உறுதியாக நிலைத்திருப்பீர், ஜீவனுக்கான ஓட்டத்தில் வெற்றி பெறுவீர்
கொந்தளிக்கும் கடலில் பயணிக்க வேண்டியிருந்தால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? சிறிய படகையா அல்லது உறுதியான, நன்கு கட்டப்பட்ட கப்பலையா? கப்பலைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை; ஏனெனில் பொங்கியெழும் அசுர அலைகளை சமாளித்து லாவகமாக செல்ல அதால் முடியும்.
கொந்தளிப்பும் ஆபத்தும் மிக்க இந்த உலகில் பயணிக்கையில் மனதைக் குழப்பும் சவால்களை நாம் எதிர்ப்படுகிறோம். உதாரணமாக, இளைஞர்கள் சிலசமயங்களில் இந்த உலகின் குழப்பமூட்டும் கருத்துக்களுக்கும் போக்குகளுக்கும் இடையே சிக்கி திக்கு தெரியாமல் தவிக்கிறார்கள், பாதுகாப்பற்றவர்களாய் உணருகிறார்கள். சமீபத்தில் கிறிஸ்தவ வழியைப் பின்பற்ற ஆரம்பித்தவர்கள் கொஞ்சம் உறுதியற்றிருப்பதாகவே இன்னும் உணரலாம். பல ஆண்டுகளாக உறுதியோடிருந்து கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்துவரும் சிலரும்கூட தங்களுடைய நம்பிக்கைகள் இன்னும் முழுமையாக ஈடேறவில்லையே என நினைத்துக் கொண்டிருக்கலாம்; இது அவர்களுடைய விசுவாசத்திற்கு ஒரு பரீட்சையே.
இப்படிப்பட்ட எண்ணங்கள் புதிதல்ல. மோசே, யோபு, தாவீது போன்ற யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் சில சமயங்களில் நிலைகுலைந்து போனார்கள். (எண்ணாகமம் 11:14, 15; யோபு 3:1-4; சங்கீதம் 55:4) ஆனாலும், அவர்கள் தங்கள் வாழ்நாள் பூராவும் யெகோவாவுக்கு உறுதியான பக்தியைக் காண்பித்தார்கள். அதேபோல் உறுதியோடிருக்க அவர்களுடைய சிறந்த முன்மாதிரி நம்மை ஊக்குவிக்கிறது; ஆனால் பிசாசாகிய சாத்தானோ நித்திய ஜீவனுக்கான ஓட்டத்திலிருந்து நம்மை திசைத் திருப்பிவிட விரும்புகிறான். (லூக்கா 22:31) ஆகவே, “அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய்” நாம் எப்படி உறுதியோடிருக்கலாம்? (1 பேதுரு 5:9, பொது மொழிபெயர்ப்பு) சக விசுவாசிகளை நாம் எப்படி பலப்படுத்தலாம்?
நாம் உறுதியோடிருக்க யெகோவா விரும்புகிறார்
நாம் யெகோவாவுக்கு உண்மையோடிருந்தால், நம் உறுதியைக் காத்துக்கொள்ள அவர் எப்போதும் நமக்கு பக்க பலமாக இருப்பார். சங்கீதக்காரனாகிய தாவீது பல இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்ப்பட்டார்; ஆனால் அவர் கடவுளை நம்பியதால், ‘பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் [யெகோவா] தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தினார்’ என அவரால் பாட முடிந்தது.—சங்கீதம் 40:2.
‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவதற்கு’ யெகோவா நம்மை பலப்படுத்துகிறார்; அதன் மூலம் நாம் ‘நித்திய ஜீவனை உறுதியாகப் பற்றிக்கொள்ள’ முடியும். (1 தீமோத்தேயு 6:12) உறுதியோடிருந்து ஆவிக்குரிய போரில் வெற்றிவாகை சூடுவதற்கான வழிகளையும் அவர் நமக்கு காட்டுகிறார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” என சக கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். அதோடு, ‘பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்’ என்றும் அவர் உற்சாகப்படுத்தினார். (எபேசியர் 6:10-17) ஆனால் என்னென்ன சூழ்நிலைகளில் நாம் நிலைகுலைந்து போகலாம்? அத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளை நாம் எப்படி சமாளிக்கலாம்?
உறுதியிழக்க செய்பவற்றைக் குறித்து ஜாக்கிரதை
நாம் செய்யும் தீர்மானங்கள் நாளடைவில் நம் கிறிஸ்தவ உறுதிக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் என்ற அடிப்படை உண்மையை மனதில் வைப்பது ஞானமானது. வேலை, மேற்படிப்பு, திருமணம் போன்ற விஷயங்களை தீர்மானிக்கும் கட்டத்தை இளைஞர்கள் எதிர்ப்படுகிறார்கள். பெரியவர்களோ, வேறு இடத்திற்கு குடிமாறிச் செல்வதை அல்லது தற்போதைய வேலையுடன் மற்றொரு வேலையையும் தேடிக்கொள்வதை குறித்து தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். நேரத்தை பயன்படுத்துவது சம்பந்தமாகவும் வேறுபல விஷயங்கள் சம்பந்தமாகவும் தினமும் நாம் தீர்மானங்களை செய்கிறோம். கடவுளுடைய ஊழியர்களாக நம் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் ஞானமான தீர்மானங்களை எடுக்க எது நமக்கு உதவும்? ரொம்ப காலமாகவே கிறிஸ்தவராக இருக்கும் ஒரு பெண் இவ்வாறு சொன்னார்: “தீர்மானம் எடுக்கும் போதெல்லாம் உதவிக்காக யெகோவாவிடம் ஜெபிக்கிறேன். பைபிள், கிறிஸ்தவ கூட்டங்கள், மூப்பர்கள், பைபிள் பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலமாக கிடைக்கும் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிப்பது முக்கியம் என்பதையும் நம்புகிறேன்.”
தீர்மானங்கள் செய்யும்போது நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியம்: ‘இன்று நான் செய்யும் தீர்மானங்களைப் பற்றி ஐந்து அல்லது பத்து வருஷத்துக்கு பின் சந்தோஷப்படுவேனா அல்லது இப்படிப்பட்ட தீர்மானங்கள் செய்ததை நினைத்து வருத்தப்படுவேனா? என்னுடைய தீர்மானங்கள் ஆவிக்குரிய ரீதியில் என் உறுதியை இழக்கச் செய்யாமல் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள முயலுகிறேனா?’—பிலிப்பியர் 3:16.
சோதனைகளுக்கு விட்டுக்கொடுத்துவிடுவது அல்லது கடவுளுடைய சட்டங்களை கிட்டத்தட்ட மீறும் அளவுக்கு சென்று விடுவது முழுக்காட்டுதல் பெற்ற சிலரை உறுதியற்ற வாழ்க்கைக்கு வழிநடத்தியிருக்கிறது. மனந்திரும்பாமல் தவறான போக்கை தொடர்ந்து பின்பற்றியதால் சபையிலிருந்து நீக்கப்பட்ட சிலர் மீண்டும் சபைக்குள் வருவதற்கு கடுமையாக பிரயாசப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சபைக்குள் வந்த கொஞ்ச நாட்களிலேயே அதே தவறை செய்வதால் மீண்டும் சபை நீக்கம் செய்யப்படுகிறார்கள். ‘தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக்கொள்வதற்கு’ கடவுளுடைய உதவிக்காக அவர்கள் ஜெபிக்காததுதானே அதற்கு காரணமாக இருக்க முடியும்? (ரோமர் 12:9; சங்கீதம் 97:10) நாம் அனைவருமே நம் ‘பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துவது’ அவசியம். (எபிரெயர் 12:13) ஆகவே, ஆன்மீக ஸ்திரத்தன்மையை காத்துக்கொள்வதற்கு உதவும் சில குறிப்புகளை நாம் கவனிக்கலாம்.
கிறிஸ்தவ நடவடிக்கை மூலம் உறுதியோடிருத்தல்
ஜீவனுக்கான நம் ஓட்டத்தில் ஒரே சீராக ஓடுவதற்கு ஒரு வழி ராஜ்ய பிரசங்க வேலையில் அதிகமாக ஈடுபடுவதாகும். ஆம், கடவுளுடைய சித்தத்தை செய்வதில் நம் இருதயத்தையும் மனதையும் ஒருமுகப்படுத்தி, நித்திய ஜீவன் என்ற பரிசில் உறுதியாக ஊன்றியிருக்க செய்வதற்கு கிறிஸ்தவ ஊழியம் மதிப்புமிக்க ஓர் ஏதுவாக இருக்கிறது. இதன் சம்பந்தமாக, கொரிந்தியர்களை பவுல் இவ்வாறு ஊக்குவித்தார்: “எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.” (1 கொரிந்தியர் 15:58) “உறுதிப்பட்ட” என்ற வார்த்தைக்கு ‘உரிய இடத்தில் நிலையாக ஊன்றியிருத்தல்’ என்று அர்த்தம். “அசையாத” என்பது ‘நங்கூரமிட்டு நிற்கும் இடத்திலிருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்ள அனுமதியாதிருத்தல்’ என அர்த்தப்படுத்தலாம். ஆகவே, ஊழியத்தில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவது நம் கிறிஸ்தவ வாழ்க்கை போக்கை ஸ்திரப்படுத்துவதாக இருக்கும். யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள பிறருக்கு உதவுவது நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.—அப்போஸ்தலர் 20:35.
மிஷனரி ஊழியத்திலும் பல்வேறு விதமான முழுநேர ஊழியத்திலும் 30-க்கும் அதிகமான ஆண்டுகள் ஈடுபட்ட பாலின் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஊழியம் எனக்கொரு பாதுகாப்பு; ஏனெனில் பிறருக்கு சாட்சி கொடுப்பது, என்னிடம் சத்தியம் இருக்கிறது என்ற உறுதியைத் தருகிறது.” வணக்கத்திற்காக கூட்டங்களில் ஆஜராதல், ஊக்கமான தனிப்பட்ட பைபிள் படிப்பு போன்ற கிறிஸ்தவ நடவடிக்கைகளில் தவறாமல் ஈடுபடுவதும் இதேவிதமான உறுதியைத் தருகிறது.
அன்பான சகோதரத்துவத்தால் ஸ்திரப்படுத்தப்படுதல்
உண்மை வணக்கத்தாரின் உலகளாவிய அமைப்பின் பாகமாக இருப்பது நம்மை உறுதிப்படுத்துவதற்கு வலிமைமிக்க தூண்டுகோலாக அமையலாம். அத்தகைய அன்பான உலகளாவிய சகோதரத்துவத்தோடு கூட்டுறவு வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! (1 பேதுரு 2:17, NW) நம்மால் சக கிறிஸ்தவர்களும் உறுதிப்படலாம்.
நீதிமானாகிய யோபுவின் நற்செயல்களை கவனியுங்கள். போலி தேற்றரவாளனான எலிப்பாஸும்கூட அவரைப் பற்றி இவ்வாறு சொல்ல வேண்டியதாயிற்று: “விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.” (யோபு 4:4) இந்த விஷயத்தில் நாம் பிறருக்கு எப்படி உதவுகிறோம்? கடவுளுடைய சேவையில் நிலைத்திருக்கும்படி நம் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சகோதர சகோதரிகளிடம் பழகும்போது, “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” என்ற வார்த்தைகளுக்கு இணங்க நாம் செயல்படலாம். (ஏசாயா 35:3) அப்படியானால், சக கிறிஸ்தவர்களுடன் கூடி வரும்போதெல்லாம் அவர்களில் ஓரிருவரைப் பலப்படுத்தி உற்சாகப்படுத்துவது ஏன் உங்களுடைய குறிக்கோளாக இருக்கக் கூடாது? (எபிரெயர் 10:24, 25) யெகோவாவை பிரியப்படுத்த அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கையில் உற்சாகமளிக்கும் வார்த்தைகளால் தட்டிக்கொடுத்து பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும் ஜீவனுக்கான ஓட்டத்தில் வெற்றி பெறும் நம்பிக்கையோடு உறுதியாய் நிலைத்திருக்க உண்மையிலேயே அவர்களுக்கு உதவும்.
புதியவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் கிறிஸ்தவ மூப்பர்கள் நிறைய காரியங்களை செய்யலாம். பயனுள்ள குறிப்புகளையும் சிறந்த வேதப்பூர்வ ஆலோசனையும் கொடுத்து, அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்து உற்சாகப்படுத்தலாம். மற்றவர்களை பலப்படுத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களை அப்போஸ்தலனாகிய பவுல் எப்போதுமே பயன்படுத்திக் கொண்டார். ரோமிலிருந்த கிறிஸ்தவர்களை ஆவிக்குரிய ரீதியில் பலப்படுத்த வேண்டுமென்ற ஆசையால் அவர்களைக் காண ஆவலோடிருந்தார். (ரோமர் 1:10, 11) பிலிப்பியில் இருந்த பிரியமுள்ள சகோதரர்களையும் சகோதரிகளையும் தனக்கு ‘சந்தோஷமும் கிரீடமுமாக’ கருதினார்; “இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்” என அவர்களுக்கு புத்தி சொன்னார். (பிலிப்பியர் 4:1) தெசலோனிக்கேயிலுள்ள சகோதரர்கள் கஷ்டப்படுவதை அறிந்த பவுல், ‘துன்பங்களால் எவரும் மனம் தளர்ந்து போகாதவாறு அவர்களை உறுதிப்படுத்தி ஊக்குவிக்க’ தீமோத்தேயுவை அனுப்பினார்.—1 தெசலோனிக்கேயர் 3:1-3, பொ.மொ.
தங்களுடைய சக வணக்கத்தார் உண்மையோடு உழைக்கிறார்கள் என்பதை அப்போஸ்தலர்களாகிய பவுலும் பேதுருவும் ஏற்றுக்கொண்டு அதை போற்றினர். (கொலோசெயர் 2:5; 1 தெசலோனிக்கேயர் 3:7, 8; 2 பேதுரு 1:12) அவ்வாறே நாமும், சகோதரர்களிடம் காணப்படும் குற்றங்குறைகளைப் பார்க்காமல், அவர்களுடைய நல்ல குணங்களை பார்ப்போமாக; உறுதியோடிருந்து யெகோவாவை கனப்படுத்த அவர்கள் கடினமாக போராடுவதையும் பார்ப்போமாக.
குறை காண்பவர்களாக நாம் இருந்தால், நம்மை அறியாமலேயே விசுவாசத்தில் உறுதியோடிருப்பதை சிலருக்கு அதிக கடினமாக்கிவிடுவோம். நம் சகோதரர்கள் இந்த உலகில் “தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருப்பதை எண்ணிப் பார்ப்பது எவ்வளவு நல்லது! (மத்தேயு 9:36) கிறிஸ்தவ சபையில் ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் அவர்கள் காண துடிப்பது சரியே. ஆகவே, சக விசுவாசிகளை ஊக்குவிக்க நாம் அனைவருமே நம்மாலானதை செய்வோமாக; அவர்கள் உறுதியோடிருக்க உதவுவோமாக.
சில சமயங்களில் மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் நம்மை உறுதியிழக்கச் செய்யலாம். மற்றவர்களுடைய புண்படுத்தும் பேச்சினாலோ ஈவிரக்கமில்லா நடத்தையாலோ நாம் யெகோவாவின் சேவையில் பின்தங்கிவிடலாமா? நம்முடைய உறுதியை தகர்த்துப்போட எவருக்கும் நாம் இடமளிக்காதிருப்போமாக!—2 பேதுரு 3:17.
கடவுளுடைய வாக்குறுதிகள் —உறுதிக்கு உரமூட்டுபவை
ராஜ்ய ஆட்சியில் அற்புதமான எதிர்காலம் கிடைக்கும் என்ற யெகோவாவின் வாக்குறுதி நமக்கு நம்பிக்கை அளிக்கிறது; இது, நம் உறுதியை காத்துக்கொள்ள உதவுகிறது. (எபிரெயர் 6:19) கடவுள் எப்போதுமே தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்ற நம்பிக்கை, ‘விழித்திருந்து விசுவாசத்திலே நிலைத்திருக்க’ நம்மை தூண்டுகிறது. (1 கொரிந்தியர் 16:13; எபிரெயர் 3:6) கடவுளுடைய வாக்குறுதிகளில் சில நிறைவேற தாமதிப்பதுபோல் தோன்றுவது நம் விசுவாசத்துக்கு பரீட்சையாக அமையலாம். ஆகவே, பொய் போதனைகளால் தவறாக வழிநடத்தப்படாமலும் நம்பிக்கையை விட்டு விலகாமலும் நம்மைக் காத்துக்கொள்வது மிக மிக முக்கியம்.—கொலோசெயர் 1:22; எபிரெயர் 13:9.
இஸ்ரவேலர்களின் கெட்ட முன்மாதிரி நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் வைக்காததால் அவர்கள் அழிந்தனர். (சங்கீதம் 78:37) அவர்களைப் போல் அல்லாமல் நாம் உறுதியோடிருப்போமாக; இந்தக் கடைசி நாட்களில் காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்து கடவுளை சேவிப்போமாக. “நாளைக்கே யெகோவாவின் நாள் வந்துவிடும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்” என அனுபவம் வாய்ந்த ஒரு மூப்பர் சொன்னார்.—யோவேல் 1:15.
ஆம், யெகோவாவின் மகா நாள் சமீபித்து விட்டது. ஆனால், கடவுளோடு நெருக்கமாக இருக்கும் வரையில் நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவருடைய நீதியான தராதரங்களை இறுக பற்றிக்கொண்டு உறுதியோடிருந்தால் நித்திய ஜீவனுக்கான ஓட்டத்தில் தடங்கலின்றி ஓடலாம்.—நீதிமொழிகள் 11:19; 1 தீமோத்தேயு 6:12, 17-19.
[பக்கம் 23-ன் படம்]
சக கிறிஸ்தவர்கள் உறுதியோடிருக்க உங்களாலான அனைத்தையும் செய்கிறீர்களா?
[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck