உங்கள் வாழ்க்கையை விதி கட்டுப்படுத்துகிறதா?
“அலநோடோ.” மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி என்ற இடத்தில் பேசப்படும் பம்பாரா மொழியில் இந்தச் சொற்றொடர், ‘இது கடவுளின் செயல்’ என்பதை அர்த்தப்படுத்துகிறது. உலகின் அந்தப் பகுதியில் இப்படிப்பட்ட சுருக்கமான வாசகங்கள் சர்வசாதாரணமாய் இருக்கின்றன. வோலோஃப் மொழியில், அந்த முதுமொழி, “யாலா மோ கோ டெஃப்” (கடவுள் அதைச் செய்தார்) என்பதாகும். மேலும், டோகன் என்ற நாட்டுப்புற கிளைமொழியில், “ஏமா பயர்” (கடவுள் அதை நிகழச் செய்தார்) என்று அவர்கள் சொல்கின்றனர்.
இந்தச் சொற்றொடர்களுக்கு இணையான இதுபோன்ற சொற்றொடர்கள் மற்ற தேசங்களிலும் இருக்கின்றன. மரணமோ அல்லது சோக நிகழ்ச்சிகளோ சம்பவிக்கும்போதெல்லாம், “அவருடைய நேரம் வந்துவிட்டது” மற்றும் “அது கடவுளுடைய சித்தம்” போன்ற முதுமொழிகள் பெரும்பாலும் சொல்லப்படுவதை கேள்விப்படுகிறோம். மேற்கு ஆப்பிரிக்காவில், “தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது” போன்ற சுருக்கமான வாசகங்கள் சாதாரணமாக பொதுமக்கள் போக்குவரத்து வாகனங்களில் வண்ணந்தீட்டப்பட்டிருக்கின்றன; கடைகளில் நினைப்பூட்டிக்கொள்ளும் அறிவிப்புகளாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானோருக்கு அவை வெறுமனே அவர்கள் நன்கு அறிந்திருக்கும் பேச்சு வழக்காக உள்ளன. ஆனால், பெரும்பாலான சமயங்களில் அவை மிகவும் ஆழமாய் ஊன்றியிருக்கும் விதி என்னும் கோட்பாட்டில் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.
விதி கோட்பாடு என்றால் என்ன? “மானிடர்கள் கட்டுப்படுத்தமுடியாத சக்திகளால் சம்பவங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கை,” என்று தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா அதை விளக்குகிறது. இந்தச் “சக்திகள்” யாவை? ஒரு நபருடைய விதி, அவருடைய பிறப்பின் சமயத்தில் நட்சத்திரங்களுடைய வெளித்தோற்றத்தின் மூலம் மிகவும் பலமாக செல்வாக்கு செலுத்தப்பட்டது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனியர்கள் நம்பினர். (ஒப்பிடுக: ஏசாயா 47:13.) வாழ்க்கை என்னும் நூலை நூற்று, அளந்து, கத்தரிக்கும் மூன்று வல்லமைவாய்ந்த தேவதைகளின் வசத்தில் விதி இருந்தது என்று கிரேக்கர்கள் நம்பினர். இருப்பினும், கடவுளே ஒரு நபரின் விதியை நிர்ணயிக்கிறவர் என்ற கோட்பாட்டை ஆரம்பித்து வைத்தவர்கள் கிறிஸ்தவமண்டல இறைமையியல் பேராசிரியர்களே!
உதாரணமாக, ஜோதிடர்களின் “பொய்யான மற்றும் மனதின் மீது தீங்கான செல்வாக்கைச் செலுத்தும் எண்ணங்களை,” “புனிதர்” அகஸ்ட்டின் நிராகரித்தார். மறுபட்சத்தில், “கடவுள் இருக்கிறார் என்று விசுவாசம் வைப்பதும், அதே சமயத்தில் எதிர்கால விஷயங்களைப் பற்றி அவர் முன்னரே அறிந்திருக்கிறார் என்பதை மறுப்பதும் மிகவும் வெளிப்படையாக தெரியவரும் முட்டாள்தனமாகும்” என்று அவர் தர்க்கித்தார். கடவுள் உண்மையிலேயே சர்வவல்லமையுள்ளவராக இருக்க வேண்டுமானால், “சம்பவங்கள் நடப்பதற்கு முன்னரே எல்லா காரியங்களையும் அவர் அறிந்திருக்க வேண்டும், எல்லா காரியங்களையும் முன்னரே கட்டளையிட்டிருக்க வேண்டும்,” என்று அவர் உரிமை பாராட்டினார். இருப்பினும், நிகழப்போகும் எல்லா காரியங்களையும் குறித்து கடவுள் முன்னரே அறிந்திருந்தபோதிலும், மானிடர்கள் சுயதெரிவை பெற்றிருக்கின்றனர் என்பது உண்மையாயிருக்கிறது என்று அகஸ்ட்டின் உணர்ச்சிவசப்பட்டு வாதாடினார்.—கடவுளின் பட்டணம் (ஆங்கிலம்), புத்தகம் V, அதிகாரங்கள் 7-9.
பல நூற்றாண்டுகளுக்குப் பின், புராட்டஸ்டன்ட் இறைமையியல் பேராசிரியர் ஜான் கால்வின் அந்தக் கருத்தை இன்னும் கூடுதலாக விளக்கி, சிலர் “பரலோக ராஜ்யத்தின் வாரிசுகளாகவும் பிள்ளைகளாகவும் இருப்பதற்கு [கடவுளால்] முன்னரே விதிக்கப்பட்டிருக்கின்றனர்” என்றும், மற்றவர்கள் “அவருடைய கோபாக்கினையை பெற” தகுதியுள்ளவர்களாக முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர் தர்க்கித்தார்!
இன்று, விதியின் பேரிலுள்ள நம்பிக்கை உலகின் அநேக பகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் வசிக்கும் யூஸ்மான் என்ற இளம் மனிதனின் அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள். அவன் தன் பள்ளியிலேயே மிகச்சிறந்த மாணவர்களில் ஒருவனாக விளங்கினான், ஆனால் அவன் தன் இறுதி தேர்வுகளை எழுதியபோதோ தோல்வியடைந்தான். இது, மறுபடியும் அதே வகுப்புகளுக்கு ஒரு வருடம் ஆஜராவது மட்டுமல்லாமல், தன் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் முன்பு சங்கடமான நிலையை அனுபவிக்க வேண்டியதையும் அர்த்தப்படுத்தியது. அது கடவுளுடைய சித்தம் என்று சொல்வதன் மூலம் ஒரு நண்பன் அவனை ஆறுதல்படுத்த முயற்சி செய்தான். உஸ்மானின் தாய் அதேபோல், அவனுடைய தோல்விக்கு விதியே காரணம் என்று குறைகூறினார்.
முதலில் அவர்கள் கூறிய பரிவிரக்கக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு யூஸ்மான் சந்தோஷப்பட்டான். சிந்தித்துப் பார்த்தால், அவனுடைய தோல்வி உண்மையில் கடவுளுடைய சித்தமாக இருந்தால், அதைத் தவிர்ப்பதற்கு அவன் செய்திருக்கக்கூடியது எதுவுமில்லை. ஆனால் அவனுடைய தகப்பன் காரியங்களை வித்தியாசமாக பார்த்தார். தேர்வுகளில் தோல்வியுற்றது அவனுடைய சொந்த தவறே, கடவுளுடைய தவறு அல்ல என்று யூஸ்மானிடம் கூறினார். யூஸ்மான் வெறுமனே தன் படிப்புகளை அசட்டை செய்ததன் காரணமாக தோல்வியுற்றான்.
விதியின் மீது தனக்கிருந்த விசுவாசம் பலவீனப்பட்டிருந்ததால், யூஸ்மான் தானே விஷயங்களை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தான். பின்வரும் கட்டுரையை சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் நீங்களும் அதையே செய்யும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.