காலெஜியன்டுகள்—பைபிள் ஏற்படுத்திய மாற்றம்
காலெஜியன்டுகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, டச்சு மதத்தொகுதியே இது. அப்போதைய சர்ச்சுகளில் இருந்து இது வித்தியாசமானது. எப்படி? இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது இருக்கிறதா? அதைத் தெரிந்துகொள்ள, கால ஓட்டத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்வோமா? பின்னணி: அமெரிக்கன் பைபிள் சொஸைட்டி லைப்ரரிக்கு நன்றி, நியூ யார்க்
வருடம் 1587. யாக்கோபஸ் ஆர்மீனஸ் (அல்லது, யாக்கோப் ஹார்மன்ஸன்) என்பவர் ஆம்ஸ்டர்டாம் நகரத்துக்கு வந்து சேர்ந்தார். வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் அவருக்கு எழவில்லை. ஏனென்றால், அவர் பெரிய படிப்பு படித்து ஏராளமான பட்டம் பெற்றவர். 21-வது வயதில் ஹாலந்தின் லீய்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன் பிறகு, ஆறு வருடங்கள் ஸ்விட்சர்லாந்தில் புராட்டஸ்டண்ட் சீர்திருத்தவாதி ஜான் கால்வினுக்குப்பின் வந்த தியோடர் டி பெசே என்பவரிடம் இறையியல் பயின்றார். 27 வயதே நிரம்பிய ஆர்மீனஸை தங்களுடைய குருமார்களுள் ஒருவராக நியமிக்க, ஆம்ஸ்டர்டாமில் இருந்த புராட்டஸ்டண்டினர் ஏகமனதாக ஆமோதித்தனர் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு, சர்ச் அங்கத்தினர்களுள் பலர் இப்படி தாங்கள் ஆமோதித்ததற்காக வருந்தினர். ஏன்?
முன்விதிக்கப்படுதல்
ஆர்மீனஸ் குருவானதுதான் தாமதம், முன்விதிக்கப்படுதல் கோட்பாட்டைப் பற்றி ஆம்ஸ்டர்டாம் புராட்டஸ்டண்டினர் மத்தியில் குழப்பம் எழுந்தது. கால்வினியப் பிரிவுக்கு இந்த கோட்பாடே அஸ்திவாரமாக அமைந்தது. ஆனால், சிலரை இரட்சிப்புக்கும் மற்றவர்களை தண்டனைக்கும் முன்விதித்திருக்கும் கடவுள் கொடூரமானவர், அநியாயமானவர் என்று சர்ச் அங்கத்தினர்கள் சிலர் கருதினர். ஆர்மீனஸ், பெசேவின் மாணவராதலால், இந்த கருத்து வேறுபாட்டை சரி செய்துவிடுவார் என கால்வினியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்ததோ வேறு. ஆர்மீனஸோ கருத்து வேறுபாட்டாளர்களோடு கைகோர்த்துக் கொண்டார். இதைக் கண்ட கால்வினியர்கள் வாயடைத்து போனார்கள். குமுறிக்கொண்டிருந்த இந்த எரிமலை வெடித்ததால் 1593-க்குள், நகரத்தில் இருந்த புராட்டஸ்டண்டினர் இரண்டுபட்டனர். அந்தக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் என்றும் அதை மறுக்கும் மிதவாதிகள் என்றும் பிரிந்தனர்.
ஒருசில வருடங்களுக்குள், இந்த உட்பூசல் தேசிய அளவிலான பிரிவினையை புராட்டஸ்டண்டினர் மத்தியில் உருவாக்கியது. இறுதியில், 1618, நவம்பரில் இந்த சச்சரவிற்கு தீர்வு காணும் உச்சக்கட்டம் வந்தது. இராணுவம், பொது மக்கள் ஆகியோரின் ஆதரவோடு கால்வினியர்கள், கருத்து வேறுபாட்டாளர்களை (ரெமான்ஸ்ட்ரன்ட்கள், தீவிர எதிர்ப்பாளர்கள் என்று அப்போது அழைக்கப்பட்டனர்a) டார்ட்ரெக்ட் புராட்டஸ்டண்ட் குருமன்றத்தின் முன் ஆஜராகும்படி அழைத்தனர். அக்கூட்டத்தின் முடிவில், எல்லா ரெமான்ஸ்ட்ரன்ட் ஊழியர்களுக்கும் தெரிவு செய்ய ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது: இனி ஒருபோதும் பிரசங்கிக்கமாட்டோம் என்னும் உறுதிமொழியில் கையெழுத்திடுவது, அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது. அநேகர் நாட்டை விட்டு வெளியேறுவதென முடிவெடுத்தனர். ரெமான்ஸ்ட்ரன்ட் ஊழியர்கள் விட்டு சென்ற காலி இடங்களை கால்வினிய குருமார்கள் நிரப்பினர். இறுதியில், கால்வினியர்களுக்கே ஜெயம் என அக்குழு மனக்கோட்டை கட்டியது.
காலெஜியன்டுகளின் தோற்றமும் வளர்ச்சியும்
எங்கும் நடப்பது போலவே, லீய்டனுக்கு அருகில் உள்ள வார்மான்ட் கிராமத்தில் இருந்த ரெமான்ஸ்ட்ரன்ட் சபைக்கு குருமார் இல்லாமல் போனது. இருப்பினும், குருமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எவரையும் அச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், 1620-ல், ரெமான்ஸ்ட்ரன்ட் ஊழியர் ஒருவர், சபையை கவனித்துக் கொள்வதற்காக, தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து வார்மான்ட்டுக்கு திரும்பி வந்தார். ஆனால், சபையிலுள்ள சில அங்கத்தினர்கள் அவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த அங்கத்தினர்கள், தங்களுடைய மதக் கூட்டங்களை குருமாரின் உதவியில்லாமலேயே, இரகசியமாக நடத்த ஆரம்பித்தனர். இக்கூட்டங்களே பின்னர் காலெஜ் என்று அழைக்கப்பட்டன. அவற்றில் ஆஜரானவர்கள் காலெஜியன்டுகள் என அழைக்கப்பட்டனர்.
காலெஜியன்ட் என்ற இந்தத் தொகுதி, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முளைத்ததேயொழிய, மத நியமங்களுக்காக தோன்றியதல்ல. ஆனால், விரைவில் இந்நிலை மாறியது. குருமார்களின் மேற்பார்வையின்றி இத்தொகுதி இப்படி கூடுவது, சர்ச்சுகளின் வழிகளில் இருந்து விலகினாலும், ஆரம்பகால கிறிஸ்தவர்களின் வழிக்கும் பைபிளுக்குமே மிக நெருக்கமாக ஒத்திணங்கி செல்கிறது என்று சபை அங்கத்தினர்களுள் ஒருவராகிய சிஸ்பர்ட் வான் டெர் கோடே வாதாடினார். குருவர்க்கம் என்ற அமைப்பே, அப்போஸ்தலர்களின் மரணத்துக்குப் பிறகு புதிதாக தோன்றியதென்றும் தொழில் தெரியாதவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கவே உருவாக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
1621-ல், வான் டெர் கோடேவும் அவரை ஆதரித்தவர்களும் தங்களுடைய கூட்டங்களை ரைன்ஸ்பர்ச் என்ற அருகில் இருந்த கிராமத்திற்கு மாற்றினார்கள்.b மத அடக்குமுறை சில ஆண்டுகளுக்கு பிறகு மத சகிப்புத்தன்மைக்கு அடிகோலியது. இதனால், காலெஜியன்டுகளுடைய கூட்டங்களின் புகழ் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவியது. சரித்திர ஆசிரியர் ஸெக்ஃப்ரட் ஸில்வர்பர்க் குறிப்பிட்டபடி, இது “பல கூட்டுப் பறவைகளுக்கு” அழைப்பு விடுத்தது. ரெமான்ஸ்ட்ரன்ட்கள், மெனனைட்டுகள், சோஸினீயர்கள், ஏன் இறையியலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இதில் சங்கமித்தனர். விவசாயிகளும் இருந்தனர். அவர்களில் கவிஞர்கள், அச்சடிப்பவர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் இருந்தனர். தத்துவ மேதை ஸ்பினோஸா (பெனடிக்டஸ் டி ஸ்பினோஸா), ஸ்கூல்மாஸ்டர் யோஹான் ஆமோஸ் கமீனீயஸ் (அல்லது, யான் கோமன்ஸ்கீ), பிரபலமான ஓவியர் ரெம்ப்ரன்ட் வான் ரீன் ஆகியோர் இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள். கடவுள் பக்தியுள்ள இப்படிப்பட்டவர்களின் கருத்துகள், காலெஜியன்டுகளுடைய நம்பிக்கைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டன.
1640-க்குப் பிறகு, சுறுசுறுப்பாய் செயல்பட்டு வந்த இத்தொகுதி, படுவேகமாக வளர ஆரம்பித்தது. ராட்டர்டாம், ஆம்ஸ்டர்டாம், லேவார்டன், மற்றும் பல நகரங்களிலும் இத்தொகுதிகள் புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டதுபோல் மளமளவென பெருகின. 1650-1700 வரையான காலப்பகுதியில், “காலெஜியன்டுகள் . . . பதினேழாம் நூற்றாண்டைய ஹாலந்தின் மிக முக்கியமான, செல்வாக்குமிக்க மத அமைப்புகளில் ஒன்றாக திகழ்ந்தனர்.”
காலெஜியன்டுகளின் நம்பிக்கைகள்
பகுத்தாராய்தல், சகிப்புத்தன்மை, பேச்சு உரிமை என்பவை காலெஜியன்ட் இயக்கம் பதித்த முத்திரைகள். இது, தனிப்பட்ட ஆட்களின் வித்தியாசமான நம்பிக்கைகளுக்கு இடமளித்தது. இருந்தாலும், சில பொதுவான நம்பிக்கைகளும் அவர்களை கட்டுப்படுத்தத்தான் செய்தன. உதாரணமாக, எல்லா காலெஜியன்டுகளும் தனிப்பட்டவிதமாக பைபிளை படிப்பதை உயர்வாக மதித்தனர். ஒவ்வொரு அங்கத்தினரும் “தானாகவே துருவி ஆராய்ந்து, கடவுளை தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர, பிறரைக் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டியதில்லை” என ஒரு காலெஜியன்ட் எழுதினார். அவர்கள் தாங்களாகவே அலசி ஆராய்ந்தனர். அந்த சமயத்தில் இருந்த மதத் தொகுதிகளைவிட காலெஜியன்டுகள் அதிக பைபிள் அறிவு பெற்று சுடர்களாய் ஒளிவீசினரென 19-ம் நூற்றாண்டு சர்ச் சரித்திர ஆசிரியர் யாக்கோபஸ் சி. வான் ஸ்லே குறிப்பிடுகிறார். அவர்களை எதிர்த்தவர்களும்கூட, அவர்கள் திறமையோடு பைபிளை உபயோகிப்பதை பாராட்டினர்.
காலெஜியன்டுகள் எந்தளவுக்கு அதிகமாக பைபிளை படித்தார்களோ, அந்தளவுக்கு சர்ச்சுகளின் நம்பிக்கைகளில் இருந்து வித்தியாசமான கருத்துக்களை அறிந்தனர். 17 முதல் 20-ம் நூற்றாண்டு வரையான விவரக்குறிப்புகள் இவர்களுடைய சில நம்பிக்கைகளை விவரிக்கின்றன.
ஆரம்பகால சர்ச். பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில் ஆரம்ப கால சர்ச் அரசியலில் தலையிட்டபோது, இயேசுவுடன் செய்திருந்த ஆன்மீக உடன்படிக்கையை முறித்தது. பரிசுத்த ஆவியின் ஏவுதலையும் இழந்தது என காலெஜியன்டும் இறையியலாளருமான ஆதாம் போரேல் 1644-ல் எழுதினார். இதன் விளைவாக, பொய் போதகங்கள் பெருகி, அவருடைய நாள் வரையாக தொடர்ந்தன என்றும் கூறினார்.
சமய சீர்திருத்தம். லூத்தர், கால்வின் போன்ற பலரால் ஆரம்பிக்கப்பட்டதே 16-ம் நூற்றாண்டு கிறிஸ்தவ சமய சீர்திருத்தம். ஆனால், சர்ச்சை சீர்திருத்த அதனால் முடியவில்லை. மாறாக, இந்த இயக்கம், மதப்பிரிவினைக்கு வித்திட்டு, சண்டையையும் பகைமையையும் கொழுந்து விட்டு எரிய செய்தது என பிரபல காலெஜியன்டும் மருத்துவருமான சேலனஸ் ஆப்ரஹாம்ஸன் (1622-1706) குறிப்பிடுகிறார். உண்மையான சீர்திருத்தம் என்பது மனங்களை மாற்ற வேண்டும். ஆனால், சமய சீர்திருத்தமோ இதைச் செய்ய தவறியது.
சர்ச்சும் குருவர்க்கமும். சர்ச்சுகள் ஊழல் நிறைந்தும், உலகப் பற்றுடையதும், தெய்வீக அங்கீகாரம் இழந்ததுமாய் இருக்கின்றன. மதத்தை வாஸ்தவமாக பின்பற்ற நினைக்கும் எவரும் சர்ச்சின் பாவங்களுக்கு உடந்தையாகாமல் இருக்க, சர்ச்சை விட்டு விலகுவதைத்தவிர வேறு வழியே இல்லை. குருமார்களாக பொறுப்பேற்பது பைபிள் வசனங்களுக்கு முரணானவை என்றும் “கிறிஸ்தவ சபையின் ஆன்மீக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை” என்றும் காலெஜியன்டுகள் சொல்லுகின்றனர்.
ராஜ்யமும் பூங்காவனமும். கிறிஸ்துவின் ராஜ்யம், ஒருவருடைய இருதயத்தில் இருக்கும் ஆன்மீக ராஜ்யமல்ல என ஆம்ஸ்டர்டாம் காலெஜின் முன்னோடியாய் திகழ்ந்தவர்களுள் ஒருவரான டேனியல் டி ப்ரேன் (1594-1664) எழுதினார். “கோத்திரத் தலைவர்கள் பூமிக்குரிய வாக்குறுதிகள் நிறைவேறும் காலத்தை எதிர்நோக்கி இருந்தனரென” ராட்டர்டாமில் உள்ள காலெஜியன்டும் ஆசிரியருமான ஜேக்கப் ஆஸ்டன்ஸ் சொன்னார். இதைப்போலவே, இந்த பூமி பூங்காவனமாக மாறும் சமயத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் காலெஜியன்டுகள்.
திரித்துவம். சோஸினீயர்களின் செல்வாக்கால், காலெஜியன்டுகளில் பிரபலமான சிலர் திரித்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. c உதாரணமாக, திரித்துவம் போன்ற பகுத்தறிவுக்கு எட்டாத எந்தவொரு கோட்பாடும் “ஏற்றுக்கொள்ளப்படாததும் பொய்யானதுமாகும்” என்று டேனியல் ஸ்விகர் (1621-78) எழுதினார். 1694-ல், ரேனீர் ரோலேவோ என்னும் காலெஜியன்ட் மொழிபெயர்த்த பைபிள் பிரசுரிக்கப்பட்டது. “அந்த வார்த்தை தேவனாக இருந்தது”d என்ற ஆர்த்தடாக்ஸ் மொழிபெயர்ப்புக்கு பதிலாக, யோவான் 1:1-ஐ இவ்விதமாக மொழிபெயர்த்துள்ளது: “அந்த வார்த்தை ஒரு தேவனாக இருந்தது.”
வாராந்திர கூட்டங்கள்
நம்பிக்கைகளை பொருத்தமட்டில் எல்லா காலெஜியன்டுகளும் ஒத்துப்போகவில்லை. இருந்தபோதிலும், வெவ்வேறு நகரங்களில் இருந்த அவர்களுடைய காலெஜுகள் எல்லாமே ஒரே விதமாக இயங்கின. காலெஜியன்ட் இயக்கத்தின் ஆரம்ப நாட்களில், கூட்டங்கள் முன்தயாரிப்பின்றி நடத்தப்பட்டன என சரித்திர ஆசிரியர் வான் ஸ்லே அறிவிக்கிறார். ‘தீர்க்கதரிசனம் சொல்ல’ வேண்டும் என்கிற அப்போஸ்தலனாகிய பவுலுடைய வார்த்தைகளின் அடிப்படையில், எல்லா ஆண் அங்கத்தினர்களும் நீண்ட நேரம் பேச்சு கொடுக்கலாம் என்று காலெஜியன்டுகள் கருதினர். (1 கொரிந்தியர் 14:1, 3, 26) இதன் காரணமாக, அவர்களுடைய கூட்டங்கள் நள்ளிரவு வரை நீடித்தன. கூட்டத்தில் அமர்ந்து இருந்தவர்களில் சிலர் “தூங்கி வழிந்தனர்.”
பின்னர், இந்தக் கூட்டங்கள் இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடத்தப்பட்டன. காலெஜியன்டுகள், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமல்ல, வாரநாட்களில் மாலை நேரங்களிலும் ஒன்றுகூடினர். சபையாரும் பேச்சாளரும் அந்த வருடத்திற்குரிய எல்லா கூட்டங்களுக்கு முன்னதாகவே தயாரிப்பதற்காக நிகழ்ச்சிநிரல் அச்சடிக்கப்பட்டது. சிந்திக்கப்பட வேண்டிய பைபிள் வசனங்கள், பேச்சாளரின் இனிஷியல்கள் அதில் பட்டியலிடப்பட்டு இருந்தன. பாட்டு, ஜெபத்தோடு கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, பேச்சாளர் ஒருவர் பைபிள் வசனங்களை விளக்குவார். முடித்தபிறகு, சிந்தித்த பொருளைப் பற்றி தங்களுடைய அபிப்பிராயங்களை சொல்லுமாறு ஆண் அங்கத்தினர்களைக் கேட்பார். அதற்கு பிறகு, இரண்டாவது பேச்சாளர் அதே வசனங்களை எப்படி பொருத்துவது என காண்பிப்பார். பாட்டு, ஜெபத்தோடு கூட்டம் முடிவுக்கு வரும்.
ஃப்ரீஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஹார்லிங்கன் பட்டணத்தைச் சேர்ந்த காலெஜியன்டுகள், தங்களுடைய கூட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க நூதனமான ஒரு முறையை கையாண்டனர். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பேசும் பேச்சாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேசிய மாநாடுகள்
பெரிய அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் காலெஜியன்டுகள் எண்ணினர். எனவே, 1640-ல் இருந்து, நாட்டின் எல்லா திக்கிலிருந்தும் காலெஜியன்டுகள் வருடத்தில் இரண்டு தடவை (வசந்த காலத்திலும் கோடை காலத்திலும்) ரைன்ஸ்பர்ச்சுக்கு வந்தனர். “நாலா பக்கத்தில் இருந்தும் வரும் தங்களுடைய சகோதரர்களின் செயல்கள், உணர்ச்சிகள், நம்பிக்கைகள், கருத்துக்கள் அனைத்தையும் பரஸ்பர பரிமாற்றம்” செய்துகொள்ள இக்கூட்டங்கள் உதவின என்று சரித்திர ஆசிரியர் ஃபிக்ஸ் எழுதுகிறார்.
அப்படி பிரயாணப்பட்டு வந்த காலெஜியன்டுகளில் சிலர், கிராமத்தினர் வாடகைக்கு தந்த ரூம்களில் தங்கினர். மற்றவர்களோ, காலெஜியன்டுகளுக்கு சொந்தமான 30 ரூம்களைக் கொண்ட பங்களாவில்—ச்ரோடெ ஹூஸ், அல்லது பெரிய வீட்டில்—தங்கினர். அங்கு, 60 அல்லது 70 பேருக்கு கூட்டு சாப்பாடு தயாரானது. இரவு சாப்பாட்டிற்கு பிறகு, தங்குபவர்கள் அந்த மாளிகையின் பெரிய தோட்டத்தில் காலார நடந்து, ‘கடவுளின் இயற்கைப் படைப்பில் மெய் மறக்கலாம், அமைதியான சம்பாஷணையில் ஈடுபடலாம், அல்லது சிந்தனையில் மூழ்கலாம்.’
முழுக்காட்டுதல் அவசியம் என்று எல்லா காலெஜியன்டுகளும் கருதவில்லை. என்றபோதிலும், நிறையப் பேர் அவசியம் என்று நினைத்தனர். எனவே, பெரிய மாநாடுகளில் முழுக்காட்டுதல் ஒரு சிறப்பு அம்சமானது. இது, பெரும்பாலும் சனி காலை நடைபெற்றது என சரித்திர ஆசிரியர் வான் ஸ்லே சொல்கிறார். முழுக்காட்டுதலின் முக்கியத்துவத்தைப் பற்றிய பேச்சுக்குப் பிறகு பாட்டும் ஜெபமும் தொடர்ந்தன. பிறகு, முழுக்காட்டுதல் பெற விரும்புபவர்களை, “இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்பதை நான் விசுவாசிக்கிறேன்” போன்ற விசுவாச அறிக்கையை பகிரங்கமாக சொல்லும்படி பேச்சாளர் அழைப்பார். ஜெபத்துடன் பேச்சு முடிந்த பிறகு, கூடியிருந்தவர்கள் அனைவரும் முழுக்காட்டுதல் எடுக்கும் இடத்திற்கு செல்வர். முழுக்காட்டுதல் எடுக்க விரும்பும் ஆண்களும் பெண்களும் தங்களுடைய தோள் வரைக்கும் தண்ணீரில் மூழ்கும்படி முழங்காற்படியிட்டனர். அப்போது முழுக்காட்டுதல் கொடுப்பவர், அந்த புதிய விசுவாசியின் தலையை முன்னுக்கு தள்ளி, நீருக்கடியில் மெதுவாக அமிழ்த்துவார். இதைக் காண வந்த கூட்டத்தார் சாட்சிகளாய் இருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு, மற்றொரு பேச்சை கேட்க எல்லோரும் தங்களுடைய இருக்கைகளுக்கு திரும்பி செல்வர்.
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, சுருக்கமான பைபிள் வாசிப்பு, பாட்டு, ஜெபத்திற்கு பிறகுதான் உண்மையிலேயே கூட்டம் தொடங்கும். ஒவ்வொரு மாநாட்டிற்கும் மாறிமாறி பேச்சாளர்களை அனுப்ப ராட்டர்டாம், லீய்டன், ஆம்ஸ்டர்டாம், வட ஹாலந்தில் உள்ள காலெஜ்கள் பேச்சாளர்களை தயாராய் கைவசம் வைத்திருந்தன. கர்த்தரின் இராப்போஜன கொண்டாட்டத்துக்காக ஞாயிறு காலை ஒதுக்கப்பட்டது. பேச்சு, ஜெபம், பாட்டுக்கு பிறகு முதலில் ஆண்களும் அவர்களைத் தொடர்ந்து பெண்களும் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் உட்கொண்டனர். ஞாயிறு மாலை இன்னுமநேக பேச்சுகள் கொடுக்கப்பட்டன. திங்கள் காலையில் கடைசி பேச்சுக்காக எல்லாரும் கூடிவந்தனர். இந்த மாநாடுகளில் கொடுக்கப்பட்ட பெரும்பாலான பேச்சுகள் வெறும் விளக்கங்களாக மட்டுமே இல்லாமல் நடைமுறையில் எப்படி பொருத்துவது என வலியுறுத்திக் காட்டின.
இப்படிப்பட்ட மாநாடுகள் அங்கே நடத்தப்பட்டதால் ரைன்ஸ்பர்ச் கிராமம் அடைந்த பெருமிதத்திற்கு அளவேயில்லை. சாப்பாட்டுக்கும் பானத்திற்கும் பணத்தை வாரியிறைத்த வெளியூர் ஆட்களின் வருகை, கிராமத்துக்கு நல்ல வருவாயை தந்ததென 18-ம் நூற்றாண்டு பதிவாளர் ஒருவர் எழுதினார். மேலும், ஒவ்வொரு மாநாட்டிற்கும் பிறகு காலெஜியன்டுகள் கணிசமான ஒரு தொகையை ரைன்ஸ்பர்ச்சின் ஏழைகளுக்கு நன்கொடையாக அளித்தனர். 1787-ல், இந்த மாநாடுகள் நிறுத்தப்பட்ட போது, அந்த கிராமத்துக்குத்தான் பெரிய நஷ்டம். அதன் பின்னர், காலெஜியன்ட் இயக்கம் சுவடு தெரியாமல் மறைந்து போனது. ஏன்?
மறைந்தது ஏன்
17-ம் நூற்றாண்டின் இறுதியில், மத சம்பந்தமான விஷயங்களை பகுத்தறிவோடு அலசிப்பார்ப்பது சர்ச்சைக்குள்ளாகியது. தெய்வீக வெளிப்படுத்துதலுக்கும் மேலாக மனித பகுத்தறிவுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டுமென சில காலெஜியன்டுகள் கருதினர். ஆனால், மற்றவர்களோ மறுத்தனர். இறுதியில், இந்த சர்ச்சையால் காலெஜியன்ட் இயக்கம் இரண்டுபட்டது. இரு தரப்பிலும் இருந்த முக்கியமான ஆட்கள் மரித்தால்தான் காலெஜியன்டுகள் மறுபடியும் ஒன்று சேர முடியும். ஆனால், இந்த பிரிவினைக்கு பிறகு, இந்த இயக்கம் “முன்னிருந்த நிலைக்கு மறுபடியும் தலைதூக்கவில்லை” என சரித்திர ஆசிரியர் ஃபிக்ஸ் குறிப்பிடுகிறார்.
18-ம் நூற்றாண்டில் புராட்டஸ்டண்ட் சர்ச்சுக்குள் அதிகரித்த சகிப்புத்தன்மை காலெஜியன்டுகளின் மறைவுக்கு ஒரு காரணம். காலெஜியன்டுகளின் பகுத்தறிவு சிந்தனையும் சகிப்புத்தன்மையும் சமுதாயத்தால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட ஆரம்பிக்கவே, “ஒற்றைச் சுடராக பிரகாசித்த காலெஜியன்ட் இயக்கம், அறிவொளி எனும் மின்னும் விடியலில் தேய்பிறை போல் தேய்ந்து மறைந்தது.” 18-ம் நூற்றாண்டின் இறுதிக்குள், காலெஜியன்டுகளில் பெரும்பாலோர், மெனனைட்டுகள் போன்ற மற்ற மதத் தொகுதிகளோடு சேர்ந்துவிட்டனர்.
காலெஜியன்டுகள் தங்களுக்குள் ஒரே சிந்தனை உடையவர்களாய் இல்லாததால், ஒவ்வொரு காலெஜியன்டும் வித்தியாசமான கருத்தை உடையவர்களாய் இருந்தனர். இதை அவர்கள் அறியாமல் இல்லை. எனவே, அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்தவர்களை “ஏகயோசனையும் உள்ளவர்களாய் சீர்பொருந்தியிருக்கும்படி” வலியுறுத்தியதுபோல், தாங்கள் ஐக்கியமாய் இருக்கிறோம் என்று பெருமை பாராட்டிக் கொள்ளவில்லை. (1 கொரிந்தியர் 1:10) இருப்பினும், கருத்து ஒற்றுமை போன்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகள் மெய்ம்மையாகும் காலத்திற்காக காலெஜியன்டுகள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்.
உண்மை அறிவு இப்போது இருப்பதுபோல் காலெஜியன்டுகளின் நாட்களில் அவ்வளவு இல்லை. அந்நிலைமைகளின் மத்தியிலும் காலெஜியன்டுகள் நல்ல மாதிரியை வைத்துச் சென்றனர். இன்றைய மதங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று அது. (தானியேல் 12:4-ஐ ஒப்பிடுக.) பைபிளை படிப்பதற்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ‘எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்’ என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் புத்திமதிக்கு இசைவாக அது இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:21) நீண்ட காலமாக அனுசரிக்கப்பட்டு வந்த மத பழக்கவழக்கங்களும் கோட்பாடுகளும் பைபிள் ஆதாரம் அற்றவை என்பதை யாக்கோபஸ் ஆர்மீனஸுக்கும் மற்றவர்களுக்கும், தனிப்பட்ட பைபிள் படிப்பு கற்பித்தது. இதை அவர்கள் தெரிந்து கொண்டபோது, மத அமைப்புகளை எதிர்க்க சற்றும் தயங்கவில்லை. நீங்கள் அந்த சமயத்தில் வாழ்ந்திருந்தால், அதே விதமாக இருந்திருப்பீர்களா?
[அடிக்குறிப்புகள்]
a 1610-ல், கருத்து வேறுபாட்டாளர்கள் முறைப்படியான ஒரு ரெமான்ஸ்ட்ரன்ஸை (எதிர்ப்பதற்கான காரணங்களைக் கூறும் படிவத்தை) டச்சு ஆட்சியாளர்களுக்கு அனுப்பினர். இதற்கு பின்னரே, அவர்கள் ரெமான்ஸ்ட்ரன்ட்கள் என்று அழைக்கப்பட்டனர்.
b காலெஜியன்டுகள், அந்த இடத்தின் பெயரால் ரைன்ஸ்பர்ச்சர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
c 1988, நவம்பர் 22, விழித்தெழு! (ஆங்கிலம்) இதழில் பக்கம் 19-ல் உள்ள “சோஸினீயர்கள்—அவர்கள் ஏன் திரித்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை?” என்ற கட்டுரையைக் காணவும்.
d ஹெட் நிய்யூ டெஸ்டமன்ட் வான் ஓன்ஸ் ஹீர் ஜீஸஸ் கிறிஸ்டஸ், யூட் ஹெட் க்ரீக்ஷ் வெர்டால்ட் டூர் ரேனீர் ரோலேவோ, M.D. (நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு, ரேனீர் ரோலேவோ, M.D.-யால், கிரேக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.)
[பக்கம் 24-ன் படம்]
ரெம்ப்ரன்ட் வான் ரீன்
[பக்கம் 26-ன் படம்]
காலெஜியன்ட் இயக்கம் முதன்முதலாக தோன்றிய வார்மான்ட் கிராமம், முழுக்காட்டுதல் கொடுக்கப்பட்ட டெ வ்லீட் ஏரி
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
Background: Courtesy of the American Bible Society Library, New York