தீமையை வெறுப்போமாக
யெகோவா பரிசுத்தமானக் கடவுள். பூர்வக் காலங்களில் அவர் ‘இஸ்ரவேலின் பரிசுத்தராக இருந்தார்,’ அத்தகையவராக, இஸ்ரவேலரும் சுத்தமும், கறையற்றவர்களுமாய் இருக்கும்படி அவர் கட்டளையிட்டார். (சங்கீதம் 89:18) தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்துக்கு இவ்வாறு கூறினார்: “நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.” (லேவியராகமம் 11:45) ‘யெகோவாவின் பர்வதத்தில் ஏற’ விரும்புகிற எவரும் “சுத்தமுள்ள கைகளும் மாசற்ற இருதயமும் உடையவனாய்” இருக்க வேண்டும். (சங்கீதம் 24:3, 4, தி.மொ.) அது பாவச் செயல்களை வெறுமனே தவிர்ப்பதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறித்தது. ‘தீமையை வெறுப்பதை’ அது குறித்தது.—நீதிமொழிகள் 8:13.
தவறானச் செயல் எதுவென்று இஸ்ரவேல் ஜனம் அடையாளம் கண்டுகொண்டு தவிர்க்க இயலும்படி, நுட்பவிவரமான சட்டங்களை யெகோவா அன்புடன் அளித்தார். (ரோமர் 7:7, 12) நன்னடத்தையின்பேரில் கண்டிப்பான வழிகாட்டு விதிகள் இந்தச் சட்டங்களில் அடங்கியிருந்தன. விபசாரம், ஒத்த பாலினத்தவர் புணர்ச்சிகள், முறைதகாப் புணர்ச்சி உறவுகள், மிருகத்துடன் பாலுறவு, ஆகிய இவை எல்லாம் ஆவிக்குரிய அசுத்தமானக் கறைப்படுத்தும் காரியங்களாகக் குறிப்பிடப்பட்டன. (லேவியராகமம் 18:23; 20:10-17) இத்தகைய இழிவானச் செயல்களை செய்த குற்றமுடையோர், இஸ்ரவேல் ஜனத்திலிராதபடி அழிக்கப்பட்டனர்.
அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலாகிய சபை ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ ஆனபோது, இதைப்போன்ற ஒழுக்கத் தராதரங்கள் அவர்களுக்கு வைக்கப்பட்டன. (கலாத்தியர் 6:16) கிறிஸ்தவர்களுங்கூட ‘தீமையை வெறுக்க’ வேண்டும். (ரோமர் 12:9) “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்,” என்று இஸ்ரவேலருக்குச் சொன்ன யெகோவாவின் வார்த்தைகள் இவர்களுக்கும் பொருந்தின. (1 பேதுரு 1:15, 16) வேசித்தனம், விபசாரம், ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி, மிருகத்துடன் பாலுறவு, முறைதகாப் புணர்ச்சி உறவுகள், போன்ற அசுத்தமான பழக்கச் செயல்கள் கிறிஸ்தவ சபையைக் கறைப்படுத்தக்கூடாது. இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதை நிறுத்த மறுப்பவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். (ரோமர் 1:26, 27; 2:22; 1 கொரிந்தியர் 6:9, 10; எபிரெயர் 13:4) இந்தக் “கடைசிநாட்களில்” இதே தராதரங்கள் ‘மற்ற செம்மறியாடுகளுக்குப்’ பொருந்துகிறது. (2 தீமோத்தேயு 3:1; யோவான் 10:16, NW) இதன் பலனாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் மற்ற செம்மறியாடுகளும், சுத்தமான ஆரோக்கியமுள்ள ஆட்களாலாகியோராக, யெகோவாவின் சாட்சிகளென தங்கள் கடவுளுடைய பெயரை ஏற்றிருக்க முடிகிறது.—ஏசாயா 43:10, தி.மொ.
சபையைச் சுத்தமாக வைத்தல்
இதற்கு நேர்மாறாக, இந்த உலகம், எல்லா வகைகளான ஒழுக்கக்கேட்டையும் கண்டிக்காமல் விடுகிறது. உண்மையானக் கிறிஸ்தவர்கள் வேறுபட்டோராக இருக்கிறபோதிலும், இப்போது யெகோவாவைச் சேவிக்கும் பலர், ஒரு காலத்தில் உலகத்தாராக இருந்தனர் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. நம்முடைய பரிசுத்த கடவுளை அவர்கள் அறிவதற்கு முன்பாக, ஒரு “துன்மார்க்க உளையிலே” புரண்டுகொண்டு, தங்கள் ஒழுக்கந்தவறும் மாம்சத்தின் இச்சைகளையும் மனக்கற்பனைகளையும் தாங்கள் ஏன் திருப்திசெய்துகொள்ளக்கூடாது என்பதற்கு எந்தக் காரணத்தையும் காணாதவர்களாக அவர்களில் பலர் இருந்திருந்தனர். (1 பேதுரு 4:4) இழிதரமான, புற தேச ஜனங்களின் அருவருப்பானப் பழக்கச் செயல்களை விவரித்தப் பின்பு, அப்போஸ்தலன் பவுல்: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்,” என்று சொன்னார். இருப்பினும் அவர் மேலும் தொடர்ந்து: “ஆயினும் நீங்கள் கழுவப்பட்டீர்கள். பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டீர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் நமது கடவுளின் ஆவியினாலுமே அப்படியாக்கப்பட்டீர்கள்,” என்று சொன்னார்.—1 கொரிந்தியர் 6:11, தி.மொ.
எத்தகைய ஆறுதலானக் கூற்றாக அது உள்ளது! இதற்கு முன்னால் வாழ்க்கையில் ஓர் ஆள் என்ன செய்திருந்தாலும், கிறிஸ்துவைப் பற்றிய மகிமையான நற்செய்தி அவருடைய இருதயத்தில் செயல்படுகையில் அவர் மாறுகிறார். அவர் விசுவாசித்து, தன்னை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார். அப்போதிருந்து, கடவுளுடைய பார்வையில் சுத்தமாய்க் கழுவப்பட்டவராக, ஒழுக்கப்பிரகார சுத்தமான வாழ்க்கை நடத்துகிறார். (எபிரெயர் 9:14) அதற்கு முன்னால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, அவர் ‘முன்னானவைகளை நாடித் தொடர’ முடியும்.a—பிலிப்பியர் 3:13, 14; ரோமர் 4:7, 8.
மனம்வருந்தி திரும்பின தாவீதுக்கு, கொலைபாதகத்தையும் விபசாரக் குற்றத்தையும் யெகோவா மன்னித்தார். மனம்வருந்தி திரும்பின மனாசேக்கு, ஒழுக்கக்கேடான விக்கிரகாராதனையையும் மிகுதியாக இரத்தம் சிந்தினதையும் அவர் மன்னித்தார். (2 சாமுவேல் 12:9, 13; 2 நாளாகமம் 33:2-6, 10-13) நாம் மனம்வருந்தி திரும்பி உள்ளப்பூர்வமாயும் மனத்தாழ்மையுடனும் அவரை அணுகினால் நமக்கும் மன்னிப்பதற்கு அவர் ஆயத்தமாயிருப்பதற்காக நாம் உண்மையாய் நன்றியுள்ளோராக இருக்கலாம். இருப்பினும், தாவீதும் மனாசேயுமான இந்த இரண்டு ஆட்களையும்—அவர்களோடுகூட இஸ்ரவேலரையும்—யெகோவா மன்னித்தபோதிலும், தங்கள் பாவச் செயல்களின் விளைவுகளை அனுபவிப்போராய் அவர்கள் வாழவேண்டியிருந்தது. (2 சாமுவேல் 12:11, 12; எரேமியா 15:3-5) அவ்வாறே, மனம்வருந்தி திரும்பும் பாவிகளை யெகோவா மன்னிக்கிறபோதிலும், அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கலாம்.
தவிர்க்கமுடியாத விளைவுகள்
உதாரணமாக, மிதமீறிய ஒழுக்கக்கேடான வாழ்க்கை நடத்தி, எய்ட்ஸ் (AIDS) நோய் தொற்றியவராயிருக்கிற ஒருவர், சத்தியத்தை ஏற்று, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படும் அளவுக்குத் தன் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம். இப்போது அவர் ஆவிக்குரியப்பிரகாரம் சுத்தமானக் கிறிஸ்தவனாக, கடவுளுடன் நல்லுறவையும், அதிசயமான எதிர்கால நம்பிக்கையையும் உடையவராக இருக்கிறார்; ஆனால் எய்ட்ஸ் நோய் இன்னும் இருக்கிறது. அந்த நோயால் அவர் கடைசியாக மரிக்கலாம். அது அவருடைய முந்தின நடத்தையின் விசனகரமான, ஆனால் தப்பமுடியாத விளைவாகும். கிறிஸ்தவர்கள் சிலருக்கு, முன்னாளில் நடப்பித்த படுமோசமான ஒழுக்கக்கேட்டின் பாதிப்புகள் வேறு வழிகளில் விடாது தொடரலாம். தங்கள் முழுக்காட்டுதலுக்குப் பின், பல ஆண்டுகளாக, ஒருவேளை, இந்தக் காரிய ஒழுங்குமுறையில் தங்கள் வாழ்க்கையின் மீதிகாலமெல்லாம், தங்கள் முந்தின ஒழுக்கக்கேட்டு வாழ்க்கைப்போக்குக்குத் திரும்பும்படியானத் தங்கள் மாம்சத் தூண்டுதல்களோடு அவர்கள் போராடவேண்டியதாக இருக்கலாம். யெகோவாவின் ஆவியினுடைய உதவியால், இதை எதிர்ப்பதில் பலர் வெற்றியடைகின்றனர். ஆனால் அவர்கள் இடைவிடாது போராட வேண்டியிருக்கிறது.—கலாத்தியர் 5:16, 17.
அத்தகையோர், தங்கள் தூண்டுதல்களை அடக்கியாளும் வரையில் பாவம் செய்கிறதில்லை. ஆனால், சக்திவாய்ந்த மாம்சத் தூண்டுதல்களோடு இன்னும் போராட வேண்டியிருக்கும்போது, அவர்கள் ஆண்களாய் இருந்தால், சபையில் பொறுப்பேற்பதற்கு ‘நாடி முயற்சி செய்யாமல்’ இருக்க அவர்கள் ஞானமாய்த் தீர்மானிக்கலாம். (1 தீமோத்தேயு 3:1, NW) ஏன்? ஏனெனில், மூப்பர்களில் சபை வைக்கும் நம்பிக்கையானப் பொறுப்பை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (ஏசாயா 32:1, 2; எபிரெயர் 13:17) தனிப்பட்டவரின் உள்ளார்ந்த பல காரியங்களின்பேரில் மூப்பர்களிடம் அறிவுரை நாடி ஆலோசிக்கப்படுகிறது என்பதையும், கூருணர்ச்சி சம்பந்தப்பட்ட நிலைமைகளை அவர்கள் கையாள வேண்டியிருக்கிறதென்பதையும் அவர்கள் உணருகிறார்கள். அசுத்தமான மாம்ச இச்சைகளோடு இடைவிடாது போராடும் ஒருவர், அத்தகைய பொறுப்புள்ள பதவிக்காக நாடிப் பிரயாசப்படுவது அன்பாகவோ, ஞானமாகவோ அல்லது நியாயமாகவோ இராது.—நீதிமொழிகள் 14:16; யோவான் 15:12, 13; ரோமர் 12:1.
முழுக்காட்டப்படுவதற்கு முன்பாக, சிறு பிள்ளையோடு பாலுறவு நடத்தையில் ஈடுபட்டவராயிருந்த ஒருவருக்கு மற்றொரு விளைவு உண்டாகலாம். அவர் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது, மனம்வருந்தி திரும்புகிறார். அந்தக் கொடுமையானப் பாவத்தைச் சபைக்குள் கொண்டுவருகிறதில்லை. அவர் அதற்குப்பின் சிறந்த முன்னேற்றம் செய்து, தன் தவறான உணர்ச்சித் தூண்டுதல்களை முற்றிலுமாக அடக்கி மேற்கொண்டு, சபையில் பொறுப்புள்ள ஒரு பதவியையும் ‘நாடி முயற்சி செய்ய’ விரும்பலாம். எனினும், முன்னாட்களில் சிறு பிள்ளைகளிடம் தவறான நடத்தையில் ஈடுபடுபவராக அந்தச் சமுதாயத்தில் வசைபெயர் எடுத்ததை அவர் தன் நல்வாழ்க்கையினால் ஒழிக்க வேண்டியுள்ளது. “குற்றஞ்சாட்டப்படாதவனும், . . . புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயும்” அவர் இருக்க முடியுமா? (1 தீமோத்தேயு 3:1-7, 10; தீத்து 1:7) இல்லை, அவ்வாறு அவர் இருக்க முடியாது. ஆகையால், அவர் சபை சிலாக்கியங்களுக்கு தகுதிபெறாதவராக இருப்பார்.
ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவர் பாவம் செய்கையில்
நாம் பலவீனர் என்பதையும், முழுக்காட்டுதலுக்குப் பின்பும் நாம் பாவத்துக்குள் விழக்கூடும் என்பதையும் யெகோவா புரிந்துகொள்கிறார். அப்போஸ்தலன் யோவான், தன் நாளில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” (1 யோவான் 2:1, 2) ஆம், பாவத்தில் விழுகிற முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களை—அவர்கள் உண்மையில் மனம்வருந்தி திரும்பி, தங்கள் தவறானப் போக்கை விட்டுவிட்டால்—இயேசுவினுடைய பலியின் ஆதாரத்தின்பேரில் யெகோவா மன்னிப்பார்.
இதன் ஓர் உதாரணம், முதல் நூற்றாண்டில் கொரிந்துவிலிருந்த சபையில் காணப்பட்டது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சபையில் ஒருவன் முறைதகாப் புணர்ச்சியில் ஈடுபட்டதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் கேள்விப்பட்டு, அதில் உட்பட்ட ஆளைச் சபைக்குப் புறம்பாக்கும்படி அவர் கட்டளைகளைக் கொடுத்தார். பின்னால், அந்தப் பாவி மனம்வருந்தி திரும்பினான், அப்போது அவனைத் திரும்ப சபையில் நிலைநிறுத்தும்படி பவுல் அறிவுரை கூறினார். (1 கொரிந்தியர் 5:1, 13; 2 கொரிந்தியர் 2:5-9) இவ்வாறு, மீண்டும் நலம்பெறச் செய்யும் யெகோவாவின் அன்புள்ள இரக்கத்தின் வல்லமையாலும், பெரும் மதிப்புவாய்ந்த இயேசுவினுடைய மீட்பின் கிரய பலியினாலும் அந்த மனிதன் தன் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டான். இதைப்போன்ற காரியங்கள் இன்றும் நடக்கலாம். எனினும், இங்கேயும், வினைமையானப் பாவம் செய்த, முழுக்காட்டப்பட்ட ஒரு நபர் மனம்வருந்தி திரும்பி, யெகோவாவின் பார்வையில் மன்னிக்கப்பட்டிருக்கிற போதிலும், அவருடைய பாவத்தின் விளைவுகள் இன்னும் தொடரக்கூடும்.—நீதிமொழிகள் 10:16, 17; கலாத்தியர் 6:7.
உதாரணமாக, ஒப்புக்கொடுத்த ஒரு பெண் வேசித்தனம் செய்தால், அவள் தன் நடத்தைக்காக மிகவும் வருந்தி, முடிவில் சபையின் உதவியால் ஆவிக்குரிய சுகநலம்பெற செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவள் தன் ஒழுக்கக்கேட்டினால் கருவுற்றிருந்தால் என்ன செய்வது? அப்போது அவள் தப்பிக்கொள்ள முடியாதபடி, அவளுடைய முழு வாழ்க்கையும், அவள் செய்த காரியத்தால் மாற்றப்பட்டிருக்கிறது. விபசாரக் குற்றம் செய்கிற ஓர் ஆண், மனம்வருந்தி திரும்பி, சபைநீக்கம் செய்யப்படாதிருக்கலாம். ஆனால் அவனுடைய குற்றமற்ற மணத்துணைவி அவனை விவாகரத்து செய்வதற்கு வேதப்பூர்வ காரணங்களை உடையவளாக இருக்கிறாள், அவ்வாறு செய்யவும் அவள் தெரிந்துகொள்ளலாம். (மத்தேயு 19:9) அவ்வாறு அவள் செய்தால், அந்த நபர், யெகோவாவால் மன்னிக்கப்பட்ட போதிலும், மீதியானத் தன் வாழ்நாள் முழுவதும் தன் பாவத்தின் இந்தத் துயரார்ந்த விளைவுடன் வாழ்வான்.—1 யோவான் 1:9.
வேறொரு பெண்ணை மணம் செய்துகொள்ளும்படி அன்பற்ற முறையில் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டுச் செல்லும் ஒரு நபரைப் பற்றியதென்ன? அவர் முடிவில் மனம்வருந்தி திரும்பி, சபையில் திரும்ப நிலைநாட்டப்படலாம். ஆண்டுகள் கடந்து செல்கையில் அவர் மாற்றமடைந்து ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேறலாம்.’ (எபிரெயர் 6:1) ஆனால் அவருடைய முதல் மனைவி துணையில்லாமல் வாழ்ந்து வரும் வரையாக, சபையில் பொறுப்புள்ள பதவியில் சேவிப்பதற்கு அவர் தகுதியற்றிருப்பார். அவர் ‘ஒரே மனைவியை உடைய புருஷனாக’ இல்லை. ஏனெனில், தன் முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கு வேதப்பூர்வ ஆதாரம் எதுவும் அவருக்கு இல்லை.—1 தீமோத்தேயு 3:2, 12.
ஒரு கிறிஸ்தவன் தீமையை வெறுக்கும் தன்மையைத் தன்னில் வளர்ப்பதற்கு இவை வல்லமைவாய்ந்த காரணங்களாக இருக்கின்றன அல்லவா?
சிறு பிள்ளையோடு தகாப் பாலுறவு நடத்தையில் ஈடுபடுபவரைப் பற்றியதென்ன?
வயதுவந்தவரான முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர் ஒருவர் ஒரு பிள்ளையோடு தகாத பாலுறவு நடத்தையில் ஈடுபட்டால் என்ன செய்வது? யெகோவா அவரை ஒருபோதும் மன்னிக்கமாட்டாத அளவுக்கு அவ்வளவு மிகப் பொல்லாதவராக அந்தப் பாவி இருக்கிறாரா? அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ‘பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுதலே’ மன்னிக்கப்பட முடியாதது என்று இயேசு சொன்னார். சத்தியத்தை அறிந்தும், மனப்பூர்வமாய்ப் பாவத்தைப் பழக்கமாய்ச் செய்கிற ஒருவனுக்கே, பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இல்லை என்று பவுல் சொன்னார். (லூக்கா 12:10; எபிரெயர் 10:26, 27) ஆனால், பாலுறவு நடத்தையில்—முறைதகாப் புணர்ச்சியாலோ மற்றப்படியோ—ஒரு பிள்ளையை கெடுக்கிற, வயதுவந்த ஒரு கிறிஸ்தவனை மன்னிக்க முடியாதென்று பைபிள் எவ்விடத்திலும் சொல்லுகிறதில்லை. அவர் உண்மையில் இருதயப்பூர்வமாய் வருந்தித் திரும்பி, தன் நடத்தையை முழுமையாக மாற்றினால், நிச்சயமாகவே அவருடைய பாவங்கள் சுத்தமாகக் கழுவப்பட முடியும். எனினும், அவர் வளர்த்தத் தவறான மாம்ச உணர்ச்சித் தூண்டுதல்களோடு அவர் இன்னும் போராட வேண்டியதிருக்கலாம். (எபேசியர் 1:7) மேலும் அவர் தடுக்க முடியாத விளைவுகளும் இருக்கும்.
தகாப் பாலுறவு நடத்தையில் ஈடுபடுபவர் வாழ்ந்து வருகிற நாட்டினுடைய சட்டத்தின்பேரில் சார்ந்து, அவர் சிறையிருப்பை அனுபவிக்கவோ அல்லது அரசாங்கம் அளிக்கும் மற்ற தண்டனைகளை அனுபவிக்கவோ நேரிடலாம். இதிலிருந்து அவரை சபை பாதுகாக்காது. மேலும், அந்த மனிதர் வினைமையான பலவீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், அது அப்போதிருந்து கவனத்தில் வைக்கப்பட வேண்டும். அவர் மனம்வருந்தி திரும்புபவராகத் தோன்றினால், ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யும்படியும், வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்படியும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும், ஊழியக் கூட்டத்திலும் போதனையில்லாதப் பாகங்களிலுங்கூட பங்குகொள்ளும்படியும் அவர் ஊக்குவிக்கப்படுவார். எனினும், இது, சபையில் பொறுப்புள்ள பதவியில் சேவிக்க அவர் தகுதிப்பெறுவார் என்று அர்த்தப்படுகிறதில்லை. இதற்கு வேதப்பூர்வக் காரணங்கள் யாவை?
ஒரு காரியமாக, மூப்பராயிருக்கும் ஒருவர் ‘தன்னடக்கமுள்ளவராக’ இருக்க வேண்டும். (தீத்து 1:8, தி.மொ.) உண்மைதான், நம்மில் ஒருவருக்கும் பரிபூரண தன்னடக்கம் இல்லை. (ரோமர் 7:21-25) ஆனால் பிள்ளையுடன் தகாப் பாலுறவு நடத்தையில் ஈடுபடும் பாவத்துக்குள் வீழ்கிற, வயதுவந்த, ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவர் இயற்கைக்கு மாறான மாம்ச பலவீனத்தை வெளிப்படுத்துகிறார். வயதுவந்த அத்தகைய ஒருவர், மற்ற பிள்ளைகளுடனும் தகாப் பாலுறவு நடத்தையில் ஈடுபடக்கூடுமென்று அனுபவம் காண்பித்திருக்கிறது. ஆனால் பிள்ளைகளிடம் தகாப் பாலுறவு நடத்தையில் ஈடுபடும் எல்லாரும் அந்தப் பாவத்தைத் திரும்பத்திரும்பச் செய்வதில்லை என்பது உண்மைதான், ஆனால் பலர் அவ்வாறு செய்கின்றனர். மறுபடியுமாகப் பிள்ளைகளுடன் தகாப் பாலுறவு நடத்தையில் ஈடுபடப்போகிறவர் யார், அவ்வாறு செய்யாதிருக்கப் போகிறவர் யார் என்று சொல்வதற்கு சபை இருதயங்களை ஆராய்ந்தறிய முடியாது. (எரேமியா 17:9) ஆகையால், தீமோத்தேயுவுக்குப் பவுல் கொடுத்த பின்வரும் அறிவுரை, பிள்ளைகளுடன் தகாப் பாலுறவு நடத்தையில் ஈடுபட்ட முழுக்காட்டப்பட்டுள்ள வயதுவந்தவர்களின் காரியத்தில் முக்கியமாய்ப் பொருந்துகிறது: “ஒருவன்மேலும் அவசரமாகக் கைகளை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் பாவங்களில் பங்காளியாகாதே.” (1 தீமோத்தேயு 5:22, தி.மொ.) நம்முடைய பிள்ளைகளின் பாதுகாப்புக்காக, பிள்ளைகளுடன் தகாப் பாலுறவு நடத்தையில் ஈடுபட்டவராக அறியப்பட்டவர் சபையில் பொறுப்புள்ள பதவிக்கு தகுதிபெறுகிறதில்லை. மேலும், அவர் பயனியராக இருக்க முடியாது, அல்லது மற்ற விசேஷ முழுநேர சேவைசெய்ய முடியாது.—யாத்திராகமம் 21:28, 29-ல் உள்ள நியமத்தை ஒப்பிடுக.
சிலர் இவ்வாறு கேட்கலாம், ‘மற்ற பாவ வகைகளைச் செய்து மனம்வருந்தி திரும்பினவர்களாகத் தோன்றின சிலர், தங்கள் பாவத்தைத் திரும்பவும் செய்தனர் அல்லவா?’ ஆம், அவ்வாறு நடந்திருக்கிறது, ஆனால் மற்றக் காரணங்களும் கவனிக்கப்பட வேண்டியிருக்கின்றன. உதாரணமாக, ஒருவர் வயதுவந்த மற்ற ஒருவரிடம் ஒழுக்கக்கேடான நாட்டத்துடன் அணுகினால், அந்த வாலிபர் அவனுடைய அல்லது அவளுடைய தகாத அணுகுதல்களை எதிர்த்துத் தடுக்க முடிகிறவராக இருக்க வேண்டும். பிள்ளைகளை ஏமாற்ற, குழப்பமடைய, அல்லது திகிலடையச் செய்வது அதிக எளிது. பிள்ளை ஞானத்தில் குறைவுபடுகிறதைப் பற்றி பைபிள் பேசுகிறது. (நீதிமொழிகள் 22:15; 1 கொரிந்தியர் 13:11) மனத்தாழ்மையான மாசற்றத் தன்மைக்கு ஓர் உதாரணமாக, இயேசு பிள்ளைகளைப் பயன்படுத்தினார். (மத்தேயு 18:4; லூக்கா 18:16, 17) பிள்ளையின் மாசற்றத் தன்மை, முழுமையான அனுபவக் குறைவையும் உட்படுத்துகிறது. பிள்ளைகளில் பெரும்பான்மையர், அணுகத்தக்கவர்களாய், பிரியப்படுத்த ஆவலுள்ளோராக இருக்கின்றனர், இவ்வாறு அவர்கள் அறிந்து நம்பிக்கை வைக்கும் பெரியவர் ஒருவர் சூழ்ச்சி செய்யும் தவறான பயன்படுத்தலுக்கு இடமளிப்பவராகின்றனர். ஆகையால் சபை, அதன் பிள்ளைகளைப் பாதுகாக்க யெகோவாவுக்கு முன்பாகப் பொறுப்புடையதாக இருக்கிறது.
நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளைகள், தங்கள் பெற்றோருக்கும், மூப்பர்களுக்கும், மற்ற பெரியோருக்கும் கீழ்ப்படியவும், மதிப்பு தரவும் கற்றுக்கொள்கின்றனர். (எபேசியர் 6:1, 2; 1 தீமோத்தேயு 5:1, 2; எபிரெயர் 13:7) இந்த அதிகாரமுள்ள பெரியவர்களில் ஒருவர், பிள்ளையைத் தீய வழியில் தூண்டி அல்லது வற்புறுத்தி, அவனை அல்லது அவளைப் பாலுறவு செயல்களுக்கு உட்பட செய்யும்படி, பிள்ளையின் அந்த மாசற்ற நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தினால், அது திடுக்கிடச் செய்யும் மிக மோசமான, இயல்முரணிய பாலுணர்ச்சியாக இருக்கும். இவ்வகையில் தகாப் பாலுறவு நடத்தையால் தாக்கப்பட்டிருக்கிறவர்கள், அதன் விளைவாக உண்டாகும் உணர்வதிர்ச்சியைப் போக்குவதற்குப் பல ஆண்டுகளாக அடிக்கடி போராடுகின்றனர். எனவே, பிள்ளையைத் தகாப் பாலுறவுக்கு உட்படுத்தும் ஒருவர், சபையால் கடும் சிட்சைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படுகிறார். சபையில் பொறுப்புள்ள பதவியில் அவர் இருக்கிறார் என்பதல்ல, அதைப்பார்க்கிலும், சபையின் கறைப்படாதத் தூய்மையே அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 5:6; 2 பேதுரு 3:14.
பிள்ளையைத் தகாப் பாலுறவுக்கு உட்படுத்தும் ஒருவர், உள்ளப்பூர்வமாய் மனம்வருந்தி திரும்பினால், பைபிள் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்தும் ஞானத்தை அவர் உணர்ந்தறிந்துகொள்வார். தீமையை வெறுக்க அவர் உண்மையில் கற்றுக்கொண்டால், தான் செய்ததை அவர் மனமார்ந்து வெறுத்து, தன் பாவத்தில் மறுபடியும் உட்படுவதைத் தவிர்ப்பதற்குப் போராடுவார். (நீதிமொழிகள் 8:13; ரோமர் 12:9) மேலும், யெகோவாவினுடைய அன்பின் மேன்மைக்காக அவருக்கு நிச்சயமாகவே நன்றி செலுத்துவார். அதன் பலனாகவே, தன்னைப்போன்ற மனந்திரும்பின பாவி, நம்முடைய பரிசுத்தக் கடவுளை இன்னும் வணங்கி, பூமியில் என்றென்றும் வாழப்போகிற ‘உத்தமர்களுக்குள்’ ஒருவராக இருக்கும்படியான நம்பிக்கை உடையோராக இருக்கலாம்.—நீதிமொழிகள் 2:21.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம், மே 1, 1996-ன் வெளியீட்டில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்பதைப் பாருங்கள்.
[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]
மனந்திரும்பின பாவிகளை யெகோவா மன்னிக்கிறபோதிலும், அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கும்