமுடியாத பாரமாக ஒருபோதும் இருக்கக்கூடாது?
9 இயேசு நமக்கு அளிக்கும் நுகத்தை முழு இருதயத்தோடு ஏற்றுக்கொண்டு அதைச் சரியான விதத்தில் சுமக்க கற்றுக்கொண்டால், ஒருபோதும் அது தாங்க முடியாத பாரமாகத் தோன்றுவதற்கு எவ்விதக் காரணமுமில்லை. உண்மையில், அந்தச் சூழ்நிலையை—ஒரே நுகத்தின்கீழ் இயேசு நம்மோடு இருப்பதை—நம் மனக்கண்முன் தோற்றுவித்துப்பார்த்தால், பாரத்தின் பெருமளவை யார் சுமந்துகொண்டிருப்பது என்பதைக் காண்பது நமக்கு கடினமாயிராது. ஒரு நடைவண்டியை பெற்றோரில் ஒருவர் தள்ளிக்கொண்டிருக்க அதன்மீது கைவைத்தவாறு நடந்துவரும் குழந்தை, தான் அதைத் தள்ளுவதாக நினைத்துக்கொள்வதைப்போல் இது இருக்கிறது. யெகோவா தேவன் ஓர் அன்பான தகப்பனைப்போன்று நம் குறைகளையும் பலவீனங்களையும் அறிந்திருக்கிறார், நம் தேவைகளுக்கு இயேசு கிறிஸ்துவின்மூலம் பிரதிபலிக்கிறார். “தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்,” என்று பவுல் சொன்னார்.—பிலிப்பியர் 4:19; ஏசாயா 65:24-ஐ ஒப்பிடுக.
10. சீஷனாய் இருப்பதை முக்கியமானதாய்க் கருதும் நபரின் அனுபவம் எப்படியிருந்திருக்கிறது?
10 இதை ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களில் அநேகர் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் மதித்துணர்ந்திருக்கின்றனர். உதாரணமாக, ஜென்னி என்ற சகோதரி அதிகக் கடினமான முழுநேர உலகப்பிரகாரமான வேலை ஒன்றைச் செய்துகொண்டு ஒவ்வொரு மாதமும் துணைப்பயனியர் ஊழியம் செய்வது தன்னை பெரும் அழுத்தத்துக்குட்படுத்துவதாகக் காண்கிறார்கள். இருப்பினும், உணர்ச்சி சம்பந்தப்பட்ட சமநிலையைக் காத்துக்கொள்ள பயனியர் வேலை உண்மையில் தனக்கு உதவுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதிக வேலையால் நிரம்பியுள்ள அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு மிக்க சந்தோஷத்தைக் கொண்டு வருவது பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவுவதும் அவர்கள் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை செய்வதைப் பார்ப்பதுமே. “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்,” என்ற நீதிமொழியின் வார்த்தைகளை முழு இருதயத்தோடு அவர்கள் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.—நீதிமொழிகள் 10:22.
இலேசான சுமை
11, 12. ‘என் சுமை இலேசானதாய் இருக்கிறது’ என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
11 ‘மெதுவாய்’ உள்ள ஒரு நுகத்தை வாக்களிப்பது மட்டுமன்றி, இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்: “என் சுமை இலகுவாயும் [“இலேசானதாயும், NW”] இருக்கிறது.” ‘மெதுவாய்’ உள்ள ஒரு நுகம் ஏற்கெனவே வேலையை எளிதாக்குகிறது; சுமையும் இலகுவாக அல்லது இலேசானதாக ஆக்கப்படும்போது வேலை செய்வது உண்மையிலேயே இன்பமாயிருக்கும். ஆயினும், அக்கூற்றைச் சொல்கையில் இயேசு எதை மனதில் கொண்டிருந்தார்?
12 ஒரு விவசாயி தன் விலங்குகளை ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாற்ற, உதாரணமாக நிலத்தை உழுவதிலிருந்து வண்டியிழுப்பதற்கு மாற்ற, என்ன செய்வார் என்பதைச் சிந்தியுங்கள். அவர் முதலாவது கலப்பையை அகற்றி பிறகு வண்டியை இணைப்பார். கலப்பையையும் வண்டியையும் ஒருசேர அந்த விலங்குகளின்மீது இணைப்பது புத்தியற்ற செயலாக அவருக்குத் தோன்றும். அவ்விதமே, மக்கள் தாங்கள் ஏற்கெனவே சுமந்துகொண்டிருந்த சுமைகளுக்குமேல் அவருடைய சுமையை ஏற்றிக்கொள்ளும்படி இயேசு சொல்லவில்லை. “எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது,” என்று தம் சீஷர்களிடம் அவர் சொல்லியிருந்தார். (லூக்கா 16:13) இவ்வாறு, தெரிவு செய்யும் வாய்ப்பை இயேசு மக்களுக்கு அளித்தார். அவர்களிடம் இருந்த கனத்த சுமையை தொடர்ந்து சுமந்துகொண்டிருக்க அவர்களுக்கு விருப்பமா, அல்லது அதைக் கீழே இறக்கிவிட்டு அவர் அளித்ததை ஏற்றுக்கொள்ள விருப்பமா? இயேசு அன்பாக அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டும்வகையில் சொன்னார்: ‘என் சுமை இலேசானதாய் இருக்கிறது.’
13. இயேசுவின் நாட்களிலிருந்த மக்கள் எத்தகைய சுமையைச் சுமந்துகொண்டிருந்தனர், அதன் விளைவென்ன?
13 இயேசுவின் நாட்களில், ஒடுக்கியாண்ட ரோம ஆட்சியாளர்களாலும் மட்டுமீறி விதிமுறைகளைப் பின்பற்றிய மாய்மாலமுள்ள மதத் தலைவர்களாலும் சுமத்தப்பட்ட கனத்த சுமையின்கீழ் மக்கள் திணறிக்கொண்டிருந்தனர். (மத்தேயு 23:23) ரோமர்களின் சுமையை நீக்கிவிட சில ஆட்கள் நிலைமையை மாற்ற முயற்சித்தனர். அத்தகையோர் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு இறுதியில் துக்ககரமான முடிவுக்கு வந்தனர். (அப்போஸ்தலர் 5:36, 37) மற்றவர்கள் பொருளாதார நாட்டங்களில் முற்றிலும் மூழ்கி தங்கள் நிலைமையை முன்னேற்றுவித்துக்கொள்வதில் முனைந்திருந்தனர். (மத்தேயு 19:21, 22; லூக்கா 14:18-20) இயேசு தம் சீஷர்களாக ஆவதன் மூலம் அவர்கள் விடுதலை அடைவதற்கு வழியைக் காட்டியபோது அதை ஏற்றுக்கொள்ள எல்லோரும் தயாராயில்லை. தாங்கள் சுமந்துகொண்டிருந்த சுமை பாரமானதாய் இருந்தபோதிலும் அதைக் கீழே போட்டுவிட்டு இயேசுவின் சுமையை ஏற்றிக்கொள்ள அவர்கள் தயங்கினர். (லூக்கா 9:59-62) எத்தகைய வருந்தத்தக்க தவறு!
14. வாழ்க்கையின் கவலைகளும் பொருளாசையும் எவ்விதம் நம்மை பாரமடையச் செய்யக்கூடும்?
14 நாம் கவனமாக இல்லையென்றால், நாமும் இன்று அதே தவறைச் செய்யக்கூடும். இயேசுவின் சீஷர்களாக ஆவது உலகத்திலுள்ள மக்கள் வைத்துள்ள அதே இலக்குகளையும் மதிப்புகளையும் அடைய நாடுவதிலிருந்து நம்மை விடுவிக்கிறது. அனுதின வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற நாம் இப்போதும் கடினமாய் வேலை செய்யவேண்டியதிருந்தாலும், நாம் இக்காரியங்களை நம் வாழ்க்கையின் மையமாக்கிக் கொள்வதில்லை. ஆயினும், வாழ்க்கையின் கவலைகளும் பொருளாதார சொகுசுகளின் கவர்ச்சியும் நம்மீது ஒரு இறுக்கமான பிடிப்பை கொள்ளக்கூடும். நாம் அனுமதித்தால், அத்தகைய ஆசைகள் நாம் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ள சத்தியத்தை நெருக்கிப் போடவும் கூடும். (மத்தேயு 13:22) அந்த ஆசைகளை பூர்த்திசெய்வதன்பேரிலேயே நம் மனம் அந்தளவு ஊன்றிவிடுவதால் நம் கிறிஸ்தவ உத்தரவாதங்கள் நாம் முடிந்தளவு சீக்கிரமாக செய்து தொலைத்துவிட்டு விடுபட விரும்பும் களைப்பூட்டும் கடமைகளாக ஆகிவிடுகின்றன. நாம் கடவுளுக்குச் செய்யும் சேவை அத்தகைய மனநிலையுடன் செய்யப்பட்டால், நிச்சயமாக அதிலிருந்து எந்த இளைப்பாறுதலையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
15. பொருளாசையைக்குறித்து இயேசு என்ன எச்சரிக்கையைக் கொடுத்தார்?
15 திருப்தியுள்ள வாழ்க்கை நம் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்வதன்மூலம் அல்ல, வாழ்க்கையிலுள்ள அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்வதன்மூலமே வருகிறது என்று இயேசு குறிப்பிட்டுக் காட்டினார். “என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்,” என்று அவர் புத்திமதி கூறினார். “ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?” பிறகு வானத்திலுள்ள பறவைகளின்மேல் கவனத்தைத் திருப்பி அவர் சொன்னார்: “அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்.” வெளிகளிலுள்ள மலர்களைக் குறிப்பிட்டு, அவர் கூறினார்: “அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 6:25-29.
16. பொருளாதார நாட்டங்களின் விளைவுகளைக் குறித்து அனுபவம் என்ன காட்டியிருக்கிறது?
16 கண்கூடாகத் தெரியும் இந்த எளிய உதாரணங்களிலிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்ளக்கூடுமா? தன் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள எந்தளவுக்கு ஒரு நபர் கடினமாய் முயற்சிக்கிறாரோ அந்தளவுக்கு அவர் உலக நாட்டங்களில் சிக்குண்டு அவர் தோள்களின்மீதுள்ள பாரம் அதிகமாகிவிடுகிறது என்பது பொதுவான அனுபவம். பொருளாதார வெற்றிகளை தாங்கள் அடைவதற்கென, சிதறுண்ட குடும்பங்களையும், முறிந்த மணவாழ்க்கையையும், சீரழிந்த ஆரோக்கியத்தையும், இன்னும்பிற சேதங்களையும் அனுபவித்த தொழில் முனைவர்களால் இந்த உலகம் நிறைந்துள்ளது. (லூக்கா 9:25; 1 தீமோத்தேயு 6:9, 10) நோபெல் பரிசுபெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார்: “உடமைகள், பார்வைக்குத் தோன்றும் வெற்றி, பிரசித்தி, சொகுசு—இவை எனக்கு எப்போதும் வெறுக்கத்தக்கவையாய் இருந்திருக்கின்றன. எளிய, தற்பெருமையற்ற வாழ்க்கையே அனைவருக்கும் மிகச் சிறந்தது என நான் நினைக்கிறேன்.” இவ்வார்த்தைகள் அப்போஸ்தலனாகிய பவுலின் பின்வரும் எளிய புத்திமதியை வெறுமனே எதிரொலிக்கின்றன: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.”—1 தீமோத்தேயு 6:6.
17. எப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை பைபிள் பரிந்துரை செய்கிறது?
17 மற்றொரு முக்கிய அம்சம் இருக்கிறது, அதை நாம் கவனியாமல் விடக்கூடாது. “எளிய, தற்பெருமையற்ற வாழ்க்கை” பல அனுகூலங்களைக் கொண்டிருப்பினும், அது மட்டுமே திருப்தியைக் கொடுத்துவிடுவதில்லை. அநேகர் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தால் எளிய வாழ்க்கைப்பாணியை கடைப்பிடிக்கின்றனர், ஆனால் அவர்கள் எவ்விதத்திலும் திருப்தியாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ இல்லையே. பொருளாதார நன்மைகளை அனுபவியாமல் நிராகரித்துவிடவும் ஒரு துறவியைப்போல வாழவும் பைபிள் நம்மைத் தூண்டுவதில்லை. போதுமென்கிற மனதிருப்தியின் மீதல்ல, தேவபக்தியின் மீதே அழுத்தம் ஊன்றப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்று சேர்க்கும்போதே “மிகுந்த ஆதாயம்” உருவாக வழியுண்டாகிறது. எந்த ஆதாயம்? அதே கடிதத்தில் பவுல் தொடர்ந்து குறிப்பிடுகையில், ‘நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமல் . . . தேவன்மேல் நம்பிக்கை வைக்கும்’ நபர்கள் “நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக” வைக்கிறார்கள் என்று சொன்னார்.—1 தீமோத்தேயு 6:17-19.
18. (அ) மெய்யான இளைப்பாறுதலை ஒருவர் எவ்விதம் கண்டடையலாம்? (ஆ) நாம் செய்யவேண்டியிருக்கும் மாற்றங்களை எவ்விதம் நோக்கவேண்டும்?
18 நாம் சுமந்துகொண்டிருக்கும் பாரமான சுமையை இறக்கிவிட்டு இயேசு அளிக்கும் இலேசான சுமையை ஏற்றிக்கொள்ள கற்றுக்கொண்டால் நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ராஜ்ய சேவையில் மேலும் முழுமையான அளவில் பங்குகொள்வதற்கென தங்கள் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்திருப்பவர்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த வாழ்க்கைக்கு வழியை கண்டடைந்திருக்கின்றனர். அச்செயலைச் செய்ய ஒருவருக்கு விசுவாசமும் தைரியமும் நிச்சயமாகவே தேவை, அப்பாதையில் தடைகள் இருக்கக்கூடும். ஆனால், “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்,” என்று பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (பிரசங்கி 11:4) நாம் மனதில் தீர்மானித்துவிட்ட பிறகு பெரும்பாலான காரியங்கள் செய்வதற்கு உண்மையில் அவ்வளவு கடினமாயிருப்பதில்லை. நாம் மனதில் தீர்மானித்துக்கொள்வதே கடினமாய் இருப்பதாகத் தோன்றுகிறது. இக்கருத்துடன் நாம் போராடி அல்லது அதை எதிர்த்துநின்று நமக்கே சோர்வூட்டிக்கொள்ளக்கூடும். ஆனால் நம் மனதை திடப்படுத்திக்கொண்டு அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டால், அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக நமக்கு நாளடைவில் நிரூபிக்கிறது என்பதைக் கண்டு வியப்படைவோம். “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்,” என்று சங்கீதக்காரன் ஊக்கமூட்டினார்.—சங்கீதம் 34:8; 1 பேதுரு 1:13.
“உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்”
19. (அ) உலக நிலைமைகள் தொடர்ந்து சீரழிகையில் நாம் எதை எதிர்பார்க்கலாம்? (ஆ) இயேசுவின் நுகத்தின்கீழ் இருக்கையில் எது நமக்கு உறுதியளிக்கப்படுகிறது?
19 அப்போஸ்தலனாகிய பவுல் முதல் நூற்றாண்டிலிருந்த சீஷர்களுக்கு “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று” நினைப்பூட்டினார். (அப்போஸ்தலர் 14:22) இன்றும் அது உண்மையாயிருக்கிறது. உலக நிலைமைகள் தொடர்ந்து சீரழிகையில், நீதியாயும் தேவபக்தியாயும் வாழத் தீர்மானமாயிருக்கும் அனைவர் மீதும் வரும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும். (2 தீமோத்தேயு 3:12; வெளிப்படுத்துதல் 13:16, 17) ஆயினும், பவுல் பின்வருமாறு சொன்னபோது உணர்ந்த விதமாக நாமும் உணருகிறோம்: “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.” இதற்கு காரணம், நம்முடைய இயல்புக்கும் மேற்பட்ட பலத்தைக் கொடுப்பதற்காக இயேசு கிறிஸ்துவை நாம் சார்ந்திருக்க முடிவதே ஆகும். (2 கொரிந்தியர் 4:7-9) அவருக்கு சீஷர்களாக இருக்கும் நுகத்தை முழு இருதயத்தோடு ஏற்றுக்கொள்வதன் மூலம், “உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்,” என்ற இயேசுவின் வாக்குறுதி நிறைவேறுவதை நாம் அனுபவிப்போம்.—மத்தேயு 11:29.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ இயேசு அளித்த மெதுவான நுகம் எது?
◻ நம் நுகம் ஒரு பாரமாக ஆகிவருவதாக நாம் உணர்ந்தால் என்ன செய்யவேண்டும்?
◻ ‘என் சுமை இலேசானதாய் இருக்கிறது’ என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
◻ நம் சுமை எப்போதும் இலேசாக இருக்கும்படி நாம் எப்படி நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்?