தங்கத்தைவிட தரமானதை கண்டுபிடித்தேன்
சார்ல்ஸ் மில்டன் சொன்னது
ஒரு நாள் அப்பா என்னிடம்: “சார்லியை அமெரிக்காவுக்கு அனுப்பிவிடலாம். அங்கதான் மரத்திலேயே பணம் காய்க்குதாமே? போனால் ஏதாவது கொஞ்சம் பறிச்சு நமக்கு அனுப்புவான்!” என்று சொன்னார்.
அமெரிக்காவில் தங்கத்தாலேயே ரோடு போடப்பட்டிருப்பது போல மக்கள் நினைத்தார்கள். அந்தக் காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் வாழ்க்கையை ஓட்டுவதென்றால் ரொம்ப கஷ்டம். எங்களுக்கு சொந்தமாக ஒரு சின்ன பண்ணையும் சில பசுமாடுகளும் கோழிகளும் இருந்தது. வீட்டில் கரண்டோ பைப் வசதியோ கிடையாது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் கிடையாது.
கிட்டத்தட்ட 106 வருஷங்களுக்கு முன்னாடி, ஜனவரி 1, 1893-ல் ஹோசோசெக்கில் பிறந்தேன். எங்களுடைய கிராமம் கலிஸியாவில் இருந்தது; அந்தச் சமயத்தில் ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசின் பாகமாயிருந்த ஒரு பிரதேசம் இது. இப்பொழுது ஹோசோசெக் எங்கே இருக்கிறதென்றால், கிழக்கு போலந்தில்; அதாவது ஸ்லோவாக்கியாவுக்கும் உக்ரேனுக்கும் பக்கத்தில். குளிர்காலத்தில் பல்லெல்லாம் தந்தியடிக்கும், பனி ரொம்ப உயரத்திற்கு உறைந்திருக்கும். எனக்கு சுமார் ஏழு வயசாய் இருந்த சமயத்தில், அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு ஓடைகிட்ட நடந்து போய், கோடாலியால் பனிக்கட்டியில் ஓட்டைபோட்டு தண்ணீர் எடுப்பேன். அதை வீட்டிற்கு கொண்டுவருவேன், அம்மா அதை சமையலுக்கும் பாத்திரம் கழுவுவதற்கும் பயன்படுத்துவார்கள். அந்த ஓடையின் பக்கத்தில் இருந்த பெரிய பெரிய ஐஸ்கட்டிதான் துணிதுவைக்கிற கல். துணிமணிகளையெல்லாம் எங்க அம்மா அங்கதான் துவைப்பார்கள்.
ஹோசோசெக்கில் பள்ளிக்கூடமே கிடையாது, ஆனாலும் போலிஷ், ரஷ்யன், ஸ்லோவாக், உக்ரேனியன் மொழிகளை எப்படியோ பேச கற்றுக்கொண்டேன். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதத்தில் அப்பா அம்மா எங்களை வளர்த்தார்கள், நான் பாதிரிக்கு உதவியாக இருந்தேன். ஆனால் சின்ன பையனாக இருந்தபோதே, வெள்ளிக்கிழமை கறிசாப்பிடக் கூடாது என்று பாதிரிகள் சொல்லிவிட்டு அவர்களே ஒருபிடி பிடித்ததை பார்த்து நான் ‘அப்செட்’ ஆகிவிட்டேன்.
அமெரிக்காவிலிருந்து பண முடிப்போடு திரும்பிவந்த என்னுடைய நண்பர்கள் சிலபேர், அவர்களுடைய வீட்டை ரிப்பேர் செய்தார்கள், பண்ணைக்கு வேண்டிய மெஷின்களையும் வாங்கினார்கள். என்னை அமெரிக்காவிற்கு அனுப்ப என் அப்பாவை தூண்டியது இதுதான். மறுபடியும் போக பிளான் பண்ணிக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தாருடன் என்னையும் சேர்த்து அனுப்ப அப்பா முடிவுசெய்தார். இது நடந்தது 1907-ல், அப்பொழுது எனக்கு 14 வயசு.
திக்குத்தெரியாத அமெரிக்காவில்
சீக்கிரத்தில் கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தேன்; இரண்டு வாரத்தில் நாங்கள் அட்லாண்டிக்கை கடந்துவிட்டோம். அந்தச் சமயத்தில் உங்களிடம் 20 டாலர் இருக்க வேண்டும், இல்லையென்றால் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுவார்கள். எங்கிட்ட 20 டாலர் மதிப்புள்ள வெள்ளிக் காசு இருந்தது; அதனால், அமெரிக்காவிற்கு நுழைவாயிலான நியூ யார்க்கிலுள்ள எல்லிஸ் தீவைக் கடந்த லட்சக்கணக்கானோரில் நானும் ஒருத்தன். ஆனால், மரத்தில் பணம் காய்க்கவுமில்லை, தங்கத்தால் போடப்பட்ட ரோடும் இல்லை. சொல்லப்போனால், நிறைய இடங்களில் ரோடே இல்லை!
ஒரு ரயிலைப் பிடித்து பென்ஸில்வேனியாவிலுள்ள ஜான்ஸ்டவுனுக்கு நாங்கள் போனோம். என்னுடன் வந்திருந்தவர்கள் ஏற்கெனவே அங்கிருந்தவர்கள், அதனால் நான் தங்கப்போகும் ‘பொங்கல் வீடு’ (போர்டிங் ஹவுஸ்) அவர்களுக்குத் தெரியும். பென்ஸில்வேனியாவிலுள்ள ஜெரோமில் வசிக்கும் என்னுடைய அக்காவை கண்டுபிடிக்கணும். அது நான் தங்கியிருந்த இடத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்தது என்பது பின்னாடிதான் எனக்கு தெரியவந்தது. ஆனால் ஜெரோம் என்பதற்குப் பதிலாக நான் யாரோம் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் “ஜ”-வை “ய” என்றுதான் என்னுடைய தாய்மொழியில் உச்சரித்தோம். யாரோமை யாருமே கேள்விப்பட்டதில்லை. அதனால் அங்கே நான் ஒரு அந்நியன் மாதிரி இருந்தேன், இங்லிஸும் பேசவராது, கையில் பணமும் கிடையாது.
தினமும் காலையில் வேலைக்காக தேடி அலைந்தேன். எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸ் வெளியில் நிறையபேர் வரிசையாக நின்றுகொண்டிருப்பார்கள், ஆனால் இரண்டு மூன்று பேரைத்தான் வேலைக்கு எடுப்பார்கள். அதனால், சுயமாக இங்லிஷ் கற்றுக்கொள்ள உதவும் புத்தகங்கள் எதையாவது படிப்பதற்காக ‘பொங்கல் வீட்டிற்கே’ தினமும் திரும்பிவிடுவேன். சிலசமயங்களில் ஏதாவது கூலி வேலை கிடைக்கும், மாதங்கள் போய்க்கொண்டே இருந்தது, என்னுடைய பணமெல்லாம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது.
கூடப்பிறந்தவர்களுடன் இணைதல்
ஒருநாள் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் ‘பார்’ வைத்து நடத்தும் ஒரு ஹோட்டலை தாண்டி போய்க்கொண்டிருந்தேன். சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத்தது! யாராவது பியர் வாங்கினால், சான்ட்விட்ச், சாஸேஜ், இன்னும் மற்ற ஐட்டெங்களெல்லாம் அந்த பாரில் இனாமாக கிடைக்கும்; ஒரு பெரிய கிளாஸ் பியர் ஐந்து சென்ட். எனக்கு பியர் குடிக்கிற வயசு இல்லைதான், ஆனாலும் ‘பார்’ கடைக்காரர் என்மீது பரிதாபப்பட்டு எனக்கு பியர் ஊற்றிக்கொடுத்தார்.
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, சில ஆட்கள் உள்ளே வந்து, “சீக்கிரம் குடி! ஜெரோமுக்குப் போற ட்ரெயின் வருது” என்று சொன்னார்கள்.
“யாரோமா?” என்று நான் கேட்டேன்.
“இல்லை, ஜெரோம்” என்று அந்த ஆட்கள் சொன்னார்கள். அங்கேதான் என்னுடைய அக்கா வசிக்கிறாங்க என்பதை அப்போது தெரிந்துகொண்டேன். சொல்லப்போனால், என்னுடைய அக்கா வீட்டிலிருந்து மூன்றே வீடு தள்ளி குடியிருந்த ஒரு ஆளை அந்த பாரில் சந்தித்தேன்! எனவே, நானும் ட்ரெயின் டிக்கெட் வாங்கிக்கொண்டு, அங்கே போய் கடைசியில் என்னுடைய அக்காவை கண்டுபிடித்துவிட்டேன்.
நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்காக என்னுடைய அக்காவும் அவளுடைய வீட்டுக்காரரும் ஒரு ‘பொங்கல் வீட்டை’ நடத்திவந்தார்கள்; நானும் அவர்களுடன் தங்கிக்கொண்டேன். சுரங்கத்திலிருந்து தண்ணீரை வெளியே இறைக்கும் ஒரு பம்பை பார்த்துக்கொள்ளும் ஒரு வேலையை எனக்கு வாங்கிக்கொடுத்தார்கள். எப்பொழுதாவது அது ரிப்பேர் ஆகிவிட்டால், நான் போய் ஒரு மெக்கானிக்கை கூட்டிக்கொண்டு வரவேண்டும். அந்த வேலைக்கு ஒரு நாளைக்கு 15 சென்ட் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ரயில்வேயிலும், செங்கல் அறுக்கும் இடத்திலும், இன்ஷூரன்ஸ் ஏஜென்டாகவும்கூட வேலைபார்த்தேன். பின்பு என்னுடைய அண்ணன் ஸ்டீவ் இருந்த பிட்ஸ்பர்கிற்கு மாறிப்போனேன். நாங்கள் ஒரு ஸ்டீல் தொழிற்சாலையில் வேலைபார்த்தோம். வீட்டுக்கு பணம் அனுப்பிவைக்கும் அளவுக்கு நான் ஒருபோதும் சம்பாதிக்கவேயில்லை.
குடும்பமும் சவஅடக்க நிகழ்ச்சியும்
ஒருநாள் வேலைக்கு நடந்து போய்க்கொண்டிருந்தேன்; வீட்டுவேலை செய்யும் ஒரு இளம் பெண் வாசலில் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். ‘ஆ, எவ்வளவு அழகாய் இருக்கிறாள்’ என்று நினைத்துக்கொண்டேன். மூன்று வாரங்களுக்குப்பின், 1917-ல், ஹெலனும் நானும் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். அடுத்த பத்து வருஷத்திற்குள், எங்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தனர், ஒன்று சிசுவிலேயே இறந்துவிட்டது.
1918-ல், பிட்ஸ்பர்க் ரயில்வே என்னை ட்ராம்-கார் டிரைவராக வேலைக்கு அமர்த்தியது. ட்ராம்-கார் நிறுத்தும் ஒரு பெரிய பில்டிங் பக்கத்தில் ஒரு கபே இருந்தது, அங்கே ஒரு கப் காபி கிடைக்கும். உள்ளே, அந்த இடத்துக்கு சொந்தக்காரரான கிரேக்கர்கள் இரண்டுபேர் இருந்தார்கள்; நீங்கள் எதை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. பைபிளிலிருந்து அவர்கள் பிரசங்கிப்பதைக் கேட்டால் போதும் என்றிருந்தார்கள். நான் கேட்பேன்: “உலகத்திலுள்ள எல்லார் சொல்றதும் பொய், நீங்க ரெண்டு பேர் சொல்றதுதான் சரின்னு சொல்றீங்களா?”
“பைபிளை எடுத்துப் பாருங்களேன்!” என்று அவர்கள் சொல்வார்கள். ஆனால் அந்தச் சமயத்தில் அவர்களால் என்னை திருப்திப்படுத்த முடியவில்லை.
1928-ல் என்னுடைய அன்பு மனைவி நோய்வாய்ப்பட்டபோது மனவேதனை அடைந்தேன். பிள்ளைகளை நன்கு கவனித்துக்கொள்வதற்காக, அவர்களை என்னுடைய அக்கா வீட்டில் ஜெரோமில் கொண்டுபோய் விட்டுவிட்டேன். இதற்குள் அவர்கள் ஒரு பண்ணையை வாங்கியிருந்தார்கள். பிள்ளைகளை அடிக்கடி போய் பார்த்துக்கொண்டேன், அவர்களுடைய சாப்பாட்டிற்காக ஒவ்வொரு மாதமும் பணம் கொடுத்தேன். அவர்களுக்கு துணிமணிகளும் வாங்கி அனுப்பினேன். ஹெலனுடைய நிலைமை மோசமாகி, ஆகஸ்ட் 27, 1930-ல் இறந்தது பலத்த இடிவிழுந்ததுபோல இருந்தது.
தனிமை என்னை வாட்டியது, மனம் நொடிந்துபோனேன். சவஅடக்க ஏற்பாடுகள் செய்வதற்காக பாதிரியை சந்தித்தேன், அப்போது அவர் சொன்னார்: “இனிமேல் உனக்கு இந்தச் சர்ச்சில் இடமில்லை. ஒரு வருஷத்திற்கும் மேல் நீ சந்தா பணம் கட்டலையே.”
ரொம்ப நாளாக என்னுடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள், ஜெரோமிலுள்ள சர்ச்சுக்கு என்னுடைய பிள்ளைகள் நன்கொடை கொடுப்பதற்காக எங்கிட்ட இருந்த எக்ஸ்ட்ரா பணத்தையும் கொடுத்துவிட்டேன் என்று விளக்கினேன். இருந்தாலும், நான் சர்ச்சுக்கு கொடுக்கவேண்டிய 50 டாலரை கடன்வாங்கி கொடுத்த பின்புதான் அந்தப் பாதிரி சவஅடக்கத்திற்கு சம்மதித்தார். ஹெலனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உற்றாரும் உறவினர்களும் என்னுடைய மைச்சினி வீட்டில் பூசைக்கு கூடினார்கள்; அதை நடத்துவதற்கு அந்தப் பாதிரி இன்னும் 15 டாலர் கேட்டார். என்னால் 15 டாலரை புரட்ட முடியவில்லை; ஆனால் சம்பள தேதியில் கொடுப்பதாக இருந்தால் பூசை நடத்துவதாக அந்தப் பாதிரி ஒத்துக்கொண்டார்.
சம்பள தேதி வந்தபோது, பிள்ளைகளின் ஸ்கூலுக்கு வேண்டிய ஷூவும் துணிமணிகளும் வாங்குவதற்காக நான் அந்தப் பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது. அதற்கு இரண்டு வாரம் கழித்து, அந்தப் பாதிரி என்னுடைய ட்ராம்-காரில் ஏறினார். “இன்னும் 15 டாலரை நீ எனக்கு கொடுக்கணும்” என்று சொன்னார். பின்பு, ஸ்டாப்பில் இறங்கும்போது, “நான் உன்னுடைய பாஸ்கிட்ட போகப்போறேன், உன்னுடைய சம்பளத்திலிருந்து என்னுடைய பணத்தை வாங்கிக்கிறேன்” என்று பயமுறுத்தினார்.
அன்றைக்கு வேலை முடிந்தப்பின், என்னுடைய பாஸ்கிட்டபோய் நடந்ததைச் சொன்னேன். அவர் ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதிலும் சொன்னார், “அந்தப் பாதிரி இங்க வரட்டும், நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டு அனுப்புறேன்!” அது என்னை சிந்திக்கும்படி செய்தது, ‘பாதிரிமாருக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய பணம்தான், ஒருநாளும் நமக்கு பைபிளைப் பத்தி போதிக்கிறது கிடையாது.’
சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுதல்
அந்த இரண்டு கிரேக்கர்கள் நடத்துகிற கபே-க்கு நான் அடுத்த தடவை போயிருந்தபோது அந்த பாதிரியினுடைய விஷயத்தைப் பற்றி நாங்கள் பேசினோம். அதன் விளைவாக, பைபிள் மாணாக்கர்களுடன் படிக்க ஆரம்பித்தேன். யெகோவாவின் சாட்சிகள் அப்பொழுது இவ்வாறுதான் அழைக்கப்பட்டார்கள். இராத்திரி பூராவும் கண்விழித்து பைபிளையும் பைபிள் சம்பந்தமான புத்தகங்களையும் வாசிப்பேன். அந்தப் பாதிரி சொன்னபடி, ஹெலன் உத்தரிக்கும் ஸ்தலத்தில் துன்பப்படவில்லை, மரணத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை நான் கற்றுக்கொண்டேன். (யோபு 14:13, 14; யோவான் 11:11-14) உண்மையில், தங்கத்தைவிட தரமானதை கண்டுபிடித்தேன்—அதுதான் சத்தியம்!
சில வாரங்களுக்குப் பிறகு, பிட்ஸ்பர்க், கார்டன் தியேட்டரிலுள்ள பைபிள் மாணாக்கர்களுடைய கூட்டத்திற்கு நான் முதலாவதாக சென்றபோது, என்னுடைய கையை உயர்த்தி சொன்னேன்: “ஒரு கத்தோலிக்க மதத்தில் பைபிளைப் பற்றி இவ்வளவு வருடங்களாக கற்றுக்கொண்டதைவிட இந்த ஒரே கூட்டத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்.” பிறகு, நாளைக்கு பிரசங்க வேலையில் யார் கலந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று அவர்கள் கேட்டபோது, மீண்டும் என்னுடைய கை உயர்ந்தது.
பின்பு, அக்டோபர் 4, 1931-ல், யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்தி காண்பித்தேன். இதற்கிடையில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, என்னுடைய பிள்ளைகள் என்னுடன் இருக்க கூட்டிக்கொண்டு வந்தேன்; அவர்களை கவனித்துக்கொள்வதற்காக ஒரு வேலைக்காரியை அமர்த்தினேன். தலைக்குமேல் குடும்ப பொறுப்புகள் இருந்தபோதிலும், ஜனவரி 1932 முதல் ஜூன் 1933 வரை, ‘ஆக்ஸிலரி’ என அழைக்கப்படும் விசேஷ சேவையில் கலந்துகொண்டேன்; பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 மணிநேரத்தை செலவழித்தேன்.
இந்தச் சமயத்தில், அழகான ஒரு இளம் பெண் வேலைக்கு போகும்போதும் வரும்போதும் எப்பொழுதும் என்னுடைய ட்ராம்-காரிலேயே வருவதை கவனித்தேன். ரியர்வியூ கண்ணாடி வழியாக ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொள்வோம். அப்படித்தான் மேரியும் நானும் சந்தித்தோம். நாங்கள் காதலித்து, ஆகஸ்ட் 1936-ல் கல்யாணம் செய்துகொண்டோம்.
என் சீனியாரிட்டி காரணமாக 1949-க்குள் எனக்கு ஷிப்ட் வேலை கிடைத்தது; அதனால் பயனியர் என்ற முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்க முடிந்தது. என்னுடைய கடைசி பெண் ஜீன், 1945-ல் பயனியர் சேவையை ஆரம்பித்திருந்தாள். நாங்கள் இருவரும் சேர்ந்து பயனியர் சேவை செய்தோம். அதன்பிறகு, சாம் பிரண்ட் என்பவரை ஜீன் சந்தித்தாள்; அவர் நியூ யார்க், புருக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமையகமாகிய பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்தார்.a அவர்கள் 1952-ல் கல்யாணம் செய்துகொண்டார்கள். பிட்ஸ்பர்கில் நான் தொடர்ந்து பயனியர் செய்தேன், அநேக பைபிள் படிப்புகள் நடத்திவந்தேன்; ஒரு சமயம், 14 குடும்பங்களுக்கு ஒவ்வொரு வாரமும் படிப்பு நடத்தினேன். 1958-ல், ட்ராம்-கார் ஓட்டும் வேலையிலிருந்து ஓய்வுபெற்றேன். அதற்குப் பிறகு, பயனியர் செய்வது சுலபமாய் இருந்தது; ஏனென்றால் இனிமேல் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் வேலை செய்யவேண்டாமே.
1983-ல் மேரிக்கு உடல்நிலை சரியில்லை. சுமார் 50 வருடங்களாக அவள் என்னை அவ்வளவு நன்றாக கவனித்து வந்ததைப் போல் நான் அவளை கவனிக்க முயற்சி செய்தேன். கடைசியில், செப்டம்பர் 14, 1986-ல் அவள் காலமானாள்.
என் தாயகத்தை கண்டுபிடித்தல்
1989-ல், போலந்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஜீனும் சாமும் என்னை அழைத்துச் சென்றார்கள். நான் வளர்ந்துவந்த இடத்தையும்கூட பார்வையிட்டோம். ரஷ்யர் அந்நாட்டை கைப்பற்றியபோது, டவுன்கள் பெயரை மாற்றிவிட்டார்கள், அதோடு ஜனங்களையும் மற்ற நாடுகளுக்கு அனுப்பிவிட்டார்கள். என்னுடைய ஒரு அண்ணனை இஸ்தான்புல்லுக்கும் அக்காளை ரஷ்யாவிற்கும் நாடுகடத்தியிருந்தார்கள். நாங்கள் கேட்டுப் பார்த்தவர்களுக்கும் என்னுடைய கிராமத்தின் பெயர் பழக்கமில்லாமல் இருந்தது.
பின்பு, தூரத்தில் இருந்த மலைகள் எனக்கு பழக்கப்பட்டவை போல் தோன்றியது. நாங்கள் கிட்ட சென்றபோது, மற்ற அடையாளங்கள் ஒவ்வொன்றாய் தெரிய ஆரம்பித்தன—மலை, சாலையில் இருந்த கவை, சர்ச், ஆற்றின் குறுக்கே இருந்த ஒரு பாலம். திடீரென, நாங்கள் ஒரு கைகாட்டி மரத்தைப் பார்த்தோம், எங்களுக்கு ஒரே ஆச்சரியம், அதில் “ஹோசோசெக்” என்று எழுதப்பட்டிருந்தது! கொஞ்ச காலத்திற்கு முன்பு, கம்யூனிஸ்டுகள் செல்வாக்கை இழந்தனர். ஆகவே கிராமங்களின் ஒரிஜினல் பெயர்கள் மறுபடியும் வைக்கப்பட்டன.
எங்களுடைய வீடு அழிந்துவிட்டது, ஆனால் வெளியில் சமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அடுப்பு இன்னும் இருந்தது. அது நிலத்தில் பாதி புதைந்திருந்தது. அதன்பின் ஒரு பெரிய மரம் கண்ணில் பட்டது. “அந்த மரத்தைப் பாருங்க. அமெரிக்காவிற்கு போவதற்கு முன்பு நான் நட்டது. பாருங்க, அது எவ்வளவு பெரிசா வளர்ந்திருச்சி!” என்றேன். அதற்குப் பிறகு, குடும்ப அங்கத்தினர்களுடைய பெயர்களைத் தேடி நாங்கள் கல்லறைகளுக்குச் சென்றோம், ஆனால் எவருடைய பெயரையும் கண்டுபிடிக்கவில்லை.
சத்தியத்திற்கு முதலிடம்
ஜீனின் வீட்டுக்காரர் 1993-ல் இறந்தபோது, என்னை கவனித்துக்கொள்வதற்காக பெத்தேலைவிட்டு வரட்டுமா என்று ஜீன் கேட்டாள். அதை மாத்திரம் ஒருபோதும் செய்துவிடாதே என்று சொன்னேன். இப்பொழுதுகூட அவள் பெத்தேலைவிட்டு வருவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனக்கு 102 வயது ஆகும் வரைக்கும் நான் தனியாகத்தான் இருந்தேன், ஆனால் அதன்பிறகு முதியோர் இல்லத்திற்கு செல்ல வேண்டியதானது. பிட்ஸ்பர்கிலுள்ள பெலிவி சபையில் நான் இன்னமும் ஒரு மூப்பராக சேவிக்கிறேன், ஞாயிற்றுக்கிழமைகளில் சகோதரர்கள் வந்து என்னை ராஜ்ய மன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். நான் பிரசங்க வேலையில் அதிகம் ஈடுபட முடியாதபோதிலும், முதியோருக்கான பயனியர் லிஸ்டில் தொடர்ந்து இருக்கிறேன்.
கடந்த ஆண்டுகளில், உவாட்ச் டவர் சொஸைட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காணிகளுக்கான விசேஷ பயிற்சி பள்ளிகளை அனுபவித்தேன். போன டிசம்பர் மாதத்தில், சபை மூப்பர்களுக்காக நடத்தப்பட்ட ராஜ்ய ஊழியப் பள்ளி நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கும் ஆஜரானேன். 1931 முதற்கொண்டு ஒவ்வொரு வருஷம் நான் கலந்துகொள்ள விரும்பும் கிறிஸ்துவின் மரண ஆசரிப்பை கொண்டாடுவதற்காக கடந்த ஏப்ரல் 11-ல் ஜீன் என்னை அழைத்துச் சென்றாள்.
நான் பைபிள் படிப்பு நடத்தியவர்களில் சிலர் இப்பொழுது மூப்பர்களாக இருக்கிறார்கள், மற்றவர்கள் தென் அமெரிக்காவில் மிஷனரிகளாக இருக்கிறார்கள், சிலர் தாத்தா பாட்டிமாராக, தங்களுடைய பிள்ளைகளுடன் கடவுளை சேவித்து வருகிறார்கள். என்னுடைய பிள்ளைகளில் மூன்று பேர்—மேரி ஜேன், ஜான், ஜீன்—அதோடு அவர்களுடைய அநேக பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் யெகோவா தேவனை உண்மைத்தன்மையுடன் சேவித்து வருகிறார்கள். என்றாவது என்னுடைய இன்னொரு மகளும் என்னுடைய மற்ற பேரப்பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் இதேபோல் ஆகவேண்டும் என்பதே என்னுடைய ஜெபம்.
இப்பொழுது எனக்கு 105 வயதாகிறது; பைபிளைப் படிப்பதற்கும் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பேசுவதற்கும் நான் அனைவரையும் இன்னமும் உற்சாகப்படுத்துகிறேன். யெகோவாவுடன் நெருங்கியிருந்தால், ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டோம் என்பதை உறுதியாக நம்புகிறேன். அழிந்துபோகிற தங்கத்தைவிட தரமானதை—நமக்கு உயிர் கொடுத்தவராகிய யெகோவா தேவனோடு அருமையான உறவை வைத்துக்கொள்ள அனுமதிக்கும் சத்தியத்தை—நீங்களும் அனுபவிக்க முடியும்.
[அடிக்குறிப்புகள்]
a சாம் பிரண்டின் வாழ்க்கை சரிதை ஆகஸ்ட் 1, 1986 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 22-6-ல் காணப்படுகிறது.
[பக்கம் 25-ன் படம்]
ட்ராம்-கார் ஓட்டுகையில்
[பக்கம் 26-ன் படம்]
இப்பொழுது நான் வாழும் முதியோர் இல்லத்தில்
[பக்கம் 27-ன் படம்]
1989-ல் நாங்கள் கண்டுபிடித்த கைகாட்டி மரம்