சந்தோஷமற்ற உலகில் சந்தோஷமாய் இருத்தல்
“இந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான அம்சங்களை கருத்தில்கொண்டால், இது சாத்தானின் நூற்றாண்டு. இனம், மதம் அல்லது வகுப்பு இவற்றின் காரணமாக, மற்ற மனிதர்களை லட்சக்கணக்கில் கொல்வதில் இவ்வளவதிக மனச்சாய்வையும் ஆசையையும் மனிதர்கள் முன்னொருபோதும் வரலாற்றில் காட்டியதே கிடையாது,” என்பதாகத் தொடங்கியது ஜனவரி 26, 1995 என்று தேதியிடப்பட்ட நியூ யார்க் டைம்ஸ்-ல் இதழாசிரியரின் கட்டுரை.
நாசி மரண முகாம்களில் சிறையிருந்த அப்பாவி பலியாட்கள் விடுதலையான 50-வது ஆண்டு நினைவுநாள், இதழாசிரியர் கட்டுரைகளை மேற்சொன்னவாறு குறிப்பிட தூண்டிற்று. ஆயினும், ஆப்பிரிக்க பகுதிகளிலும் கிழக்கத்திய ஐரோப்பாவிலும் அதேவிதமான குரூரமாகக் கொல்லுதல் இன்னும்கூட நடக்கிறது.
அப்பாவி மக்களை திட்டமிட்டு படுகொலை செய்தல், இனத்தை பூண்டோடு அழித்தல், பழங்குடியினர் படுகொலைகள் என்று அவை எப்படி அழைக்கப்பட்டாலும் பெரும் துயரில்தான் முடிவடைகின்றன. ஆயினும், இத்தகைய வன்முறையின் மத்தியிலும், சந்தோஷத்தின் வலிமையான குரல்கள் எழுகின்றன. உதாரணத்திற்கு, 1930-களில் இருந்த ஜெர்மனியை நாம் பார்க்கலாம்.
1935-ன் ஏப்ரல் மாதத்திற்குள், ஹிட்லராலும் அவனுடைய நாசி கட்சியினராலும் யெகோவாவின் சாட்சிகள் அரசாங்க உத்தியோகங்களிலிருந்து தடை செய்யப்பட்டார்கள். மேலுமாக, சாட்சிகள் கைது செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள், சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்தவ நடுநிலைமை வகித்தார்கள். (யோவான் 17:16) 1936 ஆகஸ்ட் பிற்பகுதியில், கூட்டம் கூட்டமாக யெகோவாவின் சாட்சிகளை கைது செய்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள், அவர்களில் பிழைத்தோர் 1945 வரை அங்கு இருந்தார்கள். ஆயினும், அந்த முகாம்களில் சாட்சிகளிடத்தில் காட்டப்பட்ட மனிதாபிமானமற்ற அணுகுமுறைக்கு அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? அவர்களுடைய சந்தோஷமற்ற சூழ்நிலைமைகளின் மத்தியிலும், அவர்களால் சந்தோஷத்தை காத்துக்கொள்ள முடிந்தது என்றால், ஒருவேளை ஆச்சரியமாய் தோன்றும்.
“சேற்றில் ஒரு பாறை”
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் கிறிஸ்டின் கிங், ஒரு கத்தோலிக்க பெண்ணை பேட்டி கண்டார். அந்தப் பெண் சித்திரவதை முகாமில் இருந்தவர். “அவர் ஒரு சொற்றொடரை உபயோகித்தார், அதை நான் மறக்கவே இல்லை. கோரமான வாழ்க்கையைப் பற்றியும், தான் வாழ நேர்ந்த அருவருப்பான நிலைமைகளைப் பற்றியும் விலாவாரியாகச் சொன்னார். சாட்சிகளை தனக்குத் தெரியும் என்றும் அந்தச் சாட்சிகள், சேற்றில் ஒரு பாறை என்றும் கூறினார். அந்தச் சகதியிலேயே, ஓர் உறுதியான இடமாகத் திகழ்ந்தார்கள். காவலாளிகள் கடந்துசெல்கையில், அவர்கள் மாத்திரம் காறித்துப்பவில்லை என்று அவர் கூறினார். இந்தச் சூழ்நிலைமையை வெறுப்போடு அல்ல, ஆனால் அன்பாலும் நம்பிக்கையாலும், ஒரு நோக்கமிருக்கிறது என்னும் உணர்வாலும் அவர்கள் மாத்திரம் சமாளித்தார்கள்,” என்று கூறியதாக டாக்டர் கிங் கூறினார்.
“சேற்றில் ஒரு பாறை”யாக இருப்பதற்கு, யெகோவாவின் சாட்சிகளுக்குச் சக்தியளித்தது எது? யெகோவா தேவன் பேரிலும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் பேரிலும் வைத்திருந்த அசைக்க முடியாத விசுவாசமே ஆகும். எனவேதான், அவர்களுடைய கிறிஸ்தவ அன்பையும் சந்தோஷத்தையும் நெரித்துவிடுவதற்கான ஹிட்லரின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
முகாமிலிருந்து பிழைத்து வந்த இருவர், ஐம்பது வருடங்களுக்கு முன் அவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்ட விசுவாசத்தின் சோதனையை நினைவுகூருவதை கேளுங்கள். “அந்தக் குரூரமான சூழ்நிலைமைகளில், யெகோவாவின் பேரில் எனக்கு இருந்த அன்பையும் நன்றியறிதலையும் நிரூபிக்க, ஓர் அரிய வாய்ப்பை உடையவளாக நான் இருந்தேன் என்று அறிந்துகொள்கையில், சந்தோஷத்தால் பூரித்துப்போகிறேன். இதை செய்யும்படி யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை! அதற்கு மாறாக, எங்களுடைய எதிரிகளே எங்களை கட்டாயப்படுத்தியவர்கள், பயங்காட்டுவதன் மூலம் கடவுளுக்குக் கீழ்ப்படிவதைக்காட்டிலும் ஹிட்லருக்குக் கீழ்ப்படிய வைப்பதற்காக முயன்றார்கள்—ஆனால், வெற்றி ஏதும் கிட்டவில்லை! நான் சந்தோஷமாக இப்போது மட்டும் இல்லை, ஆனால் என்னுடைய நல்மனசாட்சியின் காரணமாக, சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலும் நான் சந்தோஷமாக இருந்தேன்.”—மாரிய ஹாம்பக், வயது 94.
மற்றொரு சாட்சி குறிப்பிடுகிறார்: “என்னுடைய சிறைவாச நாட்களை நன்றியறிதலோடும் சந்தோஷத்தோடும் திரும்பிப் பார்க்கிறேன். ஹிட்லரின் கீழ், சிறைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் கழித்த வருடங்கள் கஷ்டமானவையாகவும் சோதனைகள் நிறைந்தவையாகவும் இருந்தன. ஆனால், அவற்றை தவிர்க்க நான் விரும்பி இருந்திருக்க மாட்டேன், ஏனென்றால், யெகோவாவில் முழுமையாக நம்பியிருக்கும்படி அவை எனக்குக் கற்பித்தன.”—யோஹான்னஸ் நாயிபாகர், வயது 91.
‘யெகோவாவில் முழுமையாக நம்பியிருத்தலே’ யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்கும் சந்தோஷத்தின் ரகசியம் ஆகும். இவ்வாறாக, சந்தோஷமற்ற ஓர் உலகத்தால் அவர்கள் சூழப்பட்டிருப்பினும், சந்தோஷமாக அவர்கள் இருக்கிறார்கள். சமீப மாதங்களில் நடைபெற்ற “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடுகளில் அவர்களுடைய சந்தோஷம் வெளியரங்கமாயிற்று. இந்தச் சந்தோஷகரமான கூட்டங்களை சுருக்கமாக நாம் மறுபார்வை செய்யலாம்.
[பக்கம் 4-ன் படம்]
மாரிய ஹாம்பக்