மகத்தான வேலையின் வாசலில் நிற்கிறோம்
“எந்தப் போட்டி மனப்பான்மையும் கிடையாது. எல்லாரும் வெற்றிபெறனும் என்றுதான் எல்லாரும் விரும்பினாங்க.” இப்படித்தான் ரிச்சர்டும் லூஸியாவும் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 105-வது வகுப்பிலிருந்த சக மாணவர்களைப் பற்றி விவரிக்கையில் சொன்னார்கள். “நாம் எல்லாருமே ரொம்ப வித்தியாசமானவங்களா இருக்கிறோம், ஆனால் எங்களுக்கோ, ஒவ்வொரு மாணவரும் அருமையானவங்க.” லோவல் என்ற மாணவர் இதை ஆமோதித்து சொன்னதாவது: “நம் வித்தியாசங்கள்தான் நம்மை ஒன்று சேர்த்திருக்கின்றன.”
செப்டம்பர் 12, 1998-ல் பட்டமளிப்பு விழாவைக் கண்ட இந்த வகுப்பு உண்மையிலேயே வித்தியாசமானது. எப்படியென்றால், இந்த மாணவர்களில் சிலர் ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படும் இடங்களில் பயனியர்களாக சேவை செய்தவர்கள்; மற்றவர்களோ தங்கள் வீட்டுக்கு பக்கத்திலுள்ள பகுதியிலேயே உண்மையுடன் சேவித்தவர்கள். மேட்ஸ், ரோஸ் மேரி போன்ற சிலர், இந்தப் பள்ளிக்கு வருவதற்கு முன்பு ஆங்கில மொழியை கசடற கற்க மிகவும் ஊக்கமாய் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இந்த மாணவர்களில் அநேகர் மிஷனரி சேவையைப் பற்றி பிள்ளைப் பருவத்திலிருந்தே மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தவர்கள். ஒரு தம்பதியினர் 12 தடவை விண்ணப்பித்திருந்தனர்; இப்பொழுது இந்த 105-வது வகுப்புக்கு அழைக்கப்பட்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
இந்த 20 வார தீவிர பயிற்சி காலம் சீக்கிரத்தில் சின்னச் சிட்டுபோல் பறந்தோடி விட்டது. மாணவர்கள் தங்களுடைய கடைசி எழுத்துவழி பயிற்சியையும் வாய்வழி அறிக்கையையும் முடித்துவிட்டார்கள், ஆனால் வகுப்பு முடிந்துவிட்டதையே பிறகுதான் உணர்ந்தார்கள், அதற்குள் பட்டமளிப்பு நாளும் வந்துவிட்டது.
நிகழ்ச்சிநிரல் அக்கிராசனர் ஆல்பர்ட் ஷ்ரோடர்—இவர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும்குழுவின் அங்கத்தினர்—“பைபிள் கல்வித் துறையில் மகத்தான வேலையின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறோம்” என வகுப்பினருக்கு நினைப்பூட்டினார். இவர்களுக்கு முன்பு கிலியட் பள்ளியில் பயின்ற 7,000-க்கும் அதிகமானோரின் அணிவரிசையில் இவர்களும் இணைந்துகொண்டனர். சர்வதேச மாநாடுகள் நடந்த சமயத்தில் மிஷனரிகள் உலக தலைமை அலுவலகத்தைப் பார்வையிட வந்திருந்தார்கள். மிஷனரி சேவை எனும் நெடுஞ்சாலையில் நீண்டதூரம் பயணம் செய்த இவர்களுடன் கூட்டுறவுகொள்ளும் ஒப்பற்ற வாய்ப்பை கோடையில் இந்த மாணவர்கள் அனுபவித்ததையும் அவர் குறிப்பிட்டார்.
அதன்பின், பெத்தேல் ஆபரேஷன்ஸ் கமிட்டியில் அங்கம் வகிக்கும் மேக்ஸ் லார்சன் என்பவரை சகோதரர் ஷ்ரோடர் அறிமுகப்படுத்தினார். “நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் கல்வி” என்ற தலைப்பில் அவர் பேசினார். சகோதரர் லார்சன் நீதிமொழிகள் 1:5-ஐ மேற்கோள் காட்டினார். அது சொல்கிறது: “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடை[வான்].” பலன்தரும் மிஷனரியாக இருப்பதற்கு திறமை வேண்டும். திறமையான மனிதர்கள் ‘ராஜாக்களுக்கு’ முன்பு நிற்கிறார்கள். (நீதிமொழிகள் 22:29) ஐந்து மாத பயிற்சிக்குப் பின்பு, மிகப் பெரிய ராஜாக்களாகிய யெகோவா தேவனையும் கிறிஸ்து இயேசுவையும் பிரதிநிதித்துவம் செய்ய மாணவர்கள் நன்கு தயார்படுத்தப்பட்டிருந்தார்கள்.
ஊழிய இலாகாவைச் சேர்ந்த டேவிட் ஓல்சன், “யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்த உதவுங்கள்” என்ற பொருளில் அடுத்ததாக பேசினார். “கடவுளுடைய இருதயத்தை மகிழ்விக்க அபூரண மனிதர்களால் என்ன செய்ய முடியும்?” என்று அவர் கேட்டார். பதில்? உண்மையோடும் மனமகிழ்வோடும் அவரை சேவிக்க முடியும். தம்முடைய மக்கள் மகிழ்ச்சியோடு தமக்கு சேவை செய்வதைக் காணவே அவர் விரும்புகிறார். நாம் மகிழ்ச்சியோடே கடவுளுடைய சித்தத்தை செய்கையில், அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறோம். (நீதிமொழிகள் 27:11) 104-வது கிலியட் வகுப்பில் பட்டம்பெற்ற மிஷனரி தம்பதியினரிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை சகோதரர் ஓல்சன் வாசித்தார். புதிய நியமிப்பில் அவர்கள் சந்தோஷமாய் இருக்கிறார்களா? “எங்கள் சபையில் சுமார் 140 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள், கூட்டத்திற்கு ஆஜராவோரின் சராசரி எண்ணிக்கை 250 முதல் 300” என்பதாக அவர்களுடைய சபையைப் பற்றி எழுதியிருந்தனர். “வெளி ஊழியத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன! எங்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு பைபிள் படிப்புகள் இருக்கின்றன, அவர்களில் சிலர் ஏற்கெனவே கூட்டங்களுக்கு வருகிறார்கள்.”
ஆளும்குழுவைச் சேர்ந்த லைமன் ஸ்விங்கிள், “உங்களுடைய ஆசீர்வாதங்களை சற்று எண்ணிப்பாருங்கள்” என்ற தலைப்பில் பேசினார். கிலியட் பயிற்சியால் அநேக ஆசீர்வாதங்களைப் பெற முடிந்தது. அறிவில் பெருகவும் யெகோவாவின் அமைப்பின்மீதான போற்றுதலில் வளரவும் மனத்தாழ்மை போன்ற இன்றியமையா பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் அது மாணவர்களுக்கு உதவியிருந்தது. “இங்கு வந்து போதனைக்கு செவிசாய்ப்பதில் நேரத்தை செலவிடுவது பணிவான ஒரு அனுபவம்” என்று சொன்னார் சகோதரர் ஸ்விங்கிள். அவர் மேலும் சொன்னதாவது: “யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கு நன்கு தகுதிபெற்றவர்களாய் இங்கிருந்து நீங்கள் போகிறீர்கள்.”
“உங்கள் மகிழ்ச்சி இத்தனை பெரிதாய் இருக்க, கவலை ஏன்?” இதுவே டேனியேல் சிட்லிக் கொடுத்த பேச்சின் தலைப்பு, இவரும் ஆளும்குழுவைச் சேர்ந்தவர். பிரச்சினைகள் எழும்பும்போது, வேதவசனங்களிலிருந்து வழிநடத்துதலை தேடும்படி அவர் உந்துவித்தார். மத்தேயு 6-ம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்ட சில வசனங்களைப் பயன்படுத்தி, இதை எவ்வாறு செய்யலாம் என்பதை சகோதரர் சிட்லிக் விளக்கிக் காட்டினார். விசுவாசமின்மையானது உணவு, உடை போன்ற உலகப்பிரகாரமான காரியங்களுக்காக கவலைகொள்ளச் செய்யும். ஆனால் நமக்கு என்ன தேவை என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:25, 30) கவலைப்பட கவலைப்பட, ஏற்கெனவே இருக்கும் தொல்லை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். (மத்தேயு 6:34) மறுபட்சத்தில், ஓரளவு திட்டமிடுதல் அவசியம். (லூக்கா 14:28, 30-ஐ ஒப்பிடுக.) “எப்படிப்பட்ட கவலை தேவையில்லை என்று இயேசு சொல்கிறார் என்றால், அநாவசியமாக கவலைப்படுவதைத்தான்; எதிர்காலத்திற்காக ஞானமாய் திட்டமிடுவதை அல்ல” என்று விளக்கினார் சகோதரர் சிட்லிக். “கவலையை விரட்டுவதற்கு மிகச் சிறந்த ஒரே வழி, பலன்தரும் வேலையில் சுறுசுறுப்பாய் ஈடுபடுவதுதான்! நாம் கவலைப்படும்போது சத்தியத்தைப் பற்றி பேச ஆரம்பிப்பது நல்லது.”
ஆசிரியர்களின் பிரிவு உபசார அறிவுரைகள்
கிலியட் பயிற்சிக்குழுவைச் சேர்ந்த மூன்று அங்கத்தினர்கள் பேச்சு கொடுத்தனர். “யெகோவாவுக்கு நீங்கள் எதைத் திருப்பிச் செலுத்துவீர்கள்?” என்ற பொருளில் கார்ல் ஆடம்ஸ் முதலாவது பேசினார். அவருடைய பேச்சு 116-வது சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது; இயேசு தம்முடைய மரணத்திற்கு முந்தைய இரவில் இதைப் பாடியிருக்கலாம். (மத்தேயு 26:30, NW அடிக்குறிப்பு) “[யெகோவா] எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” என்ற வார்த்தைகளைப் பாடியபோது இயேசுவின் மனத்திரையில் என்ன ஓடியது? (சங்கீதம் 116:12) அவருக்காக யெகோவா ஆயத்தம் செய்திருந்த பரிபூரண சரீரத்தைக் குறித்து ஒருவேளை யோசித்திருக்கலாம். (எபிரெயர் 10:5) அதற்கு அடுத்த நாளில், அந்தச் சரீரத்தையே பலியாக செலுத்தி தம்முடைய அன்பின் ஆழத்தை நிரூபித்துக் காண்பித்தார். கடந்த ஐந்து மாதங்களாக யெகோவாவின் நற்குணத்தை 105-வது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ருசிபார்த்தனர். மிஷனரி வேலையில் கடினமாய் வேலைசெய்து, கடவுளுக்கு தங்களுடைய அன்பை இப்பொழுது அவர்கள் காண்பிப்பார்கள்.
கிலியட்டின் மற்றொரு போதனையாளர் மாற்கு நியூமர், “தொடர்ந்து சரியானதையே செய்யுங்கள்” என மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்தார். யோசேப்பு எகிப்தில் அடிமையாக விற்கப்பட்ட பிறகு—ஓரிரண்டு வருஷங்கள் அல்ல—13 வருஷகாலம் அநியாயத்தைச் சகித்தார். மற்றவர்களுடைய தவறுகள் கடவுளை சேவிப்பதிலிருந்து அவரை தடைசெய்ய அனுமதித்தாரா? இல்லை, சரியானது எதுவோ அதை தொடர்ந்து செய்தார். பிறகு, கடவுளுடைய நியமிக்கப்பட்ட காலத்தில், யோசேப்பு தன்னுடைய சோதனைகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். திடீரென்று, சிறைவாசத்திலிருந்து அரண்மனை வாசத்திற்கு அவருடைய நிலை மாறியது. (ஆதியாகமம், அதிகாரங்கள் 37-50) அந்தப் போதனையாளர் தன்னுடைய மாணவர்களிடம் இவ்வாறு கேட்டார்: “உங்களது மிஷனரி சேவையில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கவில்லையென்று வைத்துக்கொள்ளுங்கள்; அதனால் அதை நீங்கள் விட்டுவிடுவீர்களா? நீங்கள் நம்பிக்கையிழந்து விடுவீர்களா? அல்லது யோசேப்பை போல சகித்து நிலைத்திருப்பீர்களா?”
கடைசியாக, கிலியட் பள்ளியின் ரெஜிஸ்ட்ரார் வாலஸ் லிவ்ரன்ஸ், “ராஜாவையும் ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்” என்ற பொருளில் வகுப்பு அங்கத்தினர்களிடம் ஆற்றப்பட்ட உயிரூட்டமான ஒரு பேச்சுக்குத் தலைமைதாங்கினார். வீட்டுக்கு வீடு ஊழியம், கடைக்கு கடை ஊழியம், தெரு ஊழியம் ஆகியவற்றில் பெற்ற அனுபவங்களை மாணவர்களில் சிலர் சொன்னார்கள். வேற்று மொழியில் பேசுகிற மக்களுக்கு எப்படி சாட்சிகொடுத்தார்கள் என்பதை மற்றவர்களில் சிலர் சொன்னார்கள். வித்தியாசமான மதப் பின்னணிகளையுடைய மக்களுக்கு எவ்வாறு பிரசங்கிப்பது என்பதை இன்னும் சிலர் காண்பித்தார்கள். தங்கள் மிஷனரி சேவையில் முழுமையாக ஈடுபட பட்டம்பெறும் அனைவரும் ஆவலோடு இருந்தார்கள்.
மகிழ்ச்சியுள்ள நீண்டகால மிஷனரிகள்
“மிஷனரி சேவையில் கிடைக்கும் சந்தோஷமான பலன்கள்” என தலைப்பிடப்பட்ட பாகத்தை ராபர்ட் வாலன் என்பவர் கொடுத்தார். அனுபவமிக்க மிஷனரிகளுடன் அருமையான கூட்டுறவை அனுபவித்த தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் நான்கு சகோதரர்களுடன் காணப்பட்ட பேட்டிகளும் இருந்தன. ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, மற்றொரு கலாச்சாரத்தோடு ஒத்துப்போவது, அல்லது வித்தியாசமான சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது போன்றவை தங்களுக்கு எளிதாக இருக்கவில்லை என்பதை அந்த மிஷனரிகள் மனதார ஒத்துக்கொண்டார்கள். வீட்டு ஞாபகத்தை சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளும் இருந்தன. சிலசமயங்களில் உடல்நலப் பிரச்சினைகள் தலைதூக்கின. ஆனால் இவையனைத்தின் மத்தியிலும், மிஷனரிகள் நம்பிக்கையான மனநிலையை காத்துக்கொண்டார்கள், அவர்களுடைய விடாமுயற்சியும் ஆசீர்வதிக்கப்பட்டது. யெகோவாவை பற்றிய அறிவை அடைய அநேகருக்கு அவர்கள் உதவினார்கள். தங்களுடைய நாடுகளில் ராஜ்ய வேலையை அதிகரிப்பதற்கு மற்றவர்கள் பல்வேறு வழிகளில் பங்களித்தார்கள்.
கடைசியாக பேசியவர் கேரி பார்பர்; இவர் ஆளும்குழுவின் அங்கத்தினர். “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாட்டின் சிறப்புக் குறிப்புகள் சிலவற்றை அள்ளித் தெளித்தார். “யெகோவாவுடன் உங்களுடைய உறவை இந்த மாநாட்டு நிகழ்ச்சிநிரல் எப்படி பாதித்தது?” என்று பார்வையாளர்களிடம் கேட்டார். கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றுவதால் வரும் ஆசீர்வாதங்களை இந்த உலகத்தின் வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏற்படும் பேரழிவோடு வித்தியாசப்படுத்திக் காண்பித்தார். மேரிபாவில் மோசே செய்த மீறுதலைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு எச்சரித்தார்: “அநேக ஆண்டுகளாக ஒரு நபர் உண்மையுடன் சேவித்தாலும்கூட, யெகோவாவுடைய நியாயமான சட்டங்களை இம்மியளவே மீறினாலும் அவர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டார்.” (எண்ணாகமம் 20:2-13) எங்குமுள்ள கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய அருமையான ஊழிய சிலாக்கியங்களை உறுதியாக பற்றிக்கொள்வார்களாக!
மாணவர்கள் தங்களுடைய டிப்ளமோக்களைப் பெற்றுக்கொள்வதற்கான நேரம் வந்தது. அதன்பின், மாணவர்கள் பெற்ற பயிற்றுவிப்புக்காக பாராட்டு கடிதம் ஒன்றை வாசித்தார் வகுப்பு பிரதிநிதி ஒருவர். முடிவான பாட்டிற்கும் இதயப்பூர்வமான ஜெபத்திற்கும் பிறகு, பட்டமளிப்பு நிகழ்ச்சிநிரல் முடிவடைந்தது. ஆனால், 105-வது வகுப்புக்கு, இது ஆரம்பம் மட்டுமே. ஏனெனில் புதிய மிஷனரிகள் “மகத்தான வேலையின் வாசலில் நிற்கிறார்கள்.”
[பக்கம் 23-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 9
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 17
மாணவர்களின் எண்ணிக்கை: 48
தம்பதிகளின் எண்ணிக்கை: 24
சராசரி வயது: 33
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12
[பக்கம் 24-ன் பெட்டி]
அவர்கள் முழுநேர சேவையை விரும்பினர்
“நான் சிறியவனாக இருந்தபோது, பயனியர் செய்யப்போகும் ஐடியாவே எனக்கில்லை” என்று சொல்கிறார் 105-வது வகுப்பில் பட்டம்பெற்ற ஒரு சகோதரர். “விசேஷ திறமைகள் உள்ளவர்களும் தோதான சூழ்நிலை உள்ளவர்களும்தான் பயனியர் செய்ய முடியுமென நினைத்தேன்” என்று மேலும் சொல்கிறார். “ஆனால் வெளி ஊழியத்தில் ஆர்வத்துடன் பங்கேற்க கற்றுக்கொண்டேன். பயனியராக இருப்பது ஊழியத்தில் அதிகம் பங்குகொள்ள ஒரு வழியே என்பதை ஒருநாள் புரிந்துகொண்டேன். நான் ஒரு பயனியராக முடியும் என்பது அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.”
“எங்க வீட்டில் முழுநேர ஊழியர்களுக்கு எப்போதுமே தனி மதிப்புதான்” என்று சொல்கிறார் லூஸியா. மிஷனரிகள் ஒவ்வொரு முறையும் விஜயம் செய்தபோது அவருடைய சபையில் ஏற்பட்ட கிளர்ச்சியை அவர் நினைவுகூருகிறார். “நான் பெரியவளாகும்போது, என்னுடைய திட்டங்களில் முழுநேர சேவையும் ஒன்று என்பது நன்றாகத் தெரிந்திருந்த விஷயமே” என கூறுகிறார்.
தியோடிஸ் 15 வயதாக இருந்தபோது அவருடைய தாய் இறந்துவிட்டார். “அந்தச் சமயத்தில் சபை என்னை அரவணைத்தது. ‘என்னுடைய நன்றியை காண்பிப்பதற்கு என்ன செய்யலாம்?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன்” என்று சொல்கிறார். இது, முழுநேர சேவையில் ஈடுபடச் செய்தது, இப்பொழுது அவர் ஒரு மிஷனரி.
[பக்கம் 25-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 105-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் உள்ளன
(1) சாம்ப்ஸன், எம்.; ப்ரௌன், ஐ.; ஹெக்லி, ஜி.; அபூயென், ஈ.; டேப்வா, எம்.; பூர்ட்டீ, பி. (2) காஸம், ஜி.; லின்பர்க், ஆர்.; டபூஸோ, ஏ.; டெய்லர், சி.; லஃபிவ்ரா, கே.; வாக்கர், எஸ். (3) பேக்கர், எல்.; பெலஸ், எம்.; வோகன், ஈ.; போனி, சி.; ஆஸ்ப்லன்ட், ஜே.; ஹைலா, ஜே. (4) பூர்ட்டீ, டி.; விட்டேக்கர், ஜே.; பால்மர், எல்.; நார்ட்டன், எஸ்.; கேரிங், எம்.; ஹைலா, டபிள்யூ. (5) வாக்கர், ஜே.; போனி, ஏ.; க்ரூன்வெல்ட், சி.; வாஷிங்டன், எம்.; விட்டேக்கர், அ.; அபூயென், ஜே. (6) கேரிங், டபிள்யூ.; வாஷிங்டன், கே.; பெலஸ், எம்.; டேப்வா, ஆர்.; ஹெக்லி, டி.; ஆஸ்ப்லன்ட், ஏ. (7) வோகன், பி.; லஃபிவ்ரா, ஆர்.; டெய்லர், எல்.; ப்ரௌன், டி.; க்ரூன்வெல்ட், ஆர்.; பால்மர், ஆர். (8) நார்ட்டன், பி.; சாம்ப்ஸன், டி.; பேக்கர், சி.; லின்பர்க், எம்.; காஸம், எம்.; டபூஸோ, எம்.