வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நம் மனதிலுள்ளதை அறியும் சக்தி பிசாசாகிய சாத்தானுக்கு இருக்கிறதா?
நாம் உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், சாத்தானுக்கோ அவனுடைய பேய்களுக்கோ நம்முடைய மனதிலுள்ளதை அறியும் சக்தி இல்லை என்றே தோன்றுகிறது.
சாத்தானுக்கு என்னென்ன பட்டப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். சாத்தான் (எதிர்ப்பவன்), பிசாசு (பழிதூற்றுபவன்), வலுசர்ப்பம் (வஞ்சிப்பவன் என்பதற்கு மறுபெயர்), சோதனைக்காரன், பொய்யன் என பலவாறு அழைக்கப்படுகிறான். (யோபு 1:6; மத்தேயு 4:3; யோவான் 8:44; 2 கொரிந்தியர் 11:3; வெளிப்படுத்துதல் 12:9) மனதிலுள்ளதை அறியும் சக்தி சாத்தானுக்கு இருப்பதாக இந்தப் பட்டப் பெயர்கள் எதுவும் சுட்டிக்காட்டுவதில்லை.
ஆனால் யெகோவா தேவனோ ‘இருதயங்களைச் சோதிக்கிறவர்’ என விவரிக்கப்படுகிறார். (நீதிமொழிகள் 17:3; 1 சாமுவேல் 16:7; 1 நாளாகமம் 29:17) “அவருடைய [யெகோவாவுடைய] பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என எபிரெயர் 4:13 சொல்கிறது. உள்ளத்திலுள்ளதை சோதித்தறியும் இத்திறனை யெகோவா தமது குமாரனாகிய இயேசுவுக்கு கொடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு இவ்வாறு கூறினார்: ‘நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் . . . அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.’—வெளிப்படுத்துதல் 2:23.
மனிதரின் இருதயங்களையும் மனங்களையும் சாத்தானால் சோதித்தறிய முடியும் என பைபிள் சொல்வதில்லை. மாறாக சாத்தானுடைய “தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” என அப்போஸ்தலன் பவுல் நமக்கு உறுதியளிப்பதால் இது குறிப்பிடத்தக்கது. (2 கொரிந்தியர் 2:11) ஆகவே, நமக்கு சுத்தமாக தெரியாத ஏதோ அசாதாரணமான திறன் சாத்தானுக்கு இருப்பதாக எண்ணி பயப்பட அவசியமில்லை.
ஆனாலும், நம்முடைய எதிராளியால் நமது பலவீனங்களை புரிந்துகொள்ள முடியாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. பல நூற்றாண்டுகளாகவே மனித நடத்தையை அவன் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறான். நம் நடத்தை போக்குகளை புரிந்து கொள்ளவும், நாம் நாடித் தேடும் பொழுதுபோக்குகளை கவனிக்கவும், நாம் பேசும் விஷயங்களை கேட்கவும், இது போன்ற மற்ற காரியங்களை செய்யவும் நம் மனங்களை அறிய வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது என்ன உணருகிறோம் என்பதை நமது முகபாவனைகளும் சரீர மொழியும்கூட காட்டிக் கொடுத்து விடலாம்.
ஆனால், ஏதேன் தோட்டத்தில் உபயோகித்த அதே உபாயங்களையே சாத்தான் பொதுவாக பயன்படுத்தி வருகிறான். அதாவது பொய்கள், மோசடி, தவறான கருத்துகள் ஆகியவற்றையே அவன் பயன்படுத்தி வருகிறான். (ஆதியாகமம் 3:1-5) நம் மனங்களை சாத்தான் அறிந்துகொள்வான் என கிறிஸ்தவர்கள் பயப்பட அவசியமில்லை என்றாலும், தங்கள் மனங்களில் என்னென்ன எண்ணங்களை புகுத்த அவன் முயலலாம் என்பதைக் குறித்து கவனமாக இருப்பது அவசியம். கிறிஸ்தவர்களை, ‘கெட்ட சிந்தையுள்ளவர்களாகவும், சத்தியமில்லாதவர்களுமாக’ ஆக்க அவன் விரும்புகிறான். (1 தீமோத்தேயு 6:5) சாத்தானின் உலகம் மோசமான கருத்துகளையும் பொழுதுபோக்குகளையும் வாரி வழங்கியிருப்பதில் ஆச்சரியமில்லை. இந்தத் தாக்குதல்களை எதிர்த்து நிற்க, “இரட்சணியமென்னும் தலைச்சீராவை” கிறிஸ்தவர்கள் அணிந்து தங்கள் மனங்களை பாதுகாப்பது அவசியம். (எபேசியர் 6:17) இதற்காக, பைபிள் சத்தியங்களால் தங்கள் மனங்களை நிரப்புகிறார்கள். அதோடு சாத்தானிய உலகத்தின் சீரழிந்த செல்வாக்குகளோடு தேவையற்ற தொடர்பையும் அவர்கள் தவிர்க்கிறார்கள்.
சாத்தான் பலமிக்க ஒரு எதிரி. ஆனால், அவனையும், அவனுடைய பேய்களையும் குறித்த அநாவசியமான பயம் நமக்கு இருக்க வேண்டியதில்லை. “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என யாக்கோபு 4:7 நமக்கு உறுதியளிக்கிறது. இந்த ஆலோசனையை நாம் பின்பற்றுவோமானால், சாத்தானுக்கு நம்மிடம் ஒன்றுமில்லை என்று இயேசுவைப் போல நம்மாலும் சொல்ல முடியும்.—யோவான் 14:30.