கிலியட் பள்ளியின் 101-வது வகுப்பினர்—நற்கிரியைகளுக்கு வைராக்கியமுள்ளோர்
நம்மைப் படைத்த யெகோவா தேவன் நற்கிரியைகளுக்கு வைராக்கியமுள்ளவர், அவ்வாறே அவரது மகன் இயேசு கிறிஸ்துவும். நமது முன்மாதிரியான இயேசு, கடவுள் கொடுத்த நியமிப்பை நிறைவேற்றுவதன் மூலம் வைராக்கியத்தைக் காண்பித்தார்; “தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே” ஒப்புக்கொடுப்பதும் அந்த நியமிப்பில் அடங்கியிருந்தது. (தீத்து 2:14) உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 101-வது வகுப்பைச் சேர்ந்த 48 மாணவர்கள் நிச்சயமாகவே நற்கிரியைகளுக்கு வைராக்கியத்தைக் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் பள்ளிக்கான பட்டமளிப்பு விழா செப்டம்பர் 7, 1996-ல் நியூ யார்க்கின் பாட்டர்ஸனிலுள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து வைராக்கியமுடனிருக்க நடைமுறை ஆலோசனை
ஆளும் குழுவின் அங்கத்தினரான கேரி பார்பர் பட்டமளிப்பு விழாவின் அக்கிராசினராக இருந்தார்; அவர் 70 வருடங்களுக்கும் அதிகமாக முழுநேர ஊழியம் செய்துவருகிறார். தனது பேச்சின் முன்னுரையில், ‘உலகத்திற்கு ஒளியாயிருந்த’ இயேசு செய்த பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் அவர் கவனத்திற்கு கொண்டுவந்தார். (யோவான் 8:12) அந்த மதிப்புக்குரிய ஸ்தானத்தை இயேசு தமக்கு மாத்திரமே வைத்துக்கொள்ளவில்லை, ஆனால் சீஷர்களும் ஒளியை பிரகாசிக்க வேண்டுமென அவர்களுக்கு சொன்னார் என்பதை சகோதரர் பார்பர் சுட்டிக்காண்பித்தார். (மத்தேயு 5:14-16) இந்த ஊழிய சிலாக்கியம் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கூட்டுகிறது, மேலும் ‘வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடக்கும்’ அனைவர்மீதும் மிகப் பெரிய பொறுப்பை சுமத்துகிறது.—எபேசியர் 5:8.
அந்த முன்னுரைக்குப் பிறகு, புரூக்ளின் தலைமையகத்திலுள்ள செயலாட்சி அலுவலகத்தில் பணிபுரியும் டான் ஆடம்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டார். “முன்னோக்கிச் செல்லுதல், பின்னோக்கி அல்ல” என்ற பொருளின்பேரில் அவர் பேசினார். கிலியட் பள்ளியின்பேரிலும் நற்செய்தியை அயல் நாடுகளில் பிரசங்கிக்க வேண்டுமென்ற அதன் குறிக்கோளின்பேரிலும் அவர் கவனத்தைத் திருப்பினார். உலகம் முழுவதும் பைபிள் பிரசுரங்களை 300-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரித்திருக்கும் கடவுளுடைய அமைப்பின் வளர்ச்சியைப் பற்றி அவர் பேசினார். 1995-ல் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் 111 மொழிகளில் இப்போது கிடைக்கிறது, இன்னுமதிக மொழிகளில் அச்சிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இயேசுவின் புதிய சீஷர்கள் ஒருசில மாதங்களிலேயே ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதற்கு உதவுவதில் அது ஏற்கெனவே ஒரு கருவியாக இருந்துவந்திருக்கிறது. ஆகவே ஊழியத்திற்கான காலத்திற்கேற்ற பைபிள் படிப்பு பிரசுரங்கள் புதிய மிஷனரிகள் கைவசம் இருக்கும்.
அடுத்ததாக, ஆளும் குழுவின் அங்கத்தினரான லைமன் ஸ்விங்கில், வெளிப்படுத்துதல் 7:15-ன் அடிப்படையில் “எப்போதும் யெகோவாவிற்கு பரிசுத்த சேவை செய்யுங்கள்” என்ற பொருளின்பேரில் பேசினார். யெகோவாதாமே மகிழ்ச்சியுள்ள கடவுளாக இருப்பதால், அவரை தொடர்ந்து சேவிப்பதுதான் ஒருவரை மகிழ்ச்சியுள்ளவராக்கும். (1 தீமோத்தேயு 1:11) இந்த சந்தோஷமான சேவையின் விளைவாக, பூமியின் அனைத்து பாகங்களிலிருந்தும் திரளான ஆட்கள் யெகோவாவை சேவிக்க வந்திருக்கின்றனர். கிலியட் பள்ளியில் முன்பு பயிற்சிபெற்றோர், சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற இவர்களில் அநேகருக்கு பல வருடங்களாக உதவியிருக்கின்றனர். ஆகவே, வளர்ந்துகொண்டேவரும் அந்தத் திரள் கூட்டத்தின் அங்கத்தினர்களை இன்னும் கூட்டிச்சேர்ப்பதற்கு இப்போது அனுப்பப்படுவோரையும் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்பதை நம்புவதற்கு நமக்கு எல்லா காரணமும் இருக்கிறது.
ஆளும் குழுவின் மற்றுமொரு அங்கத்தினரான டானியல் ஸிட்லிக், “யெகோவாவின் சந்தோஷத்தை பிரதிபலித்தல்” என்ற பொருளின்பேரில் பேசினார். புதிய மிஷனரிகளும் உட்பட, கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும், நித்திய ஜீவனுக்கான வழியைப் பற்றியும் இப்போதுள்ள வாழ்க்கையை சிறந்த விதத்தில் பயன்படுத்துவதெப்படி என்பதைப் பற்றியும் மக்களுக்கு கற்பிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பதைக் காண்பித்தார். “கற்றுக்கொடுப்பது, நமக்கே நன்மையளிக்கும் ஒரு வேலை. அது, கற்பிக்கும் ஆட்களுடைய முகங்களிலும் கற்றுக்கொள்ளும் ஆட்களுடைய முகங்களிலும் பிரதிபலிக்கப்படுகிறது,” என்பதாக சகோதரர் ஸிட்லிக் சொன்னார். (சங்கீதம் 16:8-11) “முழு பூமியிலும் சொல்லத்தக்க மிகச் சிறந்த செய்தி நம்மிடமிருக்கிறது, அதை நமது முகம் பிரதிபலிக்கிறது,” என்பதாக எஸ்டோனியாவைச் சேர்ந்த ஒரு மிஷனரி சொன்னதாக அவர் சொன்னார். நமது முகபாவனை, மக்கள் நாம் சொல்வதை செவிகொடுத்துக் கேட்கும்படி செய்து அவர்களது ஆர்வத்தையும் தூண்டும். யெகோவாவின் ஊழியர்கள் சந்தோஷமாயிருப்பதற்கு காரணம் என்னவென்பதை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகின்றனர். “ஆகவே உங்களுடைய முகபாவனைக்கு கவனம் செலுத்துங்கள்,” என்பதாக சகோதரர் ஸிட்லிக் ஆலோசனையளித்தார். “சந்தோஷமான ஆட்களைப் பார்ப்பதில் மக்கள் சந்தோஷமடைகிறார்கள்,” என்பதாக அவர் சொன்னார்.
1949-ல் கிலியட் பள்ளியின் 12-வது வகுப்பு முதற்கொண்டே அதில் ஆசிரியராக பணியாற்றிவந்திருக்கும் யுலிஸிஸ் க்ளாஸ், “பொறுமையோடு, உங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ளுங்கள்,” என்ற தலைப்பின்பேரில் பேசினார். பொறுமை என்பது என்ன? ஏதோவொன்றிற்காக அமைதியாக காத்திருப்பது, கோபப்படுத்தப்படும்போதோ அழுத்தத்தில் இருக்கும்போதோ பொறுத்துக்கொண்டிருப்பது என அது அர்த்தப்படுத்துகிறது. பொறுமையான நபர் அமைதலாக இருக்கிறார்; பொறுமையற்றவர் அவசரத்தையும் எரிச்சலையும் காட்டுகிறார். “பொறுமை பலவீனத்திற்கோ உறுதியற்றதன்மைக்கோ அடையாளமாக இருப்பதாக அநேகர் நினைக்கின்றனர், ஆனால் யெகோவாவைப் பொருத்தவரையில் பலமும் நோக்கமும் இருப்பதை அது குறிக்கிறது,” என்பதாக சகோதரர் க்ளாஸ் கூறினார். (நீதிமொழிகள் 16:32) பொறுமைக்கு கிடைக்கும் பரிசு என்ன? “கோபம் எழும் அதே நொடிப்பொழுதில் காத்திடும் பொறுமை, நூறு நாள் வேதனையிலிருந்து காத்திடும்,” என்பதாக ஒரு சீன பழமொழி சொல்கிறது. “பொறுமை ஒருவரது இயல்பை மெருகூட்டுகிறது. உண்மையில், மற்ற நல்ல குணாதிசயங்களின்மேல் அது அழியாத வார்னிஷைப் பூசுகிறது. அது விசுவாசத்தை விரும்பத்தக்கதாகவும் சமாதானத்தை நிலையானதாகவும் அன்பை அசைக்கமுடியாததாகவும் ஆக்குகிறது,” என்பதாக சகோதரர் க்ளாஸ் சொன்னார்.
“யெகோவா தேவனிடமிருந்து அவரது அமைப்பின் மூலம் ஒரு நியமிப்பைப் பெறுவது நமது சிலாக்கியம்,” என கென்யாவில் 11 வருடங்களாக மிஷனரியாக சேவித்த மார்க் நௌமேர் சொன்னார்; அவர் இப்போது கிலியட் பள்ளியில் ஆசிரியராக சேவிக்கிறார். “நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள்,” என்ற தலைப்பில் பேசிய சகோதரர் நௌமேர், யூதாவின் ராஜாவாகிய ஆகாசுவின் முன்மாதிரியை கவனத்திற்கு கொண்டுவந்தார். கொடுக்கப்பட்ட வேலையை நிறைவேற்றுவதற்கு யெகோவா உதவியளிப்பார் என ஏசாயா உறுதியளித்தபோதும்கூட ஆகாசு கடவுளை நம்ப மறுத்துவிட்டார். (ஏசாயா 7:2-9) மிஷனரிகள்—உண்மையில், நாம் அனைவருமேகூட—தேவராஜ்ய நியமிப்புகளில் நிலைத்திருக்க யெகோவாவின்மீது விசுவாசம் வைக்க வேண்டும் என சகோதரர் நௌமேர் சுட்டிக்காட்டினார். மிஷனரி ஊழியத்தில் எதிர்ப்படும் சவால்களை மேற்கொள்வதற்கு உறுதியான விசுவாசம் தேவைப்படுகிறது. “இந்த உலகில் பரிபூரண நிலைமை எங்குமேயில்லை என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்,” என்பதாக சகோதரர் நௌமேர் குறிப்பிட்டார்.
வைராக்கிய சேவையை ஊக்குவிக்கும் அனுபவங்கள்
கிலியட் பயிற்சியின்போது, வாரயிறுதி நாட்களில் மாணவர்கள் வெளி ஊழியத்தில் நேரத்தை செலவிட்டனர்; அவர்களது மிஷனரி நியமிப்புகளில் இந்த ஊழியம் முக்கிய அக்கறைக்குரியதாய் இருக்கும். கிலியட் பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான வேலஸ் லிவரன்ஸ், 15 மாணவர்களிடம் அவர்களது அனுபவங்களைச் சொல்லும்படி கேட்டார். ஊழிய இலாகா குழுவைச் சேர்ந்த லியான் வீவரும் பெத்தேல் இயக்கக் குழுவைச் சேர்ந்த லான் ஷிலிங்கும், ஆப்பிரிக்காவிலிருந்தும் லத்தீன் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்த கிளைகாரியாலய அங்கத்தினர்களை பேட்டிகண்டனர்; அவர்கள் மிஷனரி ஊழியம் சம்பந்தமான சில அனுபவங்களையும் பட்டம்பெறும் மிஷனரிகளுக்கு சில நல்ல ஆலோசனைகளையும் சொன்னார்கள். சியர்ரா லியோனில் 1995-ம் ஆண்டில் முழுக்காட்டுதல் பெற்ற சுமார் 90 சதவீதத்தினர் மிஷனரிகளால் உதவிபெற்றவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. வைராக்கியமான சேவைக்கு என்னே ஒரு சிறந்த உதாரணம்!
கடைசியாக, சங்கத்தின் பிரெசிடண்டான மில்டன் ஹென்ஷெல், “யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு தனித்தன்மைவாய்ந்தது” என்ற பொருளின்பேரில் 2,734 ஆட்களுக்கு முன்பாக பேசினார். கடவுளுடைய அமைப்பை எது நிகரற்றதாக்குகிறது? அதன் அளவோ அதன் சக்தியோ அல்ல, ஆனால் கடவுளுடைய நீதியுள்ள கட்டளைகளாலும் நியாயங்களாலும் அது வழிநடத்தப்படுவதே அதை நிகரற்றதாக்குகிறது. பூர்வ காலங்களில் யெகோவாவின் மக்களான இஸ்ரவேல் தேசத்தினருக்குத்தான் தேவனுடைய வாக்கியங்கள் ஒப்புவிக்கப்பட்டன, இது அந்த தேசத்தை தனித்தன்மைவாய்ந்ததாய் ஆக்கியது. (ரோமர் 3:1, 2) இன்று, இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ் இயங்குவதால் யெகோவாவின் அமைப்பு ஒன்றுபட்டிருக்கிறது. (மத்தேயு 28:19, 20) அது செழிப்படைந்து வளர்ந்துவருகிறது. பூமியிலுள்ள வேறெந்த அமைப்பிலாவது அதன் ஆளும் குழு முக்கிய தீர்மானங்களைச் செய்வதற்கு முன் ஆலோசனைக்காக கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை பார்ப்பதுண்டா? இந்த விதங்களிலும் மற்ற விதங்களிலும் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்ததாயுள்ளது.
அந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிநிரலின் முடிவில் டிப்ளமோக்கள் அளிக்கப்பட்டன; வகுப்பினர் இந்த விசேஷ பயிற்சிக்கு போற்றுதல் தெரிவித்து எழுதித்தந்த கடிதம் வாசிக்கப்பட்டது.
[பக்கம் 22-ன் பெட்டி]
வகுப்புப் புள்ளிவிவரங்கள்
பிரதிநித்துவம் செய்யப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 9
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 12
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 31.7
சத்தியத்தில் சராசரி வருடங்கள்:13.8
முழுநேர ஊழியத்தில் சராசரி வருடங்கள்: 9.8
[பக்கம் 23-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 101-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஸ்வின்ட், ஹெச்.; சசின்ஸ்கி, ஏ.; ஹைஃபில்ட், எல்.; மேர்காடோ, எஸ்.; டில், ஏ.; ஷாவெஸ், வி.; ஸ்மித், ஜே.; சலினியஸ், எஸ். (2) குர்ட்ஸ், டி.; க்ளார்க், ஸி.; லிஸ்பார்ன், ஜே.; மார்டன்சன், டபிள்யு.; ப்ராமலி, ஏ.; டாயிகா, எல்.; மார்டன், ஏ.; ஸ்மித், டி. (3) சசின்ஸ்கி, டி.; பையர்கார், எல்.; காராஃபலோ, பி.; கால்டால், எல்.; ஷாவெஸ், ஈ.; ப்ரோடிங், எஸ்.; கான், ஆர்.; சலினியஸ், ஆர். (4) ஸ்வின்ட், பி.; பையர்கார், எம்.; காராஃபலோ, பி.; ஹால்ம்ப்ளாட், எல்.; கிஸர், எம்.; ப்ரோடிங், டி.; பால்ஃப்ரிமன், ஜே.; பால்ஃப்ரிமன், டி. (5) மிங்க்வேஸ், எல்.; லிஸ்பார்ன், எம்.; மேர்காடோ, எம்.; குர்ட்ஸ், எம்.; டில், ஹெச்.; டாயிகா, ஜே.; க்ளார்க், எஸ்.; கான், ஏ. (6) மிங்க்வேஸ், எஃப்.; மார்டன், பி.; ஹைஃபில்ட், எல்.; ஹால்ம்ப்ளாட், பி.; ப்ராமலி, கே.; கால்டால், ஹெச்.; மார்டன்சன், பி.; கிஸர், ஆர்.