மாற்றான் குடும்பங்கள் வெற்றி பாதையில்
மாற்றான் குடும்பங்கள் வெற்றிபெற முடியுமா? முடியும். முக்கியமாக, “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் நினைவில் வைக்கும்போது நிச்சயம் முடியும். (2 தீமோத்தேயு 3:16, 17) பைபிள் நியமங்களை ஒவ்வொருவரும் பின்பற்றும்போது வெற்றி நிச்சயம் என்றே சொல்லலாம்.
அடிப்படை பண்பு
மனிதரிடையே உள்ள உறவுகளை வழிநடத்தும் சட்டங்கள் பைபிளில் மிகக் குறைவே. மாறாக, நாம் ஞானமாய் நடக்க உதவும் நல்ல குணங்களையும் மனப்பான்மைகளையும் வளர்த்துக்கொள்ளவே அது முக்கியமாய் நம்மை உற்சாகப்படுத்துகிறது. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு இந்தக் குணங்களும் மனப்பான்மைகளுமே அடிப்படை.
எந்தவொரு குடும்பமும் வெற்றிபெற அன்பே அடிப்படையான குணம் என்பது வெட்டவெளிச்சம் என தோன்றலாம். ஆனாலும் அதன் முக்கியத்துவத்தை அழுத்திக் கூறுவது நியாயமானதே. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “உங்கள் அன்பு மாயமற்றதாய் இருக்கட்டும். . . . சகோதர அன்பிலே ஒருவர்மேல் ஒருவர் கனிவான பாசமுள்ளவர்களாய் இருங்கள்.” (ரோமர் 12:9, 10, NW) பவுல் இங்கே சாதாரண அன்பைப் பற்றி பேசவில்லை; இந்தப் பண்பு மிகவும் விசேஷமானது. அது தெய்வீக அன்பு, அது “ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:8) அது சுயநலமற்றது, சேவைசெய்ய தயாராய் இருக்கும் ஒன்று என அதைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. மற்றவர்களின் நன்மைக்காக அது கடினமாய் உழைக்கும். அது பொறுமையும், இரக்கமும் உள்ளது; பொறாமை, தற்புகழ்ச்சி, ஆணவம் போன்றவை அதை நெருங்கவே முடியாது. அது சுய நன்மையை நாடாது. விட்டுக்கொடுக்க, விசுவாசம் வைக்க, நம்பிக்கை வைக்க, எதையும் தாங்க அது எப்போதும் தயாராய் இருக்கிறது.—1 கொரிந்தியர் 13:4-7.
வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் இருக்கவும், வித்தியாசமான பின்னணியும் ஆள்தன்மைகளும் உள்ளவர்களை ஒன்றாக இணைக்கவும் உண்மையான அன்பு உதவுகிறது. விவாகரத்து அல்லது சொந்த பெற்றோர் ஒருவரின் மரணம் போன்றவற்றால் ஏற்படும் கடினமான நிலைமைகளை சமாளிக்கவும் அது உதவும். மாற்றான் தந்தையாக ஆன ஒரு மனிதன் தான் எதிர்ப்பட்ட உண்மையான பிரச்சினைகளை இவ்வாறு விளக்குகிறார்: “என்னோட உணர்ச்சிகள பத்தியேதான் ரொம்ப கவலப்பட்டேன். அதனால மாற்றான் பிள்ளைங்களோட அல்லது என் மனைவியோட உணர்ச்சிகளகூட புரிஞ்சுக்கவே முயற்சிக்கல. தொட்டாச்சிணுங்கி மாதிரி இருக்கக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். மனத்தாழ்மையா இருக்கனுங்கிறது ரொம்ப முக்கியம்னு நான் கத்துக்கிட்டேன்.” தேவையான மாற்றங்களைச் செய்ய அன்பு அவருக்கு கைகொடுத்தது.
சொந்த பெற்றோர்
அந்தப் பிள்ளைகளின் சொந்த பெற்றோர் இப்போது இல்லாவிட்டாலும் அவர்களுக்கு அவரோடு இன்னமும் ஓர் உறவு இருக்கிறது. பிள்ளைகளின் இந்த உறவை சமாளிக்க அன்பு ஒருவருக்கு உதவும். மாற்றான் தகப்பன் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “என்னோட மாற்றான் பிள்ளைங்க என் மேலதான் ரொம்ப அன்பு வைக்கனும்னு விரும்பினேன். அந்தப் பிள்ளைங்க அவங்களோட சொந்த அப்பாவ சந்திக்கும்போது என்னால அவர்மேல குற்றம் சுமத்தாம இருக்கவே முடியில. பிள்ளைங்க அவரோட சந்தோஷமா இருந்துட்டு வந்தாங்கன்னா எனக்கு ஒரே எரிச்சலா இருக்கும். அவரோட சந்தோஷமா இல்லாட்டி எனக்கு ஒரே குஷியா இருக்கும். உண்மை என்னான்னா, அவங்க என்மேல வச்சிருக்கிற அன்பு குறைஞ்சு போயிடுமோன்னு பயந்தேன். என் மாற்றான் பிள்ளைங்களோட வாழ்க்கையில அவங்க சொந்த அப்பா ரொம்ப முக்கியமானவருங்கிற உண்மைய ஏத்துக்கிறதுதான் எனக்கு உண்மையிலேயே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.”
“உடனடி” அன்பை எதிர்பார்ப்பது சரியல்ல என்பதை இந்த மாற்றான் தந்தை உணர உண்மையான அன்பு அவருக்கு உதவியது. அந்தப் பிள்ளைகள் அவரை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர் ஏமாற்றம் அடைந்திருக்கக்கூடாது. அந்தப் பிள்ளைகளின் இதயத்தில் சொந்த அப்பாவுக்கு இருக்கும் இடத்தை தான் முழுமையாக ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாமல் போகலாம் என்பதை அவர் உணர்ந்தார். ஏனென்றால், தங்கள் சொந்த அப்பாவைத்தான் அந்தப் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலிருந்தே அறிந்திருந்தனர்; ஆனால் மாற்றான் தந்தை ஒரு புதுமுகமே. ஆகவே அந்தப் பிள்ளைகளின் அன்பைப் பெற அவர் உழைக்க வேண்டும். ஆராய்ச்சியாளர் எலிசபெத் ஐன்ஸ்டீன் இவ்வாறு கூறுகிறார்: “சொந்த பெற்றோரை மாற்றீடு செய்யவே முடியாது—ஒருபோதுமே முடியாது. மரித்த பெற்றோர்கூட அல்லது பிள்ளைகளை அம்போவென்று விட்டுவிட்டு சென்ற ஒருவர்கூட அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கையில் தொடர்ந்து முக்கிய பாகம் வகிக்கிறார்.” அநேகருடைய அனுபவமும் இதுதான் அல்லவா?
சிட்சை—சிக்கலான ஒரு விஷயம்
இளைஞருக்கு அன்பான சிட்சை அவசியம் என பைபிள் சுட்டிக்காட்டுகிறது; இதில் மாற்றான் பிள்ளைகளும் அடங்குவர். (நீதிமொழிகள் 8:33) இதைப் பற்றி பைபிள் காலங்காலமாக சொல்லிவந்ததை இன்றுள்ள அநேக வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பேராசிரியர் சிரீஸ் ஆல்வீஸ் டீ ஆராயுஸூ கூறினார்: “இயல்பாகவே ஒருவரும் வரம்புகளை விரும்புவதில்லை; ஆனால் அவை அவசியம். ‘இல்லை’ என்பது பாதுகாப்பான ஒரு சொல்.”
இருந்தாலும் மாற்றான் குடும்பம் ஒன்றில் சிட்சையைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காரணமாக பெரும் விரிசல்கள் ஏற்படலாம். இப்போது அவர்கள் மத்தியில் இல்லாத பெரியவர் ஒருவர், மாற்றான் பிள்ளைகள் மீது ஓரளவு செல்வாக்கு செலுத்தியிருக்கிறார். ஆகவே, மாற்றான் பெற்றோருக்கு எரிச்சலூட்டும் சில பழக்கவழக்கங்கள் அந்தப் பிள்ளைகளிடம் இருக்கலாம். அல்லது சில விஷயங்களைப் பற்றி மாற்றான் பெற்றோர் ஏன் அவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதையும் அந்தப் பிள்ளைகள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். இந்தச் சூழ்நிலையை எவ்வாறு திறம்பட்ட விதத்தில் கையாளலாம்? பவுல் கிறிஸ்தவர்களுக்கு இந்த உற்சாகத்தைக் கொடுத்தார்: “அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.” (1 தீமோத்தேயு 6:11) மாற்றான் பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயலுகையில் கனிவாகவும் பொறுமையாகவும் இருக்க கிறிஸ்தவ அன்பு இருசாராருக்குமே உதவும். மாற்றான் பெற்றோர் பொறுமையற்றவராக இருந்தால், ‘கோபமும், மூர்க்கமும், தூஷணமும்’ சேர்ந்து அதுவரை வளர்த்திருந்த உறவை சீர்குலைத்துப்போடும்.—எபேசியர் 4:31.
இவ்விஷயத்தில் எது உதவியாக இருக்கும் என்பதைப் பற்றி தீர்க்கதரிசி மீகா கூடுதலான குறிப்பைத் தந்தார். “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” என கூறினார். (மீகா 6:8) சிட்சைக் கொடுக்கும்போது நியாயமாய் நடந்துகொள்வது மிகவும் அவசியம். ஆனால் தயவைப் பற்றியென்ன? சபையோடு வணக்கத்தில் கலந்துகொள்வதற்காக தன் மாற்றான் பிள்ளைகளை ஞாயிற்றுக்கிழமை காலை படுக்கையிலிருந்து எழுப்புவது என்றாலே கடினமாக இருந்தது என ஒரு கிறிஸ்தவ மூப்பர் கூறுகிறார். அவர்களைத் திட்டுவதற்கு பதிலாக தயவாய் இருக்க முயற்சித்தார். அவர் அதிகாலையில் எழுந்து, காலை உணவை தயாரித்துவிட்டு, பின்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் சூடான பானம் கொண்டுபோய் கொடுத்தார். அதன் காரணமாக, எழுந்திருக்கும்படி அவர் கூறியபோது கீழ்ப்படிய அவர்கள் அதிக தயாராய் இருந்தனர்.
அக்கறையூட்டும் பின்வரும் குறிப்பை பேராசிரியர் ஆனா லூயீஸ் வையேர டீ மாட்டோஸ் கூறினார்: “எந்த விதமான குடும்பம் என்பதல்ல ஆனால் எப்படிப்பட்ட உறவு நிலவுகிறது என்பதே முக்கியம். நல்நடத்தை குறைவுபடும் இளைஞர் அநேகமாக, சட்டதிட்டங்களும் நல்ல பேச்சுத்தொடர்பும் இல்லாத, பெற்றோரின் மேற்பார்வை பலவீனமாக இருக்கும் குடும்பங்களிலிருந்தே வருகின்றனர் என என்னுடைய ஆராய்ச்சியில் கண்டேன்.” அவர் கூடுதலாக சொன்னதாவது: “பிள்ளைகளை வளர்ப்பதென்றால், இல்லை என்று சொல்வதும் உட்பட்டிருக்கிறது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் அழுத்திக்கூற வேண்டும்.” மேலும், டாக்டர்களான எமிலி மற்றும் ஜான் விஷர் இவ்வாறு கூறினர்: “சிட்சையை ஏற்றுக்கொள்பவருக்கு சிட்சை கொடுப்பவரோடு உள்ள உறவும், அவர் எவ்வாறு உணருவார் என்ற அக்கறையும் இருந்தால்தான் சிட்சை நல்ல பலனைத் தரும்.”
இந்தக் கூற்றுகள், மாற்றான் குடும்பங்களில் யார் சிட்சை கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறது. இல்லை என்று யார் சொல்ல வேண்டும்? விஷயங்களை கலந்துபேசிவிட்ட பிறகு, ஆரம்ப காலத்திலாவது சொந்த பெற்றோர்தான் முக்கியமாக சிட்சை கொடுக்க வேண்டும் என சில பெற்றோர் முடிவு செய்கின்றனர். அப்போதுதான் மாற்றான் பெற்றோர் தன் பிள்ளைகளோடு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள போதிய அவகாசம் கிடைக்கும். மாற்றான் பெற்றோர் அந்தப் பிள்ளைகளை சிட்சிப்பதற்கு முன்பாக அவர்கள் மேல் அவருக்கு உண்மையான அன்பு இருக்கிறது என்பதைப் பிள்ளைகள் முழுமையாக நம்ப கற்றுக்கொள்ளட்டும்.
ஆனால், ஒரு தகப்பன் மாற்றான் பெற்றோராக இருந்தால் என்ன செய்வது? தகப்பன்தான் குடும்பத்தின் தலைவன் என்று பைபிள் சொல்கிறது அல்லவா? உண்மைதான். (எபேசியர் 5:22, 23; 6:1, 3) இருந்தாலும் மாற்றான் தகப்பன், முக்கியமாக தண்டனை கொடுப்பதை உட்படுத்துகையில் கொஞ்சம் காலத்திற்காவது சிட்சை கொடுக்கும் வேலையை பெற்ற தாயிடம் ஒப்படைக்க விரும்பலாம். பிள்ளைகள் தங்கள் ‘தாயின் போதகத்திற்கு’ கீழ்ப்படிய அவர் அனுமதிக்கலாம்; அதேசமயம், அவர்கள் தங்கள் ‘[புதிய] தகப்பனுடைய புத்தியை கேட்பதற்கான’ அஸ்திவாரத்தை அவர் போடுவார். (நீதிமொழிகள் 1:8; 6:20; 31:1) ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தலைமை வகிப்பு நியமத்தை இது மீறுவதில்லை என அத்தாட்சிகள் நிரூபிக்கின்றன. கூடுதலாக, ஒரு மாற்றான் தகப்பன் இவ்வாறு கூறுகிறார்: “சிட்சைன்னா அறிவுரை தருவது, திருத்துவது, கண்டிப்பது போன்றவையும் உட்படும்னு எனக்கு ஞாபகம் இருந்துச்சு. இத நியாயமாவும், அன்பாவும், இரக்கத்தோடும் கொடுத்து, பெற்றோரும் நல்ல முன்மாதிரியா இருக்கும்போது பொதுவாவே நல்ல பலன் கிடைக்கும்.”
பெற்றோர் மனந்திறந்து பேசவேண்டும்
“அந்தரங்கமான பேச்சு இல்லையென்றால் திட்டங்கள் வெற்றியடையாது” என நீதிமொழிகள் 15:22 (NW) சொல்கிறது. மாற்றான் குடும்பத்தில் பெற்றோர் மத்தியில் அமைதலான, அந்தரங்கமான பேச்சு மிகவும் அவசியம். ஓ எஸ்டாடோ டெ எஸ். பாலோ செய்தித்தாளின் ஓர் எழுத்தாளர் இவ்வாறு கூறினார்: “பெற்றோர் வைக்கும் வரம்புகளை சோதித்துப் பார்க்கவே பிள்ளைகள் எப்போதும் விரும்புகின்றனர்.” மாற்றான் குடும்பங்களிலோ அது இன்னும் அதிக உண்மையாக இருக்கலாம். ஆகவே, வித்தியாசப்பட்ட காரியங்களில் பெற்றோர் ஒருவருக்கொருவர் ஒத்துப்போக வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை பிள்ளைகள் காணமுடியும். ஆனால், நியாயமற்றது என சொந்த பெற்றோர் நினைக்கும் விதத்தில் மாற்றான் பெற்றோர் நடந்துகொண்டால் என்ன செய்வது? அப்போது, இருவரும் தனிமையில் உட்கார்ந்து பிரச்சினையை பேசி தீர்க்கவேண்டும்; பிள்ளைகளுக்கு முன்பாக அதை செய்யக்கூடாது.
மறுமணம் செய்துகொண்ட ஒரு தாய் இவ்வாறு கூறினார்: “மாற்றான் தகப்பன் தன்னோட பிள்ளைங்கள சிட்சிக்கிறத பாக்குறதுதான் ஒரு தாய்க்கு ரொம்ப கஷ்டமான விஷயம். முக்கியமா அவர் அவசரப்படுறார்னு அல்லது பாரபட்சம் காட்டுறார்னு அவ உணரும்போது இன்னும் கஷ்டமா இருக்கும். அது அவளோட நெஞ்ச பிளந்துடும், தன் பிள்ளைங்கள காப்பாத்தனும்னு அவ நெனப்பா. அந்த மாதிரி சமயங்கள்ல, கணவனுக்கு கீழ்ப்படிந்து அதேசமயம் அவர ஆதரிக்கனும்கிறது ரொம்ப கஷ்டம்.
“ஒரு சமயம், 12 வயசும் 14 வயசும் ஆன என்னோட ரெண்டு பசங்களும் எதையோ செய்றதுக்கு அவங்க மாற்றான் தகப்பன்கிட்ட அனுமதி கேட்டாங்க. அவரு முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி சொல்லிட்டு விருட்டுன்னு ரூமவிட்டே வெளிய போயிட்டாரு. பசங்க கேட்டது அவங்களுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானதுன்னு விளக்ககூட சந்தர்ப்பம் குடுக்கல. அந்தப் பசங்க கண்ணு கலங்கிருச்சு, நான் வாயடச்சு போயிட்டேன். பெரிய பையன் என்னை பாத்து, ‘அம்மா, அவரு என்ன செஞ்சாருன்னு பாத்தியா?’ என்று கேட்டான். ‘பாத்தேம்பா. ஆனாலும் அவருதான் குடும்ப தலைவரு, தலைமை வகிப்ப மதிக்கனும்னு பைபிள் நமக்கு சொல்லுது இல்லையா?’ என்று பதிலளித்தேன். அவங்க நல்ல பசங்க, அதனால இத ஏத்துக்கிட்டு ஓரளவு அமைதியா ஆனாங்க. அன்னிக்கு சாயங்காலமே என் கணவன்கிட்ட விஷயத்தை விளக்கினேன். ரொம்ப கெடுபிடியா இருந்துட்டத அவரும் உணர்ந்தாரு. நேரா அந்தப் பசங்களோட ரூமுக்கு போயி அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டாரு.
“அந்த நிகழ்ச்சியிலேர்ந்து நாங்க எல்லாருமே நெறைய விஷயங்கள கத்துக்கிட்டோம். முடிவெடுக்குறதுக்கு முன்னாடி காதுகுடுத்து கேட்கனும்னு என் புருஷன் கத்துக்கிட்டாரு. கஷ்டமா இருந்தாலும் தலைமை வகிப்பு நியமத்த உறுதியா கடைபிடிக்கனும்னு நான் கத்துக்கிட்டேன். கீழ்ப்படிந்திருக்க வேண்டிய அவசியத்த பசங்க கத்துக்கிட்டாங்க. (கொலோசெயர் 3:18, 19) என் புருஷன் மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டது எங்க எல்லாத்துக்குமே மனத்தாழ்மை பத்தி ஒரு நல்ல பாடமா இருந்துச்சு. (நீதிமொழிகள் 29:23) இன்னிக்கி ரெண்டு பசங்களுமே கிறிஸ்தவ மூப்பர்களா இருக்காங்க.”
தவறுகள் நடப்பது சகஜம்தான். புண்படுத்தும் காரியங்களை பிள்ளைகள் செய்வார்கள் அல்லது சொல்வார்கள். அந்த கணநேரம் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக மாற்றான் பெற்றோர் நியாயமற்ற விதத்தில் நடந்துகொள்வார்கள். இருந்தாலும், “தப்பு என்மேலதான், தயவுசெஞ்சு என்ன மன்னிச்சுடு” என்ற எளிய வார்த்தைகள் புண்ணை ஆற்றும் மருந்தாய் ஆறுதலளிக்கும்.
குடும்ப ஒற்றுமையை பலப்படுத்துதல்
மாற்றான் குடும்பத்தில் நெருக்கமான உறவுகள் மலர நாள் ஆகலாம். நீங்கள் ஒரு மாற்றான் பெற்றோராக இருந்தால் மற்றவர் நிலையில் உங்களை வைத்து பார்க்க வேண்டும். புரிந்துகொள்பவராக இருங்கள், பிள்ளைகளோடு நேரத்தை செலவழிக்க தயாராயிருங்கள். சிறிய பிள்ளைகளோடு விளையாடுங்கள். பெரிய பிள்ளைகளோடு கலந்துபேச தயாராயிருங்கள். பிள்ளைகளோடு சேர்ந்து நேரம் செலவு செய்வதற்கான சந்தர்ப்பங்களுக்காக எதிர்நோக்கியிருங்கள். உதாரணமாக, உணவு சமைப்பது அல்லது வண்டியைக் கழுவுவது போன்ற வீட்டு வேலைகளில் உதவும்படி பிள்ளைகளை அழையுங்கள். மார்கெட்டிற்கு போகும்போது அவர்களும் உங்களோடு வந்து உங்களுக்கு உதவும்படி அழைத்து செல்லுங்கள். அதுமட்டுமல்ல, அன்பான சின்ன சின்ன செயல்கள்கூட உங்கள் அன்பை வெளிப்படுத்தக்கூடும். (ஓர் எச்சரிக்கை. மாற்றான் தகப்பன்கள் தங்கள் மாற்றான் மகள்களோடு பழகுகையில் எல்லைமீறுவதன் மூலம் அவர்கள் சங்கோஜமாய் உணராதபடி கவனமாய் இருக்கவேண்டும். பையன்களுக்கும் எல்லைகள் இருக்கின்றன என்பதை மாற்றான் தாய்களும் உணரவேண்டும்.)
மாற்றான் குடும்பங்களும் வெற்றிபெற முடியும். அநேக குடும்பங்கள் அவ்வாறு வெற்றி பெற்றிருக்கின்றனவே! அவற்றுள், சம்பந்தப்பட்ட அனைவரும், முக்கியமாக பெற்றோர் சரியான மனநிலையையும் நியாயமான எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்ளும் குடும்பங்களே ஒளிவிளக்காய் விளங்குகின்றன. “பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 4:7) ஆம், மாற்றான் குடும்பங்கள் சந்தோஷமாய் இருப்பதற்கு உண்மையான இரகசியம் இதயங்கனிந்த அன்பே.
[பக்கம் 7-ன் படங்கள்]
சந்தோஷமான மாற்றான் குடும்பங்கள்
ஒன்றாக சேர்ந்து கடவுளுடைய வார்த்தையை படிக்கிறார்கள் . . .
ஒன்றாக சேர்ந்து நேரம் செலவழிக்கிறார்கள் . . .
ஒன்றாக சேர்ந்து பேசுகிறார்கள் . . .
ஒன்றாக சேர்ந்து வேலைசெய்கிறார்கள் . . .