ஏன் நன்றியோடு இருக்கவேண்டும்?
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையால் ஹார்லி, மெஷினிஸ்ட் வேலையிலிருந்து அலுவலக கிளார்க் வேலைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மாற்றத்தைக் குறித்து அவர் எவ்வாறு உணர்ந்தார் என்று கேட்கப்பட்டபோது, ஹார்லி இவ்வாறு சொன்னார்: “மெஷின்ல வேலை செய்ய முடியலையேங்கிறது ஒரு குறையாத்தான் இருக்குது. ஆனாலும் வெளிப்படையா சொல்லனும்னா, முன்னாடி செஞ்ச வேலையைவிட இப்ப செய்ற வேலைல நான் சந்தோஷமா இருக்கேன்.”
தன் மனதிருப்திக்குரிய காரணத்தை ஹார்லி இவ்வாறு விளக்குகிறார்: “என்கூட வேலை செய்ற ஆட்களோட மனநிலைதான் இதுக்கு காரணம். நான் மொத வேலை செஞ்ச இடத்தில இருந்ததுமாதிரி இல்லாம, இங்கே என்னோட சூப்பர்வைசரும் சக ஊழியர்களும் நான் செய்ற வேலையை மெச்சறாங்க. அதே சமயத்தில பாராட்டவும் செய்றாங்க. இதுதான் எனக்கு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்திருச்சு.” பிரயோஜனமுள்ளவராகவும் அவசியமானவராகவும் உணரும் ஹார்லி இப்போது அதிக மகிழ்ச்சியாக வேலை செய்கிறார்.
தகுதியாய் இருக்கும்போது, பாராட்டுகிற அல்லது நன்றி தெரிவிக்கிற வார்த்தைகள் உண்மையில் இருதயத்துக்கு உற்சாகமளிக்கின்றன. மறுபட்சத்தில் நன்றிகெட்டத் தன்மையின் பாதிப்பு ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டதைப் போல மரத்துப்போகச் செய்கிறது: “வீசுவாயே, வீசுவாயே ஓ பனிக்காற்றே, மனிதனின் நன்றிகெட்ட தன்மைக்கு ஒப்பாய் நீ அந்தளவு தயவற்றில்லையே.” அநேகர் இத்தகைய தயவற்ற விதத்தில்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
நன்றிகெட்ட தன்மைக்கெதிராக பாதுகாத்துக் கொள்ளுங்கள்
இன்றைய உலகில் நன்றி தெரிவிக்கிற உள்ளப்பூர்வமான வார்த்தைகள் அத்தி பூத்தாற்போல் சொல்லப்படுகின்றன. உதாரணமாக, எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்: “200 திருமண அழைப்பிதழ்களில் அட்ரஸ் எழுத மணப்பெண்ணுக்கு நேரம் இருக்கிறதென்றால், 163 திருமண பரிசுகளுக்கு நன்றி கடிதம் எழுத அவளுக்கு நேரமில்லாமல் போய்விடுமா என்ன?” பெரும்பாலும் “நன்றி” என்ற சாதாரண வார்த்தையும்கூட சொல்லப்படுவதில்லை. நன்றியுணர்வுக்கு பதிலாக நான்-முதல் என்ற மனப்பான்மையே இன்று அதிகரித்து வருகிறது. இந்நிலை, கடைசி நாட்களை அடையாளப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்றாய் இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்: “கடைசி நாட்களில் காலங்கள் கொடியவையாக இருக்குமென்பதை உணர்ந்து கொள். மனிதர் முற்றிலும் தன்னலம் மிக்கவராகிவிடுவர் . . . முற்றிலும் நன்றியற்றவர்களாய் இருப்பர்.”—2 தீமோத்தேயு 3:1, 2, பிலிப்ஸ்.
இன்னும்பிற விஷயங்களில், நன்றிக்கு பதிலாக முகஸ்துதி செய்யப்படுகிறது. நன்றியுள்ள வார்த்தைகள் இருதயத்திலிருந்து, பிரதிபலன்பாராமல் வெளிவருகின்றன. இருப்பினும், முகஸ்துதியோ, முன்னேறவேண்டும் அல்லது ஏதாவது தனிப்பட்ட ஆதாயம் பெறவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, பொதுவாக மாய்மாலமாகவும், பெரிசுபடுத்தியும் செய்யப்படுகிறது. (யூதா 16) இந்த நயமான பேச்சு அதைக் கேட்பவரின் மனதை மயக்குவதோடு மட்டுமல்லாமல், அதை சொல்பவரின் பெருமையையும் அகந்தையையும்கூட வெளிக்காட்டலாம். அப்படியென்றால், பொய்யான முகஸ்துதியில் மயங்கிப்போக யார்தான் விரும்புவர்? ஆனால், உள்ளப்பூர்வமான நன்றி உணர்வு உண்மையில் மனதுக்கு இதமளிக்கிறது.
நன்றியைக் காட்டும் நபரும் அவ்வாறு செய்வதன் மூலம் நன்மையடைகிறார். நன்றியுள்ள இருதயத்தால் அவருக்கு ஏற்படும் இதமான உணர்வு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கிறது. (நீதிமொழிகள் 15:13, 15-ஐ ஒப்பிடுக.) நன்றி என்ற குணம், உடன்பாடான பண்பாக இருப்பதால், கோபம், பொறாமை, மனக்கசப்பு போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்து அவரை பாதுகாக்கிறது.
‘நன்றியறிதல் உள்ளவர்களாயுமிருங்கள்’
நன்றியுள்ள மனப்பான்மையை வளர்க்கும்படி பைபிள் நம்மை துரிதப்படுத்துகிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “எவ்விஷயத்திலும் நன்றிசெலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைப்பற்றிய கடவுளின் சித்தமாம்.” (1 தெசலோனிக்கேயர் 5:18, திருத்திய மொழிபெயர்ப்பு) மேலும் பவுல் கொலோசெயருக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, . . . நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.” (கொலோசெயர் 3:15) எண்ணற்ற சங்கீதங்களில் நன்றி தெரிவிக்கும் வார்த்தைகள் அடங்கியுள்ளன; அவை மனமார்ந்த நன்றியுணர்வு தெய்வீக பண்பு என்பதை சுட்டிக் காட்டுகின்றன. (சங்கீதம் 27:4; 75:1) தெளிவாகவே, வாழ்க்கையின் அன்றாட காரியங்களில் நாம் நன்றியுணர்வை வெளிக்காட்டும்போது யெகோவா தேவன் மகிழ்ச்சியடைகிறார்.
நன்றிகெட்ட இவ்வுலகில் என்ன அம்சங்கள் நன்றியுள்ள மனப்பான்மையை வளர்ப்பதை கடினமாக்குகிறது? அன்றாட வாழ்க்கையில் நன்றியுள்ள மனநிலையை நாம் எவ்வாறு காட்டலாம்? இந்தக் கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.