நீங்கள் உண்மையிலேயே கடவுள்மீது அன்புகூர முடியுமா?
“ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிரான்” என்பதாக கடவுள் சொல்கிறார். (யாத்திராகமம் 33:20, திருத்திய மொழிபெயர்ப்பு) மேலுமாக, பைபிள் காலங்களுக்குப்பின், எந்த மனிதனும் அவருடன் நேரடியான தொடர்புகொண்டதற்கான எந்தவொரு அத்தாட்சியும் இருக்கவில்லை. ஒருபோதும் நேரடியாக பார்த்திராத அல்லது கேட்டிராத எவரோ ஒருவருடன் ஆழமான அன்பை வளர்ப்பது கடினமான காரியமாக, இயலாத காரியமாகவும்கூட தோன்றுகிறதா? இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருடன் அன்பான உறவு வைக்க உண்மையிலேயே முடியுமா?
இதைப்பற்றி சந்தேகமே வேண்டாம், கடவுளுடன் தனிப்பட்ட விதத்தில் ஓர் அனலான பிணைப்பை வளர்த்துக்கொள்வது சாத்தியமே. உபாகமம் 6:5-ல் இஸ்ரவேல் தேசத்தார் கட்டளையிடப்பட்டதை நாம் வாசிக்கிறோம்: “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” பிற்பாடு இயேசு கிறிஸ்து இந்தக் கட்டளையைத் தம்முடைய சீஷர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தி, அவர் கூறியதாவது: “இது முதலாம் பிரதான கற்பனை.” (மத்தேயு 22:37, 38) அத்தகைய ஓர் உறவு அடையமுடியாததாயின், கடவுள்மீது அன்புகூரும்படி நம்மை பைபிள் அறிவுறுத்துமா?
ஆனால், யெகோவா நாம் அவர்மீது அன்புகூரவேண்டும் என்று கட்டளையிடுவதனால் மாத்திரமே அவ்வாறு நாம் செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறாரா? இல்லை. கடவுள்மீது அன்புகூரத்தக்கத் திறனுடன் முதல் மனித தம்பதியரை அவர் படைத்தார். ஆதாமும் ஏவாளும் தங்கள் சிருஷ்டிகருடன் ஓர் அன்பான உறவுக்குள் கட்டாயப்படுத்தப்படவில்லை. மாறாக, அவர்பால் ஆழமான பிணைப்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய சாதகமான சூழ்நிலைமைகள் அவர்களைச் சூழ்ந்திருக்குமாறு கடவுள் செய்தார். கடவுளிடம் நெருங்கிவரும் அல்லது அவரிடமிருந்து விலகி செல்லும் தெரிவு அவர்களுடையதாய் இருந்தது.
ஆதாமும் ஏவாளும் கலகம் செய்ய தெரிவு செய்தார்கள். (ஆதியாகமம் 2:16, 17; 3:6, 7) இருப்பினும், சிருஷ்டிகருடன் அன்பான உறவை வளர்த்துக்கொள்வதற்கான திறனை அவர்களுடைய பிள்ளைகள் கொண்டிருப்பார்கள்.
உண்மை கடவுளுடன் சஞ்சரித்தல்
உதாரணத்திற்கு, ஆபிரகாம், கடவுளின் ‘சிநேகிதனாக’ பைபிளில் சொல்லப்படுகிறார். (யாக்கோபு 2:23) இருப்பினும், கடவுளுடன் நெருக்கமான உறவை அனுபவித்தவர், நிச்சயம் ஆபிரகாம் ஒருவர் மாத்திரமே அல்ல. யெகோவாவின்மீது களங்கமற்ற நேசத்தைக் காட்டி, ‘தேவனோடே சஞ்சரித்த’ அபூரண மனிதர்கள் பலரைப்பற்றி பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 5:24; 6:9; யோபு 29:4; சங்கீதம் 25:14; நீதிமொழிகள் 3:32.
கடவுளுடைய பண்டைய ஊழியர்கள், கடவுள்பேரிலான அன்புடனும் நேசத்துடனும் பிறக்கவில்லை. அதை அவர்கள் வளர்க்கவேண்டியிருந்தது. எவ்வாறு? யெகோவா என்ற அவருடைய தனிப்பட்ட பெயரால் அவரை அறிந்துகொள்வதன் மூலமாக. (யாத்திராகமம் 3:13-15; 6:2, 3) அவர் இருப்பதையும், அவரது தேவத்துவத்தையும் அறிந்திருப்பதன் மூலமாக. (எபிரெயர் 11:6) அவரது அன்பான செயல்களின்பேரில் அடிக்கடி தியானிப்பதன் மூலமாக. (சங்கீதம் 63:6) தங்களின் உள்ளான எண்ணங்களை கடவுளிடம் ஜெபத்தில் சொல்வதன் மூலமாக. (சங்கீதம் 39:12) அவரது நற்குணத்தைக் கற்பதன் மூலமாக. (சகரியா 9:17, NW) அவரைப் புண்படுத்திவிடுவோமோ என்ற ஆரோக்கியமான பயத்தை வளர்த்துக்கொள்வதன் மூலமாக.—நீதிமொழிகள் 16:6.
நீங்களும் கடவுளுடைய நண்பராகி, அவருடனே சஞ்சரிக்க முடியுமா? உங்களால் கடவுளைப் பார்க்கவோ அவரது குரலை கேட்கவோ முடியாது என்பது உண்மைதான். இருந்தபோதிலும், உங்களை யெகோவா, ‘தம்முடைய கூடாரத்தில் விருந்தினராக’ தமது நண்பராக ஆகும்படி அழைக்கிறார். (சங்கீதம் 15:1-5, NW) இவ்வாறாக, உங்களால் கடவுள்மீது அன்புகூர முடியும். ஆனால் அவருடன் ஒரு நெருக்கமான, நேசமான உறவை உங்களால் எப்படி வளர்க்க முடியும்?