“முறிந்த ஆவி” உடையோருக்கு ஆறுதல்
இன்று சாத்தானின் உலகம் ‘எல்லா ஒழுக்க உணர்வையும்’ தாண்டிச் சென்றுவிட்டிருக்கிறது. (எபேசியர் 4:19; 1 யோவான் 5:19) விபச்சாரமும் வேசித்தனமும் பெருவாரியாக பரவி வருகிறது. அநேக தேசங்களில் 50 சதவீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகின்றன. ஒத்த பாலினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பாலின வன்முறை—கற்பழிப்பு—செய்தித்தாள்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. ஆபாச இலக்கியம் 100 கோடி டாலர் ஈட்டும் பெரும் வியாபாரமாக உள்ளது.—ரோமர் 1:26, 27.
அதிக வெறுக்கத்தக்க இயல்புக்கு முரணான முறையற்ற நடத்தைகளில் ஒன்று, அப்பாவிப் பிள்ளைகளைப் பாலின துர்ப்பிரயோகம் செய்வதுதான். சாத்தானிய உலகின் ஞானத்தைப் போன்று பிள்ளைகளைப் பாலின துர்ப்பிரயோகம் செய்வது ‘மிருகத்தனமானதும், பேய்த்தனமானதுமாய்’ உள்ளது. (யாக்கோபு 3:15) ஐக்கிய மாகாணங்களில் மட்டும், டைம் பத்திரிகை சொல்கிறது, “உண்மையென்று நிரூபித்துக் காட்டும் 4,00,000-க்கும் மேற்பட்ட பாலின தாக்குதல்கள் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் அதிகாரிகளிடம் பதிவு செய்கின்றனர்.” இந்த துர்ப்பிரயோகத்துக்கு ஆளாகுபவர்கள் பெரியவர்களாக ஆகும்போது, அநேகர் தொடர்ந்து வேதனை தரும் காயங்களை சுமந்துகொண்டே இருக்கின்றனர், அந்தக் காயங்கள் உண்மையானவை! பைபிள் சொல்கிறது: “மனுஷனுடைய ஆவி [மனச்சாய்வு, உள்ளான உணர்ச்சிகளும் எண்ணங்களும்] அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த [புண்பட்ட, வேதனையான] ஆவி யாரால் தாங்கக்கூடும்?”—நீதிமொழிகள் 18:14.
கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி, ‘இருதயம் நொறுங்குண்டவர்கள்’ மற்றும் ‘ஒடுங்கின ஆவியுடையவர்கள்’ உட்பட, எல்லாவிதமான ஆட்களுக்கும் கவர்ச்சியூட்டுவதாய் உள்ளது. (ஏசாயா 61:1-4) உணர்ச்சி சம்பந்தமான வேதனையில் இருக்கும் அநேகர் இந்த அழைப்புக்கு பிரதிபலிப்பது ஆச்சரியமாயில்லை: “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) இப்படிப்பட்ட நபர்களுக்கு கிறிஸ்தவ சபை ஓர் ஆறுதலளிக்கும் இடமாக இருக்கக்கூடும். விரைவில் வேதனைகள் கடந்தகாலக் காரியமாகிவிட்டிருக்கும் என்பதை அறிந்துகொள்வதில் அவர்கள் சந்தோஷப்படுகின்றனர். (ஏசாயா 65:17) ஆனால் அந்த சமயம் வரும்வரை, அவர்கள் ‘ஆறுதலளிக்கப்பட வேண்டும்,’ அவர்களுடைய காயங்கள் ‘கட்டப்பட வேண்டும்.’ பவுல் பொருத்தமாகவே கிறிஸ்தவர்களுக்கு புத்திமதி கொடுத்தார்: “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:14.
“அடக்கி ஒடுக்கிவைத்த நினைவுகள்”
சமீப ஆண்டுகளில் சிலர் பல காரணங்களால் ‘இருதயம் நொறுங்குண்டவர்களாய்’ ஆகியிருக்கின்றனர், அதை மற்றவர்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாய்க் காண்கின்றனர். அவர்கள் வயதில் பெரியவர்கள், “அடக்கி ஒடுக்கிவைத்த நினைவுகள்” என்று விவரிக்கப்படும் விஷயங்களின் அடிப்படையில், பிள்ளைகளாக இருக்கையில் பாலின துர்ப்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்று சொல்கின்றனர்.a திடீரென்று எதிர்பாராத சமயத்தில் கடந்தகால அனுபவத்தின் தெளிவான நினைவுகளும், அவர்கள் இளைஞர்களாய் இருந்தபோது வயதில் பெரியவர் ஒருவர் (அல்லது பெரியவர்கள்) அவர்களை தகாதவிதத்தில் பயன்படுத்திய “நினைவுகள்” அவர்களுக்கு திரும்பவும் வரும்வரை, சிலர் பாலின தொந்தரவுகளை அனுபவித்ததாக நினைவுகளைக் கொண்டிருப்பதில்லை. கிறிஸ்தவ சபையில் இருக்கும் எவராவது அப்படிப்பட்ட அமைதிகுலைக்கும் எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனரா? ஆம், சில தேசங்களில் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் இவர்கள் கடுந்துன்பம், கோபம், குற்ற உணர்வு, வெட்கம் அல்லது தனிமை போன்றவற்றை அனுபவிக்கலாம். தாவீதைப் போன்று அவர்கள் கடவுளிடமிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதைப் போல் உணர்ந்து இவ்வாறு கூக்குரலிடலாம்: “கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?”—சங்கீதம் 10:1.
இப்படிப்பட்ட “நினைவுகளின்” அநேக அம்சங்களை மனநல நிபுணர்கள் முழுவதுமாக புரிந்துகொள்வதில்லை. இருப்பினும், இப்படிப்பட்ட “நினைவுகள்” ஒப்புக்கொடுத்திருக்கும் கிறிஸ்தவர்களின் ஆவிக்குரியத்தன்மையை பாதிக்கக்கூடும். ஆகையால் அவற்றைக் கையாளுவதற்கு வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்ள நாம் நம்பிக்கையோடே கடவுளுடைய வார்த்தையைப் பார்ப்போம். பைபிள் ‘எல்லாக் காரியங்களிலும் பகுத்துணர்வை’ அளிக்கிறது. (2 தீமோத்தேயு 2:7; 3:16, 17) அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் யெகோவாவில் விசுவாசம் வைப்பதற்கும்கூட உதவிசெய்கிறது, அவர் ‘இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர் எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.’—2 கொரிந்தியர் 1:3, 4.
அது உண்மையிலேயே நடந்ததா?
இப்படிப்பட்ட “நினைவுகள்” என்ன என்பதைக் குறித்தும் உண்மையில் நிகழ்ந்த காரியங்களை அவை எந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதைக் குறித்தும் உலகில் மிகுதியான கருத்து வேறுபாடுகள் உள்ளன. யெகோவாவின் சாட்சிகள் ‘உலகத்தின் பாகமாயில்லை,’ ஆகையால் இந்தக் கருத்து வேறுபாட்டில் அவர்கள் எந்தப் பங்கும் எடுத்துக்கொள்வதில்லை. (யோவான் 17:16) பிரசுரிக்கப்பட்டிருக்கும் அறிக்கைகளின்படி, “நினைவுகள்” சில சமயங்களில் திருத்தமானவையாய் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஃபிராங்க் ஃபிட்ஸ்பாட்ரிக் என்ற காப்புறுதி சரிசெய்பவர், ஒரு குறிப்பிட்ட பாதிரி பாலின தொல்லை கொடுத்ததை “நினைவுக்குக்” கொண்டுவந்தபோது, இன்னும் கூடுதலாக சுமார் நூறு பேர் தாங்களும் அதே பாதிரியால் தவறாக பயன்படுத்தப்பட்டதாக உரிமை பாராட்டினர். அந்த பாதிரி துர்ப்பிரயோகம் செய்ததாக ஒப்புக்கொண்டார் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்படி இருப்பினும், அநேக தனிப்பட்ட நபர்கள் தங்கள் “நினைவுகளை” முறைப்படி உறுதிப்படுத்த இயலாதவர்களாய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதத்தில் வேதனைப்பட்ட சிலர் ஒரு குறிப்பிட்ட நபர் துர்ப்பிரயோகம் செய்ததைப் பற்றி தெளிவான நினைவுகளை அல்லது அந்த துர்ப்பிரயோகம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்யப்பட்டதை மீண்டும் தெளிவாக நினைவுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால், பின்னர், இந்த “நினைவில்” கொண்டிருந்த விவரங்கள் உண்மையானவையாய் இருக்காது என்பதை நம்பத்தக்க முரண்பாடான அத்தாட்சி தெளிவுபடுத்தியது.
ஒரு புகலிடத்தை ஏற்பாடு செய்தல்
இருப்பினும், அப்படிப்பட்ட “நினைவுகளால்” “முறிந்த ஆவி”யை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் எப்படி அளிக்கப்படலாம்? அன்புள்ள சமாரியனைப் பற்றிய இயேசுவின் உவமையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு மனிதனை கள்ளர்கள் தாக்கி, அடித்து, அவனுடைய உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டனர். சமாரியன் அந்த வழியே வந்தபோது, காயமடைந்திருந்த மனிதனைப் பார்த்து அவன் இரக்கப்பட்டான். அவன் என்ன செய்தான்? அவன் அடிபட்டதைப் பற்றி எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ள அவன் வற்புறுத்தினானா? அல்லது அந்த சமாரியன் கள்ளர்களைப் பற்றிய விவரிப்பைக் கேட்டு உடனடியாக அவர்களைத் துரத்திக்கொண்டு சென்றானா? இல்லை. அந்த மனிதன் காயமடைந்திருந்தான்! ஆகையால் அந்த சமாரியன் அவனுடைய காயங்களைக் கட்டி, அவன் சுகமடைவதற்காக அன்போடு, அருகில் இருந்த பாதுகாப்பான ஒரு சத்திரத்துக்கு அவனைக் கொண்டுபோய் விட்டான்.—லூக்கா 10:30-37.
மறுப்புக்கு இடமின்றி, உடல் சம்பந்தமான காயங்களுக்கும் பிள்ளைப்பருவத்தில் உண்மையாக நடந்த பாலின துர்ப்பிரயோகத்தினால் ஏற்பட்ட “முறிந்த ஆவிக்கும்” ஒரு வித்தியாசம் உள்ளது. ஆனால் அவை இரண்டுமே பெரும் துன்பத்தை உண்டாக்குகின்றன. எனவே, காயப்பட்டிருந்த யூதனுக்கு சமாரியன் செய்த உதவி, பெரும் துன்பத்தில் இருக்கும் ஒரு உடன் கிறிஸ்தவனுக்கு உதவ என்ன செய்யப்படலாம் என்பதைக் காண்பிக்கிறது. முதலாவது அவருக்கு அன்பான ஆறுதலும், அவர் மீண்டும் முன்னிலையை அடைவதற்கு அவருக்கு உதவுவதும் ஆகும்.
விசுவாசமுள்ளவராயிருந்த யோபுவை சாத்தான் துன்பப்படுத்தினான், உணர்ச்சி சம்பந்தமான அல்லது உடல் சம்பந்தமான வேதனை அவருடைய உத்தமத்தன்மையை முறித்துவிடும் என்ற வெளிப்படையான நம்பிக்கையோடு இருந்தான். (யோபு 1:11; 2:5) அதுமுதற்கொண்டு சாத்தான் பெரும்பாலும் துன்பத்தை பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறான்—அவன் அதை நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ—கடவுளுடைய ஊழியர்களின் விசுவாசத்தை பலவீனப்படுத்துவதற்கு அவன் அதை செய்திருக்கிறான். (2 கொரிந்தியர் 12:7-9-ஐ ஒப்பிடுக.) கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பலவீனப்படுத்துவதற்காக, பிள்ளைகளைத் துர்ப்பிரயோகம் செய்வது, இதை அனுபவித்த (அல்லது அதை அனுபவித்த “நினைவுகளால்” கஷ்டப்படுவது) அநேக பெரியவர்களின் “ஒடுங்கின ஆவி” போன்றவற்றை சாத்தான் பயன்படுத்துகிறான் என்பதை நாம் சந்தேகிக்கலாமா? சாத்தான் தாக்கியபோது இயேசு இருந்தது போல, வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தபோதிலும் தன் உத்தமத்தன்மையை தைரியமாக விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஒரு கிறிஸ்தவர் இவ்வாறு சொல்கிறார்: “அப்பாலே போ, சாத்தானே!”—மத்தேயு 4:10.
ஆவிக்குரியப்பிரகாரமாய் பலமாய் நிலைத்திருங்கள்
பிள்ளை துர்ப்பிரயோகத்தினால் ஏற்பட்டிருக்கும் ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி சம்பந்தமான காயங்களைக் கையாளுவதற்கு உதவிசெய்ய “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் தகவலைப் பிரசுரித்திருக்கின்றனர். (மத்தேயு 24:45-47, NW) துன்பப்படுபவர் “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை” தரித்துக்கொண்டு, ‘கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும்’ சார்ந்திருக்கும்போது உதவப்படுகிறார் என்று அனுபவம் காண்பிக்கிறது. (எபேசியர் 6:10-17) இந்த சர்வாயுதவர்க்கம் பைபிள் “சத்தியத்தை” உள்ளடக்குகிறது, அது சாத்தானைக் கடைசி சத்துருவாக வெளிப்படுத்திக் காண்பிக்கிறது, அவனும் அவனுடைய ஆதரவாளர்களும் கிரியை செய்துகொண்டிருக்கும் இருளை சிதறடிக்கிறது. (யோவான் 3:19) பின்னர் “நீதியென்னும் மார்க்கவசம்” உள்ளது. துயரப்பட்டுக் கொண்டிருப்பவர் நீதியான தராதரங்களைக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். உதாரணமாக, சிலர் தங்களுக்கே தீங்கு வருவித்துக்கொள்ள அல்லது ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபட பலமான தூண்டுதல்களைக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட தூண்டுதல்களை அவர்கள் ஒவ்வொரு முறை எதிர்த்து நிற்கும்போதும் அவர்கள் வெற்றியடைகின்றனர்!
சர்வாயுதவர்க்கம் ‘சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய’ செய்தியையும்கூட உள்ளடக்குகிறது. யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பேசுபவரையும் பலப்படுத்துகிறது, அதற்கு செவிகொடுத்துக் கேட்பவரையும் பலப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 4:16) நீங்கள் ‘முறிந்த ஆவியைக்’ கொண்டிருப்பதன் காரணமாக, நற்செய்தியை மற்றவர்களிடம் எடுத்துப் பேசுவதைக் கடினமாகக் காண்கிறீர்கள் என்றால், மற்றொரு கிறிஸ்தவ ஆணோ பெண்ணோ இந்த முக்கியமான வேலையைச் செய்கையில் அவரோடு செல்ல முயற்சி செய்யுங்கள். ‘விசுவாசமென்னும் கேடகத்தை’ மறந்துவிடாதீர்கள். யெகோவா உங்களை நேசிக்கிறார் என்றும் நீங்கள் இழந்துபோன யாவற்றையும் மீண்டும் அளிப்பார் என்றும் விசுவாசம் வையுங்கள். இயேசுவும்கூட உங்களை நேசிக்கிறார் என்று எந்தவித சந்தேகமுமின்றி நம்புங்கள், அவர் உங்களுக்காக மரித்ததன் மூலம் இதை நிரூபித்துக் காண்பித்தார். (யோவான் 3:16) யெகோவா தம் ஊழியர்களை கவனிப்பதில்லை என்று சாத்தான் எப்போதும் பொய்யாக உரிமைபாராட்டிக் கொண்டிருக்கிறான். அது அவனுடைய படுமோசமான கேடுவிளைவிக்கும் பொய்களில் ஒன்றாகும்.—யோவான் 8:44; ஒப்பிடுக: யோபு 4:1, 15-18; 42:10-15.
யெகோவா உங்கள் பேரில் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்று நம்புவதை இருதயத்தில் உள்ள வேதனை கடினமானதாக ஆக்குகிறதென்றால், அவர் உண்மையில் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்று உறுதியாய் நம்பும் மற்றவர்களோடு கூட்டுறவுகொள்வது உதவி செய்யும். (சங்கீதம் 119:107, 111; நீதிமொழிகள் 18:1; எபிரெயர் 10:23-25) சாத்தான் உங்களிடமிருந்து ஜீவன் என்னும் பரிசை, பறித்துக்கொள்ள அனுமதிக்காதீர்கள். ‘இரட்சணியமென்னும் தலைச்சீரா’ சர்வாயுதவர்க்கத்தின் ஒரு பாகம் என்பதை நினைவில் வையுங்கள்; அதே போன்றுதான் ‘ஆவியின் பட்டயமும்.’ பைபிள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது, அதை சாத்தான் தோல்வியடையச் செய்யமுடியாது. (2 தீமோத்தேயு 3:16; எபிரெயர் 4:12) அதனுடைய குணமாக்கும் வார்த்தைகள் உணர்ச்சி சம்பந்தப்பட்ட வேதனையைத் தணிக்கும்.—ஒப்பிடுக: சங்கீதம் 107:20; 2 கொரிந்தியர் 10:4, 5.
கடைசியாக, சகித்திருப்பதற்கு பெலத்தைப் பெற்றுக்கொள்ள தொடர்ந்து எப்போதும் ஜெபியுங்கள். (ரோமர் 12:12; எபேசியர் 6:18) கடும் உணர்ச்சி சம்பந்தமான வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த சமயத்தில் இருதயப்பூர்வமான ஜெபம் இயேசுவைத் தாங்கி ஆதரித்தது, அது உங்களுக்கும்கூட உதவக்கூடும். (லூக்கா 22:41-43) ஜெபம் செய்வது உங்களுக்கு கடினமானதாய் உள்ளதா? மற்றவர்கள் உங்களோடும் உங்களுக்காகவும் ஜெபிக்கும்படி கேளுங்கள். (கொலோசெயர் 1:5; யாக்கோபு 5:14) பரிசுத்த ஆவி உங்களுடைய ஜெபங்களை ஆதரிக்கும். (ரோமர் 8:26, 27-ஐ ஒப்பிடுக.) வலியுண்டாக்கும் சரீரப்பிரகாரமான வியாதியைப் போல் ஆழமான உணர்ச்சி சம்பந்தமான காயங்கள் இந்த ஒழுங்குமுறையில் முழுவதுமாக ஒருவேளை குணப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் யெகோவாவின் உதவியோடு நாம் சகித்துக்கொள்ளலாம், இயேசுவின் விஷயத்தில் இருந்ததைப் போல் சகிப்புத்தன்மை வெற்றியைக் கொண்டுவரும். (யோவான் 16:33) “ஜனங்களே, எக்காலத்திலும் [யெகோவாவை] நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.”—சங்கீதம் 62:8.
துர்ப்பிரயோகம் செய்தவராகச் சொல்லப்பட்டவரைப் பற்றியென்ன?
ஒரு பிள்ளையை உண்மையில் பாலின வகையிலே துர்ப்பிரயோகம் செய்யும் ஒரு நபர், கற்பழிப்பவனாயிருக்கிறான், அவன் அவ்விதமாகவே கருதப்பட வேண்டும். இந்த விதத்தில் துன்பத்துக்கு ஆளான ஒருவர் தன்னை துர்ப்பிரயோகம் செய்தவர் பேரில் குற்றம் சாட்டுவதற்கு உரிமை பெற்றிருக்கிறார். இருப்பினும், ஒரு குற்றச்சாட்டு துர்ப்பிரயோகத்தைப் பற்றிய “அடக்கி ஒடுக்கிவைத்த நினைவுகள்” பேரில் மட்டுமே சார்ந்திருந்தது என்றால், அதை அவசரமாக செய்யக்கூடாது. இந்த விஷயத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்போர் ஓரளவு உணர்ச்சி சம்பந்தமான திடநிலையை மீண்டும் பெறுவதே அதிமுக்கியமான காரியம். காலம் கடந்த பிறகு, அவர் அந்த “நினைவுகளை” மதிப்பிடுவதற்கு சிறந்த நிலையில் இருப்பார், அவற்றைக் குறித்து அவர் என்ன செய்ய விரும்பலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.
டானா என்பவரின் விஷயத்தை சிந்தித்துப் பாருங்கள். அறிக்கைகளின்படி, அவளுக்கு உணவுப் பழக்கத்தில் கோளாறு இருந்தது, ஆகையால் அவள் ஆலோசனை கூறுபவரிடம் சென்றாள்—சந்தேகத்துக்குரிய தகுதியுடைய ஒருவரிடம். விரைவில் அவள் தன் தகப்பன் முறைதகாப்புணர்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டி, அவரை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றாள். சட்ட வல்லுநர் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை, ஆகையால் அந்த தகப்பன் சிறைச்சாலைக்கு செல்லவில்லை, ஆனால் சட்டமன்ற நடவடிக்கைகளுக்காக அவர் $1,00,000 கொடுக்க வேண்டியிருந்தது. பின்னர், அவையெல்லாம் நடந்த பின்பு டானா தன் பெற்றோரிடம், அந்த துர்ப்பிரயோகம் நடந்ததாக தான் நம்பவில்லை என்று சொன்னாள்!
சாலொமோன் ஞானமாக சொன்னார்: “வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே.” (நீதிமொழிகள் 25:8) குறிப்பிடப்பட்ட குற்றம் செய்தவர் இன்னும் பிள்ளைகளை துர்ப்பிரயோகம் செய்துகொண்டிருக்கிறார் என்று சந்தேகப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்குமென்றால், ஒரு எச்சரிப்பு ஒருவேளை கொடுக்கப்பட வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட விஷயத்தில் சபை மூப்பர்கள் உதவி செய்யலாம். அப்படியில்லை என்றால், நீங்கள் அவசரப்பட வேண்டாம். இறுதியில் நீங்கள் இந்த விஷயத்தை விட்டுவிட மனமுள்ளவர்களாய் இருக்கலாம். குறிப்பிடப்பட்ட குற்றம் செய்தவரை நீங்கள் எதிர்ப்பட விரும்பினால், (அவரிடமிருந்து எதிர்பார்க்கும் பிரதிபலிப்புகளைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருவீர்கள் என்பதை முதலில் மதிப்பிட்ட பிறகு) நீங்கள் அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.
அந்த “நினைவுகளை” அனுபவித்துக் கொண்டிருக்கும் நபர் குணமடைந்து வரும் சமயத்தின்போது, சங்கடமான சூழ்நிலைகள் ஒருவேளை எழும்பலாம். உதாரணமாக, ஒரு நபர் தனக்கு பாலின தொந்தரவு கொடுத்தவரைப் பற்றி ஒவ்வொரு நாளும் அவரைப் பார்க்கையில் தெளிவான மனக்காட்சிகளைக் கொண்டிருக்கலாம். இதைக் கையாளுவதற்கு எந்த சட்டங்களையும் நிலைநாட்ட முடியாது. “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.” (கலாத்தியர் 6:5) சில சமயங்களில் ஒரு உறவினர் அல்லது மிக நெருங்கிய குடும்ப அங்கத்தினர் உட்பட்டிருப்பதாக ஒருவர் உணரலாம். தலையிட்டு தொந்தரவு கொடுத்தவர் என சந்தேகப்படும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிக்கையில், சில “அடக்கி ஒடுக்கிவைத்த நினைவுகளைப்” பற்றிய சந்தேகத்துக்குரிய தன்மையை நினைவில் வையுங்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த விஷயம் உறுதியாக நிலைநாட்டப்படாதிருக்கையில் குடும்பத்தோடு தொடர்பு வைத்துக்கொள்வது—அவ்வப்போது சந்திப்பது, கடிதத்தின் மூலம் அல்லது தொலைபேசியின் மூலம்—ஒருவர் வேதப்பூர்வமான போக்கைப் பின்பற்ற முயற்சி செய்கிறார் என்பதை அது காண்பிக்கும்.—எபேசியர் 6:1-3-ஐ ஒப்பிடுக.
மூப்பர்கள் என்ன செய்யலாம்?
பிள்ளை துர்ப்பிரயோகத்தை அனுபவித்ததன் காரணமாக, முன்னால் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அல்லது “அடக்கி ஒடுக்கிவைத்த நினைவுகளை” அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு சபை அங்கத்தினர், மூப்பர்களை அணுகினார் என்றால், பொதுவாக இரண்டு பேர் உதவி செய்வதற்கு நியமிக்கப்படுகின்றனர். இந்த மூப்பர்கள் துன்பப்படும் நபர் தற்சமயம் உணர்ச்சி சம்பந்தமான துன்பத்தை சமாளிப்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி தயவாக உற்சாகப்படுத்த வேண்டும். “நினைவில் இருக்கும்” துர்ப்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் கண்டிப்பாக இரகசியமாக வைக்கப்பட வேண்டும்.
மேய்ப்பர்களாக செயல்படுவதே மூப்பர்களின் பிரதான வேலை. (ஏசாயா 32:1, 2; 1 பேதுரு 5:2, 3) அவர்கள் ‘உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்வதில்’ விசேஷமாக கவனமாய் இருக்க வேண்டும். (கொலோசெயர் 3:12) அவர்கள் தயவான விதத்தில் செவிகொடுத்துக் கேட்டு, பிறகு வேதாகமத்திலிருந்து குணமாக்கும் வார்த்தைகளைப் பொருத்துவார்களாக. (நீதிமொழிகள் 12:18) மூப்பர்கள் ஒழுங்காக அவர்களைச் சென்று சந்திப்பது அல்லது தொலைபேசியின் மூலம் அவர்கள் எவ்வாறு இருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள முற்படுவது போன்றவற்றுக்காக வேதனை தரும் “நினைவுகளால்” துன்பப்படும் சிலர் போற்றுதலைத் தெரிவித்திருக்கின்றனர். அப்படிப்பட்ட சந்திப்புகள் நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனால் யெகோவாவின் அமைப்பு அக்கறை எடுத்துக்கொள்கிறது என்பதை அவை காண்பிக்கின்றன. துன்பப்படும் நபர் தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் தன்னை உண்மையில் நேசிக்கிறார்கள் என்பதை உணரும்போது, அவர் ஓரளவு உணர்ச்சி சம்பந்தமான சமநிலையை மீண்டும் பெற உதவப்படலாம்.
துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று தீர்மானித்தார் என்றால் அப்போது என்ன?b மத்தேயு 18:15-ல் உள்ள நியமத்தின்படி அவர் அந்த விஷயத்தைக் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் தனிப்பட்ட விதமாய் அணுக வேண்டும் என்று இரண்டு மூப்பர்களும் அவருக்கு ஆலோசனை கூறலாம். குற்றஞ்சாட்டுபவர் நேருக்கு நேர் இதைச் செய்வதற்கு உணர்ச்சி சம்பந்தமாக முடியவில்லையென்றால், தொலைபேசியின் மூலமாகவோ அல்லது ஒரு கடிதம் எழுதுவதன் மூலமாகவோ அது செய்யப்படலாம். இந்த விதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் யெகோவாவுக்கு முன்பு மனப்பூர்வமாக அறிக்கை செய்து அந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறார். அவர் அந்த துர்ப்பிரயோகத்தை செய்திருக்க முடியாது என்றும்கூட அத்தாட்சி அளிக்கலாம். அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சமாதானமாகி ஒன்றுசேருவது சாத்தியமாகலாம். அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருக்கும்! குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டது என்றால், வேதாகம நியமங்களுக்கு இசைவாக இரண்டு மூப்பர்கள் விஷயங்களைக் கையாளலாம்.
குற்றச்சாட்டு மறுக்கப்பட்டதென்றால், தீர்ப்புக்குரிய விதத்தில் அதற்கு மேல் அதிகம் செய்யமுடியாது என்று மூப்பர்கள் குற்றஞ்சாட்டினவரிடம் விளக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றமற்றவராக சபை தொடர்ந்து நோக்கும். தீர்ப்புக்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 13:1; 1 தீமோத்தேயு 5:19) அதே நபரால் செய்யப்பட்ட துர்ப்பிரயோகத்தை ஒரு நபருக்கு மேற்பட்டவர் “நினைவுகூர்ந்தாலும்,” அதை ஆதரிக்கும் அத்தாட்சிகள் இல்லாமல் அவற்றின் பேரில் நீதி விசாரணைத் தீர்ப்புகளை ஆதாரமாக வைக்கமுடியாத அளவுக்கு மறுபடியுமாக நினைவுக்குக் கொண்டுவரப்பட்டவற்றின் தன்மை அதிக அநிச்சயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட “நினைவுகள்” பொய் என்று கருதப்படுவதாக (அல்லது அவை உண்மை என்றும் கருதப்படுவதாக) இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நீதியாக தீர்ப்புச்செய்து உறுதிப்படுத்துவதில் பைபிள் நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்—செய்த தவற்றை மறுத்தாலும்கூட—உண்மையில் குற்றமுள்ளவராக இருந்தால்? அவர் தவறு செய்யாதவர் போல் “தண்டனை பெறாமல் தப்பித்துக்கொள்வாரா?” நிச்சயமாகவே இல்லை! அவருடைய குற்றப்பழி அல்லது குற்றமின்மை பற்றிய கேள்வியை யெகோவாவின் கைகளில் நம்பிக்கையோடு விட்டுவிடலாம். “சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.” (1 தீமோத்தேயு 5:24; ரோமர் 12:19; 14:12) நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது: “நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.” “துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்.” (நீதிமொழிகள் 10:28; 11:7) இறுதியில் யெகோவா தேவனும் கிறிஸ்து இயேசுவும் நீதியாக நித்திய நியாயத்தீர்ப்பை வழங்குவர்.—1 கொரிந்தியர் 4:5.
சாத்தானை எதிர்த்து நிற்பது
ஒப்புக்கொடுத்திருக்கும் ஆத்துமாக்கள், பெரும் சரீர சம்பந்தமான அல்லது உணர்ச்சி சம்பந்தமான வேதனைகள் இருந்தபோதிலும், அதை சகித்துக்கொண்டிருப்பது, அவர்களுக்கு இருக்கும் உள்ளான பலம் மற்றும் கடவுள் பேரில் இருக்கும் அன்பு ஆகியவற்றுக்கு என்னே ஓர் அத்தாட்சி! அவர்களைத் தாங்கி ஆதரிப்பதற்கு யெகோவாவுடைய ஆவியின் வல்லமைக்குத்தான் என்னே ஓர் அத்தாட்சி!—2 கொரிந்தியர் 4:7-ஐ ஒப்பிடுக.
பேதுருவின் வார்த்தைகள் அப்படிப்பட்டவர்களுக்குப் பொருந்துகின்றன: “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, [சாத்தானுக்கு] எதிர்த்து நில்லுங்கள்.” (1 பேதுரு 5:9) அவ்வாறு செய்வது சுலபமானதாக இல்லாமல் இருக்கலாம். சில சமயங்களில் தெளிவாகவும் நியாயமாகவும் சிந்திப்பதும்கூட கடினமாக இருக்கலாம். ஆனால் உற்சாகம் இழந்துவிடாதீர்கள்! விரைவில் சாத்தானும் அவனுடைய தந்திரமான செயல்களும் முழுவதுமாக இல்லாமல் போய்விடும். உண்மையில் நாம் அந்தக் காலத்துக்காக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அப்போது “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[அடிக்குறிப்புகள்]
a “அடக்கி ஒடுக்கிவைத்த நினைவுகள்” மற்றும் அதைப் போன்ற சொற்றொடர்கள் மேற்கோள் குறிகளால் காண்பிக்கப்பட்டிருக்கின்றன, நாம் அனைவரும் பொதுவாகக் கொண்டிருக்கும் சாதாரண நினைவுகளிலிருந்து அவற்றை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக அவ்வாறு காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
b அந்த விஷயம் சபையில் பொதுவாக எல்லாருக்கும் தெரிய வந்திருந்தால், இந்த பாராவில் கொடுக்கப்பட்டிருக்கும் படியை எடுப்பதும்கூட அவசியமானதாய் இருக்கலாம்.