வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எபிரெயர் 2:14-ல் (NW) “மரணத்துக்கு வழிவகுப்பவன்” என சாத்தான் ஏன் அழைக்கப்படுகிறான்?
சுருக்கமாக சொன்னால், சாத்தான் நேரடியாகவோ மற்றவர்களைப் பயன்படுத்தியோ மனிதர்களின் மரணத்துக்கு வழிவகுக்கலாம் என்பதையே பவுல் குறிப்பிட்டார். அதை ஆமோதிக்கும் விதத்தில் இயேசு சாத்தானை ‘ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாக இருப்பவன்’ என அழைத்தார்.
சில மொழிபெயர்ப்புகள் எபிரெயர் 2:14-ஐ, ‘மரண வல்லமை உடையவன்’ அல்லது ‘சாவின்மேல் ஆற்றல் கொண்டிருப்பவன்’ என மொழிபெயர்த்திருப்பது அந்த வசனத்தை தவறாக புரிந்துகொள்ள செய்யலாம். (திருத்திய மொழிபெயர்ப்பு; பொது மொழிபெயர்ப்பு; ரிவைஸ்டு ஸ்டான்டர்டு; நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்; ஜெரூசலம் பைபிள்) அப்படி மொழிபெயர்த்திருப்பது, கண்மூடித்தனமாய் எவரையும் கொலை செய்ய சாத்தானுக்கு எல்லையில்லா திறமை இருப்பதாக தோன்ற செய்யலாம். எனினும் அது உண்மையல்ல என்பது தெளிவாயிருக்கிறது. அது உண்மையாக இருந்திருந்தால் வெகு காலத்திற்கு முன்பாகவே யெகோவாவின் வணக்கத்தாரை இந்தப் பூமியிலிருந்து பூண்டோடு அழித்திருப்பானே.—ஆதியாகமம் 3:15.
சில மொழிபெயர்ப்புகள் ‘சாவின்மேல் ஆற்றல் கொண்டிருப்பவன்’ எனவும், புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள் ‘மரணத்துக்கு வழிவகுப்பவன்’ எனவும் மொழிபெயர்த்திருக்கிறது; இதற்குக் காரணமான கிரேக்க சொற்றொடர் “கிராடாஸ் டூ தானாடூ” என்பதாகும். டூ தானாடூ என்பது “மரணம்” என அர்த்தம் தரும் சொல்லின் ஒரு வடிவமாகும். கிராடாஸ் என்பது அடிப்படையில் ‘விசையை, சக்தியை, பலத்தை’ அர்த்தப்படுத்துகிறது. “விசை அல்லது சக்தி இருப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் குறிக்கிறதே அல்லாமல் அது பயன்படுத்தப்படுவதை குறிப்பதில்லை” என புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்) சொல்கிறது. எனவே எபிரெயர் 2:14-ல் சாத்தானுக்கு மரணத்தின் மீது முழு வல்லமை இருக்கிறதென பவுல் அர்த்தப்படுத்தவில்லை. ஆனால் மரணத்திற்கு வழிவகுக்கும் திறமை அல்லது திறன் அவனிடம் இருக்கிறதென்றே குறிப்பிடுகிறார்.
எப்படி சாத்தான் “மரணத்துக்கு வழிவகுக்கிறான்”? யோபு புத்தகத்தில், விதிவிலக்காக அமைந்த ஒரு சம்பவத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம். சாத்தான் புயல் காற்றைப் பயன்படுத்தி யோபுவின் பிள்ளைகளுடைய ‘மரணத்துக்கு வழிவகுத்தான்’ என அந்தப் பதிவு சொல்கிறது. இதை கடவுள் அனுமதித்ததால்தான் சாத்தான் செய்தான் என்பதை கவனியுங்கள்; முக்கிய விவாதம் தீர்க்கப்பட வேண்டியிருந்ததால் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. (யோபு 1:12, 18, 19) ஆனால் உண்மையில் சாத்தானால் யோபுவைக் கொல்ல முடியவில்லை. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. (யோபு 2:6) சில சமயங்களில் விசுவாசிகளின் மரணத்திற்கு சாத்தானால் வழிவகுக்க முடிந்தாலும் அவன் விரும்பும்போது நம்முடைய உயிரைப் பறித்துவிடுவான் என பயப்பட தேவையில்லை என்பதையே இது காட்டுகிறது.
மனிதர்களைப் பயன்படுத்தியும் சாத்தான் மரணத்துக்கு வழிவகுத்திருக்கிறான். இப்படி தங்கள் விசுவாசத்திற்காக பல கிறிஸ்தவர்கள் மரித்திருக்கிறார்கள், கோபத்தில் கொதித்தெழுந்த கலக கும்பலால் சிலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; அல்லது அரசாங்க அதிகாரிகளோ ஊழல்மிக்க நீதிபதிகளோ பிறப்பித்த ஆணையால் அநியாயமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 2:13.
மேலும், மனிதரின் அபூரணத்தைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் சாத்தான் சில சமயங்களில் மரணத்துக்கு வழிவகுத்திருக்கிறான். இஸ்ரவேலரின் காலத்தில் தீர்க்கதரிசியாகிய பிலேயாம் ‘யெகோவாவுக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணுவதற்கு’ இஸ்ரவேலர்களை வசப்படுத்தும்படி மோவாபியர்களுக்கு ஆலோசனை கூறினான். (எண்ணாகமம் 31:16) அதனால் 23,000-க்கும் அதிகமான இஸ்ரவேலர் உயிரிழந்தார்கள். (எண்ணாகமம் 25:9; 1 கொரிந்தியர் 10:8) அதே போல இன்றும் சிலர் சாத்தானின் ‘தந்திரங்களால்’ ஏமாந்துவிடுகிறார்கள்; பாலியல் ஒழுக்கக்கேடு அல்லது தேவபக்தியற்ற காரியங்கள் எனும் கவர்ச்சி வலையில் சிக்கிவிடுகிறார்கள். (எபேசியர் 6:11) அப்படிப்பட்டவர்கள் உடனடியாக உயிரிழக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் நித்திய ஜீவனைப் பெறும் வாய்ப்பை இழக்க நேரிடலாம், இப்படியாக சாத்தான் அவர்களுடைய மரணத்துக்கு வழிவகுக்கிறான்.
சாத்தானால் நமக்கு தீங்கிழைக்க முடியும் என்பதை நாம் அறிந்திருந்தாலும் அதற்காக அநாவசியமாய் பயப்பட தேவையில்லை. சாத்தான் மரணத்துக்கு வழிவகுப்பதைப் பற்றி பவுல் சொன்னபோது, அவனை ‘இயேசு அழிப்பதன் மூலம் வாழ்நாள் பூராவும் மரண பயத்தில் அடிமைப்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுதலை செய்வார்’ என்றும் சொன்னார். (எபிரெயர் 2:14, 15, NW) ஆம், இயேசு கிரயபலியை செலுத்தி விசுவாசமுள்ளவர்களை பாவம், மரணம் ஆகியவற்றின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்திருக்கிறார்.—2 தீமோத்தேயு 1:10.
சாத்தான் மரணத்துக்கு வழிவகுக்கிறான் என்பது சிந்திக்க வைக்கும் குறிப்பு; ஆனால் சாத்தானும் அவன் கையாட்களும் இழைக்கும் எந்த தீங்கையும் யெகோவாவினால் மாற்றிப்போட முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு “பிசாசினுடைய கிரியைகளை அழி”ப்பார் என யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். (1 யோவான் 3:8) யெகோவாவுடைய வல்லமையின் உதவியால் இயேசு மரித்தவர்களை உயிரோடு எழுப்புவார், இவ்வாறு மரணத்தையே அடியோடு அகற்றிவிடுவார். (யோவான் 5:28, 29) இறுதியில், ஓரளவு சக்தியே சாத்தானுக்கு இருக்கிறது என்பதை அவனை அபிஸில் தள்ளுகையில் வியத்தகு விதத்தில் இயேசு வெட்டவெளிச்சமாக்குவார். கடைசியில் அவன் நித்திய அழிவை அடையும்படி தீர்ப்பளிப்பார்.—வெளிப்படுத்துதல் 20:1-10.