உவில்லியம் டின்டேல்___தொலைநோக்கு ஆற்றலுள்ள ஒருவர்
உவில்லியம் டின்டேல் இங்கிலாந்தில் “வேல்ஸின் எல்லைப்புறங்களில்” பிறந்தார்; சரியான இடத்தையும் தேதியையும் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், அவர் பெரும்பாலும் க்ளாஸ்டர்ஷரில் பிறந்திருக்க வேண்டும். “நமது ஆங்கில பைபிளை நமக்குத் தந்த” மனிதனுடைய பிறப்பின் 500-வது ஆண்டு விழாவை அக்டோபர் 1994-ல், இங்கிலாந்து கொண்டாடியது. இந்தப் படைப்பிற்காக டின்டேல் கொல்லப்பட்டார். ஏன்?
கிரேக்கு மற்றும் லத்தீனின் அறிவில் உவில்லியம் டின்டேல் மிகச் சிறந்து விளங்கினார். ஜூலை 1515-ல், 21 வயதாக இருக்கையிலேயே, ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1521-ற்குள் ஆணையிட்டு அமர்த்தப்பட்ட ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தார். அந்தச் சமயத்தில் மார்ட்டின் லூத்தரின் நடவடிக்கைகள் காரணமாக ஜெர்மனியில் கத்தோலிக்க மதம் குழப்பத்தில் இருந்தது. ஆனால் 1534-ல், எட்டாம் அரசர் ஹென்றி, முடிவாக ரோமுடனுள்ள உறவைத் துண்டித்தது வரையாக இங்கிலாந்து ஒரு கத்தோலிக்க நாடாகவே இருந்தது.
டின்டேலின் நாளில் ஆங்கிலம் பொது மொழியாக இருந்தபோதிலும், எல்லாக் கல்வியும் லத்தீனில் இருந்தது. சர்ச் மற்றும் பைபிளின் மொழியாகவும் அது இருந்தது. ஜெரோமின் ஐந்தாம் நூற்றாண்டு லத்தீன் வல்கேட் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று 1546-ல் ட்ரென்ட் குழு மீண்டும் வற்புறுத்திக் கூறியது. என்றாலும், கல்வியறிவு உள்ளவர்கள் மட்டுமே அதை வாசிக்க முடியும். இங்கிலாந்திலுள்ள மக்களுக்கு ஆங்கிலத்தில் பைபிளும் அதை வாசிப்பதற்கான சுயாதீனமும் ஏன் மறுக்கப்படவேண்டும்? “ஜெரோமும் தன்னுடைய தாய்மொழியில் பைபிளை மொழிபெயர்த்தார்: நாமும் ஏன் செய்யக்கூடாது?” என்பது டின்டேலின் வாதம்.
விசுவாசத்தின் ஒரு படி
ஆக்ஸ்ஃபர்ட்டில் அவர் இருந்த காலத்தையும், ஒருவேளை கேம்ப்ரிட்ஜில் கூடுதலான படிப்பையும் தொடர்ந்து, க்ளாஸ்டர்ஷரில் ஜான் வால்ஷின் இளம் மகன்களுக்கு இரண்டு வருடங்கள் டின்டேல் தனிமுறையில் பாடம் கற்பிப்பவராக இருந்தார். இந்தக் காலப்பகுதியில் அவர் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான ஆசையை வளர்த்து வந்தார்; மேலும் கிரேக்கையும் லத்தீனையும் பக்கத்து பத்திகளில் கொண்ட எராஸ்மஸின் புதிய பைபிள் பதிவின் உதவியால் தன்னுடைய மொழிபெயர்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை அவர் சந்தேகமின்றி கொண்டிருந்தார். 1523-ல் டின்டேல், வால்ஷ் குடும்பத்தினரை விட்டுவிட்டு, லண்டனுக்குப் பயணப்பட்டார். லண்டனின் பிஷப்பாகிய கத்பர்ட் டன்ஸ்டலிடமிருந்து தன் மொழிபெயர்ப்புக்காக அனுமதியை நாடுவதே அவரது நோக்கமாக இருந்தது.
டன்ஸ்டலால் அதிகாரம் வழங்கப்படுவது ஏன் தேவைப்பட்டதென்றால், ஆக்ஸ்ஃபர்ட்டின் அமைப்புவிதிகள் என்றழைக்கப்பட்ட ஆக்ஸ்ஃபர்டில் 1408-ல் நடந்த பேரவை நிபந்தனைகள், பிஷப்பின் அனுமதியின்றி பைபிளை சொந்த மொழியில் மொழிபெயர்ப்பதற்கு அல்லது வாசிப்பதற்கான தடைவிதிப்பையும் உட்படுத்தியது. இந்தத் தடையை மீறத் துணிந்ததற்காக, லாலார்ட்கள் என்றறியப்பட்ட ஊரூராய் சுற்றிவரும் பிரசங்கிகள், திருச்சபைக்கு முரணான கோட்பாட்டாளர்கள் என்பதாக எரிக்கப்பட்டார்கள். வல்கேட்டிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாகிய ஜான் வைக்ளிஃப்பின் பைபிளை இந்த லாலார்ட்கள் வாசித்து, விநியோகித்தார்கள். கிறிஸ்தவ எழுத்துக்களை கிரேக்கிலிருந்து ஒரு புதிய, நம்பத்தக்க மொழிபெயர்ப்பாக அவருடைய சர்ச்சுக்காகவும் இங்கிலாந்திலுள்ள மக்களுக்காகவும் மொழிபெயர்ப்பதற்கான சமயம் வந்துவிட்டதாக டின்டேல் நினைத்தார்.
பிஷப் டன்ஸ்டல் கல்வியறிவுள்ள ஒருவர்; எராஸ்மஸை உற்சாகப்படுத்துவதற்காக அதிகத்தைச் செய்தவர். தன்னுடைய சொந்தத் திறமைகளின் சான்றாக டின்டேல், கடினமான கிரேக்கப் பதிவாகிய ஐஸோக்ரேட்ஸின் சொற்பொழிவுகளில் ஒன்றை டன்ஸ்டலின் அங்கீகரிப்பிற்காக மொழிபெயர்த்திருந்தார். டன்ஸ்டல் சிநேகம்காட்டி ஆதரவளித்து, வேத எழுத்துக்களை மொழிபெயர்க்க தான் முன்வருவதை ஏற்றுக்கொள்வார் என்று டின்டேல் அளவற்ற நம்பிக்கைகளை வைத்திருந்தார். அந்த பிஷப் என்ன செய்வார்?
மறுப்பு—ஏன்?
டின்டேல் ஒரு அறிமுகக் கடிதத்தைக் கொண்டிருந்தபோதும் டன்ஸ்டல் அவரது சந்திப்பை ஏற்கவில்லை. ஆகவே ஒரு பேட்டிக்காகக் கோரி, டின்டேல் ஒரு கடிதத்தை எழுத வேண்டியிருந்தது. டன்ஸ்டல் தன் தகுதி காரணமாக கடைசியில் டின்டேலைச் சந்திக்க ஒத்துக்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை; ஆனால் அவருடைய பதில், ‘என் வீட்டில் இடம் இல்லை,’ என்பதாக இருந்தது. டன்ஸ்டல் ஏன் டின்டேலை அந்தளவுக்கு வேண்டுமென்றே மட்டந்தட்டினார்?
ஐரோப்பா கண்டத்தில் லூத்தரால் செய்யப்பட்ட சீர்திருத்த வேலை, இங்கிலாந்தில் அதன் விளைவுகளைக் கொண்டிருந்ததுடன், கத்தோலிக்க சர்ச்சுக்கு அதிக விசனத்தை உண்டுபண்ணிக்கொண்டிருந்தது. 1521-ல், எட்டாம் அரசர் ஹென்றி, லூத்தருக்கு எதிராக போப்புக்காக வாதாடும் வகையில் செறிவுமிக்க ஆய்வுக்கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தார். இதற்கு நன்றியாக, ஹென்றிக்கு “விசுவாசப் பாதுகாவலர்” (Defender of the Faith) என்ற பட்டத்தை போப் அளித்தார்.a ஹென்றியின் கார்டினல் உல்ஸியும் அதிக சுறுசுறுப்பானவராக, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட லூத்தரின் புத்தகங்களை அழித்துக்கொண்டிருந்தார். போப்புக்கும், அரசருக்கும், அவருடைய கார்டினலுக்கும் உண்மையாக இருந்த கத்தோலிக்க பிஷப் ஒருவராக, டன்ஸ்டல், கலகக்காரராகிய லூத்தருக்குப் பரிவைக் காண்பிப்பதுபோல தோன்றக்கூடிய எந்த எண்ணத்தையும் கீழடக்குவதற்கு ஒழுக்கரீதியில் கடமைப்பட்டவராக உணர்ந்தார். அதில் முக்கியமாக சந்தேகிக்கப்பட்டவர் டின்டேல். ஏன்?
வால்ஷ் குடும்பத்தாருடன் தங்கியிருந்தபோது, டின்டேல், உள்ளூர் மத குருக்களின் அறியாமைக்கும் மதவெறிக்கும் எதிராக பயமின்றி பேசியிருந்தார். டின்டேலை ஆக்ஸ்ஃபர்ட்டிலேயே அறிந்திருந்த ஜான் ஸ்டோக்ஸ்லியும் அவர்களில் ஒருவர். காலப்போக்கில் அவர் கத்பர்ட் டன்ஸ்டலுக்குப் பின் லண்டனின் பிஷப்பானார்.
பின்வருமாறு சொன்ன, உயர் பதவியிலிருந்த குருவர்க்கத்தார் ஒருவரிடம் ஏற்பட்ட நேருக்கு நேர் தர்க்கத்திலிருந்தும் டின்டேலுக்கு இருந்த எதிர்ப்பு தெரிய வருகிறது: “போப்பின் சட்டம் இல்லாமல் இருப்பதைவிட கடவுளின் சட்டம் இல்லாமல் இருப்பது நமக்கு நல்லது.” நினைவில் நிற்கும் வார்த்தைகளில், டின்டேலின் பதில் இதுவே: ‘நான் போப்பையும் அவருடைய எல்லா சட்டங்களையும் எதிர்த்து நிற்கிறேன். கடவுள் என்னை வாழ அனுமதித்தாரேயானால், அநேக வருடங்கள் செல்லுமுன், ஏர் உழுகிற ஒரு பையன், உங்களைவிட அதிகமாக வேத எழுத்துக்களைப்பற்றி அறிந்திருக்கும்படி நான் செய்வேன்.’
பொய்யான மதபேத குற்றச்சாட்டுகளின் காரணமாக வுஸ்டர் அத்தியட்சாதீனத்தின் செயலாட்சியாளருக்கு முன்பாகவும் டின்டேல் ஆஜராக வேண்டியிருந்தது. “பொறுக்க முடியாத அளவுக்கு அவர் என்னை அச்சுறுத்தி, என்னைத் திட்டினார்,” என்று டின்டேல் பின்னர் நினைவுகூர்ந்து, தான் “ஒரு நாயை” போல் நடத்தப்பட்டதாகவும் சொன்னார். ஆனால் டின்டேலை மதபேத குற்றவாளியாகத் தீர்ப்பதற்கு எவ்வித அத்தாட்சியும் இருக்கவில்லை. டன்ஸ்டலின் தீர்மானத்தில் செல்வாக்கு செலுத்தும்படியாக இந்தக் காரியங்கள் அனைத்தும் அவருக்கு இரகசியமாகத் தெரிவிக்கப்பட்டதென்று சரித்திராசிரியர்கள் நம்புகிறார்கள்.
லண்டனில் ஒரு வருடத்தைக் கழித்தபின்னர், முடிவாக டின்டேல் இவ்வாறு கூறினார்: “புதிய ஏற்பாட்டை மொழிபெயர்ப்பதற்கு என் ஆண்டவரின் லண்டன் அரண்மனையில் இடமில்லை; அதோடு . . . இங்கிலாந்து முழுவதிலும் அதைச் செய்ய எவரும் இடமளிக்கவும் மாட்டார்கள்.” அவர் சொன்னது சரியே. லூத்தரின் படைப்பால் உருவாக்கப்பட்ட அடக்குமுறையின் சூழலில், இங்கிலாந்திலுள்ள எந்த அச்சாளர்தான் பைபிளை ஆங்கிலத்தில் பிரசுரிக்கத் துணிவார்? ஆகவே 1524-ல், டின்டேல் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து ஒருபோதும் திரும்பிவராதவராய் சென்றார்.
ஐரோப்பாவுக்குச் செல்லுதலும் புதிய பிரச்சினைகளும்
தன்னுடைய விலைமதிப்புமிக்க புத்தகங்களுடன், உவில்லியம் டின்டேல் ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தார். லண்டனிலுள்ள செல்வாக்குமிக்க வியாபாரி ஒருவராகிய அவரது நண்பர் ஹம்ஃப்ரி மான்மௌத் தயவாகக் கொடுத்திருந்த £10-ஐ தன்னுடன் கொண்டுசென்றார். டின்டேல் மொழிபெயர்க்கும்படி திட்டமிட்டிருந்த கிரேக்க வேத எழுத்துக்களை அச்சிடுவதற்கு அந்தக் காலத்தில் இந்த நன்கொடை ஏறக்குறைய போதுமானதாக இருந்தது. அதைத் தொடர்ந்து மான்மௌத், டின்டேலுக்கு உதவியதற்காகவும் லூத்தருக்குப் பரிவு காட்டுவதாக எண்ணப்பட்டதாலும் கைதுசெய்யப்பட்டார். விசாரணை செய்யப்பட்டு லண்டன் கோட்டைக்குள் அடைக்கப்பட்ட மான்மௌத், கார்டினல் உல்ஸியிடம் மன்னிப்புக்காகக் கோரிய பின்னரே விடுவிக்கப்பட்டார்.
டின்டேல் ஜெர்மனியில் சரியாக எங்குச் சென்றார் என்பது தெளிவாக இல்லை. ஹாம்பர்குக்குச் சென்றிருக்கலாம் என்று சில அத்தாட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன; அவர் அங்கு ஒரு வருடத்தைக் கழித்திருக்கலாம். அவர் அங்கு லூத்தரைச் சந்தித்தாரா? மான்மௌத்துக்கு எதிரான குற்றச்சாட்டில் அவர் சந்தித்ததாகச் சொல்லப்பட்டாலும், இது நிச்சயமற்றதாக இருக்கிறது. ஒரு காரியம் நிச்சயம்: கிரேக்க வேத எழுத்துக்களை மொழிபெயர்ப்பதில் டின்டேல் மும்முரமாக இருந்தார். அவருடைய கையெழுத்துப் பிரதியை எங்கு அச்சடித்துப் பெற முடியும்? கொலோனிலுள்ள பீட்டர் க்வென்டெல்லிடம் அந்த வேலையை ஒப்படைத்தார்.
காக்லியஸ் என்பதாக மற்றபடி அறியப்பட்ட எதிர்ப்பாளராகிய ஜான் டோபனெக், என்ன சம்பவித்துக்கொண்டிருந்தது என்பதை அறிந்தது வரையாக எல்லாம் நல்லபடியாக நடந்துகொண்டிருந்தன. காக்லியஸ், தாம் கண்டுபிடித்தவற்றை எட்டாம் ஹென்றியின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உடனடியாகத் தெரிவித்தார்; டின்டேலின் மொழிபெயர்ப்பு க்வென்டெல்லால் அச்சிடப்படுவதற்கு எதிராக ஒரு தடைவிதிப்பை எட்டாம் ஹென்றி உடனே வழங்கினார்.
டின்டேலும் அவருடைய உதவியாளராகிய உவில்லியம் ராய்யும், அச்சிடப்பட்டிருந்த மத்தேயு சுவிசேஷத்தின் பக்கங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள் உயிரைக் காக்க தப்பி ஓடினர். ரைன் ஆற்றின் வழியாக வர்ம்ஸ் வரை கப்பலில் சென்று, அங்கு தங்கள் வேலையை முடித்தார்கள். காலப்போக்கில், டின்டேலுடைய புதிய ஏற்பாட்டின் முதல் பதிப்பின் 6,000 நகல்கள் தயாரிக்கப்பட்டன.b
வெற்றி—எதிர்ப்பின் மத்தியிலும்
மொழிபெயர்ப்பதும் அச்சடிப்பதும் ஒரு பிரச்சினை. பிரிட்டனுக்கு பைபிள் சென்றடையும்படி செய்வது அதைவிட பிரச்சினையாகும். சர்ச் ஏஜண்டுகளும் உலகப்பிரகாரமான அதிகாரங்களும் இவை இங்கிலீஷ் கால்வாய் வழியாக அனுப்பப்படுவதைத் தடுக்க தீர்மானமாய் இருந்தன; ஆனால் ஒத்துழைக்கும் வியாபாரிகளிடம் தீர்வு இருந்தது. துணி மூட்டைகளுக்குள்ளும் மற்ற வாணிகச் சரக்குகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டு, இந்தத் தொகுப்புகள் இங்கிலாந்தின் கரைகளுக்கும் ஸ்காட்லாந்து வரையாகவும் கடத்திக் கொண்டுபோகப்பட்டன. டின்டேல் உற்சாகமடைந்தார், ஆனால் இது அவருடைய போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே.
பிப்ரவரி 11, 1526-ல், கார்டினல் உல்ஸியும் அவருடன் 36 பிஷப்புகளும் சர்ச்சின் மற்ற உயர் பதவியாளர்களும் சேர்ந்து லண்டனில் செய்ன்ட் பால்ஸ் கத்தீட்ரலின் அருகே “பெரிய கூடைகள் நிறைய புத்தகங்கள் எரிக்கப்படுவதைக் காணும்படி” கூடினர். டின்டேலின் அருமதிப்புள்ள மொழிபெயர்ப்பின் சில பிரதிகளும் அவற்றுள் இருந்தன. இந்த முதல் பதிப்பில், தற்போது இரண்டு பிரதிகள் மட்டுமே இருக்கின்றன. முழுமையாக இருக்கும் ஒரே ஒரு பிரதி (தலைப்பு பக்கம் மட்டும் தவிர) பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கிறது. எதிர்பார்ப்புக்கு மாறாக, 71 பக்கங்கள் இல்லாத மற்ற பிரதி, செய்ன்ட் பால்ஸ் கத்தீட்ரல் நூலகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அது எப்படி அங்கு வந்தது என்று எவருக்கும் தெரியாது.
உறுதி தளராமல், டின்டேல் தொடர்ந்து தன்னுடைய மொழிபெயர்ப்பின் புதிய பதிப்புகளைப் பிரசுரித்தார்; அவை முறையான திட்டத்துடன் பறிமுதல் செய்யப்பட்டு ஆங்கிலேய மத குருக்களால் எரிக்கப்பட்டன. பின்னர் டன்ஸ்டல் சூழ்ச்சித்திறத்தை மாற்றினார். புதிய ஏற்பாடு உட்பட டின்டேலால் எழுதப்பட்ட எல்லா புத்தகங்களையும் எரிக்கும்படியாக தான் அவற்றை வாங்கிக்கொள்வதாக அவர் அகஸ்ட்டின் பாக்கிங்டன் என்ற வியாபாரி ஒருவரோடு ஒப்பந்தம் செய்துகொண்டார். இது டின்டேலுடன் ஏற்பாடு செய்யப்பட்டது; இவருடன் பாக்கிங்டன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார். ஹாலியின் க்ரானிக்கில் சொல்கிறது: “பிஷப்புக்கு புத்தகங்கள் கிடைத்தன, பாக்கிங்டன்னுக்கு நன்றி கிடைத்தது, டின்டேலுக்குப் பணம் கிடைத்தது. அதற்குப் பின்னர் அதிகமான புதிய ஏற்பாடுகள் அச்சிடப்பட்டபோது, ஏராளமானவை விரைவாக இங்கிலாந்துக்குள் வந்தன.”
டின்டேலின் மொழிபெயர்ப்புக்கு குருவர்க்கத்தினர் ஏன் அவ்வளவு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்? லத்தீன் வல்கேட் பரிசுத்த வாசகத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் மங்கவைப்பதாய் இருக்கையில், மூல கிரேக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட டின்டேலின் மொழிபெயர்ப்பு முதல் முறையாக ஆங்கிலேய மக்களுக்கு தெளிவான மொழியில், பைபிள் செய்தியைத் தெரிவித்தது. உதாரணமாக, 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில், அகாப்பே என்ற கிரேக்க வார்த்தைக்கு “தர்மம்” என்பதற்குப் பதிலாக “அன்பு” என்பதைப் பயன்படுத்த தெரிவுசெய்தார், டின்டேல். சர்ச் கட்டடங்களை அல்லாமல், வணக்கத்தாரை முக்கியப்படுத்திக் கூறுவதற்காக, “சர்ச்” என்பதற்கு மாறாக “சபை” என்பதையே பயன்படுத்தினார். என்றபோதிலும், “பாதிரியார்” என்பதை “மூப்பர்” என்றும் “பிராயச்சித்தம் கூறுதல்” என்பதை “மனந்திரும்புதல்” என்றும் மாற்றீடு செய்து, அதன்மூலமாக குருவர்க்கத்தினரை அவர்களால் புனைந்துகொள்ளப்பட்ட குருத்துவ அதிகாரங்களையெல்லாம் களையும்படிச் செய்தது, குருவர்க்கத்தினரால் பொறுக்கமுடியாத கடைசி அம்சமாக இருந்தது. இதைக் குறித்து டேவிட் டானியல் சொல்கிறார்: “உத்தரிக்கும் ஸ்தலம் அங்கு இல்லை; பாவ அறிக்கை கேட்டல் மற்றும் பிராயச்சித்தம் கூறல் ஆகியவையும் இல்லை. சர்ச்சின் செழுமைக்கும் அதிகாரத்திற்கும் காரணமாயிருந்த இரண்டு ஆதாரங்கள் வீழ்ந்துபோயின.” (உவில்லியம் டின்டேல்—வாழ்க்கை சரிதை [ஆங்கிலம்]) டின்டேலின் மொழிபெயர்ப்பு அளித்த சவால் அதுவே; அவரது சொற்களின் தெரிவில் துல்லியத்தை நவீன புலமை முழுமையாக ஆதரிக்கிறது.
அன்ட்வர்ப், காட்டிக்கொடுக்கப்படுதல், மரணம்
1526-க்கும் 1528-க்கும் இடையில், டின்டேல் அன்ட்வர்ப்புக்குச் சென்றார்; அங்கு ஆங்கிலேய வியாபாரிகளின் மத்தியில் அவரால் பாதுகாப்பாக உணர முடிந்தது. அங்கு அவர் (ஆங்கிலத்தில்) துன்மார்க்க மேமனின் உவமை, கிறிஸ்தவ மனிதனின் கீழ்ப்படிதல், உயர்பதவி வகிக்கும் குருவர்க்கத்தினரின் தொழில்முறைப்பணி ஆகியவற்றை எழுதினார். டின்டேல் தன்னுடைய மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்தார்; எபிரெய வேத எழுத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றில் அவர்தான் முதல் முறையாக கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதை பயன்படுத்தியுள்ளார். அந்தப் பெயர் 20-க்கும் அதிகமான முறைகள் காணப்படுகின்றன.
டின்டேல், அன்ட்வர்ப்பில் தன்னுடைய நண்பரும் ஆதரவாளருமான தாமஸ் பாய்ன்ட்ஸுடன் இருந்த வரைக்கும், உல்ஸி மற்றும் அவருடைய வேவுகாரரின் சூழ்ச்சித் திட்டங்களிலிருந்து காக்கப்பட்டவராக இருந்தார். டின்டேல் நோய்வாய்ப்பட்டவர்களையும் ஏழைகளையும் கவனிக்கும் காரியத்தில் நன்கு அறியப்பட்டவரானார். முடிவில், ஆங்கிலேயரான ஹென்றி ஃபிலிப் தந்திரமாக ஏய்த்து டின்டேலின் நம்பிக்கைக்குரியவரானார். அதன் விளைவாக, 1535-ல், காட்டிக்கொடுக்கப்பட்டு ப்ருஸ்ஸெல்ஸுக்கு வடக்கே பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள வில்வார்ட் காவற்கோட்டைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் 16 மாதங்களுக்கு சிறையிலடைத்து வைக்கப்பட்டார்.
ஃபிலிப்ஸை கூலிக்கு அமர்த்தியது யார் என்பதை நிச்சயமாக தீர்மானிக்க முடியாது; ஆனால் அப்போது லண்டனில் ‘முரண் கோட்பாட்டாளர்களை’ எரிப்பதில் மும்முரமாக இருந்த பிஷப் ஸ்டாக்ஸ்லியைத்தான் சந்தேகிக்க முடிகிறது. தன்னுடைய மரணப் படுக்கையில், 1539-ல் ஸ்டாக்ஸ்லி “தன்னுடைய வாழ்நாட்காலத்தில், ஐம்பது முரண் கோட்பாட்டாளர்களை எரித்திருந்ததைக் குறித்து சந்தோஷப்பட்டார்,” என்று சீர்திருத்தத்தின் பைபிள் (ஆங்கிலம்) என்பதில் டபிள்யூ. ஜே. ஹீட்டன் சொல்கிறார். அந்த எண்ணிக்கையில் உவில்லியம் டின்டேலும் உட்பட்டிருந்தார்; அவருடைய உடல் யாவருக்கும் முன்பாக அக்டோபர் 1536-ல் எரிக்கப்படுவதற்கு முன்னர் அவருடைய கழுத்து நெரிக்கப்பட்டது.
ஃபிலிப்ஸ் உறுப்பினராகச் சேர்ந்திருந்த கத்தோலிக்க லூவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல இறையியல் வல்லுநர்கள் மூவர் டின்டேலின் விசாரணைக் குழுவில் இருந்தனர். மதபேதத்திற்காக டின்டேல் கண்டனம் செய்யப்படுவதையும் அவருடைய குருத்துவ அதிகாரம் நீக்கப்படுவதையும் காண்பதற்கு லூவனிலிருந்து மூன்று கானன்களும், மூன்று பிஷப்புகளும் மற்ற உயர் பதவியாளர்களும் இருந்தனர். சுமார் 42 வயதில் அவருடைய மறைவைக் குறித்து எல்லாரும் களிகூர்ந்தனர்.
“டின்டேல் எப்போதும் அவருடைய அச்சமற்ற நேர்மைக்காக தெளிவாக அறியப்பட்டவராக இருந்தார்,” என்று நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்க்கை சரித்திரம் எழுதுகிறவராகிய ராபர்ட் டிமேயஸ் சொன்னார். அவரோடு கூட லண்டனில் ஸ்டாக்ஸ்லியால் எரிக்கப்பட்ட ஜான் ஃப்ரித்துக்கு டின்டேல் எழுதினார்: “என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமாக கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஒரு அசையைக் கூட நான் ஒருபோதும் மாற்றவில்லை; பூமியிலுள்ள அனைத்தும், இன்பகரமானவையோ, கனமோ, செல்வங்களோ எனக்குக் கொடுக்கப்படக்கூடும் என்றாலும் இன்றும் அதைச் செய்யமாட்டேன்.”
ஆகவே இவ்வாறு, உவில்லியம் டின்டேல் இங்கிலாந்திலுள்ள மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பைபிளை அவர்களுக்கு அளிக்கும் சிலாக்கியத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்தார். என்னே ஒரு விலையைச் செலுத்தினார்—ஆனால் எவ்வளவு விலைமிக்க பரிசு!
[அடிக்குறிப்புகள்]
a ஃபிடி டேஃபன்ஸார் (Fidei Defensor) என்ற பட்டம் விரைவில் அந்த ஆட்சிப்பகுதியிலுள்ள நாணயங்களில் பொறிக்கப்பட்டன; தனக்குப் பின்வருபவர்களுக்கும் இந்தப் பட்டமளிக்கப்பட வேண்டும் என்று ஹென்றி கேட்டுக்கொண்டார். இன்று அது பிரிட்டிஷ் நாணயங்களில் பேரரசரின் தலையைச் சுற்றி Fid. Def., அல்லது வெறுமனே F.D. என்று காணப்படுகிறது. அக்கறைக்குரியவிதத்தில், “விசுவாசப் பாதுகாவலர்” என்பது அதைத் தொடர்ந்து 1611-ல் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, அரசர் ஜேம்ஸுக்கென்று அர்ப்பணிக்கப்படுகையில் அதில் பொறிக்கப்பட்டது.
b இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்குரியது; அதிகாரப்பூர்வ மூலங்கள் சில 3,000 என்கின்றன.
[பக்கம் 29-ன் பெட்டி]
ஆரம்ப மொழிபெயர்ப்புகள்
பொது மக்களின் மொழியில் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பைக் கொண்டிருப்பதற்கான டின்டேலின் முறையீடு நியாயமற்றதாக அல்லது முன்னோடி மாதிரிகள் இல்லாததாக இல்லை. ஆங்கிலோ-சாக்ஸன் மொழிபெயர்ப்பு ஒன்று பத்தாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. லத்தீனிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட பைபிள்கள் ஐரோப்பாவில் 15-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாராளமாக விநியோகிக்கப்பட்டன: ஜெர்மன் (1466), இத்தாலியன் (1471), பிரெஞ்சு (1474), செக் (1475), டச் (1477), காட்டலன் (1478). 1522-ல் மார்ட்டின் லூத்தர் தன் புதிய ஏற்பாட்டை ஜெர்மனில் பிரசுரித்தார். டின்டேல் கேட்டதெல்லாம் என்னவென்றால், ஏன் இங்கிலாந்தும் அவ்வாறு செய்வதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்பதே.
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Bible in the background: © The British Library Board; William Tyndale: By kind permission of the Principal, Fellows and Scholars of Hertford College, Oxford