துன்புறுத்துதலை அவர்கள் வென்றார்கள்
டென்மார்க்கில் 1911-ல் ஃப்ரீடா யெஸ் என்பவர் பிறந்தார்; அங்கிருந்து தன் பெற்றோருடன் வடக்கு ஜெர்மனியிலுள்ள ஹூஸும் என்ற இடத்திற்கு குடிமாறினார். வருடங்கள் பல கடந்தன; மாக்டிபர்க்கில் அவருக்கு வேலை கிடைத்தது. 1930-ல் அவர் முழுக்காட்டுதல் பெற்று ஒரு பைபிள் மாணாக்கரானார்—யெகோவாவின் சாட்சிகள் அப்போது அப்படித்தான் அறியப்பட்டார்கள். 1933-ல் ஹிட்லர் ஆட்சிக்கு வரவே ஃப்ரீடாவுக்கு கஷ்டகாலம் ஆரம்பித்தது. 23 வருடங்கள் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்; ஒன்றல்ல, இரண்டு சர்வாதிகார ஆட்சிகளின் போது அவர் இந்தக் கொடுமைக்கு ஆளானார்.
மார்ச், 1933-ல் ஜெர்மானிய அரசு ஒரு பொதுத் தேர்தலை நடத்தியது. “தேர்தலில் தங்கள் முதலமைச்சரும் தலைவருமான அடால்ஃப் ஹிட்லருக்கு ஆதரவளிக்கும்படி நேஷனல் சோஷியலிஸ்ட்டுகள் பெருவாரியான ஜனங்களை கட்டாயப்படுத்தின” என ஹேம்பர்க்குக்கு அருகிலுள்ள நாயன்காமா சித்திரவதை முகாம் நினைவு அருங்காட்சியகத்தின் தலைவரான டாக்டர் டெட்லெஃப் கார்பெ கூறுகிறார். யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் அறிவுரையைப் பின்பற்றி அரசியலில் நடுநிலை வகித்தனர், ‘உலகத்தின் பாகமாக இல்லாதிருக்க’ தீர்மானித்தனர்; அதனால் அவர்கள் ஓட்டு போடவில்லை. அதன் விளைவு? அவர்களுடைய வேலைக்கு தடை விதிக்கப்பட்டது.—யோவான் 17:16, NW.
ஃப்ரீடா கிறிஸ்தவ ஊழியம் சம்பந்தப்பட்ட வேலைகளை ரகசியமாக செய்து வந்தார். காவற்கோபுர பத்திரிகையை அச்சிடுவதற்கும் உதவி புரிந்தார். “சித்திரவதை முகாம்களிலுள்ள சக விசுவாசிகளுக்கு சில பத்திரிகைகள் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டன” என்று அவர் சொல்கிறார். 1940-ல் அவர் கைதாகி கெஸ்டாப்போ என்ற ரகசிய போலீசாரால் விசாரணை செய்யப்பட்டார். அதற்குப் பின்பு ஒரு தனி அறையில் மாதக் கணக்கில் அடைத்துப் போடப்பட்டார். அப்போது அவரால் எப்படி சகித்திருக்க முடிந்தது? “ஜெபம்தான் எனக்கிருந்த ஒரே தஞ்சம். விடியற்காலையிலேயே ஜெபம் செய்ய ஆரம்பித்து விடுவேன், அப்படி நாள் பூராவும் பலமுறை ஜெபம் செய்வேன். ஜெபம் எனக்கு பலத்தை தந்தது, அதோடு கவலையில் மூழ்கிவிடாமல் இருக்கவும் உதவியது” என அவர் சொல்கிறார்.—பிலிப்பியர் 4:6, 7.
ஃப்ரீடா விடுதலை செய்யப்பட்டார், ஆனால் 1944-ல் ரகசிய போலீசார் மீண்டும் அவரை கைது செய்தனர். இம்முறை ஏழு ஆண்டு தண்டனையாக வால்ட்ஹைம் சிறையில் போடப்பட்டார். அங்கு என்ன நடந்தது என்பதை அவர் தொடர்ந்து சொல்கிறார்: “மற்ற பெண்களோடு சேர்ந்து குளியலறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும்படி சிறை காவலர்கள் என்னிடம் சொன்னார்கள். அங்கே, செக்கோஸ்லோவாகியாவைச் சேர்ந்த ஒரு கைதி கூடவே நான் இருந்ததால் அந்தப் பெண்ணிடம் யெகோவாவைப் பற்றியும் என் நம்பிக்கையைப் பற்றியும் நிறைய பேசினேன். அப்படிப்பட்ட சம்பாஷணைகள்தான் என் விசுவாசத்தை பலப்படுத்தின.”
தற்காலிக விடுதலை
மே, 1945-ல் சோவியத் துருப்புகள் வால்ட்ஹைம் சிறைக் கைதிகளை விடுதலை செய்தன. அப்போது ஃப்ரீடா விடுதலை பெற்று மாக்டிபர்க் போனார், அங்கே ஊழியத்தை தொடர்ந்தார்; ஆனால் இந்நிலை அதிக காலத்திற்கு நீடிக்கவில்லை. ஏனென்றால் மத வேற்றுமையின் பேரில், இம்முறை சோவியத் ஆக்குபேஷனல் ஸோன் அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளை குறிவைக்க ஆரம்பித்தனர். சர்வாதிகாரத்தின் பேரில் ஆய்வு நடத்தும் ஹானா-ஆரென்ட்-இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த கெரால்ட் ஹாக்கி இவ்வாறு எழுதினார்: “ஜெர்மனியில் இரண்டு சர்வாதிகார ஆட்சியின்போதும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டவர்களில் யெகோவாவின் சாட்சிகளும் உட்படுவர்.”
இந்த மத வேற்றுமை மீண்டும் தலைதூக்கியதற்கு காரணம் என்ன? பழையபடி, கிறிஸ்தவ நடுநிலை வகிப்பே அதற்கு முக்கிய காரணம். 1948-ல் கிழக்கு ஜெர்மனியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. “அந்தப் பொது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்ததுதான் [யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படுவதற்கு] அடிப்படை காரணமாக இருந்தது” என ஹாக்கி கூறுகிறார். ஆகஸ்ட் 1950-ல் கிழக்கு ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர், அதில் ஃப்ரீடாவும் ஒருவர்.
ஃப்ரீடா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது; ஆறு ஆண்டு சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. “இந்த முறை சிறையில் உடன் விசுவாசிகள் என்னுடன் இருந்ததால் அவர்களுடைய கூட்டுறவு எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது.” 1956-ல் விடுதலை செய்யப்பட்டபின் அவர் மேற்கு ஜெர்மனிக்கு இடம்மாறிச் சென்றார். 90 வயதான ஃப்ரீடா இப்போது ஹூஸுமில் வாழ்ந்து வருகிறார்; மெய்க் கடவுள் யெகோவாவை இன்றும் சேவித்து வருகிறார்.
இரண்டு சர்வாதிகார ஆட்சிகளின்போது ஃப்ரீடா 23 ஆண்டுகள் துன்புறுத்துதலை சகித்தார். “நாசிகள் என் சரீர பலத்தை குலைத்துப்போட முற்பட்டார்கள்; கம்யூனிஸ்ட்டுகளோ என மனோ பலத்தை முறித்துப்போட முற்பட்டார்கள். அப்போது எனக்கு எங்கிருந்து பலம் கிடைத்தது? சுதந்தரமாக இருந்த காலத்தில் நல்ல பைபிள் படிப்பு பழக்கங்களை வைத்திருந்ததும், தன்னந்தனியாக போடப்பட்டிருந்த சமயங்களில் தவறாமல் ஜெபம் செய்ததும், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சக விசுவாசிகளோடு கூட்டுறவு வைத்திருந்ததும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என் நம்பிக்கைகளை பிறரிடம் பகிர்ந்து கொண்டதுமே எனக்குத் தேவையான பலத்தை தந்தது” என்று அவர் சொல்கிறார்.
ஹங்கேரியில் பாஸிச கொள்கை
ஹங்கேரியிலும் யெகோவாவின் சாட்சிகள் பல ஆண்டுகளாக மத வேற்றுமையை சகித்து வந்திருக்கின்றனர். சிலர் அந்த இரு சர்வாதிகார ஆட்சிகளில் மட்டுமல்ல, மற்றொரு ஆட்சியிலும் துன்புறுத்துதலை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு துன்புறுத்துதலை சகித்தவர்களில் ஆடாம் ஸிங்கரும் ஒருவர். இவர் 1922-ல் ஹங்கேரியிலுள்ள பாக்ஷ் என்ற டவுனில் பிறந்தவர், புராட்டஸ்டன்ட்டாக வளர்க்கப்பட்டவர். 1937-ல் பைபிள் மாணாக்கர் சிலர் ஆடாமின் வீட்டிற்கு வந்து பைபிள் விஷயங்களை அவரிடம் சொன்னார்கள்; கேட்டவுடனேயே அதில் ஆர்வமானார். பைபிளிலிருந்து பலவற்றை கற்றுக்கொண்ட போது சர்ச்சின் போதனைகளுக்கும் பைபிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உண்மை அவருக்கு பளிச்சிட்டது. ஆகவே, அவர் புராட்டஸ்டன்ட் சர்ச்சிலிருந்து விலகி, பைபிள் மாணாக்கரோடு சேர்ந்து வெளி ஊழியத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
ஹங்கேரியில் பாஸிசம் கொடிகட்டி பறந்த சமயம் அது. ஆடாம் வீடு வீடாக பிரசங்கித்து வருவதை போலீசார் பலமுறை கவனித்ததால் அவரை விசாரிப்பதற்காக பிடித்துக்கொண்டு போனார்கள். யெகோவாவின் சாட்சிகளுக்கு மேலும் மேலும் பல கஷ்டங்களை கொடுத்தார்கள்; 1939-ல் அவர்களுடைய வேலை தடைசெய்யப்பட்டது. 1942-ல் ஆடாம் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டுபோகப்பட்டார்; அங்கு அவரை ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கினார்கள். இந்த 19 வயதில், வேதனையையும் மாதக்கணக்கில் சிறைவாசத்தையும் அவரால் எப்படி சகித்துக்கொள்ள முடிந்தது? “வீட்டில் இருந்த வரையில் நான் பைபிளை கவனமாக படித்ததால்தான் யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய முக்கியமான அடிப்படை காரியங்களை நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது” என்கிறார். சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகுதான் அவர் யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றார். ஆகஸ்ட் 1942-ல், கும்மிருட்டாக இருந்தபோது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஆற்றில் முழுக்காட்டுதல் பெற்றார்.
ஹங்கேரி சிறையிலும் செர்பியா கட்டாய உழைப்பு முகாமிலும்
இதற்கிடையே இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியனுக்கு விரோதமான போரில் ஜெர்மனியுடன் ஹங்கேரி கூட்டு சேர்ந்தது. அதனால் 1942-ம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் கட்டாய ராணுவ சேவைக்கு ஆடாமின் பெயரும் சேர்க்கப்பட்டது. “நான் பைபிளிலிருந்து கற்றிருக்கிறபடி இந்த ராணுவ சேவையை என்னால் செய்ய முடியாது என்று சொன்னேன். நடுநிலை வகிப்பதை பற்றியும் விளக்கினேன்.” இதனால் 11 வருட சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் அவரை அதிக நாட்களுக்கு ஹங்கேரியில் வைக்கவில்லை.
1943-ல், சுமார் 160 யெகோவாவின் சாட்சிகளை வளைத்துப் பிடித்து படகுகளில் ஏற்றி டேன்யூப் ஆற்றின் வழியே செர்பியாவுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஆடாமும் ஒருவர். செர்பியாவில் இந்த சிறைக்கைதிகள் இப்போது ஹிட்லருடைய நாசி ஆட்சியின் கீழ் இருந்தார்கள். அவர்கள் பார் என்ற கட்டாய உழைப்பு முகாமுக்குள் போடப்பட்டு, தாமிர சுரங்கத்தில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சுமார் ஓராண்டுக்கு பிறகு அவர்கள் மறுபடியும் ஹங்கேரிக்கே அனுப்பப்பட்டார்கள். அங்கு போனபின் 1945 வசந்தகாலத்தில் சோவியத் துருப்புகள் ஆடாமை விடுதலை செய்தன.
கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஹங்கேரி
அந்த விடுதலையும் அதிக காலத்திற்கு நீடிக்கவில்லை. போருக்கு முன்பு பாஸிசவாதிகள் செய்தது போலவே, 1940-களின் பிற்பகுதியில் ஹங்கேரியிலிருந்த கம்யூனிஸ்ட் அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை தடை செய்தனர். 1952-ல் ஆடாமுக்கு 29 வயது; திருமணமாகி இரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்டன. அப்போது அவர் மறுபடியும் ராணுவத்தில் சேர மறுத்ததால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையின் போது, “நான் ராணுவத்தில் சேர மறுத்தது இது முதல் தடவை அல்ல. போர் நடந்த சமயத்தில் என்னை சிறையில் தள்ளியதும் செர்பியாவுக்கு நாடுகடத்தியதும் இதே காரணத்திற்காகத்தான். என் மனசாட்சியின் நிமித்தமே ராணுவத்தில் சேர மறுக்கிறேன். நான் ஒரு யெகோவாவின் சாட்சி, அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிப்பவன்” என்று ஆடாம் எவ்வளவோ விளக்கிச் சொன்னபோதிலும் அவருக்கு எட்டு வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது, பிற்பாடு அது நான்கு வருடங்களாக குறைக்கப்பட்டது.
பைபிள் மாணாக்கர் முதன் முறையாக ஆடாமின் பெற்றோரை சந்தித்ததிலிருந்து சுமார் 1975-ம் ஆண்டுவரை 35 ஆண்டுகளுக்கு மேலாக மத வேற்றுமை அவருக்கு ஒரு தொடர்கதையாகவே இருந்திருக்கிறது. அந்தக் காலப்பகுதி முழுவதிலும் ஆறு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின்படி 23 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது; அந்த ஆண்டுகளில் குறைந்தபட்சம் பத்து சிறைகளிலும் முகாம்களிலும் அடைக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு ஹங்கேரியில் பாஸிச ஆட்சி, செர்பியாவில் ஜெர்மன் நேஷனல் சோஷியலிஸ்ட் ஆட்சி, ஹங்கேரியில் பனிப் போரின் போது கம்யூனிஸ்ட் ஆட்சி என மூன்று சர்வாதிகார ஆட்சிகளின் போதும் அவர் ஒன்றன்பின் ஒன்றாக பல துன்புறுத்துதல்களை சகித்தார்.
ஆடாம் தன் சொந்த ஊரான பாக்ஷில் இப்போதும் கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்து வருகிறார். கஷ்டங்களை அந்தளவுக்கு வெற்றிகரமாக சமாளிக்க உதவியது அவருக்கு இருந்த அசாதாரண திறமைகளா? இல்லை. அதை எப்படி சமாளித்தார் என்பதை அவர் விளக்குகிறார்:
“பைபிள் படிப்பு, ஜெபம், சக விசுவாசிகளுடன் கூட்டுறவு இவையே சகித்திருப்பதற்கு அடிப்படையாக இருந்தன. ஆனால் வேறு இரண்டு காரியங்களையும் வலியுறுத்திக் காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, யெகோவாவே பலத்தின் ஊற்றுமூலம். அவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததுதான் என் உயிர்மூச்சு. இரண்டாவதாக, ரோமர் 12-ம் அதிகாரத்தில் ‘பழி வாங்காதீர்கள்’ என சொல்லப்பட்ட அறிவுரை எப்போதும் என் மனதில் இருந்தது. ஆகவே என் மனதில் ஒருபோதும் வன்மம் வைக்கவில்லை. என்னை துன்புறுத்தியவர்களை பழிவாங்குவதற்கு எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன, ஆனால் நான் பழிவாங்கவில்லை. யெகோவா தரும் பலத்தை தீமைக்குத் தீமை செய்ய நாம் பயன்படுத்தக் கூடாது.”
அனைத்து துன்புறுத்துதல்களுக்கும் முடிவு
ஃப்ரீடாவும் ஆடாமும் இப்போது எந்த இடையூறுமின்றி யெகோவாவை வணங்க முடிகிறது. என்றாலும் அவர்கள் எதிர்ப்பட்டதைப் போன்ற அனுபவங்கள், மத துன்புறுத்துதல்களைப் பற்றி எதைத் தெரிவிக்கின்றன? மத துன்புறுத்துதலால் எந்த பலனும் இல்லை என்பதை தெரிவிக்கின்றன; அதுவும் உண்மை கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதால் எந்த பலனுமில்லை. நேரம், பணம், முயற்சி என ஏகப்பட்ட வளங்களை செலவிட்டு, யெகோவாவின் சாட்சிகளை கடுமையாக துன்புறுத்திய போதும், அதன் நோக்கம் நிறைவேறவில்லை. ஒருகாலத்தில் இரண்டு சர்வாதிகார ஆட்சிகள் செல்வாக்கு செலுத்திய ஐரோப்பாவில் இப்போது யெகோவாவின் சாட்சிகள் தழைத்தோங்குகிறார்கள்.
துன்புறுத்துதலை எதிர்ப்பட்டபோது யெகோவாவின் சாட்சிகள் எப்படி பிரதிபலித்தார்கள்? ஃப்ரீடா, ஆடாம் இவர்களின் அனுபவங்கள் காட்டுகிறபடி, “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” என்ற பைபிளின் அறிவுரையை அவர்கள் பின்பற்றினார்கள். (ரோமர் 12:21) நிஜமாகவே தீமையை நன்மையால் வெல்ல முடியுமா? கடவுள் மீது பலமான விசுவாசம் இருந்தால் நிச்சயமாக முடியும். ஐரோப்பாவில் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்துதலை வென்றது கடவுளுடைய ஆவிக்கு கிடைத்த வெற்றியாகும். அது, விசுவாசத்தினால் விளைந்த நன்மைக்கு ஓர் அத்தாட்சியாகும்; மனத்தாழ்மையான கிறிஸ்தவர்களில் பரிசுத்த ஆவி உண்டாக்கும் கனியின் ஓர் அம்சமே அந்த விசுவாசம். (கலாத்தியர் 5:22, 23) வன்முறை நிறைந்த இந்த உலகில், நாம் எல்லாரும் மனதில் நிறுத்திப் பார்ப்பதற்கு இது ஒரு பாடமாக திகழ்கிறது.
[பக்கம் 5-ன் படங்கள்]
ஃப்ரீடா யெஸ் (இப்போது தீலி)—கைது செய்யப்பட்டபோதும், இப்போதும்
[பக்கம் 7-ன் படங்கள்]
ஆடாம் ஸிங்கர்—சிறைவாசத்தின்போதும், இப்போதும்