ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
‘தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளது’
கதிரொளி வீசும் கரிபியன் தீவாகிய ஜமைக்காவில் பெரும்பாலோர் பைபிளை அறிந்தவர்கள். கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிள் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இருக்கும். தேவனுடைய வார்த்தை ‘ஜீவனும் வல்லமையும் உள்ளது’ என்பதை சிலர் அனுபவத்தில் அறிந்திருக்கிறார்கள். (எபிரெயர் 4:12) இந்த வல்லமை வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடும் தன்மை படைத்தது. இதைத்தான் பின்வரும் அனுபவம் காட்டுகிறது.
கிளிவ்லான்ட் அப்போதுதான் வேலையிலிருந்து வீடு திரும்பியிருந்தார். அந்தச் சமயம் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவருடைய வீட்டுக்கு வந்தார். வேதவசனங்களிலிருந்து சில குறிப்புகளை அவருக்கு சொன்ன பின்பு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை கொடுத்துவிட்டு சென்றார். கடவுளுடைய வார்த்தை அவருடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்தப் போகிறது என்பதை அப்போது அவர் அறியவில்லை.
சரியான வழியில் கடவுளை வணங்குவதற்கு தனக்கு உதவுமாறு கிளிவ்லான்ட் ஒவ்வொரு நாளும் மூன்று முறை ஜெபித்து வந்தார். தன் பெற்றோர் சரியான வழியில் கடவுளை வணங்கவில்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் மற்ற மதங்களை ஆராய்ந்த போதோ இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அவர்கள் சத்தியத்தை அறிந்திருப்பார்களா என்பதில் இவருக்கு சந்தேகம். இந்தச் சந்தேகத்தால் தயக்கமாக இருந்தபோதிலும், தன் வீட்டுக்கு வந்த சாட்சியிடம் பைபிள் படிக்க ஒப்புக்கொண்டார். ஏன்? ஏனென்றால் சாட்சிகள் சொல்வது தவறு என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கே!
இரண்டு பெண்களோடு தவறான உறவு வைத்திருந்தது கடவுளுக்கு பிடிக்காதது என்பதை கிளிவ்லான்ட் சீக்கிரத்தில் கற்றுக்கொண்டார். (1 கொரிந்தியர் 6:9, 10) இரண்டு முறை பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டவுடனேயே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப் பெண்களோடு வைத்திருந்த உறவை துண்டித்துவிட்டார். ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வர ஆரம்பித்தார். ஆனால் மற்றொரு சோதனை வந்துவிட்டது.
கிளிவ்லான்ட் உள்ளூர் கால்பந்தாட்ட குழுவில் விளையாடிக் கொண்டிருந்தார்; கூட்டங்களுக்கு செல்ல அந்த விளையாட்டு தடையாக இருந்தது. அவர் என்ன செய்வார்? குழுவிலிருந்த ஆட்டக்காரர்கள், பயிற்சியாளர், நண்பர்கள் ஆகியோர் இவரை மிகவும் வற்புறுத்தியபோதிலும், கால்பந்தாட்டக் குழுவிலிருந்து விலக தீர்மானித்தார். ஆம், கடவுளுடைய வார்த்தை வல்லமையோடு செயல்பட ஆரம்பித்தது, அவருக்கு நன்மை பயக்கும் விதத்தில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது!
தான் பெற்ற பைபிள் அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தபோது கடவுளுடைய வார்த்தைக்கு இருந்த வல்லமை மறுபடியும் தெரிய வந்தது. (அப்போஸ்தலர் 1:8) இதனால் அவருடன் முன்பு விளையாடிய ஆட்டக்காரர்களில் இருவர் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். கிளிவ்லான்ட் நற்செய்தியை அறிவிப்பதற்கு தகுதி பெற்றப்பின், மற்றவர்களுக்கு உதவ கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தியதால் ஊழியத்தில் அதிக சந்தோஷத்தை அனுபவித்தார்.
கடவுளுடைய வார்த்தையின் வல்லமையால் தொடர்ந்து தூண்டப்பட்டதால் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அதை அடையாளப்படுத்தினார். அவர் இப்போது முழுநேர ஊழியராகவும் சபையில் உதவி ஊழியராகவும் இருக்கிறார்.
ஜமைக்காவிலும் உலகம் முழுவதிலும், கடவுளுடைய வார்த்தை ‘ஜீவனும் வல்லமையும் உள்ளது’ என்பதை ஆயிரக்கணக்கானோர் அறிய வந்திருக்கிறார்கள்.
[பக்கம் 8-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஜமைக்கா
[படத்திற்கான நன்றி]
வரைபடமும் பூமியும்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.