பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது—பகுதி இரண்டு
குபுகுபுவென்று எரிந்துகொண்டிருந்த பெருந் தீயில் அதிகமதிகமாக எரிபொருளைப் போட்டபோது ஜுவாலை விண்ணை நோக்கி எழும்பியது. ஆனால் இது சாதாரண தீ அல்ல. தலைமை குருக்களும் மத குருக்களும் பார்த்துக்கொண்டிருக்கையில், உக்கிரமான தீக்கு பைபிள்கள் இரையாகிக்கொண்டிருந்தன. ஆனால், அழிப்பதற்காக பைபிள்களை வாங்குவதன் மூலம், லண்டனின் பிஷப், மொழிபெயர்ப்பாளர் வில்லியம் டின்டேலுக்கு கூடுதலான பதிப்புகளுக்கு தேவையான நிதியுதவியை தன்னை அறியாமலே அளித்துக் கொண்டிருந்தார்!
சண்டை செய்துகொண்டிருந்த இரு தரப்பினரும் இப்படிப்பட்ட ஒரு மன உறுதியோடு செயல்பட வழிநடத்தியது என்ன? முந்திய ஒரு இதழில், வரலாற்றின் இடைநிலை காலத்தின் பிற்பகுதியில் பைபிள் பிரசுரத்தினுடைய வரலாற்றினை நாம் சிந்தித்தோம். இப்பொழுது, கடவுளுடைய வார்த்தையின் செய்தியும் செல்வாக்கும் சமுதாயத்தின்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவிருந்த ஒரு புதிய சகாப்தத்தின் உதயத்துக்கு நாம் வருகிறோம்.
ஒரு முன்னோடி தோன்றுகிறார்
மதிப்புக்குரிய ஆக்ஸ்போர்டு கல்விமான் ஜான் வைக்கிளிப் ‘கடவுளுடைய சட்டத்தின்,’ அதாவது பைபிளின் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்க சர்ச்சின் பைபிள் ஆதாரமற்ற பழக்கவழக்கங்களுக்கு எதிராக கடுமையாக பிரசங்கிக்கவும் எழுதவும் செய்தார். அவர் செவிகொடுத்துக் கேட்கும் எவருக்கும் ஆங்கிலத்தில் பைபிளின் செய்தியைப் பிரசங்கிப்பதற்காக, தன்னுடைய மாணவர்களை, அதாவது தன்னைப் பின்பற்றினவர்களை, இங்கிலாந்து முழுவதிலும் கிராமப்புற பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். 1384-ல் அவர் இறந்துபோவதற்கு முன்பாக, பைபிளை லத்தீனிலிருந்து அவருடைய நாளைய ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தார்.
பல காரணங்களுக்காக சர்ச் வைக்கிளிப்பை வெறுத்தது. முதலாவதாக, பாதிரிமார் வாழ்ந்துவந்த கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைக்காகவும் ஒழுக்கமற்ற நடத்தைக்காகவும் அவர்களை அவர் கண்டனம் செய்தார். மேலுமாக, வைக்கிளிப்பின் பல ரசிகர்கள், ஆயுதமேந்தி தாங்கள் செய்த கிளர்ச்சியை நியாயப்படுத்த அவருடைய போதனைகளைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டனர். வைக்கிளிப் ஒருபோதும் வன்முறை கிளர்ச்சிகளை ஆதரிக்கவில்லை. அப்படியிருந்தும்கூட, பாதிரிமார் அவருடைய மரணத்துக்குப் பின்னும் அதற்காக அவரைக் குற்றஞ்சாட்டினார்கள்.
1412-ல் போப் ஜான் XXIII-க்கு எழுதிய கடிதமொன்றில், பேராயர் அரண்டெல், இவரை “அந்த உதவாக்கரையான, எரிச்சலைமூட்டும் பயல் ஜான் வைக்கிளிப், நினைத்தாலே குமட்டிக்கொண்டு வரும் அந்த மனிதன், பழைய பாம்பின் மைந்தன், அந்திக்கிறிஸ்துவின் முன்னோடியும் பிள்ளையும்” என்பதாக குறிப்பிட்டிருந்தார். அவருடைய கண்டன வார்த்தைகளின் உச்சக்கட்டமாக அரண்டெல் இவ்வாறு எழுதினார்: “அவனுடைய பாவத்தின் அளவை நிறைவு செய்வதற்காக, அவன் வேதாகமத்தை தாய்மொழியில் மொழிபெயர்க்கும் பணிக்கு முன்னேற்பாடுகளைச் செய்தான்.” ஆம், மக்களுக்கு அவர்களுடைய சொந்த மொழியில் பைபிளை வைக்கிளிப் கொடுக்க விரும்பியதே சர்ச் தலைவர்களை அதிகமாக ஆத்திரமடையச்செய்தது.
இருந்தபோதிலும், பிரபலமான சில ஆட்களால் அவரவர் ஊர் மொழிகளில் வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இவர்களில் ஒருவர் பொஹீமியா நாட்டைச் சேர்ந்த ஆன். இவர் 1382-ல் இங்கிலாந்தின் எதிர்கால அரசர் இரண்டாம் ரிச்சர்டை திருமணம் செய்திருந்தார். வைக்கிளிப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த சுவிசேஷங்கள் இவரிடமிருந்தன, இவர் இடைவிடாமல் இவற்றைப் படித்துவந்தார். இவர் அரசியாக ஆனபோது, இவருடைய சாதகமான மனநிலை பைபிளின் நோக்கத்தை முன்னேற்றுவிக்க உதவியது—இங்கிலாந்தில் மட்டுமல்ல. பொஹீமியாவில் ப்ரேக் பல்கலைக்கழகத்திலிருந்த மாணவர்களை ஆக்ஸ்போர்டுக்கு வரும்படியாக ஆன் உற்சாகப்படுத்தினார். அவர்கள் வைக்கிளிப்பின் படைப்புகளை உற்சாகத்தோடு படித்து அவற்றில் சிலவற்றை ப்ரேக்குக்கு திரும்ப எடுத்துச் சென்றார்கள். ப்ரேக் பல்கலைக்கழகத்தில் வைக்கிளிப்பின் போதனைகள் பிரசித்தி பெற்றவையாக ஆயின, இவற்றைப் படித்து கடைசியாக இவற்றைப் போதித்த யான் ஹஸ் என்பவருக்கு இவை உதவியாக இருந்தன. ஹஸ் பழமையான ஸ்லாவிக் மொழிபெயர்ப்பிலிருந்து படிப்பதற்கு எளிதாக இருந்த ஒரு செக் மொழிபெயர்ப்பை தயாரித்தார். அவருடைய முயற்சிகள் பொஹீமியாவிலும் அண்டை நாடுகளிலும் பைபிளை சாதாரணமாக பயன்படுத்துவதை ஊக்குவித்தன.
சர்ச் பதிலடி கொடுக்கிறது
சர்ச் அங்கீகரித்த பைபிள்களின் மார்ஜின்களில் இருந்த பளுவான பாரம்பரிய விளக்க “உரையை”விட, எதுவும் கூட்டப்படாத ஏவப்பட்ட மூல வேதவாக்கியங்களான “கலப்பில்லாத வாசகமே” அதிக வலிமையுள்ளது என்பதாக வைக்கிளிப்பும் ஹஸ்ஸும் போதித்ததற்காகவும்கூட பாதிரிமார் அதிகமாக ஆத்திரமடைந்தனர். கடவுளுடைய வார்த்தையின் கலப்பில்லாத செய்தியையே பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று இந்தப் பிரசங்கிமார்கள் விரும்பினார்கள்.
1414-ல், ஹஸ்ஸுக்கு பாதுகாப்பு தரப்படுவதாக பொய்யாய் வாக்கு கொடுத்து அவருடைய கருத்துக்களுக்கு விளக்கமளிக்க ஜெர்மனியில் கேத்தலிக் கவுன்சில் ஆஃப் கான்ஸ்டன்ஸ்-க்கு முன்பாக வரும்படியாக தந்திரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. கவுன்சிலில் 2,933 மத குருக்களும், பிஷப்புகளும் கார்டினல்களும் இருந்தனர். தன்னுடைய போதனைகள் வேதாகமத்தைக் கொண்டு தவறென நிரூபிக்கப்படுமானால் தன் கருத்தை மாற்றிக்கொள்ள ஹஸ் ஒப்புக்கொண்டார். கவுன்சிலுக்கு அது விவாதமாக இல்லை. ஆனால் அவர்களுடைய அதிகாரத்துக்கு விடப்பட்ட ஒரு சவாலே அவரை 1415-ல் கழுமரத்தில் எரிப்பதற்கு போதுமான காரணமாக இருந்தது; அவர் எரிக்கப்படுகையில் உரக்க ஜெபித்துக்கொண்டிருந்தார்.
ஜான் வைக்கிளிப்பை கண்டனம் செய்து அவமானப்படுத்தும் கடைசி செயலாக, இங்கிலாந்தில் அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து எரித்துவிட உத்தரவையும் இதே கவுன்சில் பிறப்பித்தது. இந்த உத்தரவு அத்தனைக் கீழ்த்தரமான செயலாக இருந்த காரணத்தால் 1428-ல் போப் அதை வற்புறுத்தும் வரையில் இது செய்யப்படவே இல்லை. ஆனால், எப்பொழுதும் இருப்பதைப் போலவே, இப்படிப்பட்ட கடுமையான எதிர்ப்பு மற்ற சத்திய பிரியர்களின் ஆர்வத்தைக் குறைத்துவிடவில்லை. மாறாக, கடவுளுடைய வார்த்தையை வெளியிடுவதற்கான அவர்களுடைய மன உறுதியை அதிகரிக்கவே செய்தது.
அச்சடிப்பின் தாக்கம்
1450-க்குள் ஹஸ் மரித்து 35 ஆண்டுகளே ஆனபின்பு, ஜோஹானஸ் குட்டன்பர்க் அச்சுக்கோர்த்து அச்சடிக்க ஜெர்மனியில் அச்சுவேலையை ஆரம்பித்தார். அவருடைய முதலாவது மிகப் பெரிய படைப்பு, சுமார் 1455-ல் பூர்த்தியான லத்தீன் வல்கேட் பதிப்பாகும். 1495-க்குள் முழு பைபிளோ அல்லது பைபிளின் ஒரு பகுதியோ ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு, செக், டச்சு, எபிரெயு, காடலோனி, கிரேக்கு, ஸ்பானிஷ், ஸ்லாவிக், போர்ச்சுகீஷ் மற்றும் செர்பிய மொழி என்ற வரிசையில் அச்சடிக்கப்பட்டுவிட்டது.
டச்சு கல்விமான் டெசிடீரியஸ் இராஸ்மஸ், 1516-ல் முழு கிரேக்க வாசகத்தின் முதல் அச்சுப் பதிப்பை உண்டுபண்ணினார். வேதாகமம் “எல்லா மக்களுடைய எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதை” இராஸ்மஸ் விரும்பினார். இருந்தபோதிலும் தானே அதை மொழிபெயர்ப்பதன் மூலம் அவருக்கிருந்த பெரும் புகழை அவர் ஆபத்திற்குள்ளாக்க தயங்கினார். இருந்தபோதிலும் அதிக தைரியமாக இருந்த மற்றவர்கள் அவருக்குப் பின்வந்தார்கள். இந்த நபர்களில் குறிப்பிடத்தக்கவர் வில்லியம் டின்டேல் ஆவார்.
வில்லியம் டின்டேலும் ஆங்கில பைபிளும்
டின்டேல் ஆக்ஸ்போர்டில் கல்வி கற்று சுமார் 1521-ல் சர் ஜான் வால்ஷ் என்பவரின் வீட்டுக்கு அவருடைய பிள்ளைகளுக்கு ஆசிரியராக வந்தார். வால்ஷ் தம்பதியினர் மிகவும் தாராளமாக உணவு தயாரித்து அளித்த மேசையில் சாப்பாட்டு வேளைகளில் இளம் டின்டேல் அடிக்கடி உள்ளூர் பாதிரிமாரோடு விவாதம் செய்துகொண்டிருந்தார். டின்டேல் பைபிளைத் திறந்து வேதவாக்கியங்களை அவர்களுக்குக் காண்பிப்பதன் மூலம் அவர்களுடைய கருத்துக்களுக்கு எதிராக சவால்விட்டார். காலப்போக்கில் வால்ஷ் தம்பதியினர் டின்டேலின் பைபிள் போதனைகள் உண்மையானவை என்று உறுதியாக நம்பினர். ஆகவே பாதிரிமார் அழைக்கப்படுவது குறைந்தது. அவர்களை வரவேற்பதில் இவர்களுக்கு உற்சாகமும் இல்லை. இயல்பாகவே, மத குருமார் டின்டேலுக்கும் அவருடைய நம்பிக்கைகளுக்கும் எதிராக அதிக கசப்படைந்தவர்களாக ஆனார்கள்.
ஒரு விவாதத்தின்போது, டின்டேலின் மத எதிரிகளில் ஒருவர் இவ்வாறு அடித்துக்கூறினார்: “போப்பின் சட்டங்களுக்கு மேலாக கடவுளுடைய சட்டங்களை வைக்கவேண்டிய அவசியமில்லை.” டின்டேல் இதற்கு “போப்பையும் அவருடைய எல்லா சட்டங்களையும் நான் எதிர்க்கிறேன். கடவுள் என்னை உயிரோடிருக்க அனுமதித்தால், இன்னும் பல ஆண்டுகள் செல்வதற்கு முன்பாகவே உங்களுக்குத் தெரிந்திருப்பதைவிட நிலத்தை உழுகின்ற ஒரு சிறுவன் வேதாகமத்தை அதிகமாக அறிந்துகொள்ளும்படி செய்வேன்” என்று பதிலளித்தபோது அவருடைய மன உறுதியைக் கற்பனை செய்துபாருங்கள். டின்டேலின் மனஉறுதிக்கு பலன் கிடைத்தது. அவர் பின்னால் இவ்வாறு எழுதினார்: “பாமர மக்கள் வேதவாக்கியங்களின் சாராம்சத்தையும் வரிசை கிரமத்தையும் அர்த்தத்தையும் அவர்களாகவே தங்களுடைய சொந்த மொழியில் அறிந்துகொள்ளும் வகையில் அது அவர்களுக்குக் கிடைக்கும்படிச் செய்தாலொழிய அவர்களை உண்மையான பைபிள் போதனையில் வழிக்கு கொண்டுவர முடியாது என்பதை நான் அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டேன்.”
அந்தச் சமயத்தில், ஆங்கிலத்தில் அதுவரையில் எந்தப் பைபிளும் அச்சிடப்படவில்லை. ஆகவே 1523-ல் டின்டேல், மொழிபெயர்ப்பு திட்டத்துக்கு அனுமதியும் ஆதரவும் திரட்டுவதற்கு லண்டனுக்கு பிஷப் டன்ஸ்டாலிடம் சென்றார். ஏமாற்றமடைந்தவராய் இங்கிலாந்துக்கு மறுபடியும் ஒருபோதும் செல்வதில்லை என்ற தீர்மானத்தோடு தன்னுடைய நோக்கத்தைப் பின்தொடருவதற்காக அங்கிருந்து அவர் புறப்பட்டார். ஜெர்மனியில் காலோனில், அவருடைய அச்சாலை சோதனை செய்யப்பட்டது, டின்டேல் பைண்டு செய்யப்படாத விலைமதிப்புள்ள ஒரு சில தாள்களை எடுத்துக்கொண்டு ஓடவேண்டியதாயிற்று. இருந்தபோதிலும் ஜெர்மனியிலுள்ள உவார்ம்ஸில் அவருடைய ஆங்கில “புதிய ஏற்பாடு” குறைந்தபட்சம் 3,000 நகல்கள் பூர்த்திசெய்யப்பட்டிருந்தன. இவை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு 1526 ஆரம்பத்தில் அங்கே விநியோகிக்கப்பட்டன. இவற்றில் சில பைபிள்களை பிஷப் டன்ஸ்டல் வாங்கி எரித்து தன்னை அறியாமலே டின்டேல் தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உதவிசெய்து கொண்டிருந்தார்!
ஆராய்ச்சியில் தெளிவான புரிந்துகொள்ளுதல் கிடைக்கிறது
டின்டேல் தன்னுடைய பணியை மிகவும் அனுபவித்து செய்தார் என்பது தெளிவாக உள்ளது. தி கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆஃப் தி பைபிள் குறிப்பிடும்விதமாக, “வேதவாக்கியங்கள் இவருக்கு மகிழ்ச்சியைத் தந்தன, அவருடைய ஓசையில் காணப்படும் வேகமும் உயிரோட்டமும் அவருடைய மகிழ்ச்சியை எடுத்துச் சொல்கின்றன.” வேதாகமத்தை முடிந்தளவு திருத்தமாகவும் எளிமையான மொழியிலும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே டின்டேலின் குறிக்கோளாக இருந்தது. சர்ச்சின் கோட்பாட்டில் பல நூற்றாண்டுகளாக மூடி மறைக்கப்பட்டிருந்த பைபிள் சார்ந்த வார்த்தைகளின் பொருளை அவருடைய ஆராய்ச்சிகள் அவருக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. மரண பயத்தினாலோ அல்லது செல்வாக்கு அதிகம் பெற்றிருந்த அவருடைய விரோதியான சர் தாமஸ் மோரின் எழுத்துக்களின் மிரட்டலுக்கோ பயந்துவிடாமல், டின்டேல் தான் கண்டுபிடித்தவைகளை தன்னுடைய மொழிபெயர்ப்பில் சேர்த்தார்.
லத்தீனிலிருந்து மொழிபெயர்க்காமல் இராஸ்மஸின் மூல கிரேக்குவிலிருந்து மொழிபெயர்க்கையில், டின்டேல் அகாப்பே என்ற கிரேக்க வார்த்தையின் பொருளை முழுமையாகச் சொல்வதற்கு “தருமம்” என்பதற்குப் பதிலாக “அன்பு” என்ற வார்த்தையைத் தெரிந்துகொண்டார். “சர்ச்” என்ற வார்த்தைக்குப் பதிலாக “சபை” என்றும் “பிராயச்சித்தம்” என்பதற்கு பதிலாக “மனந்திரும்பு” என்றும் “மத குருக்கள்” என்பதற்கு பதிலாக “மூப்பர்கள்” என்றும் பயன்படுத்தினார். (1 கொரிந்தியர் 13:1-3; கொலோசெயர் 4:15, 16; லூக்கா 13:3, 5; 1 தீமோத்தேயு 5:17, டின்டேல்) இந்த மாற்றங்கள், சர்ச்சின் அதிகாரத்துக்கும், மத குருக்களிடம் பாவ அறிக்கை செய்வது போன்ற பாரம்பரியமான மத பழக்கங்களுக்கும் நாசம் விளைவிப்பதாக இருந்தன.
அதேவிதமாகவே, உத்தரிக்கும் ஸ்தலத்தையும் மரணத்துக்குப் பின் உணர்வோடிருப்பதையும் பைபிள்-ஆதாரமற்றது என்பதாக டின்டேல் நிராகரித்துவிட்டு, “உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தையையே தக்கவைத்துக்கொண்டார். இறந்தோரைப் பற்றி அவர் மோர் என்பவருக்கு இவ்வாறு எழுதினார்: “அவர்களை பரலோகத்திலும் நரகத்திலும் உத்தரிக்கும் ஸ்தலத்திலும் வைப்பதால் கிறிஸ்துவும் பவுலும் நிரூபிக்கும் உயிர்த்தெழுதலை [நீங்கள்] தகர்த்துவிடுகிறீர்கள்.” இதன் சம்பந்தமாக, டின்டேல் மத்தேயு 22:30-32 மற்றும் 1 கொரிந்தியர் 15:12-19-ஐ எடுத்துக் குறிப்பிட்டிருந்தார். எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடைபெறும் சமயம் வரையாக இறந்தோர் உணர்வற்றவர்களாயிருக்கின்றனர் என்ற சரியான நம்பிக்கையே அவருக்கு இருந்தது. (சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5; யோவான் 11:11, 24, 25) மரியாளிடமும் “புனிதர்களிடமும்” வேண்டிக்கொள்ளும் முழு ஏற்பாடும் அர்த்தமற்றது என்பதை இது அர்த்தப்படுத்தியது, ஏனெனில் தங்களுடைய உணர்வற்ற நிலையில் அவர்களால் கேட்கவோ அல்லது பரிந்துபேசவோ முடியாது.
டின்டேல் எபிரெய வேதாகமத்தை மொழிபெயர்க்கிறார்
1530-ல், டின்டேல் எபிரெய வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களாகிய ஐந்தாகமத்தின் (Pentateuch) பதிப்பை வெளியிட்டார். இவ்விதமாக பைபிளை எபிரெயுவிலிருந்து நேராக ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த முதல் நபர் இவரே. யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்திய முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாளரும் டின்டேலே. லண்டன் கல்விமான் டேவிட் டேனியேல் இவ்விதமாக எழுதுகிறார்: “கடவுளின் பெயர் புதிதாக வெளிப்படுத்தப்படுகிறது என்பது டின்டேலின் வாசகர்கள் மனதில் நிச்சயமாகவே வலிமையாக பதிந்துவிட்டிருக்கும்.”
தெளிவு வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு எபிரெய வார்த்தையை மொழிபெயர்க்க பல்வேறு ஆங்கில வார்த்தைகளை டின்டேல் பயன்படுத்தினார். இருப்பினும், எபிரெய இலக்கண அமைப்பை நெருக்கமாக பின்பற்றினார். இதன் விளைவு எபிரெய மொழியின் வலிமை நேர்த்தியாக காக்கப்பட்டிருக்கிறது. அவர்தாமே இவ்வாறு சொன்னார்: “எபிரெயு பாஷையின் தன்மை, லத்தீனைவிட ஆங்கிலத்தோடுதான் ஆயிரம் மடங்குகளுக்கும் மேல் அதிகமாக ஒத்திருக்கிறது. பேசும் விதம் இவ்விரண்டுக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது; ஆகவே அநேக இடங்களில் நீங்கள் எபிரெயுவை வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மாத்திரமே தேவையாக உள்ளது.”
அடிப்படையில் சொல்லர்த்தமாக இருந்த இந்த அணுகுமுறையினால் டின்டேலின் மொழிபெயர்ப்பில் எபிரெய சொற்றொடர்களின் வாடை வீசத்தான் செய்தது. முதல் முறையாக வாசிக்கையில் இவற்றில் சில மிகவும் விநோதமாக தோன்றியிருக்க வேண்டும். இருந்தபோதிலும் கடைசியாக பைபிள் அத்தனை பழக்கப்பட்டதாக ஆகிவிட்டபடியால், இந்தச் சொற்றொடர்களில் பல இப்பொழுது ஆங்கில மொழியின் பாகமாக இருக்கின்றன. (1 சாமுவேல் 13:14-ன்படி) ‘தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷன்’ (“a man after his own heart”), “பஸ்கா” (“passover”) மற்றும் “பலி ஆடு” (“scapegoat”) ஆகியவை உதாரணங்களில் அடங்கும். அதற்கும்மேலாக, ஆங்கில பைபிள் வாசகர்கள் இதன் மூலமாக எபிரெய கருத்தோடு பழக்கப்பட்டவர்களானார்கள், இது ஏவப்பட்ட வேதவாக்கியங்களின்பேரில் மேம்பட்ட உட்பார்வையை அளித்தது.
பைபிளுக்கும் டின்டேலுக்கும் தடை
ஒருவருடைய சொந்த மொழியில் கடவுளுடைய வார்த்தையை வாசிக்க முடிவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிய கட்டாக வரும் துணிகள் அல்லது மற்ற சரக்குகளைப் போல அதை மறைத்து நாட்டிற்குள் கடத்திக்கொண்டு வரக்கூடிய எல்லா பைபிள்களையும் வாங்கினார்கள். இதற்கிடையில், எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரமுடையதாக பைபிள் கருதப்படுமேயானால் தாங்கள் இழந்துபோகக்கூடிய ஸ்தானத்தைக் குறித்து பாதிரிமார் மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்தனர். ஆகவே, மொழிபெயர்ப்பாளருக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் நிலைமை வாழ்வா, சாவா என்று ஆனது.
சர்ச்சும் அரசும் இவரை விடாமல் துரத்திக்கொண்டிருக்கையில், டின்டேல் பெல்ஜியத்தில் ஆன்ட்வெர்ப்பில் தலைமறைவாக இருந்து தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். இருந்தாலும் வாரத்துக்கு இரண்டு நாட்கள் மற்ற இங்கிலாந்து நாட்டு அகதிகளுக்கும் ஏழைகளுக்கும் வியாதிப்பட்டவர்களுக்கும் ஊழியம் செய்து வந்தார், இதை தன்னுடைய நேரப்போக்கு என்பதாக அவர் அழைத்தார். தன்னிடமிருந்த பணத்தில் பெரும்பகுதியை இவ்விதமாக அவர் செலவழித்தார். எபிரெய வேதாகமத்தின் பிற்பகுதியை அவர் மொழிபெயர்ப்பதற்குள்ளாக, நண்பனாக நடித்து ஏமாற்றி ஒரு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மனிதன் பணத்துக்காக டின்டேலைக் காட்டிக்கொடுத்துவிட்டான். 1536-ல் பெல்ஜியத்தில் வில்வோர்டியில் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டபோது, “கர்த்தாவே! இங்கிலாந்து அரசனின் கண்களைத் திறந்தருளும்” என்பதே அவர் பொறுக்க முடியாமல் சொன்ன கடைசி வார்த்தைகளாகும்.
1538-க்குள், எட்டாம் கிங் ஹென்றி தன்னுடைய சொந்த உள்நோக்கங்களுக்காக இங்கிலாந்திலுள்ள ஒவ்வொரு சர்ச்சிலும் பைபிள்கள் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கான பாராட்டு டின்டேலுக்கு போய் சேராவிட்டாலும், அவருடைய மொழிபெயர்ப்பே இதற்கு தெரிவு செய்யப்பட்டது. இவ்விதமாக டின்டேலின் படைப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் விரும்பப்பட்டதாகவும் ஆனதால், இதுவே ஆங்கிலத்தில் “அதற்குப் பின்வந்த பெரும்பாலான மொழிபெயர்ப்புகளின் அடிப்படை இயல்பினை தீர்மானம் செய்வதாக இருந்தது.” (த கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆஃப் த பைபிள்) டின்டேலின் மொழிபெயர்ப்பில் 90 சதவீதம் 1611-ன் கிங் ஜேம்ஸ் வர்ஷனில் நேரடியாக பார்த்து எழுதப்பட்டது.
பைபிளைத் தடையில்லாமல் பெற்றுக்கொள்ள முடிந்தது இங்கிலாந்துக்கு பெரிய ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது. சர்ச்சுகளில் வைக்கப்பட்டிருந்த பைபிள்களைக் குறித்து செய்யப்பட்ட கலந்தாலோசிப்புகள் அத்தனை உயிரோட்டமுள்ளதாக இருந்ததால் சில சமயங்களில் சர்ச் ஆராதனையோடு அவை குறுக்கிட்டன! “கடவுளுடைய வார்த்தையை நேரடியாக வாசிப்பதற்காக வயதானவர்கள் வாசிக்க கற்றுக்கொண்டார்கள், பிள்ளைகள் செவிகொடுத்துக் கேட்பதற்காக வயதானவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.” (எ கன்சைஸ் ஹிஸ்டரி ஆஃப் த இங்லிஷ் பைபிள்) இந்தக் காலப்பகுதியில்தான் மற்ற ஐரோப்பிய தேசங்களிலும் மொழிகளிலும் பைபிள் விநியோகத்தில் திடீரென அதிகரிப்புகள் ஏற்பட்டன. ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற பைபிள் இயக்கம் உலகம் முழுவதிலும் செல்வாக்கு செலுத்தவிருந்தது. இது எவ்வாறு நிகழ்ந்தது? மேலுமான கண்டுபிடிப்பும் ஆராய்ச்சியும் எவ்விதமாக நாம் இன்று பயன்படுத்தும் பைபிள்களைப் பாதித்துள்ளன? இந்தத் தொடரில் அடுத்த கட்டுரையோடு எமது விவரமான அறிக்கை முற்றுப்பெறும்.
[பக்கம் 26-ன் படம்]
டின்டேலின் 1526 “புதிய ஏற்பாடு”—தீயிலிருந்து தப்பியதாக அறியப்பட்ட ஒரேவொரு முழுப் பிரதி
[படத்திற்கான நன்றி]
© The British Library Board
[பக்கம் 26, 27-ன் வரைப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பைபிள் கடந்து வந்த முக்கிய தேதிகள்
பொது சகாப்தம்
வைக்கிளிப்பின் பைபிளின் துவக்கம் (1384-க்கு முன்)
1400
ஹஸ் 1415-ல் ஹஸ்ஸிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
குட்டன்பர்க்—முதலாவது அச்சிடப்பட்ட பைபிள் சுமார் 1455
1500
பிராந்திய மொழியில் ஆரம்பத்தில் அச்சிடப்பட்டவை
இராஸ்மஸ் கிரேக்க வாசகம் 1516
டின்டேலின். “புதிய ஏற்பாடு” 1526
டின்டேலுக்கு 1536-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
எட்டாம் ஹென்றி 1538-ல் சர்ச்சுகளில் பைபிள்கள் வைக்கப்பட வேண்டும் என்று
உத்தரவிடுகிறார்
1600
கிங் ஜேம்ஸ் பைபிள் 1611
[படங்கள்]
வைக்கிளிப்
ஹஸ்
டின்டேல்
எட்டாம் ஹென்றி