“சத்தியத்திலும் சமாதானத்திலும் பிரியங்கொள்ளுங்கள்”!
“சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: . . . சத்தியத்திலும் சமாதானத்திலும் பிரியங்கொள்ளுங்கள்.”—சகரியா 8:18, 19, தி.மொ.
1, 2. (அ) சமாதானத்தைக் குறித்த வரையில் மனிதவர்க்கத்தின் பதிவு என்னவாக இருக்கிறது? (ஆ) தற்போதைய இந்த உலகம் உண்மையான சமாதானத்தை ஏன் ஒருபோதும் காணாது?
“இந்த உலகத்துக்கு ஒருபோதும் சமாதானம் இருக்கவில்லை. எங்கேயாவது—அடிக்கடி ஒரே சமயத்தில் பல இடங்களில்—போர் எப்போதும் இருந்துவந்திருக்கிறது.” அ.ஐ.மா. மாஸச்சூஸட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மில்ட்டன் மேயர் இவ்வாறு சொன்னார். மனித இனத்தின்பேரில் எத்தகைய விசனகரமான ஒரு குறிப்புரை! மனிதர் சமாதானத்தை விரும்பியிருக்கின்றனரென்பது உண்மையே. அரசியலாளர்கள் அதைக் காத்துவருவதற்கு, ரோமர் காலத்தின் ரோம அமைதி நிலைநிறுத்தல் முறையிலிருந்து பனிப்போரின்போது “ஒருவருக்கொருவர் நிச்சயிக்கப்பட்ட அழிவு” வரையாக எல்லா வழிவகைகளையும் முயற்சி செய்து பார்த்திருக்கின்றனர். எனினும், முடிவில், அவர்களுடைய எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஏசாயா சொன்னபடி, ‘சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுதிருக்கிறார்கள்.’ (ஏசாயா 33:7) இது ஏன்?
2 ஏனெனில், பகையும் பேராசையும் இல்லாததிலிருந்தே நிலையான சமாதானம் தொடங்க வேண்டும்; சத்தியத்தில் அது ஆதாரம்கொண்டு நிலைநாட்டப்பட வேண்டும். சமாதானத்தைப் பொய்களின்மீது ஆதாரம்கொள்ள வைக்க முடியாது. இதனிமித்தமே யெகோவா, பூர்வ இஸ்ரவேலுக்குத் திரும்ப நிலைநாட்டப்படுவதையும் சமாதானத்தையும் வாக்களிக்கையில் இவ்வாறு சொன்னார்: “இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்.” (ஏசாயா 66:12) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளான பிசாசாகிய சாத்தான், ‘மனுஷகொலைபாதகன்,’ ஒரு கொலைகாரன், மற்றும் ‘பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்.’ (யோவான் 8:44; 2 கொரிந்தியர் 4:4) இத்தகைய கடவுளைக் கொண்ட ஓர் உலகம் எவ்வாறு என்றாவது சமாதானத்தை உடையதாயிருக்கக்கூடும்?
3. இக்கட்டான உலகத்தில் தம்முடைய ஜனங்கள் வாழ்கிறபோதிலும், கவனிக்கத்தக்க என்ன பரிசை யெகோவா அவர்களுக்கு அளித்திருக்கிறார்?
3 எனினும், கவனிக்கத்தக்கதாக, போரால் பாழாக்கப்படுகிற சாத்தானின் உலகத்தில் தம்முடைய ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருக்கையிலேயே, யெகோவா, அவர்களுக்குச் சமாதானத்தை அளிக்கிறார். (யோவான் 17:16) எரேமியாவின் மூலமாய்க் கொடுத்த தம்முடைய வாக்கை அவர், பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் நிறைவேற்றி, அவர்களைத் தங்கள் சுயதேசத்தில் திரும்ப நிலைநாட்டினபோது, தம்முடைய தனிப்பட்ட ஜனத்துக்குச் ‘சமாதானத்தையும் சத்தியத்தையும்’ அளித்தார். (எரேமியா 33:6) மேலும் இந்தக் கடைசி நாட்களில், இந்த உலகம் இதுவரையில் கண்டிருக்கிற இக்கட்டின் மிக மோசமான காலத்தினூடே அவர்கள் வாழ்ந்திருக்கிறபோதிலும், அவர் தம்முடைய ஜனத்துக்கு அவர்களுடைய ‘தேசத்தில்,’ அல்லது பூமிக்கடுத்த ஆவிக்குரிய நிலைமையில், ‘சமாதானத்தையும் சத்தியத்தையும்’ அளித்திருக்கிறார். (ஏசாயா 66:8; மத்தேயு 24:7-13; வெளிப்படுத்துதல் 6:1-8) சகரியா 8-வது அதிகாரத்தின் ஆராய்ச்சியை நாம் தொடருகையில், கடவுளால் அருளப்பட்ட சமாதானத்தையும் சத்தியத்தையும் பற்றி மேலும் ஆழ்ந்த மதித்துணர்வை அடைந்து, அதில் நம்முடைய பங்கைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்பதைக் காண்போம்.
“உங்கள் கைகள் திடப்படக்கடவது”
4. இஸ்ரவேலர் சமாதானத்தை அனுபவிக்க வேண்டுமானால், செயல்படும்படி சகரியா எவ்வாறு அவர்களை ஊக்கப்படுத்தினார்?
4 ஆறாவது தடவையாக சகரியா 8-வது அதிகாரத்தில் யெகோவாவிடமிருந்து வரும் ஆர்வக் கிளர்ச்சியூட்டும் இந்த அறிவிப்பை நாம் கேட்கிறோம்: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார்: சேனைகளுடைய யெகோவாவின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படி அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள் முதற்கொண்டு பேசின தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டு வருகிறவர்களே, தைரியங்கொள்ளுங்கள் [“உங்கள் கைகள் திடப்படக்கடவது,” UV]. இந்நாட்களுக்கு முன்னே மனிதனின் உழைப்பும் மிருகங்களின் உழைப்பும் பயன்படவில்லை; போவாரும் வருவாரும் சமாதானமாயிருப்பதற்குச் சத்துருக்கள் விடவில்லை. எல்லா மனிதரையும் ஒருவருக்கு விரோதமாக ஒருவரைத் தூண்டிவிட்டேன்.”—சகரியா 8:9, 10, தி.மொ.
5, 6. (அ) இஸ்ரவேலர் மனத்தளர்வுற்று இருந்ததனால், இஸ்ரவேலில் நிலைமை என்னவாக இருந்தது? (ஆ) இஸ்ரவேல் யெகோவாவின் வணக்கத்தை முதல் வைத்தால், என்ன மாற்றத்தை அவர் அதற்கு வாக்களித்தார்?
5 எருசலேமில் ஆலயம் திரும்பக் கட்டப்பட்டு வருகையில் சகரியா இந்த வார்த்தைகளைப் பேசினார். முன்னால், பாபிலோனிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேலர்கள் மனத்தளர்வுற்று ஆலயம் கட்டும் வேலையை நிறுத்திவிட்டனர். அவர்கள், தங்கள் சொந்த சௌகரியத்துக்குத் தங்கள் கவனத்தைத் திருப்பினதால், யெகோவாவிடமிருந்து அவர்களுக்கு ஆசீர்வாதமும் இல்லை, சமாதானமும் இல்லை. அவர்கள் தங்கள் நிலங்களைப் பயிர்செய்து, தங்கள் திராட்சத் தோட்டங்களுக்குக் கவனம் செலுத்தினபோதிலும், அவை செழிக்கவில்லை. (ஆகாய் 1:3-6) ‘பயன் [‘சம்பளம்,’ NW] இல்லாமல்’ அவர்கள் உழைப்பதைப்போல் இருந்தது.
6 இப்போது ஆலயம் திரும்பக் கட்டப்பட்டு வந்தபோது, ‘திடப்பட்டு,’ தைரியமாய் யெகோவாவினுடைய வணக்கத்தை முதலாவதாக வைக்கும்படி சகரியா யூதர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் அவ்வாறு செய்தால் என்ன நடக்கும்? “இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும் [“சமாதான விதை இருக்கும்,” NW]; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன். சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.” (சகரியா 8:11-13) இஸ்ரவேல் திடத்தீர்மானத்துடன் செயல்பட்டால், அது செழிக்கும். முன்னால், ஜாதியார், சாபத்துக்குரிய ஒரு உதாரணத்தைக் குறிப்பிட விரும்பினபோது, இஸ்ரவேலை அவர்கள் சுட்டிக்காட்ட முடிந்தது. இப்போதோ இஸ்ரவேல் ஆசீர்வாதத்துக்குரிய ஓர் உதாரணமாயிருக்கும். ‘தங்கள் கைகளைத் திடப்படுத்துவதற்கு’ எத்தகைய சிறந்த காரணம்!
7. (அ) 1995-ன் ஊழிய ஆண்டில் உச்சநிலையை எட்டின, கிளர்ச்சியூட்டும் என்ன மாற்றங்களை யெகோவாவின் ஜனங்கள் அனுபவித்தனர்? (ஆ) வருடாந்தர அறிக்கையைக் காண்கையில், பிரஸ்தாபிகள், பயனியர்கள், சராசரி மணிநேரங்கள் ஆகியவற்றில் எந்த நாடுகள் கவனிக்கத்தக்க பதிவைக் கொண்டிருப்பதாகக் காண்கிறீர்கள்?
7 இந்நாளைப் பற்றியதென்ன? 1919-க்கு முந்தின ஆண்டுகளில், யெகோவாவின் ஜனங்கள் ஆர்வத்தில் ஒருவாறு குறைவுபட்டனர். முதல் உலகப் போரில் அவர்கள் முழுமையான வகையில் நடுநிலை வகிக்கவில்லை, மேலும், தங்கள் அரசராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்க்கிலும் ஒரு மனிதனைப் பின்பற்றும் மனப்போக்கு அவர்களுக்கு இருந்தது. இதன் விளைவாக, சிலர், அமைப்புக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் உண்டான எதிர்ப்பால் மனம் தளர்ந்து போயினர். பின்பு, 1919-ல், யெகோவாவின் உதவியுடன் அவர்கள் தங்கள் கைகளைத் திடப்படுத்தினர். (சகரியா 4:6) யெகோவா அவர்களுக்குச் சமாதானத்தை அருளினார், அவர்கள் மிகப் பெரிய அளவில் முன்னேறினர். இது, 1995-ன் ஊழிய ஆண்டில் உச்சநிலையை எட்டிய கடந்த 75 ஆண்டுகளுக்குரிய அவர்களுடைய பதிவில் காணப்படுகிறது. ஒரு ஜனமாக, யெகோவாவின் சாட்சிகள், தேசாபிமானம், குலமரபு மனப்பான்மை, தப்பெண்ணம், மற்றும் பகைமைக்கு மூலகாரணங்களான மற்ற எல்லாவற்றையும் அறவே தவிர்க்கின்றனர். (1 யோவான் 3:14-18) யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தில் உண்மையான பற்றார்வத்துடன் அவரைச் சேவிக்கின்றனர். (எபிரெயர் 13:15; வெளிப்படுத்துதல் 7:15) தங்கள் பரலோகத் தகப்பனைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவதில், சென்ற ஆண்டில் மாத்திரமே, நூறு கோடி மணிநேரங்களுக்கு மேலாக அவர்கள் செலவிட்டனர்! ஒவ்வொரு மாதமும், 48,65,060 பைபிள் படிப்புகளை அவர்கள் நடத்தினர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 6,63,521 பேர் முழுநேர சேவையில் பங்குகொண்டனர். தங்கள் வணக்கத்தில் உண்மையாகவே ஊக்கமுள்ளோராயிருக்கும் ஒரு ஜனத்தை உதாரணமாய்க் கொடுப்பதற்குக் கிறிஸ்தவமண்டலத்திலுள்ள போதகர்கள் விரும்புகையில், அவர்கள் சில சமயங்களில் யெகோவாவின் சாட்சிகளை குறிப்பிடுகின்றனர்.
8. ‘சமாதான விதையிலிருந்து’ ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனியே எவ்வாறு பயனடையலாம்?
8 அவர்களுடைய ஆர்வத்தின் காரணமாக, யெகோவா தம்முடைய ஜனத்துக்குச் ‘சமாதான விதையைத்’ தருகிறார். அந்த விதையை நட்டு பயிர்செய்கிற ஒவ்வொரு நபரும், தன் இருதயத்திலும் தன் வாழ்க்கையிலும் சமாதானம் பெருகுவதைக் காண்பார். யெகோவாவுடனும் உடன் கிறிஸ்தவர்களுடனும் சமாதானத்தை நாடித் தொடருகிற, விசுவாசியான ஒவ்வொரு கிறிஸ்தவனும் யெகோவாவின் பெயர் தரித்த ஜனத்துக்குரிய சத்தியத்திலும் சமாதானத்திலும் பங்குகொள்கிறான். (1 பேதுரு 3:11; ஒப்பிடுக: யாக்கோபு 3:18.) இது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
“பயப்படாதிருங்கள்”
9. தம்முடைய ஜனத்தைக் கையாளுவதில் என்ன மாற்றத்தை யெகோவா வாக்குக்கொடுத்தார்?
9 இப்போது நாம் யெகோவாவிடமிருந்து வரும் ஏழாவது அறிவிப்பை வாசிக்கிறோம். அது என்ன? “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார்; உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களுக்குத் தீங்குசெய்யத் தீர்மானித்துப் பரிதபியாமலிருந்ததுபோல—இது சேனைகளின் யெகோவாவே சொல்வது—இப்படியே நான் இக்காலத்தில் திரும்பி எருசலேமுக்கும் யூதாவீட்டாருக்கும் நன்மைசெய்யத் தீர்மானித்திருக்கிறேன்; பயப்படாதிருங்கள்.”—சகரியா 8:14, 15, தி.மொ.
10. யெகோவாவின் சாட்சிகள் பயப்படவில்லை என்று அவர்களுடைய என்ன பதிவு காட்டுகிறது?
10 முதல் உலகப் போரின்போது யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய கருத்தில் சிதறடிக்கப்பட்டிருந்தபோதிலும், தங்களுடைய இருதயங்களில் சரியானதைச் செய்யவே அவர்கள் விரும்பினர். ஆகையால், யெகோவா, சிறிது சிட்சையை அளித்த பின்பு, அவர்களோடு கையாளும் தம்முடைய முறையை மாற்றினார். (மல்கியா 3:2-4) இன்று, நாம் பின்னால் நோக்கி அவர் செய்தவற்றிற்காக உள்ளார்வத்துடன் அவருக்கு நன்றிசெலுத்துகிறோம். உண்மைதான், நாம் ‘சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவோராக’ இருந்துவருகிறோம். (மத்தேயு 24:9) பலர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர், சிலர் தங்கள் விசுவாத்தினிமித்தமாக மரிக்கவும் செய்தனர். அக்கறையின்மையை அல்லது எதிர்ப்பை நாம் அடிக்கடி எதிர்ப்படுகிறோம். ஆனால் நாம் பயப்படுகிறதில்லை. காணக்கூடிய அல்லது காணக்கூடாத எந்த எதிர்ப்பைப் பார்க்கிலும் யெகோவா பலத்தவராக இருக்கிறாரென்று நாம் அறிந்திருக்கிறோம். (ஏசாயா 40:15; எபேசியர் 6:10-13) இந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதை நாம் நிறுத்திவிடமாட்டோம்: “யெகோவாவுக்கே காத்திரு; உன் இருதயத்தில் பலங்கொண்டு தைரியமாயிரு.”—சங்கீதம் 27:14, தி.மொ.
“ஒருவரோடொருவர் உண்மைபேசுங்கள்”
11, 12. யெகோவா தம்முடைய ஜனத்துக்கு அருளும் ஆசீர்வாதங்களில் முழுமையாகப் பங்குகொள்ள விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் எதை மனதில் வைக்க வேண்டும்?
11 யெகோவாவிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களில் முழுமையாகப் பங்குகொள்வதற்கு, நாம் நினைவில் வைக்க வேண்டிய காரியங்கள் இருக்கின்றன. சகரியா இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் செய்யவேண்டியவைகள் இவைகளே: ஒருவரோடொருவர் உண்மைபேசுங்கள், உங்கள் வாசல்களில் சமாதானத்துக்கேதுவான உண்மைத் தீர்ப்புகளைச் செய்யுங்கள். ஒருவனுக்கு விரோதமாய் ஒருவன் தன் இருதயத்தில் தீமை பிணைக்க வேண்டாம், பொய்யாணையில் பிரியங்கொள்ளாதிருங்கள், இவையெல்லாம் நான் பகைக்கும் காரியங்கள்; இது யெகோவாவின் திருவாக்கு.”—சகரியா 8:16, 17, தி.மொ.
12 உண்மை பேசும்படி யெகோவா நம்மை வலியுறுத்துகிறார். (எபேசியர் 4:15, 25) தீங்கான காரியங்களைச் சதிசெய்வோர், தன்னல லாபத்திற்காக உண்மையை மறைப்போர், அல்லது பொய் ஆணைகளிடுவோர் ஆகியோரின் ஜெபங்களுக்கு அவர் செவிகொடுக்கிறதில்லை. (நீதிமொழிகள் 28:9) விசுவாசதுரோகத்தை அவர் வெறுப்பதால், நாம் பைபிள் சத்தியத்தைப் பற்றிக்கொண்டிருக்கும்படி விரும்புகிறார். (சங்கீதம் 25:5; 2 யோவான் 9-11) மேலும், இஸ்ரவேலில் நகர வாசல்களிலிருந்த முதியோரைப்போல், நியாயவிசாரணை வழக்குகளைக் கையாளும் மூப்பர்கள் தங்கள் அறிவுரையையும் தீர்ப்புகளையும், தங்கள் சொந்த கருத்தின்பேரிலல்ல, பைபிள் சத்தியத்தின்பேரிலேயே ஆதாரம் கொண்டிருக்கச் செய்ய வேண்டும். (யோவான் 17:17) சண்டையிடும் கட்சிகளுக்கிடையே அவர்கள், கிறிஸ்தவ மேய்ப்பர்களாக, சமாதானத்தைத் திரும்ப நிலைநாட்டவும், மனம் திரும்பின பாவிகள் கடவுளுடன் சமாதானத்தைத் திரும்பப் பெறும்படி அவர்களுக்கு உதவிசெய்யவும் முயற்சி செய்து, ‘சமாதானத்துக்கேதுவானத் தீர்ப்பை’ நாடும்படி யெகோவா விரும்புகிறார். (யாக்கோபு 5:14, 15; யூதா 23) அதே சமயத்தில், தவறுசெய்வதில் வேண்டுமென்றே தொடர்ந்துகொண்டிருப்பதால் சபையின் சமாதானத்தைக் குலைப்போரைத் தைரியத்துடன் சபைநீக்கம் செய்து, அதன் சமாதானத்தை அவர்கள் பாதுகாக்கின்றனர்.—1 கொரிந்தியர் 6:9, 10.
‘மகிழ்ச்சியும் சந்தோஷமும்’
13. (அ) உபவாசம் சம்பந்தமாக என்ன மாற்றத்தை சகரியா தீர்க்கதரிசனமுரைத்தார்? (ஆ) என்ன உபவாசம் இஸ்ரவேலில் கைக்கொள்ளப்பட்டது?
13 இப்போது மதிப்பார்ந்த எட்டாவது அறிவிப்பு ஒன்றை நாம் கேட்கிறோம்: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார், நாலாம் மாதத்தின் உபவாசமும் ஐந்தாம் மாதத்தின் உபவாசமும் ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும் யூதா வீட்டாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல திருநாட்களாகவும் மாறிப்போகும்; சத்தியத்திலும் சமாதானத்திலும் பிரியங்கொள்ளுங்கள்.” (சகரியா 8:19, தி.மொ.) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ், இஸ்ரவேலர், பிராயச்சித்த நாளில் தங்கள் பாவங்களுக்காகத் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு உபவாசம் செய்தனர். (லேவியராகமம் 16:29-31) சகரியா குறிப்பிட்ட அந்த நான்கு உபவாசங்களும், எருசலேம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளினிமித்தம் துயரப்படுவதற்காகக் கைக்கொள்ளப்பட்டதெனத் தெரிகிறது. (2 இராஜாக்கள் 25:1-4, 8, 9, 22-26) எனினும், இப்போது, ஆலயம் திரும்பக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது, எருசலேம் திரும்பக் குடியிருக்கப்பட்டது. துக்கிப்பு களிகூருதலுக்கு மாற்றப்பட்டது, உபவாசங்கள் பண்டிகை கொண்டாட்ட காலங்களாகக் கூடியவையாயிருந்தன.
14, 15. (அ) எவ்வாறு நினைவு ஆசரிப்பு களிகூருதலுக்கான பெரும் காரணமாக இருந்தது, இது எதை நமக்கு நினைப்பூட்ட வேண்டும்? (ஆ) வருடாந்தர அறிக்கையில் காண்கிறபடி, நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை எந்த நாடுகளில் கவனிக்கத்தக்கதாயுள்ளது?
14 இன்று நாம், சகரியா குறிப்பிட்ட உபவாசங்களையோ அல்லது நியாயப்பிரமாணத்தில் கட்டளையிடப்பட்ட உபவாசங்களையோ கைக்கொள்ளுகிறதில்லை. இயேசு நம்முடைய பாவங்களுக்காகத் தம் ஜீவனைப் பலிசெலுத்தினதால், நாம் பெரிய பிராயச்சித்த நாளின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழுகிறோம். நம்முடைய பாவங்கள், அடையாளக் கருத்தில் அல்ல, ஆனால் முழுமையாக மன்னிக்கப்படவிருக்கின்றன. (எபிரெயர் 9:6-14) பரலோக பிரதான ஆசாரியராகிய, இயேசு கிறிஸ்துவின் கட்டளையைப் பின்பற்றி, நாம் அவருடைய மரணத்தின் நினைவுகூருதலை, கிறிஸ்தவ நாள்காட்டியில் குறிக்கப்பட்ட பயபக்திக்குரிய ஒரே ஆசரிப்பாகக் கைக்கொள்கிறோம். (லூக்கா 22:19, 20) அந்த ஆசரிப்புக்காக ஆண்டுதோறும் நாம் கூடிவருகையில் ‘மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும்’ அனுபவிக்கிறோம் அல்லவா?
15 சென்ற ஆண்டில், நினைவுகூருதலை ஆசரிப்பதற்கு, 1,31,47,201 பேர் ஒன்றுகூடினர், இது 1994-ல் வந்தவர்களைப் பார்க்கிலும் 8,58,284 பேர் அதிகமாகும். எத்தகைய திரள்கூட்டம்! அந்த ஆசரிப்புக்காகத் தங்கள் ராஜ்ய மன்றங்களுக்குள் அசாதாரணமான பெரும் எண்ணிக்கைகள் திரண்டு வந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய 78,620 சபைகளில் உண்டான களிகூருதலைக் காட்சிப்படுத்திப் பாருங்கள். ‘வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறவரும்,’ இப்போது யெகோவாவின் பெரிய ‘சமாதானப்பிரபுவாக’ ஆட்சி செய்கிறவருமானவரின் மரணத்தை அவர்கள் நினைவுகூர்ந்தபோது, வந்திருந்தவர்கள் யாவரும், நிச்சயமாகவே ‘சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும்’ கனிவிக்கப்பட்டனர்! (யோவான் 14:6; ஏசாயா 9:6) கலகத்தாலும் போரினாலும் அலைக்கழிக்கப்பட்டிருந்த நாடுகளில் அதை ஆசரித்தவர்களுக்கு அந்த ஆசரிப்பு தனிப்பட்ட உட்பொருளை உடையதாயிருந்தது. 1995-ன்போது, விவரிக்கமுடியாத பயங்கர காரியங்களை நம் சகோதரரில் சிலர் கண்கூடாகக் கண்டனர். இருப்பினும், ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் அவர்கள் இருதயங்களையும் அவர்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொண்டது.’—பிலிப்பியர் 4:7.
‘நாம் யெகோவாவின் தயவை நாடுவோமாக’
16, 17. எவ்வாறு பல ஜாதியாரின் ஜனங்கள் ‘யெகோவாவின் தயவை நாடக்கூடும்’?
16 எனினும், நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்த அந்த லட்சக்கணக்கானோர் யாவரும் எங்கிருந்து வந்தனர்? யெகோவாவின் ஒன்பதாவது வசனிப்பு விளக்குகிறது: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார்: ஜாதியாரும் அநேக ஊர்களின் குடிகளும் இன்னும் வருவார்கள். ஒரு ஊரின் குடிகள் மறு ஊரின் குடிகளிடம் போய், நாம் யெகோவாவின் தயவை நாடவும் சேனைகளின் யெகோவாவைத் தேடவும் விரைந்து செல்வோம் வாருங்கள், நாங்களும் வருவோம் என்று சொல்வார்கள். அநேக தேசத்தாரும் பல ஜாதியாரும் எருசலேமிலே சேனைகளின் யெகோவாவைத் தேடவும் யெகோவாவின் தயவை நாடவும் வருவார்கள்.”—சகரியா 8:20-22, தி.மொ.
17 நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்த ஆட்கள் ‘சேனைகளின் யெகோவாவைத் தேட’ விரும்பினர். இவர்களில் பலர் அவருடைய ஒப்புக்கொடுத்த, முழுக்காட்டப்பட்ட ஊழியர்களாக இருந்தனர். வந்திருந்தவர்களில் லட்சக்கணக்கான மற்றவர்கள் அந்த நிலையை இன்னும் எட்டாதவர்களாக இருந்தனர். சில நாடுகளில் நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களின் எண்ணிக்கை, ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் நான்கு அல்லது ஐந்து மடங்குகள் அதிகமாயிருந்தது. அக்கறை காட்டுவோரான இந்தப் பலருக்கு, தொடர்ந்து முன்னேற்றமடைவதற்கான உதவி தேவைப்படுகிறது. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார், இப்போது கடவுளுடைய ராஜ்யத்தில் ஆட்சி செய்கிறார் என்ற அறிவில் களிகூரும்படி நாம் அவர்களுக்குக் கற்பிப்போமாக. (1 கொரிந்தியர் 5:7, 8; வெளிப்படுத்துதல் 11:15) மேலும் யெகோவா தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய நியமிக்கப்பட்ட அரசருக்குக் கீழ்ப்படியும்படி நாம் அவர்களை ஊக்குவிப்போமாக. இவ்வகையில் அவர்கள் ‘யெகோவாவின் தயவை நாடுவார்கள்.’—சங்கீதம் 116:18, 19; பிலிப்பியர் 2:12, 13.
“பலவித பாஷைக்காரராகிய புற ஜாதியாரில் பத்து மனிதர்”
18, 19. (அ) சகரியா 8:23-ன் நிறைவேற்றத்தில், இன்று ‘ஒரு யூதன்’ யார்? (ஆ) இன்று, ‘ஒரு யூதனுடைய வஸ்திரத்தின் ஓரத்தைப் பிடித்துக்கொள்கிற’ அந்தப் “பத்து மனிதர்” யாவர்?
18 சகரியாவின் எட்டாம் அதிகாரத்தில் கடைசி தடவையாக இதை வாசிக்கிறோம்: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார்.” யெகோவாவின் கடைசி அறிவிப்பு என்ன? “அந்நாட்களிலே பலவித பாஷைக்காரராகிய புற ஜாதியாரில் பத்து மனிதர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு: கடவுள் உங்களோடிருக்கிறார் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால் நாங்கள் உங்களோடே போவோம் என்று சொல்லி அவனைப் பிடித்துக் கொள்வார்கள்.” (சகரியா 8:23, தி.மொ.) சகரியாவின் நாளில், மாம்சப்படியான இஸ்ரவேல் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக இருந்தது. எனினும், முதல் நூற்றாண்டில் இஸ்ரவேல் யெகோவாவின் மேசியாவை ஏற்காது தள்ளிவிட்டது. ஆகையால், நம்முடைய கடவுள் ‘ஒரு யூதனை’—புதிய இஸ்ரவேலை—ஆவிக்குரிய யூதர்களாலாகிய ‘கடவுளின் இஸ்ரவேலை’ தம்முடைய தனிப்பட்ட ஜனமாகத் தெரிந்துகொண்டார். (கலாத்தியர் 6:16, தி.மொ.; யோவான் 1:11; ரோமர் 2:28, 29) இயேசுவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் ஆளுவதற்கு மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து தெரிந்துகொள்ளப்படும் இவர்களுடைய கடைசி எண்ணிக்கை 1,44,000-ஆக இருக்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 14:1, 4.
19 இந்த 1,44,000 பேரில் பெரும்பான்மையர் உண்மையுள்ளவர்களாய் ஏற்கெனவே மரித்து, தங்கள் பரலோகப் பலனைப் பெறுவதற்குச் சென்றுவிட்டனர். (1 கொரிந்தியர் 15:51, 52; வெளிப்படுத்துதல் 6:9-11) ஒருசிலரே பூமியில் மீந்திருக்கின்றனர். இவர்கள், அந்த ‘யூதனுடன்’ கூடச்செல்வதற்கு தெரிந்துகொள்கிற அந்தப் “பத்து மனிதர்,” ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலுமிருந்து வந்த திரள் கூட்டத்தினர்’ என்பதைக் காண்பதில் உண்மையிலேயே களிகூருகின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:9; ஏசாயா 2:2, 3; 60:4-10, 22.
20, 21. இந்த உலகத்தின் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கையில், நாம் எவ்வாறு யெகோவாவுடன் சமாதானத்தில் நிலைத்திருக்கலாம்?
20 இந்த உலகத்தின் முடிவு தவிர்க்கமுடியாதபடி நெருங்கிக்கொண்டிருக்கையில், கிறிஸ்தவமண்டலம் எரேமியாவின் நாளிலிருந்த எருசலேமைப்போல் இருக்கிறது: “சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து [“திகில்,” NW].” (எரேமியா 14:19) தேசங்கள் பொய் மதத்துக்கு எதிராக எழும்பி, வன்முறையான முடிவுக்கு அதைக் கொண்டுவருகையில், அந்தத் திகில் அதன் உச்சநிலையை எட்டும். அதன்பின் சீக்கிரத்திலேயே, தேசங்கள்தாமே, கடவுளுடைய கடைசி போராகிய அர்மகெதோனில், அழிவை அனுபவிக்கும். (மத்தேயு 24:29, 30; வெளிப்படுத்துதல் 16:14, 16; 17:16-18; 19:11-21) எத்தகைய கொந்தளிப்பான காலமாக அது இருக்கும்!
21 சத்தியத்தை நேசித்து, ‘சமாதான விதையை’ நட்டு பயிர்செய்கிறவர்களை, யெகோவா, இந்த எல்லாவற்றினூடேயும் பாதுகாப்பார். (சகரியா 8:12, NW; செப்பனியா 2:3) அப்படியானால், அவருடைய ஜனங்களின் தேசத்துக்குள் நாம் பாதுகாப்புடன் நிலைத்திருந்து, யாவரறிய ஆர்வத்துடன் அவரைத் துதித்துக்கொண்டும், ‘யெகோவாவின் தயவை நாடும்படி’ நம்மால் கூடிய பலருக்கு உதவிசெய்துகொண்டும் இருப்போமாக. நாம் அவ்வாறு செய்தால், யெகோவாவின் சமாதானத்தை எப்போதும் அனுபவிப்போம். ஆம், “யெகோவா தமது ஜனத்திற்குப் பலங்கொடுப்பார்; யெகோவா தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார்.”—சங்கீதம் 29:11, தி.மொ.
நீங்கள் விளக்கக்கூடுமா?
◻ எவ்வாறு கடவுளுடைய ஜனங்கள் ‘தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்’—சகரியாவின் நாளில்? இன்று?
◻ துன்புறுத்தலுக்கும், பகைமைக்கும், அக்கறையின்மைக்கும் எதிரில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம்?
◻ நாம் ‘ஒருவரோடொருவர் உண்மை பேசுவதில்’ என்ன உட்பட்டிருக்கிறது?
◻ எவ்வாறு ஒருவர் ‘யெகோவாவின் தயவை நாடக்கூடும்’?
◻ சகரியா 8:23-ன் நிறைவேற்றத்தில் களிகூருவதற்கான என்ன பெரிய காரணம் காணப்படுகிறது?
[பக்கம் 18-ன் படம்]
சென்ற ஆண்டில், யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி ஜனங்களிடம் பேசுவதில் 115,03,53,444 மணிநேரங்கள் செலவிட்டனர்