அமைதியாக சச்சரவுகளை தீர்ப்பதெப்படி?
மனிதன் வன்முறையில் ஈடுபடுவது தொன்றுதொட்டே இருந்துவருகிறது. பைபிளை புரட்டினால் வன்முறையின் ஊற்றுமூலத்தை கண்டுகொள்ளலாம். முதன்முதலில் வன்முறைக்கு வித்திட்டவர் காயீன்—ஆபேலின் அண்ணன், முதல் தம்பதியின் மூத்த புதல்வன். காயீனுடைய பலிக்குப் பதிலாக ஆபேலுடைய பலியை கடவுள் ஏற்றுக்கொண்டதால், அவன் ‘மிகவும் எரிச்சலடைந்தான்.’ இந்த நிலைமையை எப்படி அவன் கையாண்டான்? “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.” ஆனாலும், படைப்பாளருடன் அவனுக்கு இருந்த பிரச்சினையை வன்முறை தீர்க்கவில்லை. கடவுளுடன் அவனுக்கு இருந்த உறவும் துண்டிக்கப்பட்டது.—ஆதியாகமம் 4:5, 8-12.
பிரச்சினைகளைத் தீர்க்க உடல் பலத்தைப் பிரயோகித்த காயீனின் போக்கை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
வன்முறையைக் கைவிட்டு சகிப்புத்தன்மையை கைப்பிடித்தல்
முதன்முதலில் உயிர்த்தியாகம் செய்த கிறிஸ்தவரே ஸ்தேவான். அவர் கொலை செய்யப்படுகையில் கைகட்டிக்கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதனைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். (அப்போஸ்தலர் 7:58; 8:1) தர்சு பட்டணத்தைச் சேர்ந்த அந்த மனிதனுடைய பெயர் சவுல். ஸ்தேவானுடைய மத நம்பிக்கையோடு சவுல் ஒத்துப்போகவில்லை, ஸ்தேவானுடைய நடவடிக்கைகளை முடிவுகட்ட இதுவே சரியான வழி என கருதி அவனை வெறித்தனமாய் கொலைசெய்வதை ஆதரித்தான். ஒருவேளை வாழ்க்கையின் எல்லா விஷயத்திலுமே சவுல் வன்முறைமிக்கவராய் இருந்திருக்க மாட்டார் என்பது உண்மைதான். ஆயினும், சச்சரவுகளைத் தீர்க்க வன்முறையை ஒரு வழிமுறையாக ஏற்றுக்கொள்ள மனமுள்ளவராய் இருந்தார். ஸ்தேவான் இறந்தவுடனே, “சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக் கொண்டுபோய், காவலில் போடுவித்து, [கிறிஸ்தவ] சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான் [“வெறித்தனமாய் நடத்தினான்,” NW].”—அப்போஸ்தலர் 8:3.
‘வெறித்தனமாய் நடத்துவது’ என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, சிங்கங்கள், ஓநாய்கள் போன்ற மூர்க்க மிருகங்கள் உண்டாக்கும் நாசத்தைக் குறிக்கிறது என்று சொல்கிறார் பைபிள் அறிஞராகிய ஆல்பர்ட் பார்ன்ஸ். “மூர்க்க மிருகத்தைப் போல சபைக்கு எதிராக சவுல் வெறிகொண்டிருந்தான். மூர்க்க மிருகம் என்பது துன்புறுத்துதலில் அவனுக்கிருந்த வைராக்கியத்தையும் கோபாவேசத்தையும் குறிக்கும் ஒரு கடுஞ்சொல்.” கிறிஸ்துவை பின்பற்றும் அநேகரை வளைத்துப் பிடிப்பதற்காக தமஸ்குவுக்கு சவுல் சென்றான்; அங்கே, ‘இன்னும் கர்த்தராகிய கிறிஸ்துவுடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிக்கொண்டிருந்தான்.’ போகும் வழியில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு அவனிடம் பேசினார். இது, கிறிஸ்தவத்திற்கு சவுல் மாறுவதற்கு வழிநடத்தியது.—அப்போஸ்தலர் 9:1-19.
மதமாற்றத்திற்குப்பின், மற்றவர்களிடம் சவுல் நடந்துகொள்ளும் விதம் மாறியது. சுமார் 16 வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த ஒரு சம்பவம் அந்த மாற்றத்தை படம்பிடித்து காட்டியது. அந்தியோகியாவில் இருந்த அவருடைய சபைக்கு மக்கள் கூட்டம் வந்து, மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றும்படி கிறிஸ்தவர்களைத் தூண்டியது. அதனால், ‘மிகுந்த வாக்குவாதம்’ உண்டானது. இதற்குள் பவுல் என்று நன்கு அறியப்பட்ட சவுல், இந்தத் தர்க்கத்தில் ஒரு நிலைநிற்கை எடுத்தார். அனல் பறக்கும் வாக்குவாதம் நடந்தபோதிலும், பவுல் வன்முறையை நாடவில்லை. அதற்கு மாறாக, இந்த விஷயத்தைப் பற்றி எருசலேம் சபையிலுள்ள அப்போஸ்தலர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் விசாரிக்கலாம் என்ற சபையின் தீர்மானத்தை ஒத்துக்கொண்டார்.—அப்போஸ்தலர் 15:1, 2.
எருசலேமில் நடந்த மூப்பர் கூட்டத்தில் மறுபடியும் “மிகுந்த தர்க்கம்” உண்டானது. ‘முழு கூட்டத்தாரும் அமைதலாகும்வரை’ பவுல் காத்திருந்து, விருத்தசேதனம் செய்யப்படாத விசுவாசிகள் மத்தியில் கடவுளுடைய ஆவியின் மகத்தான கிரியையை அறிவித்தார். வேதப்பூர்வமான சர்ச்சைக்குப் பிறகு, விருத்தசேதனம் செய்யப்படாத விசுவாசிகள்மீது அநாவசியமாக பாரத்தை சுமத்தாமல், ‘விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்க வேண்டுமென்று’ அப்போஸ்தலரும் எருசலேமிலிருந்த மூப்பர் குழுவினரும் ‘ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.’ (அப்போஸ்தலர் 15:3-29, NW) உண்மையிலேயே பவுல் மாறிவிட்டார். தர்க்கங்களை வன்முறையின்றி தீர்க்க கற்றுக்கொண்டார்.
மூர்க்கத்தனமான மனோபாவங்களை சமாளித்தல்
“கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்” என்று பவுல் பின்னர் புத்திமதி கூறினார். (2 தீமோத்தேயு 2:24, 25) கடினமான சூழ்நிலைகளை சாந்தமாய் கையாளும்படி இளம் கண்காணியாகிய தீமோத்தேயுவை பவுல் உந்துவித்தார். பவுல் யதார்த்தமானவராய் இருந்ததால், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கோபம் மூளலாம் என்பதை அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 15:37-41) நல்ல காரணத்தோடுதான் இவ்வாறு அறிவுரை கொடுத்தார்: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” (எபேசியர் 4:26) கட்டுப்பாடற்ற விதத்தில் சீற்றத்துடன் வெடிக்காமல் கோபத்தைக் கட்டுப்படுத்துவதே இப்படிப்பட்ட உணர்ச்சிகளை சமாளிப்பதற்கு தகுந்த வழி. ஆனால் இதை எப்படி செய்யலாம்?
கோபத்தை அடக்குவது இன்று சுலபமல்ல. “அன்பற்றதன்மை பிரபலமாய் இருக்கிறது” என்று சொன்னார் ஹார்வார்டிலுள்ள பொது சுகாதார பள்ளியின் துணை தலைவர் டாக்டர் டெபோரா புரோத்ரோ ஸ்டித். “சொல்லப்போனால், ஒத்துப்போகும் திறமைகள், அதாவது பேச்சுவார்த்தை நடத்துதல், இணங்கிப்போதல், பட்சாதாபம் காட்டுதல், மன்னித்தல் ஆகியவை பொதுவாக பலவீனருடைய பண்புகள் என முத்திரை குத்தப்படுகிறது.” ஆனால், இவை மனுஷனுக்குரிய இலட்சணங்கள், நமக்குள் பொங்கிவரும் மூர்க்கத்தனமான குணங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இவை இன்றியமையாதவை.
பவுல் கிறிஸ்தவரானபோது, கருத்துவேறுபாடுகளை சமாளிப்பதற்கு சிறந்த வழியை கற்றுக்கொண்டார். அது பைபிள் போதனைகளின் அடிப்படையிலானது. யூத மதத்தைக் கற்ற ஓர் அறிஞராக, எபிரெய வேதாகமத்தை பவுல் நன்கு அறிந்திருந்தார். பின்வரும் வசனங்களை அவர் அறிந்திருக்க வேண்டும்: “கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.” “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன். பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.” (நீதிமொழிகள் 3:31; 16:32; 25:28) என்றபோதிலும், மதம் மாறுவதற்கு முன்பு பவுல் அறிந்திருந்த இந்த விஷயங்கள், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக வன்முறையைப் பிரயோகிப்பதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை. (கலாத்தியர் 1:13, 14) ஆனால் ஒரு கிறிஸ்தவராக, வன்முறைக்கு பதிலாக நியாயத்தையும் தர்க்கத்தையும் பயன்படுத்துவதன்மூலம் முரண்பாடான கருத்துக்களை தீர்க்க பவுலுக்கு எது உதவியது?
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று சொன்னபோது அதற்கு ஒரு ‘க்ளூ’ கொடுத்தார் பவுல். (1 கொரிந்தியர் 11:1) தனக்காக இயேசு கிறிஸ்து செய்ததை அவர் வெகுவாய் மதித்தார். (1 தீமோத்தேயு 1:13, 14) பின்பற்றுவதற்கு கிறிஸ்து அவருக்கு மாதிரியானார். பாவமுள்ள மனிதவர்க்கத்திற்காக இயேசு எவ்வாறு பாடுபட்டார் என்பதை அறிந்திருந்தார். (எபிரெயர் 2:18; 5:8-10) மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம் இயேசுவில் நிறைவேறியதை பவுலால் உறுதிப்படுத்தவும் முடிந்தது: “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” (ஏசாயா 53:7) அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “[இயேசு] வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.”—1 பேதுரு 2:23, 24.
இறுக்கமான சூழ்நிலைகளை இயேசு கிறிஸ்து சமாளித்த விதத்தை பவுல் மதித்துணர்ந்தது தன்னை மாற்றிக்கொள்ள உந்துவித்தது. அதனால் உடன் விசுவாசிகளுக்கு இவ்வாறு புத்திமதி கொடுத்தார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . [யெகோவா] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13) வன்முறைமிக்கவர்களாய் இருக்கக்கூடாது என்பதை ஒப்புக்கொள்வது மாத்திரமே போதாது. யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் நமக்காக செய்திருப்பதை மதித்துணருவது மூர்க்கத்தனமான குணங்களை சமாளிக்க தேவைப்படும் உந்துவிப்பை தரும்.
இது சாத்தியமா?
ஜப்பானிலுள்ள ஒரு மனிதனுக்கு இப்படிப்பட்ட பலமான உந்துவிப்பு தேவைப்பட்டது. படைவீரராக பணிபுரிந்த சட்டென்று கோபப்படும் அவருடைய அப்பா, குடும்பத்தை வன்முறையால் அடக்கியாண்டார். அவரே வன்முறைக்கு பலியானவராகவும் இதுபோல தன்னுடைய தாய் துன்புறுவதை பார்த்தவராகவும் இருந்ததால், அந்த மனிதன் மூர்க்கத்தனமான பண்பை வளர்த்துக்கொண்டார். அவர் வித்தியாசமான அளவுகளில் இரு ஜப்பானிய போர்வாள்களை வைத்திருந்தார்; பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆட்களை பயமுறுத்தவும் அவற்றைப் பயன்படுத்தினார்.
தன்னுடைய மனைவி பைபிள் படிக்க ஆரம்பித்தபோது, அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அந்தப் படிப்பில் சும்மா உட்கார்ந்திருந்தார். ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்திa என்று தலைப்பிடப்பட்ட சிறுபுத்தகத்தை வாசித்தபோது, அவர் மாறினார். ஏன்? “‘கிறிஸ்து இயேசு,’ ‘மீட்கும் பொருள்’ என்ற உபதலைப்புகளின் கீழிருந்த விஷயத்தை நான் வாசித்தபோது, என்னைக் குறித்து வெட்கப்பட்டேன். இஷ்டப்படி வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தபோதிலும், நான் பழகிய ஆட்களுடன் அன்போடிருக்க விரும்பினேன். என்னுடைய நண்பர்களை மகிழ்ச்சியடையச் செய்வதில் எனக்கு இன்பம், ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கையை பாதிக்காதவரைதான். கடவுளுடைய குமாரனாகிய இயேசு மனிதவர்க்கத்திற்காக, எனக்காகவும்தான், அவருடைய உயிரையே கொடுக்க மனமுள்ளவராயிருந்தார். இதை அறிந்தபோது, சம்மட்டியால் அடிக்கப்பட்டதுபோல நான் ஸ்தம்பித்துவிட்டேன்” என்று கூறினார்.
தன்னுடைய முன்னாள் நண்பர்களுடன் கூட்டுறவுகொள்வதை நிறுத்திவிட்டு, யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் நடைபெறும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் விரைவிலேயே சேர்ந்துகொண்டார். இந்தப் பள்ளி மற்றவர்களுக்கு பைபிளை போதிக்கும் கலையை பெற உதவுகிறது. இப்பாடதிட்டம் இந்த மனிதனுக்கு கூடுதலாக நன்மையளித்தது. அவர் சொல்கிறார்: “நான் சின்ன பையனாக இருந்தபோது, பயமுறுத்துவதையும் வன்முறையையும் விரும்பினேன். ஏனென்றால் என்னுடைய உணர்ச்சிகளை மற்றவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. என்னுடைய யோசனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள கற்றுக்கொண்டபோது, வன்முறையை நாடுவதற்குப் பதிலாக அவர்களுடன் நியாயங்காட்டிப் பேச ஆரம்பித்தேன்.”
பவுலைப் போலவே, அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றினாரா? இவர் தன்னுடைய முன்னாள் நண்பருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பதாக வாக்குக்கொடுத்திருந்தார்; கிறிஸ்தவராவதை அந்த நண்பர் தடுத்துநிறுத்த முயன்றபோது விசுவாசம் சோதிக்கப்பட்டது. அந்த “நண்பர்” இவரை தாக்கி, இவருடைய கடவுளாகிய யெகோவாவை நிந்திக்கவும் செய்தார். ஆனால் மூர்க்கத்தனமானவராய் இருந்த இந்த மனிதர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். தான் கொடுத்திருந்த வாக்குறுதியை காத்துக்கொள்ள முடியாததற்காக மன்னிப்பு கேட்டார். ஏமாற்றமடைந்தவராய் அந்தச் “சகோதரர்” இவரை விட்டுப் போய்விட்டார்.
தன்னுடைய மூர்க்கத்தனமான பண்புகளை வென்றதன்மூலம், முன்னாளைய இந்தக் கோபக்கார மனிதருக்கு, கடவுளிடமும் அயலகத்தாரிடமும் அன்பால் ஐக்கியப்பட்ட ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் அநேகர் கிடைத்தனர். (கொலோசெயர் 3:14) சொல்லப்போனால், ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவராகி 20 ஆண்டுகளுக்கும் அதிகமான பின்பு, இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணியாக சேவிக்கிறார். தான் கற்றுக்கொண்டவாறே, மிருகத்தனமான குணமுடையவர்கள் வன்முறையின்றி கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு கற்றுக்கொள்ள முடியுமென்பதை பைபிளிலிருந்து காண்பிப்பதில் அவருக்கு என்னே மகிழ்ச்சி! அதோடு, பின்வரும் தீர்க்கதரிசனத்தின் மகத்தான நிறைவேற்றத்தை சுட்டிக்காட்டுவது அவருக்கு என்னே ஒரு சிலாக்கியம்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்”!—ஏசாயா 11:9.
அப்போஸ்தலன் பவுலைப் போலவும் முன்னாளைய மூர்க்கத்தனமான இந்த மனிதரைப் போலவும், சச்சரவுகளை அமைதியாக தீர்ப்பதன்மூலம் கோபத்தைக் கிளறும் சூழ்நிலைகளை சமாளிக்க நீங்களும் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் வாழும் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
பவுல் யதார்த்தமானவராய் இருந்ததால், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கோபம் மூளலாம் என்பதை அறிந்திருந்தார்
[பக்கம் 7-ன் படம்]
கடவுள் நமக்கு செய்திருப்பவற்றை போற்றுவது சமாதானமான உறவுகளை ஏற்படுத்துகிறது