மதத்தின் பேரில் துன்புறுத்துவது—ஏன்?
வேற்று மதத்தினரை துன்புறுத்த வேண்டும் என நீங்கள் நினைப்பீர்களா? மற்றவர்களுடைய உரிமைகளில் தலையிடாத வரையில் அவர்களை துன்புறுத்தக் கூடாதென நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால் மத துன்புறுத்துதலுக்கு ஒரு நீண்ட சரித்திரமே உள்ளது, அது இன்றும்கூட ஓயவில்லை. உதாரணமாக, 20-ம் நூற்றாண்டு முழுவதிலும் ஐரோப்பா மற்றும் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகள் பலரின் உரிமைகள் அடிக்கடி பறிக்கப்பட்டன, அவர்கள் ஈவிரக்கமின்றி கொடூரமாக நடத்தப்பட்டனர்.
அந்தக் காலப்பகுதியில், அதாவது ஐரோப்பாவில் நிலவிய இரண்டு முக்கிய சர்வாதிகார ஆட்சியில், யெகோவாவின் சாட்சிகளை மூர்க்கத்தனமாக, திட்டமிட்டு துன்புறுத்தியதற்கு ஒரு முடிவே இல்லாததுபோல் தோன்றியது. ஆம், அந்தத் துன்புறுத்துதல் வெகு காலத்திற்கு நீடித்தது. மதத்தின் நிமித்தம் அவர்கள் அனுபவித்த இந்தக் கொடுமைகள் நமக்கு எதைக் கற்பிக்கின்றன? கஷ்டங்களை அவர்கள் மேற்கொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
“உலகத்தின் பாகமல்ல”
யெகோவாவின் சாட்சிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு சமாதானமாக வாழ விரும்புகிறவர்கள், ஒழுக்கத்தில் செம்மையானவர்கள். அவர்கள் அரசாங்கங்களோடு நேருக்கு நேர் மோதுவதோ தகராறு பண்ணுவதோ இல்லை, அல்லது தியாகிகளாய் மரிப்பதற்காக துன்புறுத்துதலை தூண்டிவிடுவதும் இல்லை. இந்தக் கிறிஸ்தவர்கள் அரசியலில் நடுநிலை வகிக்கிறார்கள். “நான் உலகத்தின் பாகமல்லாதது போல அவர்களும் [என்னைப் பின்பற்றுகிறவர்களும்] உலகத்தின் பாகமல்ல” என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக நடக்கிறார்கள். (யோவான் 17:16, NW) யெகோவாவின் சாட்சிகளுடைய நடுநிலை வகிப்புக்கு பெரும்பாலான அரசாங்கங்களும் ஒப்புதல் தெரிவிக்கின்றன. ஆனால், கிறிஸ்தவர்கள் உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது என்ற பைபிள் நியமத்திற்கு சர்வாதிகார ஆட்சியாளர்கள் கொஞ்சமும் மதிப்பு காட்டவில்லை.
நவம்பர் 2000-ல் ஜெர்மனியிலுள்ள ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது இதற்கான காரணம் விளக்கப்பட்டது. “அடக்குமுறையும் உரிமைகளை வலியுறுத்தலும்: நேஷனல் சோஷியலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சிகளில் யெகோவாவின் சாட்சிகள்” என்ற பொருளில் அந்த மாநாடு நடத்தப்பட்டது. சர்வாதிகார ஆட்சியைப் பற்றிய ஆய்வு நடத்தும் ஹானா-ஆரென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் க்ளேமன்ஸ் ஃபால்ன்ஹால்ஸ் குறிப்பிட்டதாவது: “சர்வாதிகார அரசுகள் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தங்கள் ஆட்சிக்கு முழுமையாக கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.”
உண்மை கிறிஸ்தவர்கள் தங்கள் பற்றுறுதியை யெகோவா தேவனுக்கு மாத்திரம் காட்டுவதாக உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்; ஆகவே மனித அரசாங்கத்திற்கு அவர்கள் ‘முழுமையான’ கீழ்ப்படிதலை காண்பிக்க முடியாது. சில சமயங்களில், தங்கள் நம்பிக்கைகளும் நாட்டின் கோரிக்கைகளும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இருப்பதை சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகள் கண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சமயங்களில் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் சொன்ன அதே நியமத்தைத்தான் யெகோவாவின் சாட்சிகளும் பல சந்தர்ப்பங்களில் பின்பற்றியிருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 5:29.
ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல் அரசியல் விவகாரங்களில் நடுநிலை காத்தபோது மூர்க்கத்தனமான துன்புறுத்துதலை அனுபவித்தார்கள். அவர்கள் அதை எப்படி சகித்தார்கள்? எங்கிருந்து அவர்களுக்கு பலம் கிடைத்தது? இதற்கு அவர்களே பதிலளிக்கட்டும். அவர்களுடைய அனுபவங்களிலிருந்து யெகோவாவின் சாட்சிகளும் மற்றவர்களும் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைக் காணலாம்.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
20-ம் நூற்றாண்டின் இரண்டு சர்வாதிகார ஆட்சிகளின் போதும் ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் மிருகத்தனமாக தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டார்கள்
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“சர்வாதிகார அரசுகள் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தங்கள் ஆட்சிக்கு முழுமையாக கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.”—டாக்டர் க்ளேமன்ஸ் ஃபால்ன்ஹால்ஸ்
[பக்கம் 4-ன் படம்]
குஸ்ஸரோ குடும்பத்தினர் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காததால் அவர்களுடைய சுதந்தரம் பறிக்கப்பட்டது
[பக்கம் 4-ன் படம்]
யோஹானஸ் ஹாம்ஸ் தன் நம்பிக்கைகளின் நிமித்தம் நாசி சிறையில் கொலை செய்யப்பட்டார்