‘என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்’
1 தம்முடைய நுகத்தின்கீழ் வருவதன்மூலம் புத்துணர்ச்சி பெறும்படி இயேசு அன்பாக அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால் அழுத்தங்களும் கவலைகளும் நிறைந்திருக்கிற இந்த உலகில் நாம் உண்மையான ஆறுதலைப் பெற்றிருக்கிறோம். (மத். 11:29, 30; NW) இயேசுவின் சீஷர்களாக அவருடைய நுகத்தின்கீழ் வருவது சவால்மிக்க, அதேசமயம் புத்துணர்ச்சி அளிக்கும் வேலையில் ஈடுபடுவதை உட்படுத்துகிறது. இந்த வேலை ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதை உள்ளடக்குகிறது. அதோடு, நம்மோடுகூட மற்றவர்களும் சேர்ந்து இயேசுவின் மெதுவான நுகத்தின்கீழ் புத்துணர்ச்சி பெறுவதற்கு உதவுவதையும் உள்ளடக்குகிறது.—மத். 24:14; 28:19, 20.
2 ஊழியம் தரும் புத்துணர்ச்சி: தம்மைப் பின்பற்றினவர்கள் ஏற்கெனவே சுமந்துகொண்டிருந்த சுமையோடு தாம் கொடுக்கப்போகும் சுமையையும் சேர்த்து சுமக்கும்படி இயேசு சொல்லவில்லை. தங்களுடைய பாரமான சுமைக்குப் பதிலாக தம்முடைய இலகுவான சுமையை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இனிமேலும் நாம் இந்தப் பொல்லாத உலகின் கவலைகளில் மூழ்கி எதிர்கால நம்பிக்கையின்றி தவிப்பதுமில்லை, நிலையற்ற செல்வத்திற்காக பாடுபடுவதுமில்லை. (லூக். 21:34; 1 தீ. 6:17) நம்முடைய அன்றாட தேவைகளைப் பெற பம்பரமாய் சுழன்று வேலை செய்தாலும் நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய வணக்கத்திற்கே முதலிடத்தைக் கொடுக்கிறோம். (மத். 6:33) அதிமுக்கியமான காரியங்களைப் பற்றிய சரியான கண்ணோட்டம் நமக்குத் தொடர்ந்து இருந்தால் நாம் எப்போதுமே ஊழியத்தைப் பாரமானதாகக் கருதாமல் புத்துணர்ச்சி அளிப்பதாகக் கருதுவோம்.—பிலி. 1:10, NW.
3 இயல்பாகவே, நம் மனதுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பேசும்போது நாம் சந்தோஷப்படுகிறோம். (லூக். 6:45) யெகோவாவையும் அவர் வாக்குறுதி அளித்திருக்கும் ராஜ்ய ஆசீர்வாதங்களையும் பற்றிப் பேசுவது கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பிடித்தமான விஷயம். எனவேதான், ஊழியத்தில் ஈடுபடுகையில் நம் தினசரி கவலைகளை மறந்து “நற்காரியங்களைச் சுவிசேஷமாய்” அறிவிப்பது நமக்கு அதிக புத்துணர்ச்சி அளிக்கிறது. (ரோ. 10:15) உண்மைதான், ஒரு காரியத்தை நாம் செய்ய செய்ய அதில் நாம் திறம்பட்டவர்களாய் மிளிருவதோடு அதிக சந்தோஷத்தையும் காண்கிறோம். ஆகவே, ஊழியத்தில் இன்னும் அதிக நேரத்தை செலவிட முடிந்தால் அதிக புத்துணர்ச்சியைப் பெறுவோம். நம்முடைய செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது நாம் எவ்வளவாய் புத்துணர்ச்சி அடைகிறோம்! (அப். 15:3) யெகோவா நாம் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து சந்தோஷப்படுகிறார் என்பதையும் அவருடைய ஆசீர்வாதத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதையும் மனதில் வைத்தால், ஊழியத்தில் மக்கள் நம் செய்திக்கு ஆர்வம் காட்டாவிட்டாலும் நம்மை எதிர்த்தாலும் நாம் ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சி பெறுவோம்.—அப். 5:41; 1 கொ. 3:9.
4 இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதன்மூலம் அவரோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சாட்சியாக சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். (ஏசா. 43:10; வெளி. 1:5) இதைவிடவும் அதிக புத்துணர்ச்சியை வேறு எதுவுமே அளிக்க முடியாது.