நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்
நியூ யார்க் மாநிலத்திலுள்ள ஒரு மருத்துவர் உயிர்போகும் நிலையிலிருந்த மேரியை காப்பாற்றுகிறார். ஆனால் 50 வயது மேரியோ டாக்டருக்கு நன்றி சொல்லவுமில்லை, தன்னுடைய மருத்துவ செலவுக்கான தொகையை செலுத்தவுமில்லை. இன்று நிலவும் நன்றிகெட்ட தன்மையை இது படம்பிடித்துக் காட்டுகிறதல்லவா!
இயேசு ஒருசமயம் ஒரு கிராமத்துக்குள் நுழைந்தபோது, குஷ்டரோகம் எனும் கொடிய வியாதியால் பீடிக்கப்பட்ட பத்து மனிதர்களை எதிர்ப்பட்டார் என்று பைபிள் விவரிக்கிறது. அவர்கள் அவரை நோக்கி பலத்த சத்தமிட்டு: “இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும்” என்று கூப்பிட்டனர். இயேசு அவர்களிடம்: “நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்” என்று கட்டளையிட்டார். அவருடைய கட்டளையை அந்தக் குஷ்டரோகிகள் ஏற்றுக்கொண்டு சென்றனர்; செல்லும் வழியிலேயே, தங்களுடைய வியாதி சுகமடைந்ததை பார்க்கவும் உணரவும் தொடங்கினர்.
சுகமடைந்த குஷ்டரோகிகளில் ஒன்பது பேர் தங்களுடைய வழியில் தொடர்ந்து சென்றனர். ஆனால் சமாரியனான ஒரு குஷ்டரோகியோ, இயேசுவைப் பார்ப்பதற்காக திரும்பி வந்தான். இந்த முன்னாள் குஷ்டரோகி தேவனைத் துதித்துக்கொண்டே வந்து, இயேசுவைப் பார்த்தவுடனே அவர் காலில் விழுந்து அவருக்கு நன்றி சொன்னான். அவனுக்கு பதிலளிப்பவராய் இயேசு பின்வருமாறு சொன்னார்: “சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா? மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே?”—லூக்கா 17:11-19.
“மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்ற இந்தக் கேள்வியில் எத்தகைய முக்கியமான பாடம் சுட்டிக் காட்டப்படுகிறது. மேரியைப் போன்றே, அந்த ஒன்பது குஷ்டரோகிகளிடமும் ஒரு பெரும் குறைபாடு இருந்தது, அதாவது, அவர்கள் நன்றியுள்ளவர்களாக இல்லை. அத்தகைய நன்றிகெட்டத்தனம் இன்றும்கூட மிகப் பரவலாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன?
நன்றிகெட்டத்தனத்துக்கு அடிப்படை காரணம்
நன்றிகெட்டத்தனத்தின் அடிப்படை வேர் சுயநலம். நம்முடைய முதல் மனிதப் பெற்றோராகிய ஆதாமையும் ஏவாளையும் எடுத்துக் கொள்ளுங்கள். யெகோவா அவர்களை தெய்வீக குணநலன்களோடு படைத்தார்; அழகிய தோட்ட வீடு, நேர்த்தியான சுற்றுப்புறங்கள், அர்த்தமுள்ள, திருப்தியளிக்கும் வேலை ஆகியவை உட்பட, அவர்களின் மகிழ்ச்சிக்கு தேவையான அனைத்தையும் தந்தார். (ஆதியாகமம் 1:26-29; 2:16, 17) ஆனால், சாத்தான் அவர்களுடைய சுயநல ஆசையைத் தூண்டினான்; அந்த செல்வாக்கிற்குள் வீழ்ந்த இத்தம்பதி கீழ்ப்படியாதவர்களாகி, யெகோவா செய்திருந்த நன்மைகளுக்கு அவமதிப்பைக் காட்டினர்.—ஆதியாகமம் 3:1-15; வெளிப்படுத்துதல் 12:9.
கடவுள் தம்முடைய தனிப்பட்ட உடைமையாக தெரிந்தெடுத்த, பூர்வ இஸ்ரவேல் மக்களையும்கூட கவனியுங்கள். பொ.ச.மு. 1513-ம் வருடம் நிசான் மாதம் 14-ம் தேதி இரவில் இஸ்ரவேல தாய்தகப்பன்மார் எத்தகைய நன்றியுள்ளவர்களாக இருந்திருப்பர்! முக்கியத்துவம் வாய்ந்த அந்த இரவில், கடவுளுடைய தூதன் ‘எகிப்து தேசத்திலுள்ள . . . முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம்’ கொன்றார்; ஆனால், சரியாக குறியிடப்பட்டிருந்த இஸ்ரவேலர்களின் வீடுகளைக் கடந்து சென்றார். (யாத்திராகமம் 12:12, 21-24, 30) செங்கடலில் பார்வோனுடைய படையினிடமிருந்து விடுவிக்கப்பட்டபோதும், நன்றி பொங்கிய இருதயத்துடன் ‘மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்.’—யாத்திராகமம் 14:19-28; 15:1-21.
எனினும், எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த ஒருசில வாரங்களுக்குள்ளாகவே, ‘இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் . . . முறுமுறுக்கத் தொடங்கினார்கள்.’ அவர்கள் எவ்வளவு எளிதாக நன்றிகெட்டத்தனம் என்ற வலையில் வீழ்ந்துவிட்டனர்! எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்தபோது, “இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்டதை” இழந்துவிட்டோமென புலம்பினார்கள். (யாத்திராகமம் 16:1-3) தெளிவாகவே, நன்றியுணர்வை வளர்த்துக் கொள்வதற்கும் வெளிக்காட்டுவதற்கும் எதிராக சுயநலம் வேலை செய்கிறது.
பாவமுள்ள ஆதாமின் சந்ததியராக, நாம் அனைவருமே சுயநலத்தின் சாயலையும், நன்றிகெட்ட மனச்சாய்வையும் உடையவர்களாக பிறந்திருக்கிறோம். (ரோமர் 5:12) இவ்வுலக மக்களை அடக்கியாளும் சுயநலவாதத்தின் ஒரு பாகமாகவும்கூட நன்றிகெட்டத்தனம் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றைப் போல, எவ்விடமும் வியாபித்திருக்கும் இம்மனப்பான்மை நம்மை பாதிக்கிறது. (எபேசியர் 2:1, 2) எனவே, நாம் நன்றியுள்ள மனநிலையை வளர்க்க வேண்டியது அவசியம். அதை நாம் எப்படி செய்யலாம்?
ஆழ்ந்து யோசிப்பது அவசியம்!
வெப்ஸ்டர்ஸ் தேர்ட் நியூ இண்டர்நேஷனல் டிக்ஷ்னரி நன்றியுணர்வை, “நன்றியுள்ளவர்களாக இருக்கும் நிலை: தனக்கு நன்மை செய்தவருக்கு திரும்ப தயைக் காட்டும்படி தூண்டும் கனிவான சிநேகப்பான்மையான உணர்வு” என விவரிக்கிறது. உணர்ச்சி என்பது இயந்திரம் ஒன்றுமல்ல; சுவிட்ச் போட்டவுடன் வருவதற்கும் அணைத்துவிட்டால் மறைவதற்கும். அது ஒரு நபருக்குள்ளிருந்து தானாகவே ஊற்றெடுத்து வரவேண்டும். நன்றியுணர்வு என்பது நல்ல பண்புகளை காட்டுவதையும்விட அதிகத்தை குறிக்கிறது; அது இருதயத்திலிருந்து உருவாகிறது.
இருதயப்பூர்வமாக நன்றியுள்ளவர்களாக உணருவதற்கு நாம் எப்படி கற்றுக்கொள்ளலாம்? நாம் பெரும்பாலும் எப்படி உணருகிறோம் என்பதற்கும் எதை சிந்திக்கிறோம் என்பதற்கும் தொடர்பு இருக்கிறதென பைபிள் காட்டுகிறது. (எபேசியர் 4:22-24) நன்றியுள்ளவர்களாக உணரக் கற்றுக் கொள்வதென்பது நமக்கு காண்பிக்கப்படும் தயவை போற்றுதலோடு ஆழ்ந்து யோசிக்கையில் தொடங்குகிறது. இது தொடர்பாக மனநலத் துறையில் பணியாற்றும் டாக்டர் வேன் டபிள்யூ. டையர், இவ்வாறு சொல்கிறார்: “ஒன்றைப் பற்றி முதலில் சிந்திக்காமல் அதைப் பற்றிய உணர்வு (உணர்ச்சி) உங்களுக்கு ஏற்படாது.”
உதாரணமாக, நம்மைச் சுற்றியுள்ள சிருஷ்டிப்பிற்காக நன்றியுடன் இருப்பதைப் பற்றிய விஷயத்துக்கு வருவோம். மேகமூட்டமில்லாத இரவுப்பொழுதில், நட்சத்திரக் கூட்டங்களால் நிறைந்திருக்கும் வானத்தைப் பார்க்கும்போது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? தாவீது ராஜா தன்னுடைய வியப்பை இவ்வாறு விவரித்தார்: “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.” இரவின் நிசப்தத்தில் நட்சத்திரங்கள் தாவீதிடம் மௌனமாய் பேசி, இவ்வாறு எழுதும்படி அவரைத் தூண்டின: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” நட்சத்திரங்கள் நிறைந்த வானங்கள் தாவீதை இத்தனை ஆழமாக பாதித்ததற்கு காரணம் என்ன? அவரே இவ்வாறு பதிலளிக்கிறார்: “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.”—சங்கீதம் 8:3, 4; 19:1; 143:5.
சிருஷ்டிப்பின் அதிசயங்களைக் குறித்து வியந்து அவற்றைப் பற்றி சிந்திப்பதன் முக்கியத்துவத்தை தாவீதின் குமாரனாகிய சாலொமோனும்கூட மதித்துணர்ந்தார். உதாரணமாக, நம்முடைய பூமியை குளிர்விப்பதில் மழை மேகங்கள் வகிக்கும் பங்கை உணர்ந்தவராக அவர் இவ்வாறு எழுதினார்: “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.” (பிரசங்கி 1:7) எனவே மழைநீரும் நதிகளும் பூமியை குளிர்வித்தபிறகு, அவற்றின் தண்ணீர் இந்தச் சுழற்சியின்படி மீண்டும் சமுத்திரத்திலிருந்து மேகங்களுக்குள் செல்கின்றன. நீரின் இத்தகைய சுத்திகரிப்பும் சுழற்சியும் இன்றி இந்தப் பூமி எப்படி இருக்கும்? இதுபோன்ற சிந்தனைகளில் ஆழ்ந்தபிறகு, சாலொமோன் எந்தளவுக்கு நன்றியுள்ளவராக உணர்ந்திருக்க வேண்டும்!
நன்றியுள்ள நபர் குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், பரிச்சயமானவர்கள் ஆகியோருடனான தன்னுடைய உறவையும் மதிப்புமிக்கதாக கருதுகிறார். அவர்களுடைய தயவான செயல்கள் இவருடைய கவனத்திலிருந்து தப்புவதில்லை. அவர்கள் காட்டும் தயவை இவர் போற்றுதலோடு நினைத்துப் பார்க்கையில், இருதயத்தில் நன்றியுணர்வு பெருக்கெடுக்கிறது.
நன்றியை சொல்லுதல்
“நன்றி” என்பது எவ்வளவு சாதாரணமான வார்த்தை! இத்தகைய ஒரு வார்த்தையைச் சொல்வதும் எளிதுதான். அதோடு அதை சொல்வதற்கான வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன. நமக்காக கதவைத் திறந்துவிடுபவருக்கு அல்லது நாம் கீழே போட்டதை எடுத்துக் கொடுப்பவருக்கு, கனிவான மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பது எத்தகைய புத்துணர்ச்சியளிப்பதாய் இருக்கிறது! இந்த வார்த்தையை கேட்பது ஸ்டோர் கிளார்க், ஓட்டல் பணியாளர் அல்லது தபால்காரர் ஆகியோரின் வேலையை சுலபமானதாக ஆக்குவதோடு அவர்களை அதிக உற்சாகப்படுத்தவும் செய்கின்றன.
தயவுள்ள செயல்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான ஒரு எளிய வழி தேங்க்யூ கார்டுகளை அனுப்புவதே. கடைகளில் கிடைக்கும் அநேக கார்டுகளில் இத்தகைய உணர்ச்சிகள் மிக அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. அதில் உங்கள் கைப்பட எழுதப்பட்ட போற்றுதலான ஒருசில வார்த்தைகளை சேர்ப்பதே அன்பின் தனிப்பட்ட வெளிக்காட்டாக இருக்காதா? சிலர், அச்சிடப்பட்ட கார்டுக்கு பதிலாக தங்கள் கைப்பட எழுதப்பட்ட கடிதத்தையே தெரிவு செய்கிறார்கள்.—நீதிமொழிகள் 25:11-ஐ ஒப்பிடுக.
வீட்டில் நம்மோடு வாழும் நம் குடும்பத்தினரே நன்றியைப் பெறுவதற்கு அதிக தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள். திறமைசாலியான மனைவியைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவள் புருஷனும் . . . அவளைப் புகழுகிறான்.” (நீதிமொழிகள் 31:28, 29) கணவன் தன் மனைவியைப் புகழ்ந்து, உள்ளப்பூர்வமான நன்றி தெரிவிப்பது குடும்பத்தில் சமாதானத்துக்கும் மனதிருப்திக்கும் வழிநடத்தாதா? கணவன் வீட்டுக்கு வருகையில் மனைவி கனிவாகவும் போற்றுதலோடும் வரவேற்கையில் கணவரும்கூட மகிழ்ச்சியடைவாரல்லவா? இக்காலங்களில், திருமண வாழ்வில் நாலா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி வருகிறது; இத்தகைய நெருக்கடிகள் குவியும்போது, கோபம் சட்டென்று வெடிக்கிறது. நன்றியுள்ள மனநிலையை உடைய ஒருவர் விட்டுக்கொடுக்கவும், பெரிதுபடுத்தாமல் இருக்கவும், மன்னிக்கவும் தயாராக இருக்கிறார்.
இளைஞரும்கூட தங்களுடைய பெற்றோருக்கு இருதயப்பூர்வமான போற்றுதலைத் தெரிவிப்பதற்கு கவனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். பெற்றோர் பரிபூரணராக இல்லை என்பது உண்மைதான்; ஆனால், அவர்கள் உங்களுக்கு செய்தவற்றிற்காக நன்றிகாட்டத் தவறுவதற்கு இது ஒரு சாக்கு அல்ல. பிறப்பிலிருந்து அவர்கள் உங்களுக்கு காட்டும் அன்பும் கவனிப்பும் விலை கொடுத்து ஒருபோதும் வாங்க முடியாதது. கடவுளைப் பற்றிய அறிவை அவர்கள் உங்களுக்கு போதித்திருப்பார்களென்றால், நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு உங்களுக்கு கூடுதலான காரணம் உள்ளது.
“இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்.” என்று சங்கீதம் 127:4 அறிவிக்கிறது. பெற்றோர் சிறுசிறு காரியங்களுக்கெல்லாம் பிள்ளைகளை ஓயாமல் குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு அவர்களை பாராட்டுவதற்கும் வாய்ப்புகளைத் தேடவேண்டும். (எபேசியர் 6:4) தங்களுடைய பராமரிப்பில் உள்ள இளைஞர்கள் நன்றியுள்ள மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள உதவுவதே அவர்களுக்கு கிடைத்த ஒப்பற்ற சிலாக்கியம்!—நீதிமொழிகள் 29:21-ஐ ஒப்பிடுக.
கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருத்தல்
யெகோவா தேவன் ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ கொடுக்கிறவர். (யாக்கோபு 1:17) அதிலும் மிக சிறந்த பரிசு உயிர்; நம்மிடம் இருப்பவைகள் அல்லது நாம் போடும் திட்டங்கள் நாம் உயிரை இழந்துவிட்டால் பயனற்றதாகிவிடும். “ஜீவஊற்று உம்மிடத்தில் [யெகோவா தேவனிடத்தில்] இருக்கிறது” என்பதை நினைவில் கொள்ளும்படி வேதவசனங்கள் நம்மை துரிதப்படுத்துகின்றன. (சங்கீதம் 36:5, 7, 9; அப்போஸ்தலர் 17:28) கடவுளிடம் நன்றியுள்ள இருதயத்தை வளர்த்துக் கொள்வதற்காக, நாம் நம்முடைய சரீர, ஆவிக்குரிய வாழ்க்கையை ஆதரிப்பதற்கு அவர் வாரிவழங்கியிருக்கும் காரியங்களைக் குறித்து ஆழ்ந்து யோசிக்க வேண்டும். (சங்கீதம் 1:1-3; 77:11, 12) அத்தகைய இருதயம் வார்த்தைகளிலும் செயலிலும் போற்றுதலைக் காட்டும்படி நம்மைத் தூண்டும்.
ஜெபம் கடவுளுக்கு நம்முடைய நன்றியைத் தெரிவிப்பதற்கு எளிய வழியாக இருக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு சொன்னார்: “என் கடவுளாகிய யெகோவாவே, நீர் செய்த அதிசயங்களும் எங்கள் பொருட்டு நீர் பண்ணின யோசனைகளும் அநேகம்; உமக்கு நிகரானது ஒன்றுமில்லை; நான் அவைகளை அறிவித்துச் சொல்லப் புகுந்தால் அவைகள் எண்ணமுடியாதவைகள்.” (சங்கீதம் 40:5, தி.மொ.) நாமும் இவ்விதமாகவே சொல்லும்படி தூண்டப்படுவோமாக.
மற்றவர்களிடம் தான் பேசிய வார்த்தைகளிலும்கூட கடவுளிடமான தன்னுடைய போற்றுதலைக் காட்டுவதற்கு தாவீது தீர்மானித்திருந்தார். அவர் சொன்னார்: “கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.” (சங்கீதம் 9:1) கடவுளைப் பற்றி மற்றவர்களிடம் பேசி, அவருடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களை மனப்பூர்வமாக அவர்களுடன் பகிர்ந்துகொள்வதுதானே நன்றியைக் காட்டுவதற்கு மிகச் சிறந்த வழியாக இருக்கிறது. இது வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும்கூட அதிக நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு நமக்கு உதவும்.
“நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்” என்று யெகோவா சொல்கிறார். அவருக்கு உங்களுடைய இருதயப்பூர்வமான நன்றியைக் காட்டுவதால் வரும் மகிழ்ச்சியைப் பெறுவீர்களாக:—சங்கீதம் (திருப்பாடல்கள்) 50:23, பொது மொழிபெயர்ப்பு; 100:2.
[பக்கம் 7-ன் படம்]
உயிர் கடவுளிடமிருந்து வந்த பரிசு. ஒரு நபரிடம் உங்களுக்குள்ள கனிவான பாசத்தை உணர்ச்சி பொங்க தெரிவிக்கத் தவறாதீர்கள்