மெய் வணக்கம் மக்களை ஒன்றுசேர்க்கிறது
பொதுவாக, மதம் மனிதர்கள் மத்தியில் பிரிவினைகளை உண்டுபண்ணினாலும், ஒரே மெய்க் கடவுளின் வணக்கம் மக்களை ஒன்றுபடுத்தும் சக்திகொண்டது. இஸ்ரவேலர் கடவுளின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக இருந்தபோது, உண்மை மனதுள்ள புறஜாதியார் பலர் மெய் வணக்கத்திடம் கவரப்பட்டார்கள். உதாரணமாக, ரூத் தன்னுடைய சொந்த தேசத்து மோவாபிய கடவுட்களை விட்டுவிட்டு நகோமியிடம் இவ்வாறு சொன்னாள்: “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) பொ.ச. முதல் நூற்றாண்டுக்குள், திரளான எண்ணிக்கையில் புறஜாதியார் மெய்க் கடவுளின் வணக்கத்தாராக மாறியிருந்தார்கள். (அப்போஸ்தலர் 13:48; 17:4) பின்னால், இயேசுவின் அப்போஸ்தலர்கள் நற்செய்தியை தூர இடங்களுக்கு எடுத்துச் சென்றபோது நல் மனமுடைய இன்னும் அநேகர் மெய்க் கடவுளின் வணக்கத்தில் ஒன்றுபடுத்தப்பட்டார்கள். “ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பி”னீர்கள் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 1:9) இதேபோல ஒன்றுபடுத்தும் சக்தி இன்று மெய்க் கடவுளின் வணக்கத்திற்கு இருக்கிறதா?
“மெய்க் கடவுள்” அல்லது “மெய் வணக்கத்தார்” என்று பேசுவதெல்லாம் தவறு என சந்தேகவாதிகள் அடித்துக்கூறுகின்றனர். உண்மையை கற்றறியத்தக்க எந்த ஊற்றுமூலத்தையுமே அவர்கள் அறியாதிருப்பதால் அவ்வாறு நினைக்கலாம். ஆனால் பல பின்னணிகளிலிருந்து சத்தியத்தை தேடி வந்திருப்பவர்கள், வணக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததில்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள். நம்முடைய வணக்கத்துக்கு தகுதியுள்ளவர் எல்லாவற்றையும் படைத்த படைப்பாளர் யெகோவா தேவன் மட்டுமே. (வெளிப்படுத்துதல் 4:11) அவரே மெய்க் கடவுள், அவரை எவ்வாறு வணங்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும் அவருக்கே உண்டு.
யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்வதற்காக, தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் வாயிலாக நமக்கு தகவல் அளித்திருக்கிறார். இன்று பூமியிலுள்ள அனைவருக்கும் முழு பைபிளோ அல்லது அதன் பகுதிகளோ கிடைக்கிறது. அது மட்டுமல்ல, கடவுளுடைய குமாரனும் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் . . . சத்தியத்தையும் அறிவீர்கள்.” (யோவான் 8:31, 32) ஆகவே சத்தியம் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். பல்வேறுபட்ட மத பின்னணியைச் சேர்ந்த நேர்மை இருதயமுள்ள லட்சக்கணக்கானோர் தைரியமாக இந்த சத்தியத்தை ஏற்றுக்கொண்டு மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டு வருகிறார்கள்.—மத்தேயு 28:19, 20; வெளிப்படுத்துதல் 7:9, 10.
நம்முடைய நாளில் உலகம் தழுவிய ஒற்றுமை!
பைபிள் புத்தகமாகிய செப்பனியாவிலுள்ள முக்கியமான ஒரு தீர்க்கதரிசனம், வித்தியாசப்பட்ட பின்னணியைச் சேர்ந்த மக்கள் ஒன்றுசேருவதைப் பற்றி கூறுகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் [யெகோவா] அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.” (செப்பனியா 3:9) மாற்றங்களைச் செய்து கடவுளை ஒற்றுமையாக சேவிக்கும் ஆட்களைப் பற்றிய என்னே அழகான வர்ணனை!
இது எப்போது நடைபெறும்? செப்பனியா 3:8 இவ்வாறு சொல்கிறது: “ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம் பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.” ஆம், தேசங்களிலுள்ள மக்களை யெகோவா கூட்டிச்சேர்க்கும்போது, ஆனால் அவருடைய உக்கிரமான கோபத்தை அவர்கள்மீது ஊற்றுவதற்கு முன்பு, பூமியிலுள்ள சாந்தகுணமுள்ளவர்களுக்கு சுத்தமான பாஷையைக் கொடுக்கிறார். அந்தக் காலம் இதுவே, ஏனென்றால் எல்லா தேசங்களும் அர்மகெதோனில் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்கு கூட்டிச்சேர்க்கப்படுதல் இப்பொழுது நடந்தேறி வருகிறது.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
யெகோவா தம்முடைய மக்களை ஒன்றுபடுத்த அவர்களுக்கு சுத்தமான பாஷையைக் கொடுக்கிறார். இந்தப் புதிய பாஷையில் கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய பைபிளின் சத்தியத்தை சரியாக புரிந்துகொள்வது அடங்கியிருக்கிறது. சுத்தமான பாஷையை பேசுவது சத்தியத்தை நம்புவதையும், அதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதையும், கடவுளுடைய சட்டங்கள், நியமங்கள் ஆகியவற்றிற்கு இசைவாக வாழ்வதையும் உட்படுத்துகிறது. பிரிவினைகளை உண்டாக்கும் அரசியலை வெறுத்து ஒதுக்குவதையும், இந்த உலகத்தின் சிறப்பு அம்சங்களாக இருக்கும் இனவெறி, பிரிவினையை ஏற்படுத்தும் தேசபக்தி போன்ற சுயநல மனப்பான்மைகளை இருதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிவதையும் தேவைப்படுத்துகிறது. (யோவான் 17:14; அப்போஸ்தலர் 10:34, 35) சத்தியத்தை நேசிக்கும் நேர்மையான இருதயமுள்ளோர் அனைவரும் இந்த பாஷையைக் கற்றுக்கொள்ளலாம். முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த ஐந்து பேர், அப்போது வெவ்வேறு மதத்தவராக பிரிக்கப்பட்டிருந்த அவர்கள், இப்போது எவ்வாறு ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
மெய் வணக்கத்தில் அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள்
ரோமன் கத்தோலிக்க மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த ஃபிடிலியா, தன் மகளின் பள்ளி பாடங்களுக்காக ஒரு பைபிளை வாங்கினாள். இறந்துபோன அவளுடைய ஐந்து பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை அதிலிருந்து தனக்கு விளக்கும்படி தன் பாதிரியாரை கேட்டாள். “ஏமாற்றம்தான் மிஞ்சியது!” என்று அவள் கூறுகிறாள். ஆகவே யெகோவாவின் சாட்சிகள் அவளை சந்திக்க வந்தபோது அவர்களிடம் இதே கேள்வியை கேட்டாள். மரித்தவர்களின் உண்மையான நிலைமையைப் பற்றி அவளுடைய சொந்த பைபிளிலிருந்து வாசித்தபோது, சர்ச் தன்னை எப்படி ஏமாற்றி வந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். மரித்தோர் உணர்வில்லாமல் இருப்பதால் அவர்கள் லிம்போவிலோ வேறெந்த இடத்திலோ கஷ்டப்பட்டுக்கொண்டில்லை என்பதை அவள் கற்றுக்கொண்டாள். (சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5) ஃபிடிலியா தன்னிடமிருந்த மத சம்பந்தப்பட்ட எல்லா விக்கிரகங்களையும் தூக்கியெறிந்தாள், சர்ச்சை விட்டு விலகினாள், பைபிளை படிக்க ஆரம்பித்தாள். (1 யோவான் 5:21) கடந்த பத்து ஆண்டுகளாக வேதப்பூர்வமான சத்தியத்தை மற்றவர்களுக்கு போதிப்பதை மகிழ்ந்து அனுபவிக்கிறாள்.
காட்மாண்டுவைச் சேர்ந்த தாரா, இந்து மத கோவில்கள் அதிகம் இல்லாத ஒரு நாட்டுக்கு குடிமாறி சென்றாள். அங்கே தன் ஆன்மீக தேவைகள் பூர்த்தியாகும் என்ற நம்பிக்கையோடு அவள் ஒரு மெத்தடிஸ்டு சர்ச்சுக்கு சென்றாள். ஆனால் மனிதர்களின் துயரத்தைப் பற்றிய அவளுடைய கேள்விக்கு அங்கே விடை கிடைக்கவில்லை. அதன் பிறகு யெகோவாவின் சாட்சிகள் அவளைச் சந்தித்து, அவளுக்கு பைபிளை கற்றுத்தர முன்வந்தார்கள். தாரா இவ்வாறு சொல்கிறாள்: “அன்புள்ள கடவுள் உலகிலுள்ள எல்லா துயரங்களுக்கும் பொறுப்புள்ளவராக இருக்க முடியாது என்பதை புரிந்துகொண்டேன். . . . சமாதானமும் ஒற்றுமையுமுள்ள புதிய உலகம் வரப்போவதை படித்து நான் ஆனந்தமடைந்தேன்.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) தாரா இந்து மத விக்கிரகங்களை தூக்கியெறிந்தாள், தன் சொந்த நாட்டின் மத பழக்கங்களை அனுசரிப்பதை விட்டுவிட்டாள், ஒரு யெகோவாவின் சாட்சியாக இப்போது மற்றவர்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவுவதில் அவள் உண்மையான மகிழ்ச்சி காண்கிறாள்.
புத்த மதத்தைச் சேர்ந்த பான்யாவை பாங்காக்கில் யெகோவாவின் சாட்சிகள் சந்தித்த சமயத்தில் குறிசொல்பவனாக இருந்தான். ஆகவே பைபிள் தீர்க்கதரிசனங்கள் அவனை மிகவும் கவர்ந்தன. பான்யா இவ்வாறு கூறினான்: “இப்போதுள்ள நிலைமைகள், ஆரம்பத்தில் படைப்பாளர் கொண்டிருந்த நோக்கத்திலிருந்து ஏன் வித்தியாசமாக இருக்கின்றன என்பதையும் அவரையும் அவருடைய அரசுரிமையையும் நிராகரிப்பவர்கள் உண்டுபண்ணியுள்ள நாசத்தை சரிசெய்ய அவர் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்துகொண்டபோது என் கண்களுக்கு முன்னாலிருந்த ஒரு திரை விலகியது போல எனக்கு இருந்தது. பைபிளில் உள்ள செய்தியில் ஒத்திசைவு இருந்தது. யெகோவாவை ஒரு நபராக நேசிக்க ஆரம்பித்தேன். எது சரி என்று தெரிந்ததோ அதை செய்வதற்கு தேவையான உந்துவிப்பை இது எனக்கு தந்தது. மனித ஞானத்துக்கும் கடவுளின் ஞானத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மற்றவர்கள் காண்பதற்கு உதவிசெய்ய எனக்கு ஆவல் பிறந்தது. உண்மையிலேயே மெய் ஞானம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.”
வர்ஜல்லுக்கு காலப்போக்கில் தன் மத நம்பிக்கைகளைக் குறித்ததில் பெரும் சந்தேகங்கள் எழும்பின. கறுப்பர் இனத்தவர்களுக்கு உதவ ஒரு வழியைக் காட்டும்படியோ அல்லது வெள்ளையர்மீது வெறுப்பை உண்டுபண்ணிய அந்த இயக்கத்திற்காகவோ கடவுளிடம் ஜெபிப்பதற்கு பதிலாக, சத்தியம் என்னவாக இருந்தாலும் எங்கிருந்தாலும் அதை தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஜெபம் செய்தான். “இரவில் மிகவும் ஊக்கமாக ஜெபித்துவிட்டு தூங்கி மறுநாள் எழுந்தபோது, வீட்டுக்குள் காவற்கோபுரம் பத்திரிகை ஒன்றைக் கண்டேன். . . . கதவு இடுக்கு வழியாக உள்ளே போடப்பட்டிருந்தது.” விரைவில் அவன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் இவ்வாறு கூறுகிறான்: “வாழ்க்கையில் முதல் முறையாக நான் திருப்தியாக உணர்ந்தேன். . . . நம்பிக்கையின் ஒளிக் கீற்று என் உள்ளத்தில் பாய்ந்தது.” கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் ஒரே நம்பிக்கையை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் ஆட்களோடு வர்ஜல் சீக்கிரத்தில் சேர்ந்துகொண்டான்.
சாரோ லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவள், கிளாடிஸ் என்ற பெயர் கொண்ட ஒரு சாட்சி செய்த உதவியால் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டாள். சிறு பிள்ளைகளோடு சாரோ கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த கிளாடிஸ், மார்கெட் போய்வர அவளுக்கு உதவி செய்தாள். இலவச வீட்டு பைபிள் படிப்பை கிளாடிஸ் அறிமுகப்படுத்தியபோது சாரோ அதை ஏற்றுக்கொண்டாள். நல்லவர்கள் அனைவரும் பரலோகத்துக்குப் போவதில்லை, ஆனால் யெகோவா பூமியிலும்கூட நித்திய ஜீவனைக் கொடுத்து மனிதர்களை ஆசீர்வதிப்பார் என்பதை தன்னுடைய சொந்த பைபிளிலிருந்து கற்றுக்கொண்டபோது அவளுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. (சங்கீதம் 37:11, 29) சாரோவும் கடந்த 15 ஆண்டுகளாக இந்த நம்பிக்கையைக் குறித்து மற்றவர்களுக்கு சொல்லி வருகிறாள்.
ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கும் உண்மை மனதுள்ள ஆட்கள் முழு பூமியிலும் குடியிருப்பதை கற்பனை செய்து பாருங்கள்! இது ஒரு கனவல்ல. இதை யெகோவாவே வாக்குறுதி அளித்திருக்கிறார். தம்முடைய தீர்க்கதரிசியாகிய செப்பனியாவின் மூலம் கடவுள் இவ்வாறு அறிவித்துள்ளார்: ‘உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். . . . அவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சக நாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்களைப் பயப்படுத்துவார் இல்லை.’ (செப்பனியா 3:12, 13) இந்த வாக்குறுதி உங்களைக் கவர்ந்தால், பைபிளின் பின்வரும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள், நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”—செப்பனியா 2:3.