யெகோவா சமாதானத்தையும் சத்தியத்தையும் ஏராளமாக அருளுகிறார்
“நான் . . . அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.”—எரேமியா 33:6.
1, 2. (அ) சமாதானத்தைக் குறித்ததில் தேசங்களின் பதிவு என்ன? (ஆ) சமாதானத்தைப் பற்றிய என்ன பாடத்தை பொ.ச.மு. 607-ல் யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்தார்?
சமாதானம்! எவ்வளவு விரும்பத்தக்கதாக இருக்கிறது, எனினும் மனித சரித்திரத்தில் அது எவ்வளவு அரிதாக இருந்திருக்கிறது! முக்கியமாய், இந்த 20-வது நூற்றாண்டு, சமாதானமான நூற்றாண்டாக இருக்கவில்லை. மாறாக, மனித சரித்திரத்திலேயே மிகப் பெரும் அழிவுக்குரிய இரண்டு போர்களை இது கண்டிருக்கிறது. முதல் உலகப் போருக்குப் பின்பு, உலக சமாதானத்தைப் பாதுகாத்துவரும்படி சர்வதேச சங்கம் ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பு தோல்வியுற்றது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, அதே இலக்குடன் ஐக்கிய நாட்டு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இதுவும் எவ்வளவு முழுமையாகத் தோல்வியடைந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண்பதற்கு தினசரி செய்தித்தாள்களை நாம் வாசித்தாலே போதும்.
2 மனித அமைப்புகள் சமாதானத்தைக் கொண்டுவர முடியாததன்பேரில் நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? சற்றேனும் இல்லை. 2,500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால், கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலுக்கு, இதைக் குறித்ததில் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது. பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டில், உலக வல்லரசாக எழும்பின பாபிலோனால், இஸ்ரவேலின் சமாதானம் பயமுறுத்தப்பட்டது. சமாதானத்துக்காக இஸ்ரவேல் எகிப்தினிடம் எதிர்நோக்கினது. எகிப்து தோல்வியடைந்தது. (எரேமியா 37:5-8; எசேக்கியேல் 17:11-15) பொ.ச.மு. 607-ல், பாபிலோனிய சேனைகள் எருசலேமின் மதில்களை இடித்துத் தள்ளி யெகோவாவின் ஆலயத்தை எரித்துப் போட்டன. இவ்வாறு, மனித அமைப்புகளின்மீது நம்பிக்கை வைப்பதன் பயனின்மையை இஸ்ரவேல் கடினமான முறையில் கற்றது. சமாதானம் அனுபவிப்பதற்குப் பதிலாக, இந்த ஜனம், சிறைப்படுத்தி பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.—2 நாளாகமம் 36:17-21.
3. எரேமியாவின் மூலம் சொல்லப்பட்ட யெகோவாவுடைய வார்த்தைகளின் நிறைவேற்றமாக, சரித்திரப்பூர்வமான என்ன சம்பவங்கள் சமாதானத்தைப் பற்றிய முக்கியமான இரண்டாவது பாடத்தை இஸ்ரவேலுக்குக் கற்பித்தன?
3 எனினும், எகிப்து அல்ல, யெகோவா தாமே இஸ்ரவேலுக்கு உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருவாரென்று எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்னால் அவர் வெளிப்படுத்தியிருந்தார். எரேமியாவின் மூலம் இவ்வாறு வாக்களித்திருந்தார்: ‘நான் . . . அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததைப்போல அவர்களைக் கட்டுவிப்பேன்.’ (எரேமியா 33:6, 7) பொ.ச.மு. 539-ல், பாபிலோன் வென்று கைப்பற்றப்பட்டு, நாடுகடத்தப்பட்டிருந்த இஸ்ரவேலருக்கு விடுதலை அளிக்கப்பட்டபோது, யெகோவாவின் வாக்குத்தத்தம் நிறைவேறத் தொடங்கினது. (2 நாளாகமம் 36:22, 23) பொ.ச.மு. 537-ன் பிற்பகுதிக்குள், ஒரு தொகுதியான இஸ்ரவேலர், 70 ஆண்டுகளில் முதல் தடவையாக, இஸ்ரவேலின் மண்ணின்மீது கூடாரப் பண்டிகையை ஆசரித்தனர்! அந்தப் பண்டிகைக்குப் பின்பு, யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்குத் தொடங்கினர். இதைக் குறித்து அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்? பதிவு சொல்வதாவது: “யெகோவாவைத் துதிக்கையில், . . . யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்டதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரித்தார்கள்.”—எஸ்றா 3:11, தி.மொ.
4. ஆலயம் கட்டும் வேலையைச் செய்வதற்கு யெகோவா இஸ்ரவேலரை எவ்வாறு தூண்டி ஊக்குவித்தார், சமாதானத்தைப் பற்றி என்ன வாக்களித்தார்?
4 எனினும், இந்த மகிழ்ச்சிமிகுந்த தொடக்கத்திற்குப் பின்பு, எதிரிகளால் இஸ்ரவேலர் சோர்வடைய செய்யப்பட்டு, ஆலயம் கட்டும் வேலையை நிறுத்திவிட்டனர். சில ஆண்டுகளுக்குப் பின்பு, திரும்ப புதுப்பித்துக் கட்டும் வேலையைச் செய்து முடிக்க இஸ்ரவேலரைத் தூண்டி ஊக்கப்படுத்துவதற்கு, தீர்க்கதரிசிகளாகிய ஆகாயையும் சகரியாவையும் யெகோவா எழுப்பினார். கட்டப்படவிருந்த அந்த ஆலயத்தைக் குறித்து ஆகாய் இவ்வாறு சொன்னதைக் கேட்டது அவர்களுக்கு எவ்வளவு உணர்ச்சியார்வத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்: “முந்தின ஆலயத்தின் மகிமையிலும் பிந்தின இந்த ஆலயத்தின் மகிமை பெரிதாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன், இது சேனைகளுடைய யெகோவாவின் திருவாக்கு”!—ஆகாய் 2:9, தி.மொ.
யெகோவா தம்முடைய வாக்குகளை நிறைவேற்றுகிறார்
5. சகரியாவின் எட்டாம் அதிகாரத்தைப் பற்றி கவனிக்கத்தக்கதாய் இருப்பது என்ன?
5 முன்னே, பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் கடவுளுடைய ஜனங்களைப் பலப்படுத்தின, தேவாவியால் ஏவப்பட்ட மிகப்பல தரிசனங்களையும் தீர்க்கதரிசனங்களையும் பற்றி, பைபிள் புத்தகமாகிய சகரியாவில் நாம் வாசிக்கிறோம். இதே தீர்க்கதரிசனங்கள், யெகோவாவின் ஆதரவை நமக்குத் தொடர்ந்து நிச்சயப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நம்முடைய நாளிலும்கூட யெகோவா தம்முடைய ஜனத்துக்குச் சமாதானத்தைத் தருவாரென்று நம்புவதற்கு அவை எல்லா காரணங்களையும் நமக்கு அளிக்கின்றன. உதாரணமாக, தீர்க்கதரிசியாகிய சகரியா, தன் பெயரைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் எட்டாவது அதிகாரத்தில், பத்து தடவைகள் இவ்வார்த்தைகளைக் கூறுகிறார்: “யெகோவா இப்படிச் சொல்லுகிறார்.” (தி.மொ.) இந்தக் கூற்று, கடவுளுடைய ஜனங்களின் சமாதானத்தோடு சம்பந்தப்பட்ட தேவ அறிவிப்பு ஒன்றை ஒவ்வொரு சமயத்திலும் அறிமுகப்படுத்துகிறது. இந்த வாக்குகளில் சில, முன்னே சகரியாவின் நாளில் நிறைவேற்றமடைந்தன. எல்லாம் நிறைவேற்றமடைந்திருக்கின்றன அல்லது இன்று நிறைவேறிக் கொண்டிருக்கும் போக்கில் இருக்கின்றன.
‘நான் சீயோனுக்காக வைராக்கியம் கொள்வேன்’
6, 7. என்ன வழிகளில் யெகோவா ‘அதிக உக்கிரத்தோடே சீயோனைப்பற்றி வைராக்கியங்கொண்டார்’?
6 இந்தக் கூற்று சகரியா 8:2-ல் (தி.மொ.) முதலாவதாக காணப்படுகிறது, அங்கே அது வாசிப்பதாவது: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார், நான் சீயோனைப் பற்றி மிகுந்த வைராக்கியங்[கொள்வேன்]; அதிக உக்கிரத்தோடே அதைப்பற்றி வைராக்கியங்[கொள்வேன்].” தம்முடைய ஜனத்துக்காக வைராக்கியமுடையவராக, மிகுந்த பற்றார்வமுடையவராக இருப்பாரென்ற யெகோவாவின் வாக்கானது, அவர்களுடைய சமாதானத்தைத் திரும்ப நிலைநாட்டுவதில் அவர் விழிப்புள்ளவராக இருப்பார் என்று பொருள்பட்டது. இஸ்ரவேலை அதன் தேசத்தில் திரும்ப நிலைநாட்டினதும் ஆலயம் திரும்பக் கட்டப்பட்டதும் அந்த ஆர்வத்தின் அத்தாட்சிகளாக இருந்தன.
7 எனினும், யெகோவாவின் ஜனங்களுக்கு எதிரிகளாயிருந்தவர்களைப் பற்றியதென்ன? தம்முடைய ஜனத்துக்கான அவருடைய வைராக்கியத்துக்குச் சமமாக இந்தச் சத்துருக்களின்மீது அவருடைய ‘அதிக உக்கிர’ கோபம் இருக்கும். திரும்பக் கட்டப்பட்ட ஆலயத்தில் உண்மையுள்ள யூதர்கள் வணங்கினபோது, அப்போது வீழ்ச்சியடைந்திருந்த பலத்த பாபிலோனின் அவல முடிவைப்பற்றி நினைத்துப் பார்ப்பவர்களாக இருந்திருப்பார்கள். மேலுமாக, ஆலயம் திரும்பக் கட்டப்படுவதைத் தடுத்துநிறுத்த முயற்சி செய்திருந்த சத்துருக்களின் முழுமையான தோல்வியையும் பற்றி அவர்கள் சிந்திக்கக்கூடும். (எஸ்றா 4:1-6; 6:3) மேலும், தம்முடைய வாக்கை நிறைவேற்றினதற்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்தவும் கூடும். அவருடைய வைராக்கியம் அவர்களுக்கு வெற்றியைக் கொண்டுவந்தது!
“உண்மைவிளங்கும் நகரம்”
8. சகரியாவின் நாட்களில், எருசலேம் எவ்வாறு, முந்தின காலங்களுக்கு மாறாக ‘உண்மைவிளங்கும் நகரமாகும்’?
8 இரண்டாவது முறையாக சகரியா எழுதுகிறார்: “யெகோவா சொல்வது இதுவே.” இந்தச் சந்தர்ப்பத்தில் யெகோவாவின் வார்த்தைகள் யாவை? “நான் சீயோனிடம் திரும்பி எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் உண்மைவிளங்கும் நகரம் என்றும் சேனைகளுடைய யெகோவாவின் பர்வதம், பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும்.” (சகரியா 8:3, தி.மொ.) பொ.ச.மு. 607-க்கு முன்பாக, எருசலேம் எவ்வகையிலும் உண்மைவிளங்கும் நகரமாக இருக்கவில்லை. அதன் ஆசாரியரும் தீர்க்கதரிசிகளும் சீர்கெட்டவர்களாக இருந்தார்கள், அதன் ஜனங்கள் உண்மையற்றவர்களாக இருந்தார்கள். (எரேமியா 6:13; 7:29-34; 13:23-27) இப்போது கடவுளுடைய ஜனங்கள், உண்மையான வணக்கத்திற்கு தங்கள் கடமையுணர்ச்சியைக் காட்டுவோராக, ஆலயத்தைத் திரும்பக் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆவியில் யெகோவா மறுபடியும் ஒரு முறையாக எருசலேமில் வாசம் செய்தார். தூய்மையான வணக்கத்தின் சத்தியங்கள் அதில் மறுபடியுமாகப் பேசப்பட்டன, ஆகவே எருசலேம் “உண்மைவிளங்கும் நகரம்” என்று அழைக்கப்படலாம். அதன் உயர்ந்த இருப்பிடம் “யெகோவாவின் பர்வதம்” என்றழைக்கப்படலாம்.
9. நிலைமையில் குறிப்பிடத்தக்க என்ன மாற்றத்தை 1919-ல் ‘கடவுளின் இஸ்ரவேல்’ அனுபவித்தது?
9 இந்த இரண்டு அறிவிப்புகளும் பூர்வ இஸ்ரவேலருக்குக் உட்கருத்துடையவையாக இருந்தனவெனினும், இந்த 20-வது நூற்றாண்டு முடியவிருக்கிறபோது, நமக்கும் அதிக உட்கருத்துடையவையாக இருக்கின்றன. பெரும்பாலும் 80 ஆண்டுகளுக்கு முன்பாக, முதல் உலகப் போரின்போது, ‘கடவுளின் இஸ்ரவேலை’ அப்போது பிரதிநிதித்துவம் செய்த சில ஆயிரம் பேரான அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், பூர்வ இஸ்ரவேலர் பாபிலோனில் சிறையிருப்புக்குள் சென்றிருந்ததுபோல், ஆவிக்குரிய சிறையிருப்புக்குள் சென்றுவிட்டனர். (கலாத்தியர் 6:16, தி.மொ.) தீர்க்கதரிசன முறைப்படி அவர்கள், வீதியில் பிணங்களாகக் கிடப்பதுபோல் விவரிக்கப்பட்டனர். இருப்பினும், யெகோவாவை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குவதற்கான உள்ளப்பூர்வ ஆவல் அவர்களுக்கு இருந்தது. (யோவான் 4:24) ஆகவே 1919-ல், யெகோவா, அவர்களை ஆவிக்குரிய மரித்த நிலையிலிருந்து எழுப்பி, அவர்களுடைய சிறையிருப்பை நீக்கினார். (வெளிப்படுத்துதல் 11:7-13) இவ்வாறு யெகோவா, ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசன கேள்விக்கு ஆம் என்று எதிரொலிக்கும் பதிலளித்தார்: “ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ?” (ஏசாயா 66:8) 1919-ல், யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய ஒரு ஜனமாக, தங்கள் சொந்த ‘தேசத்தில்,’ அல்லது பூமியில் தங்களுடைய ஆவிக்குரிய நிலைமையில் மறுபடியுமாக இருந்தனர்.
10. 1919-ல் தொடங்கி, என்ன ஆசீர்வாதங்களை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் ‘தேசத்தில்’ அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்?
10 அந்தத் தேசத்தில் பாதுகாப்பாயிருப்போராக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், யெகோவாவின் ஆவிக்குரிய பெரிய ஆலயத்தில் சேவித்தனர். அவர்கள் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ நியமிக்கப்பட்டு, இயேசுவின் பூமிக்குரிய உடைமைகளைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றனர். இது, இந்த 20-வது நூற்றாண்டு அதன் முடிவை நெருங்குகையில் அவர்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு சிலாக்கியமாகும். (மத்தேயு 24:45-47, NW) யெகோவா “சமாதானத்தின் தேவன் தாமே” என்ற பாடத்தை அவர்கள் நன்றாய்க் கற்றனர்.—1 தெசலோனிக்கேயர் 5:23.
11. எவ்வாறு கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள் கடவுளுடைய ஜனங்களின் சத்துருக்களாகத் தங்களைக் காட்டியிருக்கின்றனர்?
11 எனினும், கடவுளுடைய இஸ்ரவேலின் சத்துருக்களைப் பற்றியதென்ன? தம்முடைய ஜனத்துக்கான யெகோவாவின் வைராக்கியத்துக்கு ஈடாக, எதிரிகளுக்கு விரோதமான அவருடைய உக்கிரகோபம் உள்ளது. முதல் உலகப் போரின்போது, கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள், சத்தியத்தைப் பேசும் கிறிஸ்தவர்களின் இந்தச் சிறிய தொகுதியை ஒழித்துப்போடும்படி முயற்சிசெய்து, மிகுதியான நெருக்கடிகளை அவர்கள்மீது கொண்டுவந்தனர்—தோல்வியுமடைந்தனர். இரண்டாவது உலகப் போரின்போது, கிறிஸ்தவமண்டல பாதிரிமார் இந்த ஒரே ஒரு காரியத்தில் மாத்திரமே ஒன்றிணைந்திருந்தனர்: போரின் இரு சார்பினரிலும் இருந்த அவர்கள், யெகோவாவின் சாட்சிகளை அடக்கும்படி அரசாங்கங்களைத் தூண்டிவிட்டனர். இன்றும், பல நாடுகளில் மதத் தலைவர்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ பிரசங்க ஊழியத்தைத் தடை செய்யும்படி அல்லது அதன்பேரில் தடையுத்தரவு போடும்படி, அரசாங்கங்களைத் தூண்டி வற்புறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
12, 13. கிறிஸ்தவமண்டலத்திற்கு எதிராக யெகோவாவின் உக்கிர கோபம் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது?
12 யெகோவா இதைக் கவனியாமல் விட்டில்லை. முதல் உலகப் போருக்குப் பின், கிறிஸ்தவமண்டலம், மகா பாபிலோனின் மீதி பாகத்தோடுகூட ஒரு வீழ்ச்சியை அனுபவித்தது. (வெளிப்படுத்துதல் 14:8) 1922-ல் தொடங்கி, அதன் ஆவிக்குரிய செத்த நிலைமையை யாவரறிய வெளிப்படுத்தி, வரவிருக்கும் அதன் அழிவைக் குறித்து எச்சரித்து, அடையாளப்பூர்வமான வாதைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து ஊற்றப்பட்டபோது, கிறிஸ்தவமண்டலத்தின் வீழ்ச்சியைப்பற்றிய மெய்ம்மை யாவரும் அறிய வெளிப்படையாயிற்று. (வெளிப்படுத்துதல் 8:7–9:21) இந்த வாதைகள் ஊற்றப்படுவது தொடர்ந்துகொண்டு இருக்கிறதென்பதற்கு அத்தாட்சியாக, “பொய் மதத்தின் முடிவு சமீபம்” என்ற பேச்சு, 1995, ஏப்ரல் 23 அன்று உலகமெங்கும் கொடுக்கப்பட்டு, இதைப் பின்தொடர்ந்து, ராஜ்ய செய்தியின் விசேஷித்த வெளியீடு ஒன்றின் கோடிக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.
13 இன்று, கிறிஸ்தவமண்டலம் வருந்தத்தக்க நிலையிலுள்ளது. 20-வது நூற்றாண்டு முழுவதிலும், அதன் உறுப்பினர், அதன் குருமாராலும் பாதிரிமாராலும் ஆசீர்வதிக்கப்பட்ட கொடிய போர்களில் ஒருவரையொருவர் கொன்றிருக்கின்றனர். சில நாடுகளில் அதன் செல்வாக்கு பெரும்பாலும் ஒழிந்துபோயிற்று. மகா பாபிலோனின் மீதிபாகத்தோடுகூட அது அழிவடையும்படியே தீர்க்கப்பட்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:21.
யெகோவாவின் ஜனங்களுக்கு சமாதானம்
14. சமாதானமாக இருக்கிற ஒரு ஜனத்தைக் குறித்து, தீர்க்கதரிசன வார்த்தையில் என்ன காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது?
14 மறுபட்சத்தில், இந்த ஆண்டாகிய 1996-ல், யெகோவாவின் ஜனங்கள், யெகோவாவின் மூன்றாவது அறிவிப்பில் விவரிக்கப்பட்டிருக்கிறபடி, திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கிற தங்கள் தேசத்தில் மிகுதியான சமாதானத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார், திரும்பவும் எருசலேமின் வீதிகளில் கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள், வயோதிகராயிருப்பதினாலே அவர்கள் கோல்பிடித்து நடப்பார்கள். நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்.”—சகரியா 8:4, 5, தி.மொ.
15. தேசங்களுடைய போர்களின் மத்தியிலும், என்ன சமாதானத்தை யெகோவாவின் ஊழியர்கள் அனுபவித்து வந்திருக்கின்றனர்?
15 வார்த்தைகளில் விவரிக்கப்படுகிற இந்த மகிழ்ச்சிதரும் காட்சி, போரால் பாழ்படுத்தப்படுகிற இந்த உலகத்தில் கவனிக்கத்தக்க ஒன்றை—சமாதானமாயிருக்கும் ஒரு ஜனத்தை—வருணிக்கிறது. 1919 முதற்கொண்டு, ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேற்றமடைந்து வந்திருக்கின்றன: “தூரமாயிருப்பவருக்கும் சமாதானம், சமீபமாயிருப்பவருக்கும் சமாதானம் . . . நானே அவர்களைக் குணமாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். . . . தெய்வபயமற்றவருக்குச் சமாதானம் இல்லை என்று என் கடவுள் சொல்லுகிறார்.” (ஏசாயா 57:19-21, தி.மொ.) நிச்சயமாகவே, யெகோவாவின் ஜனங்கள், உலகத்தின் பாகமாக இராதபோதிலும், தேசங்களின் கொந்தளிப்பால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. (யோவான் 17:15, 16, NW) சில நாடுகளில் கடுமையான இக்கட்டுகளை அவர்கள் சகிக்கின்றனர், சிலர் கொல்லப்பட்டுமிருக்கின்றனர். எனினும், உண்மையான கிறிஸ்தவர்களுக்கு, இரண்டு முக்கியமான வழிகளில் சமாதானம் உண்டு. முதலாவதாக, தங்கள் “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம்.” (ரோமர் 5:1) இரண்டாவதாக, அவர்கள் தங்கள் மத்தியில் சமாதானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ அவர்கள் வளர்க்கிறார்கள், அது ‘முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமுள்ளதாயும்’ இருக்கிறது. (யாக்கோபு 3:17; கலாத்தியர் 5:22-24) மேலும், ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது,’ மிகப் பூரணமான கருத்தில் சமாதானத்தை அனுபவித்து மகிழ்வதற்கு அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.—சங்கீதம் 37:11.
16, 17. (அ) எவ்வாறு ‘கிழவரும் கிழவிகளும்’ அவர்களோடுகூட ‘ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும்’ யெகோவாவின் அமைப்பைப் பலப்படுத்தியிருக்கின்றனர்? (ஆ) யெகோவாவின் ஜனங்களுடைய சமாதானத்தை எது மெய்ப்பித்துக் காட்டுகிறது?
16 யெகோவாவின் அமைப்பினுடைய தொடக்ககால வெற்றிகளை நினைவில் வைத்திருக்கிற அபிஷேகம் செய்யப்பட்டவர்களான, ‘கிழவரும் கிழவிகளும்’ யெகோவாவின் ஜனங்களுக்குள் இன்னும் இருக்கின்றனர். அவர்களுடைய உண்மையான போக்கும் சகிப்புத்தன்மையும் வெகுவாய் மதிக்கப்படுகின்றன. 1930-க்குரிய பத்தாண்டுகளின் கடுமையான நாட்களின்போதும் இரண்டாம் உலகப் போரின்போதும் அதைப் பின்தொடர்ந்த கிளர்ச்சியூட்டின வளர்ச்சிக்குரிய ஆண்டுகளின்போதும், இளைஞராயிருந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தலைமைதாங்கி நடத்தினர். மேலுமாக, முக்கியமாய் 1935 முதற்கொண்டு, ‘மற்ற செம்மறியாடுகளின்’ ‘திரள் கூட்டம்’ தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது. (யோவான் 10:16, NW; வெளிப்படுத்துதல் 7:9) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் முதியோரும் சொற்பருமாகியிருக்கையில், இந்த மற்ற செம்மறியாடுகள் பிரசங்க ஊழியத்தை ஏற்று அதை பூமி முழுவதிலும் பரவச் செய்திருக்கின்றனர். சமீப ஆண்டுகளில் மற்ற செம்மறியாடுகள் கடவுளுடைய ஜனங்களின் தேசத்துக்குள் ஏராளமாக வந்துகொண்டிருக்கின்றனர். சென்ற ஆண்டில் மாத்திரமே, அவர்களில் 3,38,491 பேர் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டப்பட்டனர்! ஆவிக்குரிய முறையில் பேசினால், இத்தகைய புதியவர்கள் நிச்சயமாகவே வெகு இளைஞர்களாக இருக்கிறார்கள். ‘சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற நம்முடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்’ நன்றியறிதலுள்ள துதிகளைப் பாடுகிறவர்களின் அணிவரிசைகளை இவர்கள் பெருகச் செய்துகொண்டிருக்கையில், இவர்களுடைய ஊக்கம் குன்றாத கிளர்ச்சியும் உணர்ச்சியார்வமும் போற்றப்படுகின்றன.—வெளிப்படுத்துதல் 7:10.
17 இன்று, இளைஞரைப் போன்ற சுறுசுறுப்புள்ள சாட்சிகளாகிய ‘ஆண்பிள்ளைகளாலும் பெண்பிள்ளைகளாலும் வீதிகள் நிறைந்திருக்கின்றன.’ 1995-ன் ஊழிய ஆண்டில், 232 நாடுகளிலிருந்தும் சமுத்திரத் தீவுகளிலிருந்தும் அறிக்கைகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் மற்ற செம்மறியாடுகளுக்கும் இடையே சர்வதேச போட்டியுணர்ச்சி இல்லை, குலமரபு பகைமை இல்லை, தகாத பொறாமை இல்லை. அன்பில் ஒன்றுபட்டு, ஆவிக்குரிய பிரகாரம் எல்லாரும் ஒன்றாக வளருகின்றனர். யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய சகோதரத்துவம், உலகக் காட்சியில் மெய்யாகவே தனிப்பட்டதாயுள்ளது.—கொலோசெயர் 3:14; 1 பேதுரு 2:17.
யெகோவாவுக்கு மிகக் கடினமானதா?
18, 19. மனித நோக்குநிலையிலிருந்து காண்கையில், மிகக் கடினமாகத் தோன்றியிருக்கக்கூடியதை எவ்வாறு யெகோவா, 1919 முதற்கொண்டுள்ள ஆண்டுகளில் நிறைவேற்றியிருக்கிறார்?
18 முன்னே 1918-ல், அபிஷேகம் செய்யப்பட்ட மீதிப்பேர், ஆவிக்குரிய சிறையிருப்பில், சோர்வுற்ற ஒருசில ஆயிர ஆத்துமாக்கள் அடங்கியோராகத்தானே இருந்தபோது, நிகழ்ச்சிகள் எடுக்கவிருந்த போக்கை ஒருவரும் முன்கண்டிருக்க முடியாது. இருப்பினும், யெகோவா அறிந்திருந்தார்—அவருடைய நான்காவது தீர்க்கதரிசன அறிவிப்பு காட்டுகிறபடி: “சேனைகளின் யெகோவா சொல்லியிருப்பது இதுவே, ‘அந்நாட்களில் இந்த ஜனத்தினுடைய மீதிப்பேரின் கண்களில் அது மிகக் கடினமாகத் தோன்றுமென்றாலும், என் கண்களிலும் அது மிகக் கடினமாகத் தோன்ற வேண்டுமா?’ என்பது சேனைகளின் யெகோவாவினுடைய வசனிப்பு.”—சகரியா 8:6, NW.
19 1919-ல், யெகோவாவின் ஆவி, அவருடைய ஜனங்களுக்கு முன்பாக இருந்த வேலைக்கு அவர்களை ஊக்குவித்து எழுப்பினது. இருப்பினும், யெகோவாவின் வணக்கத்தாரினுடைய அந்தச் சிறிய அமைப்பை விடாது பற்றியிருப்பதற்கு விசுவாசம் வேண்டியதாயிருந்தது. அவர்கள் மிகச் சொற்பப்பேராக இருந்தனர், மேலும், பல காரியங்கள் அவர்களுக்குத் தெளிவாக இல்லை. எனினும், அமைப்புமுறைப்படி, யெகோவா அவர்களைச் சிறிது சிறிதாகப் பலப்படுத்தி, நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் சீஷராக்குவதுமான கிறிஸ்தவ ஊழியத்திற்கு அவர்களைத் தகுதிபெறச் செய்தார். (ஏசாயா 60:17, 19; மத்தேயு 24:14; 28:19, 20) நடுநிலை வகிப்பு மற்றும் சர்வலோக உன்னத அரசதிகாரம் போன்ற முக்கிய விவாதங்களைத் தெளிவாக உணர்ந்துகொள்ளும்படி அவர்களுக்கு அவர் படிப்படியாக உதவிசெய்தார். சாட்சிகளின் அந்தச் சிறிய தொகுதியைக் கொண்டு தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவது யெகோவாவுக்கு மிகக் கடினமாக இருந்ததா? இல்லை! என்பதே நிச்சயமான பதில். இந்தப் பத்திரிகையில், 1995-ன் ஊழிய ஆண்டிற்கான யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தைக் குறித்த அட்டவணை ஆரம்பிக்கிற 12 முதல் 15 பக்கங்களில் இது உறுதிப்படுத்தப்படுகிறது.
“நான் அவர்களுக்குக் கடவுளாயிருப்பேன்”
20. கடவுளுடைய ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பது எவ்வளவு பரவலாக இருக்குமெனத் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது?
20 ஐந்தாவது அறிவிப்பானது இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய மகிழ்ச்சியான நிலைமையை மேலுமாகக் காட்டுகிறது: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார், இதோ, கிழக்கு தேசத்திலும் மேற்கு தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் ரட்சித்து அவர்களை அழைத்துக் கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் அவர்கள் எனக்கு ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்குக் கடவுளாயிருப்பேன்.”—சகரியா 8:7, 8, தி.மொ.
21. என்ன வகையில் யெகோவாவின் ஜனங்களுடைய மிகுதியான சமாதானம் பாதுகாக்கப்பட்டும் பரவச் செய்யப்பட்டும் வந்திருக்கிறது?
21 1966-ல், நற்செய்தி, ‘கிழக்கு தேசத்திலிருந்து மேற்கு தேசம்’ வரையாக உலகைச் சுற்றி பிரசங்கிக்கப்பட்டு வந்திருக்கிறதென்று நாம் தயங்காமல் சொல்லக்கூடும். சகல தேசங்களின் ஜனங்கள் சீஷராக்கப்பட்டிருக்கின்றனர். யெகோவாவினுடைய இந்த வாக்கின் நிறைவேற்றத்தை அவர்கள் கண்டிருக்கின்றனர்: “உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்படுவார்கள்; உன் பிள்ளைகளுக்குப் பெரிய சமாதானமிருக்கும்.” (ஏசாயா 54:13, தி.மொ.) நாம் யெகோவாவால் கற்பித்துப் பயிற்றுவிக்கப்படுவதனால் நமக்குச் சமாதானம் இருக்கிறது. இந்த நோக்கத்துடன் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் இலக்கியங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற ஆண்டில் மாத்திரமே, 21 கூடுதலான மொழிகள் சேர்க்கப்பட்டன. காவற்கோபுரம் பத்திரிகை இப்போது 111 மொழிகளிலும், விழித்தெழு! 54 மொழிகளிலும் ஒரே சமயத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. தேச மற்றும் சர்வதேச மாநாடுகள் கடவுளுடைய ஜனங்களின் சமாதானத்தை யாவரறிய கண்கூடாகக் காட்டுகின்றன. வாரக் கூட்டங்கள் நம்மை ஒற்றுமைப்படுத்தி, நாம் உறுதியாய் நிலைநிற்பதற்குத் தேவைப்படும் ஊக்கமூட்டுதலை நமக்கு அளிக்கின்றன. (எபிரெயர் 10:23-25) ஆம், யெகோவா தம்முடைய ஜனத்தை “உண்மையிலும் நீதியிலும்” கற்பித்துப் பயிற்றுவிக்கிறார். அவர் தம்முடைய ஜனத்துக்குச் சமாதானத்தை அருளுகிறார். அந்த நிறைவான சமாதானத்தில் பங்குகொள்ளும்படி நாம் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்!
நீங்கள் விளக்கக்கூடுமா?
◻ தற்காலங்களில், எவ்வாறு யெகோவா தம்முடைய ஜனத்துக்காக ‘அதிக உக்கிரத்தோடே வைராக்கியம்’ கொண்டிருக்கிறார்?
◻ போரால் பாழ்படுத்தப்படும் நாடுகளிலும் யெகோவாவின் ஜனங்கள் எவ்வாறு சமாதானத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்?
◻ எவ்வகையில் ‘வீதிகள் ஆண்பிள்ளைகளாலும் பெண்பிள்ளைகளாலும் நிறைந்திருக்கின்றன’?
◻ யெகோவாவின் ஜனங்கள் அவரால் கற்பிக்கப்படும்படி என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன?
[பக்கம் 12-15-ன் வரைப்படம்]
1995 உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
(அச்சிடப்பட்ட பிரதியைப் பார்க்கவும்)
[பக்கம் 8, 9-ன் படம்]
பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில், ஆலயத்தைத் திரும்பக் கட்டின உண்மையுள்ள யூதர்கள், யெகோவாவே சமாதானத்தின் நம்பத்தக்க ஒரே மூலகாரணர் என்பதைக் கற்றனர்