எந்த சக்தியாவது உண்மையில் மக்களை ஒன்றுசேர்க்க முடியுமா?
நீங்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சத்தியத்தை நேசிப்பவர்கள் ஏறக்குறைய எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்பதை ஒருவேளை ஒப்புக்கொள்வீர்கள். சத்தியத்தை மனதார நேசித்து அதைத் தேட விருப்பமுள்ளவர்களை இந்துக்களிலும் கத்தோலிக்கர்களிலும் யூதர்களிலும் பிற மதங்களிலும் காணலாம். ஆனாலும் மதம் மனித குலத்தைப் பிரிப்பதாகத்தான் தெரிகிறது. தவறான காரியங்களைச் செய்வதற்குக்கூட சிலர் மதத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். நல்லதையும் உண்மையையும் நேசிக்கிற நல்மனமுள்ள அனைத்து மதத்தவரும் ஒன்றாக சேருவது சாத்தியமா? ஒரே குறிக்கோளுக்காக அவர்களை ஒன்றாக கூட்டிச் சேர்க்க முடியுமா?
மதம்தான் மனிதர்களில் பெரும் பிரிவினைகளை உண்டுபண்ணி வருகிறது என்பதை பார்க்கும்போது எவ்வளவு வேதனையாக உள்ளது! அவற்றில் சில உதாரணங்களை கவனியுங்கள். இலங்கையில் இந்துக்கள் புத்த மதத்தினரோடு சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். புராட்டஸ்டன்டுகளும் கத்தோலிக்கர்களும் யூதர்களும் பல்வேறு சண்டைகளில் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். இந்தோனீஷியா, கோஸாவோ, செச்சென்னியா, போஸ்னியா ஆகிய இடங்களில் “கிறிஸ்தவர்கள்” முஸ்லீம்களோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மார்ச் 2000-ல், இரண்டு நாட்களாக நடந்த மத சண்டையில் நைஜீரிய மக்கள் 300 பேர் உயிரிழந்தனர். ஆம், மத பகைமை இந்த சண்டைகளுக்கு வெறித்தனத்தை ஊட்டியிருக்கிறது.
மதத்தின் பெயரில் இப்படிப்பட்ட தீமைகள் செய்யப்படுகையில் நல்மனமுள்ளோர் மனம்குழம்பி போகிறார்கள். உதாரணமாக, சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் பாதிரிமாரை சில சர்ச்சுகள் சகித்துக்கொள்வதைப் பார்க்கையில் சர்ச்சுக்குப் போகிறவர்கள் அநேகர் அதிர்ச்சியடைகிறார்கள். தங்களை கிறிஸ்தவ பிரிவுகள் என்று அழைத்துக்கொள்ளும் சில சர்ச்சுகளில் ஓரினப்புணர்ச்சி, கருச்சிதைவு ஆகிய விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவுவதைப் பார்க்கையில் அங்குள்ள மற்ற விசுவாசிகளுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது. மதம் மனிதகுலத்தை ஒன்றுபடுத்தவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் பின்வரும் அனுபவங்கள் காண்பிக்கும் விதமாக எல்லா மதங்களிலும் உண்மையிலேயே சத்தியத்தை நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சத்தியத்துக்காக அவர்களின் ஏக்கம்
ஃபிடிலியா மிகுந்த பக்தியுள்ள கத்தோலிக்க பெண். அவள் பொலிவியாவில் லா பாஸிலுள்ள சான் பிரான்ஸிஸ்கோ கத்தோலிக்க சர்ச்சை சேர்ந்தவள். மரியாளின் சிலைக்கு முன்னால் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிவாள், இயேசுவின் உருவம் பொறிக்கப்பட்ட சிலுவைக்கு முன்னால் மிகச் சிறந்த மெழுகுவர்த்திகளை வழக்கமாக ஏற்றி வைப்பாள். ஏழைகளுக்கு கொடுங்கள் என்று சொல்லி ஏராளமான உணவுப் பொருட்களை வாரந்தோறும் பாதிரியாரிடம் கொடுப்பாள். ஆனால் ஃபிடிலியாவுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்பே இறந்துவிட்டன. அந்த எல்லா குழந்தைகளும் லிம்போவின் இருளில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் என்று பாதிரியார் அவளிடம் சொன்னபோது, ‘கடவுள் அன்புள்ளவராக இருக்கிறாரென்றால், இதெல்லாம் எப்படி நடக்கும்?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
டாக்டராக இருக்கும் தாரா நேப்பாளத்திலுள்ள காட்மாண்டுவில் ஓர் இந்துவாக வளர்க்கப்பட்டாள். நூற்றாண்டுகளாக அவளுடைய மூதாதையர் கடைப்பிடித்து வந்த பழக்கத்தின்படி, அவள் இந்து கோவில்களுக்குச் சென்று தன் தெய்வங்களை வழிபட்டு வந்தாள், வீட்டிலும் விக்கிரகங்களை வைத்திருந்தாள். ஆனால், ஏன் இவ்வளவு துயரங்கள்? மக்கள் ஏன் மரிக்கிறார்கள்? போன்ற கேள்விகள் அவளுக்கு குழப்பமாயிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் அவளது மதத்தில் கிடைக்கவில்லை.
பான்யா தாய்லாந்தில் பாங்காக் என்ற இடத்தில் கால்வாய் பக்கமாக அமைந்திருந்த ஒரு வீட்டில் புத்த மதத்தில் வளர்க்கப்பட்டான். துன்பங்களுக்குக் காரணம் முற்பிறவியில் செய்த பாவமே என்றும், எல்லா ஆசைகளையும் அறவே விட்டொழித்தால் அதிலிருந்து விடுதலை பெறலாம் என்றும் அவனுக்கு போதிக்கப்பட்டது. உண்மை மனமுள்ள மற்ற புத்த மதத்தினருக்குப் போதிக்கப்படுவது போலவே, ஒவ்வொரு நாளும் காவி நிற அங்கியில் வந்து பிச்சைக் கேட்கும் பிக்குகளின் ஞானத்திற்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும் என்று அவனுக்கும் கற்பிக்கப்பட்டது. அவன் தியான பயிற்சிகளைச் செய்து புத்த விக்கிரகங்களால் தன்னை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவற்றை சேகரிக்க ஆரம்பித்தான். ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழே செயலிழந்தபோது, அற்புத சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புத்த துறவிமடங்களுக்குச் சென்றான். அவனுக்கு சுகமும் கிடைக்கவில்லை, ஆன்மீக அறிவொளியும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பொல்லாத ஆவிகளோடு தொடர்புகொண்டு அவற்றின் வலையில் சிக்கியிருந்தான்.
வர்ஜல் ஐக்கிய மாகாணங்களில் பிறந்தவன். கல்லூரியில் படிக்கும்போது கறுப்பர் இன முஸ்லீம்களின் இயக்கத்தில் சேர்ந்தான். அந்த இயக்கத்தின் பிரசுரங்களை மிகுந்த ஆர்வத்தோடு விநியோகித்து வந்தான், அவை வெள்ளையர்கள்தான் பிசாசு என்று அடித்துக்கூறின. அதனால்தான் வெள்ளையர்கள் கறுப்பர்களுக்கு எதிராக பயங்கரமான அட்டூழியங்களை செய்கிறார்கள் என்று அந்த இயக்கத்தினர் நினைத்தார்கள். இதை வர்ஜில் உண்மையில் நம்பினாலும், எல்லா வெள்ளையர்களுமே கெட்டவர்களாக இருக்க முடியுமா? பெரும்பாலும் பணத்தையே குறி வைத்து ஏன் பிரசங்கங்கள் செய்யப்படுகின்றன? என்பது போன்ற கேள்விகள் அவனுடைய மனதை நெருடின.
கத்தோலிக்கரே அதிகமாக இருக்கும் தென் அமெரிக்காவில் சாரோ வளர்ந்தபோதிலும், ஓர் உண்மையான புராட்டஸ்டன்டாக இருந்தாள். அவளைச் சுற்றி இருந்த விக்கிரகாராதனைக்கு விலகி இருந்தது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உணர்ச்சிகள் பொங்கிவழிந்த சர்ச் ஆராதனைகளுக்குச் செல்வது சாரோவுக்கு மிகவும் பிரியம். அவள் “அல்லேலூயா” என்று உரக்க கத்தி, அதற்குப்பின் நடைபெற்ற ஆடல் பாடலில் கலந்துகொண்டாள். தான் இரட்சிக்கப்பட்டுவிட்டதாகவும் மறுபடியும் பிறந்துவிட்டதாகவும் சாரோ உறுதியாக நம்பினாள். தன் வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை சர்ச்சுக்கு அனுப்பி வைத்தாள். மேலும், அவளுக்குப் பிடித்த டிவி சுவிசேஷகர் ஆப்பிரிக்காவிலுள்ள பிள்ளைகளுக்காக நன்கொடைகள் கேட்டபோது அவருக்கு பணம் அனுப்பிவைத்தாள். அன்புள்ள ஒரு கடவுள் ஏன் ஆத்துமாக்களை நரகத்தில் போட்டு வதைக்கிறார் என்று அவள் தன்னுடைய பாதிரியாரிடம் கேட்டபோது அவரிடம் திருப்தியான பதில் இல்லை என்பதை புரிந்துகொண்டாள். அவள் கொடுத்த நன்கொடைகள் ஆப்பிரிக்காவில் இருந்த பிள்ளைகளுக்கு உதவி செய்ய பயன்படுத்தப்படவில்லை என்பதையும் பின்னால் தெரிந்துகொண்டாள்.
வித்தியாசமான பின்னணிகளிலிருந்து வந்தபோதிலும் இவர்கள் ஐந்து பேருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் சத்தியத்தை நேசித்தார்கள், தங்களுடைய கேள்விகளுக்கு உண்மையான பதில்களைக் கண்டுபிடிக்க மனப்பூர்வமாக முயன்றார்கள். ஆனால் இவர்கள் உண்மையாகவே மெய்யான வணக்கத்தில் ஒன்றுபட முடியுமா? அடுத்த கட்டுரை அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்.
[பக்கம் 4-ன் படம்]
வித்தியாசப்பட்ட பின்னணியை சேர்ந்தவர்கள் ஒன்றுபடுவது உண்மையில் சாத்தியமா?
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
G.P.O., Jerusalem